Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“உன் இருதயத்தைக் காத்துக்கொள்”

“உன் இருதயத்தைக் காத்துக்கொள்”

“உன் இருதயத்தைக் காத்துக்கொள்”

சாமுவேல் தீர்க்கதரிசியிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.” (1 சாமுவேல் 16:7) அடையாள அர்த்தமுள்ள இருதயத்தின்பால் கவனத்தை ஈர்த்து, சங்கீதக்காரன் தாவீதும்கூட இவ்வாறு பாடினார்: “நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப் பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்.”—சங்கீதம் 17:3.

ஆம், நாம் உண்மையில் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்பதைத் தீர்மானிப்பதற்காக யெகோவா இருதயத்திற்குள் இருப்பதைப் பார்க்கிறார். (நீதிமொழிகள் 17:3) நல்ல காரணத்தோடுதான் பண்டைய இஸ்ரவேலின் அரசன் சாலொமோன் பின்வரும் புத்திமதியைக் கொடுக்கிறார்: “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.” (நீதிமொழிகள் 4:23) அடையாள அர்த்தமுள்ள நம் இருதயத்தை எவ்வாறு காத்துக்கொள்ளலாம்? நீதிமொழிகள் அதிகாரம் 4 அந்தக் கேள்விக்கு நமக்கு பதிலளிக்கிறது.

தகப்பன் போதகத்தைக் கேள்

நீதிமொழிகள் 4-ஆம் அதிகாரம் பின்வரும் வார்த்தைகளோடு ஆரம்பமாகிறது: “பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள். நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள்.”நீதிமொழிகள் 4:1, 2.

கடவுள் பயமுள்ள பெற்றோரின், குறிப்பாக தகப்பனின் நல்ல போதகத்திற்கு செவி சாய்க்க வேண்டும் என்பதுதான் வாலிப பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் புத்திமதி. குடும்பத்தின் சரீர தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டிய வேதப்பூர்வமான பொறுப்பு அவருக்குத்தான் இருக்கிறது. (உபாகமம் 6:6, 7; 1 தீமோத்தேயு 5:8) இப்படிப்பட்ட வழிநடத்துதல் இல்லாவிட்டால் ஒரு வாலிபன் அனுபவம் பெறுவது எவ்வளவு கடினம்! ஆகவே ஒரு பிள்ளை மரியாதையுடன் தன் தகப்பனின் போதகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமல்லவா?

போதிப்பதற்கு தகப்பன் இல்லையென்றால் அந்த இளைஞன் என்ன செய்வான்? உதாரணமாக, பதினொரு வயதுள்ள ஜேசன் நான்கு வயதிலேயே தன் தகப்பனை இழந்துவிட்டான். a கிறிஸ்தவ மூப்பர் ஒருவர், வாழ்க்கையில் மிகவும் கலங்க வைக்கும் விஷயம் எது என அவனிடம் கேட்டார். ஜேசன் சட்டென்று, “எனக்கு அப்பா இல்ல. சில சமயங்கள்ல அத நெனைக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு” என்றான். இருந்தாலும், பெற்றோரின் வழிநடத்துதல் இல்லாத பிள்ளைகளுக்கு ஆறுதலான ஆலோசனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஜேசனுக்கும் அவனைப் போன்றவர்களுக்கும், தகப்பன் ஸ்தானத்திலிருந்து ஆலோசனை வழங்க மூப்பர்களும் கிறிஸ்தவ சபையிலுள்ள மற்ற முதிர்ச்சியுள்ளவர்களும் இருக்கின்றனர். அவர்களை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.—யாக்கோபு 1:27.

