Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒழுக்கங்கெட்ட உலகில் கற்பு

ஒழுக்கங்கெட்ட உலகில் கற்பு

ஒழுக்கங்கெட்ட உலகில் கற்பு

பார்க்க கருப்பாக இருந்தாலும் அவன் கம்பீரமாக இருந்தான். திரும்ப திரும்ப பார்க்க தோன்றும் வசீகரமான முகம் அவளுக்கு. வேலையிலும் கெட்டி. இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலைபார்த்தனர். அவள் வலிய வந்து அவனை அன்பு வார்த்தைகளால் குளிப்பாட்டினாள். அதற்கு வட்டியும் முதலுமாய் அவனும் அவளைப் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளினான். வார்த்தைப் பரிமாற்றம் பரிசுப் பரிமாற்றமாக மாறியது. சீக்கிரத்திலேயே அவர்கள் இருவரும் காதல்வயப்பட்டனர். இந்தக் கள்ளக்காதலுக்காக தன் மனைவியை கை கழுவவும் அவன் தயங்கவில்லை. ஆனால் கடைசிவரை கைகொடுப்பாள் என்றெண்ணிய காதலியோ பின்வாங்கிவிட்டாள். இப்போதுதான் மனைவியின் ஞாபகமே அவனுக்கு வந்தது. குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல், வேறு வழியின்றி, அரைகுறை மனதோடு மனைவியைத் தேடி போனான். ஆனால், அவர்களுடைய உறவில் ஏற்பட்ட விரிசல் விரிசல்தான்; அது கொஞ்சமும் குறையவில்லை. இவ்வளவு நடந்தபோதிலும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாருமே, எதுவுமே நடக்காததுபோல வாழ்க்கையை தொடர்ந்தனர்.

பாலின ஒழுக்கம் நல்ல ஒரு பண்பாக இந்த உலகில் மதிக்கப்படுவதில்லை. மாறாக, எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சுகம் தேடி, இன்பத்தில் திளைப்பது மிக சாதாரணமாகிவிட்டது. “கல்யாணம் என்பது எப்படி சாதாரணமாகிவிட்டதோ அதுபோல, விபசாரமும் இன்று சர்வசகஜமாகிவிட்டது” என த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது.

ஆனால், திருமணத்தை ‘அனைவரும் உயர்வாக மதிக்க வேண்டும்’ எனவும் திருமண பந்தம் “மாசுறாமல்” இருக்க வேண்டும் எனவும் யெகோவா தேவன் விரும்புகிறார். (எபிரேயர் 13:4, பொது மொழிபெயர்ப்பு) மேலும், “வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” என பைபிள் அறிவுறுத்துகிறது. (1 கொரிந்தியர் 6:9, 10) கடவுளின் புன்முறுவல் கிடைக்க, இந்த ஒழுக்கங்கெட்ட உலகிலும் ஒழுக்கத்தில் பத்தரைமாற்றுத் தங்கமாக நிரூபிக்க வேண்டும்.

இன்றிருக்கும் கறைபடுத்தும், வெட்கக்கேடான காரியங்களிலிருந்து நம்மை எப்படி காத்துக்கொள்ளலாம்? பைபிளில் நீதிமொழிகள் புத்தகம் 5-ம் அதிகாரத்தில் பூர்வ இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதற்கான பதிலைத் தருகிறார். அவர் சொல்வதை சற்று ஆராய்வோமா?

சிந்தனா சக்தி

“என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச்சாய்; அப்பொழுது நீ சிந்தனா சக்தியைப் (NW) பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.”—நீதிமொழிகள் 5:1, 2.

