ஆயுதங்களை உருவாக்குவதிலிருந்து ஆயுளைக் காக்க
வாழ்க்கை சரிதை
ஆயுதங்களை உருவாக்குவதிலிருந்து ஆயுளைக் காக்க
ஈஸீடாரஸ் ஈஸ்மைலீடிஸ் சொன்னது
“கடவுளே, ஆயுதங்கள் செய்யறது என் மனசை உறுத்துது. வேற வேலை தேடி அலையா அலையறேன். ஆனா இதுவரைக்கும் ஒன்னுமே கெடச்சபாடில்ல. நாளைக்கு நான் ராஜினாமா பண்ணப்போறேன். யெகோவா தேவனே, எங்க பிள்ளங்க நாலும் பட்டினி கெடக்காம காப்பாத்தும் பிதாவே” என மன்றாடினேன். முழங்கால்படியிட்டு இப்படி ஜெபிக்கும்போதே, கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. நான் எப்படி இந்த நிலைக்கு வந்தேன்?
வருடம் 1932. வட கிரீஸின் டிராமா மாகாணத்தில் பிறந்தேன். வாழ்க்கை எளிமையாகவும் அமைதியாகவும் இருந்தது. நான் பெரியவனானால் என்ன செய்ய வேண்டும் என்பதை அப்பா அடிக்கடி என்னிடம் பேசுவார். அமெரிக்கா போய் படிக்கும்படி என்னை உற்சாகப்படுத்துவார். இரண்டாம் உலகப் போரின்போது, கிரீஸ் சூறையாடப்பட்டது. அதன்பின், கிரேக்கர்கள் மத்தியில் பிரபலமாக நிலவிய கருத்து இதுவே: “எங்களுடைய சொத்து சுகங்களை வேண்டுமானால் நீங்கள் அபகரிக்கலாம், ஆனால் எங்கள் மனங்களில் என்ன இருக்கிறதோ அதைமாத்திரம் உங்களால் சூறையாடவே முடியாது” என்பதே. இந்த கருத்திற்கிசைய, யாராலும் பறிக்க முடியாத ஒன்றை, உயர் கல்வியை பெற வேண்டும் என்பதில் குறியாய் இருந்தேன்.
சிறு வயதிலிருந்தே, கிரேக்க ஆர்தடாக்ஸ் சர்ச் ஆதரித்த இளைஞர் அணிகள் பலவற்றில் சேர்ந்தேன். ஆபத்தான மதத்தொகுதிகளை தவிர்க்கும்படி எங்களுக்கு அவர்கள் சொன்னார்கள். அவற்றில் ஒன்று யெகோவாவின் சாட்சிகள். ஏனென்றால், இவர்கள்தான் அந்திக்கிறிஸ்துக்கள் என சொன்னார்கள்.
1953-ல், ஆதென்ஸிலுள்ள தொழில்துறைப் பள்ளியில் பட்டம் பெற்றேன். பின்னர், வேலை செய்துகொண்டே படிக்கலாம் என ஜெர்மனிக்கு சென்றேன். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, மற்ற நாடுகளுக்கு பயணம் செய்தேன். சில வாரங்களுக்குப் பின், பெல்ஜியத்திலுள்ள ஒரு துறைமுகத்தில் கையில் தம்பிடி காசு இல்லாமல் நிர்க்கதியாய் நின்றேன். நேரே ஒரு சர்ச்சுக்கு சென்று, அங்கு உட்கார்ந்து தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்துவிட்டேன். அது இன்னும் என் நினைவில் பசுமையாய் இருக்கிறது.
அமெரிக்காவுக்குப் போவதற்கு கடவுள் உதவினால், பணம் சம்பாதிப்பதிலேயே குறியாய் இல்லாமல், படித்துவிட்டு, ஒரு நல்ல கிறிஸ்தவனாகவும் நல்ல குடிமகனாகவும் வாழ்வேன் என வேண்டுதல் செய்தேன். முடிவில் 1957-ல், அமெரிக்கா சென்றேன்.அமெரிக்காவில் வாழ்க்கை
அமெரிக்காவில் வாழ்க்கை அப்படி ஒன்றும் சொகுசாக இல்லை. அதுவும் என்னைப் போன்ற பரதேசியின் நிலையை கேட்கவே வேண்டாம். இது போதாதென்று அந்த ஊர் பாஷையும் எனக்கு தெரியவில்லை. ராத்திரி நேரத்தில் இரண்டு இடங்களில் வேலை பார்த்தேன். பகலில் ஸ்கூலுக்கு சென்றேன். பல கல்லூரிகளுக்கு சென்று பயின்று டிப்ளமோ பெற்றேன். பிறகு, லாஸ் ஏன்ஜலஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, செயல்முறை பெளதிகத்தில் இளங்கலை பட்டம் பெற்றேன். இப்படி எந்த கஷ்டமாக இருந்தாலும்சரி எல்லாவற்றிலும் எதிர்நீச்சல் போட்டு பட்டம் பெற உதவியது சிறுவயதில் அப்பா சொன்ன வார்த்தைகளே.
