உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் செல்வாக்கு
உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் செல்வாக்கு
“நான் அவரையும் [இயேசு கிறிஸ்துவையும்] அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிகிறதற்கும் . . . எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்.”—பிலிப்பியர் 3:8-11.
1, 2. (அ) பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பாதிரி உயிர்த்தெழுதலை எவ்வாறு விவரித்தார்? (ஆ) உயிர்த்தெழுதல் எவ்வாறு நடைபெறும்?
புதுமையான பிரசங்கத்தைப் பற்றிய அறிக்கை ஒன்று 1890-களின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்டது. அது, அ.ஐ.மா-வைச் சேர்ந்த நியூ யார்க் நகரிலுள்ள புரூக்லினில் ஒரு பாதிரியார் கொடுத்த பிரசங்கம். அவர் உயிர்த்தெழுதல் எப்படி நடக்கும் என்று தன் சொந்த கருத்தை எடுத்துச் சொல்லியிருந்தார். அதாவது, ஒரு மனித உடலில் எத்தனை எலும்புகள் இருந்ததோ, எப்படிப்பட்ட தசைகள் இருந்ததோ அவை எல்லாவற்றையும் அப்படியே மறுபடியும் ஒன்று சேர்த்து புதுப்பிப்பதே உயிர்த்தெழுதல். அந்த நபர் தீயில் சிக்கி இறந்திருந்தாலும் சரி, விபத்துக்குள்ளாகி உயிர் விட்டிருந்தாலும் சரி, விலங்கின் பிடிக்குள் சிக்கியிருந்தாலும் சரி, அல்லது இயல்பாக இறந்துபோய் நிலத்துக்கு உரமாகியிருந்தாலும் சரி, அது அவ்வாறே புதுப்பிக்கப்படும். அந்த பாதிரியார் நம்பினதாவது: இறந்துபோன கோடிக்கணக்கானவர்களின் கைகள், கால்கள், பாதங்கள், விரல்கள், எலும்புகள், நாண்கள், தோல் ஆகியவை ஒரே நாளில் எங்கிருந்தோ வந்து ஒரு இடத்தில் குவிந்துவிடும். அதனால் எங்கும் இருள் பரவிவிடும். உடலின் இந்தப் பாகங்கள் அதே உடலின் மற்ற பாகங்களைத் தேடி அலையும். பின்பு பரலோகத்திலிருந்தும் நரகத்திலிருந்தும் ஆத்துமாக்கள் வரும். அவை உயிர்த்தெழுந்த உடல்களுக்குள் புகுந்துவிடும் என்றும் அந்தப் பாதிரி கதை கட்டினார்.
2 முதலில் இருந்த அணுக்களை மறுபடியும் ஒன்றுசேர்த்து உருவாக்குவதே உயிர்த்தெழுப்புதல் என்று நம்புவது அர்த்தமற்றது. அத்துடன், அழியாத ஆத்துமா என்ற ஒன்று மனிதருக்குள் இல்லை. (பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4) கடவுளாகிய யெகோவாவே இந்த உயிர்த்தெழுதலை நடப்பிப்பார்; முன்பிருந்த அதே அணுக்களை மறுபடியும் ஒன்று சேர்த்துத்தான் ஒரு மனித உடலை உயிர்த்தெழுப்ப வேண்டும் என்ற நியதி அவருக்கில்லை. அவர் நினைத்தால், உயிர்த்தெழுவோருக்கு புதிய உடல்களை உருவாக்க முடியும். இறந்தவர்களை உயிர்த்தெழுப்பி, அவர்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கும் வல்லமையை யெகோவா தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவுக்கு அளித்திருக்கிறார். (யோவான் 5:26) ஆகவே இயேசு இவ்வாறு சொன்னார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.” (யோவான் 11:25, 26) இருதயத்திற்கு ஆறுதலூட்டும் எத்தகைய ஒரு வாக்குறுதி! யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகளாக, சோதனைகளை சகிக்கவும், மரணம் வந்தாலும் வரட்டும் என்று துணிச்சல் கொள்ளுமளவிற்கு இது நம்மைப் பலப்படுத்துகிறது.
3. உயிர்த்தெழுதல் உண்டு என பவுல் எதிர்வாதம் செய்ய வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது?
