Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கூச்ச சுபாவத்திற்கு குட்பை

கூச்ச சுபாவத்திற்கு குட்பை

வாழ்க்கை சரிதை

கூச்ச சுபாவத்திற்கு குட்பை

ரூத் எல். அல்ரிக் சொன்னது

பொங்கி வரும் அழுகையை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அந்தப் பாதிரியின் வீட்டுவாசல்படியிலேயே அழ ஆரம்பித்து விட்டேன். உவாட்ச் டவர் பைபிள் அண்ட் ட்ராக்ட் சொஸைட்டியின் முதல் தலைவராக சேவை செய்த சார்ல்ஸ் டி. ரஸலைப் பற்றி பொய்க் குற்றச்சாட்டுகளை அவர் சரமாரியாக பொழிந்தார். சிறு பெண்ணாக இருந்த நான் ஜனங்களை சந்தித்து பேசியது எப்படி என்பதை சொல்கிறேன்.

எனது குடும்பம் கடவுள்பக்தி மிக்கது. அ.ஐ.மா.-வில் உள்ள நெப்ரஸ்கா எனும் இடத்தில் ஒரு பண்ணையில் 1910-ல் பிறந்தேன். ஒவ்வொரு நாள் காலையிலும் இரவிலும் உணவிற்குப் பிறகு குடும்பமாக பைபிளை படிப்பது எங்கள் வழக்கம். எங்கள் பண்ணையிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வின்சைட் எனும் சிறிய டவுனில் மெதடிஸ்ட் சர்ச் ஒன்று இருந்தது. அப்பா, அந்த சர்ச்சில் ஸண்டே-ஸ்கூல் நடத்தி வந்தார். எங்களிடம் ஒரு குதிரை வண்டி இருந்தது. அதன் ஜன்னல்களுக்கு திரை போட்டு நன்றாக மூடியிருந்ததால், வெயிலோ மழையோ ஒவ்வொரு ஞாயிறு காலையும் நாங்கள் சர்ச்சுக்கு போய் வந்தோம்.

எனக்கு அப்போது எட்டு வயது. என் தம்பி குழந்தையாக இருந்தான். அவனுக்கு போலியோ வந்தது. அதனால், சிகிச்சைக்காக அயோவா என்ற மாகாணத்திலுள்ள ஆஸ்பத்திரிக்கு அம்மா அவனை கொண்டு சென்றார்கள். எவ்வளவுதான் அருமையாக கவனித்தபோதிலும், அவனை காப்பாற்ற இயலவில்லை. இதற்கிடையே, அயோவாவில் இருக்கும்போது, பைபிள் மாணாக்கர்கள் என் அம்மாவை சந்தித்தார்கள். யெகோவாவின் சாட்சிகள் அப்போது அப்படித்தான் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் பல விஷயங்களைப் பற்றி பேசினார்கள். பைபிள் மாணாக்கர்களின் கூட்டங்கள் சிலவற்றிற்கும் அம்மா அந்தப் பெண்மணியோடு சேர்ந்து சென்றார்கள்.

அம்மா வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வேதாகமங்களில் படிப்புகள் என்ற புத்தகத்தின் பல தொகுப்புகளையும் கொண்டு வந்தார்கள். இந்தப் புத்தகங்கள் உவாட்ச் டவர் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டவை. பைபிள் மாணாக்கர்கள் சத்தியத்தை போதிக்கிறார்கள் என்பதை அம்மா வெகு விரைவில் தெரிந்துகொண்டார்கள். மனித ஆத்துமா அழியாதது, துன்மார்க்கர் நித்தியமாக வாதிக்கப்படுவார்கள் போன்ற போதகங்கள் உண்மையல்ல என்பதையும் கற்றுக்கொண்டார்கள்.—ஆதியாகமம் 2:7; பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4.

ஆனால், அப்பாவுக்கு இதில் கொஞ்சமும் இஷ்டமில்லை. பைபிள் மாணாக்கர்களின் கூட்டங்களுக்கு அம்மா செல்வதை அப்பா தடுத்தார். என்னையும் அண்ணன் கிளாரன்ஸையும் தொடர்ந்து சர்ச்சுக்கு கூட்டிக்கொண்டு போவார். ஆனால், அப்பா வீட்டில் இல்லாதபோது, அம்மா எங்களுக்கு பைபிள் விஷயங்களை சொல்லிக் கொடுப்பார்கள். இதனால், சர்ச்சில் சொல்லிக் கொடுப்பவற்றிற்கும் பைபிள் மாணாக்கர்களின் போதகங்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை எங்களால் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது.

