நம் நாளுக்கான கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தைக்கு செவிசாயுங்கள்
நம் நாளுக்கான கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தைக்கு செவிசாயுங்கள்
“மனுபுத்திரனே, இந்தத் தரிசனம் முடிவு காலத்திற்குரியது என்பதை புரிந்துகொள்.”—தானியேல் 8:17, NW.
1. நம் நாளைப் பற்றி அனைவரும் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென யெகோவா விரும்புகிறார்?
எதிர்காலத்தில் நடக்கப்போகிறவற்றை யெகோவா ரகசியமாக வைத்துக்கொள்வதில்லை. மாறாக, அவர் ரகசியங்களை வெளிப்படுத்தும் கடவுள். சொல்லப்போனால், நாம் ‘முடிவு காலத்தின்’ கடைசி கட்டத்தில் வாழ்கிறோம் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றே அவர் விரும்புகிறார். இது, உலகமெங்கும் வாழும் 600 கோடி மக்களுக்கு என்னே முக்கியமான செய்தி!
2. மனித குலத்தின் எதிர்காலத்தைக் குறித்து மக்கள் ஏன் கவலைப்படுகின்றனர்?
2 இந்த உலகிற்கு விரைவில் முடிவு வரப்போகிறது என்பதில் ஏதாவது ஆச்சரியமிருக்கிறதா? நிலவில் கால் பதித்துவிட்டான் மனிதன், ஆனால் இந்தப் பூமியில் அவனால் பயமின்றி நடக்க முடியவில்லை. எல்லாவித நவீன சாதனங்களாலும் வீட்டை நிரப்புகிறான், ஆனால் அதிகரித்துவரும் குடும்பப் பிளவுகளை தடுக்க முடிவதில்லை. தகவல் யுகத்தையே தோற்றுவித்திருக்கிறான், ஆனால் ஒன்றுபட்டு வாழ மக்களுக்குக் கற்றுத்தர முடியவில்லை. மனிதன் கண்டிருக்கும் இந்தத் தோல்விகள், நாம் முடிவுகாலத்தில்தான் வாழ்கிறோம் என்பதற்கான அநேக வேதப்பூர்வ அத்தாட்சிகளை ஆதரிக்கின்றன.
3. ‘முடிவு காலம்’ என்ற வார்த்தைகள் முதன்முதலில் எப்போது பயன்படுத்தப்பட்டன?
3 ‘முடிவுகாலம்’ என்ற சிந்தனையைத் தூண்டும் வார்த்தையை சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் பயன்படுத்தியது காபிரியேல் தூதன். பயந்துபோயிருந்த கடவுளுடைய தீர்க்கதரிசி ஒருவர் காபிரியேல் இப்படிச் சொல்வதைக் கேட்டார்: “மனுபுத்திரனே, இந்தத் தரிசனம் முடிவு காலத்திற்குரியது என்பதை புரிந்துகொள்.”—தானியேல் 8:17, NW.
இதுவே ‘முடிவுகாலம்’!
4. முடிவு காலத்தை வேறு என்னென்ன விதங்களில் பைபிள் குறிப்பிட்டிருக்கிறது?
4 ‘முடிவு காலம்,’ ‘குறிக்கப்பட்ட முடிவு காலம்’ என்ற பதங்கள் தானியேல் புத்தகத்தில் ஆறு தடவை வருகின்றன. (தானியேல் 8:17, 19; 11:35, 40; 12:4, 9; NW) இவை அப்போஸ்தலன் பவுல் முன்னறிவித்த ‘கடைசி நாட்களோடு’ சம்பந்தப்பட்டவை. (2 தீமோத்தேயு 3:1-5) இதே காலப்பகுதியை இயேசு கிறிஸ்து தம்முடைய ‘வந்திருத்தல்’ என அழைத்தார். இது அவர் முடிசூட்டப்பட்டு, ராஜ அதிகாரத்தோடு வந்திருக்கும் காலப்பகுதியாகும்.—மத்தேயு 24:37-39, NW.
5, 6. முடிவு காலத்தில் யார் ‘இங்கும் அங்கும் ஓடி ஆராய்ந்து வருகிறார்கள்,’ விளைவு என்ன?
5 தானியேல் 12:4 இவ்வாறு குறிப்பிடுகிறது: “தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்.” தானியேல் எழுதியவற்றில் பெரும்பாலானவை இரகசியமாக வைக்கப்பட்டு, பல நூற்றாண்டுகளாக மனிதன் புரிந்துகொள்ள முடியாதபடி முத்திரையிடப்பட்டது. ஆனால் இன்றைய நிலை என்ன?