3 மனிதருக்குள் அழியாத ஓர் ஆத்துமா இருக்கிறதென்பதே கிரேக்க தத்துவ மேதையான பிளேட்டோவின் போதகம். இந்த தத்துவமும் உயிர்த்தெழுதலும் ஒன்றோடொன்று ஒத்துப்போவதில்லை. ஆகையால், அத்தேனே பட்டணத்திலுள்ள மார்ஸ் மேடையில் அப்போஸ்தலனாகிய பவுல், கிரேக்க பிரமுகர்களுக்கு சாட்சி பகர்ந்து, இயேசுவை கடவுள் உயிர்த்தெழுப்பினார் என்று மறைமுகமாக சொன்னபோது என்ன நடந்தது? “மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள்,” என்று அந்த விவரப் பதிவு சொல்லுகிறது. (அப்போஸ்தலர் 17:29-34) உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவைக் கண்ட பலர் அப்போது உயிரோடிருந்தார்கள், அந்த கேலி பரிகாசத்தின் மத்தியிலும் அவர்கள், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டாரென்று சாட்சி பகர்ந்தார்கள். கொரிந்து சபையைச் சேர்ந்த பொய்ப் போதகர்களோ உயிர்த்தெழுதலை மறுத்தார்கள். அதனால்தான் பவுல், 1 கொரிந்தியர் 15-ம் அதிகாரத்தில் உயிர்த்தெழுதல் உண்டு என்ற இந்தக் கிறிஸ்தவ போதகத்தை ஆதரித்து திறமையாக எதிர்வாதம் செய்தார். அவருடைய விவாதங்களைக் கவனமாய்ச் சிந்தித்து ஆராய்ந்தால், உயிர்த்தெழுதல் நிஜமாகவே உண்டு என்று நாம் நம்புவோம்; இந்த நம்பிக்கைக்கு இருக்கும் செல்வாக்கையும் புரிந்துகொள்வோம்.
இயேசு நிஜமாகவே உயிர்த்தெழுந்தார்
4. இயேசுவின் உயிர்த்தெழுதலை கண்கண்ட சாட்சியாக பவுல் எவ்வாறு நிரூபித்தார்?
4 பவுல், தன் எதிர்வாதத்தை எவ்வாறு தொடங்குகிறார் என்பதைக் கவனியுங்கள். (1 கொரிந்தியர் 15:1-11) கொரிந்தியர்கள் நோக்கம் எதுவுமின்றி பெயருக்கு கிறிஸ்தவர்களாகியிருந்தால் இரட்சிப்பின் நற்செய்தியை உறுதியாகப் பற்றிக்கொள்ள அவர்களால் முடியாது; அதில் ஆட்டம் காண நேரிடும். கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுப்பப்பட்டார். அவ்வாறு உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, கேபாவுக்கும் (பேதுருவுக்கும்), “பின்பு பன்னிருவருக்கும்” தரிசனமானார். (யோவான் 20:19-23) ‘போய் சீஷராக்குங்கள்’ என்று அவர் கட்டளையிட்டபோது ஏறக்குறைய 500 பேர் இயேசுவைக் கண்டனர். (மத்தேயு 28:19, 20) உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் எல்லாரும் அவரைக் கண்டார்கள். யாக்கோபும் அவரைக் கண்டார். (அப்போஸ்தலர் 1:6-11) ஏற்கெனவே ஆவியில் எழுப்பப்பட்டதுபோல், “அகாலப் பிறவி போன்ற” சவுலுக்கு, தமஸ்குவுக்கு அருகில் இயேசு தரிசனமானார். (அப்போஸ்தலர் 9:1-9) பவுல் கொரிந்தியருக்குப் பிரசங்கித்ததனால், அவர்கள் நற்செய்தியை ஏற்று விசுவாசிகளானார்கள்.
5. 1 கொரிந்தியர் 15:12-19-ல் பதிவு செய்யப்பட்டபடி, பவுல் எவ்வாறு விவாதிக்கிறார்?
5 பவுல் காரணம் காட்டி விளக்கும் முறையைக் கவனியுங்கள். (1 கொரிந்தியர் 15:12-19) கிறிஸ்து உயிர்த்தெழுப்பப்பட்டதாக கண்கண்ட சாட்சிகளே பிரசங்கிப்பதனால், உயிர்த்தெழுதல் இல்லை என்று எவ்வாறு சொல்ல முடியும்? இயேசு மரித்தோரிலிருந்து எழுப்பப்படவில்லை என்றால், நம் பிரசங்கிப்பும் நம் விசுவாசமும் வீணே; மேலும், கிறிஸ்துவை கடவுள் உயிர்த்தெழுப்பினார் என்று சொல்வதனால், நாம் கடவுளுக்கு எதிராக சாட்சி பகரும் பொய்யர்களாக இருப்போம். ஆனால், மரித்தோர் எழுப்பப்படவில்லை என்றாலோ, ‘நாம் இன்னும் நம் பாவங்களில் இருப்போம்,’ கிறிஸ்துவுடன் ஐக்கியத்தில் மரித்தவர்கள் அழிந்துபோயிருப்பார்கள். மேலும், “இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தால், எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத் தக்கவர்களாயிருப்போம்.”
