Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம் எதிர்பார்ப்பு நியாயமானதா?

நம் எதிர்பார்ப்பு நியாயமானதா?

நம் எதிர்பார்ப்பு நியாயமானதா?

விரும்பியது கைக்கு எட்டினால்? நினைத்ததை சாதித்துவிட்டால்? நமக்கு கிடைப்பதோ ஆத்ம திருப்தி. ஆனால், நினைப்பதெல்லாம் நடப்பதில்லை என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை. எதிர்பார்த்து எதிர்பார்த்து தோல்விதான் மிச்சம் என்றால் மிஞ்சுவதோ விரக்திதான். இதனால்தான் இலவுகாத்த கிளியாக இருப்பதைப் பற்றி ஒரு ஞானவான் சொன்னார்: “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்.”—நீதிமொழிகள் 13:12.

நாம் நொந்துபோவதற்கான சில காரணங்கள் யாவை? நம்முடைய எதிர்பார்ப்புகள் நியாயமாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? நியாயமாக எதிர்பார்ப்பதன் நன்மைகள் யாவை?

எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்

இயந்திரமயமான இந்த நவீன உலகில் ஜான் ஏறினால் முழம் சறுக்குவது என்பதுதான் நம் வாழ்க்கையாகிவிட்டது. எனவே, நமக்கு எவ்வளவு சக்தி இருந்தாலும் போதாது, எவ்வளவு நேரம் இருந்தாலும் போதவே போதாது என்பது அப்பட்டமான உண்மை. இப்படி ஒரு சிக்கலில், நாம் எதையாவது சாதிக்க புறப்பட்டு அது எதிர்பார்த்தபடி நடக்கவில்லையென்றால் தாங்க முடியாத எரிச்சல். யார் மீது? நம்மீதுதான். மற்றவர்கள் எல்லாம் என்ன நினைப்பார்கள் என்பது மனதை வாட்டும் அடுத்த கவலை. இப்படி ஒரு சூழ்நிலையில், ஒரு மனைவியாகவும் தாயாகவும் தான் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி சிந்தியா விவரிப்பதை கவனியுங்கள். “என் பிள்ளைகளுக்கு நான் ஒழுங்கா டிரெய்னிங் தரல. அவங்கள கண்டிக்கும்போது, இப்ப ஒண்ணு சொல்றேன் அப்புறம் இன்னொன்ணை மாத்தி சொல்றேன். நான் எதுக்கும் லாயக்கு இல்ல.” ஸ்டெஃபேன் என்ற டீன் ஏஜ் பெண் சொல்கிறாள், “செய்ய வேண்டியது தலைக்குமேல இருக்கு! ஆனா நேரத்துக்கு எங்க போவேன்? செய்ய முடியலையேன்னு நெனக்கும்போது எம்மேலேயே ஆத்திரம்தான் வருது.”

சிகரத்தை எட்டவேண்டும் என்பது போன்ற உயர்ந்த எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டால் எதையும் நூற்றுக்கு நூறு சரியாக செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிடும், பிறகு வாழ்க்கையே வெறுத்துவிடும். இதைப்பற்றி பென் என்ற குடும்பத்தலைவர் சொல்வதை கவனியுங்கள். “வேலைன்னு வந்துட்டா சிலை செதுக்குன மாதிரி குறையில்லாம இருக்கணும்னு நெனப்பேன். அதனால நான் பேசினதையும் செஞ்சதையும் யோசிச்சதையும் திரும்ப திரும்ப நினைச்சுப் பார்ப்பேன். இதை இப்படி செஞ்சிருக்கலாம், அதை அப்படி செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும் என்றெல்லாம் அப்பத்தான் உதிக்கும். நான் நெனச்சபடி நடக்கலைன்னா எரிச்சல், ஆத்திரம், விரக்தி எல்லாம் சேர்ந்து படையெடுத்து வந்துடும்.” இவருக்கு, உடல் உள்ள வரை கடல்கொள்ளா கவலை என்ற நிலை. கேல் ஒரு கிறிஸ்தவ பெண், திருமணமானவள், அவள் சொல்வதை கவனிப்போமா? “என்னக்கி ஒருத்தர் நூல்பிசகாம எல்லாத்தையும் செய்யணும்னு நெனச்சுட்டாரோ அன்னைலேந்து அவருக்கு கனவுலகூட தோல்வி வரக்கூடாது! அப்படி நெனக்க ஆரம்பிச்ச பிறகு ஒரு சூப்பர் அம்மாவா அல்லது ஒரு சூப்பர் மனைவியாத்தான் வாழணும்னு நெனக்க ஆரம்பிச்சிடரோம். சாதிச்சாத்தான் சந்தோஷம்னு நெனக்கிறோம். பார்த்துப் பார்த்து செஞ்சும் நெனச்சது நடக்கலைன்னா கோபம் பொத்துக்கிட்டு வந்துடும்.”

