எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் ஏன்?
எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் ஏன்?
“பரிதானம் [“லஞ்சம்,” NW] வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.”
மோசேயின் சட்டம் 3,500 வருஷங்களுக்கு முன்பே லஞ்ச ஊழலை கண்டனம் செய்தது. அப்போதிருந்தே லஞ்ச ஒழிப்பு சட்டங்களும் ஏராளமாக ஏட்டில் ஏறியிருக்கின்றன. ஆனால் லஞ்ச ஊழலோ இந்த சட்டங்களால் அணைபோட்டு தடுக்க முடியாத பெருவெள்ளமாக பெருக்கெடுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் லஞ்சம் கை மாறிக்கொண்டேயிருக்கிறது. அதனால் கோடிக்கணக்கானோர் அவதிப்படுகிறார்கள்.
எங்கும் எதிலும் ஊழல் புகுந்து விளையாடுவதால் அது சமுதாயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும் அபாயம் இருக்கிறது. சில நாடுகளில் ஒருவரை விசேஷமாக ‘கவனிக்க’வில்லை என்றால் எந்தக் காரியமுமே நடக்காது. பரீட்சையில் பாஸாக வேண்டுமா? டிரைவிங் லைசன்ஸ் வேண்டுமா? பிஸினஸ் கான்ட்ராக்ட் வேண்டுமா? கோர்ட்டில் கேஸ் ஜெயிக்க வேண்டுமா? கவலையே வேண்டாம், சரியான ஆளை ‘நன்றாக கவனித்தால்’ போதும், நினைத்தபடியே காரியம் கைகூடும். “லஞ்ச ஊழல், எங்கும் காணப்படும் தூய்மைக்கேடு போன்றது. அது ஜனங்களை மனச்சோர்வடையச் செய்கிறது” என புலம்புகிறார் அர்னோ மான்ட்பர் என்ற பாரீஸ் வழக்கறிஞர்.
குறிப்பாக சொல்லப்போனால், வியாபார உலகில் இந்த லஞ்ச ஊழல் அதிகமாக சுற்றி சுழன்று வருகிறது. சில கம்பெனிகள் லாபத்தில் மூன்றில் ஒரு பாகத்தை ஊழல் பேர்வழிகளுக்கென்றே ஒதுக்கி வைக்கின்றன. ஒவ்வொரு வருடமும் சர்வதேச ஆயுத வியாபாரத்தில் செலவிடப்பட்ட 1,07,500 கோடி ரூபாயில் சுமார் 10 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்படுகிறது என தி இகானமிஸ்ட் என்ற பிரிட்டிஷ் பத்திரிகை குறிப்பிடுகிறது. இந்த ஊழல் விண்ணை தொடும் அளவுக்கு விரைந்திருப்பதால் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில், பாரபட்ச முதலாளித்துவம்—அதாவது, வேண்டியவர்களுக்கு மாத்திரமே சலுகையளிக்கும் ஊழல் நிறைந்த வியாபார பழக்கங்கள்—முழு நாடுகளின் பொருளாதாரமும் மூழ்கிவிடுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
இப்படிப்பட்ட ஊழலாலும் அதனால் ஏற்படும் பொருளாதார சீரழிவாலும் பெருமளவில் பாதிக்கப்படுவோர் ஏழை எளியவர்களே. ஏனென்றால் இவர்கள்தான் யாருக்குமே லஞ்சம் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். ‘ஊழல் என்பது ஏழைகளை ஒடுக்குவதற்கான ஒருவழி’ என தி இக்கானமிஸ்ட் சுருக்கமாக குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட ஒடுக்குமுறையை ஒழிக்க முடியுமா? அல்லது ஊழல் என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றா? இக்கேள்விக்கு விடை காண முதலில் ஊழலுக்கான சில அடிப்படை காரணங்களை நாம் கண்டுணர வேண்டும்.