6. (அ) இயேசுவின் உயிர்த்தெழுதல் நிஜமாகவே நடந்தது என பவுல் எவ்வாறு உறுதி கூறினார்? (ஆ) ‘கடைசி சத்துரு’ எது, அது எவ்வாறு ஒழிக்கப்படும்?
6 இயேசுவின் உயிர்த்தெழுதல் நிஜமாகவே நடந்தது என பவுல் உறுதி கூறுகிறார். (1 கொரிந்தியர் 15:20-28, தி.மொ.) மரித்தவர்களில் ‘முதற்பலனாக’ எழுப்பப்பட்டவர் இயேசுவே; அவரைத் தொடர்ந்து மற்றவர்களுங்கூட உயிர்த்தெழுப்பப்படுவார்கள். மனிதனாகிய ஆதாமின் கீழ்ப்படியாமையால் மரணம் உண்டானதுபோல், மனிதனாகிய இயேசுவினால் உயிர்த்தெழுதல் உண்டாகிறது. இவ்வாறு, அவருக்குரியவர்கள் அவருடைய பிரசன்னத்தின்போது எழுப்பப்படுவர். யெகோவா எல்லா சத்துருக்களையும் தம் பாதத்திற்குக் கீழ்ப்படுத்தும் வரையில் இயேசு அரசராக ஆளுவார். அதன்பிறகு, கடவுளுடைய அரசாதிகாரத்தை எதிர்க்கும் ‘சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் ஒழிப்பார்.’ ஆதாமிலிருந்து சுதந்தரித்த ‘கடைசி சத்துருவாகிய’ மரணமுங்கூட இயேசுவின் பலியினுடைய விலைமதிப்பால் ஒழிக்கப்படும். பின்பு கிறிஸ்து ராஜ்யத்தை, தம்முடைய கடவுளும் பிதாவுமானவரிடம் ஒப்புவித்து, ‘கடவுளே எல்லாரிலும் எல்லாமாயிருப்பதற்கு தாமும் தமக்கு எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினவருக்கு கீழ்ப்பட்டிருப்பார்.’
மரித்திருக்க முழுக்காட்டப்படுவதா?
7. ‘மரித்திருக்கும் நோக்கத்துடன் முழுக்காட்டப்படுவோர்’ யார்? இதன் அர்த்தம் என்ன?
7 உயிர்த்தெழுதலை மறுப்பவர்களிடம் இவ்வாறு கேட்கப்படுகிறது: “மரித்திருக்கும் நோக்கத்துடன் முழுக்காட்டப்படுகிறவர்கள் என்ன செய்வார்கள்?” (1 கொரிந்தியர் 15:29, NW) மரித்தோருக்காக உயிருள்ளோர் முழுக்காட்டப்படும்படி பவுல் அர்த்தங்கொள்ளவில்லை. ஏனெனில், இயேசுவின் சீஷர்கள், அவரவர்தாமே கற்று, நம்பி, முழுக்காட்டப்பட்டனர். (மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 2:41) அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், சரீர மரணத்திற்கும் ஆவியில் உயிர்த்தெழுப்பப்படுவதற்கும் வழிநடத்துகிற ஒரு வாழ்க்கைக்காகவே முழுக்காட்டப்படுகின்றனர்; இவ்விதமாக, அவர்கள் “மரித்திருக்கும் நோக்கத்திற்காக முழுக்காட்டப்படுகிறவர்கள்.” கடவுளுடைய ஆவி அவர்களுக்குள் பரலோக நம்பிக்கையை மலரச் செய்கையில் இந்த முழுக்காட்டுதல் தொடங்குகிறது; மரணத்திலிருந்து பரலோகத்தில் அழியாத ஆவி வாழ்க்கைக்கு அவர்கள் எழுப்பப்படுகையில் முடிகிறது.—ரோமர் 6:3-5; 8:16, 17; 1 கொரிந்தியர் 6:14.
8. சாத்தானும் அவன் கையாட்களும் தங்களைக் கொன்றாலுங்கூட, எந்த விஷயத்தைக் குறித்து கிறிஸ்தவர்கள் நிச்சயமாயிருக்கலாம்?
8 உயிர்த்தெழுதல் நம்பிக்கை தங்களுக்கு இருப்பதால்தான், கிறிஸ்தவர்கள் ராஜ்ய பிரசங்க வேலையின் நிமித்தமாக தங்களுக்கு எந்நேரமும் ஆபத்து வரலாமென்றும் எந்த நாளிலும் மரணம் வரலாமென்றும் துணிந்து நிற்க முடிகிறது என்பதை பவுலின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. (1 கொரிந்தியர் 15:30, 31) சாத்தானும் அவனுடைய ஊழியர்களும் தங்களைக் கொல்ல யெகோவா அனுமதித்தாலும், அவர்களைத் திரும்ப உயிர்த்தெழுப்பவும் அவரால் முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். தங்களது ஆத்துமாவை அல்லது உயிரை, கடவுள் மாத்திரமே கெஹென்னாவில் நித்தியமாய் அழிக்க முடியும்.—லூக்கா 12:5, NW.
எச்சரிக்கை தேவை
9. உயிர்த்தெழுதல் நம்பிக்கை நம்மை ஆதரிக்க வேண்டுமெனில் நாம் எதை தவிர்க்க வேண்டும்?
9 உயிர்த்தெழுதல் நம்பிக்கையே பவுலுக்கு ஆதாரமாய் இருந்தது. அவர் எபேசுவில் இருக்கையில், எதிரிகள் அவரை கொடிய மிருகங்களோடு போரிடும்படி அரங்குக்குள் போட்டிருக்கலாம். (1 கொரிந்தியர் 15:32) அவ்வாறு போட்டிருந்தால், இதே சூழலில் சிக்கிய தானியேலைக் காத்த தேவன் இவரையும் காத்திருக்கிறார். (தானியேல் 6:16-22; எபிரெயர் 11:32, 33) பவுல், உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்திருந்ததால்தான், ஏசாயாவின் நாளில் வாழ்ந்த யூதா தேசத்து விசுவாசதுரோகிகளுடைய மனப்பான்மை அவருக்கு இல்லை. ஏனெனில், “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என அவர்கள் சொல்லிக் கொண்டார்கள். (ஏசாயா 22:13) இந்த மனப்பான்மை தவறானது. பவுலின் வாழ்க்கையில் இருந்ததுபோல், உயிர்த்தெழுதல் நம்பிக்கை நம்மை ஆதரிக்க வேண்டுமெனில் இந்த மனப்பான்மை நமக்கு வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால்தான், “மோசம்போகாதிருங்கள். துர்ச் சகவாசம் நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்,” என்று பவுல் எச்சரித்தார். (1 கொரிந்தியர் 15:33, தி.மொ.) நிச்சயமாகவே, இந்த நியமம், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுக்குப் பொருந்தும்.
10. எது நமக்குள்ள உயிர்த்தெழுதல் நம்பிக்கையை பசுமையாக வைக்கும்?
10 உயிர்த்தெழுதல் நடக்குமா நடக்காதா என சந்தேகிப்போருக்கு, பவுல் சொன்னார்: “நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.” (1 கொரிந்தியர் 15:34) இந்த ‘முடிவு காலத்தில்,’ கடவுளையும் கிறிஸ்துவையும் பற்றிய திருத்தமான அறிவுக்கு இசைய நாம் செயல்பட வேண்டும். (தானியேல் 12:4; யோவான் 17:3) இது நமக்குள்ள உயிர்த்தெழுதல் நம்பிக்கையை பசுமையாக வைக்கும்.
உயிர்த்தெழுவது எந்த உடல்?
11. அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் உயிர்த்தெழுதலை பவுல் எவ்வாறு விளக்கினார்?
11 அடுத்தபடியாக பவுல் சில கேள்விகளுக்கான பதிலைக் கூறினார். (1 கொரிந்தியர் 15:35-41) ஒருவேளை உயிர்த்தெழுதல் நடக்குமா நடக்காதா என சந்தேகத்தை எழுப்பும் வகையில் ஒருவர் இவ்வாறு கேட்கக்கூடும்: ‘மரித்தோர் எப்படி எழுப்பப்படுவார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்கள்?’ பவுல் காட்டினபடி, நிலத்தில் விதைக்கப்பட்ட ஒரு விதை முளைத்து செடியாக மாறும்போது ஒருவகையில் சாகிறது. அவ்வாறே ஆவியால் பிறப்பிக்கப்பட்ட ஒரு மனிதன் சாக வேண்டும். அந்த விதையிலிருந்து ஒரு செடி வரும்போது, அதற்கென புது தோற்றம் கிடைக்கிறது. அதைப்போலவே, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவரின் உயிர்த்தெழுப்பப்பட்ட உடல், மனித மாம்சத்திலிருந்து வேறுபட்டதாக உள்ளது. அவர் மரிப்பதற்கு முன்பு அவருக்கிருந்த அடிப்படை பண்புகள் உயிர்த்தெழுந்த பிறகும் இருக்கும் என்பது உண்மைதான்; ஆனால் ஒரு புதிய சிருஷ்டியாக, பரலோகத்தில் வாழக்கூடிய ஆவிக்குரிய உடலுடன் வேறு தோற்றத்தில் எழுப்பப்படுகிறார். ஆனால் பூமியில் வாழ உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள், மனித உடல்களிலேயே எழுப்பப்படுவார்கள்.
12. ‘வானத்துக்குரிய உடல்கள்,’ ‘பூமிக்குரிய உடல்கள்’ ஆகியவற்றின் பொருள் என்ன?
12 பவுல் சொன்னதுபோல், மனித மாம்சத்திற்கும் மிருக மாம்சத்திற்கும் இடையே வித்தியாசம் உண்டு. மிருக மாம்சத்திலும் இனத்துக்கு இனம் வித்தியாசம் உண்டு. (ஆதியாகமம் 1:20-25) ஆவி சிருஷ்டிகளின் ‘வானத்துக்குரிய உடல்களின்’ மகிமை, மாம்சமாகிய ‘பூமிக்குரிய உடல்களின்’ மகிமையிலிருந்து வேறுபடுகின்றன. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் மகிமையும் வெவ்வேறு. ஆனால் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் உயிர்த்தெழுப்பப்படுகையில் அவர்களது மகிமையோ அதைவிடச் சிறந்தது.
13. 1 கொரிந்தியர் 15:42-44-ன்படி எது விதைக்கப்படுகிறது, எது எழுப்பப்படுகிறது?
13 இவற்றிற்கு இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிட்ட பின்பு, பவுல் சொன்னார்: “மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும்.” (1 கொரிந்தியர் 15:42-44) அவர் மேலும் சொன்னார்: “அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்.” இச்சந்தர்ப்பத்தில் பவுல், அபிஷேகம் செய்யப்பட்டவர்களை ஒரு தொகுதியாய் குறிப்பிட்டிருக்கலாம். அது மரணத்தில் அழியும்படி விதைக்கப்பட்டு, பாவத்திலிருந்து விடுபட்டதாய், அழியாததாக எழுப்பப்படுகிறது. உலகத்தால் அவமதிக்கப்பட்ட போதிலும், பரலோக வாழ்க்கைக்கு எழுப்பப்பட்டு, கிறிஸ்துவுடன் மகிமையில் வெளிப்படும்படி செய்யப்படுகிறது. (அப்போஸ்தலர் 5:41; கொலோசெயர் 3:4) மரணத்தில் “ஜென்மசரீரம்” விதைக்கப்படுகிறது, “ஆவிக்குரிய சரீரம்” எழுப்பப்படுகிறது. ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் விஷயத்தில் இது கூடியதாக இருப்பதால், மற்றவர்களின் விஷயத்திலும், அவர்கள் பூமியில் வாழ்வதற்கு எழுப்பப்பட முடியும் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம்.
14. கிறிஸ்துவுக்கும் ஆதாமுக்குமுள்ள வேறுபாட்டை பவுல் எவ்வாறு காட்டினார்?
14 அடுத்தபடியாக பவுல், கிறிஸ்துவுக்கும் ஆதாமுக்குமுள்ள வேறுபாட்டைக் காட்டினார். (1 கொரிந்தியர் 15:45-49, தி.மொ.) முதல் மனுஷன் ஆதாம், “உயிருள்ள ஆத்துமாவானான்.” (ஆதியாகமம் 2:7) ‘கடைசி ஆதாமாகிய’ இயேசுவோ “உயிர்ப்பிக்கிற ஆவியானார்.” அவர் தம்முடைய உயிரை மீட்பின் கிரய பலியாகக் கொடுத்தார். இந்தப் பலி, தம்மைப் பின்பற்றுகிற அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு முதலில் பொருந்தும். (மாற்கு 10:45) மனிதராக இருக்கையில், ‘மண்ணானவனின் சாயலை அணிந்திருக்கிறார்கள்,’ ஆனால், உயிர்த்தெழுப்பப்படுகையில், கடைசி ஆதாமைப்போல் ஆகிறார்கள். நிச்சயமாகவே, இயேசுவின் பலி, பூமியில் உயிர்த்தெழுப்பப்படுவோர் உட்பட, கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தார் எல்லாருக்கும் நன்மை பயக்கும்.—1 யோவான் 2:1, 2.
15. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஏன் மரித்து, மாம்சத்தை ஒழிக்க வேண்டும்?
15 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மரிக்கையில், மாம்சத்தில் அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவதில்லை. (1 கொரிந்தியர் 15:50-53) மாம்சத்தையும் இரத்தத்தையும் உடைய அழிவுள்ள உடல், அழியாமையையும் பரலோக ராஜ்யத்தையும் சுதந்தரிக்க முடியாது. அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் சிலர் மரித்த நிலையில் நெடுங்காலமாய் இருக்கத் தேவையில்லை. இயேசுவின் வந்திருத்தலின்போது உண்மையுடன் தங்கள் பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கையில், ‘ஒரு விநாடியில், கண்சிமிட்டும் நேரத்தில் அவர்கள் மாற்றப்படுவார்கள்.’ அழியாமையிலும் மகிமையிலும் ஆவி வாழ்க்கைக்கு உடனடியாக எழுப்பப்படுவார்கள். முடிவில் கிறிஸ்துவின் பரலோக “மணவாட்டி” வகுப்பாரின் எண்ணிக்கை 1,44,000 ஆகும்.—வெளிப்படுத்துதல் 14:1; 19:7-9; 21:9; 1 தெசலோனிக்கேயர் 4:15-17, NW
மரணத்தை ஜெயித்தல்
16. பவுலும் பூர்வ தீர்க்கதரிசிகளும் சொன்னதன்படி, பாவியாகிய ஆதாமிலிருந்து சுதந்தரிக்கப்பட்ட மரணம் என்னவாகும்?
16 மரணம் என்றென்றைக்குமாக ஜெயிக்கப்படும் என்று பவுல் வெற்றிக்களிப்புடன் கூறினார். (1 கொரிந்தியர் 15:54-57, தி.மொ.) அழிவுள்ளதும், சாகும் இயல்புடையதுமானது, அழியாமையையும் சாவாமையையும் தரித்துக்கொள்கையில், இந்த வார்த்தைகள் நிறைவேற்றப்படும்: ‘மரணம் ஜெயமாக விழுங்கப்படும்’ “மரணமே உன் ஜெயம் எங்கே? மரணமே, உன் கொடுக்கு எங்கே?” (ஏசாயா 25:8; ஓசியா 13:14, NW) மரணத்தை உண்டாக்கும் அந்தக் கொடுக்கு பாவமே. பாவத்தின் கொடிய தன்மைக்கு நியாயப்பிரமாணம் ஓர் எடுத்துக்காட்டு; அது, பாவிகளை மரணத்திற்குக் கண்டனம் செய்தது. ஆனால், பாவியாகிய ஆதாமிலிருந்து சுதந்தரிக்கப்பட்ட மரணம், இயேசுவின் பலியினாலும் உயிர்த்தெழுதலினாலும் தோற்கடிக்கப்படும்.—ரோமர் 5:12; 6:23.
17. 1 கொரிந்தியர் 15:58-ன் வார்த்தைகள் இன்று எவ்வாறு பொருந்துகின்றன?
17 “ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக,” என்று பவுல் சொன்னார். (1 கொரிந்தியர் 15:58) இந்த வார்த்தைகள், இன்றிருக்கும் அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதியானோருக்கும் இயேசுவின் ‘மற்ற செம்மறியாடுகளுக்கும்’ பொருந்துகின்றன. இந்தக் கடைசி நாட்களில் அவர்கள் மரித்தாலும் அவை பொருந்தும். (யோவான் 10:16, NW) ராஜ்ய அறிவிப்பாளர்களாக அவர்கள் படும் பாடு வீணாகாது; ஏனெனில் அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவர். அப்படியானால் நாம், “மரணமே, உன் ஜெயம் எங்கே?” என்று மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்யும் அந்த நாளுக்காகக் காத்திருக்கையில், யெகோவாவின் ஊழியர்களாக கர்த்தரின் வேலையில் சுறுசுறுப்பாய் ஈடுபடுவோமாக.
உயிர்த்தெழுதல் நிஜமாகவே நடந்தது
18. பவுல் உயிர்த்தெழுதலில் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தார்?
