Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் குறை காண்பவரா?

நீங்கள் குறை காண்பவரா?

நீங்கள் குறை காண்பவரா?

‘உன்னை திருப்திப்படுத்தவே முடியாது, எதுக்கெடுத்தாலும் குத்தம் கண்டுபிடிக்கிறியே!’ குத்தம் கண்டுபிடித்தே காலத்தை ஓட்டும் ஆசாமிகளை இப்படித்தான் திட்டுகிறார்கள். குறைகாணும் ஒருவரை ஏன் எல்லோரும் வெறுக்கிறார்கள்? இவர்களைக் குறித்து 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரசங்கியார் ஒருவர் சொல்வதை கவனியுங்கள். ‘இப்படிப்பட்ட மனிதர்களுக்கும் ஆந்தைக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. ஆந்தைக்கு பகலில் கண்தெரியாது, ஆனால் இருட்டில் நன்றாக கண்தெரியும். எலி போன்ற சிறிய அற்ப விலங்குகளைக்கூட தெளிவாக பார்த்து பிடித்துவிடும். அதேபோல இவர்களுக்கும் ஒருவரிடமுள்ள நல்ல குணங்கள் கண்ணுக்கு தெரியாது, ஆனால் சின்ன அற்ப விஷயங்களில்கூட ஆந்தை கண்களைப் போட்டு குறைகளை பார்த்துவிடுவார்கள்.’ ஆஹா, என்ன பொருத்தமான உதாரணம் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால் குறைகாணும் குணம் எங்கே, எப்படி விஸ்வரூபமெடுத்தது என்று உங்களுக்கு தெரியுமா? குறைகாணும் இந்த குணம் பண்டைய கிரீஸில்தான் தத்துவமாக உருவெடுத்தது. ஆனால் இந்த குணத்திற்காக பயன்படுத்தப்பட்ட கிரேக்கச் சொல் முதலில் குத்தம் கண்டுபிடிக்கும் ஒருவரை குறிப்பிடுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படவில்லை. அந்த சொல் அநேக நூற்றாண்டுகளுக்கு தத்துவஞானிகள் அடங்கிய ஒரு குழுவை குறித்தது.

இந்த குணம் ஒரு தத்துவமாக எவ்வாறு தலையெடுத்தது? இந்த தத்துவத்தை பின்பற்றியவர்கள் என்ன போதித்தனர்? இவர்களுடைய விசித்திரமான பண்புகள் கிறிஸ்தவனுக்கு ஒத்துவருமா?

தத்துவத்தின் ஆரம்பம்

அந்த காலத்து கிரீஸை எடுத்துக்கொண்டால், அதுவே தர்க்கங்களுக்கும் விவாதங்களுக்கும் பிறப்பிடம் என சொல்லலாம். அநேக நூற்றாண்டுகளாக, சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க தத்துவஞானிகள் அநேக தத்துவங்களை வாரி வழங்கியிருக்கின்றனர். அவர்களுடைய தத்துவங்கள் அவர்களை பிரபலமாக்கியதோடு அநேகரை கவர்ந்தன. மேற்கத்திய கலாச்சாரத்தில் அவர்களுடைய தத்துவங்கள் இன்றும் வலம் வருகின்றன.

பொருள் சம்பாதிப்பதிலோ, சுகபோக வாழ்க்கை வாழ்வதிலோ நிலையான சந்தோஷத்தை அடைய முடியாது என வாதாடினார் சாக்ரடீஸ் (பொ.ச.மு. 470-399). அதற்கு மாறாக, ஒழுக்கமான வாழ்க்கையே உண்மையான சந்தோஷத்தை அடைவதற்கான வழி என அவர் அடித்துக் கூறினார். அதுமட்டுமல்ல, உயர்ந்த ஒழுக்க தராதரங்களை கடைபிடித்தால்தான் முக்தி பெற முடியும், ஆனால், சொகுசான வாழ்க்கையோ, தேவையற்ற ஆசைகளோ இதை அடையவிடாமல் செய்யலாம் என்றும் சாக்ரடீஸ் நினைத்தார். அதனால், எளிமையான வாழ்க்கை வாழ்வதற்காக துறவியானார்.

