Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பார்க்க முடியாததை நீங்கள் நம்புகிறீர்களா?

பார்க்க முடியாததை நீங்கள் நம்புகிறீர்களா?

பார்க்க முடியாததை நீங்கள் நம்புகிறீர்களா?

‘எதையும் நான் பார்க்காம நம்புறதில்ல’ என்று யாராவது சொன்னால், அது நூற்றுக்கு நூறு உண்மையல்ல. ஏனென்றால் நாம் அனைவருமே, பார்க்க முடியாதவற்றை நம்பத்தான் செய்கிறோம்.

உதாரணமாக, காந்த சக்தியை நிரூபிக்க இவ்வாறு ஒரு சோதனையை நீங்கள் பள்ளியில் செய்திருக்கலாம்: இரும்புத் தூள்களை ஒரு காகிதத்தின்மீது தூவ வேண்டும். பின்பு அந்தக் காகிதத்தை காந்தத்தின்மீது வைக்க வேண்டும். ஏதோ மந்திர வித்தைபோல் அந்தக் காகிதம் அதிர்வுறுகையில், அந்த இரும்புத் தூள்கள் காந்தம் இருக்குமிடத்தில் ஒன்று குவியும். இப்படி செய்யும்போது அந்தக் காந்த சக்தியை நீங்கள் உண்மையில் கண்ணால் காண்கிறீர்களா? இல்லை, ஆனால் அந்த இரும்புத் தூள்களின்மீது அதன் பாதிப்பு தெளிவாக தெரிகிறது. அது, காந்த சக்தி இருக்கிறது என்ற அத்தாட்சியை உங்களுக்கு அளிக்கிறது.

மற்ற பல காரியங்களை கண்ணால் காணாவிட்டாலும் எவ்வித சந்தேகமுமின்றி நம்புகிறோம். ஓர் அழகிய ஓவியத்தை அல்லது சிற்பத்தைக் கண்டு ரசிக்கையில், ஓர் ஓவியரோ சிற்பியோ இருப்பதை நாம் சந்தேகிப்பதில்லை. ஆகையால், ஒரு நீர்வீழ்ச்சியைக் கண்டு பிரமிக்கையிலும் சூரிய அஸ்தமனத்தில் மனதை பறிகொடுக்கையிலும், அவை தலைசிறந்த ஓவியரின் அல்லது கைதேர்ந்த சிற்பியின் கை வண்ணமே என்ற சிந்தனை மனதில் எழ வேண்டுமல்லவா?

சிலர் ஏன் நம்புவதில்லை?

சர்ச்சுகளில் போதிக்கப்படும் போதனைகளின் காரணமாக, சிலர் கடவுள் நம்பிக்கையை இழந்துவிட்டிருக்கிறார்கள்! கெட்டவர்களை எரிநரகத்தில் கடவுள் வதைக்கிறார் என்று போதிக்கப்பட்ட நார்வேஜிய நாட்டை சேர்ந்த ஒருவர், ‘மக்களை வதைப்பவரெல்லாம் ஒரு கடவுளா’ என எண்ணி நாத்திகராகிவிட்டார்.

ஆனால் பிற்பாடு, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரின் உதவியால் பைபிளை ஆராய்வதற்கு அவர் ஒப்புக்கொண்டார். பொல்லாதவர்கள் எரிநரகத்தில் வதைக்கப்படுகிறார்கள் என்று பைபிள் கற்பிக்கிறதில்லை என்பதை அறிந்து அவர் ஆச்சரியப்பட்டார். மரணத்தை நித்திரைக்கு பைபிள் ஒப்பிடுகிறது. பிரேதக் குழியில் எந்த வேதனையையும் உணருவதில்லை; எந்த நினைவும் நமக்கு இருப்பதில்லை என்றே பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 9:5, 10) மேலும், திருந்தாத பொல்லாதவர்கள் என்று கடவுள் தீர்க்கும் மனிதர்கள், பிரேதக் குழியிலேயே என்றென்றும் இருப்பார்கள் எனவும் அவர் கற்றார். (மத்தேயு 12:31, 32) மரித்த மற்றவர்கள், பூங்காவனம் போன்ற பரதீஸிய நிலைமைகளில் என்றென்றும் வாழ்வதற்காக கடவுளின் ஏற்ற காலத்தில் மீண்டும் உயிருக்குக் கொண்டுவரப்படுவார்கள். (யோவான் 5:28, 29; 17:3) இந்த விளக்கம் நியாயமானதாக இருந்தது. “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்ற பைபிளின் கூற்றுடன் ஒத்திருந்தது. (1 யோவான் 4:8) நேர்மையான இந்த மனிதர் கடவுளுடைய வார்த்தையை தொடர்ந்து படித்தார், காலப்போக்கில் பைபிளின் கடவுளையும் நேசிக்க ஆரம்பித்தார்.

