கடவுளுடைய ஆவி சொல்வதை கேளுங்கள்
கடவுளுடைய ஆவி சொல்வதை கேளுங்கள்
“நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.”—ஏசாயா 30:21.
1, 2. யெகோவா மனிதருடன் எப்படியெல்லாம் பேசியிருக்கிறார்?
உலகிலேயே மிகப் பெரிய, அதிநவீன டிஷ் ஆண்டனா பியூர்டோ ரிகோ தீவில் உள்ளது. இந்த மாபெரும் கருவி மூலம் வேறு கிரகங்களிலிருந்து செய்திகள் வரும் என விஞ்ஞானிகள் பல பத்தாண்டுகளாக நம்பி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தச் செய்தியும் வரவில்லை. ஆனால், இவ்வித கருவியின் உதவியின்றி பூமிக்கு அப்பாலிருந்து மனிதருக்கு தெளிவான செய்திகள் கிடைத்திருக்கின்றன. உங்களுக்கு வியப்பாக உள்ளதா? இவை வேறெந்த கிரகத்திலிருந்தும் அல்ல, ஆனால் உன்னதமான இடத்திலிருந்து வருகின்றன. அவற்றை யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் பெற முடியும். அச்செய்திகள் யாரிடமிருந்து வருகின்றன? யார் பெறுகிறார்கள்? என்ன செய்திகள்?
2 அநேக சந்தர்ப்பங்களில் கடவுளிடமிருந்து வந்த செய்திகளை மனிதர் தங்கள் காதுபட கேட்டிருக்கின்றனர்; அவை பைபிளில் பதிவாகியுள்ளன. சில சமயங்களில் இந்தச் செய்திகள் தேவதூதர்கள் மூலம் கொடுக்கப்பட்டன. (ஆதியாகமம் 22:11, 15; சகரியா 4:4, 5; லூக்கா 1:26-28) மூன்று முறை யெகோவா தேவனே நேரடியாக பேசியதை மனிதர்கள் கேட்டனர். (மத்தேயு 3:17; 17:5; யோவான் 12:28, 29) தீர்க்கதரிசிகள் மூலமாகவும் கடவுள் பேசினார்; இவர்களில் பலர் கடவுள் எதை எழுதும்படி தூண்டினாரோ அதையே எழுதி வைத்தனர். அதோடு இயேசுவின் போதனைகளும் அவருடைய சீஷர்களின் போதனைகளும்கூட பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய அனைத்து செய்திகளும் அடங்கியதே பைபிள். (எபிரெயர் 1:1, 2) இதிலிருந்து, உண்மையிலேயே மனிதருக்கு யெகோவா தகவல் அளித்திருக்கிறார் என்பது புரிகிறது.
3. கடவுள் ஏன் செய்திகளை அளித்தார், நாம் என்ன செய்ய வேண்டும்?
3 கடவுளிடமிருந்து வந்த இந்த எல்லா செய்திகளிலும் பிரபஞ்சத்தைப் பற்றி அவ்வளவாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் முக்கிய விஷயங்களைப் பற்றி கூறுகின்றன. இவற்றில் நம் வாழ்க்கையும் எதிர்காலமும் அடங்கியுள்ளன. (சங்கீதம் 19:7-11; 1 தீமோத்தேயு 4:8) இவற்றின் மூலம் யெகோவா தம்முடைய சித்தத்தை தெரியப்படுத்தி, வழிநடத்துகிறார். இவ்விஷயத்தில் ஏசாயாவின் பின்வரும் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது: “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.” (ஏசாயா 30:21) தம்முடைய ‘வார்த்தையைக்’ கேட்க வேண்டுமென்று யெகோவா நம்மை வற்புறுத்துகிறதில்லை. கடவுளுடைய வழிநடத்துதலைப் பின்பற்றுவதும் பின்பற்றாததும் நம் இஷ்டம். ஆனால் யெகோவாவிடமிருந்து பெறும் தகவல்களுக்குச் செவிசாய்க்கும்படி வேதவசனங்கள் நமக்கு அறிவுரை கூறுகின்றன. “ஆவி சொல்வதைக் கேளுங்கள்” என்ற உற்சாகமூட்டும் வார்த்தைகள் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் ஏழு தடவை வருகின்றன.—வெளிப்படுத்துதல் 2:7, 11, 17, 29; 3:6, 13, 22.
