Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தெய்வீக போதனையை உறுதியாய் காத்துக்கொள்ளுங்கள்

தெய்வீக போதனையை உறுதியாய் காத்துக்கொள்ளுங்கள்

தெய்வீக போதனையை உறுதியாய் காத்துக்கொள்ளுங்கள்

“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் [“யெகோவாவில்”, NW] நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”நீதிமொழிகள் 3:5, 6.

1. முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு மனித ஞானம் எவ்வாறு நம்மைச் சூழ்ந்துள்ளது?

 சுமார் 9,000 செய்தித்தாள்கள் தினம் தினம் இவ்வுலகத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஐக்கிய மாகாணங்களில் மட்டும் ஒவ்வொரு வருடமும் சுமார் 2,00,000 புதிய புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. மார்ச் 1998-ல், இன்டர்நெட்டில் சுமார் 27.5 கோடி வெப்-பக்கங்கள் இருந்தன என ஒரு கணக்கெடுப்பு காண்பிக்கிறது. அத்துடன் நின்றுவிடுவதில்லை, ஒவ்வொரு மாதமும் இரண்டு கோடி புதிய பக்கங்கள் என்ற கணக்கில், இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு, இன்று மக்களால் எதைப் பற்றி வேண்டுமானாலும் தெரிந்துகொள்ள முடியும், அந்தளவுக்கு தகவல்கள் குவிந்துவிட்டன. இச்சூழ்நிலையால் ஒருபக்கம் பலன் கிடைத்தாலும், மறுபக்கம் அநேக பிரச்சினைகளும் வந்துள்ளன.

2. இன்று மலைபோல் குவிந்துகிடக்கும் தகவல்களை ஆராய்வதற்கு வழியிருப்பதால் என்ன பிரச்சினைகளை நாம் எதிர்ப்படக்கூடும்?

2 சில ஆட்கள் தகவல் பைத்தியங்களாக ஆகிவிட்டிருக்கின்றனர். வாழ்க்கையின் மிக முக்கியமான விஷயங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, புதுப்புது தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீரா ஆசையை தங்களில் ஊட்டி வளர்த்து வருகின்றனர். இன்னும் சிலர், சிக்கலான சில துறைகளைப் பற்றி ஓரளவுக்கு தகவல்களை பெற்றுக்கொண்ட பிறகு, தங்களை நிபுணர்களாக நினைத்துக்கொள்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் இவ்வாறு அரைகுறையாக விஷயங்களை தெரிந்துகொண்டு, முக்கியமான சில முடிவுகளை எடுக்கக்கூடும். அப்படிப்பட்ட முடிவுகள் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அநேக பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதுமட்டுமல்ல தவறான அல்லது பொய்யான தகவல்களைப் பெறும் ஆபத்தும் எப்போதும் இருக்கிறது. தகவல்கள் துல்லியமானவையா நியாயமானவையா என தெரிந்துகொள்வதற்கு பெரும்பாலும் நம்பகமான வழி எதுவுமே இல்லை.

3. மனித ஞானத்தை நாடித்தேடுவதைப் பற்றி பைபிளில் என்ன எச்சரிப்புகள் காணப்படுகின்றன?

3 தெரிந்துகொள்ள வேண்டுமென்ற துருதுருப்பு காலகாலமாக மனிதனுக்கு இருந்துவரும் இயல்பு. தேவையற்ற அல்லது ஆபத்தான விஷயங்களில் அதிகளவான நேரத்தை வீணாக்கும் அபாயம், அக்காலத்திலேயே, அதாவது அரசனாகிய சாலொமோன் காலத்திலேயே இருந்திருக்கிறது. “அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு” என சாலொமோன் அந்த காலத்திலேயே எச்சரித்தார். (பிரசங்கி 12:12) சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு வாழ்ந்த அப்போஸ்தலனாகிய பவுலும் இதே விஷயத்தைக் குறித்து தீமோத்தேயுவுக்கு இவ்வாறு எழுதினார்: “உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள்.” (1 தீமோத்தேயு 6:20, 21) ஆம், இன்று கிறிஸ்தவர்கள் தேவையற்ற தீங்கிழைக்கும் சிந்தனைகளில் சிக்கிக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

4. யெகோவாமீதும் அவருடைய போதகத்தின்மீதும் நமக்கிருக்கும் நம்பிக்கையை வெளிக்காட்டுவதற்கான ஒரு வழி என்ன?