நானும் அண்ணன் கிளாரன்ஸும் தவறாமல் சன்டே ஸ்கூலுக்கு சென்றோம். அண்ணன் கேள்விகள் கேட்டுக் கேட்டு அந்த டீச்சரை திணறடிப்பார். நாங்கள் வீட்டிற்கு வந்ததும், அம்மாவிடம் சொல்வோம். இந்த விஷயங்களின் பேரில் நீண்ட நேரம் கலந்து பேசுவோம். முடிவில், நான் சர்ச்சுக்குப் போவதை நிறுத்திவிட்டு, அம்மாவோடு சேர்ந்து பைபிள் மாணாக்கர்களின் கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தேன். கிளாரன்ஸும் சீக்கிரம் இதே முடிவை எடுத்தார்.

கூச்ச சுபாவத்தோடு போராட்டம்

செப்டம்பர் 1922-ல், பைபிள் மாணாக்கர்கள் நடத்திய ஒரு மாநாட்டிற்கு நானும் அம்மாவும் சென்றோம். அது மறக்க முடியாத ஒரு மாநாடு. ஒஹையோவிலுள்ள சீடர் பாய்ன்ட்டில் நடந்தது. அந்த மாநாட்டிற்கு 18,000-க்கும் அதிகமானோர் வந்திருந்தனர். அப்போது உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைவராக இருந்தவர் ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்ட். அவர் அந்த மாநாட்டிற்கு வந்திருந்தவர்களை ஊக்குவித்து, “ராஜாவையும் ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள்” என்று சொன்னார். இந்த வார்த்தைகளை அவர் சொல்லச் சொல்ல, அவை எழுதப்பட்ட பெரிய விளம்பர பேனர் விரிந்தது. அந்தக் காட்சி இன்னும் என் மனக்கண் முன் நிற்கிறது. இது என் நெஞ்சைத் தொட்டது. கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டியதன் அவசியத்தையும் நான் உணர்ந்தேன்.—மத்தேயு 6:9, 10; 24:14.

1922 முதல் 1928 வரை நடந்த மாநாடுகளில், தொடர்ச்சியாக பல உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன. அந்தச் செய்திகள் துண்டுப்பிரதிகளாக அச்சிடப்பட்டன. அவற்றை உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு பைபிள் மாணாக்கர்கள் விநியோகித்தனர். நானும் இந்தத் துண்டுப்பிரதிகளை வீடு வீடாக கொண்டு போய் கொடுத்தேன். நான் தட்டைக்குச்சி போல் ஒல்லியாகவும் உயரமாகவும் இருந்ததால், விசுக் விசுக்கென்று இங்குமங்கும் ஓடுவதைப் பார்த்து, [வேட்டை நாயினத்தைச் சேர்ந்த] க்ரேஹவுண்ட் என்று செல்லமாக அழைப்பார்கள். இந்த வேலையை செய்வதில் எனக்குப் படுகுஷி. வெறுமனே துண்டுப்பிரதியைக் கொடுத்துவிட்டு வருவதற்கும், ஒவ்வொரு வீடாக சென்று, தனிப்பட்ட முறையில் அவர்களை சந்தித்து கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

ஒவ்வொரு வருடமும், வீட்டிற்கு உறவினர்கள் பலரை கூப்பிடுவது அம்மாவுக்கு வழக்கம். எனக்கோ கூச்ச சுபாவம் ஜாஸ்தி. அந்த சமயங்களில் நான் என் பெட்ரூமை விட்டு வெளியே வரவேமாட்டேன். ஒருமுறை, குடும்ப ஃபோட்டோ எடுக்க வேண்டுமென அம்மா விரும்பினார்கள். அதனால் என்னை வெளியே வரும்படி கூப்பிட்டார்கள். நானோ வெளியே வராமல் முரண்டுபிடிக்க, அம்மா என்னை பெட்ரூமிலிருந்து தரதரவென இழுத்துக்கொண்டு வந்தார்கள். அந்தளவுக்கு எனக்கு கூச்ச சுபாவம்.