ஒழுக்கங்கெட்ட நடத்தைக்கு தூண்டில்போடும் கவர்ச்சிகளை முறியடிக்க, பைபிள் அறிவை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் ஞானம் மிக அவசியம். அதோடு, சரி எது தவறு எது என நிதானிக்கும் பகுத்தறிவும் தேவை. நம் சிந்தனைகளை அல்லது எண்ணங்களை காத்துக்கொள்ள, தெய்வீக ஞானத்தையும் பகுத்தறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். எப்படி? கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை படிக்கும்போது, யெகோவாவின் வழிமுறைகளை மனதில் பதிய வைக்க வேண்டும். அவருடைய சித்தத்தையும் நோக்கத்தையும் கருத்தாய் இருதயத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படி செய்தால், நம் சிந்தனா சக்தியை சரியான விதத்தில் உபயோகிக்க முடியும். இப்படி வளர்த்துக்கொள்ளும் சிந்திக்கும் திறன் தெய்வீக ஞானத்திற்கும் அறிவுக்கும் இசைய இருக்கும். இந்தத் திறனை தகுந்த முறையில் பயன்படுத்தினால், ஒழுக்கக்கேட்டின் கவர்ச்சியான கண்ணியில் மாட்டிக்கொள்ளாமல் நம்மை காத்துக்கொள்ள முடியும்.

தேனினும் இனிய அதரம்

ஒழுக்கங்கெட்ட உலகில் கற்பை காத்துக்கொள்ள சிந்திக்கும் திறன் ஏன் அவசியம்? ஏனென்றால், ஒழுக்கமற்ற ஆட்கள் வஞ்சித்து, மயக்குவதில் கைதேர்ந்தவர்கள். சாலொமோனின் எச்சரிக்கை இதுவே: “பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடு போல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும். அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமுங் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும்.”—நீதிமொழிகள் 5:3, 4.

இந்த வசனங்களில், தரங்கெட்டு நடப்பவள் “பரஸ்திரீயாக,” அதாவது விலைமகளாக குறிப்பிடப்படுகிறாள். a அவள் வலையில் விழும் பேதைகளை வஞ்சிக்கும் அவளுடைய வார்த்தைகள் தேனைவிட தித்திப்பானது, ஒலிவ எண்ணெய்யிலும் மிருதுவானது. ஒழுக்கங்கெட்ட நடத்தைக்கு வழிநடத்தும் காரியங்கள் பெரும்பாலும் இப்படித்தான் ஆரம்பிக்கிறதல்லவா? இதற்கு ஓர் உதாரணம் இதோ! பார்ப்போரின் கவனத்தை சுண்டியிழுக்கும் அழகுடைய உஷாவுக்கு b வயது 27. காரியதரிசியாக பணிபுரியும் இவள் சொல்வதாவது: “என்னோட வேலை செய்யற ஆள், என்னை சதா புகழ்ந்துகிட்டே இருப்பான். மத்தவங்க நம்மை கவனிக்கனும்னு நெனைக்கறது இயல்புதான். ஆனா, இவனோட நெனப்பே வேற! இதுக்கெல்லாம் மசியற ஆளில்ல நான்.” நம்மை வஞ்சிக்க நினைக்கும் ஆட்களின் புகழ் மாலைகள் கவர்ச்சியானவை. அவர்களுடைய உண்மையான சுபாவம் தெரியாதவரை அந்த வார்த்தைகள் நமக்கு அமிர்தமாய் இனிக்கும். அவர்களுடைய பொய்ப் போர்வையை கிழித்தெறிய நமக்கு தேவை சிந்தனா சக்தி.

ஒழுக்கங்கெட்ட நடத்தையின் கோர விளைவோ, எட்டிக்காயைவிடக் கசப்பாக இருக்கும். இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைவிடவும் கூராக தைக்கும். ஆம், வேதனையைத் தருவது, சாவில் முடியக்கூடியது. உறுத்தும் மனசாட்சி, வேண்டாத கர்ப்பம், பாலின நோய் போன்றவையே சோரம்போவதன் கசப்பான விளைவுகள். ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டவரின் மணத்துணை எதிர்ப்படும் சொல்லொணா வேதனையை சற்று யோசித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட செயலை ஒரே ஒரு தடவை செய்தாலும் அதனால் ஏற்படும் காயம் வாழ்நாள் முழுவதும் ஆறாமல் நீடிக்கும். ஒழுக்கக்கேடு ரணத்தை உண்டுபண்ணிவிடும்.

