Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகையை ஒழித்துக்கட்ட ஒரே வழி

பகையை ஒழித்துக்கட்ட ஒரே வழி

பகையை ஒழித்துக்கட்ட ஒரே வழி

“பயமில்லையேல் பகையும் இல்லை. . . . எதைப் பார்த்து பயப்படுகிறோமோ அதைத்தான் வெறுக்கிறோம். எனவே, பயமிருக்கும் இடத்தில் பகையும் இருக்கும்.” —இலக்கிய விமர்சகரும் பதிப்பாசிரியருமான சிரில் கான்லீ.

மனித மனங்களின் ஆழத்தில் பதுங்கிக் கிடப்பதே பகை என அநேக சமூகவியலாளர்கள் சொல்கின்றனர். “பகை என்பது மனித சுபாவத்திலேயே ஊறிக்கிடப்பது” என ஓர் ஆட்சியியல் நிபுணர் சொன்னார்.

மனிதப் பண்புகளை ஆராய்பவர்கள் இந்த முடிவுக்கு வருவது நியாயம்தானே. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் சொல்கிறபடி, ‘துர்க்குணத்தோடும்,’ ‘பாவத்தோடும்,’ பிறந்திருக்கும் ஆண்களையும் பெண்களையுமே இவர்கள் ஆராய்வதால், இதைத்தவிர வேறு எந்த முடிவிற்காவது வரமுடியுமா? (சங்கீதம் 51:5) அபூரண மனிதனைப் பற்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் படைப்பாளரே இவ்வாறு விவரித்துள்ளாரே: “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும்” கடவுள் கண்டார்.—ஆதியாகமம் 6:5.

தப்பெண்ணம், மத மற்றும் இன பாகுபாடு, அவை வித்திடும் பகைமை ஆகிய இவையனைத்துமே மனிதனின் அபூரணமும் சுயநலமும் நீரூற்றி வளர்த்த களைகள். (உபாகமம் 32:5) இந்த விஷயங்களில் எவ்வளவுதான் ததுங்கிணத்தோம்போட்டும், மனித இருதயத்தில் மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை. என்னதான் உயர்ந்த கொள்கையாக இருந்தாலும்சரி, எந்த மனித அமைப்போ அல்லது அரசாங்கமோ இதில் வெற்றி பெற முடியவில்லை. “போஸ்னியா, சோமாலியா, லைபீரியா, காஷ்மீர், காகஸஸ் மலைப்பகுதி போன்ற இடங்களில் ஓடும் இரத்த ஆறை எந்த அதிரடி காவல் படையாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை” என அயல்நாட்டு நிருபர் ஜோஹன்னா மெக்கிரீ தெரிவிக்கிறார்.

இந்த நிலைமைகளுக்கு பரிகாரத்தை தேடுவதற்கு முன், இப்படிப்பட்ட குரோதச் செயல்களுக்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதை முதலாவது நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பயம் ஊட்டி வளர்த்த பகை

பகை பல வழிகளில் வெளிப்படுத்தப்படுகிறது. பகைகளில் பல வகைகளும் உண்டு. “பயத்தோடு நின்றுவிடும் பகை உண்டு, வெறும் வெறுப்புணர்வாக காட்டப்படும் பகையும் உண்டு; அதிகாரத்தை காட்டும் பகை உண்டு, கையாலாகாத்தனத்தால் வரும் பகையும் உண்டு; பழிவாங்கும் பகை உண்டு, பொறாமையால் பிறக்கும் பகையும் உண்டு. . . . ஒடுக்குவோரின் பகை உண்டு, ஒடுக்கப்படுவோரின் பகையும் உண்டு. கனன்று கொண்டிருக்கும் பகை உண்டு, தடமின்றி தணிந்துபோகும் பகையும் உண்டு. படீரென எரிமலையாய் வெடிக்கும் பகை உண்டு, பற்றாமலே பூத்துப்போகும் பகையும் உண்டு” என எழுத்தாளர் ஆண்ட்ரூ சல்லிவன் ரத்தினச்சுருக்கமாக சொல்கிறார்.

