மகிழ்ச்சியுள்ள குடும்ப வாழ்க்கை மற்றவர்களை கடவுளிடம் கவர்ந்திழுக்கிறது
ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
மகிழ்ச்சியுள்ள குடும்ப வாழ்க்கை மற்றவர்களை கடவுளிடம் கவர்ந்திழுக்கிறது
யெகோவா யோசேப்புக்கு மிகுந்த ஞானமும் பகுத்தறிவும் அருளி ஆசீர்வதித்தார். (அப்போஸ்தலர் 7:10) இதன் பலனாக, யோசேப்பின் நுண்ணறிவு, “பார்வோனுடைய பார்வைக்கும் அவன் ஊழியக்காரர் எல்லாருடைய பார்வைக்கும் நன்றாய்க் கண்டது.”—ஆதியாகமம் 41:37.
இன்றும் யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு, நுண்ணறிவையும் பகுத்தறிவையும் அருளுகிறார். இதை அவர்கள் பைபிளை படிப்பதால் பெற்றுக்கொள்கின்றனர். (2 தீமோத்தேயு 3:16, 17) பைபிள் அறிவுரைகளை பொருத்திப் பயன்படுத்துகையில், இந்த ஞானமும் பகுத்தறிவும் நல்ல பலன்களை அளிக்கின்றன. இவர்களுடைய நல்நடத்தை, ‘அதைக் கவனிப்போரின் பார்வையை’ அடிக்கடி கவர்ந்திருக்கிறது. இதைத்தான் ஜிம்பாவேயிலிருந்து வரும் அனுபவங்கள் காட்டுகின்றன.
• சாட்சிகளை விரும்பாத ஒரு பெண்மணியின் வீட்டருகே சாட்சிகள் வசித்துவந்தனர். காலப்போக்கில் சாட்சிகளின் நல்நடத்தை இந்தப் பெண்மணியை கவரத் தொடங்கியது. அவர்கள் குடும்பத்தை நடத்தும் விதத்தை கண்டு வியந்து பாராட்டினார். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் மிகவும் ஐக்கியமாக இருந்ததையும், பிள்ளைகள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்ததையும் அந்த பெண்மணி கவனித்தார். அந்த கணவர் தன் மனைவியை மிகவும் நேசித்தது அவரின் மனதை கவர்ந்தது.
கணவர் தன் மனைவியை நேசிக்கிறார் என்றால், அவரை “மயக்க” மனைவி அவருக்கு ஏதோ சொக்குப்பொடி போட்டிருக்க வேண்டும் என்பது ஆப்பிரிக்காவில் உள்ள சில சமுதாயத்தினரின் பொதுவான கருத்து. ஆகவே அந்தப் பெண்மணி சாட்சியிடம் அணுகி: “உங்கள் கணவர் உங்களை நேசிப்பது போல என்னுடைய கணவரும் என்னை நேசிக்க வேண்டும். எனவே தயவுசெய்து நீங்கள் செய்த அந்த மந்திரத்தை எனக்கு சொல்லி கொடுங்கள்” என்று கேட்டார். சகோதரியும் புன்னகையுடன் “சரி, நாளை பிற்பகல் அதை உங்களுக்கு சொல்லித் தருகிறேன்” என்றார்.
அடுத்த நாள், அந்த சகோதரி, தன் “மந்திரத்துடன்” அந்தப் பெண்மணியை சந்தித்தார். அது என்ன? அது பைபிள், அதோடுகூட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகம். அறிவு புத்தகத்திலிருந்து “கடவுளைக் கனப்படுத்தும் ஒரு குடும்பத்தைக் கட்டுதல்” என்ற தலைப்பிலுள்ள தகவலை சிந்தித்தப் பின்பு, அந்தப் பெண்மணியிடம் சகோதரி இவ்வாறு சொன்னார்கள்: “என் கணவரும் நானும், ஒருவரையொருவர் சாந்தப்படுத்திக்கொள்வதற்கு பயன்படுத்துகிற ‘மந்திரம்’ இதுவே, இதனால்தான் நாங்கள் ஒருவரையொருவர் மிகவும் நேசிக்கிறோம்.” அந்தப் பெண்மணியும் பைபிள் படிக்க ஒப்புக்கொண்டார். கொஞ்ச நாளில் அவர் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்டார்.
• ஜிம்பாப்வேக்கும் மொஸாம்பிக்குக்கும் வடகிழக்கு எல்லையிலுள்ள ஒரு சிறிய சபைக்கு நியமிக்கப்பட்ட இரண்டு விசேஷித்த பயனியர்கள், வீடுவீடாக ஊழியம் செய்வதற்கு இரண்டு வாரங்களாக வெளியே செல்லவில்லை. ஏன்? ஏனெனில், அவர்கள் சொல்வதைக் கேட்பதற்கு ஜனங்கள் அவர்களிடம் வந்துகொண்டிருந்தார்கள். இது எப்படி நடந்தது என்பதை அந்தப் பயனியர்களில் ஒருவர் சொல்லுகிறார்: “அக்கறை காட்டிய ஓர் நபருடன் வாராவாரம் பைபிள் படிப்பு நடத்துவதற்கு நாங்கள் 15 கிலோமீட்டர் பயணப்பட்டு வந்தோம். வெகு சிரமமெடுத்து சென்றோம். நாங்கள் சேற்றில் நடக்க வேண்டியிருந்தது, வெள்ளப்பெருக்கு சமயத்தில் கழுத்து வரை ஆழமான நதிகளை கடக்க வேண்டியதாக இருந்தது. இதனால் எங்கள் உடைகளையும் காலணிகளையும் தலைமீது வைத்துக்கொண்டு ஜாக்கிரதையாக நதியைக் கடந்து, கரையேறிய பின்பு உடையை உடுத்திக்கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
“எங்கள் ஆர்வத்தைக் கண்டதும், அக்கறை காட்டினவரின் அக்கம்பக்கத்தார் வாயடைத்துப் போனார்கள். அங்கிருந்த மத அமைப்பின் தலைவர் தம்மை பின்பற்றினோரிடம் இவ்வாறு சொன்னார்: ‘யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் அந்த இரண்டு வாலிபரைப் போலவே உங்களுக்கும் ஆர்வம் இருக்க வேண்டாமா?’ அதற்கு அடுத்த நாளில், அவரைப் பின்பற்றினோரில் அநேகர், நாங்கள் ஏன் அவ்வளவு விடாப்பிடியாக உறுதியாயிருந்தோம் என்பதை கண்டுபிடிக்க எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். கூடுதலாக, அடுத்த இரண்டு வாரங்களில் எங்களை பார்ப்பதற்கு அத்தனை பேர் வீட்டுக்கு வந்ததால், எங்களுக்கு சமைக்கக்கூட நேரம் இல்லாமல் போயிற்று!”
இந்த இரண்டு வார காலத்தில், பயனியர்களின் வீட்டுக்கு வந்தவர்களில் அந்த மதத் தலைவரும் ஒருவர். அவரும் பைபிள் படிக்க ஒப்புக்கொண்டபோது, அந்தப் பயனியர்களின் மகிழ்ச்சியைக் கற்பனைசெய்து பாருங்கள்!