வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
இரத்தத்திலிருந்து தயாரித்த மருத்துவப் பொருட்களை யெகோவாவின் சாட்சிகள் ஏற்றுக்கொள்ளலாமா?
இந்தக் கேள்விக்கு நேரடியான பதில், யெகோவாவின் சாட்சிகள் இரத்தத்தை ஏற்றிக்கொள்வதில்லை என்பதே. இரத்தத்தைக் குறித்த கடவுளுடைய சட்டம், மாறிவரும் கருத்துக்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளக் கூடியதல்ல என உறுதியாய் நம்புகிறோம். இப்போது இரத்தத்தை நான்கு முக்கியப் பாகங்களாகவும் அந்த பாகங்களை மேலும் சிறுசிறு கூறுகளாகவும் பிரிக்க முடிகிறது. இதன் விளைவாக இன்னும் சில கேள்விகள் எழும்புகின்றன. இவ்வாறு பிரிக்கப்பட்டவற்றை ஏற்றுக்கொள்ளலாமா? இதை தீர்மானிப்பதில், மருத்துவ நன்மைகளையும் ஆபத்துக்களையும் மாத்திரமே ஒரு கிறிஸ்தவன் யோசித்துக்கொண்டிருக்கக் கூடாது. பைபிள் இதைப்பற்றி என்ன சொல்கிறது என்பதும் சர்வவல்ல தேவனோடு அவருக்கிருக்கும் உறவை இது எப்படி பாதிக்கும் என்பதுமே மிக முக்கியம்.
இந்த முக்கியக் குறிப்புகளில் குழப்பம் எதுவுமில்லை. இதைப் புரிந்துகொள்ள, பைபிள், சரித்திர, மருத்துவ விஷயங்கள் சிலவற்றை சிந்திப்போம்.
இரத்தம் மிக விசேஷமானது என யெகோவா தேவன் நம் மூதாதையாகிய நோவாவிடம் சொன்னார். (ஆதியாகமம் 9:3, 4) அதன் பிறகு, இஸ்ரவேலுக்கு கடவுள் கொடுத்த சட்டம் இரத்தத்தின் பரிசுத்தத்தன்மையை வலியுறுத்தியது: “இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்”புவேன். கடவுளுடைய இந்த சட்டத்தை இஸ்ரவேலர்களில் யாராவது ஒருவன் மீறினாலும் அது மற்றவர்களையும் கெடுக்கும். எனவேதான் கடவுள் இப்படியாக சொன்னார்: “அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப் பண்ணுவேன்.” (லேவியராகமம் 17:10) இதை வலியுறுத்தும் வகையில், பிற்காலத்தில் எருசலேமில் கூடிய அப்போஸ்தலர்களும் மூப்பர்களும், ‘இரத்தத்திற்கு விலகியிருக்க’ வேண்டுமென கட்டளையிட்டனர். ஆகவே, ஒழுக்கக்கேட்டிலிருந்தும் விக்கிரகாராதனையிலிருந்தும் விலகி இருப்பது எவ்வளவு முக்கியமோ, இரத்தத்திற்கு விலகியிருப்பதும் அவ்வளவு முக்கியம்.—அப்போஸ்தலர் 15:28, 29.
“விலகியிருத்தல்” என்பது அப்போது எதை அர்த்தப்படுத்தியது? பச்சையாக இருந்தாலும்சரி, உறைந்து போனதாக இருந்தாலும்சரி கிறிஸ்தவர்கள் இரத்தத்தை சாப்பிடவில்லை. இரத்தம் சரியாக நீக்கப்படாத மிருகத்தின் மாமிசத்தை அவர்கள் சாப்பிடவில்லை. இரத்தங்கலந்த சாஸேஜ் உட்பட, இரத்தத்தோடு சமைக்கப்பட்ட எந்த உணவையுமே அவர்கள் தொடவில்லை. இவற்றில் ஏதாவது ஒரு விதத்தில் இரத்தத்தை சாப்பிட்டிருந்தாலும் அவர்கள் கடவுளுடைய சட்டத்தை மீறியவர்கள் ஆகியிருப்பார்கள்.—1 சாமுவேல் 14:32, 33.