நம் நாட்களில் மலிந்துவரும் பகைமை நிறைந்த கலவரங்களுக்கு முக்கிய காரணங்கள் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளே. சில இடங்களில், பொருளாதார ரீதியில் உயர்ந்த நிலையில், பண மிதப்பில் இருப்போர் சிலரே இருக்கின்றனர். இந்த இடங்களில்தான் தப்பெண்ணங்களும் துவேஷமும் குரோதச் செயல்களும் தலைதூக்குகின்றன. மேலும், வெளிநாட்டவர் அதிகம் வருவதால் தங்கள் சொகுசு வாழ்க்கைக்கு கேடு ஏற்பட்டுவிடுமோ என்ற பயமும் பகைக்கு வித்திடுகிறது.

இப்படி வருபவர்கள் தங்கள் வேலை வாய்ப்புகளை தட்டிச்சென்று விடுவதாகவும், குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய முன்வருவதாகவும், அல்லது நிலம், வீடு போன்ற சொத்துக்களின் விலை அடிமட்டத்திற்கு செல்ல இவர்களே காரணம் என்பதாகவும் சிலர் நினைக்கலாம். இப்படி பயப்படுவதற்கு உண்மையிலேயே காரணங்கள் இருக்கிறதா என்பது வேறு விஷயம். ஆனால், பொருளாதார அந்தஸ்து போய்விடுமோ என்ற பயமும் சமூக அந்தஸ்துக்கு அல்லது தங்களது சொகுசான வாழ்க்கைப்பாணிக்கு பங்கம் வந்துவிடுமோ என்ற பயமுமே தப்பெண்ணங்களுக்கும் பகைக்கும் முக்கிய காரணம்.

பகையை அறவே ஒழித்துக்கட்ட முதலாவது என்ன அவசியம்? மனதில் மாற்றம் தேவை.

மனமாற்றம்

“இந்த செயல்களில் ஈடுபடும் மனித மனங்களில் ஏற்படும் மாற்றமே உண்மையான மாற்றம்” என மெக்கிரீ குறிப்பிடுகிறார். மனித மனங்களில் மாற்றமா, அது எப்படி முடியும்? மனதின் ஆழத்தில் பதுங்கி இருக்கும் பகையை அறவே அகற்ற அதிக சக்திவாய்ந்த, நீடித்த, உந்துவிக்கும் உதவி கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து கிடைக்கிறதென அனுபவம் நிரூபிக்கிறது. ஏனென்றால், “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.”—எபிரெயர் 4:12.

தப்பெண்ணங்களும் பகையும் தானாகவே போய்விடாது. அல்லது அவற்றை ஒரே இரவில் ஒழித்துக்கட்டிவிடவும் முடியாது. ஆனால், படிப்படியாகத்தான் அகற்ற முடியும். இதைச் செய்யத்தான் இயேசு கிறிஸ்துவும் மற்றவர்களுக்கு உதவினார். இருதயங்களை ஊக்குவிப்பவரும் மனச்சாட்சியை பக்குவப்படுத்துபவருமாகிய இயேசு, பலருடைய மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தினார். இயேசு கிறிஸ்துவின் ஞானமான இந்த புத்திமதியை பின்பற்றிய லட்சக்கணக்கானோர் வெற்றியும் கண்டனர்: “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; . . . உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.”—மத்தேயு 5:44.

இயேசு தான் போதித்ததை செய்தும் காண்பித்தார். வரிவசூலிப்பவராக இருந்த மத்தேயுவை தன் நம்பிக்கைக்குரிய நண்பர்களில் ஒருவராக சேர்த்துக்கொண்டார். யூத சமுதாயம் வரிவசூலிப்பவர்களை இழிவாக எண்ணி பகைத்தபோதிலும் இயேசு இவ்வாறு செய்தார். (மத்தேயு 9:9; 11:19) அதுமட்டுமா! தூய வணக்கமுறையையும் அவர் நிறுவினார். அதுவரை யூதர்களால் ஒதுக்கப்பட்டும் பகைக்கப்பட்டும் வந்த புறஜாதியினரில் ஆயிரக்கணக்கானோரை, பின்னர் இந்த வணக்கமுறை அன்பாக அரவணைத்தது. (கலாத்தியர் 3:28) யூதர்கள் மட்டுமல்ல, அப்போதைய உலகின் பல்வேறு பாகங்களில் வாழ்ந்த மக்கள் அனைவரும் இயேசுவின் சீஷர்கள் ஆனார்கள். (அப்போஸ்தலர் 10:34, 35) மேலும், இவர்கள் தன்னலமற்ற அன்பிற்கு பெயர்பெற்றவர்களாக விளங்கினார்கள். (யோவான் 13:35) பகையே உருவான ஆட்கள் இயேசுவின் சீஷராகிய ஸ்தேவானைக் கல்லெறிந்து கொன்றபோது, அவர் உதிர்த்த கடைசி வார்த்தைகள் இவையே: “[யெகோவாவே], இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும்.” தன்னைப் பகைத்தவர்களுக்கும் நல்லதே நடக்கவேண்டும் என நினைத்தார் ஸ்தேவான்.—அப்போஸ்தலர் 6:8-14; 7:54-60.