4. கடவுள் பரலோகத்திலிருந்து நேரடியாக ஏன் நம்மிடம் பேசுவதில்லை?
4 இன்று யெகோவா, பரலோகத்திலிருந்து நம்மிடம் நேரடியாக பேசுவதில்லை. பைபிள் காலங்களிலுங்கூட, அற்புதமான விதங்களில் செய்தி ஒருசில சமயங்களில்தான் கிடைத்தது, அதுவும் பல நூற்றாண்டு கால இடைவெளிகளில். பெரும்பாலும் யெகோவா தம்முடைய ஜனங்களிடம் நேரடியாக பேசவில்லை. இன்றும் அதுவே உண்மை. தற்காலத்தில் யெகோவா நம்மோடு பேசும் மூன்று வழிகளை இப்போது ஆராயலாம்.
“வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது”
5. இன்று கடவுளிடம் தொடர்புகொள்ள உதவும் முக்கிய பாலம் எது, இதிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
5 கடவுளும் மனிதரும் தொடர்புகொள்வதற்கு உதவும் முக்கிய பாலம் பைபிளே. இது கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டது; இதிலுள்ள அனைத்தும் நமக்கு நன்மை தருபவை. (2 தீமோத்தேயு 3:16, 17) யெகோவா சொன்னதைக் கேட்டவர்களின் உதாரணங்களும் கேட்காதவர்களின் உதாரணங்களும் பைபிளில் ஏராளம். இத்தகைய உதாரணங்கள் கடவுளுடைய ஆவி சொல்வதைக் கேட்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும். (1 கொரிந்தியர் 10:11) மேலும், பைபிளில் நடைமுறைக்கு உதவும் ஞானமும், வாழ்க்கையில் தீர்மானம் எடுக்க உதவும் அறிவுரையும் உள்ளன. பைபிள் மூலம் கடவுள் நம் அருகே இருந்து, “வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என்று நம் காதுகளில் சொல்வதுபோல் இருக்கிறது.
6. மற்ற புத்தகங்களைவிட பைபிள் ஏன் மேலானது?
6 பைபிளின் வாயிலாக கடவுளுடைய ஆவி சொல்வதை கேட்க விருப்பமா? அதற்கு நாம் பைபிளைத் தவறாமல் படிக்க வேண்டும். மற்ற புத்தகங்களைப் போல் பைபிளை வெறும் இலக்கியப் படைப்பாக மட்டுமே நினைக்கக்கூடாது. பைபிள் தேவாவியால் ஏவப்பட்டது, கடவுளுடைய எண்ணங்கள் நிறைந்தது. எபிரெயர் 4:12 சொல்வதாவது: “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” நாம் பைபிளை வாசிக்கையில், அதிலுள்ள விஷயங்கள் பட்டயத்தைப்போல் நம்முடைய மனதின் ஆழத்திலுள்ள சிந்தனைகளிலும் நோக்கங்களிலும் ஊடுருவிப் பார்க்கின்றன. இவை நம்முடைய வாழ்க்கை எந்தளவு கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாய் உள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன.
7. பைபிளை தவறாமல் படிப்பது ஏன் முக்கியம், எப்போதெல்லாம் வாசிக்கும்படி நமக்கு உற்சாகம் தரப்படுகிறது?
7 ஒருவருடைய ‘இருதயத்தின் நினைவுகளும் யோசனைகளும்’ காலம் செல்ல செல்ல மாறலாம் அல்லது வாழ்க்கையில் ஏற்படும் இன்பமான, துன்பமான அனுபவங்களாலும் மாறலாம். ஆகவே கடவுளுடைய வார்த்தையை நாம் தவறாமல் படிப்பது முக்கியம்; இல்லையென்றால் நம்முடைய சிந்தனைகளும், மனப்பான்மைகளும், உணர்வுகளும் பைபிள் நியமங்களுக்கு இசைவாக இருக்காது. ஆகையால் பைபிள் நமக்கு இவ்வாறு புத்திமதி அளிக்கிறது: “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே [“தொடர்ந்து,” NW] சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே [“தொடர்ந்து,” NW] பரீட்சித்துப் பாருங்கள்.” (2 கொரிந்தியர் 13:5) கடவுளுடைய வார்த்தையைத் தினந்தோறும் வாசிக்கும்படியான புத்திமதிக்கு செவிசாய்த்து, கடவுளுடைய ஆவி சொல்வதை நாம் தொடர்ந்து கேட்போமாக.—சங்கீதம் 1:2.