18 1 கொரிந்தியர் 15-ஆம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்ட பவுலின் கூற்றிலிருந்து, இந்த உயிர்த்தெழுதல் நம்பிக்கை அவருடைய வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தியது என தெளிவாகத் தெரிகிறது. இயேசு மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார் என்பதிலும், மற்றவர்கள் மனிதவர்க்கத்தினரின் பொதுப் பிரேதக்குழியிலிருந்து வெளியே வருவார்கள் என்பதிலும் அவருக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. அதைப் போலவே உறுதியான நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? தன்னல அனுகூலங்களை பவுல் ‘குப்பையாக எண்ணினார்;’ மேலும், ‘கிறிஸ்துவையும் அவருடைய உயிர்த்தெழுதலின் செல்வாக்கையும் அறியும்படி’ ‘எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டார்.’ ‘முதலாம் உயிர்த்தெழுதலைப்’ பெறும் நம்பிக்கையுடன், கிறிஸ்து மரித்ததைப் போன்றே தானும் மரிப்பதற்கு மனமுள்ளவராக இருந்தார். இயேசுவைப் பின்பற்றும் அபிஷேகஞ்செய்யப்பட்ட 1,44,000 பேருடைய விஷயத்தில் நடைபெறும் உயிர்த்தெழுதலே இந்த ‘முதலாம் உயிர்த்தெழுதல்.’ அவர்கள் பரலோகத்தில் ஆவி வாழ்க்கைக்கு எழுப்பப்படுவார்கள். இந்த உண்மை, “மரணமடைந்த மற்றவர்கள்” பூமியில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதையும் நிரூபிக்கிறது.—பிலிப்பியர் 3:8-11; வெளிப்படுத்துதல் 7:4; 20:5, 6.
19, 20. (அ) பைபிள் வரலாற்றில் வந்துபோனவர்களில் யாரெல்லாம் பூமியில் வாழ்வதற்காக உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? (ஆ) உயிர்த்தெழுதலில் யாரையெல்லாம் பார்க்க உங்களுக்கு ரொம்ப ஆசை?
19 மரணம் வரையில் உண்மைத்தன்மையோடு இருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு மகிமையான இந்த உயிர்த்தெழுதல் நம்பிக்கை நிஜமாகியிருக்கிறது. (ரோமர் 8:18; 1 தெசலோனிக்கேயர் 4:15-18; வெளிப்படுத்துதல் 2:10) ‘மிகுந்த உபத்திரவத்தைத்’ தப்பிப் பிழைப்பவர்கள், உயிர்த்தெழுதல் நடைபெறுவதை கண்கூடாக காண்பார்கள். அப்போது, ‘சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவிக்கும்; மரணமும் ஹேடீஸும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவிக்கும்.’ (வெளிப்படுத்துதல் 7:9, 13, 14; 20:13) பூமியில் வாழ்வதற்கு எழுப்பப்படுவோரில், ஏழு குமாரர்களையும் மூன்று குமாரத்திகளையும் இழந்து தவித்த யோபுவும் இருப்பார். அவர்களைத் திரும்ப வரவேற்பதில் அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சியிருக்கும் என்பதை கற்பனைசெய்து பாருங்கள். அதே சமயத்தில் அவர்களும், தங்களுக்கு இன்னும் ஏழு சகோதரர்களும் மூன்று அழகிய சகோதரிகளும் இருப்பதைக் கண்டால் எவ்வளவு மகிழ்ச்சியடைவார்கள்!—யோபு 1:1, 2, 18, 19; 42:12-15.
20 ஆபிரகாம், சாராள், ஈசாக்கு, ரெபேக்காள், இன்னும் ‘சகல தீர்க்கதரிசிகள்’ உட்பட அநேகரும், பூமியில் வாழ்வதற்கென உயிர்த்தெழுப்பப்படுகையில் எத்தகைய ஆசீர்வாதமாக இருக்கும்! (லூக்கா 13:28) அந்தத் தீர்க்கதரிசிகளில் தானியேலும் ஒருவர். மேசியானிய ஆட்சியின்கீழ் உயிர்த்தெழுதல் நடக்கப்போவதாக இவருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஏறக்குறைய 2,500 ஆண்டுகளாக பிரேதக்குழியில் இளைப்பாறிக் கொண்டிருந்த தானியேல், உயிர்த்தெழுதல் என்ற அற்புதத்தால் சீக்கிரத்தில், “பூமியெங்கும் பிரபுக்களாக” இருக்கப்போகிறவர்களில் ஒருவராக, ‘தன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பார்.’ (தானியேல் 12:13; சங்கீதம் 45:16) பூர்வ காலத்தில் உண்மையுள்ளவர்களாய் வாழ்ந்து இறந்தவர்களை மட்டுமல்லாமல், சத்துருவாகிய மரணத்தால் உங்களிடமிருந்து பிரிக்கப்பட்ட உங்கள் சொந்த அப்பாவை, அம்மாவை, மகனை, மகளை, அல்லது உங்களுக்குப் பிரியமான மற்றவர்களை, திரும்ப வரவேற்பதை நினைத்தால் பரவசமடையச் செய்கிறதல்லவா!