4 யெகோவாவின் மக்களும்கூட நீதிமொழிகள் 3:5, 6-ல் சொல்லப்பட்டிருப்பதை பின்பற்ற தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கின்றனர்; அது இவ்வாறு வாசிக்கிறது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” யெகோவாவில் நம்பிக்கையாயிருப்பது என்பது, அவருடைய வார்த்தையுடன் ஒத்துப்போகாத கருத்துக்களை ஒதுக்கித் தள்ளுவதை உட்படுத்துகிறது. அது நம்முடைய சொந்த விளக்கத்தினால் வரும் கருத்தாக இருந்தாலும் சரி, மற்றவருடையதாக இருந்தாலும்சரி. நம் ஆவிக்குரிய நிலையை பாதுகாக்க வேண்டுமேயானால், முதலில் எது தீங்கிழைக்கும் தகவல் என்று கண்டுபிடிக்க வேண்டும், அவற்றை உடனடியாக ஒதுக்கித் தள்ள வேண்டும். அவ்வாறு செய்வதற்கு, எது சரி, எது தவறு என தீர்மானிக்க உதவும் பகுத்தறியும் திறனை நாம் பயிற்றுவிப்பது மிக முக்கியம். (எபிரெயர் 5:14) அப்படிப்பட்ட தீங்கிழைக்கும் ஆபத்தான தகவல்களின் ஊற்றுமூலங்கள் சிலவற்றை நாம் சிந்திப்போம்.

சாத்தானின் ஆதிக்கத்திலுள்ள உலகம்

5. தீங்கிழைக்கும் கருத்துக்களின் ஒரு ஊற்று எது, அதற்குப் பின்னால் இருப்பது யார்?

5 தீங்கிழைக்கும் கருத்துகள் இந்த உலகில் மலிந்துகிடக்கின்றன. (1 கொரிந்தியர் 3:19) இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களைக் குறித்து கடவுளிடம் இவ்வாறு ஜெபித்தார்: “நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.” (யோவான் 17:15) தம்முடைய சீஷர்களை ‘தீமையினின்று காக்கும்படி’ இயேசு ஜெபம் செய்ததிலிருந்து, இந்த உலகத்தின்மீது சாத்தான் கொண்டுள்ள செல்வாக்கை ஒப்புக்கொள்வது தெரிகிறது. நாம் கிறிஸ்தவர்களாக இருந்தால் போதும், இந்த உலகின் கெட்ட செல்வாக்குகள் நம்மை அண்டாது என்று சொல்லி சும்மா இருந்துவிட முடியாது. “நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்” என யோவான் எழுதினார். (1 யோவான் 5:19) முக்கியமாக, கடைசி நாட்களின் இந்த இறுதிக்கட்டத்தில், சாத்தானும் அவனுடைய பேய்களும், தீங்கிழைக்கும் தகவல்களால் இந்த உலகத்தை நிரப்புவார்கள் என்பது எதிர்பார்க்க வேண்டியதே.

6. இன்றைய பொழுதுபோக்கு உலகம் எவ்வாறு நம் ஒழுக்க தராதரத்தை மரத்துப்போகச் செய்யலாம்?

