Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘நீங்கள் யாவரும் சகோதரரே’

‘நீங்கள் யாவரும் சகோதரரே’

‘நீங்கள் யாவரும் சகோதரரே’

“நீங்கள் ‘ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதர, சகோதரிகள்.”—மத்தேயு 23:8, பொ.மொ.

1. என்ன விஷயத்தைக் குறித்து சிந்திப்பது பயனுள்ளது?

 “யாருக்கு ஜாஸ்தி மதிப்பு கொடுக்கனும், மிஷனரிக்கா. . . இல்ல பெத்தெலைட்டுக்கா?” என ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒரு மிஷனரி சகோதரியை பார்த்து, ஒரு கிழக்கத்திய நாட்டு பெண் அப்பாவித்தனமாக கேட்டார். யார் அதிகம் மதிக்கப்பட வேண்டும், நாடுவிட்டு நாடுவந்து மிஷனரி ஊழியம் செய்யும் மிஷனரியா அல்லது அந்த நாட்டிலேயே உள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளைக்காரியாலயத்தில் சேவை செய்யும் பெத்தேல் ஊழியரா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வக்கோளாறில் அவர் இவ்வாறு கேட்டார். இது அப்பாவித்தனமான கேள்வியாக இருந்தாலும், தகுதிகளையும் ஸ்தானங்களையும் முக்கியமாக கருதும் ஒரு சமுதாயத்தின் மனப்பான்மையை ஓரளவுக்கு வெளிக்காட்டுகிறது. இந்தக் கேள்வி அந்த மிஷனரியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருப்பினும், ஒருவரின் ஸ்தானம், செல்வாக்கு எப்படியிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையிலிருந்தே யார் பெரியவர் என்ற கேள்வி முளைக்கிறது.

2. நம் உடன் வணக்கத்தாரை நாம் எவ்வாறு நோக்க வேண்டும்?

2 இந்த விருப்பம் அல்லது மனநிலை நேற்று இன்று உதித்ததல்ல. இயேசுவின் சீஷர்களுக்கு மத்தியிலும் யார் பெரியவர் என்ற விவாதம் இருந்தது. (மத்தேயு 20:20-24; மாற்கு 9:33-37; லூக்கா 22:24-27) அவர்களும்கூட ஸ்தானங்களை பெரிதாக கருதிய முதல் நூற்றாண்டு யூதமத கலாச்சாரத்திலிருந்து வந்தவர்கள்தான். அப்படிப்பட்ட சமுதாயத்தை மனதில் கொண்டு, இயேசு இவ்வாறு தன் சீஷர்களுக்கு அறிவுறுத்தினார்: “நீங்கள் ‘ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதர, சகோதரிகள்.” (மத்தேயு 23:8, பொ.மொ.) “போதகர்” என்று பொருள்படும் “ரபி” என்ற பட்டப் பெயரோ அல்லது இதுபோன்ற வேறெந்த மதம் சார்ந்த பட்டப் பெயரோ, “அந்த பட்டம் பெற்றவர் தற்பெருமை, மேட்டிமை போன்றவற்றை வளர்த்துக்கொள்ள காரணமாகின்றன; அதே சமயத்தில் அந்தப் பட்டம் பெறாதவர் பொறாமை, தாழ்வு மனப்பான்மை போன்றவற்றை வளர்த்துக்கொள்ள காரணமாயிருக்கின்றன. ஆகமொத்தத்தில் இவற்றின் உண்மையான நோக்கம், ‘கிறிஸ்துவின் எளிமை’ அல்லது தாழ்மைக்கு முற்றிலும் எதிர்மாறானது’” என்றார் பைபிள் கல்விமான் ஆல்பர்ட் பார்ன்ஸ். அதனால்தான், கிறிஸ்தவர்கள் தங்கள் சபையில் உள்ள கண்காணிகளை குறிப்பிடும்போது, “மூப்பர்” என்ற வார்த்தையை முகஸ்துதி செய்வதற்கான பட்டப் பெயராக பயன்படுத்துவதில்லை. (யோபு 32:21, 22, NW) மறுபட்சத்தில், யெகோவா தம்முடைய உத்தம வணக்கத்தாரை கனம்பண்ணுவதுபோல, இயேசு கிறிஸ்து தம்மை உண்மையோடு பின்பற்றுபவர்களை கனம்பண்ணுவதுபோல, இயேசு கொடுத்த அறிவுரையின் நோக்கத்தை நன்கு புரிந்துகொண்ட மூப்பர்கள் சபையிலுள்ள மற்ற அங்கத்தினர்களை கனம்பண்ணுகிறார்கள்.