சாக்ரடீக் முறை என்றொரு போதனா திட்டத்தை சாக்ரடீஸ் அறிமுகப்படுத்தினார். பொதுவாக தத்துவஞானிகள், தங்கள் கருத்துக்களை சொல்லி, அதை நம்பவைப்பதற்காக ஆதாரங்களை அளிப்பார்கள், ஆனால் சாக்ரடீஸோ அதற்கு எதிர்மாறாக செய்தார். மற்ற தத்துவஞானிகள் என்ன சொல்கிறார்களோ அதை கவனமாக கேட்டுக்கொள்வார். பிறகு அதிலுள்ள தவறுகளை பெரிதுபடுத்தி எல்லோருக்கும் வெளிப்படுத்த காத்துக்கொண்டிருப்பார். இவருடைய இந்த குணம், மற்றவர்களிடம் எப்போதும் குற்றங்களையே கண்டுபிடித்து, அவர்களை அவமரியாதையாக நடத்த அநேகரை உற்சாகப்படுத்தியது.

சாக்ரடீஸை பின்பற்றிய அநேகரில் ஆண்டிஸ்தெனிஸூம் ஒருவர் (சுமார் பொ.ச.மு. 445-365). அவரும் மற்ற சிலரும் சாக்ரடீஸ் சொன்ன அடிப்படை போதனைகளுக்கு கண், காது, மூக்கு வைத்துவிட்டனர். உயர்ந்த ஒழுக்கம் மட்டும்தான் வாழ்க்கையில் சிறந்தது என சொன்னார்கள். அத்துடன் நிறுத்தினார்களா, சொகுசான வாழ்க்கை, ஒழுக்கத்தை அடைவதிலிருந்து தடைசெய்யும் ஒன்றாக மட்டுமல்ல அது ஒரு பெரிய பாவமென்றே கருதினார்கள். கொஞ்ச காலத்தில் மற்ற மனிதர்களை கேவலமாக நடத்த ஆரம்பித்தனர், சமுதாயத்திற்கே எதிரிகளாயினர். இவ்வாறு குறைகாணும் குணத்திற்கு இலக்கணமாயினர். இவர்களுக்கு கிடைத்த பரிசு? “நாய் போன்ற” என்ற அர்த்தமுடைய ஒரு கிரேக்கச் சொல்லால் (ky·ni·kos) அழைக்கப்பட்டனர். இது அவர்களுடைய கடுகடுப்பான குணத்தை அல்லது நாவில் கத்தி வைத்து பேசும் வழக்கத்தை சுட்டிக்காட்டியது.

அவர்களுடைய வாழ்க்கை முறை

பொருள் ஆசையும், சிற்றின்ப வாழ்க்கையையும் எதிர்க்க வேண்டும் என்ற பாராட்டத்தக்க போதனைகளை இந்த தத்துவம் கொண்டிருந்தபோதிலும், இதைப் பின்பற்றியவர்கள் எல்லையில்லாமல் அநேக கட்டுப்பாடுகளை வகுத்துக்கொண்டனர். பிரபல தத்துவஞானியாக கருதப்பட்ட டையோஜெனெஸின் வாழ்க்கையே இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

டையோஜெனெஸ், கருங்கடலுக்கு அருகிலுள்ள ஸ்னோப்பி என்ற நகரத்தில் பொ.ச.மு. 412-ல் பிறந்தார். பிறகு, தன் தந்தையுடன் அவர் ஏதென்ஸுக்கு குடிபெயர்ந்தார். அங்குதான் இந்தத் தத்துவங்களை ஆண்டிஸ்தெனிஸிடமிருந்து கற்றுக்கொண்டார். இவை டையோஜெனெஸை பெரிதும் கவர்ந்தன. இந்தத் தத்துவங்களைக் கற்ற இவர் குருவை மிஞ்சிய சிஷ்யனாக ஆனார். இத்தத்துவத்தை முதலில் துவங்கிய சாக்ரடீஸ், எளிய வாழ்க்கை வாழ்ந்தார்; ஆண்டிஸ்தெனிஸோ இன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் வாழ்ந்தார்; டையோஜெனெஸ் அவர்கள் இருவரையும் மிஞ்சி கடுமையான துறவு வாழ்க்கை வாழ்ந்தார். அதற்கு ஓர் உதாரணம்: டையோஜெனெஸ் தனக்கு குடும்பம் வேண்டாம், வீடு வேண்டும், எதுவுமே வேண்டாம் என ஒரு சிறிய தொட்டியில் சென்று உட்கார்ந்து கொண்டாராம். கொஞ்ச காலத்துக்கு அந்த தொட்டியிலேயே குடியிருந்தாராம். ஆக, அவர் எந்தவித பொருள் செல்வத்தையும் விரும்பவில்லை, எல்லாவற்றையும் வெறுத்தார் என்பது தெளிவாயிருக்கிறது.

