Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா நம் இருதயங்களிலும் பெரியவர்

யெகோவா நம் இருதயங்களிலும் பெரியவர்

யெகோவா நம் இருதயங்களிலும் பெரியவர்

“தமக்கு பயந்து நடப்பவர்களில் . . . யெகோவா மகிழ்ச்சி கொள்கிறார்” என்று சங்கீதக்காரன் எழுதினார். நீதியுள்ள தராதரங்களை உறுதியாக கடைப்பிடிக்க முழுமூச்சோடு முயற்சி செய்யும் தம்முடைய ஊழியக்காரர் ஒவ்வொருவரையும் பார்த்து படைப்பாளர் சந்தோஷப்படுகிறார். நம்பிக்கைக்குரியவர்களுக்கு ஆசீர்வாதத்தை பொழிகிறார், ஊக்கமும் உற்சாகமும் அருளுகிறார், நம்பிக்கை இழந்து இடிந்த நிலையில் இருக்கும் சமயங்களில் ஆறுதலளிக்கிறார். தம்மை வணங்குபவர்கள் அபூரணர் என்பதை அறிந்திருக்கிறார், அதனால்தான் நம்முடைய திராணிக்கு மிஞ்சிய எதையும் அவர் எள்ளளவும் எதிர்பார்ப்பதில்லை.—சங்கீதம் 147:11, NW.

யெகோவாவுக்கு தம்முடைய ஊழியர்கள்மீது அளவில்லா அன்பும் பாசமும் இருக்கிறது என்பதை நம்புவதில் பொதுவாக நமக்கு ஒரு கஷ்டமும் இல்லைதான். ஆனால் சிலர், சதா தங்களுடைய குறைபாடுகளையே எண்ணி எண்ணி மனம் புழுங்கிக்கொண்டிருப்பதால், ஒருகாலும் தங்கள்மீது யெகோவா அன்புகூர மாட்டார் என்றே நினைத்து மனதை இறுக்கிக்கொள்கிறார்கள். “நான் ஒரு மகா பாவி, மாபெரும் பாதகன், எப்படி என்மீது யெகோவா அன்புகாட்டுவார்?” என ஒருவேளை முடிவுகட்டலாம். வாஸ்தவம்தான், அவ்வப்போது நம்மெல்லாரிடமும் தாழ்வு மனப்பான்மை தலைதூக்கத்தான் செய்கிறது. ஆனால் சிலருடைய மனசுக்குள், தாங்கள் எதற்குமே லாயக்கில்லாதவர்கள், ஒருகாசுக்கும் பெறாதவர்கள், உருப்படியில்லாதவர்கள் என்ற எண்ணம் ஓர் உலக யுத்தத்தையே நடத்திக்கொண்டிருக்கிறது.

மனமொடிந்த நிலை

பைபிள் காலங்களில் உண்மையுள்ள நபர்கள் பலர், மிகவும் மனமொடிந்து வேதனையோடு இருந்தார்கள். யோபு வாழ்வையே வெறுத்தார், கடவுள் கைவிட்டுவிட்டார் என்றே எண்ணினார். ஒரு காலத்தில் அன்னாள்—சாமுவேலின் தாய்—தனக்குப் பிள்ளை இல்லாததால் மிகவும் வேதனையோடு மனங்கசந்து அழுதார். தாவீது ‘மிகவும் ஒடுங்கிப்போனார்.’ எப்பாப்பிரோதீத்து தான் நோய்ப்பட்டிருந்ததைப் பற்றிய செய்தி தன் சகோதரருக்கு வருத்தம் உண்டாக்கியதால் வியாகுலப்பட்டார்.—சங்கீதம் 38:6, பொ.மொ.; 1 சாமுவேல் 1:7, 10; யோபு 29:2, 4, 5; பிலிப்பியர் 2:25, 26.