6 இந்த முடிவு காலத்தில் உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அநேகர் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் ‘அங்கும் இங்கும் ஓடி ஆராய்ந்திருக்கிறார்கள்.’ அதன் விளைவு என்ன? அவர்களுடைய முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்ததால், உண்மை அறிவு பெருகியிருக்கிறது. உதாரணமாக, அபிஷேகம் செய்யப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுக்கு ஆழமான அறிவை தந்து யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார். 1914-ல் இயேசு கிறிஸ்து பரலோகத்தில் ராஜாவானதை புரிந்துகொள்ள அது அவர்களுக்கு உதவியிருக்கிறது. 2 பேதுரு 1:19-21-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள அப்போஸ்தலனின் வார்த்தைகளுக்கு இசைவாக, அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் அவர்களது உண்மையுள்ள கூட்டாளிகளும் ‘தீர்க்கதரிசன வார்த்தைக்கு கவனம் செலுத்துகிறார்கள்.’ இதுவே ‘முடிவு காலம்’ என உறுதியாக நம்புகிறார்கள்.
7. தானியேல் புத்தகத்தை தனித்தன்மை பெற்று விளங்கச் செய்யும் சில சம்பவங்கள் யாவை?
7 தானியேல் புத்தகம் அநேக விதங்களில் தனித்தன்மை பெற்று விளங்குகிறது. அதிலுள்ளவற்றைக் கவனியுங்கள். ஒரு ராஜா கண்ட கனவையும் அதன் அர்த்தத்தையும் எந்த ஞானிகளாலும் சொல்ல முடியவில்லை. ஆகவே அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்போவதாய் ராஜா மிரட்டுகிறார். ஆனால் கடவுளின் தீர்க்கதரிசி கனவை விவரிக்கிறார். மாபெரும் சிலையை வணங்க மறுக்கும் மூன்று இளைஞர்கள் தகதகவென எரியும் அக்கினிச் சூளையில் எறியப்படுகின்றனர், ஆனாலும் எவ்வித தீக்காயமும் இல்லாமல் தப்பிக்கின்றனர். மகிழ்ச்சிபொங்கும் ஒரு கொண்டாட்டத்தில், திடீரென ஒரு கை தோன்றி, மாளிகை சுவரில் புதிரான வார்த்தைகளை எழுதுகிறது; இதை நூற்றுக்கணக்கானோர் பார்க்கின்றனர். சில சூழ்ச்சிக்காரர்கள் வயது முதிர்ந்த ஒருவரை சிங்கக் கெபியில் தள்ளுகின்றனர், ஆனால் அவர் சிறு கீறலும் இல்லாமல் வெளியே வருகிறார். ஒரு தரிசனத்தில் நான்கு மிருகங்கள் காணப்படுகின்றன; அவை முடிவுகாலம் வரை நடக்கவிருப்பவற்றிற்கு தீர்க்கதரிசன முக்கியத்துவத்தை அளிக்கின்றன.
8, 9. முக்கியமாக இன்று, இந்த முடிவு காலத்தில், தானியேல் புத்தகம் எந்த விதத்தில் நமக்கு பயனளிக்கும்?
8 தானியேல் புத்தகத்தில் இரண்டு வித்தியாசப்பட்ட இழைகள் ஓடுகின்றன. ஒன்று வரலாறு, மற்றொன்று தீர்க்கதரிசனம். இரண்டுமே நம் விசுவாசத்தை பலப்படுத்தும். உத்தமத்தைக் காப்பவர்களை யெகோவா தேவன் ஆசீர்வதிக்கிறார் என்பதை வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன. நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை யெகோவா தேவன் நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிந்திருக்கிறார் என்பதை தீர்க்கதரிசன பகுதிகள் எடுத்துக்காட்டி, நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன.