8. பைபிள் வாசிப்பதைக் குறித்ததில், அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய என்ன வசனங்கள் நம்மைநாமே சோதித்தறிய உதவுகின்றன?
8 பைபிள் வாசிப்போர் மனதில் வைக்க வேண்டியது: நீங்கள் வாசிப்பதை புரிந்துகொள்ள தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! ஒவ்வொரு நாளும் பைபிள் வாசிக்க வேண்டும் என்று நமக்கு ஆலோசனை அளிக்கப்படுகிறது. அதற்காக நம்முடைய பைபிள் அட்டவணைப்படி வாசித்து முடிப்பது மாத்திரமே நம் குறிக்கோளாக இருக்கக்கூடாது. என்ன வாசிக்கிறோம் என்பதையே புரியாமல் வேகவேகமாக பல அதிகாரங்களை வாசித்து முடிப்பது முக்கியமல்ல. ஆனால் தவறாமல் பைபிள் வாசிப்பதுதான் முக்கியம். யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் கற்றறிய உண்மையிலேயே நமக்கு ஆர்வம் தேவை. இத்தகைய ஆர்வம் நமக்கு இருக்கிறதா இல்லையா என்று சோதித்தறிய அப்போஸ்தலன் பவுல் உடன் விசுவாசிகளுக்கு எழுதிய பின்வரும் வசனங்கள் நமக்கும் உதவும்: “நான் . . . பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, . . . விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய [“கடவுள் அளிக்கும்,” NW] சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.”—எபேசியர் 3:14-19.
9. யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்வதற்கான நம் ஆவலை எவ்வாறு வளர்த்து, அதை மேன்மேலும் உறுதியாக்க முடியும்?
9 இயல்பாகவே சிலருக்கு வாசிக்கும் விருப்பம் இருக்காது, ஆனால் சிலர் மிகுந்த ஆர்வத்தோடு வாசிப்பார்கள். நம் சொந்த விருப்பு வெறுப்புகள் எதுவாக இருந்தாலும், யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்வதற்கான ஆவலை வளர்த்து அதை மேன்மேலும் உறுதியாக்கலாம். பைபிள் அறிவை பெறுவதற்கான வாஞ்சை நமக்கு இருக்க வேண்டுமென்று வலியுறுத்திய அப்போஸ்தலன் பேதுரு, அத்தகைய வாஞ்சையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார். அவர் எழுதியதாவது: ‘நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள் [“வாஞ்சையை வளர்த்துக்கொள்ளுங்கள்,” NW].’ (1 பேதுரு 2:3) ஒரு புதிய வகை உணவை பல தடவை ருசிபார்த்த பின்பே அந்த உணவின்மீது நாட்டம் ஏற்படுகிறது. அதைப்போல் சுயகட்டுப்பாடோடு கடவுளுடைய வார்த்தையை படித்துக்கொண்டே இருந்தால் நம்மை அறியாமலே அதன்மீது “வாஞ்சை” வந்துவிடும்.
‘ஏற்றவேளை உணவு’
10. உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் யார், இன்று அவர்களை யெகோவா எவ்வாறு உபயோகிக்கிறார்?
10 இன்று யெகோவா நம்மிடம் பேசும் மற்றொரு வழியை மத்தேயு 24:45-47-ல் (NW) இயேசு குறிப்பிட்டார். ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஒரு வகுப்பாராக ‘ஏற்றவேளையில்’ ஆவிக்குரிய ‘உணவை’ அளிக்க நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் ஒவ்வொருவரும் இயேசுவின் “வேலைக்காரர்கள்.” இவர்களும், ‘வேறே ஆடுகளாகிய’ ‘திரள் கூட்டத்தாரும்’ இத்தகைய ஏற்ற வேளை உணவிலிருந்து உற்சாகமூட்டுதலையும் வழிநடத்துதலையும் பெறுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:16) இத்தகைய உணவை காவற்கோபுரம், விழித்தெழு! இன்னும் பிற பிரசுரங்களின் மூலம் பெறுகிறோம். அதோடு மாநாடுகள், அசெம்பிளிகள், சபைக் கூட்டங்கள் ஆகியவற்றில் பேச்சுகள், நடிப்புகள் வாயிலாகவும் உணவைப் பெறுகிறோம்.
11. ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ மூலமாக கடவுளுடைய ஆவி சொல்வதைக் கேட்கிறோம் என்பதை எப்படிக் காட்டுவோம்?
11 ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ அளிக்கிற தகவல் நம் விசுவாசத்தைப் பலப்படுத்தவும் பகுத்தறியும் திறன்களைப் பயிற்றுவிக்கவும் உதவுகிறது. (எபிரெயர் 5:14) இத்தகைய தகவல், அவரவர் தங்கள் தங்களுக்கு பொருத்திக்கொள்ளும் விதத்தில் பொதுப்படையாக இருக்கலாம். அவ்வப்பொழுது நம் நடத்தை சம்பந்தமாக தனிப்பட்ட விதத்திலும் அறிவுரை வழங்கப்படலாம். கடவுளுடைய ஆவி சொல்வதை உண்மையிலேயே கேட்கிறோம் என்றால் அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் வார்த்தையைக் கேட்போம்: “உங்களை நடத்துகிறவர்க[ளுக்குக்], . . . கீழ்ப்படிந்து அடங்குங்கள்.” (எபிரெயர் 13:17) இப்படி வழிநடத்துகிறவர்கள் அனைவரும் அபூரணர்கள் என்பது உண்மைதான். ஆனாலும் இந்த அபூரணர்களைக் கொண்டே இந்த முடிவு காலத்தில் நம்மை வழிநடத்துவதில் யெகோவா சந்தோஷம் கொள்கிறார்.
மனசாட்சியும் பேசும்
12, 13. (அ) வேறு எதைக் கொண்டும் யெகோவா நம்மை வழிநடத்துகிறார்? (ஆ) கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான அறிவு இல்லாதவர்களிலுங்கூட, மனசாட்சி எவ்வாறு சரியான விதத்தில் செயல்படுகிறது?
12 நம் மனசாட்சியைக் கொண்டும் யெகோவா நம்மை வழிநடத்துகிறார். சரி எது, தவறு எது என்ற உணர்வை அவர் ஒவ்வொரு மனிதனிலும் வைத்திருக்கிறார். இது இயற்கை குணம். ரோமருக்கு எழுதின தன் நிருபத்தில், அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு விளக்கினார்: “அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.”—ரோமர் 2:14, 15.
13 யெகோவாவை அறியாத மக்களுக்கும் மனசாட்சி உண்டு. அவர்கள் சரியான வழியில் நடப்பதற்கு உள்மனதிலிருந்து இது மெல்லிய குரல் கொடுக்கும். அவர்களுடைய சிந்தனைகளையும் செயல்களையும் தூண்டி சரி எது, தவறு எது என்பதை உணர்த்தும். அதனால், தங்களை அறியாமலேயே கடவுளுடைய நியமங்களோடு ஓரளவுக்கு ஒத்து வாழ்வார்கள். கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான அறிவு இல்லாத இவர்களிடத்திலேயே மனசாட்சி இந்தளவு செயல்பட முடியுமென்றால் உண்மை கிறிஸ்தவர்களிடம் அது எந்தளவுக்கு செயல்பட வேண்டும்! கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான அறிவால் புடமிடப்பட்டு, யெகோவாவின் பரிசுத்த ஆவிக்கு இசைவாக செயல்படும் கிறிஸ்தவ மனசாட்சி, உண்மையிலேயே சரியான வழியில் நடத்தும்.—ரோமர் 9:2.
14. பைபிள் சொல்கிறபடி வளைந்துகொடுக்கிற மனசாட்சி, யெகோவாவின் ஆவியினுடைய வழிநடத்துதலுக்கு இசைய நடக்க நமக்கு எவ்வாறு உதவலாம்?
14 பைபிள் சொல்கிறபடி வளைந்துகொடுக்கிற நல்மனசாட்சியே பரிசுத்த ஆவி விரும்புகிற வழியில் நாம் நடப்பதற்கு நினைப்பூட்டும். சிலசமயங்களில், நமக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி பைபிளிலோ, பைபிள் சார்ந்த பிரசுரங்களிலோ நேரடியாக எந்த விஷயமும் இல்லாதிருக்கலாம். அப்போது நம் மனசாட்சி நமக்கு உதவும். நாம் தவறான தீர்மானம் எடுக்கையில் அது நம்மை எச்சரிக்கும். இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாதிருந்தால், யெகோவாவின் ஆவி சொல்வதை மீறிவிடுவோம். ஆனால், பைபிள் வசனங்களின், பைபிள் பிரசுரங்களின் திட்டவட்டமான வழிநடத்துதல் இல்லாத சமயங்களில்கூட பயிற்றுவிக்கப்பட்ட நம் கிறிஸ்தவ மனசாட்சியின்மீது சார்ந்திருக்க கற்றுக்கொண்டால் ஞானமான தீர்மானங்களையே எடுப்போம். கடவுளுடைய நியமமோ, விதியோ, சட்டமோ இல்லாமல் நாம் மனசாட்சிப்படி தீர்மானம் எடுக்கும்போது அதே தீர்மானத்தை உடன் கிறிஸ்தவர்மீது திணிக்கக்கூடாது என்பதை மறக்க வேண்டாம்.—ரோமர் 14:1-4; கலாத்தியர் 6:5.