நல்லது செய்ய வேண்டும் எனும் இயேசுவின் புத்திமதிக்கு அன்று போலவே இன்றும் உண்மைக் கிறிஸ்தவர்கள் செவிசாய்க்கின்றனர். உடன் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, தங்களை பகைப்போருக்கும் நன்மை செய்கின்றனர். (கலாத்தியர் 6:10) மனக்கசப்பையும் வெறுப்பையும் தங்கள் மனங்களிலிருந்து களைந்தெறிய கடுமையாக முயற்சி செய்கின்றனர். பகையும் குரோதமும் வளருவதற்கு காரணமான சக்திகள் அதிக வல்லமையுள்ளவை என்பதை உணர்ந்தவர்களாய் மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புகின்றனர். பகைக்கு பதிலாக அன்பை விதைக்கின்றனர். இவர்கள் செய்வது பூர்வகாலத்து ஞானி ஒருவர் சொன்னதற்கு இசைவாக இருக்கிறது: “பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.”—நீதிமொழிகள் 10:12.

அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்: “தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது.” (1 யோவான் 3:15) இதை யெகோவாவின் சாட்சிகள் முழுக்க முழுக்க நம்புகின்றனர். அதன் காரணமாகவே, பல்வேறு இன, கலாச்சார, மத, அரசியல் பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும், இப்போது ஒரே, பகையற்ற சமுதாயமாக, உண்மையான உலகளாவிய சகோதரர்களாக ஒற்றுமையோடு வாழ்கிறார்கள்.—அருகிலுள்ள பெட்டிகளை பார்க்கவும்.

பகை ஒழிக்கப்படும்

‘இதெல்லாம் ஒருசிலருக்கு ஒத்துவரலாம். ஆனால், பகையை பூமியிலிருந்து சுத்தமாக துடைத்தழிக்க இது உதவுமா என்ன?’ என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். நீங்கள் நினைப்பது உண்மைதான். உங்கள் இருதயத்தில் ஒருவேளை பகை இல்லாதிருக்கலாம். ஆனால், பகைக்கு பலியாகும் நிலையில் நீங்கள் இருக்கலாம். எனவே, உலகையே உலுக்கும் இந்தப் பிரச்சினைக்கு பரிகாரம் வேண்டுமென்றால் கடவுளைத்தான் நாட வேண்டும்.

பகையின் கொடூர வேர்கள் எல்லாவற்றையும் பூமியிலிருந்து ஒரேயடியாக பிடுங்கியெறிவதே கடவுளுடைய நோக்கம். இது பரலோக ஆட்சியின்கீழ் மிக விரைவில் நடக்கவிருக்கிறது. அந்த ராஜ்யத்திற்காகத்தான் ஜெபிக்கும்படி இயேசு நமக்கு கற்றுக்கொடுத்தார்: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.”—மத்தேயு 6:9, 10.

அந்த ஜெபத்திற்கு பதில் அளிக்கப்படுகையில், பகையை ஊட்டிவளர்க்கும் நிலைமைகளே இல்லாமல் போகும். பகையை வளர்த்திடும் சந்தர்ப்பங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். பகைக்கு வித்திடும் பிரச்சாரம், அறியாமை, தப்பெண்ணம் ஆகிய அனைத்திற்கும் பதிலாக ஆன்மீக அறிவு, சத்தியம், நீதி போன்றவையே நிலவும். அப்போது, கடவுள் ‘கண்ணீரை துடைத்திருப்பார், மரணமிராது, துக்கமிராது, அலறுதலுமிராது, வருத்தமுமிராது.’—வெளிப்படுத்துதல் 21:1-4.