ஒருவர் நொந்து நூலாகிப்போவதற்கு வாய்ப்பளிக்கும் இன்னொரு காரணம் வியாதி அல்லது வயோதிபம். நெனச்ச இடத்துக்கு நெனச்ச உடனே போக முடியாது, முந்தி மாதிரி ஆடி ஓடி வேலை பாக்க முடியாது என்னும் நிலை வந்துவிட்டால் கூடவே வந்து விடும் விரக்தி. எலிசபெத் ஒரு நோயாளி, அவர் தன்னைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறாள், “நோய் வர்ரதுக்கு முந்தி பறந்து பறந்து எவ்வளவோ வேலைகளை சாதாரணமா செஞ்சிடுவேன். ஆனா இப்ப அதெல்லாம் என்னால செய்ய முடியாம போச்சே. இதை நெனச்சே நான் என்னையே நொந்துக்குவேன்.”

விரக்தி, வேர் விட்டு வளருவதற்கு என்ன காரணங்கள் என்பதற்கு மேற்சொன்ன உதாரணங்களே அத்தாட்சி. இந்த எண்ணங்களை முளையிலேயே கிள்ளவில்லை என்றால் மற்றவர்கள் நம்மை விரும்பவில்லை என்று நாமே கற்பனை செய்ய ஆரம்பித்து விடுவோம். விரக்தியை சமாளித்து நம்மால் எட்ட முடிந்ததை மட்டும் எதிர்பார்ப்பதற்கு நாம் என்னவெல்லாம் செய்யலாம்?

நியாயமான எதிர்பார்ப்புகளை வளர்த்தல்

யெகோவா நம்மை நன்றாக புரிந்துகொள்கிறார் என்பதையும் நம்மால் செய்ய முடியாததை நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை என்பதையும் நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். “அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது” என்று சங்கீதம் [திருப்பாடல்கள்] 103:14, (பொ.மொ.) சொல்கிறது. நமக்கு இருக்கும் திறமைகளையும், சாதிக்க முடிந்த எல்லையையும் மனதில் கொண்டு எதை நம்மால் செய்ய முடியுமோ அதை மட்டுமே கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பார். ஆனால், ‘கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டும்’ என்று அவர் கட்டாயமாக எதிர்பார்க்கிறார்.—மீக்கா 6:8, பொ.மொ.