9 தானியேல் பதிவுசெய்த வெவ்வேறு தீர்க்கதரிசனங்கள் கடவுளுடைய ராஜ்யத்தினிடம் நம் கவனத்தைத் திருப்புகின்றன. இப்படிப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதை நாம் காண்கையில், நம் விசுவாசம் பலப்படுத்தப்படுகிறது. முடிவுகாலத்தில்தான் வாழ்கிறோம் என்ற நமது நம்பிக்கையும் உறுதியாகிறது. ஆனால் சில விமர்சகர்கள் தானியேலைத் தாக்குகின்றனர். அவருடைய பெயரால் எழுதப்பட்டிருக்கும் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசனங்கள், சம்பவங்கள் நடந்தேறிய பிற்பாடே உண்மையில் எழுதப்பட்டன என அவர்கள் சொல்கின்றனர். அவர்கள் சொல்வது உண்மையென்றால், முடிவு காலத்தைக் குறித்து தானியேல் புத்தகம் முன்னுரைத்திருப்பவற்றைப் பற்றி முக்கிய கேள்விகள் எழும்பும். இப்புத்தகத்தின் வரலாற்றுப் பதிவுகளைக் குறித்தும் சந்தேகவாதிகள் கேள்வியெழுப்புகின்றனர். ஆகவே இதைக் குறித்து நாம் சற்று ஆராயலாம்.
விசாரணையில்!
10. எந்த அர்த்தத்தில் தானியேல் புத்தகம் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது?
10 நீங்கள் ஒரு நீதிமன்றத்தில் அமர்ந்திருப்பதாய் கற்பனை செய்துகொள்ளுங்கள். விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அரசாங்க வக்கீல், கூண்டில் நிற்பவரை மோசடிக்காரரென அடித்து வாதாடுகிறார். அதேவிதமாய் தானியேல் புத்தகம், பொ.ச.மு. ஏழாம், ஆறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு எபிரெய தீர்க்கதரிசியால் எழுதப்பட்ட நம்பத்தகுந்த புத்தகமென உரிமைபாராட்டுகிறது. ஆனால் இது போலி புத்தகமென விமர்சகர்கள் அடித்துச் சொல்கின்றனர். ஆகவே இப்புத்தகத்தின் வரலாற்றுப் பகுதிகள் சரித்திரத்தோடு ஒத்திருக்கின்றனவா என்பதை முதலில் பார்க்கலாம்.
11, 12. பெல்ஷாத்சார் வரலாற்றில் இடம்பெறாத ஒரு கற்பனை அரசரே என்ற குற்றச்சாட்டிற்கு என்ன ஏற்பட்டது?
11 பைபிள் குறிப்பிடும் ஒரு அரசர், வரலாறு காணாதவர் அல்லது வரலாற்றில் இடம் பெறாதவர் என்று விவாதிக்கப்படுகிறது. இதை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். பொ.ச.மு. 539-ல் பாபிலோன் வீழ்த்தப்படுகையில் பெல்ஷாத்சார் அதன் ராஜாவாக ஆட்சிசெய்துவந்தார் என தானியேல் 5-ஆம் அதிகாரம் காட்டுகிறது. விமர்சகர்கள் இதைக் குறித்து விவாதித்தனர். ஏனெனில் பெல்ஷாத்சாரின் பெயர் பைபிளைத் தவிர வேறெங்குமே இல்லை. மாறாக, நபோனிடஸே பாபிலோனின் கடைசி ராஜாவென பூர்வ சரித்திராசிரியர்கள் கூறினார்கள்.
12 இருந்தாலும் 1854-ல், ஈராக்கில், அதாவது பண்டைய பாபிலோன் நகரான ஊர் பட்டணத்து இடிபாடுகளில் சிறிய களிமண் உருளைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த ஆப்புவடிவ எழுத்துக்களில் “என் மூத்த மகன் பெல்-சார்-உஸ்ஸுருக்காக” என குறிப்பிட்டு நபோனிடஸ் செய்த ஜெபமும் இடம்பெற்றுள்ளது. எனவே, இவர்தான் தானியேல் குறிப்பிட்ட பெல்ஷாத்சார் என விமர்சகர்களே ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆகவே, பைபிள் ஆதாரத்தின்படி மட்டுமல்ல இதர அத்தாட்சிகளின்படியும், “வரலாறு காணாத அரசர்” என சொல்லப்படுபவர் உண்மையில் வரலாற்று அரசரே. தானியேல் புத்தகத்தின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் அநேக அத்தாட்சிகளில் இதுவும் ஒன்று. இப்படிப்பட்ட அத்தாட்சி, தானியேல் புத்தகம் நிச்சயமாகவே கடவுளுடைய வார்த்தையின் பாகம் என்றும், முடிவுகாலத்தில் வாழும் நாம் இப்போதே கருத்தூன்றி கவனம் செலுத்துவதற்கு தகுதியானது என்றும் காட்டுகிறது.