இருந்தாலும், ஒருநாள் முழு தீர்மானத்தோடு என்னுடைய பையில் சில பைபிள் பிரசுரங்களை வைத்துக்கொண்டு ஊழியத்திற்கு தயாரானேன். “என்னால் செய்யவே முடியாது” என மனம் அடிக்கடி சொல்லியது, ஆனால், அடுத்த கணமே, “நான் கட்டாயம் செய்ய வேண்டும்” என என்னை நானே தேற்றிக்கொண்டேன். ஒருவழியாக, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். பிறகு, இதற்காக நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஊழியத்தை செய்யும்போதல்ல, ஆனால் அதைச் செய்து முடித்த பிறகு எனக்கு அளவிலா திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைத்தது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட பாதிரியாரை நான் சந்தித்ததும், அவர் வீட்டிலிருந்து அழுதுகொண்டே வந்ததும் இந்த சந்தர்ப்பத்தில்தான். காலப்போக்கில், யெகோவாவின் உதவியோடு, ஜனங்களை அவர்கள் வீடுகளில் சந்தித்து என்னால் தைரியமாக பேச முடிந்தது. அதனால் என் சந்தோஷம் நாளுக்குநாள் அதிகரித்தது. பின்னர், 1925-ல், நான் யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றேன்.

முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தல்

நான் 18 வயதாய் இருக்கும்போது, என் பெரியம்மாவின் சொத்தில் எனக்கு கிடைத்த பணத்தில் ஒரு கார் வாங்கினேன். பயனியர் சேவையையும் ஆரம்பித்தேன். முழுநேர ஊழியம் அவ்வாறே அழைக்கப்படுகிறது. இரண்டு வருடங்களுக்குப்பின், அதாவது 1930-ல், நானும் என்னுடைய பயனியர் பார்ட்னரும் ஊழிய நியமிப்பைப் பெற்றோம். இதற்கிடையே என் அண்ணன் கிளாரன்ஸும் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்திருந்தார். வெகு சீக்கிரமே, நியூ யார்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் தலைமையகத்தில், அதாவது பெத்தேலில் சேவை செய்வதற்காக அழைப்பு அவருக்கு வந்தது.

அந்த சமயத்தில் என் பெற்றோர் பிரிந்தனர். எனவே, நானும் அம்மாவும் இருப்பதற்கு வசதியாக ஒரு ட்ரெய்லரை வாங்கினோம். கிரேட் டிப்ரஷன் என்று அழைக்கப்பட்ட மாபெரும் பொருளாதார மந்தம் ஐக்கிய மாகாணங்களை உலுக்கிய சமயம் அது. பயனியர் சேவையில் தொடருவதென்பதே மிகக் கடினமாக இருந்தது. ஆனால், நாங்களோ சோர்ந்துவிடாமல் தொடர்ந்து செய்ய உறுதியாய் இருந்தோம். பைபிள் பிரசுரங்களுக்குப் பதிலாக கோழி, முட்டை, காய்கறிகள், பழைய பேட்டரிகள், கழித்துக்கட்டிய அலுமினியம் போன்றவற்றை பெற்றோம். பழைய பேட்டரிகளையும் அலுமினியத்தையும் விற்றுப் பணமாக மாற்றினோம். காருக்கு தேவையான பெட்ரோலுக்கும் மற்ற செலவுகளுக்கும் அந்தப் பணம் உதவியது. காருக்கு கிரீஸ் போடுவது, ஆயில் மாற்றுவது போன்ற வேலைகளை நானே செய்யக் கற்றுக்கொண்டேன். அதனால் ஓரளவு பணத்தை மிச்சப்படுத்த முடிந்தது. எங்களுக்கு வந்த எல்லா தடைகளையும் தாண்டுவதற்கு யெகோவா எங்களுக்கு உதவினார். இவ்வாறு அவருடைய வாக்குறுதிகள் அனைத்தும் பலித்தன.—மத்தேயு 6:33.