சாலொமோன் தான் பெற்றுக்கொண்ட போதனைகளை நினைவுக்குக் கொண்டுவந்து தொடர்ந்து இவ்வாறு எழுதுகிறார்: “நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.” (நீதிமொழிகள் 4:3) அரசன் தான் வளர்க்கப்பட்ட விதத்தை மிகவும் பெருமையோடு எண்ணிப்பார்க்கிறார். தகப்பனின் ஆலோசனையை இருதயத்தில் ஏற்ற “பிரியமான பிள்ளை”யாக அவர் இருந்தார். ஆகவே, இளம் சாலொமோனுக்கும் அவருடைய தகப்பன் தாவீதுக்குமிடையே மிகவும் அன்பான, நெருக்கமான உறவு இருந்திருக்கும். அதுமட்டுமல்ல, சாலொமோன் “ஒரே பிள்ளை”யாக அல்லது அருமையான பிள்ளையாக இருந்தார். பெற்றோருடன் மனம்விட்டு பேசமுடிகிற, பாசத்துக்கு பஞ்சமில்லாத ஒரு வீட்டுச்சூழலில் ஒரு பிள்ளை வளருவது எவ்வளவு முக்கியம்!

ஞானத்தைச் சம்பாதி, புத்தியைச் சம்பாதி

தன் தகப்பனின் அன்பான ஆலோசனையை அப்படியே இன்னும் மனதில் வைத்திருந்த சாலொமோன் இவ்வாறு எழுதுகிறார்: “அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய். ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டுவிலகாமலும் இரு. அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும். ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.”நீதிமொழிகள் 4:4-7.

ஞானம் ஏன் “முக்கியம்”? ஏனென்றால் அறிவையும் புத்தியையும் பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவதே ஞானம். கூர்ந்து கவனிப்பதாலோ, அனுபவத்தாலோ, அல்லது வாசிப்பதாலும் படிப்பதாலுமோ உண்மைகளைத் தெரிந்துகொள்வது அல்லது உண்மைகளோடு பரிச்சயமாயிருப்பது தான் அறிவு. இந்த அறிவே ஞானத்துக்கு அடிப்படையாகும். ஆனால் அதை நல்லவிதமாக பயன்படுத்தும் திறமை நமக்கு இல்லாவிட்டால், நம்முடைய அறிவு வீணானதே. பைபிளையும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பால் அளிக்கப்படும் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களையும் நாம் ஒழுங்காக வாசிப்பது மட்டுமல்லாமல் அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்களை செயலில் காட்டவும் முயலவேண்டும்.—மத்தேயு 24:45.

புத்தியை பெற்றுக்கொள்வதும்கூட இன்றியமையாதது. அது இல்லாவிட்டால், உண்மைகள் ஒன்றோடொன்று எவ்வாறு தொடர்புடையனவாய் இருக்கின்றன என்பதை நம்மால் காணமுடியுமா? குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் முழுமையாக எல்லா உண்மைகளையும் நம்மால் சரியாக உணர்ந்துகொள்ளத்தான் முடியுமா? புத்தியில் நாம் குறைவுபட்டால், ஏன், எதற்காக என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு உட்பார்வையையும் பகுத்துணர்வையும் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்? அறிந்த உண்மைகளை பகுத்து ஆராய்ந்து சரியான முடிவுகளுக்கு வருவதற்கு நமக்கு புத்தி அவசியம்.—தானியேல் 9:22, 23.

சாலொமோன் தொடர்ந்து தன் தகப்பனின் வார்த்தைகளை எடுத்துக்கூறுகிறார்: “நீ அதை [ஞானத்தை] மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும். அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.” (நீதிமொழிகள் 4:8, 9) தெய்வீக ஞானம் அதைத் தழுவிக்கொள்பவரைப் பாதுகாக்கிறது. அதோடு அது அவருக்குக் கனம்சேர்த்து அவரை அலங்கரிக்கிறது. அப்படியென்றால், எல்லா வழிமுறைகளிலும் நாம் ஞானத்தைப் பெற்றுக்கொள்வோமாக.

“புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள்”

தன்னுடைய தகப்பனின் போதனைகளை எதிரொலித்து இஸ்ரவேலின் அரசன் அடுத்து இவ்வாறு சொல்கிறார்: “என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும். ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.”நீதிமொழிகள் 4:10-13.

