Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏன் அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை?

ஏன் அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை?

ஏன் அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை?

டெலே, ஃபோலா a என்ற தம்பதியினர் உவாட்ச் டவர் சங்கத்தின் நைஜீரியா கிளை அலுவலகத்தில் வேலை செய்து வந்தனர். அவர்கள் சேவை செய்ய ஆரம்பித்த கொஞ்ச காலத்திற்குள் ஃபோலாவின் அம்மா அவர்களை பார்ப்பதற்கு வந்தார்கள். தன்னை உறுத்திக்கொண்டே இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி அவர்களிடம் பேசுவதற்காகவே வெகுதூரத்திலிருந்து வந்திருந்தார்கள். அந்த விஷயத்தை நினைத்து நினைத்து கவலைப்பட்டு இரவில் தூக்கமே வருவதில்லை.

“நீங்க எனக்கு வேண்டிய எல்லாமே செய்றீங்க. அடிக்கடி வந்து பாக்கிறீங்க. அன்பளிப்பு அனுப்பி வைக்கிறீங்க. நீங்க என்மேல் எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்கன்னு எனக்கு நல்லா புரியுது. ஆனா இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தா ஒருபக்கம் கவலையாவும் இருக்குது. ஏன்னா, என்னை நீங்க கவனிச்சுக்கிறது மாதிரி வயசான காலத்தில உங்களை யாரு கவனிச்சுக்குவாங்க? உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி இரண்டு வருஷம் ஆச்சு. உங்களுக்கு இன்னும் பிள்ளைகள் பிறக்கல. பெத்தேல் சேவைக்கு ஒரு முழுக்கு போட்டுட்டு, பிள்ள குட்டிய பெத்துக்க வேண்டியதுதானே?” என அம்மா அவர்களிடம் கேட்டார்கள்.

அம்மாவுடைய வாதம் என்னவென்றால்: டெலேயும் ஃபோலாவும் பெத்தேலில் போதுமான காலம் சேவை செய்து விட்டார்கள். அவர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க வேண்டிய கட்டம் வந்துவிட்டது. அவர்கள் வேலையை எப்படியும் வேறு யாராவது பார்த்துக்கொள்ளப் போகிறார்கள். அதற்காக டெலேயும் ஃபோலாவும் தங்கள் முழுநேர சேவையை விட்டுவிட வேண்டிய அவசியமுமில்லை. முழுநேர ஊழியத்திலேயே வேறு வேலை செய்துகொண்டே, பிள்ளைகளையும் பெற்றுக்கொள்ளட்டும், பெற்றோர் என்ற பாக்கியத்தைப் பெறட்டும்!

தாயின் கவலை

தாயின் கவலை புரிகிறது. குழந்தை வேண்டும் என்ற ஆசை எல்லா கலாச்சாரங்களிலும் ஊறிப்போன ஒன்று. குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதே ஒரு தனி இன்பம்தான்; பிள்ளை பிறந்துவிட்டது, இனி என்ன கவலை என்ற நம்பிக்கையும் பிறக்கிறது. “கர்ப்பத்தின் கனி அவரால் [கடவுளால்] கிடைக்கும் பலன்” என பைபிள்கூட கூறுகிறது. குழந்தை பாக்கியம் உண்மையிலேயே நம் அன்பான படைப்பாளரிடமிருந்து வரும் மதிப்புமிக்க பரிசு என்றே கூறலாம்.—சங்கீதம் 127:4.

பல சமுதாயங்களில், திருமணமான தம்பதிகள் கண்டிப்பாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என மற்றவர்களால் வற்புறுத்தப்படுகிறார்கள். உதாரணமாக, நைஜீரியாவில், ஒரு பெண் சராசரியாக ஆறு குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். பொதுவாக புதுமண தம்பதிகளை வாழ்த்தும்போது, “எண்ணி ஒன்பதே மாதத்தில் உங்கள் வீட்டில் குவா, குவா சத்தம் கேட்க வேண்டும்” என்று சொல்லி வாழ்த்துகிறார்கள். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் தொட்டிலைக்கூட திருமண பரிசாக கொடுக்கிறார்கள். காலண்டரை பார்த்துப் பார்த்து நாளை எண்ணுவதே மாமியார்களின் வேலை. ஒரு வருடத்திற்குள்ளாக பெண்ணுக்கு குழந்தை உண்டாகவில்லை என்றால் அவ்வளவுதான்! ஏன்? எதனால்? என்று தோண்டி துருவ ஆரம்பித்துவிடுகிறார்கள். ஏதாவது பிரச்சனையெனில் தீர்ப்பதற்கும் அவர்கள் முன்வரலாம்.