இன்று கிறிஸ்தவர்களைப் பற்றியென்ன? ஒருவேளை வியாதியோ தள்ளாடும் வயதோ அல்லது வேறெதாவது சூழ்நிலைகளோ தாங்கள் ஆசைப்பட்டபடி பரிசுத்த சேவையில் அதிகம் செய்ய முடியாதவாறு சிலரை சிறைப்பிடித்து வைக்கலாம். இது, யெகோவாவுக்கு செய்ய வேண்டியதை செய்யவில்லையே, உடன் சகோதரருக்கு உதவ முடியவில்லையே என்று முடிவு செய்ய வழிநடத்தலாம். அல்லது சிலர், என்றோ செய்த தவறுகளையே எப்பொழுது பார்த்தாலும் நினைத்து நினைத்து தங்களையே நொந்துகொள்ளலாம், அவற்றையெல்லாம் யெகோவா எப்படி மன்னித்திருப்பார் என்று சந்தேகிக்கலாம். எதற்கெடுத்தாலும் திட்டு, அடிதடி, சண்டை சச்சரவு போன்ற மோசமான குடும்ப சூழ்நிலையில் வளர்ந்து வந்தவர்களோ அன்பையும் பாசத்தையும் பெற கொஞ்சம்கூட அருகதையற்றவர்கள் என எண்ணிவிடலாம். ஏன் இப்படி?

கொஞ்சம்கூட அன்பில்லாத, சுயநலமும், வசைசொற்களும் அச்சுறுத்தலுமே ஆட்டிப்படைக்கும் ஒரு சூழ்நிலையில் சிலர் வளர்ந்திருக்கிறார்கள். தங்களிடம் பாசத்தைக் கொட்டி, மனசார பாராட்டி, தட்டிக்கொடுத்து ஊக்கமளிக்கும் தகப்பனை இப்படிப்பட்டவர்களுக்கு தெரியவே தெரியாது; சிறுசிறு தவறுகள் செய்யும்போது கண்டுகொள்ளாமலும், பெரிய தவறுகளைச் செய்யும்போது மன்னிக்கும் மனம்படைத்த அருமை அப்பாவையும் தெரியாது; இப்படிப்பட்டவர்கள் தந்தையின் இதமான அரவணைப்பில் இன்புற்று எந்தப் பயமுமின்றி சுகமாக வாழும் வாழ்க்கையை கனவிலும்கூட காணாதவர்கள். சீராட்டி பாராட்டி வளர்க்கும் அன்புள்ள தகப்பன் இவர்களுக்கு இவ்வுலகில் இல்லாததால், அன்புள்ள ஒரு பரலோக தகப்பனைப் பற்றி புரிந்துகொள்ள கடினமாயிருக்கலாம்.

உதாரணமாக, சுதாகர் இவ்வாறு எழுதுகிறார்: “நான் சின்ன பையனாய் இருந்தபோதும் சரி, பெரியவனாய் ஆனபிறகும் சரி, துளிகூட அன்பில்லாத என் அப்பாவின் நடத்தையே என்னை பெரிதும் பாதித்தது. a அவர் வாய்திறந்து ‘நல்லாயிருக்கு’ன்னு ஒருநாளாவது பாராட்டியிருப்பாரா, கிடையவே கிடையாது. அதனால்தான் அவர் கிட்டவே நான் போகமாட்டேன். சொல்லப்போனால், அவரைக் கண்டாலே எட்டடி தள்ளியே நிற்பேன். அவ்வளவு பயம்!” இப்போது சுதாகருக்கு வயது 50-ஐத் தாண்டிவிட்டது. இருந்தாலும், தான் ஒன்றையும் சாதித்துவிடப் போவதில்லை என்றுதான் குறைபட்டுக்கொண்டே இருக்கிறார். கனகா சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்: “கொஞ்சம்கூட அன்போ பாசமோ இல்லாமல் எப்பொழுதும் குத்துக்கல் மாதரிதான் என்னுடைய பெற்றோர் இருப்பார்கள்; நான் பைபிளைப் படிக்கத் தொடங்கியபோது, ஓர் அன்புள்ள தகப்பன் என்றால் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்யவே கஷ்டப்பட்டேன்.”

இப்படிப்பட்ட எண்ணங்கள், அது எந்த காரணத்தால் ஏற்பட்டதாக இருந்தாலும்சரி, நாம் அன்பினால் அல்ல, சிலசமயம் பயத்தால் அல்லது குற்றவுணர்வால் கடவுளை சேவிக்கிறோம் என்பதையே காட்டும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், என்னதான் நன்றாக செய்தாலும் நமக்கு திருப்தியே இருக்காது. யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டும், நம் சகோதர சகோதரிகளைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆசையை நம்மால் கொஞ்சம்கூட நிறைவேற்ற முடியாது என்று நினைத்துவிடலாம். இதன் விளைவாக, நம்முடைய இலக்குகளை நாம் அடைய முடியாமற்போய், நம்மையே நொந்துகொண்டு மனம் ஒடிந்துபோகலாம்.