இந்த சமயத்தில்தான், கிரீஸைச் சேர்ந்த எகாடரீனீ என்ற அழகிய மங்கையை சந்தித்தேன். 1964-ல் திருமணம் செய்துகொண்டோம். மூன்று வருடங்களுக்குப் பின், எங்களுக்கு முதல் குழந்தை பிறந்தது. அது ஆண் குழந்தை. அடுத்த நான்கு வருடங்களுக்குள்ளாக, இன்னும் இரண்டு மகன்களும் மகளும் பிறந்து எங்கள் குடும்பம் பெரிதாகியது. குடும்பத்தையும் காப்பாற்றிக்கொண்டு, அதேசமயம் பல்கலைக்கழகத்தில் படிப்பது பெரிய சவாலாக இருந்தது.
கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள சனீவேல் என்ற இடத்திலுள்ள ஏவுகணைகள் மற்றும் விண்வெளி கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தேன். இந்தக் கம்பெனி, அமெரிக்க விமானப் படையை சேர்ந்தது. ஏஜினா, அப்பொல்லோ திட்டங்கள் உட்பட பல ஆகாய மற்றும் விண்வெளித் திட்டங்களில் நான் வேலை செய்தேன். அப்பொல்லோ 8, அப்பொல்லோ 11 திட்டங்களில் நான் பணியாற்றியதற்காக பதக்கங்களையும் பெற்றேன். அதன்பின், மறுபடியும் என் படிப்பை தொடர்ந்தேன். ராணுவ விண்வெளி திட்டங்கள் பலவற்றில் புதைந்து போனேன். இந்த சமயத்தில், வாழ்க்கையில் நான் எல்லாம் அடைந்துவிட்டதாக நினைத்தேன். அருமையான மனைவி, நான்கு அழகிய பிள்ளைகள், செல்வாக்கான வேலை, வசதியான வீடு. இதைவிட வேறே என்ன வேண்டும் வாழ்க்கையில்!
விடாப்பிடியான நண்பன்
1967-ன் ஆரம்பத்தில், நான் வேலை செய்யும் இடத்தில் ஜிம் என்பவரை சந்தித்தேன். அவர் மிகவும் பணிவானவர், இரக்க குணம் படைத்தவர். அவருடைய முகத்தில் எப்போதுமே புன்னகை தவழும். காபி குடிப்பதற்காக நான் அழைத்தபோதெல்லாம் அவர் மறுத்ததே கிடையாது. இந்த சமயங்களில் எல்லாம் பைபிளை குறித்து என்னிடம் பேசுவார். அவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிப்பதாக என்னிடம் சொன்னார்.
எனக்கு அது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த மதத் தொகுதியோடு தொடர்பு வைத்திருக்கிறாரே என வருந்தினேன். இவ்வளவு அருமையான ஆள், அந்திக்கிறிஸ்துக்களின் வலையில் எப்படி வீழ்ந்தார் என யோசிப்பேன். இருந்தாலும், அவர் தயவாக என்னிடம் நடந்துகொண்டதாலும் என்மேல் உண்மையான அக்கறையை காட்டியதாலும் என்னால் அவருடைய நட்பை அறுத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு நாளும் படிப்பதற்காக எதையாவது என்னிடம் கொடுப்பார். உதாரணமாக, ஒருநாள் அவர் என் ஆபீஸுக்கு வந்து, “ஈஸீடாரஸ், இந்தக் கட்டுரை காவற்கோபுரம் பத்திரிகையில் வந்திருக்கிறது. குடும்ப வாழ்க்கையை பலப்படுத்துவது பற்றி இது கூறுகிறது. இதை வீட்டிற்கு எடுத்துப்போய், உங்கள் மனைவியோடு சேர்ந்து வாசியுங்கள்” என்று சொன்னார். அந்தப் பத்திரிகையை படிக்கிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு, பிறகு டாய்லெட்டுக்கு போய் அந்த பத்திரிகையை சுக்குநூறாக கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டேன்.