குடும்ப வம்சத்தை நிலைநாட்டுவதற்காகவே தாய்மார்கள் பலரும் புதுமண தம்பதிகள் குழந்தையை பெற்றுக்கொள்ளும்படி சொல்கிறார்கள். ஃபோலாவின் அம்மா சொன்னதாவது: “உனக்கு பிள்ளை வேண்டாம் என்றால் ஏன் கல்யாணம் செய்து கொண்டாய்? உன்னை ஒருத்தி பெற்றாளே; அதுபோல நீயும் உனக்கென்று பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டாமா?”

இதுபோக, சில நடைமுறையான விஷயங்களும் இருக்கின்றன. பல ஆப்பிரிக்க தேசங்களில் வயதானவர்களை கவனிப்பதற்கென்று அரசாங்க ஸ்தாபனங்கள் அரிதாகவே உள்ளன. ஆகவே, பெற்றோர் தங்களை கவனித்ததற்கு கைமாறாக பிள்ளைகள் தங்கள் வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வது வழக்கம். ஃபோலாவின் அம்மாவும் இதையே காரணம் காட்டினார்கள். என்னுடைய பிள்ளைகளுக்கு குழந்தை இல்லையென்றால் பிற்காலத்தில் தனிமையில் கஷ்டப்பட வேண்டியிருக்கும். மற்றவர்களால் ஒதுக்கப்படலாம். உடல் பலவீனமாகும்போது ஒத்தாசை காட்ட நாதியற்றுப் போகலாம். கடைசியில் அவர்கள் இறக்கும்போது தூக்கிப்போடக்கூட யாரும் இருக்க மாட்டார்கள்.

குழந்தை பாக்கியம் இல்லாதிருப்பது ஆப்பிரிக்க சமுதாயத்தில் சாபக்கேடாக கருதப்பட்டது. சில பகுதிகளில் பெண்களுக்கு குழந்தையைப் பெற்றெடுக்கும் திறன் உள்ளதா என்பதை திருமணத்திற்கு முன்னரே பரிசோதிக்கும்படி எதிர்பார்க்கப்படுகிறது. கருத்தரிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண்கள் எப்படியாவது தங்கள் மலட்டுத்தன்மையை போக்க வேண்டும் என்ற பதட்டத்தில் கண்டபடி மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

நிலைமை இப்படியிருக்க, வேண்டுமென்றே குழந்தை பாக்கியத்தை துறக்கும் தம்பதியரைப் பார்க்கும்போதெல்லாம், அவர்கள் பொன்னான வாய்ப்பை தவறவிடுவதாகவே உலகம் கருதுகிறது. அவர்கள் நூதனமானவர்கள் என்றும் குறுகிய மனப்பான்மையுடையவர்கள் என்றும் சிலர் கருதுகின்றனர். பாவம், அவர்களுக்குப் பிள்ளை இல்லையாமே! என்று பரிதாபப்படுகின்றனர் மற்றவர்கள்.

சுகமும் சுமையும்

பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பது ஓர் சுகமான அனுபவம்தான்; அதேசமயத்தில் அது ஓர் சுமையும்கூட! இதை யெகோவாவின் ஜனங்கள் நன்கு அறிவர். பைபிளில் 1 தீமோத்தேயு 5:8 சொல்கிறது: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.”

