Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அகந்தைக்குப் பின் அவமானம்

அகந்தைக்குப் பின் அவமானம்

அகந்தைக்குப் பின் அவமானம்

“அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.”நீதிமொழிகள் 11:2.

1, 2. அகந்தை என்பது என்ன, அதனால் ஏற்படும் விளைவு யாது?

 பொறாமை நிறைந்த ஒரு லேவியன், யெகோவாவால் நியமிக்கப்பட்டவர்களுக்கு எதிராக கலகத்தனம் செய்யும் கும்பலுக்குத் தலைமை வகிக்கிறான். அரச பதவியை அடைந்தே ஆகவேண்டும் என்ற வெறிகொண்ட ஓர் இளவரசன், தன் தகப்பனின் சிங்காசனத்தைப் பறித்துக்கொள்ள திட்டமிடுகிறான். பொறுமையற்ற ஓர் அரசன், கடவுளுடைய தீர்க்கதரிசியின் திட்டவட்டமான கட்டளைகளைப் புறக்கணிக்கிறான். இந்த மூன்று இஸ்ரவேலரின் வாழ்க்கையையும் ஆட்கொண்ட ஒரே குணம்: அகந்தை.

2 இதயத்தில் வேர்விட்டு வளரும் அகந்தை என்னும் குணம் எவரிடமிருந்தாலும் ஆபத்துதான். (சங்கீதம் 19:13) அகந்தையுள்ள ஒருவன், ஒன்றை செய்ய தனக்கு அதிகாரம் இல்லாவிட்டாலும் வரம்பு மீறத் துணிவான். இதனால் பெரும்பாலும் கேடுதான் விளையும். அகந்தை கொண்ட அரசர்கள் ஆட்சியை கோட்டை விட்டுள்ளனர்; அதனால் பேரரசுகளே கவிழ்ந்துள்ளன. (எரேமியா 50:29, 31, 32; தானியேல் 5:20) யெகோவாவின் ஊழியர்கள் சிலரும்கூட அகந்தை என்ற கண்ணியில் சிக்கி, வெளிவர முடியாமல் அமிழ்ந்துள்ளனர்.

3. அகந்தையால் வரும் ஆபத்தைப் பற்றி நாம் எவ்வாறு கற்றறியலாம்?

3 பைபிள் அர்த்தத்தோடுதான் இப்படிச் சொல்கிறது: “அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.” (நீதிமொழிகள் 11:2) பைபிளில் காணப்படும் அநேக உதாரணங்கள் இந்த நீதிமொழியின் உண்மையை உறுதிப்படுத்துகின்றன. இவற்றில் சிலவற்றை ஆராய்ந்து பார்க்கையில், நியாயமான வரம்புகளை மீறிச் செல்வதால் வரும் ஆபத்தை நாம் காணலாம். ஆகையால், தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட மூன்று மனிதரும், பொறாமை, பேராசை, பொறுமையின்மை ஆகிய கெட்ட குணங்களால் வரம்பை மீறி அவமானம் அடைந்த விதத்தை இப்பொழுது ஆராய்வோம்.

கோராகு—பொறாமை நிறைந்த கலகக்காரன்

4. (அ) கோராகு யார், எந்த சரித்திரப்பூர்வ சம்பவத்தில் அவனும் உட்பட்டிருக்க வேண்டும்? (ஆ) அவனது வாழ்நாளின் பிற்பகுதியில் என்ன மோசமான செயலை தூண்டிவிட்டான்?