மூன்று வருடங்களாக இது தொடர்ந்தது. ஜிம் எது கொடுத்தாலும், அது புத்தகமாக இருந்தாலும்சரி பத்திரிகையாக இருந்தாலும்சரி அதை படிக்க மாட்டேன். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி தவறான எண்ணம் இருந்தாலும், ஜிம்முடைய நட்பை இழக்க நான் விரும்பவில்லை. அதனால், அவர் சொல்வதையெல்லாம் இந்த காதில் கேட்டு அந்த காதில் விட்டுவிடுவேன்.
இருந்தாலும், ஜிம் சொல்லியவற்றிற்கும் நான் நம்பிவந்த விஷயங்களுக்கும் பிரசங்கி 9:10; எசேக்கியேல் 18:4; யோவான் 20:17) இருந்தாலும், ஜிம் சொல்வதெல்லாம் சரி என ஒப்புக்கொள்ள என் தற்பெருமை இடம் கொடுக்கவில்லை. ஜிம் எப்போதும் பைபிளிலிருந்தே பேசினார். சொந்த அபிப்பிராயம் ஏதுமே கொடுக்கவில்லை. எனவே இறுதியாக, பைபிளிலிருந்து மதிப்புமிக்க செய்தியை அவர் சொல்கிறார் என்ற முடிவுக்கு வந்தேன்.
வித்தியாசம் இருப்பதை உணர்ந்தேன். பைபிளில் இல்லாத காரியங்களையே நான் நம்பியும் செய்தும் வருகிறேன் என புரிந்துகொண்டேன். திரித்துவம், எரிநரகம், ஆத்துமா அழியாமை போன்ற போதகங்களை பைபிள் ஆதரிப்பதில்லை என்பதை தெரிந்துகொண்டேன். (என்னில் ஏதோ மாற்றம் இருப்பதை ஊகித்த என் மனைவி, யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிக்கும் என் நண்பனோடு நான் பேசினேனா என கேட்டாள். நான் ஆமாம் என்று சொன்னபோது, அவள் சொன்னாள்: “யெகோவாவின் சாட்சிகளைத் தவிர வேறெந்த சர்ச்சுக்கு வேண்டுமானாலும் நாம் போகலாம்.” இருந்தாலும், வெகு சீக்கிரத்தில், நானும் என் மனைவியும் எங்கள் நான்கு பிள்ளைகளோடு சேர்ந்து யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு தவறாமல் செல்ல ஆரம்பித்தோம்.
கடினமான தீர்மானம்
பைபிளை படிக்கும்போது, ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகள் என்னை வெகுவாக பாதித்தன: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. (ஏசாயா 2:4) இந்த வசனத்தைப் படித்த உடனே, என் மனதில் எழுந்த கேள்வி இதுவே: ‘சமாதானத்தை விரும்பும் கடவுளுடைய ஊழியன், அழிவுக்குரிய ஆயுதங்களை செய்யும் வேலையில் இருக்கலாமா?’ (சங்கீதம் 46:9) உடனே வேலையை மாற்ற வேண்டுமென முடிவு செய்தேன்.
ஆனால், இது என் வாழ்க்கையில் மிகப் பெரிய சவால். ஏனென்றால், நான் கெளரவமான ஒரு வேலையில் இருந்தேன். வாழ்க்கையில் இந்த நிலைக்கு உயர நான் பட்ட பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல. இதற்காக நான் செய்த தியாகங்களும் சொல்லி முடியாதது. இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருக்கையில், அந்த வேலையையே விட வேண்டிய சூழ்நிலையை எதிர்ப்பட்டேன். இருந்தாலும், யெகோவாவுக்கான என் அன்பும் அவருடைய சித்தத்தை செய்ய வேண்டும் என்கிற ஆவலும் கடைசியில் வென்றது.—மத்தேயு 7:21.
வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் ஸியட்டில் என்ற இடத்திலுள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர தீர்மானித்தேன். ஆனால், இந்த வேலையும் ஏசாயா 2:4-க்கு இசைவாக இல்லை என்பதை சீக்கிரத்திலேயே தெரிந்துகொண்டேன். அது எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. பைபிள் நியமங்களுக்கு மாறான வேலையை செய்யக்கூடாது எனும் என் முயற்சி தோல்வி அடைந்தது. மறுபடியும் மனச்சாட்சி என்னை வாட்டி வதைக்க ஆரம்பித்தது. சுத்தமான மனச்சாட்சியோடு இந்த வேலையில் இருக்க முடியாது என்பது தெளிவாகியது.—1 பேதுரு 3:21.
முக்கியமான சில மாற்றங்களை செய்ய வேண்டிய நேரமும் வந்தது. ஆறு மாதங்களுக்குள், எங்கள் வாழ்க்கைப்பாணியை மாற்றிக்கொண்டு, குடும்ப செலவுகளை பாதியாக குறைத்துக்கொண்டோம். சொகுசான வீட்டையும் விற்றுவிட்டு, கொலரடோவிலுள்ள டென்வர் என்ற இடத்தில் சிறிய வீடு ஒன்றை வாங்கினோம். இதற்குள் முக்கியமான, கடைசி மாற்றத்தை செய்யவும் நான் தயாராகி விட்டேன். வேலையை ராஜினாமா செய்வதே அது. என் கருத்தை விளக்கி, ராஜினாமா கடிதத்தை டைப் செய்தேன். அன்று இரவு, பிள்ளைகள் தூங்கிய பிறகு, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட விதமாக நானும் என் மனைவியும் முழங்கால்படியிட்டு யெகோவாவிடம் ஜெபித்தோம்.
ஒரே மாதத்திற்குள், டென்வருக்கு சென்றோம். இரண்டு வாரங்களுக்குப் பின், அதாவது ஜூலை 1975-ல் நானும் என் மனைவியும் முழுக்காட்டுதல் எடுத்தோம். ஆறு மாதம் எந்த வேலையும் கிடைக்கவில்லை. நாங்கள் சேமித்து வைத்த பணமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துகொண்டே வந்தது. ஏழாவது மாதமோ, வீட்டுக்காக மத்தேயு 6:33.
மாதாமாதம் கட்ட வேண்டிய தொகையைவிட குறைவான பணமே கையில் இருந்தது. எந்த வேலை கிடைத்தாலும்சரி என்று மும்முரமாய் தேடினேன். ஆனால், எனக்கு கிடைத்ததோ என்ஜினியரிங் சம்பந்தமான வேலை. இதற்குமுன் கிடைத்த சம்பளத்தில் பாதிதான் கிடைத்தது. இருந்தாலும், நான் யெகோவாவிடம் கேட்டுக்கொண்டிருந்ததற்கு இது பல மடங்கு அதிகம். ஆவிக்குரிய காரியங்களுக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுத்ததற்காக நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன்!—யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தல்
இதற்கிடையே, கடவுளுடைய நியமங்களுக்கு இசைய நான்கு பிள்ளைகளையும் வளர்க்க வேண்டிய கடமையில் நானும் எகாடரீனீயும் மூழ்கினோம். யெகோவாவின் உதவியோடு, பிள்ளைகள் நான்கு பேருமே முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்களாக வளர்ந்தனர். நால்வருமே, மிக முக்கியமான வேலையாகிய ராஜ்ய பிரசங்கிப்பிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். எங்களுடைய மகன்கள் மூவருமே—க்றீஸ்டாஸ், லாகீஸ், க்ரிகோரி—ஊழிய பயிற்சி பள்ளி பட்டம் பெற்றனர். சபைகளை சந்தித்து, ஆவிக்குரிய ரீதியாக சபையாரை பலப்படுத்தும் வித்தியாசமான நியமிப்புகளில் இப்போது சேவை செய்கின்றனர். எங்கள் மகள், ட்யூலா, நியூ யார்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் வாலண்டியராக சேவை செய்கிறாள். யெகோவாவை சேவிப்பதற்காக, மிக அதிக லாபமளிக்கும் தொழிலையும் நிறைய சம்பளம் தரும் வேலையையும் பிள்ளைகள் நால்வருமே தியாகம் செய்திருப்பது உண்மையிலேயே எங்களுக்கு அளவிலா ஆனந்தத்தை தருகிறது.
பிள்ளைகளை கடவுளுடைய வழியில் எப்படி இப்படி வளர்த்தீர்கள், அதன் ரகசியம் என்ன என்று அநேகர் எங்களைக் கேட்டிருக்கின்றனர். சொல்லப்போனால், பிள்ளைகளை வளர்ப்பதற்கென கட்டுத்திட்டமாக எந்தவொரு ஃபார்முலாவும் இல்லை. ஆனால், யெகோவாவுக்கான அன்பையும் அயலானுக்கான அன்பையும் அவர்களுடைய இருதயங்களில் ஊட்டி வளர்க்க கடுமையாய் முயன்றோம். (உபாகமம் 6:6, 7; மத்தேயு 22:37-39) யெகோவாவுக்குப் பிரியமான காரியங்களைச் செய்யாமல், அவரை நேசிக்கிறோமென சொல்ல முடியாது என்பதை பிள்ளைகள் கற்றுக்கொண்டனர்.
வாரத்தில் ஒரு நாள், வழக்கமாக சனிக்கிழமைகளில், ஊழியத்திற்கு நாங்கள் குடும்பமாக சென்றோம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு சாப்பாட்டிற்கு பிறகு, தவறாமல் குடும்ப பைபிள் படிப்பு இருந்தது. அதோடு, ஒவ்வொரு பிள்ளைக்கும் தனித்தனியே பைபிள் படிப்பையும் நடத்தினோம். சிறு பிராயத்தில், ஒரே வாரத்தில் பல தடவை சிறிது சிறிது நேரம் பிள்ளைகளோடு பைபிள் படிப்பு நடத்தினோம். பெரியவர்களானதும், வாரத்தில் ஒரு முறை படிக்க ஆரம்பித்தோம். பிள்ளைகள் தங்கள் இருதயத்தில் இருப்பதை எங்களிடம் சொல்வதற்கும் தங்கள் பிரச்சினைகளை தாராளமாக பேசுவதற்கும் இந்தப் படிப்புகள் பெரிதும் உதவின.
குடும்பமாக பொழுதுபோக்குகளிலும் ஈடுபட்டோம். ஒன்று சேர்ந்து இசைக்கருவிகளை வாசித்தோம். ஒவ்வொரு பிள்ளையும் தனக்கு பிடித்த பாட்டை பாடுவார்கள். வார இறுதிநாட்களில், பலனளிக்கும் கூட்டுறவுக்காக மற்ற குடும்பங்களையும் அழைத்தோம். குடும்பமாக சில இடங்களுக்கு சுற்றுலா சென்றோம். இவ்விதமான சுற்றுலாப் பயணங்கள் ஒன்றில், கொலரடோவின் மலைகளில் பயணம் மேற்கொண்டோம். அங்குள்ள சபையாரோடு சேர்ந்து ஊழியத்திலும் கலந்துகொண்டோம். மாவட்ட மாநாடுகளின்போது, பல இலாக்காக்களிலும் பல இடங்களில் ராஜ்யமன்றங்கள் கட்டும் வேலையிலும் பிள்ளைகள் உதவினார்கள். இப்போதும் பிள்ளைகள் அதை நினைத்துப் பார்ப்பதுண்டு. ஒருமுறை, எங்கள் உறவினர்களை
பார்ப்பதற்காக நாங்கள் கிரீஸுக்கு பிள்ளைகளை அழைத்து சென்றபோது, தங்கள் விசுவாசத்திற்காக சிறையில் இருந்த உண்மையுள்ள சாட்சிகள் பலரை அவர்கள் சந்திக்க முடிந்தது. சத்தியத்தில் உறுதியாகவும் தைரியமாகவும் நிலைத்திருக்க திடத்தீர்மானம் எடுக்க அது அவர்களுக்கு உதவியது.இருந்தாலும், சில சமயங்களில், அவர்கள் தவறாக நடந்தனர் அல்லது கெட்ட சகவாசத்தை தேடிக்கொண்டனர். சில விஷயங்களில் பெற்றோராக நாங்கள் மிகவும் கெடுபிடியாக இருந்தது அவர்களுக்கு கஷ்டமாக இருந்திருக்கும். ஆனால், பைபிளில் சொல்லியிருக்கிறபடி, “யெகோவாவுக்கேற்ற சிந்தையிலே” வளர்த்தது எங்கள் எல்லாருடைய விஷயத்திலுமே நன்மை அளித்தது. எங்களை திருத்திக்கொள்ள பெரிதும் உதவியது.—எபேசியர் 6:4, NW; 2 தீமோத்தேயு 3:16, 17.
