Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அநேக தேசங்களுக்கு ஒளி கொண்டுசென்றவர்

அநேக தேசங்களுக்கு ஒளி கொண்டுசென்றவர்

வாழ்க்கை சரிதை

அநேக தேசங்களுக்கு ஒளி கொண்டுசென்றவர்

ஜார்ஜ் யங்கின் கதை ரூத் யங் நிக்கல்சன் கூறியது

“நம் சர்ச்சுகளின் பிரசங்க மேடைகளில் ஏன் இந்த அமைதி? . . . நான் எழுதிய இந்தக் காரியங்கள் சத்தியம் என்பது நிரூபணமான பிறகும் மௌனமாய் இருந்தால் என்ன அர்த்தம்? இனிமேலும் ஜனங்களை இருளில் வைக்காதிருப்போமாக. சத்தியத்தை ஒளிவுமறைவில்லாமல் அறிவிப்போமாக.”

அனல் பறக்கும் இந்த வார்த்தைகளை அப்பாதான் எழுதினார். சர்ச்சின் பதிவேட்டிலிருந்து தன் பெயரை நீக்கும்படி அவர் எழுதிய 33 பக்க கடிதத்தில் காணப்படும் வார்த்தைகளே இவை. அது வருடம் 1913. அந்த வருடத்திலிருந்து அவர் அநேக தேசங்களுக்கு ஒளி கொண்டுசெல்பவராக ஆனார். (பிலிப்பியர் 2:14) அதனால் அவருடைய வாழ்க்கை சுவாரஸ்யமானது. என் சிறு வயதிலிருந்தே, உறவினர்களிடமிருந்தும் பழைய பிரசுரங்களிலிருந்தும் அப்பாவின் ஊழிய அனுபவங்களை சேகரிக்க ஆரம்பித்தேன். பிறகு, நண்பர்களின் உதவியால் அவருடைய வாழ்க்கை சித்திரத்தைத் தீட்டினேன். அப்பாவின் வாழ்க்கை அநேக வழிகளில் அப்போஸ்தலன் பவுலின் வாழ்க்கையை எனக்கு நினைப்பூட்டுகிறது. ‘புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாய்’ இருந்த பவுலைப் போலவே அப்பாவும் பயணம்செய்ய எப்போதும் தயாராய் இருந்தார். பல்வேறு நாடுகளிலும் தீவுகளிலும் உள்ளவர்களுக்கு யெகோவாவின் செய்தியை அறிவிக்க அவர் பல இடங்களுக்கு பயணம் செய்தார். (ரோமர் 11:13; சங்கீதம் 107:1-3) என்னுடைய அப்பா ஜார்ஜ் யங் பற்றி உங்களுக்கு தெரியுமா? நான் அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

பிரகாசிக்க ஆரம்பித்த காலம்

அப்பாவின் பெற்றோரான ஜான் மற்றும் மார்கரெட் யங் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க்கில் வாழ்ந்தனர். அவர்கள் பிரஸ்பிட்டேரியன் மதத்தை சேர்ந்தவர்கள். அப்பாவின் மூன்று அண்ணன்களான அலெக்ஸான்டர், ஜான், மால்கம் ஆகியோர் இங்குதான் பிறந்தனர். 1886-ல் அவர்கள் அங்கிருந்து மேற்கு கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு இடம்மாறி சென்றனர். அந்த வருடம் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி அவர்களின் நான்காவது மகனாக அப்பா பிறந்தார். கடைசி பிள்ளையாக மேரியன் என்ற தங்கை பிறந்தார். பையன்கள் அவரை செல்லமாக நெலீ என்று அழைத்தனர். அவர் அப்பாவைவிட இரண்டு வயது இளையவர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள விக்டோரியாவிற்கு அருகில் சானிச் என்ற இடம் உள்ளது. அங்குள்ள ஒரு பண்ணையில் அந்தப் பிள்ளைகள் ஜாலியாக வளர்ந்தனர். அதே சமயம் பொறுப்பாக இருக்கவும் கற்றுக்கொண்டனர். ஆகவே, அவர்களுடைய அம்மா, அப்பா விக்டோரியாவிற்கு சென்று வீடு திரும்புவதற்குள் பிள்ளைகளே வெளி வேலைகள் எல்லாவற்றையும் முடித்துவிடுவர். வீடும் சுத்தமாக இருக்கும். அவ்வளவு மணியான பிள்ளைகள்.