6 ஆனால், இப்படிப்பட்ட தீங்கிழைக்கும் தகவல்களில் சில தீங்கற்றவையாக தோன்றும் என்பதிலும் ஆச்சரியம் இல்லை. (2 கொரிந்தியர் 11:14) உதாரணமாக, டிவி நிகழ்ச்சிகள், சினிமா படங்கள், இசை, புத்தகங்கள் என காற்றைப் போல எத்திசையும் பரவியுள்ள இந்த உலகத்தின் பொழுதுபோக்கைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அநேக சந்தர்ப்பங்களில், சில பொழுதுபோக்கு அம்சங்கள் ஒழுக்கக்கேடு, வன்முறை, போதைப் பொருள் போன்ற இழிவான பழக்கங்களை ஆதரித்து, அவற்றை செய்யும்படி தூண்டிவிடுகின்றன என்பதை அநேகர் ஒத்துக்கொள்கின்றனர். பொழுதுபோக்கு அம்சங்களில் இப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட கீழ்த்தரமானவற்றை முதல் தடவையாக ஒருவர் பார்த்தாலோ, கேட்டாலோ அவருக்கு ஷாக் அடித்தது போன்று இருக்கலாம். ஆனால் அதையே அவர் திரும்பத்திரும்ப எதிர்ப்படும்போது அவருக்கு மரத்துப் போகிறது. தீங்கிழைக்கும் ஆபத்தான எண்ணங்களை முன்னேற்றுவிக்கும் பொழுதுபோக்குகளை குறித்து, இது என்னை ஒன்றும் செய்யாது என்றோ, இதை செய்வதில் தவறு ஏதுமில்லை என்றோ நாம் ஒருபோதும் தவறாக நினைத்துவிடக்கூடாது.—சங்கீதம் 119:37.

7. பைபிள்மீது நமக்கிருக்கும் நம்பிக்கையை என்ன வகையான மனித ஞானம் அரித்து தின்றுவிடலாம்?

7 தீங்கிழைக்கும் தகவல்களின் மற்றொரு ஊற்றுமூலத்தைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அதாவது, பைபிளின் நம்பகத்தன்மைக்கு சவால்விடும் விஞ்ஞானிகளாலும் அறிஞர்களாலும் வெளியிடப்படும் எண்ணற்ற தகவல்கள். (யாக்கோபு 3:15-ஐ காண்க.) இப்படிப்பட்ட தகவல்கள் முக்கியமான பத்திரிகைகளிலும், புகழ்பெற்ற புத்தகங்களிலும் அடிக்கடி வெளியாகின்றன. இவை பைபிள்மீது ஒருவருக்கிருக்கும் நம்பிக்கையை முற்றிலும் அரித்து தின்றுவிடும். சிலர் எண்ணற்ற ஊகங்களைச் சொல்லி பைபிளின் எழுத்தாளர் கடவுள் என்ற உண்மையை மழுங்கச் செய்வதில் அலாதி பெருமை கொள்கின்றனர். இதுபோன்ற ஆபத்து அப்போஸ்தலர்களின் காலத்திலும் நிலவி வந்தது. இது அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளிலிருந்து தெளிவாக தெரிகிறது: “லெளகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.”—கொலோசெயர் 2:8.

சத்தியத்தின் எதிரிகள்

8, 9. விசுவாச துரோகம் இன்று எவ்வாறு தன் சுயரூபத்தை வெளிக்காட்டுகிறது?

8 நம் ஆவிக்குரிய நிலையை அச்சுறுத்தக்கூடிய மற்றொரு அம்சம் விசுவாச துரோகம். தங்களை கிறிஸ்தவர்கள் என உரிமை பாராட்டிக்கொள்பவர்கள் மத்தியில் விசுவாச துரோகம் எழும்பும் என அப்போஸ்தலனாகிய பவுல் முன்னறிவித்தார். (அப்போஸ்தலர் 20:29, 30; 2 தெசலோனிக்கேயர் 2:3) அவர் சொல்லியிருந்தபடியே, அப்போஸ்தலர்களுடைய மரணத்திற்கு பிறகு, விசுவாச துரோகம் தலைவிரித்தாடத் துவங்கியது. இதனால் கிறிஸ்தவமண்டலம் தோன்றி வளர்ந்தது. ஆனால், இன்று அதுபோல கடவுளுடைய மக்கள் மத்தியில் பெருவாரியான விசுவாச துரோகம் ஏதும் இல்லை. இருப்பினும், சிலர் நம்மைவிட்டு விலகிச் சென்றுவிட்டனர். அவர்களில் சிலர் யெகோவாவின் சாட்சிகளுடைய பெயரை எப்படியாவது கெடுக்க வேண்டும் என முடிவெடுத்து, அநேக பொய்களையும் தவறான தகவல்களையும் பரப்பி வருகின்றனர். இன்னும் சிலர் உண்மை வணக்கத்திற்கு எதிரான அமைப்புகளோடு சேர்ந்துகொண்டு செயல்படுகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம், முதல் விசுவாச துரோகியாகிய சாத்தான் பக்கம் தாங்கள் இருப்பதை நிரூபிக்கின்றனர்.