இதற்கு என்ன செய்யலாம்? யெகோவாவுக்கு எவ்வளவு பெரிய மனசு என்பதை நமக்கு நாமே நினைப்பூட்டிக் கொள்ள வேண்டும். கடவுளுடைய பண்பின் இந்த அருமையான அம்சத்தைப் புரிந்துகொண்ட ஒருவர்தான் அப்போஸ்தலன் யோவான்.

‘தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவர்’

பொ.ச. முதல் நூற்றாண்டின் முடிவில், உடன் விசுவாசிகளுக்கு யோவான் இவ்வாறு எழுதினார்: “இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். நம்முடைய இருதயமே நம்மை குற்றவாளிகளாக தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.” யோவான் ஏன் இதை எழுதினார்?—1 யோவான் 3:19, 20.

யெகோவாவின் ஊழியர் ஒருவர் தான் கைவிடப்பட்டவராக அல்லது கண்டனம் செய்யப்பட்டவராக இருதயத்தில் நினைத்து பொருமும் சாத்தியம் இருந்ததை யோவான் தெளிவாக அறிந்திருந்தார். ஒருவேளை யோவானுக்கே அப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். கோபக் கனல் வீசும் குணமுடைய வாலிபராக இருந்ததால், மற்றவர்களிடம் கடுகடுவென்று நடந்துகொண்ட சந்தர்ப்பத்தில் இயேசு கிறிஸ்து அவரை கண்டித்தார். சொல்லப்போனால், யோவானுக்கும் அவருடைய சகோதரன் யாக்கோபுக்கும் ‘இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரை’ இயேசு வைத்தாரே.—மாற்கு 3:17; லூக்கா 9:49-56.

அடுத்த 60 ஆண்டுகளில், அனுபவம் நிறைந்த யோவான், அமரிக்கையும் அன்பும் இரக்கமுமுள்ள ஒரு கிறிஸ்தவராக பக்குவமடைந்துவிட்டார். அப்போஸ்தலரில் வெகுகாலம் உயிருடனிருந்த யோவான், ஏவுதலினால் தன் முதல் கடிதத்தை எழுதினபோது இந்த உண்மையை அறிந்திருந்தார்: அதாவது, தம்முடைய ஊழியர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கெல்லாம் தமக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பதில்லை; மாறாக, அவர் கனிவானவரும், பரந்த மனப்பான்மையுள்ளவரும், தயாள குணமுள்ளவரும் இரக்கமுள்ளவருமானவர். அதுமட்டுமல்ல, தம்மை நேசித்து, சத்தியத்திற்கு ஏற்றபடி தம்மை வணங்குவோர் யாரானாலும் சரி, அவர்கள் எல்லாரிடமும் ஆழ்ந்த அன்புடையவர். ஆகவேதான், “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று யோவான் எழுதினார்.—1 யோவான் 4:8.

யெகோவா நமது சேவையை கண்டு மகிழ்ச்சியடைகிறார்

நமக்கு பிறவியிலேயே இருக்கும் பலவீனங்களும் குறைபாடுகளும் கடவுளுக்குத் தெரியும். இவற்றையும் அவர் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” என்று தாவீது எழுதினார். வளரும் சூழல் நம்மை எந்தளவு வடிவமைக்கிறது என்பதை அவர் நன்கு அறிவார். சொல்லப்போனால், நம்மை பற்றி நாம் தெரிந்திருப்பதைவிட யெகோவா அதிகம் தெரிந்திருக்கிறார்.—சங்கீதம் 103:14.

நாம் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ, அப்படி இருக்க முடியாதபடி தடுக்கும் அபூரணத்தோடு நாம் போராடுவதை அவர் அறிவார். நமக்கிருக்கும் இதே போராட்டம்தான் அப்போஸ்தலன் பவுலுக்கும் இருந்தது. அவர் எழுதினார்: “நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.” நம் எல்லாருக்கும் இதே போராட்டம்தான். இதனால்தான் சில சந்தர்ப்பங்களில் நம்மையே நாம் கண்டனம் செய்கிறோம்.—ரோமர் 7:19.

