யெகோவாவை நேசிப்பவர்கள் அவருக்கு மதிப்புமிக்கவர்கள்
ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
யெகோவாவை நேசிப்பவர்கள் அவருக்கு மதிப்புமிக்கவர்கள்
லீபனோன். பைபிள் காலத்திலிருந்தே இயற்கை வளங்களுக்கு மையமாக திகழ்ந்திருக்கிறது. (சங்கீதம் 72:16; ஏசாயா 60:13) அதில் மிக விசேஷித்தவை கம்பீரமான கேதுரு மரங்கள். கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட இவை, அழகினாலும் நறுமணத்தினாலும் நீடித்த உழைப்பினாலும் மதிப்புபெற்றன. ஆனால் முதல் நூற்றாண்டில் அதைவிட மதிப்பு வாய்ந்தவை லீபனோனிலிருந்து வந்ததாக மாற்குவின் சுவிசேஷம் அறிவிக்கிறது. அதாவது, லீபனோனின் பண்டைய தீரு, சீதோன் பட்டணங்களிலிருந்து “திரளான ஜனங்கள் அவர் [இயேசு] செய்த அற்புதங்களைக் குறித்துக் கேள்விப்பட்டு, அவரிடத்தில் வந்தார்கள்.”—மாற்கு 3:8.
அதேபோல் இன்றும், யெகோவாவின் பார்வையில் மதிப்பு வாய்ந்த கனிகளை லீபனோன் தொடர்ந்து பிறப்பிக்கிறது. பின்வரும் அனுபவங்கள் இதையே காட்டுகின்றன.
• வைஸாம் என்ற இளம் சாட்சி வகுப்பறையில் 30 நிமிடங்களுக்கு ஒரு பேச்சு கொடுக்கும்படி ஆசிரியர் கேட்டுக்கொண்டார். சாட்சி கொடுப்பதற்கு இதுவே நல்ல சந்தர்ப்பம் என நினைத்த வைஸாம் உயிர்—அது எப்படி வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்திலிருந்து படைப்பைப் பற்றி ஒரு பேச்சை தயாரித்தான். வைஸாமுடைய பேச்சுத் தாளை வாங்கிப் பார்த்த ஆசிரியர், இது மிக முக்கியமான சப்ஜெக்ட் என்பதை உணர்ந்து இந்தப் பேச்சைக் கொடுக்க தாராளமாக 45 நிமிடம் எடுத்துக்கொள்ளலாம் என கூறினார்.
வைஸாம் பேச ஆரம்பித்ததும் ஆசிரியர் சற்று நிறுத்தும்படி கூறி தலைமை ஆசிரியையை அழைத்துவருவதற்கு ஏற்பாடு செய்தார். தலைமை ஆசிரியையும் வந்து விட்டார்கள். வைஸாம் மறுபடியும் பேச்சை ஆரம்பித்தான். பேச்சின் முன்னுரையில் கவனத்தை ஊன்ற வைக்கும் கேள்விகளைக் கேட்டான் வைஸாம். அவற்றை உற்று கவனித்த தலைமை ஆசிரியை வியப்படைந்து எல்லா மாணவர்களும் இதில் ஒரு பிரதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
சிறிது நேரத்திற்குப்பின் அந்த வழியாகப் போன மற்றொரு ஆசிரியர் வகுப்பு முழுவதும் பரப்பரப்பாய் இருப்பதைக் கண்டு என்ன நடக்கிறது என விசாரித்தார். விஷயத்தை அறிந்ததும், வைஸாம் உண்மையென நிரூபிக்கப் போவது படைப்பையா அல்லது பரிணாமத்தையா என கேட்டார். “படைப்பை” என பதில் வந்தது. வைஸாம் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை கேள்விப்பட்டதும் ஆசிரியர் சொன்னார்: “விஞ்ஞானம் பரிணாமத்தை அல்ல, படைப்பையே ஆதரிக்கிறது என்பதை இவனுடைய பேச்சிலிருந்து புரிந்து கொள்வீர்கள்.”
இந்த ஆசிரியரிடம் ஏற்கெனவே படைப்பு புத்தகம் இருந்தது. பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்கு அந்தப் புத்தகத்தையே அவர் பயன்படுத்தி வந்திருக்கிறார். அந்த ஆசிரியர் அங்கிருந்து செல்வதற்கு முன்பாக, அடுத்த நாள் தன்னுடைய மாணவர்களோடு வைஸாமின் பேச்சைக் கேட்க வரட்டுமா எனக் கேட்டார். அது யெகோவாவைக் குறித்து மற்றொரு நல்ல சாட்சிகொடுக்க உதவியது.
• இருபத்திரண்டு வயது நீனாவுக்கு சத்தியத்தின் மீது தீரா தாகம். ஒரு நாள் அவளுடைய அத்தை மகன் அவளிடம் ஒரு பைபிளைக் கொடுத்து பெந்தெகோஸ்தே சபைக்கு அழைத்துச் சென்றார். நீனா அந்தப் பைபிளை அதிக ஆசையோடு படித்தாள்; கிறிஸ்தவர்கள் கண்டிப்பாக பிரசங்கிக்க வேண்டும், அது அவர்களது கடமை என்பதை அதிலிருந்து தெரிந்து கொண்டாள். ஆகவே தனக்கு தெரிந்தவர்களிடத்திலெல்லாம் பிரசங்கிக்க ஆரம்பித்தாள். அவர்கள் எல்லாரும் “நீங்க யெகோவாவின் சாட்சியா?” என கேட்டார்கள். நீனா குழம்பிப் போனாள்.
ஆறு வருடங்களுக்குப்பின், யெகோவாவின் சாட்சிகள் நீனாவின் வீட்டிற்கு வந்து கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி சொன்னார்கள். முதலில் அவர்களுடைய போதனைகளில் எப்படியாவது குறை கண்டுபிடிக்க வேண்டும் என நீனா முயற்சி செய்தாள். இருந்தாலும், அவர்கள் கொடுத்த பதில்கள் நீனாவுக்கு நியாயமானதாக பட்டது. அவை பைபிள் அடிப்படையில் இருந்ததையும் அறிந்துகொண்டாள்.
கடைசியாக, கடவுளுடைய பெயர் யெகோவா என்றும், ராஜ்ய ஆசீர்வாதங்களைப் பற்றியும் இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் கற்றுக்கொண்டபோது, இதுதான் சத்தியம் என நம்பினாள். ஆகவே, நீனா யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றாள். கடந்த ஏழு வருடங்களாக நீனா முழுநேர சேவை செய்து வருகிறாள். தம்மை நேசிப்பவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பதற்கு இவை சிறந்த உதாரணங்கள்.—1 கொரிந்தியர் 2:9.