13, 14. நேபுகாத்நேச்சார் யார், அவர் எந்தப் பொய் கடவுளின் பரம பக்தர்?
13 தானியேல் புத்தகத்தில் வரலாற்று இழையுடன் பின்னிப்பிணைந்துள்ளது, தீர்க்கதரிசன இழை. இது, உலக வல்லரசுகளின் எழுச்சிகளையும் அவற்றின் அரசர்கள் சிலர் செய்த செயல்களையும் குறித்து முன்னுரைக்கிறது. இந்த அரசர்களில் ஒருவர், ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய மாவீரர். பாபிலோனின் பட்டத்து இளவரசராக, இவரும் இவரது படையினரும் கார்கேமிசுவில் எகிப்திய பார்வோன் நேகோவின் படைகளை வீழ்த்தினர். ஆனால் வெற்றிபெற்ற இந்த பாபிலோனிய இளவரசருக்கு ஒரு செய்தி வருகிறது. அது அவரது தகப்பன் நபோபொலாசாரின் மரண செய்தி. உடனடியாக, ராணுவ நடவடிக்கைகளை தன் தளபதிகளிடம் ஒப்படைத்துவிட்டு இளம் நேபுகாத்நேச்சார் சென்றுவிடுகிறார். இப்படியாக பொ.ச.மு. 624-ல் தன் தகப்பனுடைய அரியணையில் ஏறினார். 43 வருடங்கள் அரசாண்ட இவர், ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கினார். ஒருசமயத்தில் அசீரியாவின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகள் இந்த சாம்ராஜ்யத்தின் பாகமாயின. பிற்பாடு அவர் சிரியா, பலஸ்தீனா, எகிப்தின் எல்லை வரை தன் ஆட்சிப்பகுதியை விஸ்தரித்தார்.
14 நேபுகாத்நேச்சார், பாபிலோனின் முக்கிய கடவுளாகிய மார்டுக்கின் பரம பக்தர். அவர், தான் பெற்ற வெற்றிகளுக்கெல்லாம் புகழ்மாலையை மார்டுக்கிற்கே சூட்டினார். பாபிலோனில் நேபுகாத்நேச்சார் மார்டுக்கிற்கும் இன்னுமநேக பாபிலோனிய தெய்வங்களுக்கும் ஆலயங்களைக் கட்டி அவற்றை அழகுபடுத்தினார். தானியேல் மூன்றாம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தூரா சமவெளியில் இந்தப் பாபிலோனிய ராஜா நிறுத்திய பொற்சிலை ஒருவேளை மார்டுக்கிற்கே அர்ப்பணிக்கப்பட்டிருக்கலாம். நேபுகாத்நேச்சார் குறிகேட்காமல் எந்த போர் நடவடிக்கைகளையும் திட்டமிட்டதாக தெரியவில்லை.
15, 16. பாபிலோனுக்காக நேபுகாத்நேச்சார் என்ன செய்தார், அதன் மகத்துவத்தைப் பற்றி பெருமையாக பேசுகையில் என்ன சம்பவித்தது?
15 பாபிலோனின் மாபெரும் இரட்டை மதிற்சுவரை நேபுகாத்நேச்சாரின் தகப்பன் கட்ட ஆரம்பித்திருந்தார். அதைக் கட்டி முடிப்பதன் மூலம் நேபுகாத்நேச்சார் இந்தத் தலைநகரத்தை எளிதில் வெல்ல முடியாதபடி தோற்றமளிக்கச் செய்தார். அவரது மேதிய நாட்டு ராணி, தன் சொந்த நாட்டு மலைகளையும் காடுகளையும் நினைத்து ஏங்கியதால், அவளது ஆசைக்காக நேபுகாத்நேச்சார் தொங்கும் தோட்டத்தை உருவாக்கியதாய் சொல்லப்படுகிறது. இது ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக பூர்வத்தில் திகழ்ந்தது. அக்காலத்து நகரங்களிலேயே மாபெரும் மதில்கள் கொண்ட ஒன்றாய் பாபிலோனை திகழச்செய்தார் நேபுகாத்நேச்சார். பொய் மத பிறப்பிடமாகிய பாபிலோனைப் பற்றி எவ்வளவு பெருமைகொண்டார்!
