Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மாறிவரும் “கிறிஸ்தவம்”—கடவுள் ஏற்றுக்கொள்கிறாரா?

மாறிவரும் “கிறிஸ்தவம்”—கடவுள் ஏற்றுக்கொள்கிறாரா?

மாறிவரும் “கிறிஸ்தவம்”—கடவுள் ஏற்றுக்கொள்கிறாரா?

ஓவியர் ஒருவரிடம் உங்கள் படத்தை வரைய சொல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் வரைந்து முடித்ததும் அதைப் பார்த்து நீங்கள் வியக்கிறீர்கள். அச்சுப்பிசகாமல் அப்படியே வரையப்பட்டிருக்கிறது. உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், ஏன் கொள்ளுப்பேரப் பிள்ளைகளும் அந்தப் படத்தை பார்ப்பதை யோசித்து நீங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறீர்கள்.

ஆனால், பல சந்ததிகள் கடந்தபிறகு, உங்கள் வாரிசு ஒருவர், படத்தில் தலைமுடி அடர்த்தியாக இல்லையென நினைக்கிறார். எனவே, முடி கொஞ்சம் அடர்த்தியாக தெரியும்படி மாற்றி வரைகிறார். இன்னொருவர் உங்களுடைய மூக்கு சரியில்லையென அதையும் மாற்றுகிறார். அடுத்தடுத்த சந்ததிகளில் வந்தவர்கள் இன்னும் பல “திருத்தங்களை” செய்கின்றனர். கடைசியில் பார்த்தால், அந்தப் படம் உங்களை மாதிரியே இல்லை. நடந்தது தெரிய வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? நிச்சயமாகவே உங்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருமல்லவா?

சுருக்கமாக சொன்னால், இந்தப் படத்திற்கு நேர்ந்த கதிதான் கிறிஸ்தவ சர்ச்சுக்கும் ஏற்பட்டது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமே. கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களுடைய மரணத்திற்குப் பிறகு, உண்மையான “கிறிஸ்தவத்”தின் உருவமே மாற ஆரம்பித்ததென சரித்திரம் காட்டுகிறது. பைபிள் முன்னறிவித்தது போலவே இது நடந்தது.—மத்தேயு 13:24-30, 37-43; அப்போஸ்தலர் 20:30. a

பைபிள் நியமங்களை பல்வேறு கலாச்சாரங்களுக்கும் காலப்பகுதிகளுக்கும் ஏற்றவாறு பொருத்துவது நியாயமானதே. ஆனால், பிரபலமாக இருக்கும் கருத்திற்கேற்ப பைபிள் போதகங்களை மாற்றுவதென்பதோ முற்றிலும் தவறானது. இருந்தாலும் இன்று அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. உதாரணமாக, முக்கியமான பல விஷயங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

சர்ச்சும் அரசும் கைகோர்த்தல்

இயேசு, தம்முடைய ஆட்சி அல்லது ராஜ்யம் பரலோகத்திற்குரியது என கற்பித்தார். குறித்த காலத்தில் மனித ஆட்சிமுறைகள் அனைத்தையும் அழித்து, பூமி முழுவதையும் அது ஆளும் என அவர் சொன்னார். (தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10) மனித அரசியல் அமைப்புகள் மூலமாக அது ஆட்சி செய்யாது. ஏனென்றால், “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல” என இயேசு சொன்னார். (யோவான் 17:16; 18:36) எனவே, இயேசுவின் சீஷர்கள் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து நடந்தபோதிலும், அரசியலில் எந்த விதத்திலும் ஈடுபடவில்லை.