திரும்பும் திசையெங்கும் அநீதியும் அக்கிரமும் இருப்பதாலும் அன்புள்ள சிருஷ்டிகர் ஒருவர் இருப்பதை பலர் ஏற்க மறுக்கிறார்கள். “கீழே இங்கு நமக்கு இவ்வளவு அநியாயமும் அக்கிரமமும் நிறைந்திருக்க, அங்கு மேலே, சர்வ வல்லவரும் தயாள குணமுள்ளவருமான ஒரு கடவுள் எவ்வாறு இருக்க முடியும்?” என வானத்தை சுட்டிக்காட்டி கேட்டார் ஸ்வீடன் நாட்டவர் ஒருவர். அவருடைய கேள்விக்கு ஒருவரும் பதில்சொல்ல முடியாமல் போனதனால், அவருங்கூட நாத்திகரானார். நாளடைவில் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்கத் தொடங்கினார். கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதிக்கிறார் என்ற, காலங்காலமாக கேட்கப்பட்டுவரும் கேள்விக்குத் திருப்திகரமான பதிலை கடவுளுடைய வார்த்தை அளிக்கிறதென்று கற்றறிந்தார். a

அக்கிரமம் தொடர்ந்து இருப்பதுதானே, கடவுள் இல்லை என்று நிரூபித்து விடுவதில்லை என இந்த நேர்மையான மனிதர் கற்றார். உதாரணமாக: கறியை வெட்டுவதற்காக ஒருவர் ஒரு கத்தியை உண்டாக்கலாம். வாடிக்கையாளரோ அந்தக் கத்தியை வாங்கி, கறியை வெட்டுவதற்கு பதில் ஒருவரின் கழுத்தை வெட்டிவிடலாம். அந்தக் கத்தியை துஷ்பிரயோகம் செய்ததால், அதை யாரும் உண்டாக்கவில்லை என்று சொல்ல முடியாது. அவ்வாறே, இந்தப் பூமி, அதை உண்டாக்கியதன் நோக்கத்திற்கு இசைவாக பயன்படுத்தப்படாததால், அதற்கு ஒரு சிருஷ்டிகர் இல்லை என்று அர்த்தப்படுகிறதில்லை.

கடவுளுடைய செயல் பரிபூரணமானது என்று பைபிள் போதிக்கிறது. “அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.” (உபாகமம் 32:4) கடவுள் மனிதனுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்கிறார், ஆனால் அவருடைய ஈவுகளில் சில தவறாகப் பயன்படுத்தப்பட்டு, சொல்லமுடியா துன்பங்களை உண்டாக்கியிருக்கின்றன. (யாக்கோபு 1:17) எனினும், துன்பத்திற்கு ஒரு முடிவை கடவுள் கொண்டுவருவார். அதன்பின், “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, . . . என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11, 29.

தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட ஸ்வீடன் நாட்டவர், சக மனிதர் துன்பம் அனுபவிப்பதைக் கண்டபோது மனம் கலங்கினார். மெய்யாகவே, மற்றவர்கள்மீது அவர் காட்டிய பரிவு, கடவுள் இருப்பதை உறுதி செய்கிறது. எவ்வாறு?

கடவுள் இல்லையென்றால் பரிணாமம்தான் உண்மையாக இருக்க முடியுமென பெரும்பான்மையர் முடிவெடுக்கின்றனர். “வல்லவன வாழ்தல்” என்பதை பரிணாமக்காரர் போதிக்கிறார்கள். அதாவது மனிதரும் மிருகங்களும் பிழைப்பதற்கு தங்கள் இனங்களுக்குள் போட்டியிடுவதாக கற்பிக்கிறார்கள். வல்லது பிழைக்கிறது; மிகப் பலவீனமானது சாகிறது, இதுவே இயற்கை என்று அவர்கள் சொல்கின்றனர். ஆனால், பலமானதற்கு இடமளிக்க பலவீனமானது சாவது “இயற்கை” என்றால் அந்த ஸ்வீடன் நாட்டவரைப்போல் பலமான மனிதர் சிலர் தங்கள் சக மனிதர் துன்பப்படுவதைக் கண்டு மனம் கலங்குவது ஏன்?

கடவுளை அறியத் தொடங்குவது

கடவுளுக்கு மனித உருவில்லாததால் நாம் அவரைப் பார்க்க முடியாது. எனினும், நாம் அவரை அறியும்படி கடவுள் விரும்புகிறார். கடவுளுடன் நாம் அறிமுகமாகக்கூடிய ஒரு வழி, அவருடைய வியக்கத்தக்க செயல்களை—சிருஷ்டிப்பின் “ஓவியங்களையும்” “சிற்பங்களையும்”—கூர்ந்து கவனிப்பதாகும். ரோமர் 1:20-ல் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “காணப்படாதவைகளாகிய அவருடைய [கடவுளுடைய] நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்.” ஆம், ஓர் ஓவியத்தை அல்லது சிற்பத்தை கூர்ந்து ஆராய்வது, அந்த கலைஞரின் திறமையை பற்றி அதிகமாக அறிந்துகொள்ள உதவுவதுபோல், கடவுளுடைய அதிசயமான படைப்புகளை ஆராய்வது கடவுளுடைய பண்புகளை மேலும் நன்றாக அறிந்துகொள்ள உதவும்.

நிச்சயமாகவே, கடவுளுடைய படைப்புகளை ஆராய்வது மட்டுமே வாழ்க்கை சம்பந்தமான எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்காது. ஆனால், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை ஆராய்வதன் மூலம் அத்தகைய கேள்விகளுக்குப் பதில்களை நாம் கண்டடைய முடியும். திறந்த மனதுடன் பைபிளை வாசித்ததால், மேலே குறிப்பிட்ட அந்த இருவரும், கடவுள் இருக்கிறார், நம்மீது அக்கறை கொண்டிருக்கிறார் என்ற முடிவுக்கு வந்தனர்.

[அடிக்குறிப்பு]

a கடவுள் அக்கிரமத்தை அனுமதிப்பதற்கான காரணங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு, உவாட்ச்டவர் சொஸைட்டி பிரசுரித்த உங்கள் மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? என்ற ஆங்கில புத்தகத்தில் 10-ம் அதிகாரத்தைக் காண்க.

[பக்கம் 28-ன் படத்திற்கான நன்றி]

J. Hester and P. Scowen (AZ State Univ.), NASA