வாழ்க்கையில் பெருமகிழ்ச்சியான காலம்
எங்கள் பிள்ளைகள் நால்வருமே முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தபின், எகாடரீனீயும் நானும் தனித்து விடப்பட்டோம். ஜீவனைக் காக்கும் இந்த வேலையில் எங்கள் பங்கை எப்படி அதிகரிக்கலாம் என தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தோம். எனவே, 1994-ல், வேலையிலிருந்து சீக்கிரமாகவே ஓய்வு பெற்றேன். நாங்கள் இருவரும் ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பித்தோம். எங்கள் ஊரில் இருந்த கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று மாணவர்களுக்கு சாட்சி கொடுத்தோம். அவர்களில் சிலரோடு பைபிள் படிப்பும் நடத்தினோம். இளம்பிராயத்தில் நானும் அநேக பாடுகளை அனுபவித்ததால் அவர்களுடைய நிலையை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களுக்கு யெகோவாவைப் பற்றி சொல்லிக்கொடுப்பதில் வெற்றியும் கண்டேன். எகிப்து, எத்தியோப்பியா, சிலி, சீனா, பொலிவியா, பிரேஸில், மெக்ஸிகோ, தாய்லாந்து, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து வந்த மாணவர்களோடு பைபிள் படிப்பு நடத்தியது பெரும் சந்தோஷத்தை அளித்தது! தொலைபேசி மூலம் சாட்சி கொடுப்பதிலும் மகிழ்ச்சி கண்டேன். இந்த முறையில் முக்கியமாக, என் தாய்மொழியை பேசும் ஜனங்களோடு பேசினேன்.
ஆனால், நான் பேசும் ஆங்கிலத்தில் கிரேக்க வாடை அதிகமாக இருப்பதாலும், இப்போது வயதாகிவிட்டதாலும் முன்புபோல் நிறைய செய்ய முடிவதில்லை. என்றாலும், இது எனக்கு ஒரு தடையே இல்லை. நான் எப்போதும் ஏசாயாவின் மனநிலையையே காண்பிக்க விரும்புகிறேன். கடவுளுடைய வேலைக்காக, ஏசாயா சொன்னதுபோல் “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என எப்போதும் தயாராக இருக்கிறேன். (ஏசாயா 6:8) யெகோவாவுக்குத் தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்க அநேகருக்கு உதவிய சந்தோஷத்தை அனுபவித்திருக்கிறோம். இதுவே வாழ்க்கையில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்த சமயம்.
ஒரு சமயம், உடன் மானிடரை கொன்று குவிக்கும் ராட்சச வடிவ ஆயுதங்களை செய்வதில்தான் என் வாழ்க்கை சுழன்று கொண்டிருந்தது. மிக சிக்கலான தீர்மானங்களை எடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களை நான் எதிர்ப்பட்டேன். அதை இப்போது யோசிக்கும்போது, மல்கியா 3:10-ம் வசனம்தான் என் நினைவுக்கு வருகிறது: “வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” ஆனால், யெகோவா தம்முடைய தயவினால் எனக்கும் என் குடும்பத்திற்கும் நல்ல வழி காட்டினார். நாங்கள் அவருடைய ஊழியர்களாகும் பெரும் பாக்கியத்தை தந்தார். பரதீஸிய பூமியில் என்றென்றும் வாழலாம் எனும் நற்செய்தியை ஜனங்களுக்கு சொல்லும் பணியில் எங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்க வாய்ப்பை தந்தார். எங்கள் இருதயங்கள் சந்தோஷத்தாலும் திருப்தியாலும் பொங்கி வழியும்படி யெகோவா எங்களுக்கு அருள் செய்திருக்கிறார்!
[பக்கம் 27-ன் பெட்டி/படம்]
லாகீஸ்: வேஷம் போடுபவர்களைக் கண்டாலே என் அப்பாவிற்கு ஆகவே ஆகாது. தானும் அந்தமாதிரி ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவர் கடும் முயற்சி செய்தார். முக்கியமாக, குடும்பத்திற்கு ஒரு நல்ல மாதிரியை வைப்பதில் அப்பா மிகவும் முயன்றார். “யெகோவாவுக்கு உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுப்பது சிறந்ததே. யெகோவாவுக்காக தியாகங்களைச் செய்ய நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் உண்மையிலேயே நீங்கள் கிறிஸ்தவர்கள்” என அப்பா அடிக்கடி சொல்வார். இந்த வார்த்தைகள் என் இருதயத்தில் ஆழப் பதிந்துவிட்டன. அப்பாவுடைய மாதிரியைப் பின்பற்றி யெகோவாவுக்கு தியாகங்களைச் செய்யவும் அந்த வார்த்தைகளே எனக்கு பெரிதும் உதவின.
[பக்கம் 27-ன் பெட்டி/படம்]
க்றீஸ்டாஸ்: என் பெற்றோர், யெகோவாவுக்கு முழுமனதோடு உத்தமத்தைக் காண்பித்தனர். அதேசமயம், பெற்றோராக தங்கள் கடமைகளை மிகவும் முக்கியமாக கருதி, நேர்த்தியாக நிறைவேற்றினார்கள். இதை நான் மிகவும் மதிக்கிறேன். ஊழியமாக இருந்தாலும்சரி சுற்றுலா செல்வதாக இருந்தாலும்சரி எல்லாவற்றையுமே குடும்பமாகத்தான் செய்தோம். அவர்கள் வேறே எந்த காரியத்திற்காகவும் தங்கள் நேரத்தை செலவிட்டிருக்கலாம். ஆனால், தங்கள் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டனர். அதோடு ஊழியத்தையே முதலாவதாக கருதினார்கள். இன்று, யெகோவாவின் சேவையில் முழுமூச்சாய் ஈடுபடுவது எனக்கு மட்டிலா மகிழ்ச்சியை தருகிறது.
[பக்கம் 28-ன் பெட்டி/படம்]
க்ரிகோரி: என் ஊழியத்தை விஸ்தரிக்க பெற்றோர் எப்போதும் என்னை உற்சாகப்படுத்தி வந்தனர். ஆனால், உற்சாகமூட்டும் அவர்கள் வார்த்தைகளைவிட அவர்களுடைய முன்மாதிரிதான் என்னை மிகவும் கவர்ந்தது. யெகோவாவின் சேவையில் அவர்கள் கண்ட ஆனந்தமே அதற்கு அத்தாட்சி. இதுவே, முழுநேர சேவையை ஆரம்பிப்பதைப் பற்றி எனக்கிருந்த அநாவசிய கவலைகள் எல்லாவற்றையும் ஒருபக்கம் மூட்டைகட்டி வைக்க உதவியது. அதோடு, யெகோவாவின் சேவையில் முழுமூச்சாக இறங்கவும் எனக்கு உதவியது. கடவுளுடைய சேவையில் இன்று என்னை ஈடுபடுத்தியிருப்பது எனக்கு மட்டிலா மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்காக நான் என் பெற்றோருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.
[பக்கம் 28-ன் பெட்டி/படம்]
ட்யூலா: யெகோவாவோடு நாம் கொண்டிருக்கும் உறவே உலகிலுள்ள எல்லா சொத்துக்களையும்விட பெரிது என என் பெற்றோர் எப்போதும் சொல்லி வந்தனர். யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுப்பதால் மட்டுமே நாம் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியும் என்பதையும் சொன்னார்கள். உணரமுடியாத ஏதோ ஒரு சக்தியாக அல்ல, உண்மையான ஆளாக யெகோவா தேவனை நாங்கள் காண எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள். ஒவ்வொரு நாளும் படுக்க போகும்முன், குற்ற உணர்வு ஏதுமின்றி சுத்தமான, நிர்மலமான மனச்சாட்சியோடு தூங்குவதில் கிடைக்கும் சுகமே அலாதி; யெகோவாவை மகிழ்விக்க உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தீர்கள் என்பது உங்களுக்கு திருப்தியையும் தரும் என அப்பா அடிக்கடி எங்களிடம் சொல்வார்.
[பக்கம் 25-ன் படம்]
1951-ல், கிரீஸில் ராணுவத்தில் இருந்தபோது
[பக்கம் 25-ன் படம்]
1966-ல், எகாடரீனீயோடு
[பக்கம் 26-ன் படம்]
1996-ல் என் குடும்பம்: (இடமிருந்து வலமாக, பின்வரிசை), க்ரிகோரி, க்றீஸ்டாஸ், ட்யூலா; (முன்வரிசை) லாகீஸ், எகாடரீனீ, நான்