21. நாம் ஏன் தாமதிக்காமல் மற்றவர்களுக்கு நற்காரியங்களைச் செய்ய வேண்டும்?
21 நம்முடைய நண்பர்களும் நமக்குப் பிரியமானவர்களுமான சிலர், பல பத்தாண்டுகளாக கடவுளைச் சேவித்து வருகிறார்கள். இப்போது இவர்களுக்கு அதிக வயதாகி இருக்கலாம். இவர்கள் வயதின் காரணமாக வாழ்க்கையின் சவால்களை சந்திக்க முடியாமல் திண்டாடலாம். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை இப்போதே செய்வது எவ்வளவு அன்பான காரியம்! ஒருவேளை திடீரென அவர்கள் இறந்துவிட்டாலும், நம் கடமைகளைச் செய்யாமல் விட்டுவிட்டோமே என எண்ணி மனவேதனைப்பட மாட்டோம். (பிரசங்கி 9:11; 12:1-7; 1 தீமோத்தேயு 5:3, 8) மற்றவர்களின் வயது அல்லது சூழ்நிலை என்னவாக இருந்தாலும், அவர்களுக்கு நாம் செய்யும் நற்காரியங்களை யெகோவா மறக்கமாட்டாரென நாம் நிச்சயமாயிருக்கலாம். பவுல் இவ்வாறு எழுதினார்: “நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.”—கலாத்தியர் 6:10; எபிரெயர் 6:10.
22. உயிர்த்தெழுதல் நிஜமாகவே நடப்பதைக் காணும்வரை என்ன செய்ய நாம் தீர்மானித்திருக்க வேண்டும்?
22 யெகோவா, [கனிவான, NW] இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறார்.’ (2 கொரிந்தியர் 1:3, 4) அவருடைய வார்த்தை, வல்லமைவாய்ந்த உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றி குறிப்பிடுவதால் நம்மையும் ஆறுதல்படுத்துகிறது, மற்றவர்களையும் ஆறுதல்படுத்த நமக்கு உதவுகிறது. மரித்தோர், பூமியில் வாழ்வதற்கு உயிர்த்தெழுப்பப்படுவதை நம் கண்களால் நேரில் காணும்வரை, உயிர்த்தெழுதலில் உறுதியான நம்பிக்கையுடன் இருந்த பவுலைப்போல் நாமும் உறுதியாய் இருப்போமாக. முக்கியமாய், இந்த விஷயத்தில் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுவோமாக. அவர் கடவுள் தம்மை எப்படியும் உயிர்த்தெழுப்புவார் என நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கையும் வீண்போகவில்லை. ஞாபகார்த்தக் கல்லறைகளில் இருப்போர், சீக்கிரத்தில் கிறிஸ்துவின் குரலைக் கேட்டு வெளிவருவார்கள். இது நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தரட்டும்! ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய், மரணத்தை ஜெயிக்க உதவும் யெகோவாவுக்கு நாம் நன்றி காட்டுவோமாக!
உங்கள் பதில் என்ன?
• இயேசுவின் உயிர்த்தெழுதலை கண்கண்ட சாட்சியாக பவுல் எவ்வாறு நிரூபித்தார்?
• ‘கடைசி சத்துரு’ எது, அது எவ்வாறு ஒழிக்கப்படும்?
• அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் விஷயத்தில், எது விதைக்கப்படுகிறது, எது எழுப்பப்படுகிறது?
• பைபிள் வரலாற்றில் வந்துபோனவர்களில் பூமியில் வாழ்வதற்காக உயிர்த்தெழுப்பப்படுபவர்களில் யாரையெல்லாம் பார்க்க உங்களுக்கு ரொம்ப ஆசை?
[கேள்விகள்]
[பக்கம் 16-ன் படம்]
உயிர்த்தெழுதலை ஆதரித்து அப்போஸ்தலன் பவுல் திறமையாக எதிர்வாதம் செய்தார்
[பக்கம் 20-ன் படம்]
யோபும் அவருடைய குடும்பத்தாரும் இன்னும் பலரும் உயிர்த்தெழுவதை காண்கையில் மட்டற்ற மகிழ்ச்சி நமக்கு!