Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுக்குப் பிரியமான இசை

கடவுளுக்குப் பிரியமான இசை

கடவுளுக்குப் பிரியமான இசை

“கலைகளிலேயே மிகப் பழமையானது, இயற்கையானது.” மொழியைப்போலவே, இதுவும் ஓர் உயர்ந்த வெகுமதி. மனிதரையும் மிருகங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்டும் ஒன்று. அதுதான் இசை. அது உணர்ச்சிகளை தட்டியெழுப்புகிறது. செவிக்கு இனிமையானது, மக்களின் மனதில் தனியொரு இடம் பெற்றிருப்பது. இத்தனைக்கும் மேலாக, இசை கடவுளைப் பிரியப்படுத்தக்கூடியது.

இஸ்ரவேலர்களை இசைப்பிரியர்கள் என பைபிள் குறிப்பிடுகிறது. “பூர்வ காலங்களில் மிக முக்கியமான கலையாக” இசை விளங்கியதென உங்கர்ஸ் பைபிள் டிக்‍ஷனரி விளக்குகிறது. இசைக்கருவிகளை இசைப்பதிலும்சரி சொந்த குரலில் பாடுவதிலும்சரி இசை அவர்கள் வணக்கத்தின் பாகமாக இருந்தது. இது அவர்களுடைய அன்றாட வாழ்க்கையின் ஓர் அம்சமாக திகழ்ந்தது. என்னதான் இசைக்கருவிகள் இருந்தாலும், மனித குரலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஆசரிப்பு கூடாரத்தில், “திருப்பாடல் பணிக்கென” லேவியர்களில் சிலரை தாவீது ராஜா நியமித்திருந்தார். அவருடைய மகன் சாலொமோனால் கட்டப்பட்ட ஆலயம் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன் இந்த ஏற்பாடு இருந்தது. (1 நாளாகமம் 6:31, 32, பொது மொழிபெயர்ப்பு) யெகோவாவின் பிரசன்னத்தை அடையாளப்படுத்திய உடன்படிக்கைப் பெட்டி எருசலேமுக்கு கொண்டு வரப்பட்டபோது, “யெகோவாவைப் பிரஸ்தாபம்பண்ணித் துதித்துப் புகழுகிறதற்கு” லேவியர்களில் சிலரை தாவீது நியமித்திருந்தார். அவர்கள் சொந்தக் குரலிலும் “சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும்” துதித்தனர். அவர்கள் “யெகோவாவைத் துதிக்க, பேர்பேராக தெரிந்துகொள்ளப்பட்டனர், ஏனெனில் ‘அவரது கிருபை என்றுமுள்ளது.’”—1 நாளாகமம் 16:4-6, 41; 25:1, NW.

“[யெகோவாவின்] கிருபை என்றுமுள்ளது” எனும் இந்தப் பல்லவி சங்கீதப் புத்தகத்தில் அநேக தடவை வருகிறது. இசையோடு அதிகளவில் தொடர்புடைய பைபிள் புத்தகம் இது. உதாரணமாக, சங்கீதம் 136-ம் அதிகாரத்திலுள்ள 26 வசனங்களிலும் இரண்டாம் பாகமாக வருவது இந்தப் பல்லவிதான். “சுருக்கமாக இருப்பதால் ஜனங்கள் உச்சரிப்பதற்கு எளிதாக உள்ளது” என ஒரு பைபிள் கல்விமான் குறிப்பிடுகிறார். “எல்லாரும் அதை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்.”

சங்கீதங்களின் முகவரிகள், இசைக்கருவிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டுகின்றன. சுரமண்டலத்தோடுகூட எக்காளம், வீணை, தம்புரு, யாழ், கைத்தாளங்கள் போன்ற இசைக்கருவிகளைப் பற்றி சங்கீதம் 150 குறிப்பிடுகிறது. என்றபோதிலும், மனித குரலுக்கே அதிக மதிப்பு! 6-வது வசனம் இப்படி ஊக்கமூட்டுகிறது: “சுவாசமுள்ள யாவும் யாவைத் துதிப்பதாக. ஜனங்களே யாவைத் துதியுங்கள்!”

நம் உணர்ச்சிகளை இசை வெளிப்படுத்துகிறது. எனவே, பைபிள் காலங்களில், துயர்மிகுந்த எண்ணங்கள் புலம்பல்களாக அல்லது ஒப்பாரிகளாக பாடப்பட்டன. என்றாலும், இந்த வகையான பாடல்கள் இஸ்ரவேலின் இசைத்தொகுப்புகளில் பிரபலமாக இல்லை. “இனிமையான இசையோ அல்லது பேச்சோ பிரபலமாக இருந்தன. என்றபோதிலும் ஒப்பாரிகள், துயர்மிகுந்த எண்ணங்களை வெளிப்படுத்தின” என வேதாகமங்களின்பேரில் உட்பார்வை a எனும் பைபிள் என்ஸைக்ளோபீடியா குறிப்பிடுகிறது.

இயேசுவும் அவருடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களும் யெகோவாவுக்கு துதிகளைப் பாடினர். இயேசுவின் மரணத்திற்கு முன் அந்த இரவும் அவ்வாறு பாடினர். நிச்சயமாகவே, அவர்கள் ஹல்லேல் சங்கீதங்களைப் பாட்டாக பாடியிருப்பர். (சங்கீதம் 113-118) மரணத்தால் தங்கள் எஜமான் தங்களைவிட்டுப் பிரியப்போவதை தாங்கிக்கொள்ள இயேசுவின் சீஷர்களை நிச்சயமாகவே இந்தப் பாடல்கள் பலப்படுத்தியிருக்கும்! அதுமட்டுமல்ல, அந்த சந்தர்ப்பத்தில் “அவருடைய கிருபை என்றுமுள்ளது” என்ற வாசகத்தை அவர்கள் ஐந்து முறை பாடினார்கள். சர்வலோகப் பேரரசராகிய யெகோவாவுக்கு உண்மையுள்ள ஊழியர்களாக தொடர்ந்து நிலைத்திருப்பதற்கான அவர்களுடைய தீர்மானத்தை நிச்சயமாகவே இது உறுதிப்படுத்தி இருக்கும்.—சங்கீதம் 118:1-4, 29.

எபேசு, கொலோசே சபைகளைச் சேர்ந்த ஆரம்பக் கிறிஸ்தவர்கள், “கடவுளுக்கு சங்கீதங்களையும் துதிகளையும்” (சொல்லர்த்தமாக, “கீர்த்தனைகள்”) பாடினார்கள். இவற்றோடு ‘ஆவிக்குரிய பாடல்களையும்’ இருதயப்பூர்வமாய் பாடினார்கள். (எபேசியர் 5:19; கொலோசெயர் 3:16, NW) அதோடு, பாடல்களாலும் பேச்சினாலும் கடவுளை தங்கள் வாயால் துதித்தனர். “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” என்று இயேசு சொன்னாரல்லவா?—மத்தேயு 12:34.

கடவுளைப் பிரியப்படுத்தும் இசை

பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா இசையுமே கடவுளுக்குப் பிரியமானதல்ல. சீனாய் மலையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை யோசித்துப்பாருங்கள். அங்கே பத்துக் கற்பனைகள் உட்பட, நியாயப்பிரமாணச் சட்டத்தை மோசே பெற்றார். மோசே மலையிலிருந்து இறங்கியபோது எதைக் கேட்டார்? ‘வெற்றி முழக்கமும் அல்ல,’ ‘தோல்விக் குரலும் அல்ல,’ ஆனால் ‘பாட்டொலியை’ கேட்டார். விக்கிரகாராதனையோடு தொடர்புடைய இசை அது. கடவுளுக்கு வெறுப்பூட்டிய பழக்கம் அது. அந்த செயலில் ஈடுபட்ட சுமார் 3,000 பேர் இறப்பதற்கும் அது வழிநடத்தியது.—யாத்திராகமம் 32:18, பொ.மொ., 25-28.

மனிதன், எல்லா வகையான இசையையும் இயற்ற முடியும், இசைக்க முடியும், கேட்டு ரசிக்கவும் முடியும். என்றாலும், எல்லா விதமான இசையும் கடவுளைப் பிரியப்படுத்துவதில்லை. ஏன்? கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் விளக்குகிறார்: “எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களா[னார்கள்].” (ரோமர் 3:23) உதாரணமாக, பொய்மத சடங்காசாரங்கள், மனித ஆத்துமா அழியாமை எனும் கோட்பாடு, “தேவமாதா” வணக்கம் போன்றவையே பெரும்பாலும் இசைத்தொகுப்புகளின் கருப்பொருள். இந்த நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் கடவுளுடைய சத்தியத்தை அவமதிக்கின்றன. பைபிளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியங்களுக்கு இவை முரணாக இருக்கின்றன.—உபாகமம் 18:10-12; எசேக்கியேல் 18:4; லூக்கா 1:35, 38.

இசை—ஞானமாக தெரிந்தெடுத்தல்

எந்த இசையை தெரிந்தெடுப்பது என்பது இன்று உண்மையிலேயே பெரிய சவால். எந்தவிதமான இசையாக இருந்தாலும்சரி அவற்றை வாங்கும்படி வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வண்ணம் டிஸ்குகளின் கவர் கண்ணைப்பறிக்கிறது. ஆனால், கடவுளை பிரியப்படுத்த விரும்பும் ஒருவர் இதில் மிகவும் எச்சரிக்கையாய் இருப்பார். எந்தவொரு இசையோ பாடலோ, பொய்மத நம்பிக்கைகளை ஊக்குவிப்பவையாக இருந்தாலும்சரி, அல்லது ஆத்துமா அழியாமை, பேய் வணக்கம் போன்றவற்றை பிரபலப்படுத்தினாலும்சரி, அவற்றை அவர் ஞானமாக தவிர்த்திடுவார்.

ஒருசமயம் ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவ மிஷனரியாக சேவை செய்தவர் ஆல்பர்ட். அங்கிருந்தபோது, பியானோ வாசிக்க அவ்வளவாக நேரமே கிடைக்கவில்லை என அவர் சொல்கிறார். என்றபோதிலும், அவர் எடுத்துச் சென்றிருந்த சில இசைப்பதிவுத் தட்டுக்களை மறுபடியும் மறுபடியும் போட்டுக் கேட்டார். இப்போது அவர் தன் சொந்த நாட்டில், கிறிஸ்தவ சபைகளைச் சென்று சந்திக்கும் பிரயாணக் கண்காணியாக சேவை செய்கிறார். இசையை கேட்பதற்கும்கூட அவருக்கு நேரம் இருப்பதில்லை. “எனக்குப் பிடிச்ச இசையமைப்பாளர் பீதோவன். அவரோட இசைத்தட்டுக்கள ரொம்ப வருஷமா நான் சேத்துட்டு வந்துருக்கேன்” என அவர் சொல்கிறார். அந்த இசையை ரசித்துக் கேட்பது அவருக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இசையை பொருத்தளவில், ஒவ்வொருவருடைய ரசனை வித்தியாசப்படலாம். ஆனால், கிறிஸ்தவர்களாக நாம் பவுலின் புத்திமதியை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்: “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.”—1 கொரிந்தியர் 10:31.

இசையும் ஒப்புக்கொடுத்தலும்

சூஸீக்கு இசை என்றால் கொள்ளைப்பிரியம். அவள் விளக்குகிறாள்: “ஆறு வயசுல பியானோ கத்துக்க ஆரம்பிச்சேன். பத்து வயசுல வயலினும் பன்னிரண்டு வயசுல யாழும் கத்துக்க ஆரம்பிச்சேன்.” பின்னர், யாழ் மீட்டுவதில் புலமைபெற லண்டனிலுள்ள ராயல் இசைக் கல்லூரியில் சூஸீ சேர்ந்தாள். பிரபலமான, ஸ்பானிய யாழ் இசைக்கலைஞரிடம் நான்கு வருடங்கள் பயின்றாள். மேலும், ஒரு வருடம் பாரிஸ் இசைக்கல்லூரியில் பயின்றாள். யாழை மீட்டவும், பியானோ கற்றுக்கொடுக்கவும் டிப்ளமோ பெற்றாள். இசையில் சிறப்புப் பட்டமும் பெற்றாள்.

லண்டனிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக்கு செல்ல ஆரம்பித்தாள் சூஸீ. சாட்சிகள் ஒருவரோடு ஒருவர் உண்மையான அன்பையும் ஒருவர் நலனில் மற்றவர் கவனம் செலுத்துகிறதையும் அவள் கண்டாள். படிப்படியாக, யெகோவாவுக்கான அன்பு அவளில் வளர்ந்தது. அவருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற வைராக்கியத்தால் அதற்கான வழிகளை அவள் நாடினாள். இது ஒப்புக்கொடுத்தலுக்கும் முழுக்காட்டுதலுக்கும் வழிநடத்தியது. “சங்கீதத்துக்காக வாழ்க்கையவே அர்ப்பணிக்கறதுங்கறது சகஜந்தான். அதனால, ஒப்புக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைங்கறது எனக்கொன்னும் புதுசில்ல” என சூஸீ குறிப்பிடுகிறாள். இயேசுவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிக்க ஆரம்பித்தாள். இதனால் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அவள் செலவிட்டுவந்த நேரம் கணிசமாக குறைந்தது.—மத்தேயு 24:14; மாற்கு 13:10.