16 இது “நான் கட்டின மகா பாபிலோனல்லவா?” என நேபுகாத்நேச்சார் ஒருநாள் பெருமையாக சொல்லிக்கொண்டார். இருந்தாலும் தானியேல் 4:30-36 சொல்கிறபடி, “இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே” அவர் பைத்தியமானார். தானியேல் முன்னுரைத்தபடியே, ஏழு ஆண்டுகள் ஆட்சிசெய்யும் தகுதியிழந்து புல்லைத் தின்றார். அதன்பின் அவர் மீண்டும் ராஜ்யத்தை ஆளும் அதிகாரம் பெற்றார். இதன் தீர்க்கதரிசன அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? இதன் இறுதி நிறைவேற்றம் எவ்வாறு முடிவுகாலத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை உங்களால் விளக்க முடியுமா?
தீர்க்கதரிசன இழைகளை கண்டுபிடித்தல்
17. உலக அரசராக நேபுகாத்நேச்சார் அரசாண்ட இரண்டாம் வருடத்தில் கடவுள் அவருக்குக் காட்டின தீர்க்கதரிசன சொப்பனத்தை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்?
17 இப்போது தானியேல் புத்தகத்திலுள்ள சில தீர்க்கதரிசன இழைகளை சேகரிக்கலாம். உலக அரசராக நேபுகாத்நேச்சார் அரசாண்ட இரண்டாம் வருடத்தில் (பொ.ச.மு. 606/605) கடவுள் அவருக்கு பயங்கரமான ஒரு சொப்பனத்தைக் காட்டினார். தானியேல் இரண்டாம் அதிகாரத்தின்படி, இந்தச் சொப்பனத்தில் அவர் ஒரு மாபெரும் சிலையைக் கண்டார். அதற்கு பொன்னான தலையும், வெள்ளி மார்பும் புஜங்களும், செம்பு வயிறும் தொடையும், இரும்புக் கால்களும், இரும்பும் களிமண்ணும் கலந்த பாதங்களும் இருந்தன. இச்சிலையின் வெவ்வேறு பாகங்கள் எதை அடையாளப்படுத்தின?
18. சொப்பனத்தில் கண்ட சிலையின் பொன்னாலான அந்தத் தலை எதை அடையாளப்படுத்தியது?
18 கடவுளுடைய தீர்க்கதரிசி நேபுகாத்நேச்சாரிடம் இவ்வாறு சொன்னார்: “ராஜாவே . . . பொன்னான அந்தத் தலை நீரே.” (தானியேல் 2:37, 38) நேபுகாத்நேச்சாரின் வம்சம் பாபிலோனிய சாம்ராஜ்யத்தை ஆண்டது. பிற்பாடு அது மேதிய-பெர்சியாவால் கவிழ்க்கப்பட்டது. சிலையின் வெள்ளி மார்பும் புஜங்களும் அடையாளப்படுத்தியது இந்த மேதிய-பெர்சிய சாம்ராஜ்யத்தைத்தான். அடுத்து வந்தது, செம்பு வயிறும் தொடைகளும் அடையாளப்படுத்திய கிரேக்க சாம்ராஜ்யம். இந்த உலக வல்லரசு எவ்வாறு உருவானது?
19, 20. மகா அலெக்ஸாந்தர் யார், கிரீஸை உலக வல்லரசு என்ற நிலைக்கு உயர்த்த அவர் என்ன செய்தார்?
19 தானியேல் தீர்க்கதரிசனத்தின் இந்தப் பகுதி நிறைவேறுவதில் முக்கிய பங்கு வகித்தவர், பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் இளைஞன். அவர் பொ.ச.மு. 356-ல் பிறந்தார். உலகம் அவரை மகா அலெக்ஸாந்தர் என அழைத்தது. அவரது தகப்பன் பிலிப் பொ.ச.மு. 336-ல் கொலை செய்யப்பட்டார். ஆகவே 20 வயது அலெக்ஸாந்தர் மக்கெதோனியாவின் அரியணையில் ஏறினார்.