இப்போதும் நமக்கோர் நல்ல செய்தி! நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்பதற்கு மறுக்கமுடியாத நிரூபணங்கள் இருக்கின்றன. எனவே, வெகு சீக்கிரத்தில் மிருகத்தனமான பகை இந்த பூமியிலிருந்து முற்றிலுமாக நீக்கப்படும் என நாம் உறுதியாய் நம்பலாம். (2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:3-14) கடவுள் வாக்குக்கொடுத்திருக்கும் புதிய உலகில், உண்மையான சகோதர சிநேகம் நிலவும். ஏனென்றால், மனித குலம் பரிபூரணத்தை அடைந்திருக்கும்.—லூக்கா 23:43; 2 பேதுரு 3:13.

அப்படிப்பட்ட உண்மையான சகோதர சிநேகத்தை ருசிபார்க்க அதுவரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. சகோதர சிநேகத்திற்கு நிரூபணங்கள் இன்றே அநேகம் இருக்கின்றன. பகை ஆக்கிரமித்திருந்த பல லட்சக்கணக்கான உள்ளங்களில் இன்று கிறிஸ்தவ அன்பு இடம் பிடித்துள்ளதென இந்த நிரூபணங்கள் பறை சாற்றுகின்றன. அப்படிப்பட்ட அன்பான சகோதரத்துவத்தில் நீங்களும் பாகமாக ஆகுங்கள் என உங்களை மனமார அழைக்கிறோம்!

[பக்கம் 5-ன் பெட்டி]

‘இயேசு என்ன செய்திருப்பார்?’

ஜூன் 1998. ஐக்கிய மாகாணங்களிலுள்ள டெக்ஸாஸ் நகரம். அதன் கிராமப்பகுதியில் வாழ்ந்து வந்த ஜேம்ஸ் பைர்ட் ஜூனியர் என்ற கருப்பரை மூன்று வெள்ளையர்கள் கொடூரமாய் தாக்கினர். ஜேம்ஸை ஒதுக்குப்புறமான ஓர் இடத்திற்கு இழுத்துச் சென்று, கண்மண் தெரியாமல் விளாசினர். அவருடைய இரண்டு கால்களையும் சங்கிலியால் கட்டி, தங்கள் ட்ரக்கின் பின்னே தரதரவென இழுத்துச் சென்றனர். இவ்வாறு ஐந்து கிலோமீட்டருக்கு ஜேம்ஸ் இழுத்துச் செல்லப்பட்டார். சிறு பாலம் ஒன்றில் அவருடைய உடல் மோதும்வரை இந்தக் குரூரம் தொடர்ந்தது. அந்த பத்தாண்டுகளில் (1990-களில்) நடந்த வன்முறைச் செயல்களிலேயே மிக மிக குரூரமானது இது என சொல்லப்படுகிறது.

ஜேம்ஸ் பைர்டின் தங்கையும் இரு அக்காமார்களும் யெகோவாவின் சாட்சிகள். இந்தக் குரூரச் செயலை இழைத்தவர்களைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? “கூடப்பிறந்தவங்கள்ல ஒருத்தரை சித்திரவதை செய்து, மிருகத்தனமா கொன்னாங்கன்னு நெனைச்சாலே துக்கம் நெஞ்சை அடைக்குது. பொதுவா, இந்தமாதிரி கொடூரம் ஒருத்தருக்கு செய்யப்பட்டா, அதுக்கு எப்படி பதிலடி கொடுப்பாங்க? பழிக்குப் பழி, வெறுப்ப உமிழ்ற வார்த்தைங்க அல்லது பகைய தூண்டுற பிரச்சாரங்கதான் உடனே ஞாபகத்துக்கு வரும். ஆனா, எங்கள பொருத்தவரை இது எதுவுமே எங்க மனசுக்கு வரல. நாங்க யோசிச்சதெல்லாம் இது ஒன்னுதான்: ‘இயேசு இந்த நிலைல இருந்திருந்தா என்ன செஞ்சிருப்பாரு? அவருகிட்ட இந்த கேள்விய கேட்டிருந்தா என்ன சொல்லியிருப்பார்?’ இப்படி யோசிச்சப்போ, பதில் தெளிவா தெரிஞ்சுது. வெறுப்ப உமிழ்ற வார்த்தைகள கொட்டுறதுக்கு பதிலா சமாதானமும், நம்பிக்கையும் நிறைந்த வார்த்தைகளதான் சொல்லியிருப்பாரு” என்று அவர்கள் சொன்னார்கள்.

பகையை மனதில் உரமிட்டு வளர்க்காதிருக்க அவர்களுக்கு உதவிய பைபிள் வசனங்களுள் ரோமர் 12:17-19-ம் ஒன்று. அப்போஸ்தலனாகிய பவுல் இப்படி எழுதினார்: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; . . . கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.”