யெகோவா மற்றும் இயேசுவின் முன்மாதிரி

3. யெகோவா தம்முடைய ஆவி சிருஷ்டிகளை எவ்வாறு கனம் பண்ணினார்?

3 யெகோவா ஆதிமுதற்கொண்டு எல்லாவற்றிற்கும் ‘உன்னதமானவராக’ இருந்தபோதிலும், தம்முடைய வேலைகளில் அவருடைய சிருஷ்டிகளை பயன்படுத்துவதன் மூலம் அவர்களை கனம் பண்ணினார். (சங்கீதம் 83:17, 18) முதல் மனிதனை உண்டாக்கியபோது தம்முடைய குமாரனை “கைதேர்ந்த வேலையாளாக” பயன்படுத்தினார். (நீதிமொழிகள் 8:27-30; ஆதியாகமம் 1:26) ஒரு சமயம், பொல்லாத அரசனான ஆகாப் ராஜாவை யெகோவா அழிக்க முடிவுசெய்தார், அப்போது அவனை எவ்வாறு அழிப்பது என பரலோகத்திலிருந்த தம்முடைய தேவதூதர்களிடம் கருத்துகளை கேட்டார்.—1 இராஜாக்கள் 22:19-23.

4, 5. யெகோவா தம்முடைய மனித சிருஷ்டிகளை எவ்வாறு கனம் பண்ணுகிறார்?

4 யெகோவாதாமே சர்வலோகத்திற்கும் உன்னத பேரரசராக ஆட்சி செய்துவருகிறார். (உபாகமம் 3:24) இதைச் செய்யலாமா வேண்டாமா என மனிதரை கேட்டு செய்ய வேண்டிய அவசியமே அவருக்கில்லை. இருப்பினும் அவர்களை ஒரு பொருட்டாக எண்ணி, தம்முடைய நிலையிலிருந்து கீழே இறங்கி வருகிறார். சங்கீதக்காரர் ஒருவர் இவ்வாறு பாடினார்: “உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்? அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்.”—சங்கீதம் 113:5-8.

5 உதாரணத்திற்கு ஆபிரகாமின் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சோதோம் கொமோராவை யெகோவா அழிக்க நினைத்தபோது, ஆபிரகாம் கேள்விமேல் கேள்வி கேட்டார்; நீதி நிலைநாட்டப்படும் என்பதை ஆபிரகாமுக்கு புரியவைப்பதற்காக யெகோவா பொறுமையாக சரியான பதிலை அளித்தார். (ஆதியாகமம் 18:23-33) ஆபிரகாமுடைய வேண்டுகோளின் பின்விளைவு என்னவாக இருக்கும் என்பதை யெகோவா ஏற்கெனவே நன்கு அறிந்திருந்தபோதிலும், அவர் பொறுமையாக ஆபிரகாமுக்கு செவிகொடுத்தார். ஆபிரகாம் நியாயங்காட்டி பேசியதை ஏற்றுக்கொண்டார்.

6. கேள்வி கேட்ட ஆபகூக்கை யெகோவா கனம் பண்ணியதன் விளைவு என்ன?

6 யெகோவா ஆபகூக்கிற்கும் செவிகொடுத்தார். ஆபகூக் இவ்வாறு கேட்டார்: “ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்?” இந்த கேள்வியை ஆபகூக் கேட்டபோது இது தம்முடைய அதிகாரத்திற்கு எதிராக வந்த சவாலாக யெகோவா நினைத்தாரா? இல்லை, ஆபகூக் கேட்ட இந்த கேள்வியை யெகோவா நியாயமானதாகவே நினைத்தார். அதனால் நியாயத்தை நிறைவேற்றுவதற்காக கல்தேயரை உயர்த்த வேண்டும் என்ற தம்முடைய நோக்கத்தை ஆபகூக்கிற்கு வெளிப்படுத்தினார். அத்துடன் ‘முன்னறிவிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு நிச்சயம் நிறைவேறும்’ என அந்த தீர்க்கதரிசிக்கு உறுதிகூறினார். (ஆபகூக் 1:1, 2, 5, 6, 13, 14; 2:2, 3, பொ.மொ.) ஆபகூக்கின் கேள்விகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு பதிலளிப்பதன்மூலம் யெகோவா அந்த தீர்க்கதரிசியை கனம்பண்ணினார். அதன் விளைவாக, கலக்கமடைந்திருந்த அந்த தீர்க்கதரிசி மகிழ்ச்சியடைந்தார், தன்னுடைய இரட்சிப்பின் தேவனில் முழு நம்பிக்கை வைத்தார். இன்று யெகோவாவில் நமக்கிருக்கும் நம்பிக்கையை இந்த சரித்திரம் பலப்படுத்துகிறது. இந்தப் பதிவை ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகமான ஆபகூக்கில் காணலாம்.—ஆபகூக் 3:18, 19.

7. பொ.ச. 33-ல் பெந்தெகோஸ்தே சமயத்தில், பேதுரு ஆற்றிய பங்கு ஏன் குறிப்பிடத்தக்கது?

7 மற்றவர்களுக்கு மதிப்பு காட்டும் விஷயத்தில் இயேசு கிறிஸ்துவும் ஒரு சிறந்த முன்மாதிரி. “மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்” என இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொல்லியிருந்தார். (மத்தேயு 10:32, 33) ஆனால், அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவு, எல்லா சீஷர்களும் அவரைவிட்டு ஓடிவிட்டனர், அப்போஸ்தலன் பேதுரு அவரை மூன்றுமுறை மறுதலித்தார். (மத்தேயு 26:34, 35, 69-75) இருப்பினும் இயேசு, வெளித்தோற்றத்தை மட்டும் பார்க்கவில்லை, அவர் பேதுருவின் ஆழமான உணர்ச்சிகளை கண்டார், குற்றவுணர்வால் மனம் வருந்தியதை பார்த்தார். (லூக்கா 22:61, 62) அதன் பிறகு 51 நாட்கள் கழித்து, அந்த மனந்திருந்திய அப்போஸ்தலனை இயேசு கனம்பண்ணினார். பெந்தெகோஸ்தே நாளில் இயேசுவின் 120 சீஷர்களை பிரதிநித்துவம் செய்யும் சிலாக்கியத்தை பேதுரு பெற்றார். ‘ராஜ்யத்தின் முதல் திறவுகோலை’ இவரே பயன்படுத்தினார். (மத்தேயு 16:19; அப்போஸ்தலர் 2:14-40) ‘மனந்திருந்தி தன் சகோதரர்களை உறுதிப்படுத்தும்’ வாய்ப்பும் பேதுருவுக்கு கொடுக்கப்பட்டது.—லூக்கா 22:31-33, பொ.மொ.

குடும்ப அங்கத்தினர்களுக்கு மரியாதை

8, 9. கணவன் தன் மனைவிக்கு கனம் செலுத்தும் விஷயத்தில், எவ்வாறு யெகோவாவையும் இயேசுவையும் பின்பற்றலாம்?

8 கடவுள் கொடுத்த அதிகாரத்தை பயன்படுத்தும் விஷயத்தில், யெகோவா மற்றும் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியை கணவர்களும் பெற்றோரும் பின்பற்றுவது நன்மையளிக்கும். பேதுரு இவ்வாறு அறிவுறுத்தினார்: “அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், . . . நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, . . . அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.” (1 பேதுரு 3:7) உதாரணத்திற்கு, மரப் பாத்திரத்தைவிட பீங்கான் பாத்திரத்தை அதிக ஜாக்கிரதையாக கையாளுவோம் அல்லவா? இதேவிதமாகவே, ஒரு கணவன் யெகோவாவை பின்பற்றுவதன் மூலம் தன் மனைவியை கவனமாக நடத்த வேண்டும். உதாரணமாக, குடும்ப விவகாரங்களில் சில முடிவுகளை எடுக்கும்போது, மனைவியின் கருத்துகளுக்கும் செவிகொடுப்பதன் மூலமாக அவர் அவ்வாறு செய்யலாம். யெகோவா ஆபிரகாமிடம் பொறுமையுடன் அதிக நேரத்தை செலவிட்டு விளக்கியதை நினைவுபடுத்திப் பாருங்கள். அபூரணராக இருப்பதன் காரணமாக அந்தக் கணவனால் ஒரு விஷயத்தை தெளிவாக பார்க்க முடியாது அல்லது ஒரு விஷயத்தின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடியாது. அதனால், மனைவியின் கருத்துகளுக்கு கவனம் செலுத்துவதன் மூலம் அவளை கனம் பண்ணுவது ஞானமான காரியம் அல்லவா!

9 ஆண் ஆதிக்கம் ஓங்கியிருக்கும் இடங்களில், ஒரு மனைவி தன் கருத்துகளை வெளிப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல; தன் மனதின் ஆழத்தில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு அவள் கடுமையான முயற்சி எடுக்க வேண்டும் என்பதை அந்தக் கணவன் ஞாபகத்தில் வைக்கவேண்டும். இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, மணவாட்டி வகுப்பின் அங்கத்தினர்களான தம் சீஷர்களை கையாண்ட விதத்தை அந்த கணவர் பின்பற்ற வேண்டும். இயேசு அவர்களை நெஞ்சார நேசித்தார். அந்த சீஷர்கள் தங்களுடைய தேவைகளை சொல்வதற்கு முன்பாகவே இயேசு அவற்றை அறிந்திருந்தார். அவர்களுடைய சரீர மற்றும் ஆவிக்குரிய வரம்புகளை நன்கு தெரிந்து செயல்பட்டார். (மாற்கு 6:31; யோவான் 16:12, 13; எபேசியர் 5:28-30) அதோடு, உங்களையும் குடும்பத்திலுள்ள மற்றவர்களையும் கவனித்துக்கொள்ள உங்கள் மனைவி எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள், அதற்காக அவருக்கு உங்கள் வார்த்தையிலும் செயலிலும் போற்றுதலை தெரிவியுங்கள். யெகோவா மற்றும் இயேசு கிறிஸ்து இருவருமே தகுதியானவர்களுக்கு பாராட்டுதலையும், போற்றுதலையும், ஆசீர்வாதத்தையும் வாரி வழங்கினார்கள். (1 இராஜாக்கள் 3:10-14; யோபு 42:12-15; மாற்கு 12:41-44; யோவான் 12:3-8) கிழக்கத்திய நாட்டில் வாழும் ஒரு பெண்மணி தன் கணவன் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனபிறகு எப்படி நடந்துகொண்டார் என்பதை இவ்வாறு சொன்னார்: “முன்பெல்லாம், என் வீட்டுக்காரர் கை வீசிக்கொண்டு எனக்கு மூன்று நான்கு அடி முன்னால்தான் நடந்துபோவார். நான்தான் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு பின்னாலேயே ஓடவேண்டும். ஆனால் இப்பொழுது அப்படியில்லை, அவரே எல்லா பைகளையும் தூக்கிக்கொள்கிறார், நான் செய்கிற வீட்டுவேலைக்குகூட பாராட்டு தெரிவிக்கிறார்!” உங்களுடைய மனமார்ந்த பாராட்டுகளுக்கு ஒரு சில வார்த்தைகள் போதும். அவை, நீங்கள் உங்கள் மனைவியை நேசிக்கிறீர்கள், மதிக்கிறீர்கள் என்பதை அவருக்கு உணர்த்தும்.—நீதிமொழிகள் 31:28, 29.

10, 11. கலகக்கார தேசமான இஸ்ரவேலை யெகோவா நடத்திய விதத்திலிருந்து பெற்றோர் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

10 பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிட்சை கொடுக்கும் விஷயத்தில் கடவுளின் முன்மாதிரியை பின்பற்ற வேண்டும்: ‘தவறான வழிகளிலிருந்து மனந்திரும்பும்படி, யெகோவா இஸ்ரவேலையும் யூதாவையும் தொடர்ந்து எச்சரித்தார், ஆனால் அவர்களோ தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.’ (2 இராஜாக்கள் 17:13-15) இஸ்ரவேலர்கள் “தங்கள் வாயினால் அவருக்கு இச்சகம்பேசி, தங்கள் நாவினால் அவரிடத்தில் பொய் சொன்னார்கள்.” அவர்களைப் போலவே, தங்கள் பிள்ளைகளும் நடந்துகொள்கிறார்கள் என சில சமயம் பெற்றோர்கள் நினைக்கக்கூடும். இஸ்ரவேலர்கள் “தேவனைப் பரீட்சை பார்த்து” அவரை புண்படுத்தினார்கள். இருப்பினும், யெகோவாவோ “அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்.”—சங்கீதம் 78:36-41.

11 “வழக்காடுவோம் வாருங்கள் . . . உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்” என யெகோவா இஸ்ரவேலர்களிடம் வாதாடினார். (ஏசாயா 1:18) யெகோவா எந்த தவறையும் செய்யாதபோதிலும், பிரச்சினைகளை சரிசெய்துகொள்வதற்காக அந்த அடங்காத தேசத்தை தாமே முன்வந்து அழைத்தார். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சிட்சிக்கும்போது பின்பற்ற என்னே ஓர் சிறந்த மனநிலை! உங்கள் பிள்ளைகளின் கருத்துகளையும் பிரச்சினைகளையும் செவிகொடுத்து கேளுங்கள். இதன் மூலம் உங்கள் பிள்ளைகளை கனப்படுத்துகிறீர்கள். தேவை ஏற்படும்போது அவர்கள் ஏன் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும் விளக்குங்கள்.