4 கோராகு லேவி கோத்திரத்தைச் சேர்ந்த கோகாத்திய வம்சத்தான்; மோசேக்கும் ஆரோனுக்கும் நெருங்கிய உறவினன். அவன், பல பத்தாண்டுகளாக யெகோவாவை உத்தமத்தோடு சேவித்து வந்தான். செங்கடலைக் கடந்து அற்புதமாய் விடுவிக்கப்பட்டோரில் அவனும் ஒருவன். மேலும், சீனாய் மலையடிவாரத்தில், கன்றுக்குட்டியை வணங்கிய இஸ்ரவேலருக்கு எதிராக யெகோவாவின் தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதில் அவனும் பங்குகொண்டிருக்கலாம். (யாத்திராகமம் 32:26) எனினும், முடிவில், மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக எழும்பின கூட்டத்தாருக்கு அவனே தலைவனானான். இக்கூட்டத்தில் ரூபன் வம்சத்தானாகிய தாத்தானும் அபிராமும் ஓனும், அவர்களோடுகூட இஸ்ரவேலர் சபையில் அதிபதிகளாயிருந்த 250 பேரும் இருந்தனர். a அவர்கள் மோசேயையும் ஆரோனையும் நோக்கி இவ்வாறு சொன்னார்கள்: “நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்”?—எண்ணாகமம் 16:1-3.

5, 6. (அ) மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக கோராகு ஏன் கலகம் செய்தான்? (ஆ) கடவுளுடைய ஏற்பாட்டில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கோராகு கௌரவமிக்கதாக உணரவில்லை என்று ஏன் சொல்லலாம்?

5 பல ஆண்டுகள் உண்மையுள்ளவனாக இருந்த கோராகு ஏன் கலகம் செய்தான்? நிச்சயமாகவே, இஸ்ரவேலரை மோசே கொடுமைப்படுத்தியிருக்க மாட்டார். ஏனெனில், “மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.” (எண்ணாகமம் 12:3) என்றபோதிலும், மோசே, ஆரோன் ஆகியோர்மீது கோராகுக்குப் பொறாமை. அவர்கள் முன்னின்று நடத்துவது பிடிக்கவில்லை. ஆகவே அவர்கள் தங்கள் இஷ்டப்படி தன்னலமாய் தங்களை சபைக்கு மேலாக உயர்த்திக்கொண்டார்கள் என்று தவறாக பேசினான்.—சங்கீதம் 106:16.

6 கடவுளுடைய ஏற்பாட்டில் தனக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருந்த சிலாக்கியங்களை கோராகு மதிக்காததே ஒரு பிரச்சினை என தெரிகிறது. ஏனெனில் கோகாத்திய லேவியர்கள் ஆசாரியர்களாக இல்லாதபோதும், கடவுளுடைய நியாயப்பிரமாணத்தைப் போதித்தனர். அதுமட்டுமின்றி, இடம் மாறிச் செல்கையில் ஆசரிப்புக்கூடாரத்தின் தட்டுமுட்டு சாமான்களைச் சுமந்து செல்பவர்களும் அவர்கள்தான்! அது ஒன்றும் அற்ப வேலையல்ல, ஏனெனில் அந்தப் பரிசுத்த தட்டுமுட்டு சாமான்களை மத ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் சுத்தமாக இருந்தவர்கள் மாத்திரமே கையாளலாம். (ஏசாயா 52:11) ஆகையால், மோசே கோராகுவிடம் நேருக்குநேர் கேட்டார்: நீங்கள் ஆசாரியத்துவத்தையும் பறித்துக்கொள்வதற்காக உங்களுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பை அவ்வளவு அற்பமாக எண்ணுகிறீர்களோ? (எண்ணாகமம் 16:9, 10) பிரத்தியேக பட்டம் அல்லது பதவியைப் பெறுவது அல்ல, ஆனால் யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டை மதித்து அவரை உண்மையுடன் சேவிப்பதே கௌரவமிக்க வேலை என்பதை கோராகு உணரவில்லை.—சங்கீதம் 84:10.

7. (அ) கோராகுவுக்கும் அவனைச் சேர்ந்த கும்பலுக்கும் எதிராக மோசே எவ்வாறு சவால் விட்டார்? (ஆ) கோராகுவின் கலகத்தால் அழிவு ஏற்பட்டது எவ்வாறு?