எனினும், நான்காம் நூற்றாண்டின் ரோமப் பேரரசர் கான்ஸ்டன்டைன் காலத்தில், கிறிஸ்தவர்களென தங்களைச் சொல்லிக் கொண்டவர்களில் அநேகர் கிறிஸ்துவின் வருகைக்காகவும் கடவுளுடைய ராஜ்யத்துக்காகவும் காத்திருந்து பொறுமை இழந்தனர். படிப்படியாக, அரசியலைப் பற்றிய அவர்களுடைய மனப்பான்மை மாறியது. “கான்ஸ்டன்டைன் காலத்திற்கு முன்பெல்லாம், கிறிஸ்தவர்கள் தங்களுடைய நோக்கங்களையும் நம்பிக்கைகளையும் பரப்ப [அரசியல்] சக்தியை நாடவில்லை. ஆனால் கான்ஸ்டன்டைன் காலத்திற்கு பின்போ, கிறிஸ்தவமும் அரசியலும் கைகோர்த்துக் கொண்டன” என்று ஐரோப்பா—ஒரு சரித்திரம் என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது. திருத்தப்பட்ட இந்தக் கிறிஸ்தவம், ரோமப் பேரரசின் “உலகளாவிய” அதாவது “கத்தோலிக்க” மதமாகியது.

சர்ச்சுக்கும் அரசுக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவினால், “கி.பி. 385-ம் ஆண்டிற்குள், அதாவது கிறிஸ்தவர்களுக்கு எதிரான மாபெரும் துன்புறுத்தலின் கடைசி தாக்குதல் நடந்து எண்பதே வருடங்களுக்குள், திருச்சபைக்கு முரணான நம்பிக்கை உடையவர்களை சர்ச்சே கொலை செய்ய ஆரம்பித்துவிட்டது. பேரரசர்களுக்கு சமமாக குருமார்களும் அதிகாரம் செலுத்தத் தொடங்கினர்” என க்ரேட் ஏஜஸ் ஆஃப் மேன் சைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது. ஒருவரை கிறிஸ்தவராக மாற்ற, விஷயங்களை விளக்கி நம்பிக்கையை வளர்க்கவில்லை; அதற்குப் பதிலாக பட்டயம்தான் பேசியது; முதல் நூற்றாண்டுப் போதகர்கள் மிகவும் தாழ்மையானவர்களாக இருந்தனர். அவர்களுக்குப் பதிலாக, பட்டங்களை வாங்கிக் குவித்த, அதிகார மோகம் கொண்ட குருமார்கள் நிறைந்த ஒரு சகாப்தம் துவங்கியது. (மத்தேயு 23:9, 10; 28:19, 20) “நசரேயனாகிய இயேசுவின் போதகங்களுக்கும்,” நான்காம் நூற்றாண்டின் கிறிஸ்தவத்திற்கும் “இடையேயுள்ள ஏராளமான மாற்றங்களை” குறித்து சரித்திராசிரியர் ஹெச். ஜி. வெல்ஸ் எழுதினார். இப்படிப்பட்ட “ஏராளமான மாற்றங்கள்,” கடவுளையும் இயேசுவையும் பற்றிய அடிப்படை போதகங்களை அதிகளவில் மாற்றிவிட்டன.

கடவுள் ‘மாறாட்டம்’

“பிதாவாகிய ஒரே தேவனே” உண்டு என கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் கற்பித்தனர். யெகோவா என்ற தனிப்பட்ட பெயர் அவருக்கு இருக்கிறது. ஆரம்பகால பைபிள் கையெழுத்துப் பிரதிகளில் இந்தப் பெயர் சுமார் 7,000 தடவை காணப்படுகிறது. (1 கொரிந்தியர் 8:6; சங்கீதம் 83:18) இயேசு, கடவுளால் படைக்கப்பட்டார். “படைப்புக்கெல்லாம் தலைப்பேறானவர்” என கத்தோலிக்க டூவே வர்ஷன் கொலோசெயர் 1:15-ல் சொல்கிறது. எனவேதான், படைக்கப்பட்ட ஒரு சிருஷ்டியாகிய இயேசு, “என் பிதா என்னிலும் பெரியவர்” என ஒளிவுமறைவின்றி சொன்னார்.—யோவான் 14:28.

ஆனால், மூன்றாம் நூற்றாண்டுக்குள், செல்வாக்குமிக்க குருமார்கள் சிலர், கிரேக்க தத்துவ மேதை பிளேட்டோவின் திரித்துவ போதகத்தின் மீது மோகம் கொண்டனர். எனவே, திரித்துவ கொள்கைக்கு ஏற்ப கடவுளையே திரித்துவிட்டனர். அதைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில், வேதப்பூர்வமற்ற இந்தக் கோட்பாடு இயேசுவை யெகோவாவுக்கு சமமாக உயர்த்தியது. மேலும், கடவுளுடைய பரிசுத்த ஆவியை அல்லது செயல் நடப்பிக்கும் சக்தியை ஓர் ஆளாக மாற்றியது.