12. (அ) யெகோவாவைவிட பிள்ளைகளை அதிகமாக கனம் பண்ணுவதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்? (ஆ) நம் பிள்ளைகளை சிட்சிக்கும்போது அவர்களுடைய மதிப்புக்கு மரியாதை காட்ட வேண்டுமானால் என்ன தேவைப்படுகிறது?

12 சில சமயங்களில் பிள்ளைகளுக்கு சரியான சிட்சை அவசியம் என்பது உண்மை. ‘யெகோவாவைவிட தன் மகன்களை அதிகம் மதித்த’ அக்காலத்து ஏலியைப்போல இன்றைய பெற்றோர்கள் இருக்கக்கூடாது. (1 சாமுவேல் 2:29) இருப்பினும், அன்பினாலேயே தாங்கள் சிட்சிக்கப்படுகிறார்கள் என்பதை பிள்ளைகள் அறிந்துகொள்ள வேண்டும். பெற்றோர் தங்கள்மீது உண்மையான அன்பு வைத்திருப்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக” என பவுல் அப்பாமார்களுக்கு அறிவுறுத்தினார். (எபேசியர் 6:4) அதாவது, ஒரு தந்தை அதிகாரம் செலுத்தும்போது கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்பு அவர் தன்னுடைய பிள்ளைகளை மதிக்க வேண்டும் என்பதே; அவர் பிள்ளைகள் மீது எப்போதும் கடுகடுவென பொரிந்துதள்ளி அவர்களையும் கோபப்படுத்தாமல் இருப்பதன் மூலம் அவர்களை மதிக்கலாம். பிள்ளைகளை மதிப்பாக நடத்துவதற்கு பெற்றோர் பங்கில் நேரமும் முயற்சியும் தேவை. ஆனால், அதனால் வரும் பலனை நினைக்கும்போது, அதற்காக என்ன தியாகம் செய்தாலும் தப்பே இல்லை.

13. குடும்பத்திலுள்ள முதியவர்களைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது?

13 மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் மதிப்பு காட்டுவது மட்டும் குடும்ப அங்கத்தினர்களை கனம் பண்ணுவதாக ஆகிவிடாது. “வயதான காலத்தில், பிள்ளைகளுக்கு கட்டுப்படு” என்கிறது ஒரு ஜப்பானிய பழமொழி. வயதான பெற்றோர் தங்கள் அதிகாரத்தை அளவுக்கதிகமாக பயன்படுத்தக்கூடாது, வளர்ந்த பிள்ளைகள் சொல்வதற்கு செவிகொடுக்க வேண்டும் என்பதே அந்த பழமொழியின் கருத்து. பிள்ளைகள் சொல்வதை காதுகொடுத்து கேட்பதன் மூலம் அவர்களுக்கு கனம் செலுத்த வேண்டும் என வேதாகமம் சொல்கிறது, ஆனால் அதற்காக பிள்ளைகள் குடும்பத்திலுள்ள வயதான அங்கத்தினர்களை அவமதிக்கக்கூடாது. “உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே” என்கிறது நீதிமொழிகள் 23:22. சாலொமோன் ராஜா இவ்வாறு சொன்னபடியே வாழ்ந்தும் காட்டினார். அவருடைய தாய் ஒரு வேண்டுகோளுடன் அவரை அணுகியபோது சாலொமோன் அவரை கனம்பண்ணினார். சாலொமோன் தன்னுடைய சிங்காசனத்திற்கு வலது பக்கத்திலேயே வயதான தன் தாயாகிய பத்சேபாளுக்கு ஒரு சிங்காசனத்தை அமைத்து அவர் சொல்லவந்ததை செவிகொடுத்து கேட்டார்.—1 இராஜாக்கள் 2:19, 20.

14. சபையிலுள்ள முதியவர்களை நாம் எவ்வாறு கனம் பண்ணலாம்?