7 கோராகுவும் அவனைச் சேர்ந்த மனிதரும், அடுத்த நாள் காலையில் ஆசரிப்புக் கூடாரத்தில் தூப கலசங்களையும் தூபவர்க்கத்தையும் எடுத்து வரும்படி மோசே அழைத்தார். கோராகுவும் அவனுடைய மனிதரும் ஆசாரியரல்லாததால், தூபவர்க்கமிட அவர்களுக்கு அதிகாரம் இல்லை. ஆகவே அவர்கள் தூப கலசங்களையும் தூபவர்க்கத்தையும் எடுத்து வந்தால், ஆசாரியர்களாக சேவை செய்ய உரிமை இருந்ததென இன்னும் நினைப்பதாகவே அர்த்தம். நன்கு யோசித்து முடிவெடுக்க இராத்திரி முழுவதும் அவகாசம் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் அவர்கள் மனந்திரும்பவில்லை. அடுத்த நாள் காலையில் அவர்கள் வந்தார்களோ இல்லையோ, யெகோவாவுக்கு நியாயமாகவே கோபம் வந்தது. ரூபன் கோத்திரத்தாரைக் குறித்ததில், “பூமி தன் வாயைத் திறந்து . . . விழுங்கிப்போட்டது.” கோராகு உட்பட மீதிபேர் யாவரும், கடவுளிடமிருந்து வந்த அக்கினியால் பட்சிக்கப்பட்டார்கள். (உபாகமம் 11:6; எண்ணாகமம் 16:16-35; 26:10) கோராகு அகந்தையுடன் நடந்துகொண்டதால், முடிவில் கடவுளே நிராகரிக்கும் அளவுக்கு அவமானப்பட்டுப் போனான்.

‘பொறாமை மனப்பான்மைக்கு’ இடமளிக்காதீர்கள்

8. கிறிஸ்தவர்களுக்குள் ‘பொறாமை மனப்பான்மை’ எவ்வாறு தலை காட்டலாம்?

8 கோராகுவைப் பற்றிய விவரம் நம்மை எச்சரிக்கிறது. ‘பொறாமை மனப்பான்மை’ அபூரண மனிதனின் ஒரு குணமாக இருப்பதால், கிறிஸ்தவ சபையிலும்கூட அது தலைகாட்டலாம். (யாக்கோபு 4:5, NW) உதாரணமாக, நமக்கு பதவி ஆசை ஏற்படலாம். கோராகுவைப்போல், நாம் விரும்பும் சிலாக்கியங்கள் வேறு ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அதைக் குறித்து பொறாமைப்படலாம். அல்லது முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தியோத்திரேப்பு என்ற கிறிஸ்தவனைப்போல் மாறிவிடலாம். அவன் அப்போஸ்தல அதிகாரத்தைக் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருந்தான். ஏனெனில் தான் பொறுப்பேற்றால் நன்றாக இருக்கும் என அவன் நினைத்திருக்கலாம். “முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு” என்று யோவானே எழுதினார்.—3 யோவான் 9.

9. (அ) சபை சம்பந்தப்பட்ட பொறுப்புகளை குறித்ததில் என்ன மனப்பான்மையை நாம் தவிர்க்க வேண்டும்? (ஆ) கடவுளின் ஏற்பாட்டில் நம்முடைய மதிப்பை பற்றிய சரியான நோக்குநிலை என்ன?

9 சபை சம்பந்தப்பட்ட பொறுப்புகளுக்காக ஒரு கிறிஸ்தவன் முயற்சி செய்வதில் எந்தத் தவறும் இல்லைதான். பொறுப்பேற்க நாடும்படி பவுலே ஊக்குவித்தார். (1 தீமோத்தேயு 3:1) எனினும், ஊழிய சிலாக்கியங்களை முன்னேற்ற ஏணியின் உச்சியில் ஏறிவிட்டதற்கான அடையாள சின்னங்களாக நாம் ஒருபோதும் கருதக்கூடாது. இயேசு இவ்வாறு சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்: “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.” (மத்தேயு 20:26, 27) ஆகவே, கடவுளது அமைப்பில் “உயர் ஸ்தானத்தில்” இருப்பதை பொறுத்தே கடவுள் பார்வையில் மதிப்பு கூடும் என நினைத்துக்கொண்டு, அப்படிப்பட்ட ஸ்தானத்தில் இருப்பவர்களைக் கண்டு பொறாமைப்படுவது தவறு. “நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 23:8) இதன் அர்த்தமென்ன? பிரஸ்தாபிகளோ பயனியர்களோ புதிதாக முழுக்காட்டப்பட்டவர்களோ நெடுங்காலமாய் சத்தியத்தில் உள்ளவர்களோ யாராக இருந்தாலும், முழு ஆத்துமாவுடன் யெகோவாவை சேவிக்கும் எல்லாருக்கும் அவருடைய ஏற்பாட்டில் மதிப்புண்டு. (லூக்கா 10:27; 12:6, 7; கலாத்தியர் 3:28; எபிரெயர் 6:10) “நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் . . . மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்” என்ற பைபிளின் அறிவுரையைப் பொருத்துவதற்கு கடும் முயற்சி செய்கிற லட்சக்கணக்கானோரோடு தோளுக்குத்தோள் நின்று வேலை செய்வது உண்மையாகவே ஆசீர்வாதம்தான்.—1 பேதுரு 5:5.

அப்சலோம் —பதவி வெறிகொண்ட பச்சோந்தி

10. அப்சலோம் யார், ராஜாவிடம் நியாயம் கேட்டு வந்தவர்களின் தயவைப் பெற அவன் எவ்வாறு முயற்சி செய்தான்?

10 தாவீது ராஜாவின் மூன்றாவது மகன் அப்சலோமின் வாழ்க்கைப் போக்கு, பேராசை பெருநஷ்டம் என்ற பாடத்தை கற்றுக்கொள்ளச் செய்கிறது. இந்தச் சதிகார பச்சோந்தி, ராஜாவிடம் நியாயவிசாரணைக்கு வருவோரின் தயவைப் பெற முயற்சி செய்தான். முதலாவதாக, தாவீது அவர்களை கண்டுகொள்வதே இல்லை என மறைமுகமாக குற்றஞ்சாட்டினான். பின்பு, மறைவாக பேசுவதை விட்டு, இவ்வாறு வெளிப்படையாகவே விஷயத்திற்கு வந்தான்: “என்னைத் தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும்; வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்தால் நான் அவர்களுக்கு நியாயங்கிடைக்கச் செய்வேன்” என்று கூறிவந்தான். அப்சலோமின் சதிவேலைக்கு அளவே இல்லாதிருந்தது. பைபிள் இவ்வாறு சொல்கிறது: “எவனாகிலும் அவனைக்கிட்டி வணங்க வரும்போது அவனைத் தழுவி முத்தஞ்செய்வான். இவ்விதமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம்” செய்தான். இதன் விளைவு? அப்சலோம் “இஸ்ரவேலரின் இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்.”—2 சாமுவேல் 15:1-6, தி.மொ.

11. தாவீதின் சிங்காசனத்தைப் பறித்துக்கொள்ள அப்சலோம் எவ்வாறு முயற்சி செய்தான்?

11 அப்சலோம் தன் தகப்பனின் அரச பதவியை பறித்துக்கொள்ள தீர்மானித்திருந்தான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அவன் தாவீதின் மூத்த மகன் அம்னோனை வேலைக்காரரை வைத்துக் கொன்றான். தன் சகோதரி தாமாரைக் கற்பழித்ததற்குப் பழிவாங்கும் எண்ணத்தில் அவ்வாறு செய்தான். (2 சாமுவேல் 13:28, 29) எனினும், அப்போதேயும் அவன் சிங்காசனத்தின்மீது ஒரு கண் வைத்து, அம்னோனை அதற்குப் போட்டியாகக் கருதி, அவனை ஒழிப்பதற்கு அதுவே வசதியான சமயம் என்றும் நினைத்திருக்கலாம். b எப்படியிருந்தபோதிலும், அதற்கான நேரம் வந்தபோது அப்சலோம் செயல்பட்டான். தானே அரசன் என தேசமெங்கும் பறைசாற்றும்படி செய்தான்.—2 சாமுவேல் 15:10.

12. அப்சலோமின் அகந்தை எவ்வாறு அவமானத்திற்கு வழிநடத்தினது என்பதை விளக்குங்கள்.

