Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ராஜ்ய சத்தியத்தின் விதைகளை விதைத்தல்

ராஜ்ய சத்தியத்தின் விதைகளை விதைத்தல்

ராஜ்ய சத்தியத்தின் விதைகளை விதைத்தல்

“காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே.”பிரசங்கி 11:6.

1. என்ன கருத்தில் கிறிஸ்தவர்கள் இன்று விதைக்கிறார்கள்?

 பூர்வ கால எபிரெய சமுதாயத்தில், விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் வாழ்ந்த இயேசு, விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தம் உவமைகளில் பயன்படுத்தினார். உதாரணமாக, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதை விதைக்கும் வேலைக்கு ஒப்பிட்டார். (மத்தேயு 13:1-9, 18-23; லூக்கா 8:5-15) இன்று நாம் விவசாய சமுதாயத்தில் வாழ்ந்தாலும்சரி வாழாவிட்டாலும்சரி, ஆவிக்குரிய விதைக்கும் வேலையில் ஈடுபடுவது கிறிஸ்தவர்களின் மிக முக்கிய வேலை.

2. நம்முடைய பிரசங்க ஊழியம் எந்தளவு முக்கியமானது, அதை நிறைவேற்றுவதற்காக இன்று செய்யப்படும் சில காரியங்கள் யாவை?

2 இந்த முடிவின் காலத்தில், பைபிள் சத்தியத்தை விதைக்கும் வேலையில் பங்குகொள்வது மாபெரும் பாக்கியம். இந்த வேலையின் முக்கியத்துவத்தை ரோமர் 10:14, 15 தெளிவாக விவரிக்கிறது: “பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.” கடவுள் கொடுத்த இந்த ஊழியத்தை நிறைவேற்றுவதில் நம்பிக்கையான மனநிலையுடன் முன்னேறுவது, முன்னொருபோதும் இல்லாதளவுக்கு இப்போது முக்கியமானதாக உள்ளது. இதன் காரணமாகவே யெகோவாவின் சாட்சிகள், பைபிள்களையும் பைபிள் படிப்புக்கு உதவும் பிரசுரங்களையும் 340 மொழிகளில் பிரசுரிப்பதிலும் விநியோகிப்பதிலும் முழு கவனம் செலுத்துகின்றனர். இவற்றை தயாரிப்பதற்கு தலைமை அலுவலகத்திலும், பல்வேறு நாடுகளிலுள்ள கிளை அலுலகங்களிலும் மனமுவந்து சேவை செய்யும் 18,000-த்திற்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். மேலும், இந்தப் பைபிள் பிரசுரங்களை உலகமுழுவதிலும் வினியோகிப்பதில் ஏறக்குறைய 60 லட்சம் பேர் பங்குகொள்கின்றனர்.

3. ராஜ்ய சத்தியத்தை விதைப்பதன் மூலம் என்ன பலன் கிடைத்திருக்கிறது?

3 இந்தக் கடின உழைப்பின் பலன்? கிறிஸ்தவத்தின் ஆரம்பத்திலிருந்ததுபோல், இன்றும் பலர் சத்தியத்தை ஏற்கிறார்கள். (அப்போஸ்தலர் 2:41, 46, 47) பெருமளவு சாட்சி கொடுப்பது, புதிதாக முழுக்காட்டப்படும் ராஜ்ய பிரஸ்தாபிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்திருக்கிறது. ஆனால் அதைக் காட்டிலும் முக்கியமாக, யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதற்கும் அவரே மெய் தேவன் என நியாயநிரூபணம் செய்யப்படுவதற்கும் வழிவகுத்திருக்கிறது. (மத்தேயு 6:9) மேலும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து பெற்ற அறிவு, பலருடைய வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கிறது; இது அவர்களை இரட்சிப்புக்கு வழிநடத்தலாம்.—அப்போஸ்தலர் 13:47.

4. அப்போஸ்தலர்கள் தாங்கள் பிரசங்கித்தவர்களிடம் எந்தளவுக்கு அக்கறை காட்டினர்?

4 நற்செய்தியால் ஜீவனளிக்க முடியும்; அந்தளவுக்கு அது முக்கியமானது என்பதை அப்போஸ்தலர்கள் நன்கு அறிந்திருந்தனர்; எனவே தாங்கள் பிரசங்கித்தவர்களிடம் தனிப்பட்ட அக்கறை காட்டினர். அப்போஸ்தலனாகிய பவுலின் பின்வரும் வார்த்தைகளில் இது தெளிவாக தெரிகிறது: “நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.” (1 தெசலோனிக்கேயர் 2:8) ஜனங்களிடம் இத்தகைய உண்மையான அக்கறையை பவுலும் மற்ற அப்போஸ்தலர்களும் காட்டினர்; இந்த விஷயத்தில், உயிர்காக்கும் இந்த ஊழியத்தில் பெருமளவு உட்பட்டிருக்கும் இயேசுவையும் பரலோக தூதர்களையும் அவர்கள் பின்பற்றினர். ராஜ்ய சத்தியத்தை விதைப்பதில், கடவுளுடைய இந்தப் பரலோக ஊழியர்களின் முக்கிய பங்கை நாம் கலந்தாராய்வோம்; அவர்களுடைய முன்மாதிரி எவ்வாறு நம் பாகத்தை சரிவர செய்ய நம்மை ஊக்குவிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

இயேசு—ராஜ்ய சத்தியத்தை விதைத்தவர்

5. பூமியிலிருக்கையில் இயேசு எந்த ஊழியத்தில் முக்கியமாய் ஈடுபட்டிருந்தார்?

5 பரிபூரணராக இருந்த இயேசு, தாம் வாழ்ந்த காலத்திலிருந்தவர்களுக்கு, ஆன்மீக ரீதியில் மட்டுமல்லாமல் மற்ற விதங்களிலும் உதவ சக்தி பெற்றிருந்தார். உதாரணமாக, மருத்துவம் சம்பந்தமாய் அப்போது நிலவிய பல தவறான கருத்துக்களை அவர் சரிசெய்திருக்கலாம்; அறிவியலின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உண்மைகளை நன்கு புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவியிருக்கலாம். ஆனால், நற்செய்தியைப் பிரசங்கிப்பதே தமக்குக் கொடுக்கப்பட்ட வேலை என்பதை ஊழியத்தின் தொடக்கத்திலேயே அவர் தெளிவுபடுத்தினார். (லூக்கா 4:17-21) மேலும் தம்முடைய ஊழியத்தின் முடிவில், “சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்” என விளக்கினார். (யோவான் 18:37) இவ்வாறு ராஜ்ய சத்தியத்தை விதைப்பதில் அவர் அதிக கவனம் செலுத்தினார். கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி ஜனங்களுக்குப் போதித்ததே, இயேசு அவர்களுக்குக் கொடுக்க முடிந்த எந்தக் கல்வியைப் பார்க்கிலும் அதிமுக்கியமானதாய் இருந்தது.—ரோமர் 11:33-36.

6, 7. (அ) இயேசு பரலோகத்திற்கு செல்வதற்கு முன்பு குறிப்பிடத்தக்க என்ன உறுதியளித்தார், அதை எவ்வாறு நிறைவேற்றுகிறார்? (ஆ) பிரசங்க ஊழியத்தின் மீது இயேசுவுக்கு இருந்த மனப்பான்மை எவ்வாறு உங்கள் உள்ளத்தை தொடுகிறது?

6 தாம் ராஜ்ய சத்தியத்தை விதைப்பவர் என்பதை இயேசு குறிப்பாக தெரிவித்தார். (யோவான் 4:35-38) சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நற்செய்தியின் விதைகளைத் தூவினார். கழுமரத்தில் உயிர் ஊசலாடும் வேளையிலும், எதிர்கால பூமிக்குரிய பரதீஸைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார். (லூக்கா 23:43) மேலும், நற்செய்தியைப் பிரசங்கிக்கும் தம் முக்கிய கடமையை கழுமரத்தில் அவர் மரித்ததுடன் மறந்துவிடவில்லை. அவர் பரலோகத்திற்கு செல்வதற்கு முன், ராஜ்ய சத்தியத்தின் விதைகளைத் தொடர்ந்து விதைக்கவும் சீஷராக்கவும் அப்போஸ்தலருக்குக் கட்டளையிட்டார். பின்பு, முக்கியமான வாக்குறுதி ஒன்றைக் கொடுத்தார். “இதோ! இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வரையில் சகல நாட்களிலும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்றார்.—மத்தேயு 28:19, 20, NW.

7 இயேசு, “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வரையில் சகல நாட்களிலும்” நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதை ஆதரிப்பதாகவும் வழிநடத்துவதாகவும் பாதுகாப்பதாகவும் உறுதியளித்தார். இன்று வரையிலும் அவர் இந்தச் சுவிசேஷ ஊழியத்திடம் தனிப்பட்ட அக்கறையைத் தொடர்ந்து காட்டி வருகிறார். ராஜ்ய சத்தியத்தின் விதைக்கும் வேலையை முன்னின்று வழிநடத்தும் அவரே நம் தலைவர். (மத்தேயு 23:10) கிறிஸ்தவ சபையின் தலைவராக, இந்த உலகளாவிய ஊழியத்திற்கு யெகோவாவுக்கு முன்பாக அவரே பொறுப்புள்ளவர்.—எபேசியர் 1:22, 23; கொலோசெயர் 1:18.

நற்செய்தியை அறிவிக்கும் தேவதூதர்கள்

8, 9. (அ) தேவதூதர்கள் எவ்வாறு மனித விவகாரங்களில் உண்மையான ஆர்வம் காட்டியிருக்கின்றனர்? (ஆ) எந்த கருத்தில் நாம் தேவதூதருக்கு நாடக மேடையில் உள்ளவர்களைப் போல் இருக்கிறோம்?

8 யெகோவா பூமியைச் சிருஷ்டிக்கையில் தேவதூதர்கள் ‘ஆனந்த ஆரவாரம் செய்தனர்.’ (யோபு 38:4-7, தி.மொ.) அப்போதிருந்தே இந்தப் பரலோக சிருஷ்டிகள் மனித விவகாரங்களில் பேரார்வம் காட்டி வந்திருக்கின்றனர். தம் செய்திகளை மனிதருக்கு அறிவிக்க யெகோவா இவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். (சங்கீதம் 103:20) நம் நாளில் நற்செய்தியைப் பரவ செய்வதில் இது முற்றிலும் உண்மை. ‘வானத்தின் மத்தியிலே பறக்கும்’ ‘தூதனை’ அப்போஸ்தலனாகிய யோவான் வெளிப்படுத்துதல் தரிசனத்தில் கண்டார். “அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப்பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது” என அறிவிப்பதைக் கேட்டார்.—வெளிப்படுத்துதல் 14:6, 7.

9 ‘இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்கள்’ என தேவதூதர்களைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. (எபிரெயர் 1:14) தேவதூதர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலையை ஆர்வத்துடன் செய்கையில், நம்மையும் நம்முடைய ஊழியத்தையும் கவனிக்க அவர்களுக்கு வாய்ப்பிருக்கிறது. எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் நாடக மேடையில் இருப்பதைப்போல் பரலோகக் கூட்டத்தாருக்கு முன்பாக நம் ஊழியத்தை செய்கிறோம். (1 கொரிந்தியர் 4:9) ராஜ்ய சத்தியத்தை நாம் தனிமையில் விதைக்கவில்லை என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலையும் ஆனந்தத்தையும் அளிக்கிறது!

நம் பங்கை ஆர்வத்துடன் செய்கிறோம்

10. பிரசங்கி 11:6-ல் உள்ள நடைமுறையான அறிவுரை எவ்வாறு நம் சுவிசேஷ ஊழியத்திற்குப் பொருந்தும்?