பெற்றோர்கள் தங்கள் குடும்பங்களின் பொருளாதார தேவைகளையும், ஆன்மீக தேவைகளையும் கவனிக்க வேண்டும். அதற்கு நேரமும் உழைப்பும் தேவை. மரத்தை வைத்தவன் தண்ணீர் பாய்ச்சுவான் என்ற கொள்கையில், ஆண்டவர்தானே பிள்ளை தந்தார், அவரே வளர்ப்பார் என்று மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. பைபிள் நியமங்களுக்கு ஏற்ப பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோருக்கு கடவுள் நியமித்த முழுநேர பொறுப்பு; இந்தப் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைக்க முடியாது. இந்த உண்மையை அவர்கள் மறந்துவிடுவதில்லை.—உபாகமம் 6:6, 7.

‘கையாளுவதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களில்’ பிள்ளைகளை வளர்ப்பது என்பது ஒரு கடினமான வேலைதான். (2 தீமோத்தேயு 3:1-5, NW) நமது சமுதாயத்தில் பணப் பிரச்சினை ஒருபுறமிருக்க, தெய்வ பயமில்லாத சூழ்நிலையும் பெருகிவருகிறது. இவையெல்லாம் சேர்ந்து பிள்ளைகளை வளர்ப்பதை பெரும் சுமையாக்கி விடுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உலகமுழுவதும் எண்ணற்ற கிறிஸ்தவ பெற்றோர்கள் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தங்கள் பிள்ளைகளை “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” வளர்க்கிறார்கள். (எபேசியர் 6:4) கடினமாக உழைக்கும் இப்படிப்பட்ட பெற்றோர்களை யெகோவா நேசித்து, ஆசீர்வதிக்கிறார்.

ஏன் அவர்களுக்கு பிள்ளை இல்லை

அதேசமயத்தில், இன்று கிறிஸ்தவர்களாக இருக்கும் அநேக தம்பதியினருக்கு பிள்ளை இல்லை. சிலருக்கு இயல்பாகவே மலட்டுத்தன்மை இருந்தாலும் அவர்கள் பிள்ளைகளை தத்தெடுப்பதில்லை. மற்றவர்களோ தங்களால் பிள்ளை பெற்றுக்கொள்ள முடிந்தாலும் அவ்வாறு பெற்றுக்கொள்வதில்லை. தங்களுக்குப் பிள்ளை வேண்டாம் என்றே முடிவு செய்கின்றனர். இந்தப் பெரும் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக அவ்வாறு தீர்மானிப்பதில்லை; அந்தச் சுமையை பாரமாக நினைத்தும் அப்படி செய்வதில்லை. அவர்கள் ஓர் இலட்சியத்துடன் அவ்வாறு செய்ய தீர்மானிக்கின்றனர். அதாவது, முழுநேர சேவையில் தங்கள் கவனத்தை முழுவதும் ஒருமுகப்படுத்துவதுதான் அவர்களது குறி. சிலர் மிஷனரிகளாக சேவை செய்கிறார்கள். மற்றவர்கள் பிரயாண கண்காணிகளாகவோ அல்லது பெத்தேலிலோ யெகோவாவுக்கு சேவை செய்கிறார்கள். பிள்ளைகளைப் பெற்று வளர்த்துக்கொண்டு இருந்தால் இந்த வேலையை செய்ய முடியாதே!

எல்லா கிறிஸ்தவர்களும் ஓர் அவசரமான வேலை செய்ய வேண்டியுள்ளது என்பது அவர்களுக்கும் தெரியும். இயேசு சொன்னார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” இந்த வேலை இன்று செய்யப்பட்டு வருகிறது. நற்செய்திக்கு செவிசாய்க்காதவர்கள் அழிக்கப்படுவதையே “முடிவு” என்ற வார்த்தை அர்த்தப்படுத்துகிறது; ஆகவே நற்செய்தியை அறிவிக்கும் இந்த வேலை அதிமுக்கியமான ஒன்று.—மத்தேயு 24:14; 2 தெசலோனிக்கேயர் 1:7, 8.

நோவாவும் அவருடைய குடும்பமும் ஜலப்பிரளயத்திலிருந்து தப்புவதற்கு மிகப் பெரிய பேழையை கட்டினார்கள். நோவாவின் காலத்திலிருந்த அதே சூழ்நிலையில்தான் நாமும் இருக்கிறோம். (ஆதியாகமம் 6:13-16; மத்தேயு 24:37) நோவாவின் மூன்று குமாரர்களும் திருமணமானவர்கள். இருந்தாலும், ஜலப்பிரளயம் வந்து முடியும் வரை அவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை தங்கள் தலைக்குமேல் வேலை இருந்ததால் அதைச் செய்து முடிப்பதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கலாம். அதுமட்டுமின்றி, அன்றைய சூழ்நிலையில் ‘மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகியிருந்தது . . . அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாக இருந்தது.’ இப்படிப்பட்ட தரங்கெட்ட கொடூரமான உலகில் தங்கள் பிள்ளைகளை வளர்க்க ஒருவேளை அவர்களுக்கு விருப்பம் இருந்திருக்காது.—ஆதியாகமம் 6:5.

இன்றைய நிலையில் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவே கூடாது என இது அர்த்தப்படுத்துவதில்லை. இருந்தாலும், கிறிஸ்தவர்களாக இருக்கும் அநேக தம்பதியினருக்கு இதில் நாட்டமில்லை. இதற்குக் காரணம், யெகோவா தம்முடைய மக்களிடம் ஒப்படைத்திருக்கும் இந்த அவசர வேலையில் முழுமூச்சாய் ஈடுபட வேண்டும் என்பதே! சிலர் கொஞ்சம் நாள் கழித்து பிள்ளை பெற்றுக்கொள்ளலாம் என ஒத்திப்போட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் யெகோவாவின் நீதியுள்ள புதிய உலகில் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டாலென்ன என்று நினைத்திருக்கிறார்கள். இது ஒரு குறுகிய மனப்பான்மையா? அவர்கள் வாழ்க்கையில் கிடைக்கும் பொன்னான வாய்ப்பை இழக்கிறார்களா? அல்லது அவர்களைப் பார்த்து பரிதாபப்பட வேண்டுமா?

குறைவொன்றும் இல்லை

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட டெலே மற்றும் ஃபோலாவுக்கு திருமணமாகி இப்போது 10 வருடங்கள் ஆகின்றன. பிள்ளை பெற்றுக்கொள்ளும் எண்ணம் அவர்களுக்கு இல்லவே இல்லை. டெலே கூறுவதாவது: “எப்பதான் பிள்ளை பெற்றுக்கொள்வதாக உத்தேசம் என சொந்தக்காரர்கள் ஓயாது நச்சரிக்கிறார்கள். அவர்களது கவலையெல்லாம், பிற்காலத்தில் எங்களை யார் கவனித்துக்கொள்வார்கள் என்பதுதான். ஆகவே, எங்கள்மேல் வைத்திருக்கும் கரிசனைக்காக நன்றி தெரிவிப்போம்; பிறகு, எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை, நாங்கள் சந்தோஷமாகவே இருக்கிறோம் என்று பக்குவமாக அவர்களிடம் எடுத்துச் சொல்வோம். பிற்காலத்தில் எங்களுக்கு என்ன வந்தாலும்சரி, எங்களை யெகோவா பார்த்துக்கொள்வார் என்றும், உத்தமமும் உண்மையுமாய் அவருக்கு சேவை செய்வோரின் நலனில் அவருக்கு அக்கறை இருக்கிறது என நாங்கள் நம்புவதாகவும் அவர்களிடம் சொல்வோம். அதுமட்டுமல்ல பிள்ளைகளைப் பெற்று வளர்த்துவிட்டால் போதும்; வயதான காலத்தில் அவர்கள் பெற்றோரை பார்த்துக்கொள்வார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை எனவும் அவர்களுக்கு விளக்குவோம். ஏனெனில் தங்களுடைய பெற்றோருக்கு என்ன ஆனாலும் சரி, சிலர் கண்டுகொள்வதே இல்லை. மற்றவர்களோ தங்கள் பெற்றோருக்கு உதவும் நிலையில் இருப்பதில்லை. இன்னும் சிலரோ தங்கள் பெற்றோருக்கு முன்னதாகவே இறந்து விடுகிறார்கள். ஆனால் எங்களை எதிர்காலத்தில் யெகோவா பார்த்துக்கொள்வார் என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறது என்றெல்லாம் சொல்லி சமாளிப்போம்.”

டெலேயும் அவரைப் போன்ற மற்றவர்களும் உண்மையுள்ள ஊழியர்களுக்கு யெகோவா கொடுத்த பின்வரும் வாக்குறுதியில் முழுமையாக நம்பிக்கை வைக்கிறார்கள்: “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.” (எபிரெயர் 13:5) “இரட்சிக்கக் கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக் கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை” என்பதையும் அவர்கள் நம்புகிறார்கள்.—ஏசாயா 59:1.

யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களை எவ்வாறு ஆதரித்து வருகிறார் என்பதை கண்ணார காண்பதாலும் அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது. தாவீது ராஜா இவ்வாறு எழுதினார்: “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் முற்றிலும் கைவிடப்பட்டதை . . . காணவில்லை.” யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர் யாராவது ‘முற்றிலும் கைவிடப்பட்டிருக்கிறாரா’ என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.—சங்கீதம் 37:25, NW.

இப்பொழுது நினைக்கையில், யெகோவாவுக்கும் உடன் கிறிஸ்தவர்களுக்கும் சேவை செய்வதிலேயே தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவிட்டவர்கள் அதைக் குறித்து வருத்தப்படுவதில்லை. மாறாக அதில் மனத்திருப்தியையும் சந்தோஷத்தையும் காண்கிறார்கள். உதாரணமாக, ஈரோ உம்மா என்ற சகோதரர் 45 வருடங்கள் முழுநேர சேவை செய்துவந்திருக்கிறார். இப்போது நைஜீரியாவில் பிரயாண கண்காணியாக சேவை செய்து வருகிறார். அவர் சொல்கிறார்: “எங்களுக்கு பிள்ளைகள் இல்லை. இருந்தாலும், யெகோவா எங்களை எப்போதும், பொருளாதார ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் பராமரித்து வருகிறார். எங்களுக்கு எந்த குறைவும் இருந்ததில்லை. எங்களுடைய முதிர் வயதிலும் அவர் எங்களை கைவிட மாட்டார். எங்கள் வாழ்க்கையிலேயே நாங்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது முழுநேர சேவை செய்யும்போதுதான்! நம் சகோதரர்களுக்கு சேவைசெய்ய முடிகிறதே என்று எண்ணி நாங்கள் அதிக சந்தோஷப்படுகிறோம். சகோதரர்களும் எங்கள் சேவைக்கு பாராட்டை தெரிவிக்கிறார்கள், வேண்டிய உதவியும் செய்கிறார்கள்.

அநேக தம்பதியினருக்கு நிஜமாகவே பிள்ளைகள் பிறக்கவில்லை; ஆனால் வேறு பிள்ளைகளைப் பெற்றிருக்கிறார்கள். யெகோவாவை வணங்கும் கிறிஸ்தவ சீஷர்களே அந்தப் பிள்ளைகள்! அப்போஸ்தலன் யோவானுக்கு சுமார் 100 வயது இருக்கையில் இவ்வாறு எழுதினார்: “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.” (3 யோவான் 4) யோவானின் ஆன்மீக பிள்ளைகள், அதாவது அவர் ‘சத்தியத்திற்குள்’ கொண்டுவந்தவர்கள் உத்தமத்தைக் காட்டியது அவருக்கு அதிக சந்தோஷத்தை அளித்தது.