12 சிறிது காலம் அப்சலோமுக்கு வெற்றி கிடைத்தது, ஏனெனில், “கட்டுப்பாடு [“சதித்திட்டம்,” NW] பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள்.” காலப்போக்கில், அரசனாகிய தாவீது, தலைதப்பினால் போதும் என்று நினைத்து அங்கிருந்து ஓடிப்போகும் நிலை ஏற்பட்டது. (2 சாமுவேல் 15:12-17) எனினும், சீக்கிரத்தில் அப்சலோம் யோவாபால் கொல்லப்பட்டு, அவனுடைய பிரேதம் ஒரு குழியில் போடப்பட்டு கற்களால் மூடப்பட்டபோது, அவன் ஆட்டமெல்லாம் அடங்கியது. தான் அரசனாகியே தீர வேண்டும் என்று வெறித்தனமாக திரிந்துவந்த பேராசைமிக்க இந்த மனிதனின் பிரேதம் நல்லடக்கம்கூட செய்யப்படவில்லை! c அப்சலோமின் அகந்தைக்குப் பின் வந்தது அவமானமே.—2 சாமுவேல் 18:9-17.

தன்னல பதவி ஆசை வேண்டவே வேண்டாம்

13. பதவி ஆசை ஒரு கிறிஸ்தவனின் இருதயத்தில் எவ்வாறு வேர்கொள்ளலாம்?

13 அப்சலோம் ஆட்சியைக் கைப்பற்றினதும், அதையடுத்து வீழ்ச்சியடைந்ததும் நமக்கு ஒரு பாடமாக உள்ளது. இரக்கமற்ற இன்றைய உலகத்தில், ஜனங்கள் வெறுமனே தங்கள்பேரில் ஒரு நல்ல எண்ணத்தை உண்டாக்கிக்கொள்வதற்கு, அல்லது ஒருவேளை ஏதோ வகையான நல்வாய்ப்பையோ பதவி உயர்வையோ பெறுவதற்கு, தங்கள்மீது அதிகாரம் வகிப்போரை முகஸ்துதி செய்வது சகஜமாக உள்ளது. அதேசமயத்தில் தங்களுக்குக் கீழுள்ள பணியாளர்களின் மதிப்பையும் ஆதரவையும் பெறுவதற்கு பெருமையடித்துக் கொள்கிறார்கள். நாம் கவனமாக இராவிட்டால், அத்தகைய பதவி ஆசை நம்முடைய இருதயத்திலும் வேர்கொள்ளலாம். முதல் நூற்றாண்டிலிருந்த சிலருக்கு இது சம்பவித்தது; அத்தகையோருக்கு எதிராக அப்போஸ்தலர்கள் கண்டிப்பான எச்சரிக்கைகள் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.—கலாத்தியர் 4:17; 3 யோவான் 9, 10.

14. பதவி ஆசையுடன் தன்னைப் பற்றியே பெருமையடித்துக்கொள்ளும் மனப்பான்மையை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?

14 ‘தற்புகழை நாடி’ தங்களைத் தாங்களே உயர்வாகப் பேசி பெருமையடித்துக் கொள்ளும் வஞ்சகருக்கு யெகோவாவின் அமைப்பில் இடமில்லை. (நீதிமொழிகள் 25:27) சொல்லப்போனால், “இச்சக உதட்டையும் பெருமை பேசும் நாவையும் யெகோவா அழித்துவிடுவார்” என பைபிள் எச்சரிக்கிறது. (சங்கீதம் 12:3, தி.மொ.) அப்சலோமின் உதடுகள் இச்சகம் பேசின. எவருடைய தயவு தனக்குத் தேவைப்பட்டதோ அவர்களிடம் முகஸ்துதியாக பேசினான். இவையெல்லாம் தான் பெற நினைத்த பதவியைப் பெறுவதற்கே. அதற்கு மாறாக, பவுலின் இந்த அறிவுரையைப் பின்பற்றும் ஒரு சகோதரத்துவத்தின் மத்தியில் நாம் இருப்பதில் எவ்வளவாய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்: “ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.”பிலிப்பியர் 2:3.

சவுல்—பொறுமையற்ற ஓர் அரசன்

15. ஒரு காலத்தில் சவுல் எவ்வாறு மனத்தாழ்மையைக் காட்டினார்?

15 இஸ்ரவேலின் அரசனான சவுல், ஒரு காலத்தில் மனத்தாழ்மையுள்ளவராக இருந்தார். உதாரணமாக, அவர் இளைஞனாய் இருந்தபோது என்ன நடந்தது என்பதை கவனியுங்கள். கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய சாமுவேல் அவரைப் பற்றி உயர்வாக பேசினபோது, சவுல் மனத்தாழ்மையுடன் இவ்வாறு பதிலளித்தார்: “நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன்.”1 சாமுவேல் 9:21.

16. எவ்வகையில் சவுல் பொறுமையற்ற மனப்பான்மையைக் காட்டினார்?

16 எனினும், பின்னால் சவுலின் மனத்தாழ்மை மாயமாய் மறைந்தது. பெலிஸ்தருடன் போரிடுகையில் அவர் கில்காலுக்குப் பின்வாங்கிச் சென்றார். அங்கே பலிகளைச் செலுத்தி கடவுளிடம் வேண்டுதல் செய்ய சாமுவேல் வருவதற்காக காத்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. சொன்ன நேரத்தில் சாமுவேல் வராதபோது, சவுல் துணிச்சலுடன் தகனபலியை தானே செலுத்தினார். அவர் பலிசெலுத்தி முடிக்கும்போது சாமுவேல் வந்து சேர்ந்தார். “நீர் செய்தது என்ன”? என்று சாமுவேல் கேட்டார். பதிலாக சவுல் இவ்வாறு சொன்னார்: “ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும் குறித்த நாட்களின் திட்டத்திலே நீர் வராததையும், . . . நான் கண்டபடியினாலே, . . . துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன்.”—1 சாமுவேல் 13:8-12.

17. (அ) மேலோட்டமாக பார்த்தால் ஏன் சவுலின் நடவடிக்கைகள் நியாயமானவையாக தோன்றலாம்? (ஆ) சவுல் அவசரப்பட்டு செய்த செயலுக்காக யெகோவா ஏன் அவரைக் கண்டனம் செய்தார்?

17 மேலோட்டமாக பார்த்தால் சவுலின் செய்கைகள் நியாயமானவையாக தோன்றலாம். ஏனென்றால், கடவுளுடைய ஜனங்கள் ‘இக்கட்டில்’ மாட்டிக்கொண்டு, ‘நெருக்கத்தில்’ பயந்துகொண்டு இருந்தார்களே. (1 சாமுவேல் 13:6, 7) தேவைப்படும் சமயத்தில் முன்வந்து நடவடிக்கை எடுப்பது நிச்சயமாகவே தவறல்ல. d எனினும், ஒருவரது இருதயத்திலுள்ள எண்ணங்களையும் உத்தேசங்களையும் யெகோவாவால் அறிய முடியும் என்பதை நினைவில் வையுங்கள். (1 சாமுவேல் 16:7) ஆகையால், சவுலைப் பற்றியும் யெகோவாவுக்கு நன்றாக தெரிந்திருக்கும்; ஆனால் எல்லா விஷயங்களும் பைபிளில் நேரடியாக குறிப்பிடப்பட்டிருக்காது. உதாரணமாக, சவுலின் அவசரத்துக்குப் பின்னால் அகந்தை என்ற குணம் பதுங்கி இருந்திருக்கலாம். இது நிச்சயமாக யெகோவாவுக்குத் தெரிந்திருக்கும். தானோ இஸ்ரவேல் முழுவதற்கும் அரசன்; அப்படியிருக்கையில், சும்மா காலம் கடத்திக்கொண்டிருந்த ஒரு கிழ தீர்க்கதரிசியாக தன் கண்ணுக்கு தோன்றிய சாமுவேலுக்காக காத்திருக்காவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என்பதாக சவுல் தன் உள்ளத்தில் நினைத்து எரிச்சலடைந்திருக்கலாம். எவ்வாறாயினும், சாமுவேல் தாமதித்ததால் தனக்கு அதைச் செய்ய உரிமையுண்டு என சவுல் உணர்ந்தார்; தனக்குக் கொடுக்கப்பட்ட தெளிவான கட்டளைகளை மீறுவதில் தவறில்லை என்றும் நினைத்தார். இதன் விளைவு? சவுல் துணிந்து பலி செலுத்தியதற்காக சாமுவேல் அவரைப் போற்றவில்லை. அதற்கு மாறாக, சவுலை கடிந்துகொண்டு இவ்வாறு சொன்னார்: “உமது கடவுளாகிய யெகோவா உமக்கு விதித்தக் கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர் . . . உமது அரசாட்சி நிலைநிற்காது.” (1 சாமுவேல் 13:13, 14, தி.மொ.) இவரது விஷயத்திலும், அகந்தைக்குப் பின் அவமானமே வந்தது.

அவசரப்படாதீர்கள்

18, 19. (அ) கடவுளுடைய தற்கால ஊழியருக்கு கொஞ்சங்கூட பொறுமை இல்லாமல் அவசரப்படும் குணம் இருந்தால், அவர் எவ்வாறு அகந்தையுடன் செயல்பட நேரிடலாம்? (ஆ) கிறிஸ்தவ சபை செயல்படுவதைப் பற்றியதில் எதை நாம் நினைவில் வைக்க வேண்டும்?

18 சவுலின் அகந்தையான செயலைப் பற்றிய விவரம், நம்முடைய நன்மைக்காகவே கடவுளுடைய வார்த்தையில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. (1 கொரிந்தியர் 10:11) நம் சகோதரரின் அபூரணங்களின்பேரில் நாமும் சீக்கிரத்தில் எரிச்சலடைந்துவிடலாம்; சவுலைப் போலவே, நாமும் அவசரப்பட்டு விடலாம்; அதன் காரணமாக, இப்படித்தான் இந்த விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று நாம் விரும்பும் முறையில் செய்யத் துணியலாம். உதாரணமாக, ஒரு சகோதரன் அமைப்பு சம்பந்தப்பட்ட வேலைகளில் திறமையானவர் என்று வைத்துக்கொள்வோம். அவர் காலந்தவறாதவராக இருக்கலாம், சபை நடவடிக்கைகள் அனைத்தையும் நன்கு தெரிந்தவராக இருக்கலாம், பேசுவதிலும் போதிப்பதிலும் வரம்பெற்றவராக இருக்கலாம். அதேசமயத்தில், மற்றவர்களும் தன்னைப் போலவே சாமர்த்தியமாய் எல்லா வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்; அவர்களோ அவ்வாறு இல்லாதிருக்கலாம். அதற்காக அவர் பொறுமையிழந்து படபடப்பாக நடந்துகொள்ளலாமா? சபை சுமுகமாக செயல்படுவதற்கு தான்தான் காரணம் என்றும், தான் இல்லாவிட்டால் அந்த சபையே சரியாக செயல்பட முடியாது என்றும் நினைத்துக்கொண்டு, மற்றவர்கள் எது செய்தாலும் குறை சொல்லிக்கொண்டே இருக்கலாமா? அப்படிச் செய்வதுதான் அகந்தையான போக்கு!

19 பார்க்கப்போனால், ஒரு கிறிஸ்தவ சபையின் ஒற்றுமைக்கு அடிகோலுவது எது? நிர்வகிக்கும் முறையா? திறமையா? அல்லது ஏராளமான அறிவா? ஒரு சபையை சுமுகமாக நடத்திச்செல்ல இவை அதிக பிரயோஜனம் என்பது உண்மைதான். (1 கொரிந்தியர் 14:40; பிலிப்பியர் 3:16; 2 பேதுரு 3:18) எனினும், தம்மை பின்பற்றுவோர் முக்கியமாக அன்பால் அடையாளம் கண்டுகொள்ளப்படுவார்கள் என்று இயேசு சொன்னார். (யோவான் 13:35) ஆகவேதான், அக்கறைமிக்க மூப்பர்கள் சபையை கறாராக நிர்வகிக்க வேண்டிய கம்பெனியைப் போல் பார்ப்பதில்லை. மாறாக கனிவும் பரிவும் தேவைப்படும் மந்தையாக பார்க்கின்றனர். அதேசமயம் ஒழுங்கையும் காக்கின்றனர். (ஏசாயா 32:1, 2; 40:11) அவ்வாறின்றி, எது வந்தாலும் சரி எனத் துணிந்து எதையும் செய்துவந்தால் சபையில் அடிக்கடி பிரச்சினை வரும். மாறாக கடவுளுடைய பார்வையில் ஒழுங்கை கடைப்பிடித்தால் சபையில் சமாதானம் தவழும்.—1 கொரிந்தியர் 14:33; கலாத்தியர் 6:16.

