Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ராபின்ஸன் க்ரூஸோ தீவில் மீட்புப் பணி

ராபின்ஸன் க்ரூஸோ தீவில் மீட்புப் பணி

ராபின்ஸன் க்ரூஸோ தீவில் மீட்புப் பணி

பசிபிக் பெருங்கடலில் மிதக்கும் மூன்று தீவுகளில் ஒன்றுதான் ராபின்ஸன் க்ரூஸோ. ஜுவன் ஃபெர்னான்டிஸ் என்று அழைக்கப்படும் தீவுக் கூட்டத்தில் இது இருக்கிறது. இது சிலி நாட்டு கடலோரப் பகுதியிலிருந்து ஏறக்குறைய 640 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. a இதன் பரப்பளவு 93 சதுர கிலோமீட்டர்தான். ராபின்ஸன் க்ரூஸோ எனப்படும் பிரசித்திப்பெற்ற ஆங்கில நாவலின் அடிப்படையில் இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இந்த நாவலின் ஆசிரியர் டான்யல் டீஃபோ. இந்த நாவல், சுமார் நான்கு வருடங்களாக இந்தத் தீவில் தனியாக வாழ்ந்த, ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்ஸாந்தர் செல்கெர்க் என்பவருடைய சாகசங்களை அடிப்படையாக கொண்டது.

இந்தத் தீவிலுள்ள அறிவிப்பு பலகையின் ஒரு பகுதியில், “தனிமையின் கொடுமையில் சிக்கிக்கொண்ட ஸ்காட்லாந்து மாலுமி அலெக்ஸாந்தர் செல்கெர்க், தன்னை மீட்டுச் செல்ல கப்பல் ஏதாவது வருமா என்ற ஏக்கத்துடன் நான்கு வருடங்களாக தினமும் அடிவானத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசியில், அவர் மீட்கப்பட்டு தாய்நாட்டுக்கு திரும்பினார். ஆனால், அந்தக் குட்டி பாரடைஸில் சொந்த உலகில் வாழ்ந்து பழகிவிட்ட அவருக்கு சாதாரண உலகம் இனியும் எப்படி பிடிக்கும்? அந்த அழகிய தீவை நினைத்து அவர் இவ்வாறு ஏங்கியதாக சொல்லப்படுகிறது: “என் நேசத்திற்குரிய தீவே! உன்னை விட்டு நான் வந்தது ஏனோ!”

காலப்போக்கில், அந்தத் தீவு, கத்தோலிக்க சர்ச்சின் “கொள்கையை ஏற்றுக்கொள்ளாத” குற்றவாளிகள் வசிக்கும் ஸ்தலமாக மாறியது. இங்கு, அவர்களுக்கு கடுந்தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு காலத்தில் செல்கெர்க் கண்ட அந்த இனிய தீவிற்கும், இப்போதுள்ள தீவிற்கும் இடையே எவ்வளவு மாற்றம்! என்றபோதிலும், உலகத்தின் பல பாகங்களில் இல்லாத நிம்மதியை அந்தத் தீவிலுள்ள வாசிகள் இப்போது அனுபவித்து மகிழ்கிறார்கள். உலகின் பல்வேறு தீவுகளுக்கே உரிய, பரபரப்பில்லாத நிதானமான வாழ்க்கை முறையே இத்தீவிலும் காணப்படுகிறது. இதனால் அங்கிருப்பவர்களிடம் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி பேச்செடுத்து எளிதில் உரையாட முடிகிறது.

ராபின்ஸன் க்ரூஸோவின் அதிகாரப்பூர்வ ஜனத்தொகை 500. என்றாலும், வருடத்தின் பெரும்பகுதியில் 400 பேரே அந்தத் தீவில் காணப்படுகிறார்கள். இதற்கு ஓரளவு காரணம் பள்ளிக் கூடங்கள் திறந்திருக்கும் காலத்தின்போது சில தாய்மாரும் அவர்களுடைய பிள்ளைகளும் சிலி நாட்டுக்கு சென்றுவிடுகின்றனர். இவர்கள் குடும்பத்தின் மீதிபேரோடு அளவளாவி மகிழ்வதற்காக விடுமுறை காலத்தில் மாத்திரமே தீவுக்குத் திரும்பிவருகிறார்கள்.