இப்படி தாறுமாறான வழியில் செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பாணியைப் பற்றி ஞானியாகிய அந்த அரசன் சொல்கிறார்: “அவள் கால் சாவை நோக்கிச் செல்லும்; அவள் காலடி பாதாளத்திற்கு இறங்கிச் செல்லும். வாழ்வுக்குச் செல்லும் பாதையை அவள் கவனத்தில் கொள்வதில்லை; அவளுடைய வழிகள் மாறிக்கொண்டே இருக்கும்; அதைப்பற்றி அவளுக்குக் கவலையே இல்லை.” (நீதிமொழிகள் 5:5, 6) ஒழுக்கக்கேடான பெண்ணின் முடிவு மரணமே. அவளுடைய நடைகள் பாதாளத்திற்கு, அதாவது மனிதகுலத்தின் பொதுக் கல்லறைக்கு கொண்டு செல்லும். அவளுக்கும் அவளுடைய தாறுமாறான போக்கை பின்பற்றுபவர்களுக்கும் இதுவே முடிவு. இந்த வார்த்தைகள் முற்றிலும் உண்மை என்பதற்கு இன்று மிகப் பரவலாக இருக்கும் எய்ட்ஸ் போன்ற பாலின நோய்களே மிகச் சிறந்த அத்தாட்சி.

“ஆதலால் பிள்ளைகளே, இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வசனங்களை விட்டு நீங்காதிருங்கள். உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக் கிட்டிச் சேராதே” என ராஜா மிகக் கரிசனையுடன் புத்தி சொல்கிறார்.—நீதிமொழிகள் 5:7, 8.

ஒழுக்கக்கேடான வாழ்க்கை நடத்தும் ஆட்களிடமிருந்து எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் விலகியிருப்பது அவசியம். அப்படியென்றால், இழிவான இசை, தரக்குறைவான பொழுதுபோக்குகள், ஆபாசப் புத்தகங்கள் போன்றவற்றில் நேரத்தை வீணடித்து ஏன் அவர்களோடு சகவாசம் வைத்துக்கொள்ள வேண்டும்? (நீதிமொழிகள் 6:27; 1 கொரிந்தியர் 15:33; எபேசியர் 5:3-5) இப்படிப்பட்டவர்களுடைய கண் நம்மீது பட அழைப்பு விடுவதுபோல் காதல் விளையாட்டுகளில் ஈடுபடுவது அல்லது உடை, சிகையலங்காரத்தில் மட்டுக்குமீறி செல்வது மிகவும் முட்டாள்தனமானது!—1 தீமோத்தேயு 4:8; 1 பேதுரு 3:3, 4.

பெரும் இழப்பு

ஒழுக்கக்கேடான நபர்களிடமிருந்து தூர விலகியிருப்பதற்கு இன்னும் என்ன காரணம் இருக்கிறது? சாலொமோன் பதில் தருகிறார்: ‘சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும்; உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய். அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின் பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும். முடிவிலே உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கிப்பாய்.’நீதிமொழிகள் 5:9-11.

ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் பெரும் இழப்பை சாலொமோன் வலியுறுத்துகிறார். மதிப்பிழந்து அல்லது மானங்கெட்டு நிற்பதே விபசாரத்தால் ஏற்படும் விளைவு. நம்முடைய அல்லது யாரோ ஒருவருடைய வக்கிர ஆசைக்கு இடம்கொடுப்பது இழிவானதல்லவா? விவாகத்துணையை விட்டு வேறு யாருடனோ பாலுறவில் ஈடுபடுவது தன்மானமின்றி நடப்பதல்லவா?