20 பொ.ச.மு. 334-ன் மே மாத ஆரம்பத்தில், அலெக்ஸாந்தர் தன் எல்லையை விஸ்தரிக்கும் படலத்தில் இறங்கினார். 30,000 காலாட் படையினரும் 5,000 குதிரைப் படையினரும் கொண்ட அவரது படை சிறியதானாலும் திறன்பெற்றிருந்தது. பொ.ச.மு.334-ல், அலெக்ஸாந்தர் முதன்முறையாக பெர்சியர்களுக்கு எதிராக சண்டையிட்டு வெற்றிபெற்றார். இந்தப் போர், வடமேற்கு ஆசியா மைனரின் (தற்போதைய துருக்கி) க்ரனைகஸ் நதியருகே நடந்தது. சிறிதும் தளராத இந்த வெற்றிவீரர் பொ.ச.மு. 326-ம் ஆண்டிற்குள் அவர்களை வீழ்த்தி, இன்றைய பாகிஸ்தானின் சிந்து நதிவரை கிழக்கே சென்று எல்லா பகுதிகளையும் வளைத்துப் பிடித்திருந்தார். ஆனால் பாபிலோனில் நடந்த ‘இறுதி யுத்தத்தில்’ அலெக்ஸாந்தர் தோல்வியடைந்தார். 32 வருடங்களும் 8 மாதங்களுமே வாழ்ந்திருந்த அலெக்ஸாந்தர் பொ.ச.மு. 323-ம் ஆண்டு, ஜூன் மாதம், 13-ம் தேதியன்று, வெல்ல முடியாத எதிரியான மரணத்திடம் சரணடைந்தார். (1 கொரிந்தியர் 15:55) என்றாலும், அவர் பெற்ற வெற்றிகளால் கிரீஸ் உலக வல்லரசு என்ற நிலைக்கு உயர்ந்திருந்தது. இதைத்தான் தானியேல் தீர்க்கதரிசனம் முன்னுரைத்தது.
21. ரோம பேரரசைத் தவிர, கனவில் கண்ட சிலையின் இரும்புக் கால்களால் வேறு எந்த உலக வல்லரசு அடையாளப்படுத்தி காட்டப்பட்டது?
21 அந்த மாபெரும் சிலையின் இரும்புக் கால்கள் எதைக் குறிக்கின்றன? கிரீஸ் சாம்ராஜ்யத்தை நொறுக்கி சின்னாபின்னமாக்கிய, இரும்புக்கு ஒப்பான ரோம சாம்ராஜ்யத்தையே அவை குறிக்கின்றன. இயேசு கிறிஸ்து அறிவித்த கடவுளுடைய ராஜ்யத்திற்கு ரோம் மதிப்பு காட்டவில்லை. அதற்குப் பதிலாக பொ.ச. 33-ஆம் ஆண்டு இயேசுவை கழுமரத்தில் அறைந்தது. உண்மைக் கிறிஸ்தவத்தை அடியோடு அழிக்கும் குறிக்கோளோடு ரோம் இயேசுவின் சீஷர்களை துன்புறுத்தியது. இருந்தாலும் நேபுகாத்நேச்சார் கனவில் கண்ட சிலையின் இரும்புக் கால்கள் இந்த ரோம சாம்ராஜ்யத்தை மட்டுமே குறிக்கவில்லை. அதிலிருந்து எழும்பிய மற்றொரு ராஜ்யத்தையும் குறித்தது. அதுதான் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு.
22. முடிவுகாலத்தின் கடைசி கட்டத்தில் நாம் இருப்பதைப் புரிந்துகொள்ள சொப்பன சிலை நமக்கு எவ்வாறு உதவுகிறது?
22 கவனமாக ஆராய்ச்சி செய்து பார்க்கையில், சொப்பன சிலையின் இரும்பும் களிமண்ணும் கலந்த பாதங்கள் குறித்துக்காட்டும் முடிவுகாலத்தின் கடைசி கட்டத்தில் நாம் வாழ்கிறோம் என நன்றாக புரியும். சில தற்காலத்திய அரசாங்கங்கள் இரும்பைப் போன்றவையாய் அல்லது கொடுங்கோன்மை மிக்கவையாய் இருக்கின்றன; மற்றவை களிமண்ணைப் போல இருக்கின்றன. வலுவற்ற களிமண்ணால் ‘மனித வம்சம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், இரும்பைப் போன்ற ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட பொது மக்களுக்கு செவிசாய்க்கும் கட்டாயத்தில் இருக்கின்றனர். தங்களை ஆளும் அரசுகள் தங்கள் விருப்பப்படி ஆள வேண்டும் என பொது மக்கள் விரும்புகின்றனர். (தானியேல் 2:43, NW; யோபு 10:9) இரும்பு களிமண்ணோடு கலக்காததைப் போலவே கொடுங்கோன்மை அரசும் பொது மக்களும் ஒத்துப்போக முடியாது என்பது உண்மை. அரசியல்ரீதியில் பிளவுபட்டிருக்கும் இந்த உலகிற்குக் கடவுளுடைய ராஜ்யம் சீக்கிரத்தில் முடிவைக் கொண்டுவரும்.—தானியேல் 2:44.
23. பெல்ஷாத்சார் அரசாண்ட முதலாம் வருடத்தில் தானியேல் கண்ட சொப்பனத்தையும் தரிசனங்களையும் நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்?
23 ஆர்வத்தைத் தூண்டும் தானியேல் தீர்க்கதரிசனத்தின் 7-ஆம் அதிகாரமும், முடிவுகாலத்தைப் பற்றி பேசுகிறது. பாபிலோன் ராஜா பெல்ஷாத்சார் அரசாண்ட முதலாம் வருடத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி இது விவரிக்கிறது. இப்போது 70 வயதைத் தாண்டிவிட்ட தானியேல் ‘சொப்பனத்தையும் தரிசனங்களையும் காண்கிறார்.’ இந்தத் தரிசனங்கள் அவரை கதிகலங்க வைக்கின்றன! அவர் சொல்கிறார்: “இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது. அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.” (தானியேல் 7:1-8, 15) என்னே விசித்திரமான மிருகங்கள் இவை! முதலாவது, சிறகுகளுள்ள சிங்கத்தைப் போன்று இருக்கிறது. இரண்டாவது கரடியைப் போல் இருக்கிறது. அதன்பின் நான்கு சிறகுகளும் நான்கு தலைகளும் கொண்ட சிறுத்தை எழும்புகிறது! மகா பலம்படைத்த நான்காம் மிருகத்திற்கு பெரிய இரும்புப் பற்களும் பத்து கொம்புகளும் உள்ளன. அந்தப் பத்துக் கொம்புகளுக்கு இடையே வேறொரு ‘சின்ன’ கொம்பு எழும்புகிறது. இந்தக் கொம்பிற்கு ‘மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருக்கிறது.’ என்னே விநோதமான பிராணிகள்!
24. தானியேல் 7:9-14-ன்படி தானியேல் பரலோகத்தில் எதைப் பார்க்கிறார், இந்தத் தரிசனம் எதை சுட்டிக்காட்டுகிறது?
24 அடுத்து தானியேல் காணும் தரிசனங்கள் பரலோகத்திற்கு கவனத்தைத் திருப்புகின்றன. (தானியேல் 7:9-14) “நீண்ட ஆயுசுள்ளவர்,” அதாவது யெகோவா தேவன் பரலோக நியாயசங்கத்தில் நியாயாதிபதியாக மாட்சிமையோடு வீற்றிருக்கிறார். ‘ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவிக்கிறார்கள்; கோடானுகோடிபேர் அவருக்கு முன்பாக நிற்கிறார்கள்.’ கடவுள் இந்த மிருகங்களுக்குக் கடும் தீர்ப்பளித்து, அவற்றின் ஆளுகையைப் பறிக்கிறார். நான்காம் மிருகத்தையும் கொன்றுபோடுகிறார். ‘சகல ஜனங்களையும் தேசத்தாரையும் பாஷைக்காரரையும்’ நித்தியமாய் ஆளும் உரிமை, ‘மனுஷகுமாரனின் சாயலான ஒருவரிடம்’ ஒப்படைக்கப்படுகிறது. இது முடிவுகாலத்தையும், மனுஷகுமாரனான இயேசு கிறிஸ்து 1914-ஆம் வருடம் ராஜாவாக முடிசூட்டப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறது.
25, 26. தானியேல் புத்தகத்தை வாசிக்கையில் என்ன கேள்விகள் எழும்பலாம், அவற்றிற்குப் பதிலளிக்க எந்தப் புத்தகம் உதவும்?
25 தானியேல் புத்தகத்தை வாசிக்கும் எவருக்கும், நிச்சயமாய் இன்னும் பல கேள்விகள் எழும்பும். உதாரணத்திற்கு, தானியேல் 7-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள நான்கு மிருகங்கள் எதைக் குறிக்கின்றன? தானியேல் 9:24-27-ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசன ‘எழுபது வாரங்கள்’ சம்பந்தப்பட்ட விளக்கம் என்ன? தானியேல் 11-ஆம் அதிகாரத்தையும் “வடதிசை ராஜா,” “தென்றிசை ராஜா” ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட தீர்க்கதரிசன மோதல்களையும் பற்றி என்ன? இந்த ராஜாக்கள் இப்போது, அதாவது முடிவுகாலத்தில் என்ன செய்வார்கள்?