பொய் மதக் கொள்கையாகிய திரித்துவத்தை சர்ச் ஏற்றுக்கொண்டதைப் பற்றி நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா இப்படி சொல்கிறது: “நான்காம் நூற்றாண்டின் இறுதி வரையாக, ‘ஒரே கடவுள் மூன்று ஆட்களில்’ இருக்கிறார் என்ற திரித்துவக் கொள்கை கிறிஸ்தவ வாழ்க்கையிலும் அதன் விசுவாசத்திலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதுவரை, சர்ச் தலைவர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை அல்லது கருத்தை நினைத்துப் பார்க்கவும் இல்லை. ஆனால், அதன்பிறகே இந்தக் கொள்கை முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.”

இதைப் போலவே, தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா சொல்கிறதாவது: “நான்காம் நூற்றாண்டின் திரித்துவக் கோட்பாடு கடவுளுடைய இயல்பைப் பற்றிய ஆரம்பகால கிறிஸ்தவ போதகத்திற்கு சற்றும் ஒத்திருக்கவில்லை. மாறாக, அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது.” “பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட மத கோட்பாடுகளில்” ஒன்று என திரித்துவத்தை தி ஆக்ஸ்ஃபர்ட் கம்பானியன் டு த பைபிள் அழைக்கிறது. இருப்பினும், இதைப் போலவே இன்னும் பல புறமதக் கொள்கைகள் சர்ச்சுக்குள் புகுத்தப்பட்டன.

‘திரிக்கப்பட்ட’ ஆத்துமா

மனிதன் இறந்த பிறகும் ஆத்துமா அழிவதில்லை என இன்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், இந்த சர்ச் போதகமும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட ஒன்றே என்பது உங்களுக்குத் தெரியுமா? மரித்தவர்கள் “ஒன்றும் அறியார்கள்” என்ற பைபிள் சத்தியத்தை இயேசுவும் உறுதிப்படுத்தினார். அவர்கள் உறக்க நிலையில் இருக்கிறார்கள். (பிரசங்கி 9:5; யோவான் 11:11-13) உயிர்த்தெழுதல் மூலமே உயிர் மறுபடியும் கொடுக்கப்படும். அதாவது, மரணத்தின் நித்திரையிலிருந்து ‘மறுபடியும் எழுந்து நிற்பர்.’ (யோவான் 5:28, 29) அழியாத ஆத்துமா உண்மையிலேயே இருக்கிறதென்றால், அதற்கு உயிர்த்தெழுதலே அவசியமில்லை. ஏனென்றால் அழியாமை, மரணத்தை அர்த்தமற்றதாக்கிவிடும்.

மரித்த ஆட்களை எழுப்புவதன் மூலம் பைபிள் போதகமாகிய உயிர்த்தெழுதல் மெய்யென இயேசு நிரூபித்துக் காட்டினார். லாசருவின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் நான்கு நாட்கள் மரித்த நிலையில் இருந்தார். இயேசு அவரை உயிர்த்தெழுப்பினார். அப்போது, அவர் உயிருள்ள, சுவாசிக்கும் மனிதனாக கல்லறையிலிருந்து வெளியே வந்தார். மரணத்திலிருந்து எழுந்தபோது, பரலோகத்திலிருந்து அழியாத ஆத்துமா என எதுவும் லாசருவின் உடலுக்குள் செல்லவில்லை. அப்படி சென்றிருந்தால், இயேசு அவரை உயிர்த்தெழுப்புவதன் மூலம் அவருக்கு நன்மை செய்திருக்க முடியாது!—யோவான் 11:39, 43, 44.

அப்படியென்றால், ஆத்துமா அழியாது என்ற நம்பிக்கையின் ஆதாரம் என்ன? இந்த நம்பிக்கை, “பைபிள் போதகத்தில் இருந்தல்ல, மாறாக கிரேக்க தத்துவத்திலிருந்தே தோன்றியது” என த வெஸ்ட்மின்ஸ்டர் டிக்‍ஷனரி ஆஃப் கிறிஸ்டியன் தியாலஜி குறிப்பிடுகிறது. “உடல் செத்தபின்பும் ஆத்துமா இருக்கிறதென்கிற நம்பிக்கை, தத்துவ அல்லது மத ஊகமே தவிர உண்மையான விசுவாசத்தின் அடிப்படையில் வந்ததல்ல. பரிசுத்த வேதாகமங்களில் எங்குமே இது சொல்லப்படவுமில்லை” என தி ஜூயிஷ் என்ஸைக்ளோப்பீடியா விளக்குகிறது.

பெரும்பாலும், ஒரு பொய் மற்றொரு பொய்க்கு வித்திடுகிறது. அழியாத ஆத்துமா என்கிற இந்த போதகத்திலும் இதுவே உண்மை. நரக அக்கினியில் நித்திய வாதனை என்ற பொய்மதக் கொள்கைக்கு இதுவே வித்திட்டது. b என்றாலும், “பாவத்தின் சம்பளம் மரணம்,” நித்திய வாதனையல்ல என்று பைபிள் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது. (ரோமர் 6:23) எனவேதான், கிங் ஜேம்ஸ் வர்ஷன், உயிர்த்தெழுதலைப் பற்றி இப்படி விவரிக்கிறது: “சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் நரகமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன.” இதைப் போலவே, ‘சமுத்திரமும் . . . மரணமும் நரகமும் தங்களிடத்திலுள்ள மரித்தவர்களை ஒப்புவித்தன’ என்று ஆங்கில டூவே பைபிள் சொல்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், நரகத்திலுள்ளவர்கள் என்றால் மரித்தவர்கள், இயேசு சொன்னதுபோல் ‘நித்திரையில்’ இருப்பவர்கள்.—வெளிப்படுத்துதல் 20:13.

நரகத்தில் நித்திய வாதனை எனும் இந்தப் போதகம் மக்களை கடவுளிடம் நெருங்கிவரச் செய்யும் என நீங்கள் மனதார நம்புகிறீர்களா? நிச்சயமாகவே நெருங்கிவரச் செய்யாது. நேர்மை, அன்புள்ளம் கொண்ட மக்களுடைய மனதில் இது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத எண்ணமே! மறுபட்சத்தில், “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்றும் மிருகங்களை வதைப்பதையும்கூட அவர் வெறுக்கிறார் என்றும் பைபிள் கற்பிக்கிறது.—1 யோவான் 4:8; நீதிமொழிகள் 12:10; எரேமியா 7:31; யோனா 4:11.

“ஓவியத்தின்” அழகைக் கெடுத்தல்—நவீன காலங்களில்

கடவுளையும் கிறிஸ்தவத்தையும் கறைபடுத்தும் செயல் இன்றும் தொடர்கிறது. சமீபத்தில், மதப் பேராசிரியர் ஒருவர் தன்னுடைய புராட்டஸ்டண்ட் சர்ச்சில் நடக்கும் உட்பூசலை இப்படியாக விவரித்துள்ளார்: “பைபிளுக்கும் மனித தத்துவங்களுக்கும் எதிரான போராட்டம்; கிறிஸ்துவின் தலைமைக்கும் கால ஓட்டத்திற்கேற்ப மாறும் கிறிஸ்தவ கோட்பாட்டிற்கும் எதிரான போராட்டம். விவாதத்திற்குரிய காரியம் என்னவெனில்: சர்ச்சின் போக்கை நிர்ணயிப்பது யார் . . . பரிசுத்த பைபிளா அல்லது அந்தந்த காலத்தில் பிரபலமாக இருக்கும் தத்துவமா?”

வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில், “அந்தந்த காலத்தில் பிரபலமாக இருக்கும் தத்துவமே” சர்ச்சின் போக்கை நிர்ணயிக்கும் ஒன்றாக இன்றும் விளங்குகிறது. உதாரணமாக, முற்போக்காக, பரந்த நோக்குடையதாக காணப்பட வேண்டுமென்பதற்காக, அநேக சர்ச்சுகள் பல விஷயங்களில் தங்களுடைய நிலையை மாற்றியுள்ளன. முக்கியமாக, ஒழுக்க நெறிமுறைகள் சம்பந்தமாக இது உண்மையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, சர்ச்சுகள் தராதரங்களை விட்டுக்கொடுப்பவையாக மாறியிருக்கின்றன. என்றாலும், விபச்சாரம், வேசித்தனம், ஓரினப்புணர்ச்சி போன்றவை கடவுளின் பார்வையில் மிக மோசமான பாவங்கள் என பைபிள் உறுதியாக கூறுகிறது. மேலும், இப்படிப்பட்ட பாவங்களை பழக்கமாக செய்பவர்கள், “தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரி”க்க மாட்டார்கள் என பைபிள் திட்டவட்டமாக சொல்கிறது.—1 கொரிந்தியர் 6:9, 10; மத்தேயு 5:27-32; ரோமர் 1:26, 27.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியபோது, அவரைச் சுற்றியிருந்த கிரேக்க-ரோம உலகில் எல்லாவிதமான துன்மார்க்கமும் மலிந்திருந்தன. ‘மிக மோசமான பாலுறவு சம்பந்தமான பாவங்களுக்காக கடவுள் சோதோம் கொமொராவை சாம்பலாக்கியது உண்மைதான். ஆனால், அது 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்தது! அறிவொளிமிக்க இந்த சகாப்தத்திற்கு நிச்சயமாகவே இது சற்றும் பொருந்தாது’ என பவுல் எளிதில் நியாயப்படுத்திப் பேசியிருக்கலாம். ஆனால், அவர் அவ்விதம் செய்யவில்லை. பைபிள் சத்தியத்தை கறைபடுத்த அவர் சிறிதும் இணங்கவில்லை.—கலாத்தியர் 5:19-23.

ஒரிஜினல் “ஓவியத்தை” பாருங்கள்

‘மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்ததால்,’ அவர்களுடைய ஆராதனை வீணே என்று தம்முடைய நாளிலிருந்த யூத மதத் தலைவர்களிடம் இயேசு சொன்னார். (மத்தேயு 15:9) கிறிஸ்துவின் போதகத்திற்கு, கிறிஸ்தவ மண்டல குருமார்கள் என்ன செய்தார்களோ, என்ன செய்கிறார்களோ, அதையேதான் மோசே மூலம் கொடுக்கப்பட்ட யெகோவாவின் சட்டத்திற்கு யூத மதத் தலைவர்கள் செய்தனர். தெய்வீக சத்தியத்தின்மேல், பாரம்பரியம் எனும் “சாயத்தை” பூசிவிட்டனர். ஆனால், இந்த எல்லா பொய்களையும் இயேசு அகற்றிவிட்டார். நேர்மை இருதயமுள்ள மக்களின் நலனுக்காக இதைச் செய்தார். (மாற்கு 7:7-13) இயேசு சத்தியத்தையே பேசினார். மக்கள் விரும்பினார்களோ இல்லையோ அவர் சத்தியத்தையே பேசினார். கடவுளுடைய வார்த்தைதான் அவருக்கு எப்போதுமே ஆதாரமாக இருந்தது.—யோவான் 17:17.

கிறிஸ்தவர்களென தங்களைச் சொல்லிக்கொள்ளும் பெரும்பான்மையரிடம் இருந்து இயேசு எவ்வளவு வித்தியாசமாக இருந்தார்! பைபிள் இப்படி முன்னறிவித்தது: “புதுமையான கருத்துகளுக்காக மக்கள் பேரார்வம்கொண்டு, தங்களுடைய விருப்பத்திற்கேற்ப போதகர்களை . . . சேர்த்துக்கொள்வர்; பின்னர், சத்தியத்திற்கு செவிகொடுப்பதற்கு மாறாக, கட்டுக்கதைகளுக்கே தங்கள் கவனத்தை திருப்புவர்.” (2 தீமோத்தேயு 4:3, 4, தி ஜெருசலேம் பைபிள்) இந்தக் “கட்டுக்கதைக”ளில் சிலவற்றையே நாம் இந்தக் கட்டுரையில் சிந்தித்தோம். இவை ஆவிக்குரிய அழிவுக்கு வழிநடத்துபவை. ஆனால், கடவுளுடைய வார்த்தையோ பலப்படுத்த வல்லவை. நித்திய ஜீவனுக்கு வழிநடத்துபவை. இந்த சத்தியத்தையே ஆராய்ந்து பார்க்கும்படி யெகோவாவின் சாட்சிகள் உங்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.—யோவான் 4:24; 8:32; 17:3.