ராபின்ஸன் க்ரூஸோ அழகிய பூங்காவனம் போல் எங்கும் பச்சைப்பசேல் என்று பசுமையாக காட்சியளித்தாலும், தீவினர் சிலர் ஆன்மீகப் பசியால் தவிக்கின்றனர், பல கேள்விகளுக்கு விடைதேடி அலைகின்றனர்; ஆன்மீக ரீதியில் தாங்கள் மீட்கப்பட வேண்டுமென பலர் நினைக்கிறார்கள்.

ஆன்மீக மீட்புப் பணி

இத்தகைய ஆன்மீக மீட்புப் பணி சுமார் 1979-ல் தொடங்கியது. சிலியிலுள்ள சான்டியாகோவில், யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படித்துக்கொண்டிருந்த ஓர் பெண்மணி, இந்தத் தீவுக்கு மாறிச்சென்றார். அப்போது, கற்றிருந்ததை மற்றவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். சிறிது காலத்திற்குப் பின்பு, ஒரு சபை மூப்பர், எதேச்சையாக அந்தத் தீவுக்குச் சென்றபோது, அந்த பெண்மணியின் உதவியால் பைபிள் படித்துக் கொண்டிருந்தவர்களின் ஒரு சிறிய தொகுதியைக் கண்டு அசந்துபோனார். மூன்று மாதங்களுக்குப் பின்பு மறுபடியும் அந்த மூப்பர் அந்தத் தீவுக்குச் சென்றபோது, தனிமையில் பைபிள் போதித்த அந்த பெண்மணியும், அவர்களுடன் பைபிள் படித்துவந்த இன்னும் இருவரும் முழுக்காட்டப்படுவதற்கு தயார்நிலையில் இருந்தார்கள். அந்த மூப்பரே முழுக்காட்டுதல் பேச்சுக்கொடுத்து அவர்களை முழுக்காட்டினார். பிற்பாடு, புதிதாய் முழுக்காட்டப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்களில் ஒருவருக்குத் திருமணம் நடந்தது. அவர், தன் கணவரோடு சேர்ந்து இந்த மீட்புப் பணியைத் தொடர்ந்தார். அவரது கணவர் ஓர் எளிய ராஜ்ய மன்றத்தைக் கட்டுவதில் தலைமை வகித்தார். இதுவே அந்தத் தீவிலுள்ள பிரஸ்தாபிகளுக்கு ராஜ்ய மன்றமாக இருந்து வருகிறது. காலப்போக்கில் பணக் கஷ்டத்தினிமித்தம், அவர்கள் ராபின்ஸன் க்ரூஸோவை விட்டு, மத்திப சிலியிலுள்ள ஒரு சபைக்கு மாறிச் சென்றாலும், அங்கு அவர்கள் யெகோவாவைத் தொடர்ந்து சேவித்து வருகிறார்கள்.

பொய் மதத்திலிருந்து இன்னும் மற்றவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வரவே, அந்த சிறிய தொகுதி கொஞ்சம் கொஞ்சமாக பெருகியது. எனினும், உயர்நிலைக் கல்விக்காக மாணவர்கள் சிலி நாட்டுக்கு இடம் மாறிச் செல்ல வேண்டியிருந்ததால், அங்கு, முழுக்காட்டப்பட்ட இரண்டு சகோதரிகளும் ஓர் இளம் பெண்ணும் மட்டுமே இருந்தனர். விடுமுறை காலங்களில் சில தாய்மார் அந்தத் தீவுக்குத் திரும்பிவருகையில் அது பெருகுகிறது. அப்போதெல்லாம், ஆண்டு முழுவதும் அங்கு தனித்திருக்கும் அந்த மூன்று கிறிஸ்தவர்களின் ஆன்மீக அனல் வீசிவிடப்படுகிறது. இந்த சகோதரிகளின் கடின உழைப்பின் பலனாக, ராபின்ஸன் க்ரூஸோவில் யெகோவாவின் சாட்சிகளைத் தெரியாதவர் யாரும் இலர். அந்தத் தீவார் சிலர் அவர்களுடைய ஊழியத்தை எதிர்த்தாலும் ராஜ்ய செய்தியை ஏற்காமல் மற்றவர்களை தடுத்தாலும் நேர்மை இதயங்களில் நடப்பட்ட பைபிள் சத்திய விதைகள் முளைவிட்டு வளர்ந்து வருகின்றன.