இதை எப்போதும் நினைவில் வையுங்கள்: நம்மை நாம் எப்படி எடைபோடுகிறோம் என்பதைவிட யெகோவா நம்மை எப்படி எடை போடுகிறார் என்பதே அதிமுக்கியம். அவரை பிரியப்படுத்துவதற்கு நாம் முயற்சி செய்வதை அவர் காணும்போதெல்லாம், மேலோட்டமாக திருப்தியடையாமல், மனம் நிறைய மகிழ்ச்சி கொள்கிறார். (நீதிமொழிகள் 27:11, தி.மொ.) நாம் இவ்வுலகில் எதையுமே சாதித்துவிடவில்லை என்று நமக்குத் தோன்றலாம்; என்றாலும், நாம் மனப்பூர்வமாக நல்லெண்ணத்தோடு செய்யும் சேவை அவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நாம் சாதிப்பதற்கும் அப்பால் அவர் பார்க்கிறார்; நாம் செய்ய விரும்புவது என்ன என்பதை அவர் பகுத்துணருகிறார். நம்முடைய ஆசாபாசங்கள் என்னென்ன என்று அவருக்குத் தெரியும். யெகோவா நம் இருதயத்திலுள்ளதை ‘வாசிக்க’ முடியும்.—எரேமியா 12:3; 17:10.

உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகளில் அநேகர், பயந்த சுபாவம் உள்ளவர்களாகவோ கூச்ச சுபாவமுள்ளவர்களாகவோ, தாங்கள் இருக்கும் இடம் தெரியாமல் நடந்துகொள்ள விரும்புகிறவர்களாகவோ இருக்கின்றனர். நற்செய்தியை வீடுவீடாக பிரசங்கிப்பது அப்படிப்பட்டவர்களுக்கு மலைபோன்ற சவாலாக இருக்கலாம். ஆனால், கடவுளை சேவிக்கவும், தங்கள் அயலாருக்கு உதவி செய்யவும் வேண்டுமென்ற ஆசையால் தூண்டப்பட்டு, அப்படிப்பட்ட கூச்ச சுபாவமுள்ளவர்களும் வீடு வீடாக சென்று பைபிளைப் பற்றி பேசுவதற்கு கற்றுக்கொள்கிறார்கள். தாங்கள் எதையும் சாதித்துவிடவில்லை என்று நினைத்தால், அவர்கள் சந்தோஷம் பறிபோய்விடலாம். அவர்கள் செய்யும் ஊழியத்தால் எந்தப் பிரயோஜனமுமில்லை என்று அவர்கள் மனம் உறுத்தலாம். ஆனால், இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய சேவையில் எடுக்கும் பெரும் முயற்சியை கண்டு யெகோவா நிச்சயமாகவே அகம் மகிழ்கிறார். அதோடு, விதைக்கப்பட்ட சத்தியத்தின் விதைகள் எப்போது, எங்கே முளைவிட்டு, வளர்ந்து, கனி கொடுக்கும் என்று அவர்களுக்குத் தெரியாதே!—பிரசங்கி 11:6; மாற்கு 12:41-44; 2 கொரிந்தியர் 8:12.

வேறுசிலரோ தீராத நோயால் திண்டாடலாம்; அல்லது வயோதிபத்தால் தள்ளாடலாம். அப்படிப்பட்டவர்கள் ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களில் இருக்கும்போது வேதனையாலும் கவலையாலும் பாரமடையலாம். எப்படியெனில், பிரசங்க ஊழியத்தைப் பற்றி கொடுக்கப்படும் ஒரு பேச்சைக் கேட்டதுமே, தாங்கள் ஒரு காலத்தில் செய்தது நினைவலைகளாக வந்து மனதில் மோதலாம். இப்போதும் அப்படி செய்ய முடியவில்லையே என்று ஏங்கலாம்; ஆனால் உடல் தளர்ச்சி அவர்களைச் செய்ய விடுவதில்லை. அப்படிப்பட்டவர்கள் தாங்கள் கேட்டதற்கு இசைய செய்ய நினைத்தும் முடியாமல் போகையில் தாங்கள் குற்றம் செய்வதாக நினைத்து வருந்தலாம். எனினும், யெகோவா அவர்களுடைய உண்மை பற்றுறுதியையும், சகிப்புத்தன்மையையும் நிச்சயமாகவே அருமையாக கருதுகிறார். அவர்கள் பற்றுறுதியுடன் நிலைத்திருக்கும் வரையில், அவர்களுடைய உண்மைத்தவறா வாழ்க்கையை அவர் ஒருபோதும் மறக்கமாட்டார்.—சங்கீதம் 18:25; 37:28.