[அடிக்குறிப்புகள்]

a கோதுமை மற்றும் களை பற்றிய உவமையிலும், விசாலமான மற்றும் இடுக்கமான பாதை (மத்தேயு 7:13, 14) பற்றிய விளக்கத்திலும் இயேசு வெளிப்படுத்தியபடி, காலங்களினூடே மெய்க் கிறிஸ்தவத்தை சிலர் தொடர்ந்து அப்பியாசித்து வந்தனர். என்றாலும், களைபோன்ற பெரும்பான்மையான மக்கள் கோதுமை போன்ற மக்களை மிஞ்சினர். களைபோன்ற இவர்கள் தாங்களே உண்மைக் கிறிஸ்தவர்கள் என்றும் தங்களுடைய போதகமே மெய்க் கிறிஸ்தவம் என்றும் காட்டிக்கொள்கின்றனர். இந்தக் கிறிஸ்தவத்தைப் பற்றிதான் எமது கட்டுரை பேசுகிறது.

b எபிரெய பதமாகிய ஷியோல், கிரேக்க பதமாகிய ஹேடீஸ் என்பதன் மொழிபெயர்ப்பே “நரகம்.” இந்த இரண்டு பதங்களுமே “கல்லறை”யைத்தான் அர்த்தப்படுத்துகின்றன. எனவே, கிங் ஜேம்ஸ் வர்ஷனை மொழிபெயர்த்தவர்கள், ஷியோலை 31 தடவை “நரகம்” என்றும், 31 தடவை “கல்லறை” என்றும், 3 தடவை “குழி” என்றும் மொழிபெயர்த்துள்ளனர். இதிலிருந்து, இந்த மூன்று சொற்களுமே ஒரே அர்த்தத்தைத்தான் கொடுக்கின்றன என்பது தெரிகிறது.

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

கிறிஸ்தவம் என்ற பெயரின் தோற்றம்

இயேசுவின் மரணத்திற்குப் பின் குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு, அவரைப் பின்பற்றியவர்கள் “அந்த மார்க்க”த்தைச் சேர்ந்தவர்கள் என்றே அறியப்பட்டனர். (அப்போஸ்தலர் 9:2; 19:9, 23; 22:4) ஏன்? ஏனென்றால், அவர்களுடைய வாழ்க்கை இயேசுவில் விசுவாசம் வைப்பதிலேயே சார்ந்திருந்தது. அவரே ‘மார்க்கமும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்.’ (யோவான் 14:6) பின்னர், சுமார் பொ.ச. 44-க்குப் பிறகு, சிரியாவின் அந்தியோகியாவிலே, இயேசுவின் சீஷர்கள் “தெய்வீக வழிநடத்துதலினாலே கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.” (அப்போஸ்தலர் 11:26, NW) இந்தப் பெயர், அதிகாரிகள் மத்தியிலும் சீக்கிரத்தில் பிரபலமாயிற்று. (அப்போஸ்தலர் 26:28) கிறிஸ்தவ வாழ்க்கை முறையில் அந்தப் புதிய பெயர் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, அவர்கள் கிறிஸ்துவை வாழ்க்கையின் முன்மாதிரியாக வைத்தனர்.—1 பேதுரு 2:21.

[பக்கம் 7-ன் படங்கள்]

ஊழியத்தின்மூலம், யெகோவாவின் சாட்சிகள், ஜனங்களின் கவனத்தை கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளுக்கு திருப்புகின்றனர்

[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]

இடமிருந்து மூன்றாவது: United Nations/Photo by Saw Lwin