ஊழல் பெருக காரணங்கள்
ஜனங்கள் நேர்வழியில் செல்வதைவிட குறுக்கு வழியையே, அதாவது லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிப்பதையே விரும்புகிறார்கள், அது ஏன்? விரும்புவதை விரும்பிய நேரத்தில் பெறுவதற்கு இதுவே சுலபமான வழி அல்லது இதுதான் ஒரே வழி என்பதாக தோன்றலாம். சில சமயங்களில், லஞ்சம் கொடுப்பது ‘லாக்-அப்’பிலிருந்து வெளிவருவதற்கு ஓர் எளிய வழியாக இருக்கலாம். அரசியல்வாதிகளே, போலீஸ்காரர்களே, நீதிபதிகளே லஞ்சம் வாங்குவதை கண்டுகொள்ளாமல் இருக்கும்போது அல்லது அவர்களே அப்படி செய்யும்போது, அதை கவனிப்பவர்களும் அதே வழியைத்தான் பின்பற்றுகிறார்கள்.
லஞ்சமும் ஊழலும் பெருக பெருக நாளடைவில் அதுவே சகஜமான ஒன்றாகி வாழ்க்கையின் பாகமாகிவிடுகிறது. மிகக் குறைந்த வருமானம் வாங்கும் ஜனங்கள் லஞ்சம் வாங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நினைக்கிறார்கள். நாலு பேருக்கு மத்தியில் “கௌரவமான” வாழ்க்கை நடத்த வேண்டுமானால், லஞ்சத்திற்குள்தான் பிரசங்கி 8:11.
தஞ்சம் புக வேண்டும் என்று நினைக்கிறார்கள். கறாராக லஞ்சம் வாங்குகிறவர்களாக இருந்தாலும்சரி ஏதாவது சலுகை பெற லஞ்சம் கொடுப்பவர்களாக இருந்தாலும்சரி, இப்படிப்பட்டவர்கள் தண்டிக்கப்படாமல் போவதால் பெரும்பாலானோர் அதை எதிர்க்க தயாராக இல்லை. “துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது” என்பதை சாலொமோன் ராஜா கவனித்தார்.—இரண்டு பலமான சக்திகள் ஊழல் என்ற உலைக்கு தீமூட்டுகின்றன. சுயநலமும் பேராசையுமே அந்த சக்திகள். ஊழல் செய்யும் மக்கள் தங்களுடைய ஊழலால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதைக் குறித்து கடுகளவுகூட கவலைப்படுவதில்லை. ஏன்? சுயநலமே காரணம். லஞ்சம் கொடுப்பதால் தாங்கள் நன்மையடைகிறார்கள் என்பதன் காரணமாக தாங்கள் செய்வது சரியென கருதுகிறார்கள். பொருளாதார நன்மைகள் பல கிடைப்பதால் ஊழல் புரிபவர்கள் இன்னும் பேராசைமிக்க பெருச்சாளிகளாய் மாறிவிடுகிறார்கள். “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை” என்பதை சாலொமோன் கண்டார். (பிரசங்கி 5:10) பேராசையால் பணம் சேர்க்கலாம் என்பதென்னவோ உண்மைதான். ஆனால் அது ஊழலையோ சட்டவிரோதமான காரியங்களையோ எப்போதும் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறது.
மற்றொரு அம்சத்தையும், அதாவது இவ்வுலகத்தின் காணக்கூடாத அதிபதியின் பங்கையும்கூட கவனியாமல் விடமுடியாது. யார் அந்த அதிபதி? பிசாசாகிய சாத்தானே அந்த அதிபதி என பைபிள் குறிப்பிடுகிறது. (1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 12:9) ஊழல் எனும் உலையை நன்கு ஊதிவிடுவது சாத்தானே. சரித்திரத்திலேயே இதுவரை யாரும் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு லஞ்சம் கொடுத்ததும் சாத்தானே. அவன் கிறிஸ்துவுக்கு அதை அளிக்க முன்வந்தான். ‘நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து எனக்கு ஒரு வணக்கச் செயலை செய்தால், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் உமக்குத் தருவேன்.’—மத்தேயு 4:8, 9, NW.
என்றாலும், இயேசு நாணயமிக்கவராக இருந்தார். தம்முடைய சீஷர்களுக்கும் அதையே கற்பித்தார். அப்படியானால், கிறிஸ்துவின் போதனைகள் ஊழலை ஒழித்துக்கட்டும் கருவியாக இருக்குமா? பின்வரும் கட்டுரை இதை காண்பிக்கும்.