பூர்வகால மக்களில் பெரும்பாலானோர், இவை எதைப் பற்றியுமே கவலைப்படாமல் இரத்தத்தை தாராளமாக சாப்பிட்டார்களென (இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த) டெர்டுல்லியனின் எழுத்துக்கள் காட்டுகின்றன. பழங்குடியினர் சிலர், ஒப்பந்தங்களை இரத்தத்தைக் குடித்து உறுதிப்படுத்திக் கொண்டனரென அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, “அரங்கங்களில் எல்லாருக்கும் முன்பாக குற்றவாளிகளை கொல்லும் நிகழ்ச்சி நடக்கும்போது, இரத்த வெறிகொண்ட [சிலர்] குற்றவாளிகளின் இரத்தத்தை அப்படியே குடித்தனர். . . . தங்களுக்கு இருக்கும் வலிப்புநோய் குணமாக இப்படி குடித்தனர்.” ஆனால், கிறிஸ்தவர்களும் இரத்தம் குடித்தனர் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டபோது அதை டெர்டுல்லியன் மறுத்தார்.
கிறிஸ்தவர்களைப் பொருத்தவரை (மருத்துவ காரணங்களுக்காக ரோமர்களில் சிலர் அப்படி செய்திருந்தாலும்) அது தவறே. எனவேதான் கிறிஸ்தவர்கள், “மிருகங்களின் இரத்தத்தைகூட உணவில் சேர்த்துக்கொள்வதில்லை” என டெர்டுல்லியன் எழுதினார். உண்மைக் கிறிஸ்தவர்களின் உத்தமத்தன்மையை சோதிக்க, ரோமர்கள் இரத்தம் கலந்த உணவை பயன்படுத்தினர். ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக டெர்டுல்லியன் இவ்வாறு சொன்னார்: “[கிறிஸ்தவர்கள்], மிருகங்களின் இரத்தத்தையே அடியோடு வெறுத்து ஒதுக்குவது உங்களுக்கு நன்றாக தெரிந்திருந்தும் மனித இரத்தத்தைக் குடிக்கும் வெறிகொண்டவர்கள் என நினைப்பது நியாயமா என நான் உங்களைக் கேட்கிறேன்.”
மருத்துவர்களின் ஆலோசனைப்படி இரத்தம் ஏற்றிக்கொள்ளும்போது, சர்வவல்ல கடவுளுடைய சட்டங்களை மீறுகிறோம் என இன்று அநேகர் நினைப்பதில்லை. யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் உயிர் வாழவே விரும்புகிறோம். என்றாலும் முதலாவதாக, இரத்தத்தைக் குறித்த யெகோவாவின் சட்டத்திற்கு கீழ்ப்படிய கடமைப்பட்டிருக்கிறோம். இப்போதிருக்கும் மருத்துவ சிகிச்சையின் கண்ணோட்டத்தில், இது எதை அர்த்தப்படுத்துகிறது?
