Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சுவிசேஷங்கள்—சர்ச்சை நின்றபாடில்லை

சுவிசேஷங்கள்—சர்ச்சை நின்றபாடில்லை

சுவிசேஷங்கள்—சர்ச்சை நின்றபாடில்லை

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை பற்றிய சுவிசேஷ பதிவு உண்மையா?

மலைப்பிரசங்கத்தை அவர்தான் கொடுத்தாரா?

இயேசு உண்மையில் உயிர்த்தெழுப்பப்பட்டாரா?

“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று அவர் சொன்னது உண்மையா? —யோவான் 14:6.

ஆண்டுக்கு இரண்டு தடவை நடைபெறும் ஜீஸஸ் செமினாரில், 1985 முதற்கொண்டு சுமார் 80 கல்விமான்கள் இதுபோன்ற விஷயங்களை அலசுகிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு கல்விமான்கள் மிகவும் வினோதமான முறையில் பதிலளித்திருக்கிறார்கள். சுவிசேஷங்களில் இயேசு சொன்னதாக கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயத்திற்கும் செமினாரில் பங்கெடுப்பவர்கள் வாக்குச் சீட்டுப் போட்டு தங்கள் கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். இயேசுதான் அதைச் சொன்னார் என்பதற்கு சிவப்பு நிற வாக்குச் சீட்டு. இயேசு ஒருவேளை சொல்லியிருக்கலாம் என்றால் இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டு. இயேசுவின் கருத்தோடு நன்கு ஒத்திருக்கிறது, ஆனால் அதைச் சொன்னது அவர் இல்லை என்றால் சாம்பல் நிற வாக்குச் சீட்டு. இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் எல்லாம் பாரம்பரியத்திலிருந்தே பிற்காலங்களில் தோன்றியவை என்றால் கறுப்பு நிற வாக்குச் சீட்டு.

ஜீஸஸ் செமினாரில் பங்கெடுப்பவர்கள் இந்த முறையைப் பின்பற்றி, கட்டுரையின் ஆரம்பத்தில் கேள்வி வடிவில் எழுப்பப்பட்ட நான்கு குறிப்புகளையும் நிராகரித்திருக்கிறார்கள். சொல்லப்போனால், சுவிசேஷங்களில் இயேசு கூறியுள்ள 82 சதவீத வார்த்தைகளுக்கு அவர்கள் கறுப்பு நிற வாக்குச் சீட்டுதான் போட்டிருக்கிறார்கள். அவர்கள் கருத்துப்படி, சுவிசேஷங்களிலும் பைபிளின் மற்ற புத்தகங்களிலும் இயேசுவைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்களில் 16 சதவீதம் மட்டுமே நம்பும்படி இருக்கிறது.

இப்படி சுவிசேஷங்களை விமர்சிப்பது நேற்றோ இன்றோ நடக்கும் விஷயமல்ல. இதுபோல சுவிசேஷங்களைத் தாக்குவது 1774-ம் ஆண்டிலேயே ஆரம்பமாகிவிட்டது. அப்போது, ஜெர்மனியிலுள்ள ஹாம்பர்க்கில் கிழக்கத்திய மொழிகளின் பேராசிரியராக இருந்த ஹெர்மான் ரிமாரியஸ் எழுதிய 1,400 பக்க கையெழுத்துப் பிரதி அவருடைய மரணத்துக்குப்பின் வெளியிடப்பட்டது. அதில் சுவிசேஷங்களின் வரலாற்றுப்பூர்வ வாய்மையைக் குறித்து அவர் நிறைய சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார். மொழிநடையை ஆய்வு செய்தும், இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி நான்கு சுவிசேஷப் பதிவுகளில் காணப்படும் முரண்பாடுகள் என்று கூறப்படுகிறவற்றை வைத்தும் அவர் தன் முடிவை எழுதினார். அந்தச் சமயத்திலிருந்து சுவிசேஷங்களின் நம்பகத்தன்மையை குறித்து திறனாய்வாளர்கள் அடிக்கடி சந்தேகங்களை எழுப்பி இந்தப் புத்தகங்களின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஓரளவு குலைத்துவிட்டிருக்கிறார்கள்.

