Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் ‘இரட்சிப்பின் நம்பிக்கையை’ பிரகாசமாக வையுங்கள்!

உங்கள் ‘இரட்சிப்பின் நம்பிக்கையை’ பிரகாசமாக வையுங்கள்!

உங்கள் ‘இரட்சிப்பின் நம்பிக்கையை’ பிரகாசமாக வையுங்கள்!

“இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக் கொண்டிருக்கக்கடவோம்.”1 தெசலோனிக்கேயர் 5:8.

1. “இரட்சிப்பின் நம்பிக்கை” சகித்து நிலைத்திருக்க எவ்வாறு உதவுகிறது?

 இக்கட்டான சூழலில் இருக்கும் ஒருவருக்கு தப்பிப் பிழைக்கப்போகும் நம்பிக்கை பிறந்துவிட்டால், அவர் கொஞ்சம்கூட தளராமல் இருப்பார். கப்பல் சேதத்தில் அகப்பட்டவரின் நிலையும் இதுவே. அவர் மரத்துண்டை பற்றிக்கொண்டு மிதக்கையில், உதவி சீக்கிரத்தில் கிடைக்கவிருக்கிறது என்ற நம்பிக்கை பிறந்தால், அதிக நேரம் சகிக்க முடியும். அவ்வாறே, ‘யெகோவா செய்யும் இரட்சிப்பில்’ நம்பிக்கை வைத்திருந்ததால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளினூடே, விசுவாசிகளான ஆண்களும் பெண்களும் இக்கட்டான காலங்களில் தளராமல் நீடித்து நிலைத்திருக்க முடிந்திருக்கிறது. இந்த நம்பிக்கை நமக்கிருந்தால் ஒருபோதும் ஏமாற்றமில்லை. (யாத்திராகமம் 14:13; சங்கீதம் 3:8; ரோமர் 5:5, NW; 9:33, NW) எனவேதான், ‘இரட்சிப்பின் நம்பிக்கையை,’ கிறிஸ்தவனின் ஆவிக்குரிய போர்க்கவசமாகிய ‘தலைச்சீராவுக்கு’ அப்போஸ்தலன் பவுல் ஒப்பிட்டார். (1 தெசலோனிக்கேயர் 5:8; எபேசியர் 6:17) நிஜமாகவே, கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்று நாம் நம்பினால், நம்முடைய சிந்திக்கும் திறமைகளைப் பாதுகாப்போம்; சோதனை, எதிர்ப்பு, துன்பம் என எதுவந்தாலும் தள்ளாட மாட்டோம்.

2. எவ்வாறு ‘இரட்சிப்பின் நம்பிக்கையே’ உண்மை வணக்கத்தாருக்கு உயிர்நாடி?

2 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைச் சுற்றியிருந்த உலகத்தாராகிய “புறமதத்தாருக்கெல்லாம், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை ஒன்றும் பெரிய விஷயமாக இருக்கவில்லை” என்று தி இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது. (எபேசியர் 2:12; 1 தெசலோனிக்கேயர் 4:13) எனினும் உண்மை வணக்கத்தாருக்கோ, ‘இரட்சிப்பின் நம்பிக்கையே’ உயிர்நாடி. இது எவ்வாறு? அதாவது, யெகோவாவின் பெயருக்கும், அவருடைய ஊழியர்களின் இரட்சிப்புக்கும் இடையே நெருங்கிய பந்தம் உள்ளது. சங்கீதக்காரராகிய ஆசாப் இவ்வாறு ஜெபித்தார்: “எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து, உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, . . . நிவிர்த்தியாக்கும்.” (சங்கீதம் 79:9; எசேக்கியேல் 20:9) மேலும், யெகோவாவோடு நல்ல உறவு இருக்க வேண்டுமானால், வாக்குறுதி அளிக்கப்பட்ட அவரது ஆசீர்வாதங்களில் திட நம்பிக்கையும் வைத்திருக்க வேண்டும். இதை பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.” (எபிரெயர் 11:6) மேலும், இயேசு பூமிக்கு வந்ததன் மிக முக்கிய காரணம், மனந்திரும்புகிறவர்கள் இரட்சிக்கப்படுவதற்கே என பவுல் விளக்கினார். அவர் சொன்னார்: ‘பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற கூற்று உண்மையானது, எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது.’ (1 தீமோத்தேயு 1:15, பொது மொழிபெயர்ப்பு) மேலும், இரட்சிப்பை, நம்முடைய ‘விசுவாசத்தின் பலன்’ என்பதாக அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிட்டார். (1 பேதுரு 1:9) ஆகவே, இரட்சிப்பின் நம்பிக்கை நமக்கிருப்பது தகுந்ததுதான் என்பது தெளிவாயுள்ளது. ஆனால் இரட்சிப்பு என்பது என்ன? அதை அடைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

இரட்சிப்பு என்பது என்ன?

3. பூர்வ காலங்களிலிருந்த யெகோவாவின் ஊழியர்களுக்கு கிடைத்த இரட்சிப்பு எப்படிப்பட்டது?

3 எபிரெய வேதவசனங்களின்படி, “இரட்சிப்பு” என்பதற்கு, ஒடுக்குதல், வன்முறை, அகால மரணம் போன்றவற்றிலிருந்து தப்புவிக்கப்படுவது அல்லது காப்பாற்றப்படுவது என்றே பெரும்பாலும் அர்த்தம். உதாரணமாக, யெகோவாவை “விடுவிக்கிறவர்” என்று அழைத்து, தாவீது இவ்வாறு சொன்னார்: “யெகோவா என் கன்மலை, . . . என் புகலிடம், என்னை ரட்சிக்கிறவர், கொடுமையினின்று என்னை ரட்சிக்கிறீர். யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன், அவரே துதிக்குப் பாத்திரர்; அப்போது என் சத்துருக்களினின்று இரட்சிக்கப்படுவேன்.” (2 சாமுவேல் 22:2-4, தி.மொ.) தம்முடைய உண்மையுள்ள ஊழியர்கள் உதவிக்காக வேண்டி கதறுகையில் யெகோவா செவிகொடுக்கிறார் என்று தாவீது அறிந்திருந்தார்.—சங்கீதம் 31:22, 23; 145:19.

4. கிறிஸ்தவர்களின் காலத்திற்கு முன்பு வாழ்ந்துவந்த யெகோவாவின் ஊழியர்களுக்கு, எதிர்காலத்திற்கான என்ன நம்பிக்கை இருந்தது?

4 கிறிஸ்தவர்களின் காலத்திற்கு முன்பு வாழ்ந்துவந்த யெகோவாவின் ஊழியர்களுக்கும் எதிர்கால நம்பிக்கை இருந்தது. (யோபு 14:13-15; ஏசாயா 25:8; தானியேல் 12:13) உண்மையில், எபிரெய வேதாகமங்களில் காணப்படுகிற மீட்புக்கான வாக்குறுதிகளில் பல, பெரிய இரட்சிப்பாகிய நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற தீர்க்கதரிசனங்களே. (ஏசாயா 49:6, 8; அப்போஸ்தலர் 13:47; 2 கொரிந்தியர் 6:2) இயேசுவின் நாளில் யூதர்களில் பலருக்கு நித்திய ஜீவ நம்பிக்கை இருந்தது. ஆனால், அவர்களது நம்பிக்கை நிறைவேற வேண்டுமானால், அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அவர்களோ ஏற்க மறுத்தார்கள். தம்முடைய காலத்திலிருந்த மதத் தலைவர்களுக்கு இயேசு இவ்வாறு சொன்னார்: “உங்களுக்கு வேதாகமங்களில் நித்தியஜீவன் உண்டென்றெண்ணி அவைகளை ஆராய்ந்து பார்க்கிறீர்கள்; என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகள் அவைகளே.”யோவான் 5:39, தி.மொ.

5. மொத்தத்தில், இரட்சிப்பு என்பது என்ன?

5 இரட்சிப்பின் அர்த்தம் முழுவதையும் இயேசுவைக் கொண்டே கடவுள் வெளிப்படுத்தினார். அது, பாவத்தின் ஆளுகையிலிருந்தும், பொய்மத அடிமைத்தனத்திலிருந்தும், சாத்தானின் அதிகாரத்திலுள்ள இவ்வுலகத்திலிருந்தும், மனித பயத்திலிருந்தும், மரண பயத்திலிருந்துங்கூட விடுதலையை உட்படுத்துகிறது. (யோவான் 17:16; ரோமர் 8:2; கொலோசெயர் 1:13; வெளிப்படுத்துதல் 18:2, 4) மொத்தத்தில், கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு, கடவுளால் வரும் இரட்சிப்பு, ஒடுக்குதலிலிருந்தும் கடுந்துன்பத்திலிருந்தும் விடுதலையை மட்டுமல்லாமல், நித்திய ஜீவனையும் குறிக்கும். (யோவான் 6:40; 17:3) ‘சிறு மந்தைக்கு’ இரட்சிப்பானது, கிறிஸ்துவுடன் ராஜ்ய ஆட்சியில் பங்குகொள்ளும்படி, பரலோக வாழ்க்கைக்கு அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவதைக் குறிக்கிறதென இயேசு கற்பித்தார். (லூக்கா 12:32) மற்றவர்களுக்கு இரட்சிப்பானது, ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதற்கு முன்பாக ஏதேன் தோட்டத்தில் அனுபவித்து மகிழ்ந்த பரிபூரண வாழ்க்கையை திரும்பப் பெறுவதையும், கடவுளுடன் நல்ல உறவுக்குள் வருவதையும் குறிக்கிறது. (அப்போஸ்தலர் 3:21; எபேசியர் 1:10) அத்தகைய பரதீஸிய நிலைமையில் நித்திய ஜீவனுடன் வாழ வேண்டுமென்பதே மனிதவர்க்கத்தினருக்கான கடவுளுடைய முதல் நோக்கம். (ஆதியாகமம் 1:28; மாற்கு 10:30) எனினும், இப்படிப்பட்ட நிலைமைகளைத் திரும்ப பெறுவது எவ்வாறு சாத்தியம்?

இரட்சிப்புக்கான ஆதாரம்—மீட்கும்பொருள்

6, 7. நம்முடைய இரட்சிப்பில் இயேசுவின் பங்கு யாது?

6 மீட்பின் கிரயமாகிய கிறிஸ்துவின் பலியின் வாயிலாக மாத்திரமே நித்திய இரட்சிப்பு கிடைக்கும். ஏன்? ஆதாம் பாவம் செய்தபோது, தன்னையும், நாம் உட்பட அவனுடைய எதிர்கால சந்ததியார் அனைவரையும் பாவத்திற்குள் ‘விற்றுப்’ போட்டான். அதிலிருந்து மனிதவர்க்கத்தை விடுவிக்க, மீட்கும்பொருளை செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என பைபிள் விளக்குகிறது. (ரோமர் 5:14, 15; 7:14) எல்லா மனிதருக்குமான ஒரு மீட்கும்பொருளை கடவுள் அளிப்பார் என்பதை மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் செலுத்தப்பட்ட மிருக பலிகள் அர்த்தப்படுத்தின. (எபிரெயர் 10:1-10; 1 யோவான் 2:2) இயேசுவே அந்த மீட்கும்பொருள்; அவருடைய பலியே, அந்தத் தீர்க்கதரிசன நிழல்களை நிஜமாக்கியது. இயேசு பிறப்பதற்கு முன்பே யெகோவாவின் தூதர் ஒருவர் இவ்வாறு அறிவித்தார்: “அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.”—மத்தேயு 1:21; எபிரெயர் 2:10.

7 இயேசு, கன்னி மரியாளுக்கு அற்புதமாய்ப் பிறந்தார். அவர் கடவுளுடைய குமாரன் என்பதால், ஆதாமிலிருந்து மரணத்தைச் சுதந்தரிக்கவில்லை. இதன் காரணமாகவும் கடவுளுக்கு முற்றிலும் உண்மையுள்ளவராய் நடந்துகொண்டதாலும், அவருடைய உயிர், மனிதவர்க்கத்தை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்பதற்குத் தேவையான மதிப்பைப் பெற்றது. (யோவான் 8:36; 1 கொரிந்தியர் 15:22) மற்ற எல்லா மனிதரையும் போல், பாவத்தின் காரணமாக மரிக்கும் நிர்பந்தம் இயேசுவுக்கு இருக்கவில்லை. அவர், ‘அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கும்படியான’ நோக்கத்துடனேயே பூமிக்கு வந்தார். (மத்தேயு 20:28) அதை நிறைவேற்றிய பின்பு இப்போது உயிர்த்தெழுப்பப்பட்டு சிங்காசனத்தில் ஏற்றப்பட்டிருக்கும் இயேசு, கடவுள் எதிர்பார்க்கும் தகுதிகளையுடைய எல்லாருக்கும் இரட்சிப்பை அருளுவதற்கான ஸ்தானத்தில் வீற்றிருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 12:10.

இரட்சிப்படைவதற்கு என்ன தேவை?

8, 9. (அ) பணக்கார இளம் அதிபதி இரட்சிப்பைப் பற்றி கேட்ட கேள்விக்கு இயேசு எவ்வாறு பதிலளித்தார்? (ஆ) இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் போதிக்க இந்த சந்தர்ப்பத்தை எவ்வாறு பயன்படுத்தினார்?

8 ஒரு பணக்கார இளம் இஸ்ரவேல அதிபதி இயேசுவிடம் இவ்வாறு கேட்டான்: “நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்ய வேண்டும்?” (மாற்கு 10:17) அவனுடைய கேள்வி எதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது? யூதரது சிந்தனையை ஒருவேளை அவனுடைய கேள்வி படம்பிடித்துக் காட்டலாம். அதாவது, நல்ல செயல்கள் சிலவற்றை நாம் செய்ய வேண்டும் என கடவுள் எதிர்பார்க்கிறார், அவற்றை செய்துவிட்டாலே அவரிடமிருந்து இரட்சிப்பை பெற்றுவிடலாம் என நினைத்தனர். ஆனால் அப்படிப்பட்ட வெளிவேஷமான பக்தி தன்னலத்தால் உருவாகலாம். அத்தகைய செயல்கள் இரட்சிப்புக்கு உத்தரவாதம் அளிக்காது; ஏனெனில், அபூரண மனிதர் எவரும் கடவுளுடைய தராதரங்களை உண்மையில் எட்ட முடியாதே!

9 இயேசு அந்த மனிதனின் கேள்விக்குப் பதிலளிக்கையில், அவன் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றுதான் நினைப்பூட்டினார். அதற்கு அந்த இளம் அதிபதி, அவற்றையெல்லாம் தன் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருந்ததாக இயேசுவிடம் சட்டென்று உறுதிகூறினான். அவனுடைய பதிலால், இயேசுவுக்கு அவன்மேல் பரிவுதான் ஏற்பட்டது. இயேசு அவனிடம்: “உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு . . . என்னைப் பின்பற்றிவா என்றார்.” எனினும், அந்த வாலிபன் “மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால்,” வருத்தமடைந்து போய்விட்டான். அதன்பின் இயேசு தம்முடைய சீஷர்களிடம், இந்த உலகப் பொருள்களிடமாக மிதமிஞ்சி பற்றுதலாயிருப்பது இரட்சிப்பை அடைவதற்குத் தடங்கலாக இருக்கும் என்பதை அறிவுறுத்திக் கூறினார். ஒருவனும் தன் சொந்த முயற்சியால் இரட்சிப்படைய முடியாது என்றும் குறிப்பிட்டார். ஆனால் இயேசு இவ்வாறு உறுதியளித்தார்: “மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும்.” (மாற்கு 10:18-27; லூக்கா 18:18-23) அப்படியானால், இரட்சிப்பு எவ்வாறு கிடைக்கும்?

10. நாம் இரட்சிக்கப்பட வேண்டுமானால், என்னென்ன நிபந்தனைகளை ஏற்க வேண்டும்?

10 இரட்சிப்பு கடவுளிடமிருந்து வரும் பரிசு. ஆனால் அது, தானாக வந்துவிடுவதில்லை. (ரோமர் 6:23) அந்தப் பரிசை அடைய தகுதிபெறுவதற்கு ஒவ்வொரு நபரும் எட்ட வேண்டிய சில முக்கிய தகுதிகள் இருக்கின்றன. இயேசு சொன்னார்: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” அப்போஸ்தலன் யோவான் இதையும் சொன்னார்: “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ [“குமாரனுக்குக் கீழ்ப்படியாதவனோ,” NW] ஜீவனைக் காண்பதில்லை.” (யோவான் 3:16, 36) நித்திய இரட்சிப்பை அடையும்படி எதிர்பார்க்கிற ஒவ்வொரு நபரிடமும், விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் கடவுள் எதிர்பார்க்கிறார் என்பது தெளிவாயுள்ளது. மீட்கும்பொருளை ஏற்று, இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கவே ஒவ்வொருவரும் தீர்மானிக்க வேண்டும்.

11. அபூரணராய் இருக்கும் ஒருவர் எவ்வாறு யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற முடியும்?

11 நாமோ அபூரணர், இதனால் நூறு சதவீதம் கீழ்ப்படிவது என்பது ரொம்ப கடினம்தான். இதன் நிமித்தமே, நம்முடைய பாவங்களை மூடுவதற்கு மீட்கும்பொருளை யெகோவா ஏற்பாடு செய்தார். இருப்பினும், கடவுளுடைய வழிகளுக்கேற்றவாறு வாழும்படி நாம் விடாமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அந்தப் பணக்கார இளம் அதிபதிக்கு இயேசு சொன்னபடி, நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற உதவுவது மட்டுமல்லாமல், மிகுந்த மகிழ்ச்சியையும் அள்ளித் தருகிறது; ஏனெனில் ‘அவருடைய கற்பனைகள் பாரமானவைகளல்ல,’ அவை ஊனைப்போல் தெம்பூட்டுபவை. (1 யோவான் 5:3; நீதிமொழிகள் 3:1, 8) இருப்பினும், இரட்சிப்பின் நம்பிக்கை எனும் பிடியை விட்டுவிடாமல் இறுக்கிக்கொள்வது எளிதல்ல.

‘விசுவாசத்திற்காக தைரியமாய் போராடுங்கள்’

12. ஒழுக்கங்கெட்ட செல்வாக்குகளை எதிர்த்துப் போராடி ஜெயிக்க, இரட்சிப்பின் நம்பிக்கை ஒரு கிறிஸ்தவனை எவ்வாறு பலப்படுத்துகிறது?

12 சீஷனாகிய யூதா, “பொதுவான இரட்சிப்பைக் குறித்து” பூர்வ கிறிஸ்தவர்களுக்கு எழுத விரும்பினார். எனினும் அங்கிருந்த சீர்கெட்ட நிலைமையைப் பார்த்தபோதோ, “விசுவாசத்திற்காக தைரியமாய்ப் போராட” தன் சகோதரருக்கு அறிவுரை கொடுக்க வேண்டியது தன் கடமை என உணர்ந்தார். ஆம், எந்தவித இடையூறுமின்றி எல்லாம் இயல்பாய் நடந்துகொண்டிருக்கையில், நம்பிக்கையுடன், உண்மையான கிறிஸ்தவ விசுவாசத்தை விடாமல் இறுகப் பிடித்துக்கொண்டு, கீழ்ப்படிதலைக் காட்டுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. இச்சந்தர்ப்பத்தில் கீழ்ப்படிந்துவிட்டால் மட்டும் இரட்சிப்பை அடைந்துவிட முடியாது. சோதனைகளும் ஒழுக்கங்கெட்ட செல்வாக்குகளும் நம்மை அமிழ்த்தும்போது அவற்றை எதிர்த்துப் போராடி ஜெயிப்பதுதான் யெகோவாவிடம் நமக்கு உண்மையான பக்தி இருப்பதைக் காட்டுகிறது. அந்தளவுக்கு இரட்சிப்பின் நம்பிக்கை நம்மை பலப்படுத்துகிறது. எனினும், தரங்கெட்ட, தகாத பாலுறவு பழக்கங்களும், அதிகாரத்திற்கு அவமதிப்பும், பிரிவினைகளும், சந்தேகங்களும், முதல் நூற்றாண்டு சபையினரின் மனோபாவங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தன. அத்தகைய போக்குகளை எதிர்த்துப் போராட அவர்களுக்கு உதவி செய்வதற்காகவே, பின்வரும் இந்த விஷயத்தை தங்கள் குறிக்கோளாக மனதில் தெளிவாக வைத்திருக்கும்படி உடன்கிறிஸ்தவர்களை யூதா ஊக்குவித்தார்: “நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற காத்திருங்கள்.” (யூதா 3, 4, 8, 19-21) இரட்சிப்புக்கான நம்பிக்கை, ஒழுக்கப்படி சுத்தமாய் நிலைத்திருப்பதற்கான அவர்களுடைய போராட்டத்தில் அவர்களைப் பலப்படுத்தக்கூடும்.

13. கடவுளுடைய தகுதியற்ற தயவின் நோக்கத்தை நாம் வீணாக்கவில்லை என்பதை எவ்வாறு காட்டலாம்?

13 தமது இரட்சிப்புக்கு காத்திருக்கிறவர்கள், ஒழுக்கத்தில் தலைசிறந்து விளங்க வேண்டுமென்று யெகோவா தேவன் எதிர்பார்க்கிறார். (1 கொரிந்தியர் 6:9, 10) எனினும், கடவுளுடைய ஒழுக்க தராதரங்களைக் கடைப்பிடிக்கும் ஒருவர், மற்றவர்கள் சரியாக நடந்துகொள்வதில்லை என நியாயந்தீர்ப்பதை இது அர்த்தப்படுத்தாது. நம் உடன் மானிடருக்கு முடிவில் என்ன நடக்கும் என நாம் தீர்மானிக்க முடியாது. கடவுள்தான் தீர்மானிப்பார். இதைத்தான் ஆதன்ஸிலிருந்த கிரேக்கருக்கு பவுல் சொன்னார்: “மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.” இயேசு கிறிஸ்துவே அந்த மனிதன். (அப்போஸ்தலர் 17:31; யோவான் 5:22) நமக்கு இயேசுவின் மீட்கும் கிரய பலியில் விசுவாசம் இருந்தால், வரவிருக்கிற நியாயத்தீர்ப்பு நாளுக்கு நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. (எபிரெயர் 10:38, 39) மீட்பின் கிரய பலியின் மூலமாய் கிடைத்த “கடவுளுடைய தகுதியற்ற தயவை [மீட்பின் மூலமாய் அவருடன் ஒப்புரவாதலை] ஏற்று,” பின்பு, தவறான சிந்தனைக்கும் நடத்தைக்கும் இடங்கொடுப்பதன் மூலம் ஒருபோதும் ‘அதன் நோக்கத்தை வீணாக்கக்’ கூடாது என்பதே முக்கியம். (2 கொரிந்தியர் 6:1, NW) அத்துடன், மற்றவர்களும் இரட்சிப்பை அடைய உதவிசெய்வது, கடவுளுடைய இரக்கத்தின் நோக்கத்தை நாம் சரியாக புரிந்துகொண்டிருப்பதைக் காட்டுகிறது. நாம் அவர்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம்?

இரட்சிப்பின் நம்பிக்கையை பகிர்ந்துகொள்ளுதல்

14, 15. இரட்சிப்பின் நற்செய்தியை பிரசங்கிப்பதற்காக யாரை இயேசு நியமித்தார்?

14 தீர்க்கதரிசியாகிய யோவேலின் வார்த்தைகளை மேற்கோளாகக் குறிப்பிட்டு, பவுல் இவ்வாறு எழுதினார்: “கர்த்தரின் நாமத்தைத் [“யெகோவாவின் பெயரில்,” NW] தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.” பின்பு அவர் இவ்வாறும் சொன்னார்: “தாங்கள் விசுவாசியாதவரை எப்படித் தொழுதுகொள்ளுவார்கள்? தாங்கள் கேள்விப்படாதவரில் எப்படி விசுவாசம் வைப்பார்கள்? பிரசங்கிக்கிறவனில்லாமல் எப்படிக் கேள்விப்படுவார்கள்?” சில வசனங்களுக்குப் பிறகு, விசுவாசம் தானாக வருவதில்லை, “கேள்வியினால்,” அதாவது, “கிறிஸ்துவின் வசனத்தினால் வரும்” என்றும் அவர் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.—ரோமர் 10:13, 14, 17, தி.மொ.; யோவேல் 2:32, தி.மொ.

15 ‘கிறிஸ்துவைப் பற்றிய வசனத்தை’ சகல தேசத்தாருக்கும் யார் சொல்வார்கள்? இந்த ஊழியத்தைச் செய்வதற்காக, தம்முடைய சீஷர்களை, அதாவது, அந்த ‘வசனத்தை’ ஏற்கெனவே கற்றிருந்தவர்களை இயேசு நியமித்தார். (மத்தேயு 24:14; 28:19, 20; யோவான் 17:20) ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பதிலும் சீஷராக்கும் ஊழியத்திலும் நாம் ஈடுபடுகையில், அப்போஸ்தலன் பவுல் ஏசாயாவிலிருந்து மேற்கோள் காட்டி எழுதின அதையே செய்கிறோம்: “நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள்.”ரோமர் 10:15: ஏசாயா 52:7.

16, 17. நாம் செய்யும் பிரசங்க வேலையின் இரட்டை நோக்கம் என்ன?

16 இந்தப் பொறுப்பை செய்துமுடிப்பது, இரட்டை நோக்கத்தை நிறைவேற்றுகிறது. முதலாவதாக, கடவுளுடைய பெயர் மகிமைப்படவும், இரட்சிப்பை நாடுபவர்கள் அதற்காக எங்கே திரும்புவது என்பதை அறியவும் நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும். பவுல் இந்த அம்சத்தை நன்றாகப் புரிந்திருந்தார். அவர் சொன்னதாவது: “நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் [“யெகோவா,” NW] எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம்.” ஆகையால், கிறிஸ்துவின் சீஷராக, நாம் ஒவ்வொருவரும் இரட்சிப்பின் செய்தியை ஜனங்களுக்கு எடுத்துச் செல்வதில் பங்குகொள்ள வேண்டும்.—அப்போஸ்தலர் 13:47; ஏசாயா 49:6.

17 இரண்டாவதாக, நற்செய்தியைப் பிரசங்கிப்பது, கடவுளுடைய நீதியான தீர்ப்புக்கு அஸ்திவாரத்தைப் போடுகிறது. இந்த நியாயத்தீர்ப்பைப் பற்றி இயேசு இவ்வாறு சொன்னார்: “மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து . . . நிறுத்துவார்.” இந்த நியாயந்தீர்த்தலும் பிரித்தலும் “மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய் . . . வரும்போது” செய்யப்படும் என்றாலும், கிறிஸ்துவின் ஆவிக்குரிய சகோதரரை அடையாளம் கண்டுகொள்வதற்கும், இவ்வாறு தங்கள் நித்திய இரட்சிப்புக்காக அவர்களுக்கு ஆதரவாய் உழைப்பதற்குமான வாய்ப்பை, இன்று இந்தப் பிரசங்க ஊழியம் ஜனங்களுக்கு அளிக்கிறது.—மத்தேயு 25:31-46.

‘நன்னம்பிக்கையின் பூரண நிச்சயத்தைக்’ காத்துக்கொள்ளுங்கள்

18. ‘இரட்சிப்பின் நம்பிக்கையை’ நாம் எவ்வாறு தெளிவாய் வைத்துக்கொள்ளலாம்?

18 பிரசங்க ஊழியத்தில் நாம் மும்முரமாய் ஈடுபடுவதும் நம்முடைய நம்பிக்கையைத் தெளிவாய் வைத்துக்கொள்ள நமக்கு உதவும் ஒரு வழியாகும். பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்களுக்கு நன்னம்பிக்கையின் பூரண நிச்சயம் உண்டாகும்படி உங்களில் ஒவ்வொருவரும் முடிவுபரியந்தம் அப்படியே உற்சாகத்தைக் காண்பிக்கும்படி ஆசையாயிருக்கிறோம்.” (எபிரெயர் 6:11, தி.மொ.) அப்படியானால், நாம் ஒவ்வொருவரும், “இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவை” தரித்துக்கொண்டு, இவ்வாறு, “தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்” என்பதை நினைவில் வைப்போமாக. (1 தெசலோனிக்கேயர் 5:8, 9) பேதுருவின் நல்லறிவுரையையும் இருதயத்தில் ஏற்போமாக: “நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.” (1 பேதுரு 1:13) இவ்வாறு செய்யும் எல்லாரும், தங்கள் “இரட்சிப்பின் நம்பிக்கை” பூரணமாய் நிறைவேறுவதைக் காண்பார்கள்!

19. பின்வரும் கட்டுரையில் நாம் எதை சிந்திப்போம்?

19 இதற்கிடையே, இந்த ஒழுங்குமுறைக்கு மீந்திருக்கிற காலத்தைப் பற்றிய நம் கருத்து என்னவாக இருக்க வேண்டும்? நாமும் மற்றவர்களும் இரட்சிப்பைப் பெறும்படி அந்தக் காலத்தை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம்? பின்வரும் கட்டுரையில் இந்தக் கேள்விகளை சிந்திப்போம்.

உங்களால் விளக்க முடியுமா?

• ‘இரட்சிப்பின் நம்பிக்கையை’ நாம் ஏன் தெளிவாக வைக்க வேண்டும்?

• இரட்சிப்பு என்பது என்ன?

• இரட்சிப்பாகிய பரிசை நாம் எவ்வாறு பெறலாம்?

• நாம் செய்யும் பிரசங்க வேலை கடவுளுடைய நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றுகிறது?

[கேள்விகள்]

[கேள்விகள்]

[பக்கம் 10-ன் படங்கள்]

இரட்சிப்பு என்பது, அழிவிலிருந்து தப்புவது மட்டுமே அல்ல