Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவுக்கு புகழ் சேர்க்கும் மகிழ்ச்சியான திருமணங்கள்

யெகோவாவுக்கு புகழ் சேர்க்கும் மகிழ்ச்சியான திருமணங்கள்

யெகோவாவுக்கு புகழ் சேர்க்கும் மகிழ்ச்சியான திருமணங்கள்

வெல்ஷுக்கும் எல்த்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவிலுள்ள சோவெட்டோவில் 1985-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. அந்த வைபவத்தின்போது எடுத்த போட்டோ ஆல்பத்தை அவர்கள் அடிக்கடி தங்கள் மகள் ஸின்ஸியுடன் பார்த்து ரசிப்பது வழக்கம். அப்படி பார்க்கும் ஒவ்வொரு சமயமும் அந்த நாளில் அவர்கள் அனுபவித்த ஆனந்தத்தின் எல்லைக்கே மீண்டும் சென்றுவிடுவார்கள். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் இன்னாரென்று அடையாளம் கண்டு சொல்வதில் ஸின்ஸிக்கு அலாதி பிரியம், அதிலும் கண்ணைப்பறிக்கும் அழகான உடையில் அவளின் அம்மா காட்சியளிக்கும் போட்டோக்களை பார்ப்பது என்றால் அவளுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

திருமண நிகழ்ச்சி சோவெட்டோவிலுள்ள கம்யூனிட்டி மன்றத்தில் திருமண பேச்சுடன் ஆரம்பமானது. அதற்கு பின்பு, கிறிஸ்தவ இளைஞரடங்கிய பாடகர் குழுவினர் கடவுளுக்குத் துதிப்பாடல்களைப் பாடினார்கள். அடுத்தபடியாக, ராஜ்ய பாடல்களின் இன்னிசை மென்மையாக ஒலிக்க, அதை ரசித்தபடி வந்திருந்தவர்கள் விருந்தை ருசிக்க தொடங்கினர். காதை பிளக்கும் இசையோ, முகம் சுளிக்க வைக்கும் டான்ஸோ, கண்ணை சொருக வைக்கும் மதுபானங்களோ இல்லை. ஆனாலும் கூடியிருந்தவர்களின் சந்தோஷத்தில் கொஞ்சமும் குறைவில்லை. நல்ல கூட்டுறவையும் ஐக்கியத்தையும் அனுபவித்த திருப்தி அவர்கள் அனைவருடைய முகத்திலும் தென்பட்டது. வைபவத்திற்கு வந்திருந்த விருந்தினர் அனைவரும் தம்பதிகளை மகிழ்ச்சியோடு வாழ்த்தி விடைபெற்றனர். மொத்தத்தில் மகிழ்ச்சி பொங்கிய அந்த திருமண நிகழ்ச்சி மூன்று மணிநேரத்தில் நிறைவுபெற்றது. “அதை இப்போது நினைத்தாலும் சந்தோஷமாயிருக்கிறது” என்று ஒரு கிறிஸ்தவ மூப்பராகிய ரேமண்ட் சொல்கிறார்.

திருமணமான அந்த சமயத்தில், வெல்ஷும் எல்த்தியாவும், உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்தில் வாலண்டியர்களாக சேவை செய்து வந்தனர். தங்கள் திருமணத்தை சிக்கனமாகவும் சிம்பிளாகவும் நடத்தவே அவர்களால் முடியும். ஆனால் சில கிறிஸ்தவர்கள், திருமணத்தை ஆடம்பரமாக செய்து, செலவுகளை இழுத்துப் போட்டுக்கொண்டு பின்பு அந்த கடனை அடைக்க முழுநேர ஊழியத்தை அடமானம் வைத்துவிட்டு, வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். எனினும், வெல்ஷும் எல்த்தியாவும் தங்கள் திருமணத்தை சிம்பிளாக நடத்தியதற்காக எவ்வகையிலும் வருத்தப்படவில்லை; ஏனெனில், ஸின்ஸி பிறக்கும் வரையில் முழுநேர ஊழியராக தொடர்ந்து கடவுளைச் சேவிக்க அது அவர்களுக்கு அனுகூலமளித்தது.