மிஷனரி நியமிப்புகள்

1946-ல், உவாட்ச் டவர் பைபிள் கிலியட் பள்ளிக்கு வரும்படியான அழைப்பு எனக்கு வந்தது. இது, நியூ யார்க்கிலுள்ள சவுத் லான்ஸிங்கிற்கு அருகே இருந்தது. அதுவரை, நானும் அம்மாவும் 15-க்கும் அதிகமான ஆண்டுகள் பயனியர் ஊழியம் செய்திருந்தோம். இருந்தாலும், மிஷனரி ஊழியத்திற்கான பயிற்சி பெறும் இந்த வாய்ப்பை நான் தவறவிட அம்மா விரும்பவில்லை. எனவே, கிலியட் பள்ளிக்கு செல்லும் அந்த சிலாக்கியத்தை ஏற்றுக்கொள்ள என்னை உற்சாகப்படுத்தினார்கள். பயிற்சி முடிந்ததும், நானும் இல்லினாய்ஸில் உள்ள பியோரியாவைச் சேர்ந்த மார்த்தா ஹெஸ் என்ற சகோதரியும் பயனியர் பார்ட்னராக நியமிக்கப்பட்டோம். நாங்கள் இருவரும் இன்னும் இரண்டு சகோதரிகளும் ஒஹையோவிலுள்ள க்ளீவ்லாந்திற்கு செல்ல நியமிப்பு பெற்றோம். வெளிநாட்டிற்கு செல்ல நியமிப்பு வரும்வரை அங்கு ஒரு வருடம் ஊழியம் செய்தோம்.

நாங்கள் எதிர்பார்த்திருந்த ஊழிய நியமிப்பு 1947-ல் கிடைத்தது. நானும் மார்த்தாவும் ஹவாய்க்கு செல்ல நியமிக்கப்பட்டோம். இந்த தீவுகளில் சென்று குடியேறுவது சுலபம். ஆகையால், அதற்கு அருகிலுள்ள ஹானலுலு என்ற நகரத்தில் அம்மா குடியேறினார்கள். அம்மாவின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. என்னுடைய மிஷனரி ஊழியத்தையும் செய்துகொண்டு, அம்மாவையும் கவனித்துக் கொண்டேன். 1956-ல் ஹவாயில் அம்மா இறந்தார்கள். அப்போது அவர்களுக்கு வயது 77. நாங்கள் அங்கே சென்றபோது, ஹவாயில் சுமார் 130 சாட்சிகளே இருந்தனர். ஆனால், அம்மா இறந்தபோதோ, ஆயிரத்துக்கும் அதிகமான சாட்சிகள் இருந்தனர்.

ஆகவே, எங்களுடைய ஊழிய நியமிப்பு மாற்றப்பட்டது. ஜப்பானுக்கு செல்லும்படி உவாட்ச் டவர் சொஸைட்டியிடமிருந்து கடிதத்தைப் பெற்றோம். இந்த வயதில் ஜப்பானிய மொழியை கற்றுக்கொள்ள முடியுமா என்பதே எங்களுக்குக் கவலை. எனக்கு அப்போது வயது 48, மார்த்தா என்னைவிட நான்கு வருடங்கள் இளையவள். ஆனால், இந்த விஷயத்தை நாங்கள் யெகோவாவின் கரங்களில் ஒப்புவித்துவிட்டு, அந்த நியமிப்பை ஏற்றுக்கொண்டோம்.

1958-ல், நியூ யார்க் நகரத்திலுள்ள யாங்கீ ஸ்டேடியம் மற்றும் போலோ க்ரெளண்ட்ஸில் நடந்த சர்வதேச மாநாட்டிற்கு நாங்கள் சென்றோம். அந்த மாநாடு முடிந்ததும் டோக்கியோவுக்கு செல்ல கப்பல் ஏறினோம். யோகஹாமா துறைமுகத்தை நாங்கள் நெருங்கிக்கொண்டிருந்தோம். அப்போது கடும்புயலால் நாங்கள் அலைக்கழிக்கப்பட்டோம். ஆனால், ஒருவழியாக கரை சேர்ந்தபோது, டான் ஹாஸ்லெட்டையும் மேபல் ஹாஸ்லெட்டையும், லாய்ட் பாரியையும் மெல்பா பாரியையும் சந்தித்தோம். அப்போது ஜப்பானில் வெறும் 1,124 சாட்சிகளே இருந்தனர்.

