Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தைவான் நெல் வயல்களில் தென்றலென வீசிடும் நற்செய்தி

தைவான் நெல் வயல்களில் தென்றலென வீசிடும் நற்செய்தி

நாங்களோ விசுவாசிக்கிறவர்கள்

தைவான் நெல் வயல்களில் தென்றலென வீசிடும் நற்செய்தி

பருவம் தவறாது கனமழை பெய்யும் தைவானில் ஆண்டுதோறும் இரண்டு போகம் நெல் விளையும். எப்போதாவது வானம் பொய்த்துப்போய், கருமேகம் தலைகாட்டாவிட்டால், அதற்குக் காத்திருந்த இளம் நாற்றுகளெல்லாம் கருகிவிடும். விவசாயிக்கோ பெருநஷ்டம்! அதற்காக, விவசாயமே நீ என்னை விட்டுத் தொலைந்துபோ என்று அந்தத் தொழிலுக்கு முழுக்குப்போட்டுவிட மாட்டான். பொறுமையுடன் அடுத்த போகத்திற்கு தயார் செய்வான். பாடுபட்டால்தான் பானையில் சோறு வேகும் என்பது அவனுக்குத் தெரியாததல்ல. அடுத்த பருவத்திலாவது வானம் கருணை காட்டாதா என ஏங்கி, விதை விதைத்து நாற்று நட்டு தண்ணீர் பாய்ச்சுவான். வானம் துணைநின்றால், விவசாயிக்கு கொண்டாட்டம்தான். முடிவில் அவனுக்கு அமோக விளைச்சல் கிடைக்கும். ஆவிக்குரிய விவசாயியின் நிலைமையும் இதுதான்.

ஆவிக்குரிய அறுவடையில் விடாமுயற்சி

தைவான் நாட்டில் வசிக்கும் ஆவிக்குரிய விவசாயிகளான யெகோவாவின் சாட்சிகளும் சளைக்கவில்லை. அங்குள்ள சில இடங்களில் ஆவிக்குரிய விதையைத் தூவி, நாற்று நட்டு, அறுவடைக்குக் காத்திருந்தனர். விளைந்ததோ ஏமாற்றமே. உதாரணத்திற்கு, மீயல்லி மாகாணத்தை எடுத்துக்கொள்வோம். அந்தப் பகுதியில் சாட்சி கொடுப்பதற்காக அவ்வப்பொழுது ஏற்பாடு செய்யப்பட்டது. 1973-ல், அந்தப் பகுதியில் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கென ஒரு விசேஷ பயனியர் தம்பதியை அனுப்பினர். ஆரம்பத்தில் அந்தச் செய்திக்கு சிலர் வளைந்துகொடுத்தனர். அந்த ஆர்வம் போகப்போக தணிந்துவிட்டது. ஜனங்களோ சத்தியத்திற்கு மசியவில்லை. அந்தப் பயனியர்கள் வேறு பிராந்தியத்திற்குச் சென்றனர்.

1991-ல் அதே பிராந்தியத்திற்கு இன்னும் இரண்டு விசேஷ பயனியர்கள் சென்றனர். அங்கு நிலவிய சூழ்நிலையைப் பார்த்தால், ஆவிக்குரிய வளர்ச்சிக்கான அறிகுறியே தெரியவில்லை. சில வருடங்கள் கழித்து, இந்தப் பிராந்தியத்தை தரிசாகப் போட்டுவிட்டு, வேறு பிராந்தியத்திற்கு பயனியர்கள் மாறிச் சென்றனர். ஏனெனில் அந்தப் பிராந்தியம் ஆவிக்குரிய விவசாயத்திற்கு ஏற்ற விளைநிலமாகத் தோன்றியது.

புதிய உத்திகளால் அறுவடை

தைவானில் சாட்சிகள் சென்ற இடமெல்லாம் பிரசங்க வாசனை காணாத பிராந்தியம்தான்! விரிந்து பரந்த அந்தப் பிராந்தியம் அவர்களைப் பார்த்து புன்னகை பூத்து கரம் கூப்பியது. அதில் ஆவிக்குரிய விளைநிலம் எதுவென்று கண்டுபிடிக்க 1998-ல் மும்முரமாய் முயற்சி செய்யப்பட்டது. இதற்கென்றே புதியதோர் உத்தி கையாளப்பட்டது. இதுவரை பிரசங்கிக்கப்படாத, ஜனநெருக்கம் மிகுந்துள்ள பகுதிகளில் ஊழியம் செய்ய 40 விசேஷ பயனியர்கள் தற்காலிகமாக சென்று சேர்ந்தனர்.

அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பிராந்தியத்தில், மீயல்லி மாகாணத்திற்கு அருகில், ஒன்றோடு ஒன்று ஒட்டினாற்போலுள்ள இரண்டு நகரங்களும் அடங்கின. அந்தப் பிராந்தியம் எப்படிப்பட்டது என முதலில் பரிசோதித்தனர். அதாவது திருமணமாகாத நான்கு சகோதரிகள் அங்கு ஊழியம் செய்துபார்த்தனர். தாங்களே விதை விதைத்து நாற்று நட்டு சத்திய தண்ணீரும் பாய்ச்சினர். அவற்றில் பெரும்பாலானவை செழித்து வளர்ந்ததைக் கண்டு குதூகலித்தனர்; ஆர்வம் பொங்க அறிவித்தனர். அந்தப் பகுதியில் மூன்றே மாதங்கள் ஊழியத்தை செய்து முடிப்பதற்குள், அநேக பைபிள் படிப்புகளை நடத்திவந்தனர். அதுமட்டுமல்ல, அங்கு ஒரு படிப்புத் தொகுதியும் ஸ்தாபிக்கப்பட்டது; அப்பகுதியை அடுத்திருந்த சபையின் மூப்பர் அங்கு வந்து வந்து புத்தகப் படிப்பை நடத்திவிட்டுச் சென்றார்.

தங்கள் கைகளால் வைத்த இளம் “நாற்றுகள்” தழைத்தோங்கி வருவதைக் கண்ட அந்தச் சகோதரிகளில் மூவர், அவற்றை தொடர்ந்து பராமரித்துவர ஒப்புக்கொண்டனர். எனவே அவர்களில் இருவர் நிரந்தர விசேஷ பயனியர்களாயினர். மூன்றாவது சகோதரியோ, ரெகுலர் பயனியரானார். அருகிலிருந்த சபையைச் சேர்ந்த ஓர் மூப்பர் அவர்களுக்கு உதவுவதற்காக அங்கு மாறிச்சென்றார். அந்த இடத்தில் கொடுத்த முதல் பொதுப் பேச்சுக்கு 60-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். முளைத்து மூன்றே இலைவிட்ட இந்தத் தொகுதியை அருகிலுள்ள சபை பத்திரமாய் பராமரித்துவருகிறது. எப்படியெனில் அந்தச் சபைதான், புத்தகப் படிப்புகளை அவ்வப்பொழுது நடத்திவருவதுடன் ஞாயிறு கூட்டங்களையும் நடத்துகிறது. விரைவில் இந்தப் பிராந்தியத்தில் ஒரு புதிய சபையே உருவாகலாம்.

பிற பகுதிகளிலும் வீண்போகாத விடாமுயற்சி

தைவானின் பிற பகுதிகளிலும் இந்த உத்தி உதவியது; பலனும் கிடைத்தது. இத்தீவின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஈலான் மாகாணத்திலும் தற்காலிக விசேஷ பயனியர்கள் ஊழியம் செய்தனர். அங்கு ஒரு புதிய புத்தகப் படிப்புத் தொகுதி ஸ்தாபிக்கப்பட்டது.