எனினும், பாட்டு கச்சேரி டான்ஸோடு தங்கள் திருமணத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டால் என்ன செய்வது? அதோடு ஒயின் மற்றும் இதர மதுபானங்களை வழங்க ஆசைப்பட்டால் அப்போதென்ன? இத்தனையும் செய்ய வசதியிருக்கும்போது? அந்த வைபவம், கடவுளுடைய நாமத்திற்கோ அல்லது அவரை வணங்குபவர்களின் தகுதிக்கோ பங்கம் விளைவிக்காமல் அதே சமயத்தில் மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் செய்வது எப்படி? இத்தகைய கேள்விகளுக்கு கவனமான சிந்தனை செலுத்துவது அவசியம்; ஏனெனில் பைபிள் இவ்வாறு கட்டளையிடுகிறது: “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.”1 கொரிந்தியர் 10:31.

கட்டுப்பாடில்லா களியாட்டங்களைத் தவிர்த்தல்

ரொம்ப சிம்பிள் என்ற பெயரில் மகிழ்ச்சியற்ற ஒரு திருமணத்தைக் கற்பனை செய்வதும் கடினம். அதற்கு மாறாக ஒரேயடியாக ஆடம்பரத்திலும் கட்டுப்பாடில்லா களியாட்டத்திலும் உச்சத்திற்கு செல்வதும் ஆபத்து. சாட்சிகளல்லாதவர்களின் திருமணங்கள் பலவற்றில், கடவுளுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் காரியங்கள் நடைபெறுகின்றன. உதாரணமாக, போதை தலைக்கேறும் வரையாக மதுபானம் அருந்துவது சாதாரணமாக காணப்படுகிறது. வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், கிறிஸ்தவ திருமணங்கள் சிலவற்றிலும் இது நடந்திருக்கிறது.

“மதுபானம் அமளிபண்ணும்” என்று பைபிள் எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 20:1) ‘அமளி’ என்று மொழிபெயர்க்கப்பட்டதன் எபிரெயச் சொல், “உரத்த சத்தமிடுதல்” என்று அர்த்தப்படுகிறது. மதுபானம் ஓர் ஆளையே சத்தமிட செய்யக்கூடுமானால், ஒன்றாக கூடிவந்து மிதமீறி குடிக்கும் ஒரு பெரும் ஜனக்கூட்டத்திற்கு அது என்ன செய்யலாம் என்பதைக் கற்பனைசெய்து பாருங்கள்! அத்தகைய சந்தர்ப்பங்கள், “மாம்சத்தின் கிரியைகள்” என்று பைபிளில் வரிசையாக குறிப்பிடப்பட்டிருக்கிற “வெறிகள், களியாட்டுகள் முதலான” சீர்கேடுகளுக்கு எளிதில் கொண்டுசெல்லக்கூடும் என்பது வெளிப்படையாக இருக்கிறது. இத்தகைய பழக்கங்கள், மனந்திரும்பாத எவரையும், கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின்கீழ் நித்திய ஜீவனை சுதந்தரிப்பதற்குத் தகுதியற்றவராக ஆக்குகின்றன.—கலாத்தியர் 5:19-21.

“களியாட்டுகள்” என்பதற்கான கிரேக்கச் சொல், ஓரளவு குடிபோதையில், பாடி, நடனமாடி, இசைக் கருவிகள் வாசித்துக்கொண்டு தெருவில் செல்லும் இளைஞரின் ஊர்வலத்தை விவரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. ஒரு திருமணத்தில், அளவுக்குமிஞ்சிய குடியும் காதைப்பிளக்கும் இசையும் வெறித்தனமான ஆட்டமும் இருந்தால், அந்த நிகழ்ச்சி நிச்சயமாகவே களியாட்டுகளாக மாறும் ஆபத்து இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், பலவீனமுள்ளவர்கள் எளிதில் சுயகட்டுப்பாடு இழந்து, மாம்சத்தின் கிரியைகளாகிய “வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், கோபங்கள்” போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இப்படிப்பட்ட மாம்சத்தின் கிரியைகள் கிறிஸ்தவ திருமணத்தின் மகிழ்ச்சியை கெடுப்பதிலிருந்து தடுப்பதற்கு என்ன செய்யலாம்? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க, ஒரு குறிப்பிட்ட திருமணத்தைப் பற்றி பைபிள் சொல்வதை நாம் சிந்திக்கலாம்.