தன் தகப்பன் சொல்லைத் தட்டாத பிரியமான மகனாய், தனக்குப் போதனையளித்து தன்னைத் திருத்திய அன்புள்ள புத்திமதியின் மதிப்பை சாலொமோன் வெகுவாக போற்றியிருக்க வேண்டும். சமநிலையுள்ள புத்திமதி இல்லையென்றால், நாம் எவ்வாறு ஆவிக்குரிய முதிர்ச்சியை நோக்கி முன்னேற முடியும் அல்லது நம்முடைய வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்த முடியும்? நம்முடைய தவறுகளிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளாவிட்டால் அல்லது தவறான கருத்துக்களை திருத்திக்கொள்ளாவிட்டால் ஆவிக்குரிய விதத்தில் நாம் முன்னேற முடியாது. நியாயமான புத்திமதி கடவுள் பயமுள்ள நடத்தைக்கு வழிநடத்துகிறது. இவ்வாறு நாம், ‘செவ்வையான பாதைகளில்’ நடக்க இது நமக்கு உதவிசெய்யும்.

புத்தி, ‘ஆயுசின் வருஷங்கள் அதிக’மாகும்படிகூட செய்கிறது. எவ்வாறு? இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.” (லூக்கா 16:10) சிறிய காரியங்களில் நம்மை சிட்சித்துக்கொண்டால், பெரிய காரியங்களில் அதைச் செய்வது நமக்கு சுலபமாக இருக்குமல்லவா? அதன்மீதுதானே நம்முடைய உயிரே சார்ந்திருக்கிறது? உதாரணமாக, ‘ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்த்துக்கொண்டிராதபடி’ கண்களுக்குப் பயிற்சிகொடுத்தால், ஒழுக்கங்கெட்ட ஒரு செயலைச் செய்வதற்கு வாய்ப்பில்லை. (மத்தேயு 5:28) இயல்பாகவே, இந்த நியமம் ஆண்களுக்கும் பொருந்தும், பெண்களுக்கும் பொருந்தும். எந்த ‘ஒரு எண்ணத்தையும் சிறைப்படுத்துவதற்கு’ நம்முடைய மனங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டால் வார்த்தையில் அல்லது செயலில் எல்லைமீறி மோசம்போக மாட்டோம்.—2 கொரிந்தியர் 10:5.

உண்மைதான், புத்திமதியை ஏற்றுக்கொள்வது பொதுவாக கடினமாக இருக்கிறது, அது நம்மைக் கட்டுப்படுத்துகிறதே என்று தோன்றலாம். (எபிரெயர் 12:11) ஆனால் புத்திமதியை உறுதியாய் பற்றிக்கொண்டால் நாம் முன்னேற்றம் செய்வதற்கு நம்முடைய பாதை இடம் கொடுக்கும் என்று ஞானமுள்ள அரசன் நமக்கு உறுதியளிக்கிறார். சரியான பயிற்சி பெற்ற ஓட்டப்பந்தயக்காரர் கீழே விழுந்துவிடாமலும் தன்னைக் காயப்படுத்திக்கொள்ளாமலும் மின்னல் வேகத்தில் ஓடுவார். அதுபோல புத்திமதியை உறுதியாய் பற்றிக்கொள்பவர்களால் ஜீவனுக்கான பாதையில் இடறிவிழாமல் சீராக ஓடமுடியும். ஆம், நாம் தெரிந்துகொள்ளும் பாதையைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

“துன்மார்க்கருடைய பாதை”யை வெறுத்துவிடு

ஒரு அவசர உணர்வோடு சாலொமோன் இவ்வாறு எச்சரிக்கிறார்: “துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே. அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்துபோ. பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம். அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.”நீதிமொழிகள் 4:14-17.

நாம் துன்மார்க்கருடைய வழியை வெறுத்துவிட வேண்டும் என்று சாலொமோன் விரும்புகிறார். அவர்கள் பொல்லாத செயல்களைச் செய்து பிழைக்கிறார்கள். பொல்லாப்பைச் செய்வது அவர்களுக்கு சாப்பாடு போலவும் தண்ணீர்போலவும் இருக்கிறது. பொல்லாப்பான காரியங்களைச் செய்தாலொழிய அவர்களுக்குத் தூக்கம் வராது. அவர்கள் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் கெட்டுப்போனவர்கள். அவர்களோடு தோழமை வைத்துக்கொண்டு நாம் உண்மையில் நம் இருதயங்களைக் காத்துக்கொள்ள முடியுமா? இன்றைய உலகின் பெரும்பாலான பொழுதுபோக்குகளில் சிறப்பித்துக்காட்டப்படுவது வன்முறையே. அவற்றையே நாம் பார்த்துகொண்டிருந்தால் ‘தீயோருடைய வழியில்தான் நாமும் நட”க்கிறோம். அது எத்தனை முட்டாள்தனம்! இப்படிப்பட்ட வன்முறைக் காட்சிகளை சின்னத்திரையிலோ வெள்ளித் திரையிலோ பார்த்துக்கொண்டு, இருதயத்தில் இரக்கத்தை நாம் வளர்க்க முடியுமா?

வெளிச்சத்திலே இருங்கள்

பாதை என்ற அதே உதாரணத்தைப் பயன்படுத்தி சாலொமோன் இவ்வாறு அறிவிக்கிறார்: “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.” (நீதிமொழிகள் 4:18) பைபிளைப் படித்து அதன்படி வாழ்க்கை நடத்த முயற்சி செய்வது என்பது அதிகாலையில் இருட்டோடே ஒரு பயணத்தை ஆரம்பிப்பதற்கு ஒப்பாக உள்ளது. கருமை படர்ந்து இரவுநேர ஆகாயம் இருள் சூழும்போது நம்மால் சரியாக எதையும் காண முடியாது. ஆனால் பொழுது புலரும் சமயத்தில், நம்மை சுற்றியிருப்பவற்றை நாம் கொஞ்சம் கொஞ்சமாக பார்க்க ஆரம்பிக்கிறோம். கடைசியாக சூரியன் பிரகாசிக்கிறது, நாம் தெளிவாக எல்லாவற்றையும் பார்க்கிறோம். ஆம், வேதாகமத்தை பொறுமையாகவும் ஊக்கத்துடனும் விடாமல் படித்து வருகையில் சத்தியம் படிப்படியாக நமக்கு தெளிவாக தெரிகிறது. இருதயத்தை பொய்யான விவாதங்களுக்கு எதிராக காப்பதற்கு ஆவிக்குரிய போஷாக்கு அளிப்பது அவசியம்.

அதோடு பைபிள் தீர்க்கதரிசனங்களின் அர்த்தமும் முக்கியத்துவமும் படிப்படியாக வெளிப்படுகிறது. தீர்க்கதரிசனங்கள், உலக சம்பவங்களின் வாயிலாகவோ கடவுளுடைய மக்களின் அனுபவத்திலோ நிறைவேறும்போது, யெகோவாவின் பரிசுத்த ஆவியினால் அவை நமக்கு தெளிவாக புரிகின்றன. பொறுமை இழந்து அவற்றின் நிறைவேற்றத்தைக் குறித்து ஊகித்துக்கொண்டிராமல், வெளிச்சம் ‘அதிகமதிகமாய்ப் பிரகாசிப்பதற்காக’ நாம் காத்திருக்க வேண்டும்.

கடவுளுடைய வழிநடத்துதலைத் தள்ளிவிட்டு வெளிச்சத்தின் பாதையில் நடக்க மறுப்பவர்களைப் பற்றி என்ன? “துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப் போலிருக்கும்” என்று சாலொமோன் சொல்கிறார். “தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.” (நீதிமொழிகள் 4:19) எதனால் தாங்கள் இடறினோம் என்று அறியாமல் இருட்டில் தடுமாறுகிற மனிதனைப் போல் துன்மார்க்கர் இருக்கிறார்கள். தேவ பயமற்ற அவர்கள் அநீதியால் செழிப்பது போல தோன்றினாலும் அவர்களுடைய வெற்றி தற்காலிகமானதே. இவர்களைப் பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “நிச்சயமாகவே நீர் [யெகோவா] அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.”—சங்கீதம் 73:18.

விழிப்புடன் இருங்கள்

இஸ்ரவேலின் அரசன் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.”நீதிமொழிகள் 4:20-23.

இருதயத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற புத்திமதி எத்தனை மதிப்புள்ளது என்பதை சாலொமோனின் சொந்த உதாரணமே உறுதிசெய்கிறது. உண்மைதான், வாலிப வயதில் அவர் தன் தகப்பனின் ‘சொல்லைத் தட்டாத பிரியமான குமாரனாக நிரூபித்தார்.’ வயது வந்த பருவத்திலும் யெகோவாவுக்குப் பிரியமானவராக நிலைத்திருந்தார். என்றபோதிலும் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.” (1 இராஜாக்கள் 11:4) விழிப்பாயில்லையென்றால் மிகச் சிறந்த இருதயம்கூட தவறானதைச் செய்யும்படி வசீகரிக்கப்படலாம். (எரேமியா 17:9) நாம் கடவுளுடைய வார்த்தையிலுள்ள நினைப்பூட்டுதல்களை நம் இருதயத்தின் அருகில், ‘இருதயத்துக்குள்ளே’ வைத்திருக்க வேண்டும். இதில் நீதிமொழிகள் 4-ஆம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்ட வழிநடத்துதலும் அடங்கும்.

உங்கள் இருதய நிலையை பரிசோதித்துப் பாருங்கள்

அடையாள அர்த்தமுள்ள நம் இருதயத்தை நாம் வெற்றிகரமாக காத்துவருகிறோமா? உள்ளான மனுஷனுடைய நிலையை நாம் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (மத்தேயு 12:34) அவர் மேலுமாக இவ்வாறு சொன்னார்: “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய் சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.” (மத்தேயு 15:19, 20) ஆம் நாம் இருதயத்தில் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைக் குறித்து நம்முடைய வார்த்தைகளும் செயல்களும் நன்றாகவே பேசும்.

சாலொமோன் சரியாகத்தான் இவ்வாறு நமக்கு அறிவுரை கூறுகிறார்: “வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து. உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது. உன் கால்நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக. வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.”—நீதிமொழிகள் 4:24-27.

சாலொமோன் கொடுக்கும் புத்திமதியைப் பார்த்தால், நாம் நம்முடைய பேச்சையும் நம்முடைய செயல்களையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்பது புலனாகிறது. இருதயத்தைக் காத்துக்கொண்டு கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென்றால் தாறுமாறான பேச்சையும் மாறுபாடான வழியையும் நாம் தவிர்க்க வேண்டும். (நீதிமொழிகள் 3:32) ஆகவே நம்முடைய பேச்சும் செயல்களும் நம்மைப் பற்றி என்ன வெளிப்படுத்துகின்றன என்பதை நாம் ஜெபசிந்தையோடு எண்ணிப்பார்க்க வேண்டும். அதன்பிறகு நம்மிடம் குறையிருப்பது தெரியவந்தால் அதைத் திருத்திக்கொள்ள யெகோவாவின் உதவியை நாடுவோமாக.—சங்கீதம் 139:23, 24.

எல்லாவற்றுக்கும் மேலாக, ‘நம் கண்கள் நேராய்ப் பார்க்கக்கடவது.’ நம்முடைய பரம தந்தைக்கு முழு ஆத்துமாவோடுகூடிய சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளின்மீது அவற்றை பதிய வைப்போமாக. (கொலோசெயர் 3:23) தனிப்பட்ட விதமாக நீங்கள் அப்படிப்பட்ட ஒரு நேர்மையான பாதையில் நடக்கும்போது யெகோவா ‘உங்கள் வழிகளிலெல்லாம்’ உங்களை வெற்றிகாணச் செய்வாராக. ‘உன் இருதயத்தைக் காத்துக்கொள்’ என்ற ஆவியால் ஏவப்பட்ட புத்திமதிக்கு செவிசாய்த்ததற்காக யெகோவா உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக.

[அடிக்குறிப்புகள்]

a அவனுடைய உண்மை பெயரல்ல.

[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]

வன்முறையை சிறப்பித்துக்காட்டும் பொழுதுபோக்கை நீங்கள் தவிர்க்கிறீர்களா?

[பக்கம் 21-ன் படம்]

அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையிலிருந்து பயனடையுங்கள்

[பக்கம் 23-ன் படம்]

சிட்சை உங்கள் முன்னேற்றத்திற்கு தடையல்ல

[பக்கம் 24-ன் படம்]

பைபிளை விடாது படிப்பதில் உறுதியாக இருங்கள்