மீட்கப்பட்டவர்களுக்குத் தெம்பு

ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பயணக் கண்காணி அந்தத் தீவுக்கு விஜயம் செய்கிறார். ஒதுக்கமான தீவில் ஓரிரு சாட்சிகளைச் சந்திக்கச் செல்வது எப்படியிருக்கும்? வட்டாரக் கண்காணி ஒருவர் முதன்முதலில் அங்கு சென்ற அனுபவத்தை இவ்வாறு விவரிக்கிறார்:

“ஒரு கனவு நனவானதுபோல் இருந்தது இந்தப் பயணம். நாங்கள் வால்பரைஸோவை விட்டு காலை 7 மணிக்குக் கிளம்பி சான்டியாகோவின் செரியாஸ் விமான நிலையம் சென்றோம். ஏழு பயணிகள் மட்டுமே செல்லக்கூடிய சின்னஞ் சிறிய விமானம் ஒன்றில் ஏறினோம். 2 மணி 45 நிமிட நேரம் ஆகாயத்தில் பறந்த பின்பு, மேகங்களுக்கு மேலாக தன் தலையை நீட்டிக்கொண்டிருந்த ஒரு மலைச் சிகரத்தை தொலைவில் கண்டோம். அதற்கு அருகில் சென்றபோது, அந்தத் தீவு விழித்திரையில் விரிந்தது. மகா சமுத்திரத்திற்கு மத்தியில் எழில் கொஞ்சும் கற்பாறைகளின் அணிவகுப்பு. அது, திசை தெரியாமல் திண்டாடும் பெரிய கப்பல் பரந்த கடலில் தத்தளித்துக்கொண்டிருப்பது போல காட்சியளித்தது.

“ஆகாய மார்க்கத்துக்குப்பின் ஒரு படகில் தண்ணீர் மார்க்கமாக நாங்கள் அந்த கிராமத்திற்கு சென்றோம். இந்த தீவிற்கு விஜயம் செய்யும் புதுமுகங்களை தரிசிக்க ஆசைப்பட்டதுபோல கடலுக்குள் இருந்து அங்குமிங்கும் வெளியில் நீட்டிக்கொண்டிருந்தன பல கற்பாறை கூட்டங்கள். இக்கற்பாறைகள் சேர்ந்து குட்டிக்குட்டித் தீவைப் போன்று உள்ளன. ஜுவன் ஃபெர்னான்டஸிலுள்ள ஃபர் சீல்களின் கூடாரமாக திகழ்பவை இந்தக் குட்டிக்குட்டித் தீவுகளே. இந்த இனம் மிகவும் குறைந்துவருவதால் பாதுகாக்கப்படும் விலங்கின் லிஸ்ட்டில் இவை இடம்பிடித்திருப்பது ஆச்சரியமல்ல. திடீரென்று படகின் பக்கமாக ஏதோவொன்று பறந்து மறுபடியும் கடலில் குதித்து மறைந்தது. அட, அது பறக்கும் மீன்! அதன் செதில்களில் சிறகுகளைப் போலவே மடிப்புகள் இருக்கின்றன. தண்ணீர்களின் மேல் பந்துபோல வட்டமடித்து வரும் பூச்சிகளை ‘கேட்ச்’ பிடித்து சாப்பிடுவதற்காக தவ்வி குதிப்பதில் அதற்கு அலாதி பிரியம். ஆனால் சிலசமயம் இப்படி குதிக்கும்போது, இந்த மீன்களின் உயிருக்கே உலைவைத்து விடும் பிராணிகள், இவற்றை ‘கேட்ச்’ பிடித்துவிடும்.