‘நம் ஆயுசு காலம், செல்வம், பிரயாசத்தின் பலன் அனைத்தையும் அந்நியருக்கும் புறத்தியாருக்கும் கொடுப்பது’ எதை குறிக்கிறது? “இந்த வசனங்களின் அர்த்தம் மிகத் தெளிவாக இருக்கிறது: ஒழுக்கங்கெட்ட நடத்தையால் ஏற்படும் இழப்பு பெரிது; பதவி, புகழ், செல்வம் என இதற்காகத்தான் மனிதன் மாடாய் உழைக்கிறான். ஆனால், இவையனைத்தையும் ஒரு பெண்ணின் முறையற்ற ஆசைக்கு உடன்படுவதாலோ அல்லது கோர்ட்டு, கேஸ் என அலைந்து, நஷ்ட ஈடு வழங்குவதாலோ ஒரு நொடியில் கரைந்து விடலாம்” என ஒரு குறிப்பு விவரிக்கிறது. ஒழுக்கங்கெட்ட நடத்தையால் ஏற்படும் இழப்பு எக்கச்சக்கம்!

மானத்தையும் இழந்து, செல்வத்தையும் தொலைத்த பிறகு, “ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் பண்ணினதே! என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம் பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே! சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொஞ்சங்குறைய எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே!” என்று முட்டாள் முறையிடுவான்.—நீதிமொழிகள் 5:12-14.

எல்லாம் நடந்து முடிந்தபிறகு, “என் தகப்பன் சொல்லை மாத்திரம் கேட்டிருந்தால்; என் போக்கில் நான் தன்னிச்சையாய் போகாமல் இருந்திருந்தால்; மற்றவர்களுடைய புத்திமதியை கேட்டிருந்தால் என ‘இப்படி செய்திருக்கலாமே அப்படி செய்திருக்கலாமே’ என குற்றம் செய்தவர் ‘அங்கலாய்க்க’ ஆரம்பித்துவிடுவார் என ஒரு நிபுணர் குறிப்பிடுகிறார். ஆனால், இந்த புத்தி காலம் கடந்து வருவதால் எந்தவித பிரயோஜனமும் இல்லை. கற்பிழந்த ஒருவர் தன் வாழ்க்கையை நாசப்படுத்திக் கொள்கிறார். தானே தன்மீது சேற்றை வாரியிறைத்துக்கொள்கிறார். இப்படி எல்லா நாசங்களும் நம்மை சூழ்ந்துகொள்வதற்கு முன்னரே அதைப் பற்றி யோசிப்பதுதான் புத்திசாலித்தனம்!

“உன் சொந்த நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி”

பாலுறவு அறவே கூடாதென பைபிள் தடைசெய்கிறதா? இல்லை. ஓர் ஆணும் பெண்ணும் காதல் வயப்பட்டு, இன்பம் காண்பது கடவுள் கொடுத்த பரிசு. என்றாலும், இந்த நெருங்கிய உறவு, கணவன் மனைவிக்கிடையே மட்டுமே இருக்க வேண்டியது. அதனால்தான் திருமணமான ஓர் ஆணுக்கு சாலொமோன் இந்த அறிவுரையைக் கொடுக்கிறார்: “உன் சொந்த நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி; உன் வீட்டுக் கிணற்றிலுள்ள நல்ல தண்ணீரையே பருகு. உன் ஊற்றுநீர் வெளியே பாய வேண்டுமா? உன் வாய்க்காலின் நீர் வீதியில் வழிந்தோட வேண்டுமா? அவை உனக்கே உரியவையாயிருக்கட்டும்; அன்னியரோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ளாதே.”நீதிமொழிகள் 5:15-17, பொது மொழிபெயர்ப்பு.

