Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிபூரணவாதம்—ஏன் தவிர்க்க வேண்டும்?

பரிபூரணவாதம்—ஏன் தவிர்க்க வேண்டும்?

பரிபூரணவாதம்—ஏன் தவிர்க்க வேண்டும்?

நீங்கள் எதையும் நன்றாக செய்வதற்கு முழு மூச்சோடு முயற்சி செய்கிறீர்களா? அப்படியானால், உங்களுடைய கடின முயற்சி உங்களுக்கும் பிறருக்கும் பயனளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் சிலர் எல்லாவற்றையும் “பூதக்கண்ணாடியில்” பார்க்கும் பரிபூரணவாதிகளைப்போல (perfectionists) மாறியிருக்கின்றனர். இது எதை குறிக்கிறது?

“பரிபூரணவாதம்” (perfectionism) என்றால் என்ன? “பரிபூரணமற்ற எதையும் ஏற்றுக்கொள்ளாத மனநிலை” என அர்த்தப்படுத்துகிறது. இப்படிப்பட்டவர்களை நீங்களும் சந்தித்திருக்கலாம். மற்றவர்களிடம் மிதமிஞ்சி எதிர்பார்ப்பது பல சிக்கல்களுக்குக் காரணமாகி அதிருப்தியையும் மனச்சோர்வையும் ஏற்படுத்தலாம். பரிபூரணவாதம்—அதாவது, மட்டுக்குமீறிய, நியாயமற்ற கோரிக்கைகளை முன் வைப்பது—உண்மையில் சரியல்ல என சமநிலையான ஆட்கள் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். இது மாற்றிக்கொள்ள வேண்டிய குணம். ஆனால் நம்மிடமே அந்தக் குணம் இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்வது முதலாவதாக கஷ்டம், அதனால் அதை மாற்றிக்கொள்வதும் கஷ்டமாகிவிடுகிறது.

நெல்சனுக்கு பொறுப்புகள் அதிகம்; பிரச்சினைகளும் கழுத்தை நெரிக்கின்றன. உற்பத்தியிலேயே அவர் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பவர். போட்டி மிகுந்த தொழில் சந்தையில் வெற்றிபெற பரிபூரணவாதம் அவசியம் என நினைப்பவர். நெல்சனுடைய திறமையை சிலர் மெச்சுகின்றனர். ஆனால் அளவுக்குமீறி எதிர்பார்க்கும் அவருடைய குணத்தால்தான் அவருக்குத் தலைவலியும் கவலையுமே. நீங்களும் நெல்சனை போன்றவரா?

பெரியவர்களுக்கு மட்டுமா இந்தப் பிரச்சினை? சிறுவர்களுக்கும்தான். ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த ரீட்டா சிறுமியாக இருந்தபோது ஸ்கூலுக்குப் போக அவளுக்கு ரொம்ப பிடிக்கும். எல்லாரையும்விட கெட்டிக்காரியாக காட்டிக்கொள்ள அவள் விரும்பவில்லை என்றாலும், முதல் ‘ரேங்க்’ எடுக்கவில்லையென்றால் அப்படியே இடிந்துபோய் விடுவாள். ரீட்டா இவ்வாறு கூறுகிறாள்: “சின்ன வயசிலிருந்தே என்னை மத்தவர்களோட ஒப்பிட்டுப் பார்ப்பேன். அவங்களுக்கு மட்டும் நேரம் எங்கிருந்து கிடைக்குது? எப்பவும் அவதி அவதியாக வேலை செய்திட்டிருப்பதால் எனக்கு மட்டும் ஓய்வே இல்லை.”

சிறுமி மரியாவை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களைப் போல படம் வரைய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அழுதே விடுவாள். அது மட்டுமா, இசையில் புலமை பெற வேண்டுமென்ற தீராத வேட்கையால், பாடி மகிழ்வதற்குப் பதிலாக எப்போதுமே டென்ஷனாகிவிடுவாள். பிரேஸிலை சேர்ந்த டானியாவோ முன்ஜாக்கிரதையாக போட்டியைத் தவிர்க்க முயன்றாள். ஆனால், ஸ்கூலிலும் சரி வீட்டிலும் சரி, எட்ட முடியாத இலக்குகளையே வைத்துக்கொண்டதாக கூறினாள். தன்னுடைய வேலையை “பக்காவா” செய்தால்தான் மற்றவர்கள் தன்னை விரும்புவார்கள் என்று நினைத்தாள். அதையே மற்றவர்களிடமும் எதிர்பார்த்ததால் அவளுக்கு மிஞ்சியது ஏமாற்றமும் வருத்தமும்தான்.

திறமை, ஊக்கம், சுயதிருப்தி ஆகியவை முக்கியமானவையே. இருந்தாலும், எட்டாக் கனியை எட்டிப்பிடிக்க முயன்றால், தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற பயமும் வேண்டாத எண்ணங்களும் உருவாகலாம். பள்ளிப் பாடங்களிலும் சரி விளையாட்டுகளிலும் சரி, பிள்ளைகள் முதலிடம் பிடிக்க வேண்டும் என பெற்றோர்கள் ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் பிள்ளைகளோ பெற்றோரை திருப்திப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றனர். உதாரணமாக, ரிக்கார்டோவின் அம்மா, தன் மகன் டாக்டராக வேண்டும், பியானோ வாசிக்க வேண்டும், நிறைய மொழி பேச வேண்டும் என்றெல்லாம் மனக்கோட்டை கட்டினார்கள். இப்படிப்பட்ட மட்டுக்குமீறிய ஆசைகள் பிரச்சினைகளையும் ஏமாற்றங்களையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

பரிபூரணவாதம்—ஏன் தவிர்க்க வேண்டும்?

தரம், நயம், அழகு இதற்கெல்லாம் இன்று அதிக கிராக்கியாகிவிட்டது. ஆகவே, தொழில் சந்தையில் எதற்கெடுத்தாலும் போட்டாபோட்டிதான். வெற்றி பெறவில்லை என்றால் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் போகும் என்ற பயம் வேறு. சில தொழிலாளிகள், புதிய சாதனை படைக்க விரும்பி பெரும் தியாகங்களைச் செய்யும் விளையாட்டு வீரனைப் போல ஆகிவிடுகின்றனர். ஒரு விளையாட்டு வீரன் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் அதிக பயிற்சி செய்கிறான்; இதற்காக ஒருவேளை ஸ்டீராய்டு போன்ற போதைப்பொருட்களை உபயோகிக்கவும் தயங்கமாட்டான். சிறந்து விளங்க வேண்டுமென்ற நல்ல எண்ணம்போய், “தோல்வியைத் தழுவிவிடுவோமோ என்ற பயமும்” “முதலிடம் பிடிக்க வேண்டுமென்ற வெறியும்” உண்டாகும்.—த ஃபீலிங் குட் ஹான்ட்புக்.

கலை துறையிலும் விளையாட்டு துறையிலும் தாங்கள் இன்னும் முன்னேற்றம் செய்ய வாய்ப்பு இருந்துகொண்டே இருப்பதாக சிலர் நினைப்பது உண்மைதான். இருந்தாலும், டாக்டர் ராபர்ட் எஸ். எலியட் சொல்கிறபடி, “பரிபூரணவாதம் என்பது ஒருபோதும் நனவாகாத எதிர்பார்ப்பு. குற்றவுணர்வு, குறைகளை மறைக்க முயலுவது, ஏளனம் செய்யப்படுவோமோ என்ற பயம் போன்றவற்றையே அது உண்டாக்கும்.” ஆகவே, ஞானியாகிய சாலொமோனின் வார்த்தைகள் எந்தளவுக்கு உண்மையாக இருக்கிறது: “மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.”—பிரசங்கி 4:4.

நீங்கள் பரிபூரணவாதியாக இருந்தால் என்ன செய்யலாம்? நீங்கள் எந்தளவு முயன்றாலும் மிஞ்சுவதெல்லாம் ஏமாற்றம்தானா? ஓவராக எதிர்பார்த்து டென்ஷன் அடைவதை தவிர்க்க விரும்புகிறீர்களா? பரிபூரண வாழ்க்கை என்றால் என்ன? திறமைக்கு மிஞ்சி எதிர்பார்க்காமல், அதேசமயம் உங்கள் முழு திறமையையும் பயன்படுத்த ஏங்குகிறீர்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள், எதிலும் குறைவுபடும் மனிதர்கள் கடவுள் தந்த திறமையால் இந்தளவுக்கு சாதிக்கையில், பரிபூரண சூழலில் கடவுளுடைய உதவியுடன் எந்தளவுக்கு சாதிக்க முடியும்!

[பக்கம் 4-ன் படம்]

பிள்ளைகளிடம் பெற்றோர் அளவுக்கு மிஞ்சி எதிர்பார்க்கின்றனர்