டையோஜெனெஸ், பட்டப்பகலில் விளக்கை கொளுத்திக்கொண்டு உயர்ந்த ஒழுக்கமுள்ள மனிதரைத் தேடிப்போவதாக ஏதென்ஸ் தெருக்களில் அலைந்தாராம்! ஒருமுறை மகா அலெக்ஸாந்தர், ‘டையோஜெனெஸே உனக்கு மிகவும் விருப்பமானதை கேள்’ என கேட்டார். அதற்கு டையோஜெனெஸ், ‘சூரிய வெளிச்சத்தை மறைக்காமல் நீர் கொஞ்சம் ஒதுங்கி நின்றால் போதும்’ என சொன்னதாக கூறப்படுகிறது. இவருடைய இந்த வினோதமான நடத்தை அநேகருடைய கவனத்தை ஈர்த்தது. இவ்வாறு கவரப்பட்டவர்களுக்கே டையோஜெனெஸும் குறைகாண்பதில் குறியாக இருந்த தத்துவஞானிகளும் போதித்தனர்.

டையோஜெனெஸும் அவருடைய கூட்டாளிகளும் பிச்சைக்காரர்களைப் போல வாழ்ந்தனர். அவர்கள் சராசரி மனிதர்களாக வாழ கொஞ்சமும் விரும்பவில்லை, அத்துடன் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளையும் செய்ய மறுத்துவிட்டனர். சாக்ரடீஸைப் போலவே இவர்களும் எதற்கெடுத்தாலும் வாதாடி, மற்றவர்களை அவமரியாதையாக நடத்தினர். அதனால் அவர்கள் “நாய் போன்ற” என்ற பெயரை பெற்றார்கள். டையோஜெனெஸ் என்ற பெயரைக் கேட்டவுடன் அனைவருக்கும் அவருடைய குத்தலான பேச்சுதான் நினைவுக்கு வரும். ஏனென்றால், நாய் ஒருவரை எவ்வாறு கடித்துக் குதறுமோ அதுபோல இவரும் பேச்சாலேயே மற்றவர்களை கடித்து குதறிவிடுவார். அதனால்தான் முக்கியமாக இவரை “நாய்” என்றே அழைத்தனர். டையோஜெனெஸ் பொ.ச.மு. 320-ல் சுமார் 90 வயதாயிருக்கையில் உயிரிழந்தார். பளிங்குக்கல்லால் செய்யப்பட்ட ஒரு நாய் அவர் சமாதியின்மேல் வைக்கப்பட்டது.

அதன்பிறகு இவருடைய தத்துவங்களில் சிலவற்றை மற்ற தத்துவஞானிகளும் ஏற்றுக்கொண்டனர். காலப்போக்கில் டையோஜெனெஸின் கூட்டாளிகளும், அவர்களுக்கு பிறகு வந்தவர்களும் இருந்த கொஞ்ச நஞ்ச பெயரையும் கெடுக்கும் அளவிற்கு நடந்துகொண்டனர். அதன்பிறகு அந்த தொகுதி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது.

நீங்கள் அவ்வாறு இருக்க வேண்டுமா?

இன்று, ‘குறை காண்பவர்’ என ஒருவரை சொன்னால், அவர் “எப்போதும் கோபமாக திட்டுபவர், எந்நேரமும் குற்றம் கண்டுபிடிப்பவர். . . . ஒருவரிடமுள்ள நல்ல குணங்களையும் நல்ல எண்ணங்களையும் நம்பாதவர். அதனால் அவர்களை மட்டம்தட்டி குத்தலாக பேசுபவர்” என்று ஒரு ஆங்கில அகராதி விவரிக்கிறது. இப்படிப்பட்ட குணம் உலகத்தின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. இருப்பினும் இந்த குணம் ஒரு கிறிஸ்தவனுக்கு ஒத்துவருமா? இதைத் தெரிந்துகொள்ள பைபிளிலுள்ள போதனைகளையும் நியமங்களையும் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

“கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்து கொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.” (சங்கீதம் 103:8, 9) கிறிஸ்தவர்கள் ‘தேவனைப் பின்பற்ற வேண்டும்.’ (எபேசியர் 5:1) எல்லாவற்றையும் சிருஷ்டித்த சர்வவல்லமையுள்ள கடவுளே கோபமாக திட்டுபவராகவோ, குற்றம் கண்டுபிடிப்பவராகவோ இல்லாமல் இரக்கம் காட்டுபவராகவும் மிகுந்த கருணையுடையவராகவும் இருக்கிறார். அப்படியிருக்கும்போது கிறிஸ்தவர்கள் அவருடைய குணங்களை பின்பற்ற வேண்டாமா?