15, 16. நம் மனசாட்சி சரியான முறையில் செயல்படுவதை எவை தடுக்கக்கூடும், இப்படி நடக்காதபடி நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
15 பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மாசற்ற மனசாட்சியே கடவுள் தரும் அருமையான பரிசு. (யாக்கோபு 1:17) ஆனால், இந்தப் பரிசை தீய செல்வாக்குகளிலிருந்து பாதுகாத்தால்தான் அது நம்மை ஒழுக்க ரீதியில் பாதுகாக்கும். கடவுளுடைய தராதரங்களிலிருந்து வேறுபடுகிற உள்ளூர் பழக்கவழக்கங்களை, பாரம்பரியங்களை, போக்குகளை நம்முடைய மனசாட்சி கட்டுப்படுத்த அனுமதித்தால், அவை மனசாட்சியைக் குழப்பி, சரியாக செயல்படுவதை தடுக்கும். அப்போது தவறை சரி என்றும், கெட்டதை நல்லதென்றும் நம்பி நம்மைநாமே ஏமாற்றிக் கொள்வோம்.—யோவான் 16:2-ஐ ஒப்பிடுக.
16 நம் மனசாட்சியின் எச்சரிக்கைகளை தொடர்ந்து அசட்டை செய்தால், அதன் குரல் மெல்ல மெல்ல அடங்கிப்போகும். அப்போது ஒழுக்கம் என்பதையே மறந்துபோனவர்களாய் அல்லது மரத்துப்போனவர்களாய் இருப்போம். இப்படிப்பட்டவர்களைப் பற்றியே சங்கீதக்காரன் பின்வருமாறு குறிப்பிட்டார்: “கொழுப்பைப் போல் அவர்கள் இருதயம் மரத்துப் போயிருக்கிறது.” (சங்கீதம் 119:70, NW) சிலர், மனசாட்சியின் தூண்டுதலை அசட்டை செய்வதால் சிந்திக்கும் திறனை இழந்துபோகின்றனர். கடவுளைப் பற்றிய நினைப்பேயின்றி, சரியான தீர்மானங்களை எடுக்க முடியாதவர்களாக ஆகின்றனர். இந்நிலையைத் தவிர்க்க, சிறிய பிரச்சினையானாலும்கூட நம்முடைய கிறிஸ்தவ மனசாட்சி சொல்வதைக் கேட்போமாக.—லூக்கா 16:10.
செவிசாய்த்து, கீழ்ப்படிவோர் சந்தோஷமுள்ளவர்கள்
17. ‘நமக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை’ கேட்டு, பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சிக்குச் செவிசாய்க்கையில் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுவோம்?
17 பைபிளின் மூலமாகவும் உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின் மூலமாகவும் நமக்குப் ‘பின்னாலே சொல்லும் வார்த்தையைக்’ கேட்டு நடப்பதற்குப் பழகிக் கொள்ள வேண்டும். அத்தோடு பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட நம் மனசாட்சியின் நினைப்பூட்டுதல்களையும் அசட்டை செய்யக்கூடாது. அப்போதுதான், யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியை நமக்குத் தந்து ஆசீர்வதிப்பார். யெகோவா சொல்வதைக் கேட்கவும் அவற்றைப் புரிந்துகொள்ளும் திறமையை அதிகரிக்கவும் பரிசுத்த ஆவி நமக்கு உதவும்.
18, 19. யெகோவாவின் வழிநடத்துதல் எவ்வாறு நம் ஊழியத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உதவும்?
18 கஷ்டமான சூழ்நிலைகள் வந்தாலும் ஞானத்தோடும் தைரியத்தோடும் சமாளிக்கும் பலத்தை யெகோவாவின் ஆவி அளிக்கும். அப்போஸ்தலர்களுக்கு உதவிய விதமாகவே, கடவுளுடைய ஆவி நமக்கும் மனோதிடத்தை அளித்து, எப்பொழுதும் பைபிள் நியமங்களுக்கு இசைவாக செயல்படவும் பேசவும் உதவும். (மத்தேயு 10:18-20; யோவான் 14:26; அப்போஸ்தலர் 4:5-8, 13, 31; 15:28) யெகோவாவின் ஆவியும் நம்முடைய தனிப்பட்ட முயற்சிகளும் சேர்ந்து, நாம் வாழ்க்கையில் எடுக்கும் முக்கிய தீர்மானங்களில் வெற்றி பெற உதவும். அத்தீர்மானங்களில் உறுதியாய் நிலைத்திருப்பதற்கான தைரியத்தையும் தரும். உதாரணமாக, வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்து ஆவிக்குரிய காரியங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குவதைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம். அல்லது, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது, கிடைத்த ஒரு வேலையை ஏற்பது, ஒரு வீட்டை வாங்குவது போன்ற உங்கள் வாழ்க்கையையே மாற்றும் முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கலாம். உணர்ச்சிவசப்பட்டு தீர்மானங்கள் எடுப்பதற்கு பதிலாக, கடவுளுடைய ஆவி சொல்வதைக் கேட்டு, அதன் வழிநடத்துதலுக்கு இசைவாக நடப்போமாக.
19 மூப்பர்களோ சககிறிஸ்தவர்களோ ஒரு விஷயத்தை நமக்கு அன்பாக நினைப்பூட்டும் போதும் அறிவுரை அளிக்கும் போதும், நாம் சந்தோஷப்படுகிறோம். அதற்காக, மற்றவர்கள் நம்மிடம் வந்து சொல்லும் வரை எப்பொழுதும் காத்திருக்க வேண்டியதில்லை. கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு என்ன ஞானமான போக்கை பின்பற்ற வேண்டும், நம் சிந்தையிலும் செயலிலும் எத்தகைய மாற்றங்களை செய்ய வேண்டும் என அறிந்திருந்தால் அவற்றையே செய்வோமாக. இயேசு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.”—யோவான் 13:17.
20. ‘தங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தைக்குச்’ செவிசாய்ப்போருக்கு என்ன ஆசீர்வாதம் கிடைக்கும்?
20 கடவுளுக்கு எது பிரியம் என்று அறிவதற்கு கிறிஸ்தவர்களுக்கு பரலோகத்திலிருந்து நேரடியாக ஒரு குரலோ, ஒரு தேவதூதனின் வருகையோ அவசியமில்லை. அவர்களிடம் கடவுளுடைய வார்த்தையும், பூமியிலுள்ள அவருடைய அபிஷேகஞ்செய்யப்பட்ட வகுப்பாரின் அன்புள்ள வழிநடத்துதலும் உண்டு. அவர்கள் ‘தங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தைக்கு’ கவனமாய்ச் செவிசாய்த்து, பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் வழிநடத்துதலை ஏற்றால், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் வெற்றி அவர்களுக்கே. அப்போது, அப்போஸ்தலன் யோவானின் இந்த வாக்குறுதி நிறைவேறுவதை அவர்கள் கண்ணாரக் காண்பார்கள்: “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:17.
சுருக்கமான மறுபார்வை
• யெகோவா ஏன் மனிதர்களுடன் தொடர்பு கொள்கிறார்?
• தவறாமல் பைபிள் படிக்கும் பழக்கத்திலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
• அடிமை வகுப்பாரின் வழிநடத்துதலை நாம் எவ்வாறு ஏற்க வேண்டும்?
• பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி பேசும்போது நாம் ஏன் அசட்டை செய்யக்கூடாது?
[கேள்விகள்]
[கேள்விகள்]
[பக்கம் 13-ன் படம்]
கடவுளிடமிருந்து செய்திகளைப் பெற, நூதன கருவிகள் மனிதனுக்குத் தேவையில்லை
[படத்திற்கான நன்றி]
Courtesy Arecibo Observatory/David Parker/Science Photo Library
[பக்கம் 15-ன் படம்]
பைபிளின் மூலமாகவும், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ மூலமாகவும் யெகோவா நம்மிடம் பேசுகிறார்