நாம் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். (ரோமர் 12:12; 1 தெசலோனிக்கேயர் 5:17) ஜெபிப்பதால் ஏற்படும் நன்மை என்ன? நாம் எதையும் பதட்டப்படாமல் யோசிக்கவும், நிதானமாக செய்யவும் ஜெபம் உதவுகிறது. யெகோவாவின் உதவியின்றி நாமாக எதையும் செய்ய முடியாது என்பதை நம் ஊக்கமான ஜெபம் காட்டுகிறது. நமக்கு மனத்தாழ்மை, பணிவு போன்ற குணங்கள் இருக்கின்றன என்பதையும் அது எடுத்துக்காட்டுகிறது. யெகோவா நம் ஜெபங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறார். எனவே தம் பரிசுத்த ஆவியை நமக்கு அளிக்கிறார். இந்த ஆவியின் கனிகளான அன்பு, தயவு, நற்குணம், இச்சையடக்கம் என்பவை நம் வாழ்க்கையின் பாகமாகின்றன. (லூக்கா 11:13; கலாத்தியர் 5:22, 23) கவலையையும் விரக்தியையும் சமாளிப்பதற்கு ஜெபம் அதிகம் உதவுகிறது. “எங்கிருந்தும் கிடைக்காத ஆறுதலை ஜெபத்தின் மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்” என்று எலிசபெத் கூறுகிறார். இதை ஏற்றுக்கொள்ளும் கெவின் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்போமா? “ஒரு பிரச்சினையை சமாளிப்பதற்குத் தேவையான தெளிந்த சிந்தையையும் பதட்டமற்ற மனதையும் எனக்கு தந்து உதவுமாறு யெகோவாவிடம் கேட்பேன். அவர் என்னை கைவிட்டதே இல்லை.” ஜெபத்தின் அவசியத்தை அப்போஸ்தலன் பவுல் நன்கு அறிந்திருந்தார். எனவே நமக்கு இவ்வாறு ஊக்கமூட்டுகிறார்: ‘உங்கள் வேண்டுதலை தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்.’ (பிலிப்பியர் 4:6, 7) நம்மிடம் நாமே அல்லது மற்றவர்களிடம் அளவுக்கு மீறி எதிர்பார்க்காமல், நியாயமாக செயல்படும் குணத்தை வளர்த்துக்கொள்ள ஜெபம் பெரிதும் உதவுகிறது.

இருந்தாலும், எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்பதுபோல் சில சந்தர்ப்பங்களில் உடனடியாக யாராவது நம்மிடம் வந்து ஆறுதலாக ஒரு வார்த்தை பேசமாட்டாரா என்று நாம் அனைவரும் ஏங்குகிறோம். சரியான சமயத்தில் சொல்லும் வார்த்தை மனதிற்கு இதமளிக்கிறது. கவலையும் விரக்தியும் நமக்கு ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்பதை நாம் சரியாக புரிந்துகொள்ள ஒரு முதிர்ச்சி வாய்ந்த நண்பரிடம் மனம்விட்டு பேசுவது அவசியம். (நீதிமொழிகள் 15:23; 17:17; 27:9) கவலையிலும் விரக்தியிலும் மூழ்கித் தவிக்கும் இளைஞர்கள் எந்த விஷயத்தையும் நிதானமாக பார்த்து புரிந்துகொள்வதற்கு பெற்றோரிடம் புத்திமதி கேட்பது அவசியம். கான்டி என்ற டீன் ஏஜ் பெண் சொல்வதை கேளுங்கள். “நான் புடிச்ச முயலுக்கு மூணே காலுன்னு சொல்லிக்கிட்டு பிடிவாதம் பிடிக்காம, நிதானமாக நடந்துக்கவும் எங்க அப்பா அம்மாதான் எனக்கு கத்துக்கொடுத்தாங்க. அதனாலதான் என்னோட பிரன்ட்ஸ் என்னிடம் அன்பா இருக்காங்க.” நீதிமொழிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் புத்திமதி நம் காலத்திற்கு பொருத்தமே. “பிள்ளாய்! உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி; உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே. அவை உன் தலைக்கு அணிமுடி; உன் கழுத்துக்கு மணிமாலை.”—நீதிமொழிகள் 1:8, 9, பொ.மொ.

வாழ்க்கையென்றால் நெளிவு சுளிவின்றி நேர்கோட்டைப் போல் இருக்க வேண்டும் என்று ஒருவர் சிந்திக்க ஆரம்பித்தால் என்னவாகும்? இதற்கு பின்வரும் முதுமொழி விடையளிக்கிறது. “நினைத்தபடிதான் வாழ்க்கை அமைய வேண்டும் என எதிர்பார்த்தால் விரக்தியை வா வா என்று வரவேற்பது என்று அர்த்தம்.” இதை தவிர்க்க வேண்டும் என்றால் நாம் நம் சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும். நம்மால் சாதிக்க முடிந்தது எது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும், மனத்தாழ்மை, பணிவு ஆகியவை நம் உள்ளத்தில் குடியிருக்க வேண்டும். அப்போது நம் எதிர்பார்ப்பு நியாயமானதாகவும் நிதானமானதாகவும் இருக்கும். இதனால்தான் ரோமர் 12:3 (பொ.மொ.) பின்வரும் எச்சரிக்கையை அளிக்கிறது, “உங்களுள் எவரும் மட்டுமீறி மதிப்புக் கொள்ளலாகாது.” இதோடு பிலிப்பியர் 2:3, மனத்தாழ்மையை வளர்த்து மற்றவர்களை மேலானவர்களாக எண்ணக் கற்றுக்கொள்ளுமாறு புத்திமதி அளிக்கிறது.

இந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட எலிசபெத் என்ற பெண் நோயுற்றதால் தன்னையே நொந்துகொண்டாள். யெகோவா எவ்வாறு சில விஷயங்களைக் கருதுகிறார் என்பதை தெரிந்துகொள்வதற்கு அவளுக்கு சில காலம் தேவைப்பட்டது. நாம் செய்யும் ஊழியத்தை அவர் மறந்து விடுபவர் அல்ல என்பதை அறிந்தபோது அவள் ஆறுதல் அடைந்தாள். காலின் என்பவர் நோயால் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர் இப்போது செய்யும் ஊழியத்தை, ஆரோக்கியமாக இருந்தபோது செய்ததோடு ஒப்பிட்டார். விளைவு, தான் லாயக்கற்றவர் என்று நினைக்க ஆரம்பித்தார். பிறகு 2 கொரிந்தியர் 8:12-ஐ தியானித்தார், “ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.” இதைப்போன்ற மற்ற வசனங்களையும் தியானம் செய்தார். விளைவு, இப்படிப்பட்ட பாதகமான அம்சத்தை நினைத்துப் பார்க்கும் எண்ணங்களை உதறித்தள்ளினார். “என்னால செய்ய முடிஞ்ச ஊழியம் ரொம்ப கொஞ்சம்தான். ஆனா, நான் இன்னமும் ஊழியம் செய்யறேன் அதை யெகோவா ஏற்றுக்கொள்கிறார்” என்று சொல்கிறார் காலின். “தமது நாமத்திற்கென காண்பித்த அன்பையும் மறந்து விடுகிறதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் அல்லவே” என்று எபிரேயர் 6:10 தி.மொ. நமக்கு நினைப்பூட்டுகிறது.

நாம் அளவுக்கு மிஞ்சி எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதை எவ்வாறு தெரிந்துகொள்ளலாம்? நீங்கள் உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள். ‘நான் எதிர்பாக்கிற மாதிரிதான் கடவுளும் எதிர்பார்க்கிறாரா?’ கலாத்தியர் 6:4-ன் (பொ.மொ.) அறிவுரையை கவனியுங்கள். “ஒவ்வொருவரும் தம் செயல்களை ஆய்ந்து பார்க்கட்டும். அப்பொழுது தம்மைப் பிறரோடு ஒப்பிட்டுப் பெருமை பாராட்டாமல், தாம் செய்த செயல்களைப் பற்றி மட்டும் பெருமை பாராட்ட முடியும்.” இயேசு இதைப் பற்றி என்ன சொன்னார் என்று ஞாபகப்படுத்தலாமா? “என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார். நாம் கிறிஸ்துவை பின்பற்ற வேண்டும் என்றால் சுமக்க வேண்டிய நுகம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அது “மெதுவாகவும்” “இலகுவாயும்” இருக்கிறது. அதை சரியானபடி சுமக்கக் கற்றுக்கொண்டால் நம்மை அழுத்தாது, மாறாக புத்துயிரூட்டும் என்று இயேசு வாக்குறுதி அளிக்கிறார்.—மத்தேயு 11:28-30.