இதேவிதமான சந்தோஷத்தை அனுபவித்தவர்கள் இன்றைக்கும் நம்மை சுற்றி இருக்கிறார்கள். பெர்னீஸ் என்ற நைஜீரிய சகோதரிக்கு திருமணமாகி 19 வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும், அவர்களுக்குப் பிள்ளை இல்லை. கடந்த 14 வருடங்கள் பயனியர் சேவை செய்திருக்கிறார்கள். இப்போது, நினைத்தாலும் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாத வயது அவர்களுக்கு. ஆனாலும், தன்னுடைய வாழ்நாள் காலத்தை சீஷராக்கும் வேலைக்கென்றே அர்ப்பணித்து விட்டேனே என நினைத்து அவர்கள் வருத்தப்படுவதில்லை. மாறாக, அந்த சகோதரி சொல்வதாவது: “என்னுடைய ஆன்மீக பிள்ளைகள் முன்னேறுவதைக் கண்டு சந்தோஷப்படுகிறேன். ஒருவேளை எனக்கென்று சொந்த பிள்ளைகள் இருந்தாலும்கூட நான் சத்தியத்தைக் கற்றுக்கொடுத்த பிள்ளைகளைக் காட்டிலும் அவர்கள் என்னிடம் அதிக நெருக்கமாக இருப்பார்களா என்பதென்னவோ சந்தேகம்தான். அவர்களைப் பெற்ற தாயாகவே என்னை நடத்துகிறார்கள். தங்களது சுக துக்கங்களை என்னிடம் பகிர்ந்துகொள்கிறார்கள், என்னிடம் ஆலோசனையும் கேட்கிறார்கள். கடிதம் எழுதுகிறார்கள். நாங்கள் ஒருவரையொருவர் நேரிலும் சந்திக்கிறோம்.

“பிள்ளைகள் இல்லையென்றால் அது சாபக்கேடு என சிலர் நினைக்கிறார்கள். நீங்கள் வயதான காலத்தில் கஷ்டப்படுவீர்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ அப்படி தெரியவில்லை. நான் முழு இருதயத்தோடு யெகோவாவை சேவிக்கும் வரையில் அவர் என்னை பராமரித்து எனக்கு பலனளிப்பார். முதிர் வயதானாலும் அவர் என்னை தள்ளிவிட மாட்டார்.”

கடவுளின் நேசத்தைப் பெற்ற செல்லப் பிள்ளைகள்

பிள்ளைகளைப் பெற்று அவர்களை ‘சத்தியத்திலே நடக்கும்’ பிள்ளைகளாக வளர்த்திருக்கும் பெற்றோர்கள் அதை நினைத்துப் பெருமிதம் அடையலாம். ஆகவே, பைபிள் இவ்வாறு கூறுவதில் ஆச்சரியமில்லை: “நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.”—நீதி. 23:24, 25.

இந்த உலகில் பிள்ளை பெற்று வளர்க்கும் பாக்கியம் கிடைக்காதவர்கள்மீது வேறு விதங்களில் ஆசீர்வாதம் பொழிகிறது. இவர்களில் பலர் கடவுளுடைய ராஜ்ய ஏற்பாடுகளுக்கு பெருமளவில் தங்கள் ஆதரவை காட்டுவதன்மூலம் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள். எப்படியெனில், பல வருடங்களாக சேவை செய்ததால் கிடைத்த அனுபவம், ஞானம், திறமைகள் இவற்றையெல்லாம் ராஜ்ய வேலைக்கென்றே பயன்படுத்த அவர்களால் முடிகிறது. இந்த வேலையில் அநேகர் முன்னணியில் நிற்கிறார்கள்.

ராஜ்யம் சம்பந்தப்பட்ட வேலைகளின் நலன் கருதி தங்களுக்கு பிள்ளை வேண்டாம் என தீர்மானித்திருப்பவர்களுக்கு அன்பே உருவான ஆன்மீக குடும்பத்தை நல்கி யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார். ராஜ்ய வேலைக்காக அவர்கள் செய்திருக்கும் தியாகங்களுக்கு இந்த ஆன்மீக குடும்பத்தினரும் தங்கள் ஆழ்ந்த போற்றுதலை காட்டுகிறார்கள். இது இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைவாகவே இருக்கிறது: “என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, . . . நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மாற்கு 10:29, 30.

உண்மையுடன் நிலைத்திருப்பவர்கள் யெகோவாவுக்கு எவ்வளவு அருமையானவர்கள்! பிள்ளை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, யெகோவாவுக்கு உத்தமமாய் நடப்பவர்களுக்கு அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகள் இவ்வாறு உறுதியளிக்கின்றன: “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.”—எபிரெயர் 6:10.

[அடிக்குறிப்புகள்]

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 23-ன் படங்கள்]

பிள்ளை இல்லாத தம்பதியினருக்கு அன்பே உருவான ஆன்மீக குடும்பம் கிடைத்திருப்பது ஓர் ஆசீர்வாதமே!