இப்போது, இசை நிகழ்ச்சிகளுக்காக நேரம் போதாமல் இருப்பதை அவள் எப்படி கருதுகிறாள்? “இசைத்துப் பழகுவதற்கு நேரம் கிடைக்காததால் சிலசமயங்களில் நான் எரிச்சலடைவதுண்டு. ஆனால், என் இசைக்கருவிகளை நான் இன்னும் வாசிக்கத்தான் செய்கிறேன். இசையை ரசிப்பதில் இன்பமும் காண்கிறேன். யெகோவாவிடமிருந்து கிடைத்த வெகுமதியே இசை. அவருடைய சேவைக்கு என் வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பதால் இப்பொழுதெல்லாம் இசை சுவாரஸியத்தைக் கூட்டுகிறது” என அவள் ஒத்துக்கொள்கிறாள்.—மத்தேயு 6:33.

கடவுளை துதிக்கும் இசை

ஆல்பர்ட், சூஸீயோடு சேர்ந்து சுமார் 60 லட்சம் யெகோவாவின் சாட்சிகள், யெகோவா தேவனை இசையால் துதிக்கின்றனர். 234 தேசங்களில் உள்ள ராஜ்ய மன்றங்களில் நடக்கும் தங்கள் கிறிஸ்தவ கூட்டங்களில் எப்போது சாத்தியமோ அப்போது அவர்கள் யெகோவாவுக்கு பாடல்களை பாடுகின்றனர். கூட்டங்களை ஆரம்பிக்கும்போதும் முடிக்கும்போதும் அவர்கள் இவ்வாறு செய்கின்றனர். யெகோவா தேவனை துதிக்கும் பைபிள் சார்ந்த பாடல் வரிகள் அழகிய ராகங்களில் பாடப்படுகின்றன.

யெகோவா நம் நலனில் அக்கறையுள்ள கடவுள் என்பதை, கூட்டத்திற்கு வந்திருக்கும் அனைவரும் உரத்த குரலில் உணர்ச்சி ததும்ப பாடுகின்றனர் (பாட்டு 44). யெகோவாவுக்கு துதிப்பாடலை அவர்கள் பாடுகின்றனர் (பாட்டு 190). கிறிஸ்தவ சகோதரத்துவம், கிறிஸ்தவ வாழ்க்கை, கிறிஸ்தவ பண்புகள் இவற்றின் சந்தோஷத்தையும் பொறுப்புகளையும் அவர்கள் பாட்டுகள் உணர்த்துகின்றன. ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவைச் சேர்ந்த சாட்சிகள், இந்த ராகங்களை இயற்றும்போது பல நாட்டு இசைப் பாணியை சேர்த்திருப்பது அவற்றை இன்னும் இனிமையாக்குகிறது. b

“[யெகோவாவுக்குப்] புதுப்பாட்டைப் பாடுங்கள். பூமியின் குடிகளே, எல்லாரும் [யெகோவாவைப்] பாடுங்கள். [யெகோவாவைப்] பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.” சங்கீதக்காரரின் நாளில் எழுதப்பட்ட, மிக நேர்த்தியான வணக்கப்பாடலின் ஆரம்ப வார்த்தைகளே இவை. “ஒவ்வொரு நாளும் அவருடைய இரட்சிப்பை சுவிசேஷமாய் அறிவியுங்கள். ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.” (சங்கீதம் 96:1-3) உங்களுடைய பிராந்தியத்தில், யெகோவாவின் சாட்சிகள் இதைத்தான் செய்கின்றனர். இந்தத் துதிப்பாடலில் சேர்ந்து கொள்ளும்படி உங்களையும் அவர்கள் அழைக்கிறார்கள். அவர்களுடைய ராஜ்ய மன்றங்களில் நீங்கள் வெகுவாய் வரவேற்கப்படுவீர்கள். யெகோவாவுக்குப் பிரியமான இசையால் அவரை எப்படி துதிக்கலாம் என்பதை நீங்கள் அங்கே கற்றுக்கொள்ள முடியும்.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் ட்ராக்ட் சொஸைட்டி ஆஃப் நியூ யார்க்கால் பிரசுரிக்கப்பட்டது.

b யெகோவாவுக்கு துதிகளைப் பாடுங்கள் என்ற புத்தகத்தில் இந்த பாட்டுகள் உள்ளன. உவாட்ச் டவர் பைபிள் அண்ட் ட்ராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 28-ன் படம்]

யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுதல்