Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இதுதான் வாழ்க்கையா?

இதுதான் வாழ்க்கையா?

இதுதான் வாழ்க்கையா?

ஒரு பொருளின் உண்மையான மதிப்பை அதன் வெளித்தோற்றத்தை வைத்து எடைபோட்டுவிட முடியாது. உதாரணமாக, ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்துக்கொள்ளுங்கள், அச்சடிக்கப்பட்ட அந்தச் சிறிய தாளின் உண்மையான மதிப்பு ஐம்பதே பைசாவில் அடக்கமாகிவிடும்.

இந்தச் சின்னஞ்சிறு துண்டு பேப்பரில்தான் உங்கள் வாழ்க்கையே அடங்கியிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? பணமே வாழ்க்கையின் உயிர்நாடி என பலர் கருதுகிறார்கள். ஆகவே, கோடிக்கணக்கானோர் கோடிகளை குவிக்கும் வெறியில் இராப்பகலாக உழைக்கிறார்கள். சில சமயங்களில் தங்களுடைய ஆரோக்கியம், நண்பர்கள், குடும்பம் இவற்றையெல்லாம் மறந்து, பணம், பணம் என்று பேயாய் அலைகிறார்கள். என்ன பிரயோஜனம்? காசோ பணமோ உண்மையான சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருமா?

காசும் பணமும் கடைசிவரை கைகொடுக்காது என்பதே அறிஞர்களின் கருத்து. ஆல்ஃபீ கோன் என்ற இதழாசிரியர் தன்னுடைய முடிவுரையில் இவ்வாறு கூறுகிறார்: “நிம்மதியை விலைகொடுத்து வாங்க முடியாது. . . . சொத்து சேர்ப்பதையே பிழைப்பாக கொண்டவர்கள் சொத்தாக பெறுவது கவலையையும் கஷ்டத்தையும் நிம்மதியற்ற வாழ்க்கையையும்தான்.”—இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன்.

இனிய வாழ்க்கைக்கு தேவை பணமல்ல என்பதை ஆராய்ச்சியாளர்கள் உணர்ந்திருந்தாலும் மக்கள் அவ்வாறு உணர்வதில்லை. அதற்கு காரணம் விளம்பரங்களின் கவர்ச்சி. மேலை நாடுகளில் ஒரு நாளைக்கு 3,000-க்கும் மேற்பட்ட விளம்பரங்கள் மக்களின் கண்களை கொத்துகின்றன. அது கார் விளம்பரமோ மோர் விளம்பரமோ எதுவானாலும் சரி, ‘வாங்கி மகிழ்வீர்’ என்பதே அதன் தாரக மந்திரம்!

சொத்து! சொத்து!! என்று சூறாவளியாக பறந்தால் என்ன ஆகும்? ஆன்மீக காரியங்கள் அசட்டை செய்யப்படுகின்றன! ஜெர்மனி, கொலோனில் உள்ள ஆர்ச் பிஷப், “எங்கள் சமுதாயத்தில், கடவுள் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று சொன்னதாக நியூஸ்வீக் பத்திரிகை கூறுகிறது.

மண்ணின் மடியில் தலைசாயும் வரை மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து போனதுதான் மிச்சம். வாழ்க்கையில் வேறு எதையும் செய்ய முடியவில்லையே என்று ஏங்கித் தவித்திருக்கலாம். ஆனால் இவ்வளவு நாள் வாழ்ந்ததல்ல, வாழ்க்கைக்கு வேறு ஏதோ இருப்பதாக இப்பொழுது ஞானோதயம் பிறந்திருக்கலாம்.

அப்படியானால், வாழ்க்கையில் ஆன்மீக விஷயங்களுக்கு அதிக கவனம் செலுத்தினால் நிம்மதியும் சந்தோஷமும் கிட்டுமா? உண்மையில் உங்கள் வாழ்க்கைக்கு சுவையூட்டுவது எது?