சுவிசேஷ பதிவுகள் பல்வேறு ஆட்களிடமிருந்து வந்த மத சம்பந்தமான ஒரு கட்டுக்கதை என்றே இந்தக் கல்விமான்கள் பொதுவாக கருதுகிறார்கள். சந்தேகிக்கும் கல்விமான்கள் சாதாரணமாக எழுப்பும் கேள்விகள் இவையே: இந்த நான்கு சுவிசேஷ எழுத்தாளர்களுடைய நம்பிக்கைகள், உண்மையை பூசிமெழுகும்படி செய்வித்திருக்குமா? ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மத்தியில் யார் தலைமை ஏற்பது என்பது தொடர்பாக ஏற்பட்ட போட்டி, இயேசுவின் வாழ்க்கையில் நடந்தவற்றில் சிலவற்றை அவர்கள் கூட்டியும் குறைத்தும் எழுதும்படி செய்வித்திருக்குமா? சுவிசேஷத்தின் எந்தப் பகுதிகளில் கட்டுக்கதை எதுவுமின்றி உள்ளது உள்ளபடியே சொல்லப்பட்டுள்ளது?

கடவுள் நம்பிக்கை இல்லாத அல்லது மத ஈடுபாடற்ற சமுதாயத்தில் வளர்க்கப்பட்டவர்கள் பைபிள் கற்பனை கதைகளும் கட்டுக்கதைகளும் நிறைந்தது என்று நம்புகிறார்கள்; அதில் சுவிசேஷங்களும் அடங்கும். மற்றவர்களுக்கோ கிறிஸ்தவமண்டலத்தின் வரலாற்றில் காணப்படும் இரத்தஞ்சிந்துதல், அடக்குமுறை, பிரிவினைகள், தேவபக்தியற்ற நடத்தை ஆகியவை அதிர்ச்சியூட்டுபவையாக இருக்கின்றன. இதைப் பார்க்கும் ஆட்கள், கிறிஸ்தவ உலகில் புனிதமாக கருதப்படும் எழுத்துக்களுக்கு ஏன் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள். இப்படிப்பட்ட பாசாங்குத்தனமான ஒரு மதத்தை உண்டுபண்ணியிருக்கும் புத்தகம், ஒன்றுக்கும் உதவாத கற்பனை கதைகளையே ஆதாரமாக கொண்டிருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சில கல்விமான்கள் சுவிசேஷங்களின் வரலாற்று வாய்மையை சந்தேகிக்கிறார்கள் என்பதால் நீங்களும் அதை சந்தேகிக்க வேண்டுமா? சுவிசேஷ எழுத்தாளர்களே கதைகட்டி எழுதியதாக யாராவது உங்களிடம் சொன்னால் இந்த எழுத்துக்களில் உங்களுக்கிருக்கும் நம்பிக்கை ஆட்டங்கொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா? கிறிஸ்தவ உலகம் ஏற்படுத்திய தேவபக்தியற்ற பதிவால் சுவிசேஷங்களை சந்தேகிக்க வேண்டுமா? உண்மைகள் சிலவற்றை ஆராய உங்களை நாங்கள் அழைக்கிறோம்.

[பக்கம் 4-ன் படம்]

சுவிசேஷங்களில் இருப்பது கட்டுக்கதைகளா உண்மைகளா?

[படத்திற்கான நன்றி]

இயேசு கடலில் நடப்பது/The Doré Bible Illustrations/Dover Publications

[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]

பின்னணி, பக்கங்கள் 3-5, 8: Courtesy of the Freer Gallery of Art, Smithsonian Institution, Washington, D.C.