சுவிசேஷங்கள்—சரித்திரமா கட்டுக்கதையா?
சுவிசேஷங்கள்—சரித்திரமா கட்டுக்கதையா?
மனித வரலாற்றின் போக்கையே மாற்றினார் அந்த இளம் மனிதர். அவர்தான் நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசு. இவருடைய வாழ்க்கை சரிதை உலகம் முழுவதிலும் சமுதாயத்தோடு பின்னிப் பிணைந்துள்ள ஒன்று. இது மக்களுக்கு சொல்லித்தரப்படும் முறையான மற்றும் முறைசாரா கல்வியின் பாகமாக அமைந்துவிட்டது. காலத்தால் மாறிவிடாத உண்மைகளும் நீதிமொழிகளும் சுவிசேஷங்களில் புதைந்து கிடக்கின்றன என்பது அநேகருடைய கருத்து. இதற்கு ஒரு உதாரணம், “நீங்கள் பேசும்போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள்.” (மத்தேயு 5:37, பொது மொழிபெயர்ப்பு) நீங்கள் கிறிஸ்தவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் பெற்றோர் உங்களுக்குச் சொல்லித்தந்த பாடங்களுக்கு சுவிசேஷ பதிவுகளே ஆதாரமாக இருக்கலாம்.
கிறிஸ்துவை உண்மை மனதோடு பின்பற்றும் லட்சக்கணக்கானோர் சுவிசேஷங்களில் வர்ணிக்கப்பட்டுள்ள அந்த இலட்சிய புருஷனுக்காக துன்பப்படவும் உயிரை விடவும்கூட தயாராக இருக்கின்றனர். தைரியம், சகிப்புத்தன்மை, விசுவாசம், நம்பிக்கை ஆகியவற்றுக்கு சுவிசேஷங்கள் ஆதாரத்தையும் தூண்டுதலையும்கூட அளித்திருக்கின்றன. ஆகவே இந்தப் பதிவுகள் வெறும் கட்டுக்கதைகள்தான் என்பதற்கு மறுக்க முடியாத அத்தாட்சி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா? மனிதரின் சிந்தனையிலும் நடத்தையிலும் சுவிசேஷ பதிவுகள் மிகப் பெரிய அளவில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை எண்ணிப் பார்க்கையில் இவற்றின் நம்பகத்தன்மையைக் குறித்து சந்தேகத்தை எழுப்பினால், அதற்கு திருப்தியளிக்கும் அத்தாட்சியை எனக்கு காட்டுங்கள் என்று நீங்கள் அவரிடம் கேட்க மாட்டீர்களா?
சுவிசேஷங்களைப் பற்றிய சிந்தனையைத் தூண்டும் எண்ணற்ற கேள்விகளை சிந்தித்துப் பார்க்கும்படி உங்களை அழைக்கிறோம். சுவிசேஷ மாணாக்கரில் சிலர்—இவர்களில் சிலர் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள்—இந்த விஷயங்களைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை சிறிது நேரம் நீங்களே பாருங்கள். அப்போது நீங்கள் விஷயத்தை நன்கு தெரிந்து முடிவெடுக்கலாம்.
சிந்தனைக்கு சில கேள்விகள்
◆ சுவிசேஷங்கள் சாமர்த்தியமான கற்பனையாக இருக்கக் கூடுமா?
ஜீஸஸ் செமினாரின் ஸ்தாபகர் ராபர்ட் ஃபங்க் இவ்வாறு கூறுகிறார்: “இயேசுவின் மரணத்துக்குப்பின் படிப்படியாக தோன்றிய கிறிஸ்தவ கோட்பாட்டுக்கு ஒத்திருக்கும் விதமாக “மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் மேசியா இப்படி செய்தார் அப்படி செய்தார் என்று கற்பனைகளை உருவாக்கி அவற்றை அறிமுகப்படுத்துகின்றனர்.” ஆனால் சுவிசேஷங்கள் எழுதப்பட்ட அந்தச் சமயத்தில் இயேசுவின் வார்த்தைகளை கேட்டவர்களும், அவருடைய செயல்களை நேரில் பார்த்தவர்களும், உயிர்த்தெழுதலுக்குப்பின் அவரை கண்ணார கண்டவர்களுமாகிய அநேகர் உயிரோடிருந்தனர். இவர்கள், சுவிசேஷ எழுத்தாளர்கள் எதையும் மாற்றிக்கூறியதாக குற்றம் சுமத்தவில்லை.
கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றிய நம்பத்தக்க பதிவுகள் சுவிசேஷங்களில் மட்டும் காணப்படுவதாக எண்ண வேண்டாம்; இதைப் பற்றிய பதிவை பண்டைய கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கடிதத்திலும் காணலாம். அவர் இவ்வாறு எழுதினார்: “நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின்பு அவர் ஜந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார்.” (1 கொரிந்தியர் 15:3-8) கண்கண்ட இந்தச் சாட்சிகளே இயேசுவின் வாழ்க்கை பற்றிய வரலாற்று உண்மைகளின் பாதுகாவலராக இருந்தனர்.
நவீனகால திறனாய்வாளர்கள் கூறுவதுபோல், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் செய்திகள் இட்டுக்கட்டிக் கூறப்படுவதில்லை. ஆனால் பொ.ச. இரண்டாம் அப்போஸ்தலர் 20:28-30.
நூற்றாண்டைச் சேர்ந்த ஆவணங்களில் இயேசுவைப் பற்றிய பொய்யான கதைகள் காணப்படுகின்றன. ஆகவே, உண்மையான அப்போஸ்தலர்களின் சபையிலிருந்து பிரிந்து சென்ற விசுவாசதுரோகிகள் செழித்தோங்கிய சமயத்தில் கிறிஸ்துவைப் பற்றிய வேத ஆதாரமற்ற சில கதைகள் உருவாக்கப்பட்டன.—◆ சுவிசேஷங்கள் கட்டுக்கதைகளாக இருக்குமா?
நூலாசிரியரும் திறனாய்வாளருமான சி. எஸ். லூயிஸ் என்பவர் சுவிசேஷங்களை வெறும் கட்டுக்கதைகளாக கருத முடியாது என்று குறிப்பிட்டார். “சுவிசேஷங்கள், கட்டுக்கதைகள் அல்ல என்பதை ஒரு இலக்கிய சரித்திர ஆசிரியராகிய என்னால் அடித்துக்கூற முடியும். கட்டுக்கதைகளில் இருக்க வேண்டிய கற்பனை வளத்தை அவற்றில் காணமுடியவில்லை. . . . இயேசுவின் வாழ்க்கையில் பெரும்பகுதியை நாம் அறியாதவர்களாகவே இருக்கிறோம். ஒரு கட்டுக்கதையை எழுதுகிற எவரும் அப்படி இருக்க அனுமதிக்க மாட்டார்” என்று அவர் எழுதினார். மற்றொரு சுவாரசியமான விஷயம், பிரபல சரித்திர ஆசிரியர் ஹெச். ஜி. வெல்ஸ் ஒரு கிறிஸ்தவர் அல்ல என்றாலும் பின்வருமாறு ஒப்புக்கொள்கிறார்: “நான்கு சுவிசேஷங்களும் திட்டவட்டமான ஒரு நபரைப் பற்றி ஒரேவிதமாக கூறுகின்றன. . . . அவை கூறும் விவரங்களில் துளிகூட சந்தேகம் எழுவதில்லை.”
உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு தம்முடைய சீஷர்களுக்கு காட்சி அளித்த அந்தச் சந்தர்ப்பத்தை கவனித்துப் பாருங்கள். கட்டுக்கதை எழுதுபவர், இயேசு பகட்டான முறையில் திரும்பி வந்ததாக, சிறப்புவாய்ந்த ஒரு பேச்சைக் கொடுத்ததாக, அல்லது ஒளியில் தோய்ந்து பிரகாசமாக காட்சி அளித்ததாகத்தானே ஒருவேளை எழுதியிருப்பார். அதற்கு எதிர்மாறாக, சுவிசேஷ எழுத்தாளர்கள் அவர் தம்முடைய சீஷர்களுக்கு முன்பாக வந்து நின்றதாகவே அவரை விவரிக்கிறார்கள். பின்னர் “பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா” என்கிறார். (யோவான் 21:5) கிரேக் எஸ்டர்புருக் என்ற கல்விமான் இவ்வாறு முடிக்கிறார்: “இது போன்ற விஷயங்களே, இது உண்மை சம்பவம், கட்டுக்கதை அல்ல என்பதை தெரிவிக்கின்றன.”
சுவிசேஷங்கள் கட்டுக்கதை என்ற குற்றச்சாட்டு, சுவிசேஷங்கள் எழுதப்பட்ட சமயத்தில் பழக்கத்திலிருந்த மிகவும் கண்டிப்பான ரபீனிய கற்பிக்கும் முறைக்கு முரணாக உள்ளது. திரும்பத் திரும்ப சொல்லிப்பார்த்து மனப்பாடம் செய்வதன் மூலம் கற்றுக்கொள்வதுதான் அப்போது பின்பற்றப்பட்ட முறை. இதற்கு இசைய இயேசுவின் வார்த்தைகளும் செயல்களும் திருத்தமாகவும் கவனமாகவும் விளக்கப்பட்டிருக்க வேண்டும், அது மிகைப்படுத்தப்பட்டு அழகூட்டப்பட்ட கற்பனைகளாக இருந்திருக்க முடியாது.
◆ சுவிசேஷங்கள் கட்டுக்கதைகளாக இருந்ததென்றால், இயேசுவின் மரணத்துக்குப்பின் இவ்வளவு சீக்கிரமாக தொகுக்கப்பட்டிருக்க முடியுமா?
கைவசமுள்ள அத்தாட்சிப்படி, சுவிசேஷங்கள் பொ.ச. 41-க்கும் 98-க்கும் இடைப்பட்ட வருடங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. இயேசு மரித்ததோ பொ.ச. 33. அப்படியென்றால், அவருடைய வாழ்க்கை பற்றிய பதிவுகள் அவருடைய ஊழியம் முடிந்தவுடன் மிகவும் குறுகிய காலத்திலேயே தொகுத்து முடிக்கப்பட்டுள்ளது. சுவிசேஷ பதிவுகள் வெறும் கட்டுக்கதைகளே என்ற விவாதத்துக்கு இது மிகப் பெரிய இடையூறாக உள்ளது. கட்டுக்கதைகளை உருவாக்க காலம் தேவை. பண்டைய கிரேக்க கவி ஹோமர் எழுதிய இலியட், ஒடிஸியை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். இந்தக் கட்டுக்கதைகளின் வசனங்கள் எழுதப்பட்டு படிப்படியாக பிரபலமாவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் எடுத்தது என்பது சிலரின் கருத்து. சுவிசேஷங்களைப் பற்றி என்ன?
சீஸர் அண்டு கிறைஸ்ட் என்ற புத்தகத்தில் சரித்திராசிரியர் வில் டியூரன்ட் இவ்வாறு எழுதுகிறார்: “சில சாதாரண மனிதர்கள் அத்தனை வல்லமையும் கவர்ச்சியுமிக்க ஒரு நபரையும், அத்தனை உயர்ந்த நன்னெறியையும், மானிட சகோதரத்துவத்தின் அத்தனை ஊக்கமூட்டும் ஒரு காட்சியையும் கற்பனை செய்து சுவிசேஷங்களாக உருவாக்கிட முடியும் என்றால், அது சுவிசேஷங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் எந்த அற்புதத்தைக் காட்டிலும் நம்பமுடியாத ஓர் அற்புதமாகவே இருக்கும். நுட்பப் பிழை காண்போருடைய இரண்டு நூற்றாண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு, கிறிஸ்துவின் வாழ்க்கை, நற்குணம், அவருடைய போதனை ஆகியவற்றை பற்றிய குறிப்புரைகள் தெளிவாக இருக்கின்றன. இது மேற்கத்திய மனிதனின் சரித்திரத்தில் மிக சுவாரஸ்யமான அம்சம்.”