“கடைசியாக, சான் ஜுவன் பௌட்டிஸ்ட்டா (முழுக்காட்டுபவனான பரிசுத்த யோவான்) கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கு துறைமுகத்தில் அந்தத் தீவார் பலர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களில் சிலர், தங்கள் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை வரவேற்பதற்காக நின்றிருந்தனர்; வேறு சிலரோ, இந்த நேரத்தில் விருந்தாளிகள் யார் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் நின்றிருந்தனர். எல் யூங்கே (பட்டடைக்கல்) என்றழைக்கப்பட்ட கம்பீரமாய் நிற்கும் கரடுமுரடான மலையின் அழகில் எங்கள் மனதை பறிகொடுத்தோம். கரும் பச்சை நிற வெல்வெட்டு கம்பளத்தை போர்த்திக்கொண்டு மிடுக்குடன் முன்னால் நிற்க, அதற்கு பின்னால் நீல வானில் வெண்ணிற அன்னங்கள் கூட்டம் கூட்டமாக பவனி வருவது போல ஆங்காங்கே மேக கூட்டங்கள் ஊர்வலம் வந்துகொண்டிருந்தது. அப்பப்பா! கோடி கொடுத்தாலும் காணகிடைக்காத காட்சி.

“கப்பல் துறைமுகத்தில், முத்துக்களாக நம் கிறிஸ்தவ சகோதரிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் புன்முறுவலுடன் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்ததை விரைவில் கவனித்தோம். அது விடுமுறை காலமாக இருந்ததால் கூட்டம் எப்போதையும்விட பெரியதாக இருந்தது. அன்பான வரவேற்புக்கு பின்பு, நாங்கள் தங்கப்போகும் “வீட்டிற்கு” அழைத்துச் சென்றனர்! ஆம், ஒரு வாரம் நாங்கள் தங்கிய அந்த சொகுசான கப்பலறையை அப்படித்தான் அழைத்தோம்.

“மிக விசேஷித்த அந்த வார நாட்கள் பஞ்சாய் பறந்துவிடும் என்பதை உணர்ந்து, எங்கள் நேரத்தை நாங்கள் ஞானமாக பயன்படுத்த திட்டமிட்டோம். அதே நாளில், மதிய உணவை முடித்த கையோடு, பைபிள் படிக்கும் ஒருவரை சந்தித்தோம். அவர் விரைவில் நம் ஆவிக்குரிய சகோதரியாகவும் கடவுளுடைய ஆவிக்குரிய பரதீஸின் பாகமாகவும் ஆகவிருந்தார். மகிழ்ச்சியால் அவர் முகம் மலர்ந்திருந்தது, ஆனால் சிறிது பயமும் இருந்தது. அவருடைய நெடுங்கால லட்சியமாகிய முழுக்காட்டுதல் எடுக்கும் சமயம் வந்துவிட்டது. நற்செய்தியின் பிரஸ்தாபியாக அவர் தகுதிபெறும்படி, சில முக்கியமான தகவலை அவருடன் நாங்கள் சிந்தித்தோம். அடுத்த நாள், பிரசங்க ஊழியத்தில் முதல் தடவையாக அவர் பங்கெடுத்தார். மூன்றாவது நாளில், முழுக்காட்டுதலுக்கான தேவைகளை அவரோடு சிந்தித்தோம். அந்த வாரக் கடைசியில் அவர் முழுக்காட்டப்பட்டார்.

“அந்த வாரத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களுக்கு அநேகர் வந்தனர். அவர்களது உச்ச எண்ணிக்கை 14. வெளி ஊழியம், மறு சந்திப்புகள், பைபிள் படிப்புகள், மூப்பர்களின் சந்திப்புகள் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகள் ஒவ்வொரு நாளும் இருந்தன. ஆண்டுமுழுவதும் தனிமையில் வலம்வந்த சகோதரிகளுக்கு இப்பொழுது எவ்வளவு சந்தோஷம்!”

அந்தத் தீவிலுள்ள ஆண்களை பொறுத்தமட்டில் சத்தியத்திற்கு ஆதரவு காட்டுவது எளிதல்ல. ஒருவேளை அவர்களுடைய வேலையின் காரணமாக அப்படியிருக்கலாம். சிங்கறால் பிடிப்பது அவ்வளவு சுலபமானதல்ல. அது கஷ்டமான ஒரு தொழில். அதோடு சாட்சிகளைப் பற்றிய தப்பெண்ணமும் பலர் அக்கறை காட்டாததற்கு ஒரு காரணமாகும். இருப்பினும், என்றாவது ஒரு நாள் அந்தத் தீவு மக்கள் சத்தியத்திற்கு செவிசாய்க்கக்கூடும்.