20. பின்வரும் கட்டுரையில் எது சிந்திக்கப்படும்?

20 நீதிமொழிகள் 11:2-ல் கூறப்பட்டபடி, அகந்தைக்குப் பின் அவமானம் வருவது உறுதி என்பதை கோராகு, அப்சலோம், சவுல் ஆகியோரின் உதாரணங்கள் தெளிவாக காட்டுகின்றன. எனினும் அதே பைபிள் வசனம் மேலும் இவ்வாறு சொல்கிறது: “தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் [மனத்தாழ்மை உள்ளவர்களிடத்தில்] ஞானம் உண்டு.” மனத்தாழ்மை என்பது என்ன? பைபிளிலுள்ள எந்த முன்மாதிரிகள் இந்தப் பண்பைப் பற்றி புரிந்துகொள்ள உதவும்? இன்று நாம் எவ்வாறு மனத்தாழ்மையைக் காட்டலாம்? இந்தக் கேள்விகள் அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.

[அடிக்குறிப்புகள்]

a யாக்கோபின் முதற்பேறானவன் ரூபன்; ஆகவே, கலகம் செய்யும்படி கோராகுவால் தூண்டப்பட்ட அவனுடைய சந்ததியார், லேவியின் சந்ததியில் பிறந்த மோசே தங்கள்மீது அதிகாரம் செலுத்துவது பிடிக்காமல்கூட கோபமடைந்திருக்கலாம்.

b தாவீதின் இரண்டாவது மகன் சிலியாப்பின் பிறப்பு பற்றி குறிப்பிடப்படுகிறது; அதற்குப் பிறகு அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அப்சலோமின் இந்த எழுச்சிக்கு முன்பே அவன் இறந்திருக்கலாம்.

c பைபிள் காலங்களில், மரித்த ஒருவனின் உடலை நல்லடக்கம் செய்வது மிக முக்கியமான செயலாக இருந்தது. ஆகையால், புதைக்காமல் விட்டுவிடுவது பேரவமானம். அது, கடவுளுடைய தயவை இழந்ததையும் சுட்டிக்காட்டியது.—எரேமியா 25:32, 33.

d உதாரணமாக, ஆயிரக்கணக்கான இஸ்ரவேலரை கொன்ற வாதையை நிறுத்துவதற்கு பினேகாஸ் விரைவாய் நடவடிக்கை எடுத்தார்; மேலும் தாவீது, கடும் பசியில் இருந்த தன் ஆட்களை, “தேவனுடைய வீட்டில்” வைக்கப்பட்ட சமுகத்தப்பங்களைச் சாப்பிடுவதில் தன்னோடு சேர்ந்துகொள்ளும்படி ஊக்குவித்தார். இதில் எதுவும் அகந்தையாக கடவுளால் கண்டனம் செய்யப்படவில்லை.—மத்தேயு 12:2-4; எண்ணாகமம் 25:7-9; 1 சாமுவேல் 21:1-6.

நினைவிருக்கிறதா?

• அகந்தை என்பது என்ன?

• கோராகுவுக்கு பொறாமை குணம் இருந்ததால், எவ்வாறு அகந்தையுடன் நடந்துகொண்டார்?

• பதவி ஆசைகொண்ட அப்சலோமிடமிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம்?

• சவுலின் பொறுமையற்ற அவசர குணத்தை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?

[கேள்விகள்]

[பக்கம் 10-ன் படம்]

சவுல் பொறுமை இழந்து அகந்தையுடன் செயல்பட்டார்