◆ கிறிஸ்தவ சமுதாயத்தின் தேவைகளுக்கேற்ப பிற்காலங்களில் சுவிசேஷங்களில் ஏதாவது நீக்கப்பட்டு அல்லது சேர்க்கப்பட்டிருக்குமா?
பூர்வ கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவிய போட்டி பொறாமையால், இயேசுவின் வாழ்க்கை சரிதையில் சுவிசேஷ எழுத்தாளர்கள் சிலவற்றை நீக்கினார்கள் அல்லது சேர்த்தார்கள் என திறனாய்வாளர்கள் சிலர் தர்க்கம் செய்கின்றனர். ஆனால் சுவிசேஷங்களை மிகவும் கூர்ந்து கவனமாக படித்துப் பார்க்கையில் அது உண்மையல்ல என்பது தெரிகிறது. இயேசுவைப் பற்றிய சுவிசேஷ பதிவுகள் முதல் நூற்றாண்டில் செய்யப்பட்ட சதி ஆலோசனையின் விளைவாக மாற்றப்பட்டது என்றால், யூதர்கள், புறஜாதியார் ஆகிய இரு சாராரைப் பற்றியும் எதிர்மறையான குறிப்புகள் அவற்றில் காணப்படுகிறதே, அது ஏன்?
இதற்கு ஒரு உதாரணத்தை மத்தேயு 6:5-7-ல் காணலாம். இங்கே இயேசு இவ்வாறு சொன்னதாக கூறப்பட்டுள்ளது: “அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம். மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளிலும் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” யூத மதத்தலைவர்கள் இங்கே கண்டனம் செய்யப்படுவது மிகவும் தெளிவாக உள்ளது. அதோடு நிறுத்திக்கொள்ளாமல் இயேசு மேலுமாக இவ்வாறு சொன்னார்: “அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல [புறஜாதிகளைப்போல] வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.” மக்களை மதம் மாற்றுவதற்காக சுவிசேஷ எழுத்தாளர்கள் இவ்வாறு எழுதவில்லை. ஆனால் அவர்கள் உண்மையில் இயேசு கிறிஸ்து சொன்னதை அப்படியே பதிவு செய்திருக்கிறார்கள்.
இயேசுவின் கல்லறைக்குப்போய் அது காலியாக இருப்பதைக் கண்ட ஒரு பெண்ணைப் பற்றிய சுவிசேஷ பதிவையும் கவனியுங்கள். (மாற்கு 16:1-8) கிரெக் ஈஸ்டர்புரூக் என்பவர் இவ்வாறு கூறுகிறார்: “பெண்களின் சாட்சியத்தை நம்பமுடியாது என்பது பண்டைய மத்திய கிழக்கு சமுதாயத்தின் அடிப்படையான கருத்து. உதாரணத்திற்கு, விபசார குற்றத்துக்காக ஒரு பெண்ணுக்குத் தீர்ப்புக்கூற இரண்டு ஆண்களின் சாட்சியம் போதுமானது. ஆனால் அதே தவறை ஒரு ஆண் செய்கையில் எத்தனை பெண்கள் சாட்சி சொன்னாலும் ஏற்கப்படவில்லை.” ஆம், இயேசுவின் சீஷர்களும்கூட பெண்கள் கூறியதை நம்பவில்லையே! (லூக்கா 24:11) ஆகவே, இப்படி வேண்டுமென்றே ஒரு கதையைக் கட்டிவிடுவது நிச்சயமாகவே சாத்தியமில்லை.
நிருபங்களிலும் அப்போஸ்தலர் நடபடிகளிலும் நீதிக் கதைகளே இல்லை. ஆகவே, சுவிசேஷகங்களில் நீதிக் கதைகள் இருப்பது பூர்வ கிறிஸ்தவர்களால் சேர்க்கப்பட்டவை அல்ல, ஆனால் இயேசு கிறிஸ்து சொன்னவையே என்பதற்கு பலமான அத்தாட்சியாகும். மேலுமாக, சுவிசேஷங்களை நிருபங்களோடு கவனமாக ஒப்பிட்டுப் பார்த்தால், பவுலோ அல்லது மற்ற கிரேக்க வேதாகம எழுத்தாளர்களோ சிலவற்றை அவர்களாகவே எழுதிவிட்டு இவற்றை இயேசு சொன்னார் என்று சொல்லவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. சிலவற்றை இயேசு சொன்னதாக பூர்வ கிறிஸ்தவ எழுத்தாளர்கள் குறிப்பிட்டிருந்தால், நிருபங்களிலுள்ள சில விஷயங்களாவது சுவிசேஷங்களில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அப்படி எதையும் காணமுடியாத காரணத்தால் சுவிசேஷத்திலுள்ள தகவல் உண்மையானதாகவும் நம்பத்தக்கதாகவும் இருக்க வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு நாம் வரலாம்.
◆ சுவிசேஷங்களில் முரண்பாடுகள் என்பதாக சொல்லப்படுபவற்றைப் பற்றி என்ன சொல்லலாம்?
சுவிசேஷங்களில் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன என்பதாக திறனாய்வாளர்கள் நீண்டகாலமாக சொல்லிவந்திருக்கின்றனர். சரித்திர ஆசிரியர் டியூரன்ட், சுவிசேஷ பதிவுகளை சரித்திர ஆவணங்களாக உள்ளதை உள்ளபடியே ஆராய விரும்பினார். மேலோட்டமாக பார்க்கும்போது முரண்பாடுகள் இருப்பதுபோல் தோன்றினாலும், அவற்றைக் குறித்து இவ்வாறு முடிக்கிறார்: “முரண்பாடுகள் மிகவும் அற்பமான விவரங்களில்தான் இருக்கின்றன. ஆனால் அடிப்படையான விஷயத்தில் அப்படி எதுவுமில்லை. முக்கியமான விஷயங்களில், சுவிசேஷங்கள் மிக நன்றாகவே ஒத்திசைந்து கிறிஸ்துவை முரண்பாடுகள் இல்லாமல் வருணிக்கின்றன.”
சுவிசேஷ பதிவுகளில் மேலோட்டமாக தெரியும் அந்த முரண்பாடுகளுக்கு எளிதில் விளக்கமளிக்க முடியும். உதாரணமாக: மத்தேயு 8:5, தன் வேலைக்காரனை குணப்படுத்தும்படி கேட்க “நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் [இயேசுவிடத்தில்] வந்”தான் என்று சொல்கிறது. லூக்கா 7:3-ல் “அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்க வேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான்” என்று நாம் வாசிக்கிறோம். அந்த அதிபதி மூப்பர்களை தன் பிரதிநிதிகளாக அனுப்பி வைத்தார். அந்த அதிபதியின் சார்பாக இயேசுவிடம் மூப்பர்கள் வேண்டிக்கொண்டதால் அந்த நூற்றுக்கு அதிபதியே இயேசுவிடம் வேண்டிக்கொண்டதாக மத்தேயு சொல்கிறார். சுவிசேஷங்களில் இருப்பதாக சொல்லப்படும் முரண்பாடுகளை விளக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணமே.