ஒருநாள் மாலை, வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தபோது, அந்தத் தற்காலிக விசேஷித்த பயனியர்களில் ஒருவர் ஓர் இளைஞனைச் சந்தித்தார்; சபைக் கூட்டங்கள் நடக்கும் நேரத்தைத் தெரிவிக்கும் ஒரு கைப்பிரதியை அவரிடம் காட்டினார். உடனே அவர், “நாளை மாலை நடக்கும் கூட்டத்திற்கு நான் வரட்டுமா? நான் வரும்போது, எப்படி உடுத்திக்கொள்ள வேண்டும்?” என கேட்டார். இந்தப் பயனியர் மட்டுமே ஒரு வாரத்தில் எட்டு பைபிள் படிப்புகளை நடத்தி வருகிறார். பைபிளைப் படித்துவந்தவர்களில் பலர் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்க தகுதி பெற்றனர்; அதைத் தொடர்ந்து முழுக்காட்டுதல் பெற விரும்பினர்.

மற்றொரு பெண்மணி இதே நகரில் வசித்துவந்தார். அவர் காலங்காலமாய் சர்ச்சுக்குப் போய்வந்தும் அவருக்கு பைபிளை கற்றுக்கொடுக்க யாரும் முன்வரவில்லை. இந்த பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி கேள்விப்பட்டாரோ இல்லையோ, ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொண்டார்.’ படிப்புக்கான பகுதியை முன்னதாகவே தயாரிக்கும்படி அவருக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. அந்தத் தற்காலிக விசேஷ பயனியர் பைபிள் படிப்பு நடத்தச் செல்லும்பொழுது, இந்தப் பெண்மணி ஒழுங்காக தன் “வீட்டுப்பாடத்தை” செய்துவைத்திருப்பார். எப்படியென்றால், இதற்கென்றே ஒரு நோட்டு போட்டு, புத்தகத்திலுள்ள கேள்விகளை அதில் எழுதி, அதற்குக் கீழே அதற்கான பதிலையும் எழுதிவிடுவார். படிக்கப்போகும் அதிகாரத்தில் மேற்கோள் காட்டப்படாத வசனங்களை எடுத்துப் பார்த்து அவற்றை அப்படியே அந்த நோட்டிலும் எழுதிவிடுவார். முதல் படிப்புக்காக அந்தச் சகோதரி சென்றிருந்தபோதே, இந்தப் பெண்மணி மூன்று அதிகாரங்களை இவ்வாறு தயாரித்து வைத்திருந்தார் என்றால் எவ்வளவு ஆர்வம் இருந்திருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்!

மத்திப தைவானிலுள்ள டோங்ஷி நகரிலும் இதைப் போலவே பலன் கிடைத்தது. இந்த தற்காலிக விசேஷ பயனியர்கள் ஊழியம் செய்த மூன்று மாத காலத்தில் 2,000-க்கும் அதிகமான புரோச்சர்களை விநியோகித்தனர். மூன்றாவது மாதத்திற்குள் 16 பைபிள் படிப்புகளை நடத்திவந்தனர். மத்திப தைவானில் 1999-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் நாள் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அந்நகரில் பெரும்பகுதியை உலுக்கிவிட்டது. இருந்தாலும் அங்கு ஆர்வம் காட்டிய சிலர் ஆவிக்குரிய முன்னேற்றம் காட்டத் தவறவில்லை. எவ்வாறு சொல்ல முடியும்? அவர்களுக்கு வெகு அருகிலிருந்த ராஜ்ய மன்றம் செல்லவே ஒரு மணிநேரம் பயணம் செய்ய வேண்டும். இருந்தாலும், அங்கு நடக்கும் கூட்டங்களுக்கு தவறாமல் வருகின்றனர் என்பதிலிருந்து அவர்களுடைய ஆர்வம் புலப்படுகிறது. எனவே, நல்ல மகசூல் கிடைக்க வேண்டுமென்றால், நமக்குத் தேவை விடாமுயற்சி. அது, நெல் வயலில் பாடுபடும் விவசாயியாக இருந்தாலும் சரி, ஊழியத்தில் ஊக்கத்துடன் உழைக்கும் ஆவிக்குரிய விவசாயியாக இருந்தாலும் சரி!

[பக்கம் 8-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

சீனா

தைவான் ஜலசந்தி

தைவான்

[படத்திற்கான நன்றி]

Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.