“உன் சொந்த நீர்த்தொட்டி, உன் வீட்டுக்கிணறு” போன்ற கவிதைநயம் மிக்க வார்த்தைகள் ஆருயிர் மனைவியைக் குறிக்கிறது. அவளோடு பாலுறவு கொள்வது, புத்துயிரளிக்கும் நீரைக் குடிப்பதற்கு சமம். பொது இடங்களில் கிடைக்கும் நீரல்ல அவள். நீர்த்தொட்டி அல்லது கிணறு என்பது தனிநபர் சொத்து. பொது இடங்களில், அதாவது மற்ற பெண்களிடம் தன் விந்தை விரயமாக்காமல், தன் மனைவிக்குப் பிள்ளைப்பேறு தருமாறு அந்த ஆணுக்கு புத்திமதி சொல்லப்படுகிறது. தன் மனைவிக்கு உண்மையாய் இருக்க வேண்டுமென்பதையே அந்த அறிவுரை அழுத்தந்திருத்தமாய் கூறுகிறது.

ஞானி தொடர்ந்து சொல்கிறார்: “உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக: அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.”நீதிமொழிகள் 5:18, 19.

“ஊற்றுக்கண்” அல்லது ஊற்றுகள் என்பது பாலுறவில் பெறும் இன்பத்தைக் குறிக்கிறது. மணத்துணையோடு பெறும் இந்த இன்பம் ‘ஆசீர்வதிக்கப்பட்டது,’ அதாவது கடவுள் கொடுத்தது. எனவேதான், தன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திருக்கும்படி கணவனுக்கு சொல்லப்படுகிறது. அவனுக்கு அவள் அழகிய, அருமையான பெண்மானாய் இருக்கிறாள். மயக்கும், கவர்ச்சிமிக்க வரையாடும் அவளே.

அடுத்ததாக, சிந்தனையைத் தூண்டும் இரு கேள்விகளை சாலொமோன் கேட்கிறார்: “என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிவதேன்? அந்நிய ஸ்திரீயை அணைத்துக்கொள்வதேன்?” (நீதிமொழிகள் 5:20, NW) விவாகத்துணையை விட்டு, வேலை செய்யும் இடத்திலோ, பள்ளியிலோ, அல்லது வேறு எங்கோ பழகுபவர்களோடு பாலுறவு கொண்டு ஏன் சோரம்போக வேண்டும்?

திருமணமான கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் இந்த ஆலோசனையைத் தருகிறார்: “சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போல” இருக்கக்கடவர்கள். (1 கொரிந்தியர் 7:29) இது எதை அர்த்தப்படுத்துகிறது? இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் எல்லோரும் ‘முதலாவது ராஜ்யத்தை தேட வேண்டும்’ என்பதையே குறிக்கிறது. (மத்தேயு 6:33) ஆகவே, கணவன் மனைவி எப்போதும் தங்களைக் குறித்தே யோசித்துக்கொண்டு, கடவுளுடைய காரியங்களை வாழ்க்கையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிடக்கூடாது.

தன்னடக்கம் அவசியம்

பாலுறவு ஆசைகளை கட்டுப்படுத்த முடியும். யெகோவாவின் அங்கீகாரத்தை விரும்பும் அனைவரும் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, . . . உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் [“மதிப்பாயும்,” NW] ஆண்டுகொள்ளும்படி” அறிய வேண்டுமென அப்போஸ்தலனாகிய பவுல் அறிவுறுத்துகிறார்.—1 தெசலோனிக்கேயர் 4:3, 5.

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்ட அந்தப் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவதே முதிர்ச்சி. (ஆதியாகமம் 2:24) எனவே, பாலுறவு ஆசைகள் தங்களுக்குள் முளைவிட ஆரம்பித்த உடனே திருமணம் செய்துகொள்ள இளைஞர் அவசரப்படக்கூடாது. சரியான தீர்மானங்களை எடுக்க முடியாதபடி, பாலுறவு உணர்ச்சிகள் மேலோங்கி நிற்கும் “இளமை மலர்ச்சி கடக்கும்வரை” காத்திருப்பது நல்லது. (1 கொரிந்தியர் 7:36, NW) ஏற்ற துணை கிடைக்கவில்லை என ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஈடுபடுவது முட்டாள்தனமானது, மகா பாவம்!