26 இதற்கான பதில்களைத் தெரிந்துகொள்ளும் ஞானத்தை யெகோவா, பூமியிலுள்ள தமது அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அருளியுள்ளார். இவர்களை தானியேல் 7:18 “உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள்” என அழைக்கிறது. மேலும், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார்,’ தீர்க்கதரிசியாகிய தானியேல் ஏவுதலால் எழுதியவற்றை அதிகமாக புரிந்துகொள்ள நம் அனைவருக்கும் உதவியளித்திருக்கிறார்கள். (மத்தேயு 24:45, NW) அதற்காக சமீபத்தில் தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! என்ற புதிய புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அழகிய படங்கள் கொண்ட இந்த 320-பக்க புத்தகம் தானியேல் புத்தகத்தை முழுமையாக விளக்குகிறது. அருமை தீர்க்கதரிசி தானியேல் எழுதிய, விசுவாசத்தைத் தூண்டும் ஒவ்வொரு தீர்க்கதரிசனத்தையும் ஒவ்வொரு சரித்திர பதிவையும் அது கலந்தாலோசிக்கிறது.
நம்முடைய நாளுக்குரிய உண்மையான அர்த்தம்
27, 28. (அ) தானியேல் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைப் பொறுத்ததில் எது உண்மை? (ஆ) எப்படிப்பட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம், நாம் என்ன செய்ய வேண்டும்?
27 இப்போது இந்த முக்கிய குறிப்பைக் கவனியுங்கள்: தானியேல் புத்தகத்திலுள்ள எல்லா தீர்க்கதரிசனங்களும், ஒருசில விவரங்களைத் தவிர, ஏற்கெனவே நிறைவேறிவிட்டன. உதாரணத்திற்கு, தானியேல் 2-ஆம் அதிகாரம் சொல்லும் சிலையின் பாதங்கள் அடையாளப்படுத்திய உலக நிலைமையை நாம் கண்கூடாக பார்க்கிறோம். தானியேல் 4-ஆம் அதிகாரம் குறிப்பிடும் அடிமரத்தின் விலங்கு, 1914-ல் மேசியானிய ராஜாவாகிய இயேசு கிறிஸ்து சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டபோது நீக்கப்பட்டது. அப்போதுதான், தானியேல் 7-ஆம் அதிகாரத்தில் முன்னறிவிக்கப்பட்டபடி, நீண்ட ஆயுசுள்ளவர் மனுஷகுமாரனுக்கு ஆளுகையைத் தந்தார்.—தானியேல் 7:13, 14; மத்தேயு 16:27-17:9.
28 தானியேல் 8-ஆம் அதிகாரம் குறிப்பிடும் 2,300 நாட்கள், 12-ஆம் அதிகாரம் குறிப்பிடும் 1,290 நாட்கள், 1,335 நாட்கள் ஆகிய அனைத்து காலப்பகுதிகளும் நிறைவேறிவிட்டன. ‘வடதிசை ராஜாவுக்கும்,’ ‘தென்திசை ராஜாவுக்கும்’ இடையே நடக்கும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டிவிட்டதாக தானியேல் 11-ஆம் அதிகாரம் காட்டுகிறது. இவை அனைத்தும், நாம் முடிவுகாலத்தின் இறுதிக்கட்டத்தில் இருப்பதற்கான மேலுமான வேதப்பூர்வ அத்தாட்சிகளாகும். கால ஓட்டத்தில் நமக்கிருக்கும் விசேஷ இடத்தைக் கருத்தில்கொண்டு, என்ன செய்ய நாம் தீர்மானமாய் இருக்க வேண்டும்? சந்தேகத்திற்கிடமின்றி, நாம் யெகோவா தேவனின் தீர்க்கதரிசன வார்த்தைக்கு செவிசாய்க்க வேண்டும்.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• நம் நாளைப் பற்றி அனைவரும் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென கடவுள் விரும்புகிறார்?
• தானியேல் புத்தகம் நம்முடைய விசுவாசத்தை எப்படி பலப்படுத்தும்?
• நேபுகாத்நேச்சாரின் சொப்பன சிலை எப்படி இருந்தது, அதிலுள்ளவை எவற்றை அடையாளப்படுத்தின?
• தானியேல் புத்தகத்தில் காணப்படும் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைப் பற்றியதில் எது குறிப்பிடத்தக்கது?
[கேள்விகள்]
[கேள்விகள்]