Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“கிறிஸ்தவன்”—அர்த்தம் அழிந்து வருகிறதா?

“கிறிஸ்தவன்”—அர்த்தம் அழிந்து வருகிறதா?

“கிறிஸ்தவன்”—அர்த்தம் அழிந்து வருகிறதா?

கிறிஸ்தவனாக இருப்பதன் அர்த்தம் என்ன? நீங்கள் என்ன பதிலளிப்பீர்கள்? பல நாடுகளில் உள்ள மக்களிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. இதோ! அவர்கள் அளித்த சில பதில்கள்:

“இயேசுவைப் பின்பற்றுவதும் அவருடைய வழிகளில் நடப்பதுமே.”

“நல்லவர்களாக இருப்பதும் மற்றவர்களுக்கு உதவுவதுமே.”

“ஆண்டவராகவும் இரட்சகராகவும் இயேசுவை ஏற்றுக்கொள்வதே.”

“சர்ச்சுக்குப் போவது, ஜெபமாலை உருட்டுவது, நற்கருணை எடுத்துக்கொள்வதே.”

“சர்ச்சுக்குப் போனால்தான் கிறிஸ்தவன் என்பதை நான் நம்புவதில்லை.”

அகராதிகள்கூட, பற்பல விளக்கங்களைத் தந்து குழப்பத்தில் மூழ்கடிக்கின்றன. பார்க்கப்போனால், “கிறிஸ்தவன்” என்ற பதத்திற்கு பத்து வித்தியாசமான அர்த்தங்களை ஓர் அகராதி கொடுக்கிறது. “இயேசு கிறிஸ்துவின் மதத்தைச் சேர்ந்தவர் அல்லது அதை விசுவாசிப்பவர்” என்பதிலிருந்து “கண்ணியமானவர் அல்லது பண்புள்ளவர்” என்பது வரை பல அர்த்தங்களைத் தருகிறது. எனவேதான், கிறிஸ்தவன் என்ற அர்த்தத்தை விளக்குவதில் அநேகருக்கு சிரமம் இருக்கிறது. ஆனால், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

முற்போக்கு சிந்தனை

இன்று, கிறிஸ்தவர்களென சொல்லிக் கொள்பவர்கள் மத்தியிலும் வித்தியாசமான கருத்துகள் நிலவுகின்றன. ஏன், ஒரே சர்ச்சை சேர்ந்தவர்கள் மத்தியிலும் இந்த வித்தியாசத்தைக் காணலாமே. பைபிள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டது, பரிணாமக் கொள்கை, அரசியலில் சர்ச் ஈடுபடுவது, ஒருவருடைய விசுவாசத்தை பிரசங்கிப்பது போன்ற விஷயங்களில் அவர்களின் கருத்துகள் வித்தியாசப்படுகின்றன. கருச்சிதைவு, ஓரினப்புணர்ச்சி, திருமணமாகாமலே சேர்ந்து வாழ்வது போன்ற ஒழுக்க நெறிமுறைகள் அடிக்கடி காரசாரமான விவாதத்திற்கு உள்ளாகின்றன. இந்தப் போக்கிற்கு காரணம் சர்ச்சுகளின் முற்போக்கான கருத்துகளே.

உதாரணமாக, ஒரு புராட்டஸ்டண்ட் சர்ச்சின் விசாரணைக் குழு, “ஓரினப்புணர்ச்சியில் வெளிப்படையாக ஈடுபடும் ஒரு மூப்பரை, அதன் செயலாட்சிக் குழுவிற்கு தேர்ந்தெடுக்க” சர்ச்சுக்கு உரிமை இருப்பதாக சமீபத்தில் கருத்து தெரிவித்தது என்று கிறிஸ்டியன் செஞ்சுரி பத்திரிகை அறிவிக்கிறது. இரட்சிப்பிற்கு இயேசுவில் விசுவாசம் வைப்பது அப்படியொன்றும் முக்கியமானதல்ல என சில இறையியலாளர்களும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். யூதர்களும், முஸ்லீம்களும், மற்றவர்களும் “[கிறிஸ்தவர்களைப் போலவே] பரலோகத்திற்கு போவார்கள்” என அந்த இறையியலாளர்கள் நம்புவதாக த நியூ யார்க் டைம்ஸ் அறிவிக்கிறது.

முதலாளித்துவத்தை ஆதரிக்கும் மார்க்ஸிஸ கொள்கையாளரையோ அல்லது சர்வாதிகாரத்தை முன்னேற்றுவிக்கும் மக்களாட்சி கோட்பாட்டாளரையோ அல்லது காடுகளை அழிப்பதை ஆதரிக்கும் சுற்றுச்சூழல் காப்பாளரையோ உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? “அந்த நபர் உண்மையிலேயே ஒரு மார்க்ஸிஸ கொள்கையாளராகவோ அல்லது மக்களாட்சி கோட்பாட்டாளராகவோ அல்லது சுற்றுச்சூழல் காப்பாளராகவோ இருக்க முடியாது” என்றே நீங்கள் சொல்வீர்கள். நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரியே. இருந்தாலும், கிறிஸ்தவர்களென இன்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் பல்வேறு கருத்துகளை நம்புகின்றனர். இவர்களிடம், ஒன்றுக்கொன்று முற்றிலும் முரணான நம்பிக்கைகளையும் கிறிஸ்தவத்தை தோற்றுவித்தவரான இயேசு கிறிஸ்து கற்பித்ததற்கு எதிரான காரியங்களையும்தான் நீங்கள் காண்பீர்கள். இவ்வாறான பலதரப்பட்ட கருத்துகள் இவர்களுடைய கிறிஸ்தவத்திற்கு என்ன முத்திரையை பதிக்கிறது?—1 கொரிந்தியர் 1:10.

அந்தந்த காலத்திற்கேற்ப கிறிஸ்தவ போதகங்களை மாற்றிக்கொள்ளும் இந்தப் போக்கிற்கு நீண்ட சரித்திரம் உண்டு. அதைப் பற்றி நாம் சிந்திப்போம். இப்படிப்பட்ட மாற்றங்களை கடவுளும் இயேசு கிறிஸ்துவும் எப்படி கருதுகின்றனர்? கிறிஸ்துவில் வேர்கொண்டிராத போதகங்களை கற்பிக்கும் சர்ச்சுகள் தங்களை உண்மையிலேயே கிறிஸ்தவர்கள் என அழைத்துக்கொள்ள முடியுமா? இந்தக் கேள்விகள் அடுத்து வரும் கட்டுரையில் சிந்திக்கப்படும்.