இரண்டாம் உலகப்போருக்கு பின் இரத்தம் ஏற்றுதல் மிகப் பிரபலமாகியது. கடவுளுடைய சட்டத்திற்கு அது விரோதமானது என யெகோவாவின் சாட்சிகள் உணர்ந்தனர், இப்போதும் உணருகின்றனர். ஆனால், மருத்துவத்துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று, இரத்தம் பெரும்பாலும் அப்படியே ஏற்றிக்கொள்ளப்படுவதில்லை. மாறாக, (1) சிவப்பணுக்கள்; (2) வெள்ளையணுக்கள்; (3) ரத்தம் உறைதலுக்கு காரணமான தட்டயங்கள் (platelets) எனும் ரத்த செல்கள்; (4) திரவப் பகுதியாகிய ப்ளாஸ்மா (சீரம்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று ஏற்றிக்கொள்ளப்படுகிறது. நோயாளியின் நிலைக்கேற்ப, சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டயங்கள் அல்லது ப்ளாஸ்மா ஏற்றும்படி மருத்துவர்கள் சொல்லலாம். இவ்விதமாக, இரத்தத்தின் முக்கிய பாகங்களில் ஏதாவதொன்றை மட்டுமே ஏற்றிக்கொள்கின்றனர். இவ்வாறு ஒரே பாட்டில் இரத்தம் அநேக நோயாளிகளுக்கு பயன்படுகிறது. இரத்தத்தை அப்படியே ஏற்றிக்கொள்வதாக இருந்தாலும்சரி, அதன் நான்கு முக்கிய பாகங்களில் ஏதாவது ஒன்றை ஏற்றிக்கொள்வதாக இருந்தாலும்சரி, இது கடவுளுடைய சட்டத்தை மீறுவதாகவே யெகோவாவின் சாட்சிகள் கருதுகின்றனர். பைபிளின் இந்தக் கட்டளைக்கு கீழ்ப்படிவதால் அவர்கள் பல ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். இரத்தம் மூலம் தொற்றும் எய்ட்ஸ், ஹெபடைட்டிஸ் போன்ற வியாதிகளிலிருந்தும் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.
இரத்தத்தை முக்கிய பாகங்களாக பிரிப்பது மட்டுமல்ல, அவை இன்னும் சிறுசிறு கூறுகளாகவும் பிரிக்கப்படுகின்றன. எனவே, இவ்வாறு பிரிக்கப்படும் சிறு கூறுகளைப் பற்றியே இப்போது கேள்வி எழுகிறது. இந்த சிறு கூறுகள் எதற்கு பயன்படுகின்றன, இதைப்
பற்றி தீர்மானம் எடுக்கையில் கிறிஸ்தவர்கள் எதை கவனத்தில் வைக்க வேண்டும்?இரத்தத்தில் பல நுண்மையான பொருட்கள் உள்ளன. 90 சதவீதம் நீர் இருக்கும் ப்ளாஸ்மாவிலும் எண்ணற்ற ஹார்மோன்களும், கனிம உப்புகளும், என்ஸைம்களும், தாதுக்கள் மற்றும் சர்க்கரை உட்பட சத்துப் பொருள்களும் உள்ளன. அல்ப்யூமின், இரத்தத்தை உறைய வைக்கும் வஸ்துகள், நோயை எதிர்க்கும் கிருமிக்கொல்லிகள் (antibodies) போன்ற புரதப் பொருட்களும் ப்ளாஸ்மாவில் உள்ளன. மருத்துவத்துறை வல்லுநர்கள் ப்ளாஸ்மாவிலுள்ள புரதப் பொருட்கள் பலவற்றைப் பிரித்தெடுத்து பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, இரத்தத்தை உறைய வைக்கும் வஸ்துவை (clotting factor VIII) எடுத்துக்கொள்ளுங்கள். இரத்த ஒழுக்கு நோய் உள்ளவர்களுக்கு இது கொடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, காமாகுளோபுலின் என்னும் கிருமிக்கொல்லியை ஏற்றும்படி மருத்துவர்கள் சொல்லலாம். இந்த நோய்க்கான எதிர்ப்பு சக்தியை உடையவர்களின் இரத்தத்திலுள்ள ப்ளாஸ்மாவிலிருந்து எடுக்கப்பட்டதாகும் இது. ப்ளாஸ்மாவில் உள்ள மற்ற புரதப் பொருட்களும் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. ஆக, இரத்தத்தின் முக்கிய பாகமாகிய ப்ளாஸ்மா எப்படி சிறுசிறு கூறுகளாக பிரித்து எடுக்கப்படுகின்றன என்பதை மேலே குறிப்பிட்ட உதாரணம் விளக்குகிறது. a
ப்ளாஸ்மாவை எப்படி பிரிக்க முடியுமோ, அதுபோலவே இரத்தத்தின் மற்ற முக்கிய பாகங்களையும் (சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டயங்கள்) பிரிக்கலாம். உதாரணமாக, இன்டர்ஃபெரான், இன்டர்லூகின் போன்ற நோய் எதிர்ப்புப் பொருட்கள் வெள்ளையணுக்களில் உள்ளன. வைரஸால் தொற்றும் சில நோய்களுக்கும் கேன்ஸருக்கும் இவை மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. காயங்களை ஆற்றும் மருந்தொன்று தட்டயங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. இதுபோல இன்னும் பல மருந்துகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவை (ஆரம்பத்தில்) இரத்தத்தின் முக்கியக்கூறுகளில் இருந்தே எடுக்கப்படுகின்றன. இந்த முறை சிகிச்சைகளில் இரத்தத்தின் முக்கிய பாகங்கள் ஏற்றப்படுவதில்லை; அவற்றின் சிறு கூறுகளே பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே, இவற்றை ஒரு கிறிஸ்தவன் ஏற்றுக்கொள்ளலாமா? ஏற்றுக்கொள்ளலாமா, கூடாதா என்பதை நாங்கள் சொல்வதற்கில்லை. இப்படிப்பட்ட நுணுக்கமான விவரங்களை பைபிள் தரவில்லை. எனவே, கடவுளின் முன்னிலையில், பைபிளின் நியமங்களால் பயிற்றுவிக்கப்பட்ட மனச்சாட்சியின் அடிப்படையில் தீர்மானத்தை எடுக்க வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய பொறுப்பாகும்.
இரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட எதையுமே (நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக கொடுக்கப்படும் சிறுசிறு கூறுகளாக இருந்தாலும்கூட) சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகின்றனர். ‘இரத்தத்திற்கு விலகியிருக்க’ வேண்டும் என்கிற கடவுளின் கட்டளையை அவர்கள் அப்படித்தான் புரிந்துகொள்கின்றனர். மிருகத்தின் இரத்தத்தை “தரையிலே ஊற்றிவிட வேண்டும்” என இஸ்ரவேலுக்கு கடவுள் கொடுத்த சட்டம் இதையே குறிப்பதாக அவர்கள் சொல்கின்றனர். (உபாகமம் 12:22-24) இது எப்படி பொருந்துகிறது? காமாகுளோபுலின், இரத்தத்தை உறைய வைக்கும் காரணிகள் போன்றவற்றை தயாரிப்பதற்கு முதலாவது இரத்தத்தை சேமித்து வைக்க வேண்டும். பிறகு சிறுசிறு பாகங்களாக பிரிக்க வேண்டும். எனவே, இரத்தத்தை அல்லது அதன் நான்கு முக்கிய பாகங்களை எப்படி மறுத்து விடுகிறார்களோ, அப்படியே இந்த மருந்துகளையும் சில கிறிஸ்தவர்கள் மறுத்து விடுகின்றனர். அவர்களுடைய மனச்சாட்சி அதற்கு இடம் கொடுக்கவில்லை என்றால் அதற்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும்.
ஆனால், மற்ற கிறிஸ்தவர்கள் வித்தியாசமாக தீர்மானிக்கலாம். இரத்தத்தை அப்படியேயோ, சிவப்பணுக்களையோ, வெள்ளையணுக்களையோ, தட்டயங்களையோ அல்லது ப்ளாஸ்மாவையோ ஏற்றிக்கொள்ள அவர்களும் மறுக்கின்றனர். இருந்தாலும், இந்த முக்கிய பாகங்களின் சிறு கூறுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை ஏற்றுக்கொள்கின்றனர். இதிலும் பலர் வித்தியாசமான தீர்மானங்களை எடுக்கலாம். காமாகுளோபுலினை ஏற்றிக்கொள்ள ஒரு கிறிஸ்தவன் சம்மதிக்கலாம். ஆனால், சிவப்பணுக்களிலிருந்தோ அல்லது வெள்ளையணுக்களிலிருந்தோ எடுக்கப்பட்ட மருத்துவப் பொருட்களை ஒருவேளை மறுக்கலாம். மொத்தத்தில், இரத்த மூலக்கூறுகளை ஏற்றுக்கொள்ள சில கிறிஸ்தவர்கள் ஏன் சம்மதிக்கின்றனர்?
ப்ளாஸ்மா புரதச் சத்துக்கள் (இரத்தத்தின் சிறுசிறு கூறுகள்) கருவுற்றிருக்கும் தாயின் இரத்தத்திலிருந்து கர்ப்பப்பையில் இருக்கும்
சேயின் இரத்த ஓட்டத்திற்கு செல்கிறது என 1990, ஜூன் 1, ஆங்கில காவற்கோபுரம் பிரதியில் வெளிவந்த “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதி குறிப்பிட்டது. எனவே, தாய் தன்னுடைய சிசுவிற்கு இம்யூனோகுளோபினை கடத்துகிறாள். இது மிக முக்கியமான நோய் எதிர்ப்புச்சக்தியை குழந்தைக்கு கொடுக்கிறது. ஆனால், கருவின் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் தனியே இயங்குகின்றன. அதே போல ஆக்ஸிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்லும் வஸ்து கருவின் இரத்தத்தில் தனியே உருவாகிறது. அதில் ஒரு பகுதி பிலிருபினாக ஆகிறது. இது நச்சுக்கொடி வழியாக தாயின் உடலில் கலந்து, பின் கழிவாக வெளியேற்றப்படுகிறது. இந்த விதத்தில் இரத்தத்தின் சிறுசிறு கூறுகள் இயற்கையாகவே ஒரு நபருடைய உடலிலிருந்து இன்னொருவருக்கு கடத்தப்படுகின்றன. எனவே, ப்ளாஸ்மாவிலிருந்தோ அல்லது இரத்த அணுக்களிலிருந்தோ எடுக்கப்பட்ட கூறுகளை ஏற்றுக்கொள்ளலாம் என சில கிறிஸ்தவர்கள் தீர்மானிக்கலாம்.ஒவ்வொருவருடைய கருத்துக்களும் மனச்சாட்சியின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளும் வித்தியாசப்படுவதால், இதை உப்பு சப்பில்லாத விஷயமாக்கிவிடுகிறதா? இல்லவே இல்லை. இது மிகவும் முக்கியமான விஷயம். என்றாலும், அடிப்படை நியமத்தில் எந்தக் குழப்பமும் இல்லை. மிகத் தெளிவாக உள்ளது. இரத்தத்தையோ, இரத்தத்தின் முக்கிய பாகங்களையோ யெகோவாவின் சாட்சிகள் ஏற்றிக்கொள்வதில்லை என்பதை இந்தக் கட்டுரை தெளிவாக காட்டுகிறது. ‘விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், வேசித்தனத்திற்கும் விலகியிருக்க வேண்டுமென’ பைபிள் திட்டவட்டமாக கிறிஸ்தவர்களுக்கு சொல்கிறது. (அப்போஸ்தலர் 15:28) ஆனால், இந்த முக்கிய பாகங்களின் சிறுசிறு கூறுகள் எதையாவது ஏற்றிக்கொள்ளலாமா என்கிற கேள்வி எழும்போது, அப்படி செய்யலாமா கூடாதா என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஜெபசிந்தையோடும், பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனச்சாட்சியின் அடிப்படையிலும் தீர ஆலோசித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.
எந்த சிகிச்சையாக இருந்தாலும்சரி உடனே குணமானால் போதும் என்று அநேகர் அதை ஏற்றுக்கொள்கின்றனர். அதில் இருக்கும் ஆபத்துக்களை அறிந்திருந்தாலும் அநேகர் அதை ஏற்றுக்கொள்கின்றனர். இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை உபயோகிப்பதிலும் இதுவே உண்மை. ஆனால், உண்மைக் கிறிஸ்தவர்கள் அப்படியல்ல. வெறும் உடல்நலத்தை மட்டுமே அவர்கள் யோசிப்பதில்லை. மாறாக, நிதானமாகவும், பரந்த நோக்குநிலையோடும் அவர்கள் தீர்மானம் எடுக்க முயலுகின்றனர். சிறந்த மருத்துவ சிகிச்சையை யெகோவாவின் சாட்சிகள் மனதார ஏற்றுக்கொள்கின்றனர். எந்த சிகிச்சையாய் இருந்தாலும்சரி, அதன் நன்மைகளையும் அதே சமயம் அதில் இருக்கும் ஆபத்துக்களையும் தீர யோசிக்கின்றனர். இருந்தாலும், இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருத்துவப் பொருட்களை ஏற்றுக்கொள்ளலாமா என்ற கேள்வி எழுந்தால், கடவுள் என்ன சொல்கிறார் என்பதற்கும் ஜீவனைத் தந்த கடவுளோடு தங்களுக்கு இருக்கும் உறவிற்குமே முக்கியத்துவம் தருகின்றனர்.—சங்கீதம் 36:9.
சங்கீதக்காரர் வெளிப்படுத்திய நம்பிக்கையை கவனியுங்கள்: “தேவனாகிய கர்த்தர் [யெகோவா] சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார். . . . [யெகோவாவே] உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” (சங்கீதம் 84:11, 12) இதேவிதமான நம்பிக்கையை நாமும் வைத்தால், அது என்னே ஆசீர்வாதம் நமக்கு!
[அடிக்குறிப்புகள்]
a 1978, ஜூன் 15, ஆங்கில காவற்கோபுரம் பிரதியிலும் 1994, அக்டோபர் 1, காவற்கோபுரம் பிரதியிலும் வெளிவந்துள்ள “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற கட்டுரையை பார்க்கவும். உடலில் இரத்த அணுக்களின் உற்பத்தியைத் தூண்டி, அவற்றை அதிகரிக்கும் செயற்கை மருந்துகள் இப்போது தயாரிக்கப்படுகின்றன. இவை இரத்தத்திலிருந்து செய்யப்படுவதில்லை. இரத்தத்தின் கூறுகள் சிலவற்றிற்கு பதிலாக இவற்றை பயன்படுத்தலாம்.
[பக்கம் 30-ன் பெட்டி]
டாக்டரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்
இரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட மருத்துவப் பொருட்களை பயன்படுத்தும் சிகிச்சையோ ஆபரேஷனோ செய்யப்பட வேண்டுமென்றால், பின்வருமாறு கேளுங்கள்:
ஒரு யெகோவாவின் சாட்சியாக, எந்த சந்தர்ப்பத்திலும் நான் இரத்தம் (இரத்தத்தை அப்படியேயோ, சிவப்பணுக்களையோ, வெள்ளையணுக்களையோ, தட்டயங்களையோ அல்லது ப்ளாஸ்மாவையோ) ஏற்றிக்கொள்ள மாட்டேன் என்பது இந்த சிகிச்சையில் உட்பட்டிருக்கும் எல்லா மருத்துவப் பணியாளர்களுக்கும் தெரியுமா?
கொடுக்கப்படும் மருந்து, இரத்த ப்ளாஸ்மாவிலிருந்தோ, சிவப்பு அல்லது வெள்ளையணுக்களிலிருந்தோ, அல்லது தட்டயங்களிலிருந்தோ தயாரிக்கப்பட்டதாக இருந்தால், நீங்கள் கேட்க வேண்டியது:
இரத்தத்தின் நான்கு முக்கிய பாகங்களிலிருந்து இந்த மருந்து தயாரிக்கப்பட்டதா? அப்படியென்றால், அது எப்படி செய்யப்பட்டது என்பதை விளக்க முடியுமா?
இரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த மருந்து எவ்வளவு, எந்த முறையில் கொடுக்கப்படும்?
இந்த மருந்தை எடுத்துக்கொள்ள என் மனச்சாட்சி ஒத்துக்கொண்டால், இதில் இருக்கும் ஆபத்துக்கள் என்ன?
இந்த மருந்தை ஏற்றுக்கொள்ள என் மனச்சாட்சி ஒத்துக்கொள்ளாவிட்டால், வேறு என்ன சிகிச்சை இருக்கிறது?
இந்த விஷயத்தைப் பற்றி தீர யோசித்த பிறகு, என்னுடைய தீர்மானத்தை நான் எப்பொழுது உங்களுக்கு தெரிவிக்கலாம்?