காலப்போக்கில், அப்பாவுக்கும் அவருடைய அண்ணன்களுக்கும் சுரங்கம் வெட்டும் வேலையிலும் மரத் தொழிலிலும் ஈடுபாடு ஏற்பட்டது. மர வேட்டைக்காரர்களாகவும் (மரம் நன்றாக வளருமா என்பதை அறிய நிலத்தை ஆய்வு செய்பவர்கள்) மர வியாபாரம் செய்வதிலும் யங் சகோதரர்கள் பெயரும் புகழும் பெற்றனர். பண விவகாரங்களை அப்பா கவனித்துக்கொண்டார்.

அப்பாவுக்கு ஆன்மீக காரியங்களில் அதிக ஈடுபாடு இருந்தது. ஆகவே, பிரஸ்பிட்டேரியன் ஊழியராக வேண்டும் என தீர்மானித்தார். ஆனால் அந்தச் சமயத்தில் செய்தித்தாள்களில் வந்த பைபிள் பிரசங்கங்கள் அவரை பெரிதும் கவர்ந்தன. அவை, சயன்ஸ் உவாட்ச் டவர் டிராக்ட் சொஸைட்டியின் முதல் பிரஸிடென்ட்டாக இருந்த சார்ல்ஸ் டேஸ் ரசல் எழுதியவை. அப்பா அவற்றை படிக்க ஆரம்பித்ததுதான் மிச்சம், உடனே ராஜினாமா கடிதம் எழுதிவிட்டார். அந்தக் கடிதத்தின் ஒரு பகுதியைத்தான் அறிமுகத்தில் வாசித்தீர்கள்.

அப்பா, பைபிள் வசனங்களை தெளிவான அதே சமயம் கனிவான முறையில் உபயோகித்து மனித ஆத்துமாவிற்கு அழிவில்லை, கெட்டவர்களைக் கடவுள் நரகத்தில் நித்திய காலத்திற்கும் வதைப்பார் போன்ற சர்ச் போதகங்கள் பொய் என்பதை நிரூபித்தார். திரித்துவ கோட்பாட்டையும் தகர்த்தெறிந்தார். இது புறமத நம்பிக்கை என்றும் இதற்கு பைபிளில் ஆதாரமே இல்லை என்றும் நிரூபித்தார். அப்போதிலிருந்து அவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றி ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டார். தன்னுடைய திறமைகள், சக்தி அனைத்தையும் யெகோவாவின் மகிமைக்காக அர்ப்பணித்தார்.

1917-ல் உவாட்ச் டவர் சொஸைட்டி அப்பாவை ஒரு பில்கிரிமாக நியமித்தது. அப்போது யெகோவாவின் சாட்சிகள் மத்தியிலிருந்த பயணக் கண்காணிகளை அப்படிதான் அழைத்தனர். கனடாவிலுள்ள அனைத்து பட்டணங்களிலும் மாநகரங்களிலும் அநேக பேச்சுகள் கொடுத்தார். அதோடு, “போட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்” என்ற திரைப்படமும் சிலைடுகளும் கலந்த நிகழ்ச்சியையும் காண்பித்தார். அவ்வாறு அப்பா பேச்சு கொடுக்க செல்லும்போது அரங்குகளில் கூட்டம் நிரம்பிவழியும். பில்கிரிமாக அப்பா எங்கெல்லாம் செல்வார் என்ற அட்டவணை 1921 வரை தி உவாட்ச்டவர் பத்திரிகையில் வெளிவந்தது.

2,500 பேர் கொண்ட அரங்கில் பிரசங்கி யங் உரையாற்றினார் என வின்னிபெக் செய்தித்தாள் ஒன்று அறிக்கை செய்தது. அந்த அரங்கில் கூட்டம் அலைமோதியதால் பலர் உள்ளே நுழையக்கூட இடமில்லை என்றும் அந்தப் பத்திரிகை கூறியது. ஒட்டாவாவில், “நரகத்திற்கு சென்று வந்தேன்” என்ற தலைப்பில் அப்பா பேசினார். அதைப் பற்றி வயதான ஒருவர் கூறியதாவது: “ஜார்ஜ் யங் பேச்சை முடித்த பிறகு வரிசையாக அமர்ந்திருந்த பாதிரியார்களை மேடைக்கு வந்து தன்னோடு பேசும்படி அழைத்தார். ஆனால் ஒருவரும் அசையவில்லை. அதைப் பார்த்ததுமே சத்தியத்தைக் கண்டுகொண்டேன் என உணர்ந்தேன்.”

அப்பா ஒரு பில்கிரிமாக சபைகளை சந்திக்கும் போதெல்லாம் ஆவிக்குரிய காரியங்களில் படுபிஸியாக ஈடுபடுவார். ஒரு சந்திப்பை முடித்த கையோடு ஓடிப்போய் டிரெயினைப் பிடிப்பார். அப்போதுதான் அடுத்த இடத்திற்கு சரியான நேரத்தில் போய்சேர முடியும். காரில் பயணம் செய்யும் சமயங்களில் அடுத்த இடத்திற்கு செல்வதற்காக அவர் இருட்டோடு கிளம்பிவிடுவார். அப்பா வைராக்கியமுள்ள ஒரு மனிதர். அதோடு, கரிசனையுள்ளவர், தாராள குணமுள்ளவர், அருமையான கிறிஸ்தவ குணங்கள் நிறைந்தவர் என்ற பெயரும் எடுத்திருந்தார்.

அப்பா அநேக மாநாடுகளுக்கு சென்றிருந்தார். ஆனால், 1918-ல் ஆல்பர்ட்டாவிலுள்ள எட்மன்டனில் நடந்த மாநாடு மறக்க முடியாத ஒன்று. ஏனெனில் அவருடைய தங்கை நெலீ அதில் முழுக்காட்டுதல் பெற்றார். முழு குடும்பமுமே அந்த விசேஷ நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர். பையன்கள் அனைவரும் ஒன்றாக கூடிவந்த கடைசி மாநாடும் அதுதான். ஏனெனில் மால்கம், இரண்டு வருடம் கழித்து நிமோனியாவால் இறந்துபோனார். அவருக்கு பரலோக நம்பிக்கை இருந்தது. அதைப்போலவே அவருடைய மூன்று சகோதரர்களும் அப்பாவும் பரலோக நம்பிக்கை உடையவர்களே. அவர்கள் அனைவருமே மரிக்கும்வரை கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருந்தனர்.—பிலிப்பியர் 3:14.

வெளிநாடுகளுக்கு ஒளி கொண்டுசென்றார்

ஏறக்குறைய கனடா முழுவதுமே அப்பா பிரசங்கித்து முடித்திருந்தார். ஆகவே செப்டம்பர் 1921-ல் கரிபியன் தீவுகளுக்கு செல்லும்படி அப்போது உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரஸிடென்ட்டாக இருந்த ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்டு அவரிடம் கூறினார். அங்கு பல இடங்களில் “போட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்” படத்தை அப்பா காண்பித்தார். அந்த இடங்களில் எல்லாம் பயங்கர கூட்டம். ட்ரினிடாட்டிலிருந்து அப்பா ஒருமுறை இவ்வாறு எழுதினார்: “எக்கச்சக்கமான கூட்டம் இருந்ததால் அநேகரை திருப்பி அனுப்ப வேண்டியிருந்தது. அடுத்த இரவும் அந்த அரங்கு நிரம்பிவிட்டது.”

பிறகு 1923-ல் அப்பா பிரேஸிலுக்கு அனுப்பப்பட்டார். அவருடைய பேச்சைக் கேட்க பெருந்திரளான கூட்டம் குழுமியிருந்தது. அவர் பேச்சு கொடுக்கும்போது சில சமயங்களில் மொழிபெயர்ப்பாளர்களை வாடகைக்கு அமர்த்தினார். டிசம்பர் 15, 1923 தேதியிட்ட தி உவாட்ச்டவர் பத்திரிகையில் இந்த அறிக்கை உள்ளது: “சகோதரர் யங், ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை 21 பொது கூட்டங்களை நடத்தியுள்ளார், மொத்தமாக 3,600 பேர் கூடிவந்தனர். 48 சபை கூட்டங்களை நடத்தியிருக்கிறார், அதற்கு 1,100 பேர் ஆஜரானார்கள். போர்த்துகீஸிய மொழியில் சுமார் 5,000 பிரசுரங்களை இலவசமாக அளித்துள்ளார்.” “இன்று உயிரோடிருக்கும் ஆயிரக்கணக்கானோர் மரிப்பதேயில்லை” என்ற பேச்சை அப்பா கொடுத்தபோது அநேகர் அக்கறை காண்பித்தனர்.