அந்தத் தீவில் இதுவரையாக பத்துபேர், சத்தியத்தையும் யெகோவா தேவனின் நோக்கங்களையும் அறிந்ததால் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர், பல்வேறு காரணங்களின் நிமித்தமாக அந்தத் தீவை விட்டு சென்றிருக்கின்றனர். அவர்கள் நிலையாக அங்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்களுடைய ஆன்மீக மீட்பு அலெக்ஸாந்தர் செல்கெர்க்கின் மீட்பைப் பார்க்கிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், ஆவிக்குரிய ஒரு பரதீஸை அனுபவித்து மகிழ்கிறார்கள். அந்தத் தீவில் இன்னும் வாழ்கிற அந்த சகோதரிகளும் அவர்களுடைய பிள்ளைகளும், குட்டிப் பூங்காவனத்தில் இருப்பது போல சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்து மகிழ்கிறார்கள். ஆனால் வெகு சீக்கிரத்தில் இந்த முழு பூமியும் பரதீஸாக, அழகிய பூங்காவனமாக மாறும் அந்த நன்னாளை எதிர்நோக்கி நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

மீட்புப் பணி தொடருகிறது

ராபின்ஸன் க்ரூஸோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளாகிய இந்தச் சிறிய தொகுதியினர், தங்கள் உடன் கிறிஸ்தவர்களிலிருந்து வெகு தூரத்தில் வசிக்கிறார்கள். எனினும் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த செல்கெர்க்கைப்போல தனிமையாக அவர்கள் உணருகிறதில்லை. உவாட்ச் டவர் சொஸைட்டியின் சிலி கிளைக் காரியாலயத்திலிருந்து தேவராஜ்ய பிரசுரங்கள் தவறாமல் அனுப்பப்படுகின்றன. அஸெம்பிளிகளையும் மாநாடுகளையும் பற்றிய வீடியோக்களும் ஆண்டுக்கு மூன்று முறை அனுப்பப்படுகின்றன. அதோடு ஆண்டுதோறும் வட்டாரக் கண்காணி அவர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். இவை யெகோவாவின் அமைப்புடன் நெருங்கிய உறவை காத்துக்கொள்ள உதவியிருக்கிறது. ஆகையால், உலகெங்கும் சுறுசுறுப்பாக செயல்பட்டுவரும் ‘தங்கள் சகோதரக் கூட்டத்தாரின்’ ஒரு பாகமாக இருந்து வருகிறார்கள்.—1 பேதுரு 5:9, தி.மொ.

[அடிக்குறிப்புகள்]

a இந்தத் தீவின் அதிகாரப்பூர்வ பெயர் மாஸாடியர்ரா.

[பக்கம் 9-ன் தேசப்படங்கள்/படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

சிலி

சான்டியாகோ

ராபின்ஸன் க்ரூஸோ தீவு

சான் ஜுவன் பௌட்டிஸ்டா

எல் யூங்கோ

பசிபிக் பெருங்கடல்

சான்டா க்ளாரா தீவு

[படம்]

இத்தீவு கண்ணில் தென்படுகையில், கடலின் நடுவில் கண்ணைப் பறிக்கும் அழகிய பாறைக் கூட்டம்

[படத்திற்கான நன்றி]

சிலி வரைபடம்: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.

[பக்கம் 8,9-ன் படம்]

எல் யூங்கே (பட்டடைக்கல்) என்றழைக்கப்படும் பாறைநிறைந்த கம்பீரமான மலை

[பக்கம் 9-ன் படம்]

சான் ஜுவன் பௌட்டிஸ்டா (முழுக்காட்டுபவனான பரி. யோவான்) கிராமம்

[பக்கம் 9-ன் படம்]

ஃபர் சீல்களின் கூடாரங்களாக திகழும் குட்டிக்குட்டித் தீவுகள்

[பக்கம் 10-ன் படம்]

சிலியிலுள்ள சான்டியாகோவிலிருந்து நாங்கள் சென்ற குட்டி விமானம்

[பக்கம் 10-ன் படம்]

ராபின்ஸன் க்ரூஸோ தீவில் பாறை நிறைந்த கடற்கரை

[பக்கம் 10-ன் படம்]

தீவிலுள்ள எளிமையான ராஜ்ய மன்றம்