9 சில விசுவாச துரோகிகள், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புவதற்காக, இன்டர்நெட் உட்பட வித்தியாசப்பட்ட தகவல் தொடர்பு ஏதுக்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அதன் விளைவாக, நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி தெரிந்துகொள்ளும் நோக்கத்தில் ஆராய்ச்சி செய்யும் நேர்மை இருதயமுள்ள ஆட்கள், எதிர்பாராத விதமாக இப்படிப்பட்ட விசுவாச துரோக பிரச்சாரங்களை எதிர்ப்படக்கூடும். ஏன், சத்தியத்திலுள்ள சில சாட்சிகளும்கூட அசம்பாவிதமாக இப்படிப்பட்ட தீங்கிழைக்கும் பிரச்சாரங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கூடுதலாக, விசுவாச துரோகிகள், சில சமயம் டிவி நிகழ்ச்சிகளிலும், ரேடியோ நிகழ்ச்சிகளிலும்கூட பங்கேற்கின்றனர். நிலைமைகள் இப்படியிருக்க, நாம் பின்பற்ற வேண்டிய ஞானமான வழி என்ன?

10. விசுவாச துரோக பிரச்சாரத்தைக் குறித்ததில் நாம் செய்ய வேண்டிய ஞானமான செயல் என்ன?

10 அப்போஸ்தலனாகிய யோவான், விசுவாச துரோகிகளை தங்கள் வீட்டிற்குள் ஏற்க வேண்டாம் என கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தினார். அவர் இவ்வாறு எழுதினார்: “ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.” (2 யோவான் 10, 11) ஆகவே, விசுவாச துரோகிகளின் அபாயகரமான சிந்தனைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, அப்படிப்பட்டவர்களுடன் கொண்டுள்ள எல்லா தொடர்புகளையும் நாம் தவிர்த்துவிடுவது நல்லது. இன்றுள்ள அதிநவீன தகவல் தொடர்பு ஏதுக்களின் மூலமாக அப்படிப்பட்ட விசுவாச துரோக போதகங்களுடன் தொடர்புகொள்வது, அந்த விசுவாச துரோகியையே வீட்டிற்குள் அழைப்பது போன்றது; அது அவ்வளவு ஆபத்தானது. தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் இந்த ஆபத்தான அழிவுக்குரிய பாதையில் நம்மை சிக்க வைத்துவிடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!—நீதிமொழிகள் 22:3.

சபையினுள்

11, 12. (அ) முதல் நூற்றாண்டு சபையில் தீங்கிழைக்கும் எண்ணங்களுக்கு எது காரணமாய் இருந்தது? (ஆ) எவ்வாறு சில கிறிஸ்தவர்கள் தெய்வீக போதனையை உறுதியாக காத்துக்கொள்ள தவறினர்?

11 தீங்கிழைக்கும் கருத்துக்களுக்கான மற்றொரு ஊற்றுமூலத்தை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒருவேளை ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர் ஒருவருக்கு, சபையினுள் பொய் போதனைகளை போதிக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்காது, ஆனால் அவர் யோசனையின்றி பேசும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டிருக்கலாம். (நீதிமொழிகள் 12:18, தி.மொ.) நம்முடைய அபூரணத்தின் காரணமாக, நாம் எல்லோருமே சில சமயம் நம் நாவை தவறாக பயன்படுத்திவிடுவோம் அல்லது வரம்புமீறி பேசிவிடுவோம். (நீதிமொழிகள் 10:19; யாக்கோபு 3:8) அப்போஸ்தலனாகிய பவுலின் நாட்களில் நடந்த சில சம்பவங்கள் இதை உண்மையென நிரூபிக்கின்றன. அந்தச் சமயம் சபையிலிருந்த சிலர் தங்கள் நாவை அடக்க தவறிவிட்டனர், சில வார்த்தைகளைக் குறித்து விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். (1 தீமோத்தேயு 2:8) மற்ற சிலர் தங்களுடைய சொந்த கருத்துக்களை இன்னும் உயர்வாக கருதினர், இதனால் பவுலின் அதிகாரத்திற்கு எதிராக சவால்விடும் அளவிற்கும் சென்றனர். (2 கொரிந்தியர் 10:10-12) இப்படிப்பட்ட குணம், தேவையற்ற சண்டைகளில் விளைவடைந்தது.

12 சில சந்தர்ப்பங்களில், சபையின் சமாதானத்தையே குலைத்துப்போடும் அளவிற்கு இப்படிப்பட்ட கருத்துவேறுபாடுகள் “அற்பமான காரியங்களைக் குறித்து கடும் வாக்குவாதங்களை” கிளப்பிவிட்டன. (1 தீமோத்தேயு 6:5, NW; கலாத்தியர் 5:15) இவ்வாறு வாக்குவாதங்களை கிளப்பிவிட்டவர்களைப் பற்றி பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டா[கும்].”—1 தீமோத்தேயு 6:3, 4.

13. பெரும்பாலான முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் நடத்தை எவ்வாறு இருந்தது?

13 மகிழ்ச்சிகரமாக, அப்போஸ்தலர் காலங்களில் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் உத்தமமாய் வாழ்ந்ததோடு, கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை அறிவிக்கும் வேலையிலேயே கருத்தாய் இருந்தனர். அவர்கள் ஏதோ வார்த்தைகளை பிடித்துக்கொண்டு தேவையில்லாத வாக்குவாதங்களில் நேரத்தை எல்லாம் வீணாக்கவில்லை. ஆனால், “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும்” கஷ்டப்பட்டபோது அவர்களை கவனித்துக்கொள்வதிலும், “உலகத்தால் கறைபடாதபடிக்கு” தங்களை காத்துக்கொள்வதிலும் தங்கள் நேரத்தையெல்லாம் செலவிட்டனர். (யாக்கோபு 1:27) ‘ஆகாத சம்பாஷணைகளை’ அல்லது கெட்ட சகவாசத்தை கிறிஸ்தவ சபையிலும்கூட தவிர்த்து, தங்கள் ஆவிக்குரிய நிலையை காத்துக்கொண்டனர்.1 கொரிந்தியர் 15:33; 2 தீமோத்தேயு 2:20, 21.

14. நாம் ஜாக்கிரதையாக இல்லையென்றால், எவ்வாறு சாதாரண கருத்துப் பரிமாற்றமாக தோன்றும் பேச்சுகள்கூட தீங்கிழைக்கும் வாக்குவாதங்களாக மாறக்கூடும்?

14 பாரா 11-ல் சொல்லப்பட்டிருப்பது போன்ற நிலையில் இன்றுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் நிச்சயமாகவே இல்லை. ஆனால் அப்படிப்பட்ட தேவையற்ற வாக்குவாதங்கள் சபையினுள் தோன்ற வாய்ப்புகள் உள்ளன என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். பைபிள் பதிவுகளைக் குறித்து கலந்துபேசுவதோ, வாக்குப்பண்ணப்பட்டிருக்கும் புதிய உலகத்தைப் பற்றி இதுவரை வெளிப்படுத்தப்படாத விஷயங்களைக் குறித்து ஆச்சரியத்துடன் ஆராய்வதோ இயல்புதான். அத்துடன் உடை, சிகை அலங்காரம், பொழுதுபோக்கை தேர்ந்தெடுப்பது போன்ற ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களைக் குறித்த கருத்துகளை பரிமாறிக்கொள்வதிலும் தவறேதுமில்லை. இருப்பினும், நம்முடைய கருத்துகள்தான் சரி என்று ஒருவேளை நாம் நம்பிவரக்கூடும், ஆனால் அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாதபோது நாம் கோபப்பட்டு நிலைகுலைந்துவிடுகிறோமா? அவ்வாறு செய்தால், சிறுசிறு விஷயங்களால் நம் சபை பிளவுபடும். தீங்கற்ற சாதாரண பேச்சாக துவங்குபவை, சில சமயம் ஆபத்தானவையாக உருவெடுக்கக்கூடும்.