“இருதயத்தை . . . நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்”

யோவான் முதிர்வயதை அடைவதற்குள் கடவுளுடைய இரக்க குணத்தைப் பற்றி நன்றாக புரிந்துகொண்டிருப்பார். அவர் இவ்வாறு எழுதியதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்: “தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.” மேலும், ‘நம்முடைய இருதயத்தை நிச்சயப்படுத்திக்கொள்ளும்படியும்’ யோவான் நம்மை உற்சாகப்படுத்தினார். யோவான் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் என்ன?

‘நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்’ என மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வினைச்சொல், “இணங்கவைப்பது, வெல்வது, நம்பவைப்பது” என்ற அர்த்தத்தை கொடுப்பதாக வைன்ஸ் எக்ஸ்போஸிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் ஓல்ட் அண்ட் நியூ டெஸ்டமென்ட் வேர்ட்ஸ் அகராதி சொல்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், நம்முடைய இருதயத்தை நிச்சயப்படுத்திக்கொள்வதற்கு, யெகோவா நம்மை நேசிக்கிறார் என்பதை நம்பும்படி நம் இருதயத்தை இணங்கவைக்க வேண்டும், இவ்வாறு அதை வெல்ல வேண்டும். எப்படி?

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சுதாகர், யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் 25-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஒரு மூப்பராக சேவை செய்திருக்கிறார். தனிப்பட்ட படிப்பு யெகோவாவின் அன்பை இருதயத்தில் மீண்டும் உறுதிப்படுத்த முடியும் என்பதை கண்டிருக்கிறார். அவர் சொல்கிறார்: “பைபிளையும் நம்முடைய பிரசுரங்களையும் நான் தவறாமலும் கவனமாகவும் படிக்கிறேன். கடந்த காலத்தைப் பற்றியே சதா சிந்தித்துக்கொண்டிராமல், நம்முடைய அதிசயமான எதிர்காலத்தைப் பற்றிய காட்சியை மனதில் தெளிவாக வைத்திருப்பதற்கு இது எனக்கு உதவி செய்கிறது. சில சமயங்களில், கடந்த காலத்தைப் பற்றிய நினைவு எனக்கு வந்துவிடுகிறது, கடவுள் என்னை எப்படி நேசிப்பார் என நினைப்பேன். ஆனால், பொதுவாக, தவறாமல் படிப்பது என்னுடைய இருதயத்தைப் பலப்படுத்துகிறது, விசுவாசத்தை பெருகச் செய்கிறது, அதோடு மகிழ்ச்சியாகவும் நிதானம் தவறாமலும் இருப்பதற்கு எனக்கு உதவி செய்கிறது.”

பைபிள் வாசிப்பதும் தியானிப்பதும் நிலைமையை மாற்றாது என்பது உண்மைதான். ஆனால் நம்முடைய சூழ்நிலையைப் பற்றி நாம் சிந்திக்கும் முறையை அது மாற்ற முடியும். கடவுளுடைய வார்த்தையிலுள்ள எண்ணங்களை நம் இருதயங்களில் பதிய வைத்துக்கொள்வது அவர் சிந்திப்பதுபோல் சிந்திக்க நமக்கு உதவி செய்கிறது. மேலும், ஆழ்ந்து படிப்பது கடவுளுடைய பரந்த மனதை நன்றாக புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. நாம் சிறுபிள்ளைகளாய் வளர்ந்த சூழலுக்கும் பலவீனங்களுக்கும் நாம்தான் காரணம் என கடவுள் நம்மை குற்றஞ்சாட்ட மாட்டார் என்று படிப்படியாக நாம் புரிந்துகொள்ளலாம். நம்மில் பலர் சுமக்கும் பாரங்கள்—அவை உணர்ச்சிப்பூர்வ பாரமாக இருந்தாலும்சரி உடல்ரீதியிலான பாரமாக இருந்தாலும்சரி—இவற்றுக்கெல்லாம் நாம் காரணமில்லை என்பதை அவர் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், அச்சூழ்நிலையைக் கணக்கில் எடுத்து கரிசனையும் காட்டுகிறார்.

ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட கனகாவின் விஷயத்திற்கு வருவோம். யெகோவாவைப் பற்றி அவள் அறிந்தபோது, பைபிளை படிப்பது அவளுக்கும் மிகுந்த நன்மையாக இருந்தது. சுதாகரைப் போல அவளும், தகப்பனைப் பற்றி தன் மனதில் வைத்திருந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதாக இருந்தது. படிப்பின் மூலம் தான் கற்றதையெல்லாம் மனதுக்கு கொண்டுவந்து அதைப் பயன்படுத்த ஜெபம் கனகாவுக்கு உதவி செய்தது. “எனக்கு ஓர் அன்புள்ள தகப்பன் கிடைக்கவில்லை; ஆனால் அன்பாய் பழகும் நண்பர்கள் இருந்தார்கள்; அவர்களோடு பழகிய அந்த நட்பின் அனுபவத்தால் ஆரம்பத்தில் யெகோவாவை ஒரு நெருங்கிய நண்பராகவே கற்பனை செய்துகொண்டேன். படிப்படியாக என் உணர்ச்சிகளையும், சந்தேகங்களையும், கவலைகளையும், கஷ்டங்களையும் யெகோவாவிடம் கொட்டிவிடக் கற்றுக்கொண்டேன். ஜெபத்தில் அவரிடம் மறுபடியும் மறுபடியும் பேசினேன். அதே சமயத்தில் சிறுசிறு துண்டுகளை ஒன்று சேர்ப்பதுபோல், அவரைப் பற்றி நான் கற்றுக்கொண்டிருந்த புதுப்புது விஷயங்கள் எல்லாவற்றையும் மொஸைக் போல ஒன்றுசேர்த்து வந்தேன். சிறிது காலத்திற்குப் பின், யெகோவாவுடன் எனக்கிருந்த பிணைப்பு அந்தளவுக்கு உறுதியாகிவிட்டதால், அவரை என்னுடைய அன்புள்ள தகப்பனாக கற்பனை செய்ய எனக்கு எந்தக் கஷ்டமும் இருக்கவில்லை” என்று கனகா சொல்கிறாள்.

கவலையிலிருந்து விடுதலை

இந்தப் பொல்லாத, பழைய ஒழுங்குமுறை இருக்கும் வரையில், கவலையில்லா வாழ்வை ஒருவரும் எதிர்பார்க்க முடியாது. அப்படியென்றால், கவலையும் தன்னம்பிக்கை இன்மையும் சில கிறிஸ்தவர்களை அடிக்கடி வாட்டலாம். ஆனால், யெகோவா நம்முடைய நல்லெண்ணத்தையும் அவருடைய சேவையில் நாம் கடினமாக உழைப்பதையும் நன்றாகவே அறிந்திருக்கிறார் என்று நாம் நம்பலாம். அவருடைய பெயருக்காக நாம் காட்டும் அன்பை அவர் ஒருபோதும் மறக்கவே மாட்டார்.—எபிரெயர் 6:10.

வரப்போகும் மேசியானிய ராஜ்யத்தில் பூத்துக்குலுங்கும் புதிய பூமியில், உண்மையுள்ள மனிதர்கள் யாவரும் சாத்தானுடைய உலகம் சுமத்தும் பாரத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். எப்பேர்ப்பட்ட விடுதலை! யெகோவா எவ்வளவு பரந்த மனம் படைத்தவர் என்பதை நாம் அப்போது காண்போம். அதுவரை, “தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்” என்பதில் நாமெல்லாரும் உறுதியாய் நம்பியிருப்போமாக.—1 யோவான் 3:20.

[அடிக்குறிப்புகள்]

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 30-ன் சிறு குறிப்பு]

யெகோவா கொடுங்கோலர் அல்லர், அவர் கனிவான, பரந்த மனம் படைத்த, இரக்கமுள்ள தகப்பன்

[பக்கம் 31-ன் படம்]

கடவுளுடைய வார்த்தையைப் படித்தால் கடவுள் சிந்திப்பது போலவே நாமும் சிந்திக்க முடியும்