இயேசு கலந்துகொண்ட ஒரு கலியாணம்

கலிலேயாவிலுள்ள கானா ஊரில் நடந்த ஒரு கலியாணத்திற்கு வரும்படி கொடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இயேசுவும் அவருடைய சீஷர்களும் சென்றனர். அந்த நிகழ்ச்சி நல்ல விதத்தில் நடந்தேற இயேசு உதவியளித்தார். திராட்சை ரசம் குறைவுபட்டபோது அவர், மிகச் சிறந்த தரமான திராட்சை ரசத்தை அற்புதமாய் உண்டாக்கி அளித்தார். மீந்திருந்த திராட்சைரசம் நன்றியுடனிருந்த அந்தக் கலியாண வீட்டாருக்கு சிறிது காலத்திற்கு உபயோகமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.—யோவான் 2:3-11.

இயேசு சென்ற அந்தக் கலியாணத்திலிருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். முதலாவதாக, இயேசுவும் அவருடைய சீஷர்களும் அழைப்பில்லாமல் அந்தக் கலியாண விருந்துக்குச் செல்லவில்லை. அவர்கள் அழைக்கப்பட்டார்கள் என்று பைபிள் திட்டவட்டமாய்ச் சொல்கிறது. (யோவான் 2:1, 2) அவ்வாறே, கலியாண விருந்துகளைப் பற்றிய இரண்டு உவமைகளில், விருந்தாளிகள் அழைக்கப்பட்டதனாலேயே அங்கிருந்தார்கள் என்பதாய் இயேசு மறுபடியும் மறுபடியும் பேசினார்.—மத்தேயு 22:2-4, 8, 9; லூக்கா 14:8-10.

சில நாடுகளில், தாங்கள் அழைக்கப்பட்டாலும் சரி அழைக்கப்படாவிட்டாலும் சரி, கலியாண விருந்துக்குச் சென்றுவரலாம் என்று நினைக்கும் வழக்கம் இருக்கிறது. எனினும், இது பணக் கஷ்டத்திற்கு வழிநடத்தக்கூடும். மணமக்கள் ஒருவேளை வசதிபடைத்தவர்களாக இல்லாமல் இருக்கலாம்; அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், எக்கச்சக்கமானவர்கள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து, நிறைய அளவில் உணவுக்கும் பானத்துக்கும் ஏற்பாடு செய்வதால் கடனுக்குள் மூழ்கிவிடலாம். ஆகையால், கிறிஸ்தவ மணமக்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள விருந்தாளிகளை மட்டும் அழைத்து சிம்பிளாக சின்ன விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தால், அழைக்கப்படாத உடன்கிறிஸ்தவர்கள் அதைப் புரிந்துகொள்ளவும் மதிக்கவும் வேண்டும். தென் ஆப்பிரிக்காவிலுள்ள கேப் டௌனில் நடந்தது இது: ஒருவர் தன்னுடைய திருமணத்திற்கு 200 பேரை அழைத்திருந்தாராம். ஆனால் வந்திருந்தவர்களோ 600 பேர்! சீக்கிரத்திலேயே சாப்பாடு தீர்ந்துவிட்டது. அழையாத விருந்தாளிகளின் ஒரு கும்பல், அந்த வார இறுதியில் கேப் டௌனைச் சுற்றிப்பார்க்க வந்த பயணிகள். இவர்களுக்கு வழிகாட்டியவர் மணமகளின் தூரத்து உறவினர். ஆகவே, மாப்பிள்ளையிடமோ மணமகளிடமோ கேட்காமலேயே அந்த பஸ்ஸிலிருந்த அத்தனை பேரையும் சாப்பாட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். அது தன் உரிமை என நினைத்துக்கொண்டார்!

யார் வேண்டுமானாலும் வரலாம் என்று சொல்லப்பட்டிருந்தால் தவிர, இயேசுவை உண்மையாய்ப் பின்பற்றுகிறவர், அழைக்கப்படாத திருமணத்திற்கு செல்வதையும், விருந்தில் பங்குகொள்வதையும் தவிர்ப்பார். அழையாத விருந்தாளியாக போக மனமுள்ளவர்கள் தங்களைத் தாங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘இந்தத் திருமண விருந்துக்கு நான் சென்றால், புதுமண தம்பதிகள்மீது அன்புகாட்டுவதாக இருக்குமா? அவர்களுக்கு தொந்தரவாகவும், அவர்களுடைய மகிழ்ச்சியைக் கெடுப்பதாகவும் இருக்காதா? சூழ்நிலையைப் புரிந்து நடந்துகொள்ளும் ஒரு கிறிஸ்தவர், ‘என்னை அழைக்கவில்லையே’ என வருந்துவதற்கு பதிலாக, அவர்களுடைய மணவாழ்வில் யெகோவாவின் ஆசீர்வாதத்தைக் குறிப்பிடும் ஒரு வாழ்த்துமடலை அனுப்பலாம். அந்தத் தம்பதிகளுக்கு பயனுள்ள ஒரு பரிசை அனுப்பலாம். இப்படிச் செய்வது அந்த மணமக்களின் மகிழ்ச்சியை நிச்சயம் அதிகரிக்கும்.—பிரசங்கி 7:9; எபேசியர் 4:28.

யாருக்கு பொறுப்பு?

ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில், வயதில் பெரியவர்களாயிருக்கும் உறவினர்கள் திருமண ஏற்பாடுகளை கவனித்துக்கொள்வது வழக்கம். இது பணசம்பந்த கடமைகளிலிருந்தும் பொறுப்புகளிலிருந்தும் விடுதலை அளிப்பதால் மணமக்களின் பாரம் குறையலாம். அதனால் அவர்களுக்கு புதுமண தம்பதிகள் நன்றியும் செலுத்தலாம். எனினும், நல்நோக்கத்துடன் இருக்கும் உறவினர்களிடமிருந்து எந்த வகையான உதவியையும் ஏற்பதற்கு முன்பாக, தங்கள் சொந்த விருப்பத்தை அவர்கள் மதிப்பார்களா என்பதை தம்பதிகள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடவுளுடைய குமாரனாகிய இயேசு, ‘வானத்திலிருந்து வந்திருந்தபோதிலும்,’ கானாவில் நடந்த கலியாணத்தில் பெரும்பாலான காரியங்களை அவர் பொறுப்பேற்று நடத்தியதாக எந்தக் குறிப்பும் இல்லை. (யோவான் 6:41) மாறாக, ‘பந்திவிசாரிப்புக்காரனாக’ செயல்படும்படி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார் என்பதை பைபிள் விவரம் நமக்கு தெரிவிக்கிறது. (யோவான் 2:8) இவரோ, அந்தப் புதிய குடும்பத் தலைவருக்கு, அதாவது, மணவாளனுக்கு பதில்சொல்ல வேண்டியவராக இருந்தார்.—யோவான் 2:9, 10.

கடவுளால் நியமிக்கப்பட்ட அந்தப் புதிய குடும்பத் தலைவருக்கு, கிறிஸ்தவ உறவினர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும். (கொலோசெயர் 3:18-20) தன்னுடைய திருமணத்தின்போது நடைபெறுபவற்றிற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். இயல்பாக, ஒரு மணவாளன் சமநிலையைக் காத்துக்கொள்வதில் ஞானத்தோடு நடந்துகொள்ள வேண்டும். கூடுமானவரை மணமகள், தன் பெற்றோர், தன் மாமனார் மாமியார் ஆகியோரின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இருப்பினும், தம்பதிகளின் விருப்பத்திற்கு எதிர்மாறாக நிகழ்ச்சிகளை நடத்த உறவினர்கள் வற்புறுத்தினால், அப்போது தம்பதிகள் அவர்களுடைய உதவியைக் கனிவுடன் மறுத்து, எளிய முறையில் தங்கள் சொந்த செலவில் திருமணத்தை வைத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கலாம். இப்படிச் செய்வதால் மணமக்களின் மனதுக்கு சங்கடத்தை உண்டாக்கும் எதுவும் நடைபெறாது. உதாரணமாக, ஆப்பிரிக்காவில் ஒரு கிறிஸ்தவ திருமண வைபவத்தைப் பொறுப்பேற்று நடத்திய அவிசுவாசியான உறவினர், மரித்த மூதாதைகளை கனம் செய்ய ‘டோஸ்டிங்’ சடங்கை, அதாவது பானம் அருந்தும் சடங்கை செய்தார்!

சில சமயங்களில் திருமண நிகழ்ச்சி முடிந்து மணமக்கள் தேனிலவுக்கு சென்ற பிறகும் கொண்டாட்டம் தொடரலாம். இத்தகைய சந்தர்ப்பத்தில், பைபிள் தராதரங்களை கடைப்பிடிக்கவும், கொண்டாட்டத்தை சீக்கிரமாக முடிக்கவும் பொறுப்புள்ள சிலரை மணவாளன் ஏற்பாடு செய்ய வேண்டும்.

கவனமாக திட்டமிடுதலும் மிதமான நிலையும்

இயேசு சென்றிருந்த திருமணத்தில் தரமான உணவு ஏராளமாக இருந்ததென தெரிகிறது. ஏனெனில் அதை திருமண விருந்தென பைபிள் விவரிக்கிறது. நாம் கவனித்தபடி, ஏராளமான திராட்சை ரசமும் அங்கிருந்தது. பொருத்தமான இசையும் கண்ணியமான நடனமும் இருந்தன என்பதிலும் சந்தேகமில்லை, ஏனெனில் இது, யூத சமுதாய வாழ்க்கையில் பொதுவான ஒரு அம்சமாக இருந்தது. கெட்ட குமாரனைப் பற்றிய தம்முடைய புகழ்பெற்ற உவமையில் இயேசு இதைக் காட்டினார். அந்தக் கதையில் சொல்லப்பட்ட செல்வந்தரான அந்தத் தகப்பன், தன் குமாரன் மனந்திரும்பி வந்ததற்காக அவ்வளவு அதிக சந்தோஷமடைந்ததனால்: “நாம் புசித்து சந்தோஷமாயிருப்போம்” என்றார். இயேசு சொன்னபடி, அந்தக் கொண்டாட்டத்தில் ‘கீதவாக்கியமும் நடனக்களிப்பும்’ இருந்தது.—லூக்கா 15:23, 25.

எனினும், கானா ஊரில் நடந்த திருமணத்தில் இசையையும் நடனத்தையும் பைபிள் திட்டமாய் குறிப்பிடாதது கவனிக்கத்தக்கது. உண்மையில், திருமணங்களைப் பற்றிய விவரங்கள் எவற்றிலும் நடனம் இருந்ததாக பைபிள் குறிப்பிடுவதில்லை. பைபிள் காலங்களில் இருந்த கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களுக்குள், நடனம் அரிதாக இருந்ததெனவும், அவர்கள் திருமணங்களின் முக்கிய அம்சமாக அது இல்லை எனவும் தெரிகிறது. இதிலிருந்து நாம் எதையாகிலும் கற்றுக்கொள்ள முடியுமா?

ஆப்பிரிக்காவில் சில கிறிஸ்தவ திருமணங்களில் அதிக சத்தத்தை எழுப்பும் எலெக்ட்ரானிக் ஒலிக்கருவிகளை பயன்படுத்துகின்றனர். காதைப்பிளக்கும் அந்த ஓசையில், வந்திருப்போர் ஒருவரோடொருவர் நிம்மதியாக பேசக்கூட முடியாது. சில சமயங்களில் சாப்பாட்டுக்கு ‘பஞ்சமிருக்கும்,’ ஆனால் ஆட்டம் பாட்டத்துக்கு மட்டும் ‘பஞ்சமே’ இருக்காது; கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிஞ்சிப் போய்விடும். திருமண விருந்தை சாக்காக வைத்து டான்ஸ் பார்ட்டியே நடந்துவிடும். கூத்தும் கும்மாளமும் வெளியாட்களுக்கு அழைப்பிதழாக அமைந்துவிடுகிறது. இது வம்பை விலைக்கு வாங்குவதாக இருக்கும்.

திருமணங்களைப் பற்றிய பைபிள் பதிவு, இசைக்கும் நடனத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆகவே, யெகோவாவுக்கு புகழை உண்டாக்கும் ஒரு திருமணத்தைத் திட்டமிடும் மணமக்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டுமல்லவா? எனினும், ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியில் சமீபத்தில் நடந்த திருமணத்தில் நடனமாட இருந்த சில கிறிஸ்தவ இளைஞர்கள், சிக்கலான நடன ஸ்டெப்பிற்காக பயிற்சி என்ற பெயரில் பல மணிநேரங்களை மாதக்கணக்காக விரயமாக்கினர். ஆனால் கிறிஸ்தவர்கள், ஊழியம், தனிப்பட்ட படிப்பு, கிறிஸ்தவ கூட்டங்கள் போன்ற ‘அதிமுக்கிய காரியங்களுக்காக’ ஞானமாக இப்படிப்பட்ட ‘காலத்தை வாங்க வேண்டியது’ அவசியம்.—எபேசியர் 5:16; பிலிப்பியர் 1:10; NW.

கானா ஊரில் நடந்த திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் கூட்டம் பெரியது என்பது இயேசு அளித்த திராட்சரசத்தின் அளவிலிருந்து தெரிகிறது. எனினும், சில யூத திருமணங்களில் நடந்ததுபோல் அந்த நிகழ்ச்சிநேரம் களியாட்டமாக இல்லை என்றும், விருந்தாளிகள் மதுபானத்தைத் தவறாக பயன்படுத்தவில்லை என்றும் நாம் நிச்சயமாயிருக்கலாம். (யோவான் 2:10) ஏன்? ஏனெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கலந்துகொண்டார். “மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே” என்பதாக கெட்ட சகவாசத்தைக் குறித்த கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதில், மற்ற எல்லாரையும்விட இயேசுவே மிக அதிக கவனமுள்ளவராக இருந்திருப்பார்.நீதிமொழிகள் 23:20.

ஆகையால், மணமக்கள் தங்கள் திருமணத்தில் ஒயின் அல்லது மற்ற மதுபானங்களை அளிப்பதற்குத் தீர்மானித்தால், அது பொறுப்புள்ள நபர்களின் கண்டிப்பான மேற்பார்வையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இசைக் கச்சேரி நடத்த தீர்மானித்தால், பொருத்தமான இன்னிசைகளை தெரிந்தெடுத்து, சத்தத்தை கன்ட்ரோல் செய்ய பொறுப்புள்ள ஒருவரை ஏற்பாடு செய்ய வேண்டும். வந்திருப்பவர்கள் இடையில் புகுந்து, தங்களுக்குப் பிடித்தமான, கிறிஸ்தவ தராதரங்களுக்கு இசைவில்லாத இசையை புகுத்தவோ, அதிக சப்தமாக வைக்கவோ கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. நடன நிகழ்ச்சி இருந்ததென்றால், அதை கண்ணியமான முறையில் நடத்தும்படி பார்த்துக்கொள்ளலாம். விசுவாசத்திலிராத உறவினர்கள் அல்லது முதிர்ச்சியற்ற கிறிஸ்தவர்கள் இழிவான அல்லது உணர்ச்சியை கிளறிவிடும் நடனங்களை தூண்டும் இசையை நுழைத்தால் மணமகன் ஞானத்தோடு அதை தடுக்க வேண்டும். அல்லது அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நிறுத்திவிடுவதே புத்திசாலித்தனமாக இருக்கும். இல்லையென்றால், அந்தத் திருமணம் தரங்கெட்ட ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியாகவும் மற்றவர்கள் இடறுவதற்கான தடைகல்லாகவும் ஆகிவிடலாம்.—ரோமர் 14:21.

இன்றைய நடனம், இசை, மதுபானம் ஆகியவற்றில் பொதுவாகவே ஆபத்துக்கள் மறைந்திருப்பதால் கிறிஸ்தவ மணவாளர்கள் பலர் இவற்றை முற்றிலும் தவிர்த்துவிடுகிறார்கள். இது எல்லாரிடமும் நல்ல பெயரை பெற்று தராவிட்டாலும் கடவுளுடைய பரிசுத்த பெயருக்கு வரும் நிந்தையைத் தவிர்த்திருக்கிறது. இதற்காக அவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். மறுபட்சத்தில் சில மணவாளர்கள், பொருத்தமான இசையையும் நடனத்தையும் மிதமான மதுபானத்தையும் வழங்க ஏற்பாடு செய்கிறார்கள். எப்படியிருந்தாலும், திருமணத்தில் அனுமதிக்கும் அனைத்திற்கும் மணமகனே பொறுப்புள்ளவர்.

ஆப்பிரிக்காவில், இப்படிப்பட்ட கண்ணியமான திருமண நிகழ்ச்சிகளை ‘இழவு வீட்டிற்கு போனது மாதிரி’ இருக்கிறது என முதிர்ச்சியில்லாத சிலர் கேலி செய்திருக்கின்றனர். அது சரியல்ல. சிலசமயம் ஆட்டமும் பாட்டமும் ஆடம்பரமும் வேண்டும் என நினைப்பது மனித ஆசையே. ஆனால் அதனால் வரும் குதூகலம் சூரிய ஒளி பட்டதும் விலகிவிடும் பனித்துளி போன்றது. பின்னால் அவர்களும் அதை நினைத்து வருந்த வேண்டி வரும். அதோடு, கடவுளுடைய பெயருக்கு நிந்தையைக் கொண்டுவரும். (ரோமர் 2:24) மறுபட்சத்தில், கடவுளுடைய பரிசுத்த ஆவி, மெய்யான சந்தோஷத்தை உண்டாக்குகிறது. (கலாத்தியர் 5:22) கிறிஸ்தவ தம்பதிகள் பலர், தங்கள் திருமண நாள் சந்தோஷமான ஒரு நிகழ்ச்சியாக, ‘இடறலுக்குக் காரணமாக’ இல்லாமல் இருந்ததை எண்ணி பெருமிதம் கொள்கின்றனர்.—2 கொரிந்தியர் 6:3.

வெல்ஷும் எல்த்தியாவும், தங்கள் திருமணத்திற்கு வந்திருந்த அவிசுவாசிகளான உறவினர்களின் பாராட்டு குறிப்புகளை இன்றும் நினைத்து மகிழ்கின்றனர். ஒருவர் இவ்வாறு சொன்னார்: “காட்டுத்தனமான கூச்சல்கள் நிறைந்த கல்யாணங்கள் நடக்கும் இந்நாட்களில், நன்கு திட்டமிடப்பட்ட அமைதியும் சந்தோஷமும் நிறைந்த ஒரு கண்ணியமான கல்யாணத்திற்கு போய்வந்தது மனதிருப்தியளித்தது.”

எல்லாவற்றிலும் மிக முக்கியமாக, மகிழ்ச்சியுள்ளவையும் மதிப்புவாய்ந்தவையுமான கிறிஸ்தவ திருமணங்கள், திருமணத்தைத் தொடங்கி வைத்தவரான யெகோவா தேவனுக்கு கனத்தைக் கொண்டுவருகின்றன.

[பக்கம் 22-ன் பெட்டி/படம்]

திருமண நிகழ்ச்சிக்கான ‘செக்லிஸ்ட்’

அவிசுவாசியான ஓர் உறவினரை பேச்சு கொடுக்கும்படி நீங்கள் அழைத்தால், கிறிஸ்தவத்திற்கு மாறான ஏதாவது பாரம்பரியத்தை அவர் உட்புகுத்த மாட்டாரென நிச்சயப்படுத்திக் கொண்டீர்களா?

ஒருவேளை இசை இருக்குமானால், பொருத்தமான பாட்டுகளை மாத்திரமே நீங்கள் தெரிந்தெடுத்திருக்கிறீர்களா?

பாட்டின் இசை காதுக்கு இனிமையாக மென்மையாக மட்டும் ஒலிக்குமா?

நடனம் அனுமதிக்கப்பட்டால், கண்ணியமான முறையில் அது நடைபெறுமா?

மதுபானம் மிதமான அளவில் மாத்திரமே அளிக்கப்படுமா?

அதை பொறுப்புள்ளவர்கள் மேற்பார்வை செய்வார்களா?

திருமண நிகழ்ச்சிகள் முடிவடைவதற்கென தகுந்த ஒரு நேரத்தைக் குறித்திருக்கிறீர்களா?

முடிவு வரை ஒழுங்கை காப்பதற்கு பொறுப்புள்ளவர்கள் அங்கிருப்பார்களா?