‘துன்மார்க்கனை அவன் அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்’

உயிரைக் கொடுத்தவரும் பாலின பெருக்கத்தை மனிதர்களுக்கு அளித்தவருமாகிய யெகோவா, ஒழுக்கங்கெட்ட நடத்தையை வெறுக்கிறார். எனவே, இப்படிப்பட்ட நடத்தையில் ஈடுபடுவது தவறு. கற்பைக் காத்துக்கொள்வதற்கான பலமான காரணத்தை சாலொமோன் சொல்கிறார்: “மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப் பார்க்கிறார்.” (நீதிமொழிகள் 5:21) யெகோவாவின் கண்களிலிருந்து எதையும் மறைக்கவே முடியாது. அதுமட்டுமா, நாம் அனைவரும் ‘அவருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.’ (எபிரெயர் 4:13) எவ்வளவுதான் இரகசியமாக வைத்திருந்தாலும்சரி, அதனால் ஏற்படும் விளைவுகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும்சரி, எந்த ஓர் ஒழுக்கங்கெட்ட நடத்தையும் யெகோவாவோடு நமக்கிருக்கும் உறவை நிச்சயம் கெடுத்துப்போடும். கணநேர கள்ளத்தனமான இன்பத்திற்காக கடவுளோடு வைத்திருக்கும் சமாதான உறவை குலைத்துப்போடுவது மகா முட்டாள்தனம்!

இப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட நடத்தையில் சிலர் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் தொடர்ந்து ஈடுபட்டு வரலாம். அதுமட்டுமல்ல, தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டிருப்பதாகவும் ஒருவேளை தோன்றலாம். ஆனால், அது ரொம்ப நாள் தாக்குப்பிடிக்காது. சாலொமோன் இவ்வாறு அறிவிக்கிறார்: “துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான். அவன் புத்தியைக் கேளாததினால் மடிந்து, தன் மதிகேட்டின் மிகுதியால் மயங்கிப்போவான்.”நீதிமொழிகள் 5:22, 23.

ஏன் இந்த எச்சரிக்கை? மயக்கி, வஞ்சிக்கும் இந்த உலகின் வழிகளுக்கு எதிராக நீதிமொழிகள் புத்தகம் நம்மை எச்சரிக்கிறது. ஒழுக்கங்கெட்ட நடத்தையால் உண்டாகும் கசப்பான விளைவுகளைப் பற்றி விவரிக்கிறது. ஆரோக்கியம், செல்வம், பெலன், மதிப்பு எல்லாவற்றையும் இழப்பதை சுட்டிக்காட்டுகிறது. இவ்வளவு தெளிவான எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருப்பதால், இப்படி செய்திருக்கலாமே அப்படி செய்திருக்கலாமே என பிறகு அங்கலாய்க்க வேண்டிய அவசியமில்லை. ஆம், யெகோவாவின் ஏவப்பட்ட வார்த்தையில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை பின்பற்றினால், ஒழுக்கங்கெட்ட இந்த உலகிலும் கற்பில் உயர்ந்து வாழலாம்.

[அடிக்குறிப்புகள்]

a “பர” என்ற சொல், நியாயப்பிரமாணச் சட்டத்திற்கு விரோதமாக சென்றவர்களையும் யெகோவாவிடமிருந்து தூர விலகியவர்களையும் குறித்தது. எனவேதான், விலைமகளை அல்லது வேசியை, “பரஸ்திரீ” என குறிப்பிடுகிறது.

b பெயர் மாற்றப்பட்டுள்ளது.

[பக்கம் 30-ன் படங்கள்]

ஒழுக்கங்கெட்ட நடத்தையின் விளைவுகள் எட்டிக்காயினும் கசப்பு

[பக்கம் 31-ன் படங்கள்]

“உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு”