Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நல்ல முன்மாதிரிகள்—நீங்களும் அவர்களிடமிருந்து பயனடையலாமே!

நல்ல முன்மாதிரிகள்—நீங்களும் அவர்களிடமிருந்து பயனடையலாமே!

நல்ல முன்மாதிரிகள்—நீங்களும் அவர்களிடமிருந்து பயனடையலாமே!

நீங்கள் “மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.” தெசலோனிக்கேயில் வாழ்ந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்களிடம் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறினார். உடன் விசுவாசிகளுக்கு அவர்கள் மெச்சத்தக்க முன்மாதிரி வைத்தனர். ஆனாலும் இந்தத் தெசலோனிக்கேயர், பவுலும் அவருடைய கூட்டாளிகளும் வைத்த அருமையான முன்மாதிரியையே பின்பற்றினர். பவுல் அவர்களிடம் கூறியதாவது: “எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள் நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே. நீங்கள் . . . எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களா”னீர்கள்.—1 தெசலோனிக்கேயர் 1:5-7.

பவுல் மற்றவர்களுக்கு பிரசங்கித்தது மட்டுமல்ல, அதற்கிசைவாக வாழ்ந்தும் காட்டினார். இவ்வாறு விசுவாசம், சகிப்புத்தன்மை, சுயதியாகம் போன்றவற்றின் இலக்கணமாக திகழ்ந்தார். இதன் காரணமாகவே பவுலும் அவருடைய தோழர்களும் தெசலோனிக்கேயரின் வாழ்க்கையில் பெரும் செல்வாக்கு செலுத்தினர். ஆகவேதான், தெசலோனிக்கேயர் ‘மிகுந்த உபத்திரவத்தின்’ மத்தியிலும்கூட சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் இந்த விசுவாசிகளுக்கு முன்மாதிரிகளாக இருந்தது பவுலும் அவருடைய தோழர்களும் மட்டும்தானா? இல்லவே இல்லை. துன்பங்களை சகித்த மற்றவர்களின் முன்மாதிரியும் அவர்களை உற்சாகப்படுத்தியது. “எப்படியெனில், சகோதரரே, யூதேயா தேசத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதராலே எப்படிப் பாடுபட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்கள் சுய ஜனங்களாலே பாடுபட்டீர்கள்” என தெசலோனிக்கேயருக்கு பவுல் எழுதினார்.—1 தெசலோனிக்கேயர் 2:14.

கிறிஸ்து இயேசுவே மிகச் சிறந்த முன்மாதிரி

பவுல், பின்பற்றத்தக்க ஓர் அருமையான முன்மாதிரி வைத்தார் என்பது உண்மையே. ஆனாலும் கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டிய மிக முக்கிய முன்மாதிரி இயேசு கிறிஸ்துவே என்பதை அவர் தெளிவாக்கினார். (1 தெசலோனிக்கேயர் 1:6) அன்றும் இன்றும் கிறிஸ்துவே நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரி. அதனால்தான் அப்போஸ்தலன் பேதுரு பின்வருமாறு எழுதினார்: “இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.”—1 பேதுரு 2:21.

ஆனால் சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பே இயேசு பரலோகத்திற்கு போய்விட்டாரே! இப்பொழுதோ அவர் “சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணு[ம்]” அழியாமையுள்ள ஓர் ஆவி சிருஷ்டி ஆயிற்றே! அதனால் அவர், “மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்” அல்லவா? (1 தீமோத்தேயு 6:16) அப்படியிருக்க, நாம் எவ்வாறு அவரை பின்பற்ற முடியும்? அதற்கு ஒரு வழி, இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நான்கு சுவிசேஷங்களையும் ஆராய்வதாகும். அவருடைய ஆள்தன்மை, வாழ்க்கை முறை, “சிந்தை” ஆகியவற்றை நுணுக்கமாய் அறிந்துகொள்ள இந்தப் பதிவுகள் நமக்கு உதவுகின்றன. (பிலிப்பியர் 2:5-8) அதோடு, எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் a புத்தகத்தை கவனமாக ஆராய்வதும்கூட அவரைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ள உதவும். ஏனென்றால் இந்தப் புத்தகம், அவருடைய பிறப்பிலிருந்து இறப்புவரை நிகழ்ந்தவற்றை துல்லியமாகவும் கால வரிசைப்படியும் படம்பிடித்து காட்டுகிறது.

இயேசுவின் சுயதியாகம் அப்போஸ்தலன் பவுலை மிகவும் கவர்ந்தது. அதனால்தான் கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களிடம் இவ்வாறு கூறினார்: “நான் உங்களுக்காக எனக்குள்ளவற்றையும், ஏன் என்னையுமே மனமுவந்து அளித்திடுவேன்.” (2 கொரிந்தியர் 12:15, பொது மொழிபெயர்ப்பு) அவர் கிறிஸ்துவின் மனநிலையை அப்படியே பிரதிபலித்தார் அல்லவா! கிறிஸ்துவின் பரிபூரண முன்மாதிரியை ஆழ்ந்து சிந்திக்கையில் நம்முடைய வாழ்க்கையிலும் அவரை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற ஆவல் பிறக்கவில்லையா?

உதாரணமாக, நம்முடைய தேவைகளை கடவுள் நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்திருப்பதால் நாம் அவரை முழுமையாக நம்பவேண்டும் என இயேசு போதித்தார். அவர் போதித்தது மட்டுமல்ல, யெகோவாமீது தனக்கிருந்த நம்பிக்கையை ஒவ்வொரு நாளும் செயலில் காண்பித்தார். “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை” என்று கூறினாரே! (மத்தேயு 6:25; 8:20) பொருட்களைப் பற்றிய கவலையே உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் ஆட்டிப்படைக்கிறதா? அல்லது ராஜ்யத்தையே முதலாவது தேடுகிறீர்கள் என்பதை உங்கள் வாழ்க்கை காண்பிக்கிறதா? யெகோவாவின் சேவை பற்றி உங்களுடைய மனநிலை என்ன? நமக்கு முன்மாதிரியாக இருக்கும் இயேசுவின் மனநிலையே உங்களுக்கும் உள்ளதா? வைராக்கியத்தோடு சேவிக்க வேண்டும் என இயேசு பிரசங்கித்ததை அநேக சந்தர்ப்பங்களில் செய்தும் காண்பித்தார் என பைபிளில் வாசிக்கிறோம். (யோவான் 2:14-17) அன்புகூருவதிலும்கூட இயேசு எப்பேர்ப்பட்ட ஓர் அருமையான முன்மாதிரி! சீஷர்களுக்காக தம் உயிரையே கொடுத்தாரே! (யோவான் 15:13) உங்களுடைய கிறிஸ்தவ சகோதரர்களிடம் அன்பு காண்பிப்பதன் மூலம் நீங்கள் இயேசுவைப் பின்பற்றுகிறீர்களா? அல்லது மற்றவர்களுடைய அபூரணங்கள் காரணமாக அவர்கள்மீது அன்புகாட்ட தவறுகிறீர்களா?

கிறிஸ்துவின் முன்மாதிரியை பின்பற்ற கடினமாய் முயலுகையில் நாம் அநேக சமயங்கள் தவறிவிடுவோம் என்பது நிச்சயம். ஆனாலும், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக்கொள்[]” நாம் எடுக்கும் ஊக்கமான முயற்சிகளைக் கண்டு யெகோவா நிச்சயம் அகமகிழ்வார்.—ரோமர் 13:14.

‘மந்தைக்கு மாதிரிகள்’

இன்று நமக்கு முன்மாதிரிகளாக சேவிப்பவர்கள் சபைகளில் இருக்கிறார்களா? ஏன் இல்லை, ஏராளமானோர் உண்டு! முக்கியமாக, பொறுப்புள்ள ஸ்தானங்களில் சேவிக்கும் சகோதரர்கள் நல்ல முன்மாதிரி வைக்க வேண்டும். தீத்து, கிரேத்தா தீவிலுள்ள சபைகளில் சேவித்து அங்கு மூப்பர்களை நியமித்து வந்தார். இவ்வாறு நியமிக்கப்படும் மூப்பர்கள் ‘குற்றஞ்சாட்டப்படாதவர்களாய்’ இருக்கவேண்டும் என பவுல் அவரிடம் கூறினார். (தீத்து 1:5, 6) அதைப்போலவே அப்போஸ்தலன் பேதுருவும்கூட, ‘மூப்பர்கள்’ “மந்தைக்கு மாதிரிகளாக” இருக்கவேண்டும் என்று கூறினார். (1 பேதுரு 5:1-3) உதவி ஊழியர்களைப் பற்றியென்ன? அவர்களும்கூட, ‘ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்களாக’ இருக்கவேண்டும்.—1 தீமோத்தேயு 3:13.

ஒவ்வொரு மூப்பரும், உதவி ஊழியரும் கிறிஸ்தவ ஊழியத்தின் எல்லா அம்சங்களிலும் கைதேர்ந்தவராக இருப்பார் என எதிர்பார்ப்பது நியாயமல்ல. ஏனென்றால், ரோமிலிருந்த கிறிஸ்தவர்களிடம் பவுல் இவ்வாறு கூறினார்: “நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்க[ள்].” (ரோமர் 12:6) ஒவ்வொரு சகோதரரும் ஒவ்வொரு அம்சத்தில் திறம்பட்டு விளங்குகிறார். மூப்பர்கள் எதைச் சொன்னாலும் அல்லது எதைச் செய்தாலும் அது கச்சிதமாகவே இருக்கும் என எதிர்பார்ப்பதும் சரியல்ல. “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்” என யாக்கோபு 3:2-ல் பைபிள் கூறுகிறதே! என்றாலும், அபூரணத்தின் மத்தியிலும்கூட மூப்பர்கள் தீமோத்தேயுவைப் போல, “வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு” மாதிரியாய் இருக்கமுடியும். (1 தீமோத்தேயு 4:12) மூப்பர்கள் முன்மாதிரிகளாக இருந்தால், மந்தையிலுள்ளவர்கள் எபிரெயர் 13:7-ல் உள்ள ஆலோசனையை சந்தோஷத்தோடு பின்பற்றுவார்கள்: “உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.”

நவீனகால முன்மாதிரிகள்

கடந்த சில பத்தாண்டுகளாக அநேகர் அருமையான முன்மாதிரிகளாக திகழ்ந்திருக்கின்றனர். சுயதியாகம் செய்த ஆயிரக்கணக்கான மிஷனரிகளைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். மற்ற நாடுகளிலும் கிறிஸ்தவ ஊழியத்தை செய்வதற்காக இவர்கள் தங்களுடைய “வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, . . . பிள்ளைகளையாவது, நிலங்களையாவது” விட்டு வந்திருக்கிறார்களே! (மத்தேயு 19:29) பயணக் கண்காணிகள், அவர்களுடைய மனைவிகள், உவாட்ச் டவர் சொஸைட்டியின் அலுவலகங்களில் வாலண்டியர்களாக சேவைசெய்யும் ஆண்கள், பெண்கள், சபைகளிலுள்ள பயனியர்கள் ஆகியோரையும்கூட நினைத்துப் பாருங்கள். இப்படிப்பட்ட முன்மாதிரிகளால் மற்றவர்கள் உற்சாகம் பெற்றிருக்கிறார்களா? ஆசியாவில் வசிக்கும் ஒரு கிறிஸ்தவ ஊழியர், உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் எட்டாவது வகுப்பைச் சேர்ந்த ஒரு மிஷனரி பற்றி நினைவுபடுத்தி கூறினார். உண்மையுள்ள அந்த மிஷனரி, “கொசுக்களின் பட்டாளத்தையும் கொடூரமான வெப்பத்தையும் சமாளிக்க தயாராய் இருந்தார். . . . அவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர், என்றாலும் சீன மொழியிலும் மலாய் மொழியிலும் சரளமாக சாட்சி கொடுக்கும் அவருடைய திறமையே அலாதி” என அந்தச் சகோதரர் கூறினார். இந்த மிஷனரியின் அருமையான முன்மாதிரியின் விளைவு என்ன? அந்தச் சகோதரர் கூறியதாவது: “அவருடைய அமைதியும் நம்பிக்கையும் என்னைக் கவர்ந்தன; நான் வளர்ந்த பிறகு ஒரு மிஷனரி ஆகவேண்டும் என அப்போதே தீர்மானித்துவிட்டேன்.” கடைசியில் அந்தச் சகோதரர் ஒரு மிஷனரியானார் என்பதில் ஆச்சரியம் ஏதுமுண்டோ?

காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் வெளிவந்த வாழ்க்கை சரிதைகளின் பட்டியலை உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ்-ல் காணலாம். இந்தக் கட்டுரைகளில் அநேகருடைய அருமையான அனுபவங்கள் நிறைந்துள்ளன. சிலர் உலகப்பிரகாரமான வேலைகளையும் இலக்குகளையும் தியாகம் செய்தனர், பலவீனங்களை வென்று வீழ்த்தினர், ஆள்தன்மைகளில் தலைகீழ் மாற்றங்களை செய்தனர், துன்பத்தின் மத்தியிலும் சந்தோஷமாக நிலைத்திருந்தனர், சுறுசுறுப்பு, சகிப்புத்தன்மை, உண்மைப் பற்றுறுதி, மனத்தாழ்மை, சுயதியாக மனப்பான்மை போன்ற அருமையான குணங்களையும் வெளிக்காட்டினர். இந்தக் கட்டுரைகள் பற்றி ஒரு வாசகியின் கருத்து இதோ! “அவர்கள் பட்ட கஷ்டத்தை வாசித்தபோது மனத்தாழ்மையும் நன்றியுணர்வும் எனக்குள் பெருக்கெடுத்தன. என்னைப் பற்றியே உயர்வாக நினைக்காமல் இருக்கவும், சுயநலத்தை ஒழித்துக்கட்டவும் அவை எனக்கு உதவின.”

அதுமட்டுமா, உங்கள் சபையிலேயே இருக்கும் நல்ல முன்மாதிரிகளையும் மறந்துவிடாதீர்கள். தங்கள் குடும்பங்களின் ஆவிக்குரிய, பொருளாதார தேவைகளை நிறைவேற்ற கடினமாய் உழைக்கும் குடும்ப தலைவர்கள் நல்ல முன்மாதிரிகள். தனியாக குழந்தைகளை வளர்ப்பதற்கு கஷ்டப்பட்டாலும் ஊழியத்தில் சுறுசுறுப்பாய் உள்ள தாய்மார்களும் சகோதரிகளும் என்னே அருமையானவர்கள்! பலவீனம், உடல்நலக் கோளாறுகள் மத்தியிலும் உண்மையாய் நிலைத்திருக்கும் வயதானோரும் அருமையான முன்மாதிரிகளே! இப்படிப்பட்ட முன்மாதிரிகள் உங்களை உற்சாகப்படுத்தவில்லையா?

இந்த உலகில் கெட்ட முன்மாதிரிகள் மலிந்து கிடப்பது உண்மையே. (2 தீமோத்தேயு 3:13) இருந்தாலும் யூதேயாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் கொடுத்த உற்சாகத்தை கவனியுங்கள். பூர்வ காலங்களில் வாழ்ந்த விசுவாசமுள்ள ஆண்கள், பெண்கள் வைத்த நல்ல முன்மாதிரியை பவுல் விவரித்தார். அதற்கு பிறகு அவர், “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, . . . விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.” (எபிரேயர் 12:1) இன்றுள்ள கிறிஸ்தவர்களையும் “மேகம்போன்ற” திரளான நல்ல முன்மாதிரிகள் சூழ்ந்துள்ளன. இதில் பூர்வகால முன்மாதிரிகளும் நவீனகால முன்மாதிரிகளும் ஏராளம் உள்ளன. நீங்கள் அவர்களிடமிருந்து உண்மையிலேயே பயனடைகிறீர்களா? உங்களாலும் முடியும். நீங்கள் “தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்”றினால் நிச்சயம் பயனடைவீர்கள்.—3 யோவான் 11.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 20-ன் சிறு குறிப்பு]

ஒவ்வொரு மூப்பரும், உதவி ஊழியரும் கிறிஸ்தவ ஊழியத்தின் எல்லா அம்சங்களிலும் கைதேர்ந்தவராக இருப்பார் என எதிர்பார்ப்பது நியாயமல்ல

[பக்கம் 21-ன் படங்கள்]

மூப்பர்கள் “மந்தைக்கு மாதிரிகளாக” இருக்க வேண்டும்