குணத்தில் யெகோவாவின் பிரதிபிம்பமான இயேசு கிறிஸ்து, ‘தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி நமக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.’ (1 பேதுரு 2:21; எபிரெயர் 1:3) சில சமயங்களில் இயேசுவும்கூட பொய் மதத்திலிருந்த தவறுகளை அம்பலப்படுத்தினார், இவ்வுலகத்தின் கிரியைகள் பொல்லாதவை என வெளிப்படுத்தினார். (யோவான் 7:7) அதே சமயத்தில், நேர்மையான ஆட்களை தக்க சமயத்தில் பாராட்டினார். உதாரணத்திற்கு, நாத்தான்வேலைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்.” (யோவான் 1:47) இயேசு அற்புதங்களை செய்தபோதுகூட, சுகமடையும் அந்த நபருடைய விசுவாசத்தை பாராட்டினார். (மத்தேயு 9:22) ஒருமுறை ஒரு பெண் இயேசுவுக்காக விலைமதிப்புள்ள பரிசை கொண்டுவந்தாள். அந்தப் பெண்ணின் செயல் பாராட்டுதலுக்குரியதாக இருந்தபோதிலும், சிலர் அதை வீண் செலவு என்றனர். ஆனால் இயேசுவோ குறைகூறாமல், அவளுடைய உள்நோக்கத்தை உணர்ந்தவராய் இவ்வாறு சொன்னார்: “இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும்.” (மத்தேயு 26:6-13) அதுமட்டுமல்ல, இயேசு தன்னை பின்பற்றினவர்கள்மீது பாசத்தையும் நம்பிக்கையையும் காட்டினார். அவர்களது நண்பனாக அவர்களில் ‘முடிவுபரியந்தம் அன்புவைத்தார்.’—யோவான் 13:1.

இயேசு பரிபூரண மனிதராக இருந்ததால், அபூரண மனிதரிடத்தில் இருக்கும் குற்றங்களையெல்லாம் எளிதாகவே கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அவரோ மற்றவர்களை முழுமையாக நம்பி எப்போதும் அவர்களுடைய குற்றங்களையே சுட்டிக்காட்டாமல், உற்சாகப்படுத்தவே விரும்பினார்.—மத்தேயு 11:29, 30.

“[அன்பு] சகலத்தையும் நம்பும்.” (1 கொரிந்தியர் 13:7) இதற்கு நேர் எதிர்மாறானதுதான் குறைகாண்பவரின் குணம். அதாவது, ஒருவருடைய செயலை, அவர் என்ன உள்நோக்கத்துடன் செய்தார் என சந்தேகிக்கும் அல்லது அவர் தவறான உள்நோக்கத்துடன்தான் செய்தார் என நினைக்கும் குணம். இன்று உலகத்திலுள்ள அநேகர் தந்திரமாக இருக்கிறார்கள், அதனால் நாம் உஷாராக இருக்க வேண்டும் என்பது உண்மைதான். (நீதிமொழிகள் 14:15) இருப்பினும், அன்பு அநாவசியமாக எல்லாவற்றையும் சந்தேகிக்காது.

கடவுள் தம் ஊழியர்கள்மேல் அன்பும், நம்பிக்கையும் வைத்திருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டுமானால், மனிதர் தங்களுடைய குறைகளை அறிந்திருப்பதைவிட கடவுள் அவற்றை நன்றாகவே அறிந்திருக்கிறார். இருப்பினும், யெகோவா தம்முடைய மக்களை சந்தேகிப்பதில்லை. அவர்களது திராணிக்கு மிஞ்சியதை அவர்களிடம் எதிர்பார்ப்பதும் இல்லை. (சங்கீதம் 103:13, 14) அத்துடன், மனிதரில் இருக்கும் நற்குணங்களை பார்த்து, அபூரணத்தின் மத்தியிலும் நேர்மையாக இருக்கும் தம் ஊழியர்களுக்கு சிலாக்கியங்களையும் அதிகாரத்தையும் அளிக்கிறார்.—1 இராஜாக்கள் 14:13; சங்கீதம் 82:6.

“கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கும், இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.” (எரேமியா 17:10) ஒருவருடைய இருதயத்தை யெகோவாவால் துல்லியமாக அறிய முடியும். நம்மால் முடியாது. அதனால், மற்றவர்கள் இப்படிப்பட்டவர்கள் என ஒரு முத்திரை குத்துவதையும் அதைப்பற்றி மற்றவர்களிடம் பேசுவதைப் பற்றியும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

குறைகாணும் குணத்தை நம்மில் வளர விட்டால் அது நாளடைவில் நம்முடைய சிந்தை முழுவதையும் கட்டுப்படுத்த ஆரம்பித்துவிடும். இது நமக்கும் நம் உடன் விசுவாசிகளுக்கும் மத்தியில் பிரிவினையை உண்டுபண்ணும். கிறிஸ்தவ சபையிலுள்ள சமாதானத்தை குலைத்தும் போடும். அதனால், நாமும் இயேசுவின் முன்மாதிரியை பின்பற்ற வேண்டும். அவர் அபூரண மனிதர்களான தம் சீஷர்களிடமிருந்த குறைகளை உடனே பார்த்த போதிலும், அவர்களுடன் நல்ல உறவை கொண்டிருந்தார். அவர் சீஷர்களின் நம்பிக்கைக்குரிய நண்பனாக வாழ்ந்தார்.—யோவான் 15:11-15.

“மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (லூக்கா 6:31) இயேசு கிறிஸ்து கொடுத்த இந்த அறிவுரையை பின்பற்ற அநேக வழிகள் உள்ளன. உதாரணமாக, மற்றவர்கள் நம்மிடம் பேசும்போது அன்பாக மதிப்பு கொடுத்து பேச வேண்டும் என நாம் எல்லோரும் விரும்புகிறோம். அப்படியானால், நாமும் மற்றவர்களிடம் பேசும்போது அன்பாகவும் மரியாதையுடனும் பேச வேண்டும். மதத் தலைவர்களுடைய பொய் போதனைகளை இயேசு உறுதியாக எதிர்த்து மக்களுக்கு வெளிப்படுத்தியபோதிலும், அவர் எந்த தனிப்பட்ட நபரிடமும், குற்றங்களையே எப்போதும் தேடிக்கொண்டிருக்கவில்லை.—மத்தேயு 23:13-36.

குறைகாணுதலை தவிர்க்க வழிகள்

நம் வாழ்க்கையில் ஏமாற்றங்களை எதிர்ப்படும் சமயங்களில், நம்மை அறியாமலேயே குறைகாண ஆரம்பித்துவிடுவோம். இருப்பினும், நம்மால் இதை போராடி வெல்ல முடியும். எப்படி? யெகோவா அபூரண மனிதர்களின் வரம்புகளை நன்கு அறிந்து இரக்கத்துடன் நடந்துகொள்கிறார் என உணர வேண்டும். அப்போது, மற்ற உடன் வணக்கத்தாரும் நம்மை போன்ற அபூரணர்கள், நல்லதை செய்ய விரும்புகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்வோம்.

வாழ்க்கையில் ஏற்படும் சில கசப்பான அனுபவங்களாலும் ஏமாற்றங்களாலும் மற்றவர்களை உடனே நம்பமுடிவதில்லை. மனிதர்கள் என்றாலே குறைகள் இருக்கத்தான் செய்யும். ஆகவே அவர்களை முழுமையாக நம்பிவிடுவதும் நல்லதல்ல. (சங்கீதம் 146:3, 4) இருப்பினும், கிறிஸ்தவ சபையிலுள்ள அநேகர் மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என மனதார விரும்புகின்றனர். குடும்ப அங்கத்தினர்களை இழந்தவர்களுக்கு தாயாக, தந்தையாக, சகோதரியாக, சகோதரனாக, பிள்ளையாக உதவிசெய்ய சபையிலுள்ள ஆயிரக்கணக்கான சாட்சிகள் காத்திருக்கின்றனர். (மாற்கு 10:30) வேதனையான சமயங்களில் உண்மையான நண்பர்களாக தோள்கொடுக்க அநேகர் காத்திருக்கின்றனர். aநீதிமொழிகள் 18:24.

இயேசுவின் சீஷர்களை அடையாளப்படுத்துவது குறைகாணும் குணமல்ல, ஆனால் சகோதர அன்பே. இதைப் பற்றி இயேசுவே இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) ஆகவே, உடன் கிறிஸ்தவர்களிடம் அன்பு காட்டுவோம், எப்போதும் அவர்களுடைய நற்குணங்களையே பார்ப்போம். இவ்வாறு செய்தால் குறைகாணும் போக்கை தவிர்க்க முடியும்.

[அடிக்குறிப்புகள்]

a காவற்கோபுரம் மே 15, 1999-ல் வெளிவந்த “கிறிஸ்தவ சபை—ஆறுதலின் பிறப்பிடம்” என்ற கட்டுரையை பார்க்கவும்.

[பக்கம் 21-ன் படம்]

குறைகூறுவதில் வல்லவரான டையோஜெனெஸ்

[படத்திற்கான நன்றி]

Great Men and Famous Women என்ற நூலிலிருந்து