Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அந்தியோகியாவில் வளர்ச்சிக்கு வித்திட்ட துன்புறுத்தல்

அந்தியோகியாவில் வளர்ச்சிக்கு வித்திட்ட துன்புறுத்தல்

அந்தியோகியாவில் வளர்ச்சிக்கு வித்திட்ட துன்புறுத்தல்

கொலை வெறி பிடித்தவர்கள் ஸ்தேவானை கொன்றபின், துன்புறுத்தல் என்ற தீ எருசலேமில் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனைக் கண்டு கலங்கிப்போன இயேசுவின் சீஷர்களில் அநேகர் விட்டால்போதும் என ஒரே ஓட்டமாக எருசலேமைவிட்டு ஓடிவிட்டனர். அவ்வாறு ஓடியவர்கள் பல்வேறு இடங்களில் அடைக்கலம் புகுந்தனர். அந்த இடங்களுள் ஒன்றுதான் சிரியாவிலுள்ள அந்தியோகியா. அது எருசலேமுக்கு வடக்கே சுமார் 550 கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது. (அப்போஸ்தலர் 11:19) அதைத் தொடர்ந்துவந்த மற்ற சம்பவங்கள் கிறிஸ்தவர்களின் சரித்திரத்தையே மாற்றி எழுதவிருந்தன. என்ன நடந்தது என்பதை புரிந்துகொள்வதற்கு முன்பு, அந்தியோகியாவைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வது நல்லது.

அந்த காலத்தில், ரோம ஆதிக்கத்தின்கீழ் இருந்த பட்டணங்களை எடுத்துக்கொண்டால், அவற்றின் அளவிலும், செழிப்பிலும், முக்கியத்துவத்திலும் இந்த அந்தியோகியா மூன்றாவது இடத்தில் இருந்தது. ரோம் மற்றும் அலெக்ஸாந்திரியா முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்தன. சிரியாவின் முக்கிய நகரமான இது, மத்தியதரைக் கடல் வடிநிலத்தின் வடகிழக்கு மூலைப் பகுதியின்மேல் ஆதிக்கம் செலுத்தியது. இந்த அந்தியோகியா (இப்போது துருக்கியிலுள்ள அண்டக்யா) கப்பற் போக்குவரத்துள்ள ஓரோன்டெஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த நதி அந்தியோகியாவை சுமார் 32 கிலோமீட்டர் தூரத்திலுள்ள செலுசியா பைரி என்ற துறைமுகத்துடன் இணைக்கிறது. ரோமிற்கும், யூப்ரடீஸ்-டைகிரீஸ் பள்ளத்தாக்கிற்கும் இடையே இருந்த ஓர் முக்கியமான வாணிக மார்க்கம் அந்தியோகியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இது ஒரு முக்கிய வாணிகத்தலமாக இருந்ததால், அந்தப் பேரரசின் எல்லா பகுதியுடனும் வாணிகம் செய்தது. அதனால் வித்தியாசப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்து சென்றனர். அவ்வாறு வருகையில் தங்களுடைய மத அமைப்புகளைப் பற்றிய அநேக செய்திகளை ரோம சாம்ராஜ்யம் முழுவதிலும் பரப்பினர்.

அந்தியோகியாவில் கிரேக்க மதமும் தத்துவமும் செழித்தோங்கின. ஆனால் “கிறிஸ்து வாழ்ந்த காலத்தின்போது, இந்த மத விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மதத்தையும் தத்துவங்களையும் பின்பற்றுவதும் பின்பற்றாததும் தனிநபர்களுடைய விருப்பத்திற்கு விடப்பட்டது. ஏனென்றால், தங்கள் பிரச்சினைகளுக்கும் நாட்டங்களுக்கும் எந்த மதத்தில் தீர்வு அல்லது திருப்தி கிடைக்கிறதோ அதையே மக்கள் பின்பற்றினார்கள்” என்கிறார் வரலாற்றாசிரியரான க்லான்வெல் டௌனீ. (சிரியாவிலுள்ள அந்தியோகியாவின் வரலாறு [ஆங்கிலம்]) அநேகர் கடவுள் ஒருவரே என்ற கோட்பாட்டையும், பிற ஆசாரங்களையும், யூதமத ஒழுக்க சட்டங்களையும் பின்பற்றினார்கள்.

பொ.ச.மு. 300-ல் அந்தியோகியா ஸ்தாபிக்கப்பட்டபோது ஒரு பெரிய யூத சமுதாயம் அங்கு குடியேறியது. அந்த சமுதாயம் இன்றுவரையாக அங்கு இருந்துவருகிறது. இவர்களின் எண்ணிக்கை சுமார் 20,000-லிருந்து 60,000 ஆக வளர்ந்துள்ளது. இது அங்குள்ள மொத்த ஜனத்தொகையில் 10 சதவீதத்திற்கும் அதிகமாகும். யூதர்களை அங்கு குடியேறும்படியும் அவர்களுக்கு எல்லா குடியுரிமைகளை கொடுப்பதாகவும், செலூக்கஸ் ராஜவம்சத்தில் வந்த அரசர்கள் ஊக்கமூட்டியதாக வரலாற்றாசிரியர் ஜோஸிபஸ் சொல்கிறார். அதற்குள்ளாக எபிரெய வேதாகமம் கிரேக்கு மொழியிலும் கிடைக்கப்பெற்றது. இது மேசியாவைப் பற்றிய யூத போதனைகளை ஆதரித்தவர்களின் அக்கறையை தூண்டியது. இதனால் அநேகர் யூத மதத்திற்கு மாறினார்கள். இவையெல்லாம் சேர்ந்து அந்தியோகியாவை கிறிஸ்தவ சீஷராக்கும் வேலைக்கு ஏற்றதாக ஆக்கின.

புறஜாதியாருக்கு சாட்சி கொடுத்தல்

துன்புறுத்தப்பட்டதால் எருசலேமிலிருந்து சிதறிச் சென்ற இயேசுவை பின்பற்றினவர்களில் பலர் யூதர்களிடமாக மட்டுமே இயேசுவைப் பற்றி சாட்சி கொடுத்தனர். இருப்பினும் சீப்புரு மற்றும் சிரேனேயிலிருந்து வந்த சில சீஷர்கள் அந்தியோகியாவில் “கிரேக்கருடனே பேசி”னார்கள். (அப்போஸ்தலர் 11:20) கிரேக்கு பேசும் யூதரிடமும் யூத மதத்திற்கு மாறிய மற்றவர்களிடமும் பொ.ச. 33 பெந்தெகொஸ்தே முதற்கொண்டே இயேசுவைப் பற்றி பிரசங்கிக்கப்பட்டு வந்திருந்தபோதிலும் அந்தியோகியாவில் செய்த பிரசங்கிப்பு வேலை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அங்கு யூதர்களுக்கு மட்டுமின்றி மற்ற மதத்தினருக்கும் பிரசங்கிக்கப்பட்டது. ஆம், வேற்று மதத்தை சேர்ந்த கொர்நேலியுவும் அவனுடைய குடும்பத்தாரும் சீஷர்களாக ஆகியிருந்தார்கள். ஆனால் யெகோவாவிடமிருந்து ஒரு தரிசனம் வந்த பிறகே புறஜாதியாருக்கும் பிரசங்கிப்பது முக்கியம் என்பதை அப்போஸ்தலனாகிய பேதுரு விளங்கிக்கொண்டார்.அப்போஸ்தலர் 10:1-48.

அந்தியோகியாவில் அக்காலத்து யூத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்துவந்தனர். இருப்பினும் இங்குள்ள யூதர்களுக்கும் புறஜாதியாருக்குமிடையில் அந்தளவுக்கு பகைமையோ விரோதமோ இருக்கவில்லை. யூதரல்லாதவர்களும் சாட்சியை ஏற்றுக்கொண்டு நற்செய்திக்கு சாதகமாக பிரதிபலித்தனர். இவ்வாறு சாட்சி கொடுப்பதற்கும், அநேகரை சத்தியத்திற்கு கொண்டுவருவதற்கும் அந்தியோகியா சரியான இடமாக இருந்தது. அதன் விளைவாக ‘அநேகர் விசுவாசிகளானார்கள்.’ (அப்போஸ்தலர் 11:21) பொய் தெய்வங்களை வழிபட்டுவந்தவர்கள் யூத மதத்திற்கு மாறி, பின்பு கிறிஸ்தவர்களானபோது, அவர்களைப் போன்ற பின்னணியைச் சேர்ந்தவர்களிடம் பிரசங்கிப்பது எளிதானது.

அந்தியோகியாவின் வளர்ச்சியை கேள்விப்பட்டவுடன், எருசலேமிலிருந்த சபையினர் பர்னபாவை அங்கு அனுப்பிவைத்தனர். அவர்கள் இவரை தேர்ந்தெடுத்து அனுப்பியது ஞானமான காரியம்; அது ஓர் அன்பான ஏற்பாடும்கூட. யூதரல்லாதவர்களுக்கு ஏற்கெனவே பிரசங்கிக்கத் துவங்கியிருந்த சிலரைப் போலவே பர்னபாவும் சீப்புருவைச் சேர்ந்தவர். அந்தியோகியாவிலிருந்த புறஜாதிகள் பர்னபாவிடம் சகஜமாக பழகியிருந்திருப்பர், அவரும் பயமின்றி வசதியாக உணர்ந்திருப்பார். அந்தியோகியாவில் வாழ்ந்தவர்களும் பர்னபாவை தங்கள் நண்பனாக பாவித்திருக்க வேண்டும். a அவர்கள் அங்கு செய்துவந்த வேலையை அவரால் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி நடந்துகொள்ள முடிந்தது. “அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்.” அதன் விளைவாக “அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.”—அப்போஸ்தலர் 11:22-24.

“அந்தியோகியாவில் ஆரம்பகால பிரசங்கிப்பு வேலை வெற்றிகரமாக நடைபெற்றதற்கான ஒரு காரணம், மிஷனரிகள் எருசலேமிலிருந்த சில யூத மதவெறியர்களுக்கு பயப்பட்டதுபோல இங்கு யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. அத்துடன் சிரியாவின் தலைநகரமாக விளங்கிய அந்த நகரம், இராணுவ அதிகாரியால் ஆளப்பட்டது; அதனால் அங்கு அமைதியும் ஒழுங்கும் நிலவியிருந்தது. ஆனால் எருசலேமிலோ, யூதேயாவின் ஆட்சியாளர்களால் (ஒருவேளை அந்த சமயத்தில்) யூத மதவெறியர்களின் அட்டகாசத்தை அடக்க முடியவில்லை. இங்கு அதுபோன்று இல்லாததால் அடிதடி, கும்பல் தாக்குதல் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அந்தளவுக்கு இல்லை” என்கிறார் வரலாற்றாசிரியர் டௌனீ.

அந்தியோகியாவில் பிரசங்கிப்பதற்கு சாதகமான சூழ்நிலை இருந்ததாலும், அதிக வேலை செய்யப்பட வேண்டியிருந்ததாலும், தனக்கு உதவி வேண்டும் என பர்னபா உணர்ந்தார். அப்போது அவருடைய நண்பனான சவுலின் நினைவு வந்தது. ஏன் சவுல் அல்லது பவுலின் நினைவு வர வேண்டும்? ஏனென்றால், பவுல் 12 அப்போஸ்தலர்களில் ஒருவராக இல்லாதபோதிலும், மற்ற மதத்தினருக்கு பிரசங்கிப்பதற்கான அப்போஸ்தல உரிமையை அவர் பெற்றிருந்தார். (அப்போஸ்தலர் 9:15, 27; ரோமர் 1:7; வெளிப்படுத்துதல் 21:14) புறஜாதியாரின் தேசமான அந்தியோகியாவில் நற்செய்தியை பிரசங்கிப்பதற்கு பவுலே ஏற்ற கூட்டாளி. (கலாத்தியர் 1:16) அதனால், பர்னபா தர்சுவுக்கு சென்றார், சவுலை கண்டார், அந்தியோகியாவிற்கு அழைத்து வந்தார்.—அப்போஸ்தலர் 11:25; பக்கங்கள் 26-7-ல் உள்ள பெட்டியை பார்க்கவும்.

‘கிறிஸ்தவர்கள்’ என்ற பெயர் தேவன் அருளியது

பர்னபாவும் சவுலும் அங்கு ஒரு வருட காலம், “அநேகருக்கு உபதேசித்தார்கள். முதல்முதலாக அந்தியோகியாவிலேயே சீஷர்கள் தேவ அருளால் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டனர்.” கிறிஸ்தவர்கள் என்ற இந்த பெயர் தேவ அருளால் கிடைத்தது என பைபிள் காண்பிக்கிறது. வேற்று மதத்தினர் சீஷர்களை கேலி செய்யும் விதத்தில், ஏளனமாக ‘கிறிஸ்தவர்கள்’ என்ற பெயரில் அழைத்திருக்கலாம் என சிலர் நினைக்கின்றனர். ஆனால், கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் முதன்முதலில் இயேசுவின் சீஷர்களை (கிரேக்கில்) கிறிஸ்தவர்கள் என்றோ (எபிரேயுவில்) மேசியானியர்கள் என்றோ அழைத்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்கள் இயேசுவை கிறிஸ்துவாகவோ மேசியாவாகவோ ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை சீஷர்களை கிறிஸ்தவர்கள் என அழைத்திருந்தால், அந்த யூதர்கள் மறைமுகமாக இயேசுவை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகும். அதனால் அவர்கள் அவ்வாறு அழைத்திருக்க முடியாது. —அப்போஸ்தலர் 11:26, NW.

‘கிறிஸ்தவர்கள் “என்று அழைக்கப்பட்டார்கள்”’ என்ற சொற்றொடர் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் காணப்படுகிறது. “அழைக்கப்பட்டார்கள்” என்ற வினைச்சொல்லை இயற்கைக்கு அப்பாற்பட்ட, தேவ வாக்கு அல்லது தெய்வீக வெளிப்பாடு என்றே எப்போதும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். கல்விமான்கள் பொதுவாக இதை “தேவ வாக்கு சொல்வது,” அல்லது “பரலோகத்திலிருந்து போதித்தல், தெய்வீக கட்டளை அல்லது அறிவுரை கொடுத்தல்” என எழுதியிருக்கின்றனர். இயேசுவை பின்பற்றினவர்கள் “தேவ அருளால்” கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டதால், யெகோவா தேவனே சவுல் மற்றும் பர்னபா மூலமாக இந்த பெயரை கொடுத்திருக்கக்கூடும்.

கிறிஸ்தவர்கள் என்ற பெயர் தொடர்ந்து வழங்கப்பட்டது. இதனால் இயேசுவின் சீஷர்கள் வேறு யூதர்கள் வேறு என்பது தெளிவானது. சுமார் பொ.ச. 58-ல் கிறிஸ்தவர்கள் யார் என ரோம அதிகாரிகள் நன்கு அறிந்திருந்தனர். (அப்போஸ்தலர் 26:28) சரித்திராசிரியர் டாஸிட்டஸின் பிரகாரம் பொ.ச. 64-ற்குள் ரோமிலிருந்த எல்லோரும் இந்த பெயரை அறிந்திருந்தனர்.

யெகோவா உண்மையுள்ள ஊழியர்களை பயன்படுத்துகிறார்

அந்தியோகியாவில் நற்செய்தி விறுவிறுவென்று பரவியது. சீஷர்கள் பிரசங்க வேலையை செய்து முடிப்பதில் விடாப்பிடியாக இருந்தனர்; அவர்களது முயற்சியை யெகோவா தேவனும் ஆசீர்வதித்தார். இதனால் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ மதம் எங்கும் பரவ அந்தியோகியாவே மையமாக விளங்கினது. தூர தேசங்களுக்கும் நற்செய்தி பரவுவதற்காக யெகோவா அந்தியோகியாவிலிருந்த சபையை முக்கியத்தலமாக பயன்படுத்தினார். உதாரணமாக, அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய ஒவ்வொரு சிறப்பான மிஷனரி பயணத்திற்கும் அந்தியோகியாவிலிருந்தே புறப்பட்டார்.

இன்றும்கூட, எதிர்ப்பின் மத்தியிலும் வைராக்கியமாக உறுதியான தீர்மானத்துடன் நிலைத்திருப்பதே உண்மையான கிறிஸ்தவம் பரவுவதற்கு முக்கிய காரணம். இதனால்தான் அநேகர் நற்செய்தியைக் கேட்டு அதற்கான மதித்துணர்வைக் காட்ட முடிகிறது. b ஆக உண்மை வணக்கத்தை ஆதரிப்பதனால் உங்களுக்கு எதிர்ப்புகள் வருகிறது என்றால், ஏதோ காரணத்தோடுதான் யெகோவா இவற்றை அனுமதிக்கிறார் என்பதை மனதில் வையுங்கள். முதல் நூற்றாண்டைப் போலவே, இன்றும் மக்கள் நற்செய்தியை கேட்டு அதற்கு பிரதிபலிக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். யெகோவாவை உத்தமமாக சேவிக்க வேண்டும் என்ற நம்முடைய தீர்மானமே ஒருவர் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை பெற்றுக்கொள்ள உதவும்.

[அடிக்குறிப்புகள்]

a வானம் தெளிவாக இருக்கும் நாளில், அந்தியோகியாவுக்கு தென்மேற்கேயுள்ள காஸீயஸ் மலையிலிருந்து பார்த்தால் சீப்புரு தீவை பார்க்கலாம்.

b காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 1999, பக்கம் 9; விழித்தெழு!, ஏப்ரல் 22, 1999, பக்கங்கள் 21-2; 1999 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தரப் புத்தகம், பக்கங்கள் 250-2-ஐ பார்க்கவும்.

[பக்கம் 26,27-ன் பெட்டி/படங்கள்]

“தொலைந்த வருடங்கள்”

பொ.ச. 45 வாக்கில் சவுல் அந்தியோகியாவிற்கு சென்றார். அதற்கு முன்பு பொ.ச. 36-ல் எருசலேமில் அவரை கொல்வதற்காக தீட்டப்பட்ட திட்டம் தோல்வியடைந்தபோது, உடன் வணக்கத்தார் அவரை உடனடியாக தர்சுவிற்கு அனுப்பிவைத்தனர். இதுவே சவுலைப் பற்றி அப்போஸ்தலர் புத்தகம் கடைசியாக குறிப்பிடும் சம்பவம். (அப்போஸ்தலர் 9:28-30; 11:25) அப்படியென்றால் இந்த ஒன்பது வருடங்களை சவுலின் தொலைந்த வருடங்கள் எனலாம். இந்தக் காலப்பகுதியில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்?

சவுல் எருசலேமிலிருந்து, சிரியா மற்றும் சிலிசியா பகுதிகளுக்கு சென்றார். அதன் பிறகு யூதேயாவிலிருந்த சபைகள் அவரைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டன: “முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான்.” (கலாத்தியர் 1:21-23) அநேகமாக சவுல் அந்தியோகியாவில் பர்னபாவுடன் செய்த சேவையை யூதேயா சபையில் இருந்த கிறிஸ்தவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் அதற்கு முன்பும் அவர் சும்மா இருந்துவிடவில்லை. பொ.ச. 49-ற்குள் சிரியாவிலும் சிலிசியாவிலும் அநேக கிறிஸ்தவ சபைகள் நிறுவப்பட்டன. ஒரு சபை அந்தியோகியாவில் இருந்தது. ஆனால் மற்ற சபைகளை, தொலைந்த வருடங்கள் என்று அழைக்கப்படும் அந்த ஒன்பது வருடங்களில் சவுல் ஊழியம் செய்து நிறுவியிருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.—அப்போஸ்தலர் 11:26; 15:23, 41.

இந்தக் காலப்பகுதியிலேயே சவுலுக்கு ஏராளமான கொடுமைகள் நேர்ந்தன என சில கல்விமான்கள் நம்புகின்றனர். ஆனால், சவுல் யூதர்களிடம் எப்போது 39 அடியாக ஐந்துதரம் அடி வாங்கினார்? அவரை எப்போது மூன்றுதரம் மிலாறால் அடித்தார்கள்? எங்கே அவரை ‘நிறைய தடவை’ காவல்களில் வைத்தனர்? (2 கொரிந்தியர் 11:23-27) சவுல் தனக்கு நேர்ந்த இந்தக் கொடுமைகளை ஏற்கெனவே கடிதங்களில் எழுதிவிட்டார். பிறகு மறுபடியும் அவர் ரோமில் காவலில் இருக்க நேர்ந்தது. பிலிப்புவில் அவர் ஒரு முறை அடிக்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டதற்கு பதிவு இருக்கிறது. ஆனால் அவர் பல முறை காவலில் வைக்கப்பட்டாரே! எப்போது? (அப்போஸ்தலர் 16:22, 23) ஆகவே இந்த ‘தொலைந்த வருடங்களில்’ அவர் பல முறை சிறைசென்றிருக்க வேண்டும். இந்த தொலைந்த வருடங்களின்போது “சவுல், டயஸ்போராவிலுள்ள யூதர்களின் ஜெப ஆலயத்தில் கிறிஸ்துவைப் பற்றி தீவிரமாக சாட்சி கொடுத்ததால் கோபமடைந்த மத குருமார்களும் அரசியல் அதிகாரிகளும் அவரை துன்புறுத்தினார்கள்” என ஒரு எழுத்தாளர் சொல்கிறார்.

சவுல் நான்குதரம் கப்பற்சேதத்தில் சிக்கினார், ஆனால் வேதாகமமோ ஒன்றைப் பற்றித்தான் சொல்கிறது. அந்த ஒன்றும், அவர் எதிர்பட்ட உபத்திரவங்களை பட்டியலிட்டு கொரிந்துவுக்கு எழுதி அனுப்பிய பிறகே நடந்தது. (அப்போஸ்தலர் 27:27-44) ஆகவே மற்றவை நமக்கு தெரியாத அவருடைய மற்ற பயணத்தின்போது நடந்திருக்கலாம். ஒருவேளை இவற்றுள் சில அல்லது எல்லாமே இந்த ‘தொலைந்த வருடங்களின்போது’ நிகழ்ந்திருக்கலாம்.

இந்த காலப்பகுதியை குறிப்பிடும் மற்றொரு சம்பவம் 2 கொரிந்தியர் 12:2-5-ல் காணப்படுகிறது. “கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான். . . . அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டான்” என சவுல் சொன்னார். சவுல் தன்னைப் பற்றிதான் பேசியிருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அவர் இதை பொ.ச. 55-ல் எழுதியதால், 14 வருடத்திற்கு முன்பு என்று அவர் சொல்லும்போது அந்த “தொலைந்த வருடங்க”ளின் இடையிலுள்ள பொ.ச. 41-ம் வருடத்தை குறிப்பிட்டார்.

சவுலுக்கு கிடைத்த தரிசனம் அவரை ஏதோ ஒரு காரணத்திற்காக கடவுள் தேர்ந்தெடுத்ததை கண்டிப்பாக உணர்த்தியிருக்கும். அப்படியென்றால் அந்த தரிசனம் ‘புறஜாதியாருக்கு அப்போஸ்தலனாக’ அவரை பயிற்றுவிக்க கொடுக்கப்பட்டதா? (ரோமர் 11:13) இந்த தரிசனம் அவர் பிற்பாடு சிந்தித்த, எழுதிய, பேசிய விஷயங்களில் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தியதா? சவுல் மதம் மாறியதற்கும், அந்தியோகியாவில் பிரசங்கிக்க அழைக்கப்பட்டதற்கும் இடைப்பட்ட காலத்தில் கிடைத்த அனுபவம், எதிர்காலத்தில் அவர் பெறவிருந்த பொறுப்புகளுக்காக அவரை பயிற்றுவித்ததா? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் என்னவாக இருந்தாலும், அந்தியோகியாவின் பிரசங்கிப்பு வேலையை துரிதப்படுத்துவதில் தனக்கு உதவும்படி பர்னபா சவுலை அழைத்தபோது வைராக்கியமுள்ள சவுல் தனது நியமிப்பை சரியாக நிறைவேற்ற முழுமையாக தகுதி பெற்றிருந்தார்.—அப்போஸ்தலர் 11:19-26.

[பக்கம் 25-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

சிரியா

ஓரோன்டெஸ்

அந்தியோகியா

செலுசியா

சீப்புரு

மத்தியதரைக் கடல் 

எருசலேம்

[படத்திற்கான நன்றி]

Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.

[பக்கம் 24-ன் படங்கள்]

மேலே: இன்றைய அந்தியோகியா

நடுவில்: செலுசியாவின் தெற்குப் பகுதி

கீழே: செலுசியா துறைமுகச் சுவர்