மார்ச் 8, 1997-ல் பிரேஸில் கிளை அலுவலகத்தோடு சில புதிய கட்டடங்கள் சேர்க்கப்பட்டன. அப்போது வெளியிடப்பட்ட புரோஷர் இவ்வாறு அறிக்கை செய்தது: “1923: ஜார்ஜ் யங் பிரேஸில் வந்து சேர்கிறார். ரியோடி ஜனீரோவில் கிளை அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்கிறார்.” அப்போது பைபிள் பிரசுரங்கள் ஸ்பானிய மொழியில் ஏராளம் கிடைத்தன. என்றாலும், போர்த்துகீஸிய மொழியே பிரேஸிலின் முக்கிய மொழியாக இருந்ததால் இந்த மொழியிலும் பிரசுரங்கள் தேவைப்பட்டன. ஆகவே, அக்டோபர் 1, 1923 முதற்கொண்டு தி உவாட்ச்டவர் போர்த்துகீஸிய மொழியிலும் பிரசுரிக்கப்பட்டது.

பிரேஸிலில் அப்பா சந்தித்தவர்களுள் மறக்க முடியாத அநேக நபர்களும் உண்டு. ஜெசின்தோ பீமென்தல் கேப்ரல் என்ற பணக்கார போர்த்துகீஸிய மனிதர் அவர்களுள் ஒருவர். அவருடைய வீட்டில்தான் கூட்டங்கள் நடந்தன. ஜெசின்தோ சீக்கிரத்திலேயே சத்தியத்தை ஏற்றுக்கொண்டார், பின்னர் பிரேஸில் பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினராகவும் ஆனார். மற்றொருவர் மான்வெல் டெ சில்வா ஸார்டௌன் என்பவர். போர்த்துகீஸியரான அவர் தோட்ட வேலை செய்து வந்தார். அப்பா கொடுத்த பொதுப் பேச்சு ஒன்றை கேட்ட அவர் போர்த்துகலுக்கு திரும்ப சென்று கொல்போர்டராக சேவிக்க ஆவல் கொண்டார். அந்தக் காலத்தில் யெகோவாவின் சாட்சிகள் மத்தியிலிருந்த முழுநேர ஊழியர்களை கொல்போர்டர் என்றுதான் அழைத்தனர்.

அப்பா பிரேஸில் முழுவதும் இரயிலில் பயணம் செய்தார். அக்கறை காண்பித்த அநேகரை கண்டுபிடித்தார். ஒருமுறை போனி மற்றும் கேதரீனா கிரீன் என்ற தம்பதியை சந்தித்தார். சுமார் இரண்டு வாரம் அவர்கள் வீட்டில் தங்கி பைபிளை அவர்களுக்கு விளக்கினார். அதற்கு பிறகு அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் ஏழு பேர் யெகோவாவுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றனர்.

1923-ல் சேரா பேலோனா ஃபெர்கூசன் என்ற ஒரு பெண்மணியை சந்தித்தார். 1867-ல் அவர் சிறுமியாக இருந்தபோது, ஐக்கிய மாகாணங்களில் குடியிருந்த அவருடைய முழு குடும்பமும் பிரேஸிலுக்கு குடிபெயர்ந்தனர். இராஸ்மஸ் ஃபுல்டன் ஸ்மித் என்ற ஓர் அண்ணனும் அவருக்கு உண்டு. அவர் 1899-லிருந்தே உவாட்ச்டவர் பத்திரிகையை தவறாமல் வாசித்து வந்தார். சேராவின் பல நாள் எதிர்பார்ப்பு ஒரு நாள் நிறைவேறியது. அந்த நாள் மார்ச் 11, 1924. அன்று அப்பா அங்கு சென்றதால் அவரும், அவருடைய நான்கு பிள்ளைகளும், சாலீ ஆண்ட்டீ என அப்பா அழைத்த மற்றொரு பெண்மணியும் முழுக்காட்டுதல் பெற வாய்ப்பு கிடைத்தது.