அங்கு சென்று சேர்ந்ததுதான் தாமதம், உடனேயே ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம். வீட்டுக்கு வீடு ஊழியத்துக்கும் சென்றோம். ஜப்பானிய மொழியில் எப்படி பிரசங்கிப்பது என்பதை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டோம். அதை அப்படியே வாசித்துவிடுவோம். அதற்கு வீட்டுக்காரர்கள் “யோரோஷீயீ டேசூ” அல்லது “கிகோ டேசூ” என்று சொல்வார்கள். அதற்கு, “நன்றாக இருந்தது” அல்லது “அருமையாக இருந்தது” என அர்த்தமாம். ஆனால் வீட்டுக்காரருக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், இதே வார்த்தைகளைத்தான் மறுப்பு தெரிவிப்பதற்கும் பயன்படுத்தினார்கள். அதனால், தொனியில் அல்லது ஒருவருடைய முக தோரணையிலிருந்துதான் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும். எனவே, இவற்றை தெரிந்துகொள்வதற்கு எங்களுக்கு நேரம் எடுத்தது.

இதயத்துக்கு இதமான அனுபவங்கள்

மொழிப் பிரச்சினை இருந்தபோதிலும், ஒருநாள் மீட்சூபீஷீ கம்பெனியின் தங்கும் விடுதிக்குச் சென்றேன். அங்கே, இருபது வயது பெண்ணை சந்தித்தேன். அவள் பைபிளைப் படித்து விரைவில் முன்னேற்றம் செய்தாள். 1966-ல் முழுக்காட்டுதல் பெற்றாள். ஒரு வருடத்திற்குப்பின், அவள் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தாள். விரைவில் விசேஷப் பயனியராகவும் நியமிக்கப்பட்டாள். அதுமுதற்கொண்டு, இந்த ஊழிய சிலாக்கியத்தில் இருந்து வருகிறாள். இளம்பிராயத்திலிருந்தே அவள் தன் நேரத்தையும் சக்தியையும் முழுநேர ஊழியத்தில் பயன்படுத்தியது எனக்கு ஊக்கத்தை அளித்தது.

கிறிஸ்தவமல்லாத சமுதாயத்தில் வாழும் மக்கள் பைபிள் சத்தியத்திற்காக ஒரு நிலைநிற்கை எடுப்பதென்பது உண்மையிலேயே மிகப் பெரிய சவால். என்றாலும், ஆயிரக்கணக்கான ஆட்கள் இந்த சவாலை சமாளித்து இருக்கின்றனர். நான் பைபிள் படிப்பு நடத்திய ஆட்களில் பலரும் இப்படிப்பட்ட பிரச்சினைகளை சமாளித்திருக்கின்றனர். ஜப்பானியர்களின் வீடுகளில் பாரம்பரியமாக காணப்படும் விலையுயர்ந்த புத்தமத, ஷின்டோமத பீடங்களையும் அவர்கள் தூக்கியெறிந்து விட்டனர். இறந்த முன்னோர்களை அவமதிக்கும் செயல் இது என உறவினர்கள் சில சமயங்களில் தவறாக கருதினர். என்றாலும், சத்தியத்தில் புதிதாக வந்த அவர்கள் தைரியமாக இந்த நடவடிக்கையை எடுத்தார்கள். பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட பொருட்களை எரித்த முதல் நூற்றாண்டுக் கிறிஸ்தவர்களின் தைரியமான செயலை இது நினைவுக்கு கொண்டு வருகிறது.—அப்போஸ்தலர் 19:18-20.

என்னுடைய பைபிள் மாணவி ஒருத்தியின் தைரியமான செயல் இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அவள் ஒரு குடும்பப் பெண். அவளுடைய குடும்பத்தினர் டோக்கியோவிலிருந்து மாறிச்செல்ல திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். புதிய வீட்டில் பொய்மதத்தைச் சேர்ந்த எந்தப் பொருளுமே இருக்கக்கூடாது என அவள் விரும்பினாள். எனவே, தன் விருப்பத்தை கணவனிடம் சொன்னாள். அவரும் அதற்கு ஒத்துக்கொண்டார். அதை அவள் என்னிடம் மிக சந்தோஷமாக சொன்னாள். ஆனால், அவள் பேக் பண்ணி வைத்த ஒரு பெரிய, மிக விலையுயர்ந்த பளிங்காலான அலங்கார பூச்சாடி பற்றி அவளுக்கு திடீரென ஞாபகம் வந்தது. அது வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் என்பதால் அந்தப் பூச்சாடியை அவள் எப்போதோ வாங்கியிருந்தாள். இப்போதோ, பொய்மத வணக்கத்தோடே அதற்கு ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகம் அவளுக்கு எழும்பியது. எனவே, அதை ஒரு சுத்தியலால் உடைத்து, தூர எறிந்துவிட்டாள்.

பொய் வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட பொருட்களை, அவை எவ்வளவுதான் விலையுயர்ந்தவையாய் இருந்தாலும்சரி, தூக்கியெறிய விருப்பம் காட்டியது இந்தப் பெண்மணி மட்டுமல்ல. இன்னும் பலரும் அப்படிப்பட்ட மனநிலையைக் காண்பித்தனர். அதோடு, யெகோவாவுக்கு சேவை செய்யும் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க தைரியத்தையும் காண்பித்தனர். இது எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிமிக்க, திருப்தியளிக்கும் அனுபவம். ஜப்பானில் 40-க்கும் அதிகமான ஆண்டுகள் மிஷனரி ஊழியத்தை சந்தோஷமாக செய்து வந்திருக்கிறேன். இதற்காக நான் தவறாமல் யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறேன்.

நவீன கால “அற்புதங்கள்”

எழுபதற்கும் அதிகமான ஆண்டுகள் நான் முழுநேர ஊழியத்தை செய்து வந்திருக்கிறேன். என்னுடைய முழுநேர ஊழியத்தைப் பற்றி நான் யோசித்துப் பார்க்கும்போது, நவீன கால அற்புதங்களாகத் தோன்றும் சிலவற்றைக் குறித்து நான் வியந்திருக்கிறேன். கூச்ச சுபாவம் உடைய இளம்பெண்ணாக, அநேகர் கேட்க விரும்பாத ஒரு செய்தியை, அதாவது ராஜ்ய செய்தியை மக்களிடம் சென்று பேசுவதில் என் வாழ்க்கை முழுவதையுமே செலவழிப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டேன். ஆனால், நான் மட்டுமல்ல, என்னைப் போலவே நூற்றுக்கணக்கானவர்கள் இப்படி செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லாருமே நன்கு திறமையோடு செய்திருக்கின்றனர். அதனால்தான், 1958-ல் நான் ஜப்பானுக்கு வந்தபோது ஆயிரத்துக்கும் சற்று அதிகமான ஆட்களே இருந்த சாட்சிகள், இன்று 2,22,000-க்கும் அதிகமாக ஆகியிருக்கின்றனர்!

நானும் மார்த்தாவும் ஜப்பானுக்கு முதன்முதலாக வந்தபோது, டோக்கியோவிலுள்ள கிளை அலுவலகத்தில் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 1963-ல், ஆறு மாடி கட்டிடம் அதே இடத்தில் புதிதாக கட்டப்பட்டது. அதுமுதல், அங்குதான் நாங்கள் இருக்கிறோம். 1963 நவம்பரில், கிளை அலுவலகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது, அங்கு ஆஜராயிருந்த 163 பேரில் நாங்களும் இருந்தோம். எங்கள் கிளை அலுவலக கண்காணியாகிய லாய்ட் பாரி பேச்சு கொடுத்தார். அப்போது ஜப்பானில் 3,000 சாட்சிகள் இருந்தனர்.

ராஜ்ய பிரசங்கிப்பு வேலை படுவேகமாக வளர்வதைப் பார்ப்பது என்னே மகிழ்ச்சி! 1972-ல், நூமாஸூ நகரத்தில் விரிவுபடுத்தப்பட்ட, புதிய கிளை அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. அப்போது, 14,000-க்கும் அதிகமான சாட்சிகள் இருந்தனர். ஆனால், 1982-க்குள், 68,000-க்கும் அதிகமான ராஜ்ய அறிவிப்பாளர்கள் ஜப்பானில் இருந்தனர். எபீனா நகரத்தில் இன்னும் பெரிய கிளை அலுவலகம் கட்டப்பட்டது. இது டோக்கியோவிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