10 இயேசுவும் தேவதூதர்களும் நம் ஊழியத்தில் ஏன் அந்தளவு ஆர்வம் காட்டுகின்றனர்? “மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என இயேசு சொன்னதிலிருந்து இதற்கான ஒரு காரணம் புரிகிறது. (லூக்கா 15:10) அதே போன்ற உண்மையான அக்கறையை நாமும் ஜனங்களிடம் காட்டுகிறோம். ஆகையால், ராஜ்ய சத்தியத்தின் விதைகளை எல்லா இடங்களிலும் பரவச் செய்வதற்கு நம்மாலான அனைத்தையும் செய்கிறோம். பிரசங்கி 11:6-லுள்ள வார்த்தைகள் நம் ஊழியத்திற்கும் பொருந்தும். “காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே” என அங்கு பைபிள் நமக்கு அறிவுரை கூறுகிறது. ஒருவர் நம் செய்தியை ஏற்றுக்கொள்ளும் அதே சமயத்தில், நூற்றுக்கணக்கானோர் அல்லது ஆயிரக்கணக்கானோருங்கூட அதை மறுக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் தேவதூதர்களைப்போல், இரட்சிப்பின் செய்தியை ஏற்கிற ‘ஒரே பாவியினிமித்தம்’ நாமும் சந்தோஷப்படுகிறோம்.

11. பைபிள் சார்ந்த பிரசுரங்களை உபயோகிப்பது எந்தளவு பயன்மிக்கது?

11 நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் பல காரியங்கள் உட்பட்டிருக்கின்றன. இந்த ஊழியத்தில் பெரிதும் உதவுகிறவற்றில் ஒன்று, யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்தும் பைபிள் சார்ந்த பிரசுரங்கள். ஒரு வகையில், இந்தப் பிரசுரங்களே எங்கும் தூவப்படும் விதைகளைப்போல் செயல்பட்டிருக்கின்றன. அவை எங்கெல்லாம் வேர்விட்டு கனிகொடுக்கும் என்பது நமக்குத் தெரியாது. சில சமயங்களில் ஒருவர் அந்தப் பிரசுரத்தை வாசிப்பதற்கு முன்பே அது பலர் கைகளுக்கு மாறிவிடலாம். சில சந்தர்ப்பங்களில் நல்மனமுள்ளோரின் நன்மைக்காக இயேசுவும் தேவதூதர்களும் இப்படி காரியங்களை வழிநடத்தலாம். ஜனங்களுக்கு கொடுக்கப்படும் பிரசுரங்களைப் பயன்படுத்தி எதிர்பாராத, அதிசயமான பலன்களை யெகோவா எப்படி அளிக்கிறார் என்பதற்கு சில அனுபவங்களைக் கவனியுங்கள்.

உண்மை கடவுளின் செயல்

12. ஒரு பழைய பத்திரிகை, யெகோவாவை அறிய ஓர் குடும்பத்திற்கு எவ்வாறு உதவியது?

12 1953-ல், ஒரு மாநகரத்தில் வசித்துவந்த ராபர்ட், லைலா தம்பதியினர் தங்கள் பிள்ளைகளுடன் அமெரிக்காவிலுள்ள பென்ஸில்வேனியாவின் நாட்டுப்புறத்திலிருந்த பாழடைந்த ஒரு பழைய பண்ணை வீட்டுக்கு குடிமாறினர். அவர்கள் மாறிச்சென்ற கொஞ்ச நாட்களில், படிக்கட்டுகளின் கீழுள்ள இடத்தில் குளியலறை ஒன்றை கட்ட ராபர்ட் தீர்மானித்தார். பலகைகள் பலவற்றை நீக்கிய போது சுவருக்குப் பின்னால் காகிதத் துண்டுகளையும், வால்நட் கொட்டைகளின் ஓடுகளையும், குப்பைக்கூளங்களையும் சுண்டெலிகள் சேகரித்து வைத்திருப்பதைக் கண்டுபிடித்தார். அந்தக் குப்பைகளின் மத்தியில் த கோல்டன் ஏஜ் பத்திரிகையின் ஒரு பிரதியும் கிடந்தது. பிள்ளைகளை வளர்ப்பதைப் பற்றி அதில் பிரசுரிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரை அவர் கண்ணில் படவே ஆர்வம் மேலிட அதை வாசித்தார். அந்தப் பத்திரிகையில் கொடுக்கப்பட்டிருந்த தெளிவான, பைபிள் சார்ந்த வழிநடத்துதல் அவர் மனதை பெரிதும் கவர்ந்ததால், “த கோல்டன் ஏஜ்-ன் மதத்தில்” சேர்ந்துகொள்ளலாம் என அவர் லைலாவிடம் சொன்னார். சில வாரங்களில் யெகோவாவின் சாட்சிகள் அவர்களுடைய வீட்டிற்கு வந்தனர்; ஆனால் ராபர்ட், “த கோல்டன் ஏஜ்-ன் மதத்தில்” மட்டுமே தன் குடும்பத்தாருக்கு ஆர்வமிருப்பதாக அவர்களிடம் சொன்னார். த கோல்டன் ஏஜ் இப்போது அவேக்! என்ற பெயரில் வெளிவருவதை சாட்சிகள் விளக்கினர். ராபர்ட்டும் லைலாவும் சாட்சிகளுடன் தவறாமல் பைபிள் படிக்கத் தொடங்கி, முழுக்காட்டப்பட்டனர். அவர்களோ தங்கள் பிள்ளைகளில் சத்தியத்தின் விதைகளை விதைத்து, நிறைவாய் ‘அறுவடை’ செய்தனர். இன்று, ராபர்ட், லைலா தம்பதியினரின் ஏழு பிள்ளைகள் உட்பட, 20-க்கு மேற்பட்ட இவர்களது குடும்பத்தினர் யெகோவா தேவனின் முழுக்காட்டப்பட்ட ஊழியர்கள்.

13. பியூர்டோ ரிகோவில் ஒரு தம்பதியினரை பைபிளில் ஆர்வம் காட்ட தூண்டியது எது?

13 சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, பியூர்டோ ரிகோவை சேர்ந்த வில்லியம், ஏடா தம்பதியினருக்குப் பைபிள் படிப்பில் துளியும் ஆர்வம் இல்லை. யெகோவாவின் சாட்சிகள் அவர்களை சந்தித்தபோதெல்லாம், வீட்டில் யாருமில்லாததுபோல் காட்டிக் கொள்வர். வீட்டைப் பழுதுபார்ப்பதற்குத் தேவையான ஒரு பொருளை வாங்குவதற்கு வில்லியம் ஒரு நாள் பழைய பொருட்கள் விற்கும் இடத்திற்குச் சென்றார். அங்கிருந்து புறப்படுகையில், பெரிய குப்பை தொட்டியில் பளிச்சென்று இளம்பச்சை நிறத்தில் கிடந்த ஒரு புத்தகம் அவர் கண்களில் பட்டது. அது, 1940-ல் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட ரிலிஜன் என்ற புத்தகம். வில்லியம் அந்தப் புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றார்; பொய் மதத்திற்கும் உண்மை மதத்திற்குமுள்ள வித்தியாசத்தை வாசிக்கையில் அவர் உள்ளம் குதூகலித்தது. அடுத்த முறை யெகோவாவின் சாட்சிகள் வந்தபோது, வில்லியமும் ஏடாவும் அவர்கள் சொல்ல வந்த செய்திக்கு செவிசாய்த்தனர்; அவர்களோடு பைபிள் படிக்க தொடங்கினர். சில மாதங்களுக்குப் பின், 1958-ல் நடைபெற்ற கடவுளுடைய சித்தம் சர்வதேச மாநாட்டில் அவர்கள் முழுக்காட்டப்பட்டனர். அப்போதிருந்து, 50-க்கும் அதிகமானோர் நம் கிறிஸ்தவ சகோதரர்களாவதற்கு அவர்கள் உதவியிருக்கின்றனர்.

14. ஓர் அனுபவம் காட்டுகிறபடி, பைபிள் சார்ந்த நம் பிரசுரங்களிலிருந்து என்ன பலனை எதிர்பார்க்கலாம்?

14 அப்போது கார்லுக்கு 11 வயது; கொஞ்சம் சுட்டித்தனம் மிக்கவனும்கூட. தான் எப்போதும் ஏதாவது வம்பில் மாட்டிக்கொள்வதாகவே அவன் நினைத்தான். அவனுடைய அப்பா ஒரு ஜெர்மன் மெத்தடிஸ்ட் போதகர். கெட்டவர்கள் இறந்தபிறகு நரகத்திற்குச் செல்வர், அங்கு அக்கினியில் வதைக்கப்படுவர் என்று அவர் அவனுக்குப் போதித்திருந்தார். ஆகையால் நரகம் என்றாலே கார்லுக்கு படுபயம். 1917-ல், ஒரு நாள் தெருவில் கிடந்த துண்டுப்பிரதி ஒன்றை கார்ல் எடுத்துப் பார்த்தான். அதை வாசிக்கையில், “நரகம் என்பது என்ன?” என்ற கேள்வியில் அவன் கண்கள் நிலைகுத்தி நின்றன. அந்தக் காகிதம், நரகம் என்ற தலைப்பில் பேசப்படவிருந்த ஒரு பொதுப் பேச்சுக்கான அழைப்பிதழ். யெகோவாவின் சாட்சிகள் என்று இப்போது அறியப்படுகிற பைபிள் மாணாக்கரால் அந்தப் பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்பின் ஏறக்குறைய ஓர் ஆண்டு கால பைபிள் படிப்புக்குப் பிறகு கார்ல் முழுக்காட்டப்பட்டு பைபிள் மாணாக்கரில் ஒருவனானான். 1925-ல், யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்தில் வேலை செய்யும்படி அவர் அழைக்கப்பட்டார்; அங்குதான் இன்னும் சேவை செய்கிறார். எண்பது ஆண்டுகளாக தொடரும் அவருடைய இந்த கிறிஸ்தவ வாழ்க்கை, தெருவில் கிடந்த ஒரு துண்டு காகிதத்தால் தொடங்கினது.

15. யெகோவா தாம் விரும்பும் விதத்தில் காரியங்களை வழிநடத்த என்ன செய்யலாம்?

15 இந்த அனுபவங்களில், தேவதூதர்களுக்கும் பங்கிருக்கிறதா, அப்படி இருந்தால் எந்தளவுக்கு என்பதைத் தீர்மானிப்பது மனித திறமைக்கு அப்பாற்பட்டது என்பது உண்மைதான். இருப்பினும், பிரசங்க ஊழியத்தில் இயேசுவும் தேவ தூதர்களும் சுறுசுறுப்பாக செயல்படுவதையும் யெகோவா தாம் விரும்பும் விதத்தில் காரியங்களை வழிநடத்துவதையும் நாம் ஒருபோதும் சந்தேகிக்கக்கூடாது. நாம் அளிக்கும் பிரசுரங்கள் நல்ல விதத்தில் பயனளிக்கலாம் என்பதை இந்த அனுபவங்களும் இது போன்ற மற்றவையும் காட்டுகின்றன.

பொக்கிஷம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது

16. 2 கொரிந்தியர் 4:7-லிருந்து நாம் எதை கற்றுக்கொள்ளலாம்?

16 ‘மண்பாண்டங்களில் பெற்ற பொக்கிஷத்தைப்’ பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டார். பிரசங்கிக்கும்படி யெகோவா கொடுத்த ஊழிய பொறுப்பே அந்தப் பொக்கிஷம். மனிதர்களே இந்தப் பொக்கிஷத்தை வைத்திருக்கும் மண்பாண்டங்கள். அபூரணர்களாகவும் எண்ணிக்கையில் குறைவானவர்களாகவும் இருந்தும் அத்தகைய பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்திருப்பதற்கான காரணம், “இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கு”வதற்காகவே என்று பவுல் தொடர்ந்து சொல்கிறார். (2 கொரிந்தியர் 4:7) நம்மிடம் ஒப்படைத்த இந்த ஊழியத்தை செய்து முடிப்பதற்குத் தேவையான பலத்திற்கு யெகோவாவின்மீது நாம் சார்ந்திருக்கலாம்.

17. ராஜ்ய சத்தியத்தின் விதைகளை நாம் விதைக்கையில் எதை எதிர்ப்படுவோம், ஆனால் நம்பிக்கையான மனப்பான்மையை நாம் ஏன் காத்துக்கொள்ள வேண்டும்?

17 அடிக்கடி நாம் தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. சில பிராந்தியங்களில் ஊழியம் செய்வது கடினமாக இருக்கலாம் அல்லது வசதியற்றதாக இருக்கலாம். சில பகுதிகளில், அநேகர் துளியும் ஆர்வம் காட்டாதவர்களாகவும், ஏன், எதிர்ப்பு தெரிவிப்பவர்களாகவும் இருக்கலாம். அத்தகைய இடங்களில் எந்தளவுக்கு முயன்றாலும் பயனேதும் கிடைக்காததாக தோன்றலாம். ஆனாலும் நம் முயற்சிகள் ஏதும் வீண் போகாது; ஏனெனில் உயிர்கள் ஆபத்தில் இருக்கின்றன. நீங்கள் விதைக்கும் விதைகள், ஜனங்களுக்கு இப்போது சந்தோஷத்தையும் எதிர்காலத்தில் நித்திய ஜீவனையும் அளிக்கலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். சங்கீதம் 126:6-லுள்ள இந்த வார்த்தைகள் பல முறை உண்மையென நிரூபித்திருக்கின்றன: “அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.”

18. நம் ஊழியத்தில் எவ்வாறு தொடர்ந்து கவனம் செலுத்தலாம், ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?

18 கிடைக்கும் எந்த சந்தர்ப்பத்தையும் தவறவிடாமல், ராஜ்ய சத்தியத்தின் விதைகளைத் தாராளமாய் விதைப்போமாக. விதைகளை விதைத்து நாம் நீர் பாய்ச்சினாலும், அவற்றை வளரச் செய்கிறவர் யெகோவாவே என்பதை ஒருபோதும் மறவாமல் இருப்போமாக. (1 கொரிந்தியர் 3:6, 7) எனினும், இயேசுவும் தேவதூதர்களும் இந்த ஊழியத்தில் தங்கள் பங்கை செய்வதைப்போல், நாமும் நம் ஊழியத்தை முழுமையாய் செய்யும்படி யெகோவா எதிர்பார்க்கிறார். (2 தீமோத்தேயு 4:5) நம் போதனைகளுக்கும், நம் மனப்பான்மைக்கும், ஊழியத்திடமாக நம் ஆர்வத்திற்கும் தொடர்ந்து கவனம் செலுத்துவோமாக. ஏன்? “இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்” என பவுல் பதில் அளிக்கிறார்.—1 தீமோத்தேயு 4:16.

நாம் கற்றதென்ன?

• விதைக்கும் நம் வேலை எந்த விதத்தில் நல்ல பலன்களைத் தருகிறது?

• இன்று சுவிசேஷ ஊழியத்தில் இயேசு கிறிஸ்துவும் தேவதூதர்களும் எவ்வாறு உட்பட்டிருக்கின்றனர்?

• ராஜ்ய சத்தியத்தை விதைக்கும் நாம், ஏன் தயாள குணத்தோடு இருக்க வேண்டும்?

• நம்முடைய ஊழியத்தில் ஆர்வமின்மையை அல்லது விரோதத்தை எதிர்ப்படுகையில், தளராமல் தொடருவதற்கு எது நமக்கு தூண்டுதலளிக்க வேண்டும்?

[கேள்விகள்]

[பக்கம் 15-ன் படம்]

பூர்வ இஸ்ரவேலிலிருந்த விவசாயிகளைப் போல, இன்று கிறிஸ்தவர்கள் ராஜ்ய சத்தியத்தின் விதைகளை ஏராளமாய் தூவுகிறார்கள்

[பக்கம் 16,17-ன் படம்]

யெகோவாவின் சாட்சிகள், பைபிள் சார்ந்த பல்வகை பிரசுரங்களை 340 மொழிகளில் பிரசுரித்து விநியோகிக்கின்றனர்