சுவிசேஷங்களுக்கு உண்மையான வரலாற்றுக்குரிய பொதுவான தரம் இல்லை என்பதாக திறனாய்வு செய்பவர்கள் கூறுகிறார்களே, அதைப்பற்றி என்ன? டியூரன்ட் இவ்வாறு தொடர்ந்து சொல்கிறார்: “திறனாய்வாளர்கள் கண்டுபிடிப்புகளைச் செய்யும் ஆர்வத்தில், புதிய ஏற்பாடு நம்பத்தகுந்ததா என்பதற்கு தீவிரமாக பரிசோதனைகளைச் செய்திருக்கின்றனர். இதேபோல் ஹமுராபி, டேவிட், சாக்ரட்டீஸ் போன்ற பிரசித்திபெற்ற நூற்றுக்கணக்கான வரலாற்று கதாபாத்திரங்களை தீவிரமாக ஆராய்ந்தால் இவர்கள் அனைவரும் கட்டுக் கதைகளின் கதாபாத்திரங்களாகிவிடுவர். சுவிசேஷங்களை எழுதியவர்களுக்கு சொந்த கருத்துக்களும் நம்பிக்கைகளும் இருந்தன என்பது உண்மைதான். இருந்தபோதிலும், ராஜ்யத்தில் உயர்ந்த இடம் வேண்டும் என்பதற்காக அப்போஸ்தலரின் மத்தியில் நிலவிய போட்டியையும், இயேசு கைது செய்யப்பட்ட பிறகு அவர்கள் அவரை விட்டுவிட்டு ஓடியதையும், பேதுரு மறுதலித்ததையும் அவர்கள் பதிவு செய்திருக்கின்றனர். சுவிசேஷங்களை எழுதியவர்கள் கதைகட்டுபவர்களாக இருந்தால் இப்படிப்பட்ட விஷயங்களை பதிவு செய்திருக்க மாட்டார்கள். இந்தப் பதிவுகளை வாசிக்கும்போது இயேசு உண்மையில் வாழ்ந்தார் என்பதை யாரும் சந்தேகிக்கவே முடியாது.”
◆ சுவிசேஷங்களில் காணப்படும் இயேசுவை நவீனநாளைய கிறிஸ்தவம் பிரதிநிதித்துவம் செய்கிறதா?
சுவிசேஷங்களை ஆய்வு செய்யும்போது, “சர்ச் கவுன்சிலின் நிபந்தனைகளால் கட்டுப்படுத்தப்படவில்லை” என்பதாக ஜீஸஸ் செமினார் அறிவிப்பு செய்திருக்கிறது. ஆனால், சுவிசேஷங்களில் சொல்லப்பட்டிருக்கும் இயேசுவின் போதனைகளுக்கும் கிறிஸ்தவ உலகின் போதனைகளுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருப்பதை சரித்திர ஆசிரியர் வெல்ஸ் புரிந்துகொண்டார். அவர் இவ்வாறு எழுதினார்: “இயேசுவின் அப்போஸ்தலர்கள் திரித்துவத்தைப் பற்றி கேள்விப்பட்டதற்கு அத்தாட்சி இல்லை; இதை அவர் [இயேசு] வாயிலிருந்து கேள்விப்பட்டனர் என்பதற்கு நிச்சயமாகவே அத்தாட்சி எதுவுமில்லை. . . . அல்லது விண்ணரசியான இசிசுவின் வேடத்தில் தன் தாயான மரியாளை வணங்குவது குறித்து அவர் [இயேசு] ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. இப்போது வணக்கத்தின் சம்பந்தமாகவும் பழக்கத்தின் சம்பந்தமாகவும் கிறிஸ்தவ உலகின் போதனைகளாக இருப்பவற்றை அவர் புறக்கணித்தார்.” ஆகவே கிறிஸ்தவ உலகின் போதனைகளை வைத்து சுவிசேஷங்களின் மதிப்பை ஒருவர் எடைபோட முடியாது.
உங்கள் முடிவு என்ன?