ஒப்படைக்கப்பட்டதை காத்துக்கொள்ளுதல்

15. ‘பிசாசுகளின் உபதேசங்கள்’ எந்தளவு நமக்கு தீங்கிழைக்கக்கூடும், அதற்கு வேதாகமத்தில் என்ன புத்திமதி கொடுக்கப்பட்டிருக்கிறது?

15 பவுல் பின்வருமாறு எச்சரிக்கிறார்: “ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.” (1 தீமோத்தேயு 4:1) ஆம், தீங்கான எண்ணங்கள் உண்மையில் அபாயகரமானவை. அதனால்தான், பவுல் தன்னுடைய நெருங்கிய நண்பனான தீமோத்தேயுவிடம் இவ்வாறு அன்பாய் சொன்னார்: “ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள்.”—1 தீமோத்தேயு 6:20, 21.

16, 17. கடவுள் நம்மிடம் எதை ஒப்படைத்திருக்கிறார், அதை நாம் எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும்?

16 இந்த அன்பான எச்சரிப்பிலிருந்து இன்று நாம் எவ்வாறு பயனடையலாம்? தீமோத்தேயுவினிடம் ஒரு முக்கியமான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தப் பொறுப்பு அதிக மதிப்புமிக்க ஒன்றாக இருந்ததால் அதை அவர் பொத்திப் பாதுகாக்க வேண்டியிருந்தது. அது என்ன? பவுல் அதை விளக்குகிறார்: “நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு. உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.” (2 தீமோத்தேயு 1:13, 14) ஆம், தீமோத்தேயுவினிடம் ஒப்புவிக்கப்பட்டிருந்த அந்த பொறுப்பு “ஆரோக்கியமான வசனங்களையும்” “தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும்” உட்படுத்தியது. (1 தீமோத்தேயு 6:3) இந்த வார்த்தைகளுக்கு இணங்க, இன்றைய கிறிஸ்தவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் விசுவாசத்தையும், சத்தியத்தின் எல்லா அம்சங்களையும் பாதுகாக்க தீர்மானித்திருக்கின்றனர்.

17 அந்தப் பொறுப்பை காத்துக்கொள்வது என்பது, நல்ல பைபிள் வாசிப்பு திட்டத்தை கொண்டிருப்பது, ஜெபத்தில் தரித்திருப்பது போன்ற நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொள்வதை உட்படுத்துகிறது. மேலும், “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்”வதையும் உட்படுத்துகிறது. (கலாத்தியர் 6:10; ரோமர் 12:11-17) கூடுதலாக பவுல் இவ்வாறு சொன்னார்: “நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.” (1 தீமோத்தேயு 6:11, 12) “நல்ல போராட்டத்தைப் போராடு,” “பற்றிக்கொள்” போன்ற பதங்களை பவுல் பயன்படுத்துவதிலிருந்து ஒரு குறிப்பு தெளிவாக தெரிகிறது. அதாவது, நம் ஆவிக்குரிய நிலையை பாதிக்கக்கூடிய எல்லா அம்சங்களையும் நாம் முழு மூச்சாக எதிர்த்துப் போராடுவதோடு, திடதீர்மானத்துடனும் செயல்பட வேண்டும்.

பகுத்துணர்வு தேவை

18. இவ்வுலகத்தின் தகவல் சார்ந்த விஷயத்தில் நாம் எவ்வாறு கிறிஸ்தவ சமநிலையை காட்டலாம்?