நியாயமான எதிர்பார்ப்பின் நன்மைகள்

நியாயமான எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்வதால் வரும் நன்மைகள் யாவை? இதற்காக, கடவுளுடைய வார்த்தையின் அருமையான புத்திமதிகளை நம் வாழ்க்கையில் பொருத்தும்போது உடல் ரீதியில் புத்துணர்ச்சியடைகிறோம். இது முதலாவது நன்மை. யெகோவாவின் புத்திமதிகளின்படி நடந்த ஜெனிஃபர் சொல்கிறார்: “இப்பல்லாம் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கு, நெறைய வேலை செய்ய சக்தியும் இருக்கு.” பொருத்தமாகவே யெகோவாவின் வார்த்தைகளுக்கு நம் கண்களும் இதயமும் கவனம் செலுத்த வேண்டும் என்று நீதிமொழிகள் 4:21, 22-ல் சொல்லப்பட்டிருக்கிறது. “அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.”

மனதில் நிம்மதி ஏற்படுவது அடுத்த நன்மை. தெரெஸா சொல்கிறாள்: “கடவுளுடைய வார்த்தைய மனப்பூர்வமா விரும்பி படிக்கும்போது என் இதயமே நெறைஞ்சமாதிரி ரொம்ப சந்தோஷமா இருக்கு.” இருந்தாலும், வாழ்க்கை என்றாலே அதில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், பைபிளை படித்தால் அவற்றை நல்ல முறையில் சமாளிக்கலாம். யாக்கோபு 4:8-ல் (பொ.மொ.) ‘கடவுளை அணுகுங்கள் அப்போது அவர் உங்களை அணுகுவார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை சமாளித்து சமாதானத்தை பெற்றுக்கொள்ள உதவுவதாக யெகோவா வாக்குறுதி அளித்திருக்கிறார்.—சங்கீதம் 29:11.

நமக்கு நியாயமான எதிர்பார்ப்புகள் மட்டுமே இருந்தால் ஆன்மீக விஷயத்தில் சமநிலையைக் காத்துக்கொள்ள முடியும். இது நமக்கு ஒரு பெரிய ஆசீர்வாதம். வாழ்க்கையில் எது முக்கியமோ அதற்கே முக்கியத்துவம் அளிப்போம். (பிலிப்பியர் 1:10, NW) அவ்வாறு நம்மை மாற்றிக்கொண்டால் நம் இலக்குகளும் நியாயமானவையாக இருக்கும், அவற்றை எய்துவதும் சுலபம். அப்போது நமக்கு கிடைப்பதோ நிம்மதியும் சந்தோஷமும். அப்போது யெகோவாவிடம் எல்லாவற்றையும் ஒப்படைக்கும் மனப்பக்குவம் நமக்கு வந்துவிடும், ஏனெனில் நாம் எடுக்கும் முயற்சிகளெல்லாம் நல்ல பலனைக் கொடுக்க அவர் உதவுவார். “கடவுளுடைய வல்லமை மிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்.” (1 பேதுரு 5:6, பொ.மொ.) யெகோவாவால் உயர்த்தப்படுவதைவிட பெரிய விஷயம் ஏதாவது இருக்குமா?

[பக்கம் 31-ன் படங்கள்]

விரக்தியையும் ஏமாற்றத்தையும் சமாளிக்க நம் எதிர்பார்ப்புகள் நியாயமாக இருக்க வேண்டும்