அந்த சகோதரிகள் மேலும் சொன்னதாவது: “கொடூரமான அநியாயங்களயும் அக்கிரமங்களயும் ஒருத்தர் அனுபவிக்கறப்ப, ‘நா உன்ன மன்னிச்சுட்டேன்’ அப்படின்னு சொல்லி அதை மறக்கறது ரொம்ப ரொம்ப கஷ்டம். இதுதான் வாஸ்தவமுங்கூட. இததான் எங்களோட பத்திரிகைள்லயும் வாசிச்சதா ஞாபகம் இருக்குது. இந்த சந்தர்ப்பங்கள்ல மன்னிக்கறதுங்கறது, மனக்கசப்பை வளர்த்துக்காம இருக்கறததான் அர்த்தப்படுத்துது. அப்பதான் அன்றாட வாழ்க்கைய நல்லவிதமா நடத்த முடியும். வெறுப்பையும் கசப்பையும் மனசுல வளத்துக்கிட்டா நமக்குதான் கேடு.” பகை எனும் ஆணிவேர் நம் மனங்களில் வேரூன்றாமல் இருக்க பைபிள் எந்தளவுக்கு உதவுகிறது என்பதற்கு என்னே அருமையான ஆதாரம்!

[பக்கம் 6-ன் பெட்டி]

பகை நட்பாக மலர்ந்தது

சமீப ஆண்டுகளில், ஆயிரக்கணக்கானோர் வேலை தேடி கிரீஸுக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கும் பொருளாதார நிலைமைகள் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. அவை மோசமாகிக்கொண்டே போவதால் வேலை வாய்ப்புகள் குறைந்திருக்கின்றன. இதனால், வேலை தேடி மக்கள் அலைமோதுகின்றனர். இது, அங்குள்ள இனத்தொகுதிகளிடையே பகையை மூட்டியுள்ளது. அல்பேனியாவிலிருந்தும் பல்கேரியாவிலிருந்தும் வந்து குடியேறியவர்களிடையே இருக்கும் போட்டி இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. கிரீஸின் பல பகுதிகளில், இந்த இரு தொகுதியினரிடையே கலவரங்கள் தீவிரமாகியுள்ளன.

ஆனால், இந்தத் தீரா பகை எப்படி இரு குடும்பங்களுக்கிடையே நட்பாக மாறியது என பார்ப்போம். வடகிழக்கு பெலபானீஸாஸில் உள்ள பட்டணம் கீயாடோ. இங்கு வாழும் பல்கேரிய குடும்பம் ஒன்றும் அல்பேனியாவைச் சேர்ந்த ஒருவரும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிக்க ஆரம்பித்தார்கள். இதனால் ஒருவருக்கு ஒருவர் பரிச்சயமும் ஏற்பட்டது. அந்த பல்கேரியருடைய பெயர் ஈவான். அல்பேனியரின் பெயர் லூலிஸ். இந்த இரு இனத்தாரிடையே பெரும்பகை இருந்தபோதிலும், பைபிள் நியமங்களை வாழ்க்கையில் பின்பற்றியதால் இருவரிடையே பகையல்ல நட்பே மலர்ந்தது. உண்மையான சகோதர சிநேகம் வளர்ந்தது. இதனால், லூலிஸுக்கு தன் வீட்டுக்குப் பக்கத்திலேயே வீடு பார்த்துக் கொடுத்தார் ஈவான். அதுமட்டுமா! இந்த இரு குடும்பங்களும் அன்புப் பரிமாற்றத்தோடு உணவையும் ஏன் உடமைகளையும்கூட பரிமாற்றிக் கொண்டார்கள். ஈவானும் லூலிஸும் இப்போது முழுக்காட்டுதல் பெற்ற சாட்சிகள். யெகோவாவின் சாட்சிகளாக இவர்கள் இருவரும் இப்போது நற்செய்தியை பிரசங்கிப்பதில் கைகோர்த்து செல்கின்றனர். இந்த கிறிஸ்தவ சிநேகம் மற்றவர்கள் கண்களில் படாமலா போய்விடும்!

[பக்கம் 7-ன் படம்]

கடவுளுடைய ராஜ்யத்தில் பகைமையின் கொடூர வேர்கள் அனைத்தும் பிடுங்கியெறியப்படும்