14 நம் ஆவிக்குரிய குடும்பம் மிகப் பெரியது. இதில் அநேக முதியவர்கள் இருப்பதால், ‘முந்திக்கொண்டு’ அவர்களை கனம்பண்ணுவதற்கு அருமையான வாய்ப்பு நமக்கு இருக்கிறது. (ரோமர் 12:10) அந்த வயதானவர்களால் முன்பு உற்சாகமாக வேலை செய்ததுபோல இப்போது செய்ய முடியாது, இதனால் அவர்கள் மனம் உடைந்துவிடுகின்றனர். (பிரசங்கி 12:1-7) உதாரணத்திற்கு, அபிஷேகம் பண்ணப்பட்ட வயதான சாட்சி ஒருவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் படுத்தபடுக்கையாய் இருந்தார்; அவர் இவ்வாறு சொன்னார்: “நான் மரித்து உயிர்த்தெழுந்து மீண்டும் என் வேலையை துவங்குவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.” அப்படிப்பட்ட வயதானவர்களுக்கு உரிய கனத்தையும் மரியாதையையும் செலுத்தும்போது அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். “நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்”ணுங்கள் என இஸ்ரவேலர்கள் கட்டளையிடப்பட்டனர். (லேவியராகமம் 19:32) அவர்கள் நமக்கு தேவை என்பதையும் அவர்களை நாம் போற்றுகிறோம் என்பதையும் வயதானவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் நாம் நடந்துகொள்ள வேண்டும், அவ்வாறு அவர்களுக்கு கரிசனை காட்ட வேண்டும். ‘எழுந்து’ மரியாதை கொடுப்பது என்பது, உட்கார்ந்து அவரது அனுபவங்களை காதுகொடுத்து கேட்பதையும் உட்படுத்துகிறது. அவ்வாறு செய்வது அந்த வயதானவருடைய மதிப்பை அதிகரிப்பதோடு, நம்முடைய ஆவிக்குரிய நிலையையும் உயர்த்தும்.

‘கனம்பண்ணுவதில் முந்திக்கொள்ளுங்கள்’

15. சபை அங்கத்தினர்களை கனம் பண்ணுவதற்கு மூப்பர்கள் என்ன செய்யலாம்?

15 மூப்பர்கள் நல்ல முன்மாதிரிகளாக விளங்கும்போது, சபையிலுள்ள மற்ற அங்கத்தினர்கள் அவர்களை பின்பற்றி வேகமாக முன்னேறுகின்றனர். (1 பேதுரு 5:2, 3) சபை அங்கத்தினர்களுக்கு பிரச்சினைகள் இருந்தாலும்சரி, இல்லாவிட்டாலும்சரி, மந்தைமீது அக்கறையுள்ள மூப்பர்கள் அவர்களை சந்திக்க முயற்சிக்கின்றனர். மூப்பர்களுக்கு எவ்வளவு வேலையிருந்தாலும் சபையில் உள்ள இளைஞர்கள், குடும்பத் தலைவர்கள், ஒற்றைத் தாய்மார்கள், இல்லத்தரசிகள், முதியவர்கள் என எல்லோரையும் சந்திக்கின்றனர். சபை அங்கத்தினர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்களோ அதற்கு மூப்பர்கள் செவிகொடுக்கின்றனர், அதோடு சபையில் அவர்கள் செய்யும் வேலைகளுக்காக பாராட்டுகின்றனர். மூப்பர், சபையிலுள்ள சகோதர சகோதரிகள் செய்யும் நல்ல காரியங்களை கவனித்து அதற்கு போற்றுதலை தெரிவிக்கிறார். அவ்வாறு செய்வதன் மூலம், தம்முடைய பூமிக்குரிய சிருஷ்டிகளை பாராட்டும் யெகோவாவை அவர் பின்பற்றுகிறார்.

16. சபையிலுள்ள மற்றவர்களைப் போலவே ஏன் நாம் மூப்பர்களை கனம் பண்ண வேண்டும்?

16 யெகோவா தேவனை பின்பற்றும் மூப்பர்கள், பவுல் கொடுத்த பின்வரும் அறிவுரையை பின்பற்றுவதில் சிறந்த முன்மாதிரிகளாக இருக்கின்றனர்: “சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.” (ரோமர் 12:10) ஆனால், ஒருவருடைய ஸ்தானத்தை முக்கியமாக கருதும் பகுதிகளில் அல்லது தேசங்களில் வாழும் மூப்பர்களுக்கு இது கொஞ்சம் கடினமாக இருக்கும். உதாரணமாக, ஒரு கிழக்கத்திய நாட்டில், “சகோதரர்” என்ற சொல்லுக்கு அவர்களுடைய மொழியில் இரு சொற்கள் உள்ளன. ஒன்று மதிப்புடையவர்களுக்கும் மற்றொன்று சாதாரணமாக இருப்பவர்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. சமீப காலம் வரை, மூப்பர்களையும், முதிர்ந்தவர்களையும் அழைப்பதற்கு சபை அங்கத்தினர்கள் மதிப்பிற்குரிய சொல்லை பயன்படுத்தினர். அதே சமயத்தில், சபையிலுள்ள மற்ற சகோதரர்களை அழைப்பதற்கு சாதாரண சொல்லை உபயோகித்தனர். இருப்பினும், இயேசு தம் சீஷர்களிடம் சொன்ன விதமாக, ‘எல்லாருமே சகோதரராயிருப்பதால்’ எல்லோரையும் சாதாரண சொல்லை உபயோகித்தே அழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். (மத்தேயு 23:8) இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வு மனப்பான்மை மற்ற நாடுகளில் இந்தளவுக்கு பரவலாக இல்லாதபோதிலும், ஒருவரை உயர்வாகவும் மற்றவரை தாழ்வாகவும் பார்ப்பது மனித இயல்பு. எனவே நாம் இதைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.—யாக்கோபு 2:4.

17. (அ) எளிதில் அணுகக்கூடியவராக மூப்பர் இருக்க வேண்டியது ஏன் அவசியம்? (ஆ) சபை அங்கத்தினர்களை நடத்தும் விஷயத்தில் எவ்வாறு மூப்பர்கள் யெகோவாவின் முன்மாதிரியை பின்பற்றலாம்?

17 சபையிலுள்ள மூப்பர்களை “இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்” என பவுல் சொன்னது உண்மைதான், இருப்பினும் அவர்கள் இன்னும் நம்முடைய சகோதரர்கள்தான் என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும். (1 தீமோத்தேயு 5:17) நாம், சர்வலோக பேரரசருடைய “கிருபை நிறைந்த சிங்காசனத்தை அணுகி, தாராளமாக பேசு”ம்போது யெகோவாவை பின்பற்றும் மூப்பர்களை ஏன் அணுக முடியாது? (எபிரேயர் 4:16, NW; எபேசியர் 5:1) மற்றவர்கள் தன்னை எளிதில் அணுகுகிறார்களா அல்லது தன்னை பார்த்து ஒதுங்குகிறார்களா என்பதை ஒரு கண்காணி எவ்வாறு தெரிந்துகொள்ளலாம்? சபையார், எப்போது வேண்டுமானாலும் அவரிடம் வந்து தங்களுடைய கருத்துக்களை சொல்கிறார்களா அல்லது அவர்களே அவரை அணுகி ஆலோசனை கேட்கிறார்களா என்பதை வைத்து அதை அவர் தெரிந்துகொள்ளலாம். யெகோவா தம்முடைய வேலைகளில் மற்றவர்களையும் பயன்படுத்துவதிலிருந்து ஒரு பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதன் மூலம் அவர் அவர்களுக்கு மதிப்பு கொடுக்கிறார். ஓர் உடன் சாட்சி ஏதோ ஒரு விஷயத்தில் மூப்பருக்கு ஒரு யோசனை சொல்கிறார் என வைத்துக்கொள்வோம், அந்த யோசனை நடைமுறைக்கு ஒத்துவராததாக இருந்தபோதிலும், அவருக்கு இருக்கும் அக்கறைக்காக மூப்பர் அவரை பாராட்ட வேண்டும். ஆபிரகாம் கேள்வி மேல் கேள்வி கேட்டபோதிலும், ஆபகூக் வேதனையில் புலம்பினபோதிலும் யெகோவா அவர்களை எவ்வாறு நடத்தினார் என்பதை நினைவில் வையுங்கள்.

18. மூப்பர்கள் உதவி தேவைப்படும் நபரை திருத்தும்போது எவ்வாறு யெகோவாவை பின்பற்றலாம்?

18 சபையில் உள்ள சில கிறிஸ்தவர்களை அவ்வப்போது திருத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. (கலாத்தியர் 6:1) அவர்கள் தவறு செய்திருந்தாலும் யெகோவாவின் பார்வையில் விலையேறப்பெற்றவர்கள், எனவே அவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும். “நான் ஒரு சிலரிடம் ஆலோசனை கேக்கறதுக்கு தயங்கவே மாட்டேன், ஏன்னா அவங்க என்னை மரியாதையோட நடத்துறாங்க,” என்றார் ஒரு சாட்சி. ஒருவர் சிட்சையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? அவரை மதிப்புடன் நடத்த வேண்டும். பெரும்பாலானோர் அவ்விதம் நடத்தப்படும்போது சிட்சையை ஏற்றுக்கொள்கின்றனர். தவறான படியை எடுத்த நபர் பேசும்போது, எவ்வளவு நேரமானாலும் பொறுமையாக செவிகொடுத்து கேளுங்கள். அப்போது அந்த நபரும் அறிவுரைகள் கொடுக்கப்படும்போது செவிகொடுத்து கேட்பார். யெகோவாவுக்கு இஸ்ரவேலர்கள்மீது இருந்த இரக்கத்தின் காரணமாக மீண்டும் மீண்டும் அவர்களிடம் பொறுமையாக நியாயம் காட்டி பேசினார் என்பதை நினைவில் வைக்க வேண்டும். (2 நாளாகமம் 36:15; தீத்து 3:2) உதவி தேவைப்படுவோருக்கு புரிந்துகொள்ளுதலுடனும் இரக்கத்துடனும் சிட்சை அளிக்கப்படும்போது, அது அவர்களுடைய இருதயத்தை எளிதில் சென்றெட்டும்.—நீதிமொழிகள் 17:17; பிலிப்பியர் 2:2, 3; 1 பேதுரு 3:8.

19. கிறிஸ்தவ நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத ஆட்களை நாம் எவ்வாறு கருதலாம்?

19 எதிர்காலத்தில் ஆவிக்குரிய சகோதரராக ஆகும் வாய்ப்புடையவர்களையும் மதிப்புடன் நடத்த வேண்டும், ஏனெனில் இதுவும் மற்றவர்களை கனம்பண்ணுவதன் ஒரு பாகமே. சிலர் இப்போது நம்முடைய செய்தியை உடனடியாக ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம், இருப்பினும் அவர்களிடம் நாம் பொறுமையாக இருக்க வேண்டும், அவர்களையும் மதிக்க வேண்டும். “யாரும் அழிந்துபோகாமல், எல்லாரும் மனம் மாற வேண்டுமென” யெகோவா விரும்புகிறார். (2 பேதுரு 3:9, பொ.மொ.) அப்படியானால் யெகோவாவின் நோக்குநிலையை நாம் கொண்டிருக்க வேண்டாமா? பொதுவாக மக்களிடம் நாம் சிநேகப்பான்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்; இதன் மூலம் எதிர்காலத்தில் அவர்களிடம் சாட்சிகொடுப்பதற்கான வழியை திறந்துவைக்கிறோம். சிநேகப்பான்மையுடன் நடந்துகொள்கிறேன் என்று சொல்லி தன்னுடைய ஆவிக்குரிய நிலைக்கே பங்கம் ஏற்படுத்தக்கூடிய நட்பை, ஒருவர் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். (1 கொரிந்தியர் 15:33) ஆனாலும் நம் நம்பிக்கைகளை ஏற்காத ஆட்களை இழிவாக மட்டம் தட்டுவதற்கு மாறாக “மனித நேயத்துடன்” நடத்த வேண்டும்.—அப்போஸ்தலர் 27:3, பொ.மொ.

20. யெகோவா மற்றும் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரி நம்மை என்ன செய்யத் தூண்ட வேண்டும்?

20 ஆம், யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் நம் ஒவ்வொருவரையும் மதிப்புள்ளவர்களாக கருதுகிறார்கள். அவர்களுடைய முன்மாதிரியை நாம் எப்போதும் மனதில்கொண்டு, ஒருவரையொருவர் கனம் பண்ணுவதற்கு முந்திக்கொள்வோமாக. அத்துடன் இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகள் நம் மனதைவிட்டு நீங்காதிருக்கட்டும்: ‘நீங்கள் யாவரும் சகோதரரே.’—மத்தேயு 23:8, பொ.மொ.

என்ன கற்றுக்கொண்டோம்?

• உடன் வணக்கத்தாரை நீங்கள் எவ்வாறு கருதவேண்டும்?

• மற்றவர்களை கனம்பண்ணும் விஷயத்தில் யெகோவா மற்றும் இயேசுவின் முன்மாதிரி எவ்வாறு உங்களுக்கு உதவுகிறது?

• எவ்வாறு கணவர்களும் பெற்றோரும் மற்றவர்களை கனம்பண்ணலாம்?

• உடன் கிறிஸ்தவர்கள் எல்லோரும் தங்கள் சகோதரர்களே என்ற மனப்பான்மை மூப்பர்களுக்கு இருந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்?

[கேள்விகள்]

[பக்கம் 18-ன் படம்]

பாராட்டுதல் மூலமாக உங்கள் மனைவியை கனம் பண்ணுங்கள்

[பக்கம் 18-ன் படம்]

காதுகொடுத்து கேட்பதன் மூலம் உங்கள் பிள்ளைகளுக்கு மதிப்பு கொடுங்கள்

[பக்கம் 18-ன் படம்]

சபை அங்கத்தினர்களை மதிப்புடன் நடத்துங்கள்