18 விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடுகையில் பகுத்துணர்வு நிச்சயம் தேவை. (நீதிமொழிகள் 2:11, NW; பிலிப்பியர் 1:9) உதாரணமாக, இவ்வுலகத்தின் எல்லா புத்தகங்களும் மோசமானவை என தீர்மானித்துவிடுவது நியாயமற்றதாகும். (பிலிப்பியர் 4:5; யாக்கோபு 3:17; NW) மனிதனுடைய எல்லா கருத்துக்களும் கடவுளுடைய வார்த்தைக்கு முரணானவை அல்ல. வியாதியஸ்தர்களை குணப்படுத்துவதற்கு தகுதிபெற்ற மருத்துவர்கள் தேவை என்பதை இயேசுவே தம்முடைய வார்த்தைகளில் சொல்லாமல் சொன்னார். அதுவும் இவ்வுலக படிப்பைச் சார்ந்த ஓர் வேலைதான். (லூக்கா 5:31) இயேசுவின் நாட்களில் இருந்த வைத்திய முறைகள் இந்தக் காலத்தில் உள்ளவற்றைப் போல் முன்னேற்றமடைந்திராவிட்டாலும், ஒரு மருத்துவரிடமிருந்து அநேக நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். இவ்வுலகத்தின் தகவல்களை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில், இன்று கிறிஸ்தவர்கள் சமநிலையை காத்துக்கொள்கின்றனர். அதேசமயத்தில் அவர்களுடைய ஆவிக்குரிய நிலைக்கு பங்கம் ஏற்படுத்தக்கூடிய எல்லாவற்றையும் எதிர்த்து போராடுகின்றனர்.

19, 20. (அ) ஞானமற்ற விதத்தில் பேசுவோருக்கு சபையிலுள்ள மூப்பர்கள் எவ்வாறு பகுத்தறிவுடன் உதவி செய்கின்றனர்? (ஆ) தவறான போதனைகளை தொடர்ந்து பரப்பிவருவோரை சபை என்ன செய்ய வேண்டும்?

19 சபையில் ஞானமற்ற விதத்தில் பேசும் ஒருவருக்கு உதவிசெய்வதற்காக அவரை சந்திக்கும்போது மூப்பர்களுக்கும் பகுத்துணர்வு தேவை. (2 தீமோத்தேயு 2:7) அநாவசியமான விவாதங்கள், அது அப்படியிருக்கும் இப்படியிருக்கும் என யூகித்துக்கொண்டு அதற்காக தர்க்கிப்பது போன்றவற்றில் சபை அங்கத்தினர்கள் சில சமயம் சிக்கிக்கொள்ளலாம். ஆனால் சபையின் ஒற்றுமையை பாதுகாப்பதற்காக சபை மூப்பர்கள் இப்படிப்பட்ட பிரச்சினைகளை உடனடியாக கையாள வேண்டும். அதே சமயத்தில், தங்கள் சகோதரர்களைப் பற்றி தவறான உள்நோக்கத்தை வளர்த்துவிடாமலிருக்கவும், முந்திக்கொண்டு விசுவாச துரோகி என எவரையும் முத்திரை குத்திவிடாமலிருக்கவும் கவனமாக இருக்க வேண்டும்.

20 ஒருவருக்கு உதவி செய்யும்போது அதை என்ன மனப்பான்மையுடன் செய்ய வேண்டும் என பவுல் விளக்கினார். அவர் சொன்ன வார்த்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்: “சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்.” (கலாத்தியர் 6:1) குறிப்பாக சந்தேக மனப்பான்மையுடைய கிறிஸ்தவர்களைப் பற்றி பேசும்போது, யூதா இவ்வாறு எழுதினார்: “சந்தேகத்திலிருக்கிற சிலருக்கு இரக்கம்பாராட்டி அக்கினியிலிருந்து பறித்திழுப்பதுபோல அவர்களைத் தப்புவித்து இரட்சியுங்கள்.” (யூதா 22, 23, தி.மொ.) ஆனால், ஒருவருக்கு அநேக முறை உதவி செய்தும் அல்லது கண்டித்தும் அவர் தொடர்ந்து தவறான போதனைகளை பரப்பி வருகிறார் என்றால், அப்போது சபையை பாதுகாப்பதற்காக மூப்பர்கள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.—1 தீமோத்தேயு 1:20; தீத்து 3:10, 11.

பாராட்டுதலுக்குரியவற்றால் நம் மனதை நிரப்புதல்

21, 22. எந்த விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாக தெரிந்தெடுக்க வேண்டும், நம் மனதை எவற்றால் நிரப்ப வேண்டும்?

21 “சதையழுகல் நோய் போன்று அரித்துத்” தின்றுவிடக்கூடிய தீங்கான போதனைகளை கிறிஸ்தவ சபை ஒதுக்கித்தள்ள வேண்டும். (2 தீமோத்தேயு 2:16, 17, பொ.மொ.; தீத்து 3:9) முக்கியமாக தவறாக வழிநடத்தக்கூடிய இவ்வுலக ‘ஞானத்தை’ பிரதிபலிக்கும் வார்த்தைகள், விசுவாச துரோகிகளின் பிரச்சாரம் அல்லது சபையினுள் யோசனையற்ற பேச்சு போன்றவற்றைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நல்ல ஆர்வம் நன்மையளிப்பதாக இருக்கிறபோதிலும், அதற்கு கடிவாளமில்லாதபோது அல்லது தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் இருக்கும்போது அது தீங்கிழைக்கும் எண்ணங்களுக்கு நம்மை வழிநடத்தக்கூடும். சாத்தானுடைய சூழ்ச்சிகளை எல்லாம் நாம் அறியாதவர்கள் அல்ல. (2 கொரிந்தியர் 2:11) கடவுளுக்கான நம்முடைய சேவையை மந்தமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நம்மை திசைதிருப்புவதற்காக அவன் அநேக வழிகளில் கடும் முயற்சி எடுக்கிறான் என நம் எல்லோருக்குமே தெரியும்.

22 நாம் நல்ல ஊழியக்காரர்களாக, தெய்வீக போதனையில் உறுதியாய் இருப்போமாக. (1 தீமோத்தேயு 4:6) நாம் தேர்ந்தெடுக்கும் தகவல்களைக் குறித்து ஜாக்கிரதையாயிருந்து நம் நேரத்தை ஞானமாக பயன்படுத்துவோமாக. அப்போது சாத்தானால் தூண்டப்படும் பிரச்சாரங்களால் நாம் பாதிக்கப்பட மாட்டோம். ஆகவே, “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ” அதையே சிந்தித்துக்கொண்டிருப்போம். இப்படிப்பட்டவற்றால் நம் இருதயமும் மனதும் நிரம்பியிருக்கும்போது நம் சமாதானத்தின் தேவன் நம்மோடு இருப்பார்.—பிலிப்பியர் 4:8, 9.

நாம் என்ன கற்றுக்கொண்டோம்?

• இவ்வுலக ஞானம் எவ்வாறு நம்முடைய ஆவிக்குரிய நிலைக்கு ஆபத்தைக் கொண்டுவரக்கூடும்?

• தீங்கிழைக்கும் விசுவாச துரோக பேச்சுகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள நாம் என்ன செய்யலாம்?

• சபைக்குள்ளாகவே, என்ன வகையான பேச்சு தவிர்க்கப்பட வேண்டும்?

• மலைபோல குவிந்துகிடக்கும் இன்றைய தகவல்களின் விஷயத்தில் கிறிஸ்தவ சமநிலை எவ்வாறு காத்துக்கொள்ளப்பட வேண்டும்?

[கேள்விகள்]

[கேள்விகள்]

[பக்கம் 9-ன் படம்]

புகழ்பெற்ற அநேக பத்திரிகைகளும் புத்தகங்களும் கிறிஸ்தவ தராதரத்துடன் ஒத்துப்போவதில்லை

[பக்கம் 10-ன் படம்]

தான் சொல்வதுதான் சரி என்ற எண்ணம் வராதவரை கிறிஸ்தவர்கள் தாராளமாக கருத்துகளை பரிமாறிக்கொள்ளலாம்