சீக்கிரத்தில் அப்பா தென் அமெரிக்காவிலுள்ள மற்ற நாடுகளுக்கும் சென்று பிரசங்கிக்க ஆரம்பித்தார். நவம்பர் 8, 1924-ல் அவர் பெருவிலிருந்து இவ்வாறு எழுதினார்: “இப்போதுதான் லீமா, கேயோ ஆகிய நகரங்களில் 17,000 துண்டுப்பிரதிகளை விநியோகித்து முடித்தேன்.” பிறகு துண்டுப்பிரதிகளை அளிப்பதற்காக பொலிவியாவிற்கு சென்றார். அந்தப் பயணத்தைப் பற்றி அவர் எழுதியதாவது: “என் முயற்சியை நம் பரலோக தகப்பன் ஆசீர்வதிக்கிறார். ஓர் இந்தியன் எனக்கு உதவினான். அவன் அமேசான் நதி ஆரம்பமாகும் இடத்தில் வசிக்கிறான். 1,000 துண்டுப்பிரதிகளையும் சில புத்தகங்களையும் அவனுடன் எடுத்துச் செல்கிறான்.”

மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பைபிள் சத்தியத்தின் விதைகளை தூவ அப்பா உதவினார். டிசம்பர் 1, 1924, உவாட்ச்டவர் பின்வருமாறு அறிக்கை செய்தது: “ஜார்ஜ் யங், தென் அமெரிக்காவில் ஊழியத்தைத் தொடங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. . . . மெகல்லன் ஜலசந்தியிலுள்ள புன்டா அரினாஸ் நகரத்திற்கு சத்தியத்தை எடுத்துச் சென்ற பாக்கியம் இந்த அருமை சகோதரரையே சாரும்.” கோஸ்டா ரிகா, பனாமா, வெனிசுவேலா போன்ற தேசங்களிலும் பிரசங்க வேலை முன்னேற அப்பா உதவினார். அவருக்கு மலேரியா வந்து உடல்நிலை குன்றியபோதிலும் சளைக்காமல் பிரசங்கித்து வந்தார்.

ஒளி ஐரோப்பாவிற்கு செல்கிறது

மார்ச் 1925-ல் அப்பா ஐரோப்பாவிற்கு கப்பலேறினார். ஸ்பெயினிலும் போர்த்துகலிலும் 3,00,000 துண்டுப்பிரதிகளை விநியோகிக்க திட்டமிட்டிருந்தார். அதோடு சகோதரர் ரதர்ஃபர்டு வந்து பொதுப் பேச்சுகள் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அப்பா ஸ்பெயின் போய் சேர்ந்த பிறகு, அங்குள்ள மக்கள் மற்ற மதங்களை சகித்துக்கொள்வதில்லை என்பதை கவனித்தார். ஆகவே சகோதரர் ரதர்ஃபர்டு அங்கு வரவேண்டாம் என்று அவருக்கு கடிதம் எழுதிவிட்டார்.

சகோதரர் ரதர்ஃபர்டிடமிருந்து அப்பாவுக்கு பதில் வந்தது. அதில், “நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்” என கூறும் ஏசாயா 51:16-ஐ மேற்கோள் காட்டினார். உடனே அப்பா எடுத்த முடிவென்ன தெரியுமா? “நான் செய்ய வேண்டியதை செய்து, விளைவுகளை அவர் கையில் விட்டுவிட வேண்டும் என்றே கர்த்தர் விரும்புகிறார்” என்று எழுதினார்.

மே 10, 1925-ல் பார்சிலோனாவில் உள்ள நோவாடாடிஸ் கலையரங்கில் சகோதரர் ரதர்ஃபர்டு பேச்சு கொடுத்தார். அதை மற்றொருவர் மொழிபெயர்த்தார். அங்கு 2,000-த்திற்கும் அதிகமானோர் கூடிவந்திருந்தனர். அதோடு, ஓர் அரசாங்க அதிகாரியும் விசேஷித்த பாதுகாவலர் ஒருவரும் மேடையில் இருந்தனர். மாட்ரிட்டிலும் இவ்வாறே செய்யப்பட்டது, அங்கு 1,200 பேர் வந்திருந்தனர். இந்தப் பேச்சுகள் அநேகரின் அக்கறையைத் தட்டியெழுப்பியதால் ஸ்பெயினில் ஒரு கிளை அலுவலகம் ஸ்தாபிக்க வேண்டியிருந்தது. யெகோவாவின் சாட்சிகளின் 1978 வருடாந்தர புத்தகம் (ஆங்கிலம்) கூறுகிறபடி, அந்தக் கிளை அலுவலகம் “ஜார்ஜ் யங்கின் பொறுப்பில் இருந்தது.”

மே 13, 1925-ல் சகோதரர் ரதர்ஃபர்டு போர்த்துகலிலுள்ள லிஸ்பனில் பேசினார். அங்கும் மகத்தான வெற்றி கிட்டியது. பாதிரிமார்கள் கூச்சல்போட்டு, நாற்காலிகளை உடைத்து அமளி செய்ய முயற்சித்தபோதிலும் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. சகோதரர் ரதர்ஃபர்டு ஸ்பெயினிலும் போர்த்துகலிலும் பேச்சுகள் கொடுத்த பிறகு அப்பா “போட்டோ-டிராமா”வை தொடர்ந்து காண்பித்து வந்தார். அதோடு, பைபிள் பிரசுரங்களை அச்சடித்து, இந்த இடங்களில் விநியோகிக்கவும் ஏற்பாடுகள் செய்தார். சத்தியம், “ஸ்பெயினிலுள்ள ஒவ்வொரு மாநகரத்திலும் பட்டணத்திலும் அறிவிக்கப்பட்டுவிட்டது” என 1927-ல் அவர் அறிக்கை செய்தார்.

சோவியத் யூனியனுக்குள் ஒளி பரவுகிறது

பிறகு அப்பா சோவியத் யூனியனுக்கு மிஷனரியாக அனுப்பப்பட்டார். ஆகஸ்ட் 28, 1928-ல் அங்கு சென்று சேர்ந்தார். அக்டோபர் 10, 1928 தேதியிட்ட கடிதத்தில் ஒரு பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தார்:

“ரஷ்யாவிற்கு வந்த பிறகு, ‘உம்முடைய ராஜ்யம் வருவதாக’ என்று என் முழு இருதயத்தோடு ஜெபம் செய்ய முடியும். கொஞ்சம் கொஞ்சமாக ரஷ்ய மொழியை கற்று வருகிறேன். என் பேச்சுகளை மொழிபெயர்ப்பவர் ஒரு வித்தியாசமான பேர்வழி. அவர் யூதராக இருந்தும் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிறார், பைபிளை நேசிக்கிறார். சுவாரஸ்யமான சில அனுபவங்களும் கிடைத்தன. ஆனால் எவ்வளவு நாட்கள் இங்கு இருக்க அனுமதி கிடைக்கும் என்று தெரியவில்லை. 24 மணிநேரத்திற்குள் இடத்தைக் காலிபண்ண வேண்டும் என போன வாரம் ஒரு நோட்டீஸ் வந்தது. ஆனால் அந்த விஷயத்தை சமாளித்துவிட்டதால் இப்போதைக்கு பிரச்சினையில்லை.”

தற்போது உக்ரேனில் முக்கிய நகரமாக இருக்கும் கர்கோவ்வில் உள்ள சில பைபிள் மாணாக்கரையும் அப்பா சந்தித்தார். சகோதரர்கள் கனிவான அன்பை பகிர்ந்துகொண்டனர். இதனால் அவர்கள் அனைவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஒவ்வொரு நாளும் நடுராத்திரி வரை சிறிய மாநாடு ஒன்றை நடத்தினர். சகோதரர்களுடன் நடந்த இந்தக் கூட்டத்தைப் பற்றி அப்பா பின்னர் இவ்வாறு எழுதினார்: “பாவம் இந்தச் சகோதரர்கள். அவர்கள் கையிலிருந்த சில புத்தகங்களும் பறிபோய்விட்டன. அதிகாரிகளும் அவர்களைக் கொடூரமாக நடத்துகின்றனர். ஆனால், இவை எல்லாவற்றின் மத்தியிலும் அவர்கள் சந்தோஷமாக உள்ளனர்.”

ஜூன் 21, 1997-ல் ரஷ்யாவிலுள்ள செ. பீட்டர்ஸ்பெர்க்கில் புதிய கிளை அலுவலகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் விசேஷித்த ஒரு புரோஷரைப் பெற்றனர். சோவியத் யூனியனில் அப்பா செய்த ஊழியம் அந்த புரோஷரில் சிறப்பித்து காட்டப்பட்டது. அப்பா மாஸ்கோ அனுப்பப்பட்டார் என அது கூறுகிறது. “ஜனங்களுக்கு சுதந்திரம், மரித்தவர்கள் எங்கே? ஆகிய புக்லெட்டுகளில் 15,000 பிரதிகளை தயாரித்து, ரஷ்யாவில் விநியோகிக்க” அவர் அனுமதி பெற்றார் என்றும் அது அறிவிக்கிறது.

அப்பா ரஷ்யாவிலிருந்து திரும்பியவுடன் ஐக்கிய மாகாணங்களில் பில்கிரிமாக சேவிக்க அனுப்பப்பட்டார். அப்போது தென் டகோடாவில் நெலீனா மற்றும் வெர்டா பூல் என்பவர்களை சந்தித்தார். உடன் பிறந்த சகோதரிகளான இவர்கள் பின்னர் பெருவில் மிஷனரிகளாக சேவித்தனர். அப்பா சளைக்காமல் செய்த ஊழியத்தை அவர்கள் பெரிதும் பாராட்டினர். அவர்கள் கூறியதாவது: “அந்தக் காலத்திலிருந்த சகோதரர்களிடம் பயனியர் செய்யவேண்டும் என்ற ஆர்வம் ததும்பியது. வெளிநாடுகளுக்கு சென்றபோது இவ்வுலகின் பொருள் ஒன்றுமே அவர்கள் கையிலில்லை. ஆனாலும் யெகோவாவுக்கான அன்பு அவர்கள் உள்ளத்தில் நிரம்பி வழிந்தது. ஊழியத்தில் தங்களால் முடிந்ததை சாதிக்க அவர்களை தூண்டியதும் இந்த அன்பே.”

திருமணம் பிறகு இரண்டாவது பயணம்

அப்பா பல இடங்களுக்கு பயணம் செய்தாலும் ஒரு சகோதரிக்கு தவறாமல் கடிதம் எழுதி வந்தார். அவரே, ஒன்டாரியோவில் உள்ள மாண்டுலின் தீவுகளில் வசித்த க்ளேரா ஹப்பர்ட். ஜூலை 26, 1931-ல் ஒஹையோவிலுள்ள கொலம்பஸில் நடந்த மாநாட்டிற்கு இருவருமே சென்றிருந்தனர். அந்த மாநாட்டில்தான் பைபிள் மாணாக்கர்கள், யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றனர். (ஏசாயா 43:10-12) அதற்கடுத்த வாரம் அவர்களுக்கு திருமணம் நடந்தது. சீக்கிரத்திலேயே அப்பா, கரிபியன் தீவுகளுக்கு சென்று தனது இரண்டாவது மிஷனரி பயணத்தை ஆரம்பித்தார். அங்குள்ள சகோதரர்களுக்கு வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய பயிற்சியளித்து, கூட்டங்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களுக்கு உதவினார்.

அப்பா எங்கு சென்றாலும் அம்மாவுக்கு தவறாமல் லெட்டர் எழுதுவார். சூரினாம், செ. கிட்ஸ் போன்ற அநேக இடங்களிலிருந்து படங்கள், கார்டுகள், லெட்டர்கள் போன்றவை அம்மாவுக்கு வந்த வண்ணம் இருந்தன. அந்தந்த இடங்களில் ஊழியம் எவ்வாறு முன்னேறுகிறது என்பதை அப்பா அந்த லெட்டர்களில் எழுதுவார். சில சமயங்களில் அந்த நாட்டிலுள்ள பறவைகள், மிருகங்கள், செடிகள் போன்றவற்றைப் பற்றிய விவரங்களையும் எழுதுவார். ஜூன் 1932-ல் கரிபியனில் தன் ஊழியத்தை முடித்துவிட்டு கனடா திரும்பினார். எப்போதும் போலவே கப்பலில் சாதாரண கட்டணத்தில் பயணம் செய்தார். அதற்கு பிறகு அம்மாவும் அப்பாவும் சேர்ந்தே முழுநேர ஊழியம் செய்தனர். 1932, 33-ன் குளிர்காலத்தில் ஒட்டாவா பகுதியிலுள்ள முழுநேர ஊழியர்களின் ஒரு பெரும் தொகுதியோடு சேர்ந்து ஊழியம் செய்தனர்.

கொஞ்ச காலம் குடும்ப வாழ்க்கை

1934-ல் என் அண்ணன் டேவிட் பிறந்தான். அவன் சிறு பிள்ளையாக இருந்தபோதே அம்மா தன் தொப்பிகளை வைக்கும் பெட்டிமீது நின்றுகொண்டு “பேச்சுகளை” கொடுப்பான். அப்பாவைப் போலவே அவனும் இன்றுவரை யெகோவாவின் வணக்கத்தில் வைராக்கியமாக இருக்கிறான். அவர்கள் மூன்று பேரும் ஒரு காரில் பயணம் செய்தனர்; ஒலிபரப்பு சாதனத்தை கார் மேலே கட்டிவைத்திருந்தனர். இவ்வாறே கனடாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு வரை பயணம் செய்து, சபைகளை திடப்படுத்தி வந்தார். நான் 1938-ல் பிறந்தேன். அப்போது அப்பா பிரிட்டிஷ் கொலம்பியாவில் சேவித்தார். அன்று நடந்தது இன்றும் அண்ணனுடைய நினைவில் பசுமையாக உள்ளது. அப்பா என்னை கட்டிலில் படுக்க வைத்த பிறகு அப்பா, அம்மா, டேவிட் மூன்று பேரும் கட்டிலை சுற்றி முழங்கால் போட்டுக்கொள்வார்களாம். அப்போது எனக்காக அப்பா நன்றி சொல்லி ஜெபம் செய்வாராம்.

1939-ன் குளிர்காலத்தில் நாங்கள் வான்கூவரில் வாழ்ந்து வந்தோம். அப்போது அருகிலுள்ள சபைகளை அப்பா சந்தித்து வந்தார். அவர் எழுதிய அநேக கடிதங்களை நாங்கள் சேகரித்து வைத்திருக்கிறோம். அதில் ஜனவரி 14, 1939 என தேதியிட்ட ஒன்றை பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள வெர்னானிலிருந்து எழுதியிருந்தார். க்ளேரா, டேவிட், ரூத்-க்கு என்று ஆரம்பித்து, “கட்டியணைத்து முத்தத்துடன் எழுதுவதாவது:” என எழுதியிருந்தார். அதில் எங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எழுதியிருந்தார். அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம் என்றும் அதில் கூறியிருந்தார்.—மத்தேயு 9:37, 38.

அப்பா, பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து வான்கூவர் திரும்பி வந்து ஒரு வாரம் சென்றபின் ஒருநாள் கூட்டம் நடக்கும்போதே மயங்கி விழுந்தார். அவருடைய மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. மே 1, 1939-ல் அவருடைய பூமிக்குரிய வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அப்போது டேவிட் 5 வயது பையன், நானோ 9 மாத குழந்தை. பாசமுள்ள எங்கள் அம்மாவுக்கும் பரலோக நம்பிக்கை இருந்தது. ஜூன் 19, 1963-ல் மரிக்கும்வரை அவரும் கடவுளுக்கு உண்மையுள்ளவராய் நிலைத்திருந்தார்.

அநேக தேசங்களுக்கு நற்செய்தியை கொண்டுசெல்லும் சிலாக்கியத்தை அப்பா பெரிதும் போற்றினார். அதை அம்மாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் அழகாக வர்ணித்தார்: “இந்தத் தேசங்களுக்கு எல்லாம் ராஜ்ய செய்தி என்னும் ஒளியை கொண்டுசெல்ல யெகோவா என்னை இரக்கத்தோடு அனுமதித்துள்ளார். அவருடைய பரிசுத்த பெயர் மகிமைப்படுவதாக. என்னுடைய பலவீனத்திலும் தகுதியற்ற நிலையிலும் அவருடைய மகிமையே பிரகாசமாய் ஜொலிக்கிறது!”

இன்று ஜார்ஜ் மற்றும் க்ளேரா யங்கின் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், கொள்ளுப் பேரப் பிள்ளைகள் ஆகிய அனைவரும் நம் அன்பான கடவுளாகிய யெகோவாவை சேவித்து வருகின்றனர். அப்பா அடிக்கடி மேற்கோள் காட்டிய வசனம் எபிரெயர் 6:10. அது சொல்வதாவது: “உங்கள் கிரியையையும், . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.” அப்பாவின் சேவையை நாங்களும்கூட மறந்துவிடவில்லை.

[பக்கம் 23-ன் படம்]

மூன்று அண்ணன்களுடன் வலது பக்கத்தில் அப்பா

[பக்கம் 25-ன் படங்கள்]

சகோதரர்கள் உட்வர்த், ரதர்ஃபர்டு, மாக்மில்லன் ஆகியோருடன் அப்பா (நிற்கிறார்)

கீழே: சகோதரர் ரஸலுடன் அப்பா (இடது கோடியில்)

[பக்கம் 26-ன் படங்கள்]

அம்மாவும் அப்பாவும்

கீழே: திருமண நாளில்

[பக்கம் 27-ன் படம்]

அப்பா மரித்த பிறகு, அம்மா, டேவிட், நான்