மேலே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளைச் சிந்தித்தப்பின் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சுவிசேஷங்கள் எல்லாம் வெறும் கட்டுக்கதைகள்தான் என்று கூறுவதற்கு உண்மையான உறுதியான அத்தாட்சி இருக்கிறதா? சுவிசேஷங்களின் நம்பகத்தன்மை குறித்து எழுப்பப்படும் கேள்விகளும் சந்தேகங்களும் ஆதாரமற்றவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அநேகர் கூறுகின்றனர். தனிப்பட்ட விதமாக கருத்துக்கூற வேண்டுமென்றால் நீங்கள் பரந்த மனதோடு சுவிசேஷங்களை வாசிப்பது அவசியம். (அப்போஸ்தலர் 17:11) இயேசுவின் ஆள்தன்மையை சுவிசேஷங்கள் முரண்பாடில்லாமலும் நேர்மையாகவும் திருத்தமாகவும் அளிப்பதை நீங்கள் காணும்போது இந்தப் பதிவுகள் நிச்சயமாகவே கட்டுக்கதைகளின் தொகுப்பல்ல என்பதை புரிந்துகொள்வீர்கள். a
பைபிளை நீங்கள் கவனமாக ஆராய்ந்து அதன் புத்திமதிகளைப் பின்பற்றும்போது உங்கள் வாழ்க்கை வளமாவதை நீங்கள் காண்பீர்கள். (யோவான் 6:68) சுவிசேஷங்களில் பதிவாகியிருக்கும் இயேசுவின் வார்த்தைகளைப் பொறுத்தவரை இது முற்றிலும் உண்மை. இதைவிட, கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு வைக்கப்பட்டுள்ள அதிசயமான எதிர்காலத்தைப் பற்றி அதில் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.—யோவான் 3:16; 17:3, 17.
[அடிக்குறிப்புகள்]
a பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற புத்தகத்தில் 5 முதல் 7 அதிகாரங்களையும் எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டையும் காண்க. இரண்டுமே உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா வெளியிட்டவை.
[பக்கம் 7-ன் பெட்டி]
உள்ளது உள்ளபடியே அறிவிக்கப்பட்டிருப்பதற்கு அத்தாட்சி
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த வசனகர்த்தாவும் முன்னாள் பைபிள் விமர்சகருமான ஒருவர் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “என்னுடைய வாழ்க்கையிலேயே முதல் முறையாக, சாதாரணமாக ஒரு நிருபர் செய்ய வேண்டிய முதல் கடமையை செய்தேன். அதாவது, திரட்டிய உண்மைகளை சரிபார்த்தேன். . . . அப்போது நான் அதிர்ச்சி அடைந்தேன், ஏனென்றால் [சுவிசேஷ பதிவுகளில்] நான் வாசித்துக்கொண்டிருந்தவை கட்டுக்கதைகள் அல்ல, கேட்பதற்கு உண்மை போல இருக்கும் கற்பனையும் அல்ல. அந்தப் பதிவு உள்ளதை உள்ளபடியே அறிவிப்பு செய்கிறது. இவை நேரில் பார்த்தவர்கள், அவர்களிடமிருந்து கேட்டறிந்தவர்கள் எழுதும் அசாதாரணமான சம்பவங்கள்; . . . அறிவிப்பு செய்வதற்கென ஒரு தனித்தன்மை உண்டு, அது சுவிசேஷங்களில் இருக்கிறது.
அதேவிதமாகவே ஆக்லாந்து பல்கலைக் கழக இலக்கிய பேராசிரியர் எ. எம். ப்ளேக்லாக் இவ்வாறு விவாதித்தார்: “என்னை நான் ஒரு சரித்திர ஆசிரியன் என்று சொல்லிக் கொள்கிறேன். இலக்கியங்கள் வரலாற்றை அடிப்படையாக கொண்டிருக்கின்றனவா என்று ஆராய்வதுதான் என் பாணி. கிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றிற்கு இருக்கும் அத்தாட்சிகள் பெரும்பாலான பண்டைய வரலாற்றைவிட அதிகளவு நம்பத்தக்கவை.”
[பக்கம் 8,9-ன் தேசப்படம்/படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பெனிக்கே நாடு
கலிலேயா
யோர்தான் நதி
யூதேயா
[படங்கள்]
“கிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றிற்கு இருக்கும் அத்தாட்சிகள் பெரும்பாலான பண்டைய வரலாற்றைவிட அதிகளவு நம்பத்தக்கவை”—பேராசிரியர் எ. எம். ப்ளேக்லாக்
[படத்திற்கான நன்றி]
பின்னணி வரைபடங்கள்: Based on a map copyrighted by Pictorial Archive (Near Eastern History) Est. and Survey of Israel