இதற்கிடையில், டோக்கியோ நகரத்தின் மையத்தில் இருந்த பழைய கிளை அலுவலகக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. 40 அல்லது 50 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஜப்பானில் ஊழியம் செய்த 20-க்கும் அதிகமான மிஷனரிகளின் இல்லமாக அது மாறியது. பல வருடங்களாக என் பயனியர் பார்ட்னராக இருந்த மார்த்தா ஹெஸ்-ம் நானும் அந்த இருபது பேரில் அடங்குவோம். ஒரு டாக்டரும் நர்ஸாக இருக்கும் அவருடைய மனைவியும் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் எங்களை அன்பாக கவனித்துக் கொள்கிறார்கள். சமீபத்தில், இன்னொரு நர்ஸும் எங்கள் இல்லத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பகல் நேரத்தில் வரும் கிறிஸ்தவ சகோதரிகள் இந்த நர்ஸுகளுக்கு உதவி செய்கின்றனர். எபீனாவில் உள்ள பெத்தேல் குடும்பத்திலிருந்து இரண்டிரண்டு பேராக வருவார்கள். எங்களுக்காக சமைத்து, இல்லத்தை சுத்தமும் செய்கிறார்கள். உண்மையிலேயே யெகோவா எங்கள்மீது அதிகமதிகமான நன்மைகளை பொழிந்திருக்கிறார்.—சங்கீதம் 34:8, 10.

போன நவம்பரில், என்னுடைய மிஷனரி ஊழியத்தின் சிறப்பு அம்சம் நிகழ்ந்தது. நீண்டகால மிஷனரிகளான நாங்கள் இப்போது தங்கியிருக்கும் கட்டிடத்தின் பிரதிஷ்டை நடந்து 36 வருடங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தது. 1999, நவம்பர் 13-ம் தேதி, எபீனாவிலுள்ள உவாட்ச் டவர் பைபிள் அண்ட் ட்ராக்ட் சொஸைட்டியின் விரிவுபடுத்தப்பட்ட ஜப்பான் கிளை அலுவலகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நீண்ட காலமாக சாட்சிகளாக இருக்கும் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். இவர்கள் 37 நாடுகளிலிருந்து வந்திருந்தனர். அங்கு ஆஜராயிருந்த 4,486-க்கும் அதிகமானவர்களில் நானும் ஒருத்தி. இப்போது, சுமார் 650 பேர் இந்தப் பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களாக இருக்கின்றனர்.

பைபிள் செய்தியை வீடு வீடாகப் போய் சொல்லக் கூச்சப்பட்ட நாள்முதல், இதுவரை கிட்டத்தட்ட 80 வருடங்களை ஊழியத்தில் செலவழித்திருக்கிறேன். இந்த காலப்பகுதியினூடே, யெகோவா எனக்கு மிகச் சிறந்த பெலனாய் இருந்து வந்திருக்கிறார். என்னுடைய கூச்ச சுபாவத்துக்கு குட்பை சொல்ல அவர் எனக்கு பெரிதும் உதவியிருக்கிறார். யெகோவாவில் நம்பிக்கை வைக்கும் எவரையும் அவர் பயன்படுத்த முடியும் என்பதை நான் மிக உறுதியாக நம்புகிறேன். ஏன், என்னைப்போல் கூச்ச சுபாவமே உருவாக இருப்பவர்களையும்கூட அவரால் பயன்படுத்த முடியும். அறிமுகமில்லாத அந்நியரிடம் நம் கடவுளாகிய யெகோவாவைப் பற்றி தைரியமாக பேசும் திருப்திகரமான வாழ்க்கையை நான் அனுபவித்திருக்கிறேன்!

[பக்கம் 21-ன் படம்]

பெத்தேலிலிருந்து க்ளாரன்ஸ் எங்களை சந்திக்க வந்தபோது சேர்ந்து எடுத்த படம்

[பக்கம் 23-ன் படம்]

நியூ யார்க்கிலுள்ள சவுத் லான்ஸிங்கில் இருந்த கிலியட் பள்ளியின் புல்தரையில் எங்கள் வகுப்பைச் சேர்ந்தவர்கள் படித்துக்கொண்டிருப்பது

[பக்கம் 23-ன் படம்]

இடது: நான், மார்த்தா ஹெஸ், அம்மா—ஹவாயில்

[பக்கம் 24-ன் படம்]

வலது: டோக்கியோவிலுள்ள மிஷனரி இல்லத்தில் உள்ளவர்கள்

[பக்கம் 24-ன் படம்]

கீழே: பல வருட பயனியர் பார்ட்னர் மார்த்தா ஹெஸ்ஸுடன்

[பக்கம் 25-ன் படம்]

எபீனாவிலுள்ள விரிவுபடுத்தப்பட்ட கிளை அலுவலக கட்டிடம் போன நவம்பரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது