பகை எனும் பாதகம்
பகை எனும் பாதகம்
“பிறத்தியாரை சரியாக புரிந்துகொள்ளாமலேயே ஜனங்கள் அவர்களை வெறுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.” —கட்டுரையாளரும் அரசியல் நிபுணருமான ஜேம்ஸ் ரஸல் லோவல்.
பகை. மூச்சு முட்ட வைக்கும் விஷவாயு அது. கிழக்கு டிமோர், கொசோவோ, லைபீரியா, லிட்டில்டன், சராஜிவோ என்ற பெயர்களைக் கேட்டாலே போதும் வேதனையில் நம் இதயம் நொறுங்கி விடும். வெள்ளையர்களின் கொடூர ஆதிக்கத்தையும் நாஸி கொடுங்கோலர்களையும் நினைத்தாலே நம் குலை நடுங்கும். தரைமட்டமாக்கப்பட்ட நகரங்களும் பெரிய பெரிய சவக்குழிகளும் குவிந்துகிடக்கும் பிணங்களும்தான் நினைவுக்கு வரும்.
பகையோ, குரோதமோ, கலவரமோ, வன்முறையோ இல்லாத எதிர்காலம் பற்றிய கனவுகளெல்லாம் மழையில் அடித்து செல்லப்பட்ட மணல் வீடாயிற்று. மறைந்த பிரெஞ்சு தலைவரின் மனைவி டான்யல் மிட்டரான்ட், தன் இளமைக்கால பசுமையான நினைவுகளை விவரிக்கிறார்: “எந்தவித பயமுமின்றி ஒருவரையொருவர் சந்தேகிக்காத சுதந்திரமான கூட்டுக்குடும்ப வாழ்க்கை; எல்லாரோடும் சுமுகமான உறவில் மனநிம்மதியோடு வாழும் வாழ்க்கை; தங்களுடைய தேவைகள் அனைத்தையும் பரிவோடு கவனித்துக் கொள்ளும் உலக அரசாங்கத்தின்கீழ், நல்ல ஆரோக்கியத்தோடும் சமாதானத்தோடும் கண்ணியத்தோடும் வாழும் வாழ்க்கை என இப்படித்தான் கோட்டை கட்டினோம்.” ஆனால், இந்தப் பொன்னான கனவுகள் எல்லாம் என்னவாயிற்று? “ஐம்பது ஆண்டுகளுக்குப் பின், எங்கள் கற்பனைக் கோட்டைகளெல்லாம் தவிடுபொடியாகிவிட்டன.”
புற்றீசல் போல் கிளம்பும் குரோதச் செயல்களால் எழும் மரண ஓலம் இன்று எல்லாரையுமே நடுநடுங்க வைக்கிறது. இப்படிப்பட்ட செயல்கள் அதிகமாகிக்கொண்டே போவது மட்டுமா, மிக மிக குரூரமான முறையிலும் நடக்கின்றன. பகைமை உணர்ச்சியால் வெடிக்கும் இப்படிப்பட்ட செயல்களால் மனித உயிருக்கு பாதுகாப்பே இல்லை. ஒவ்வொரு நாளும் கேள்விப்படும் இந்த செயல்களின் குரூரத்தன்மை இரத்தத்தை உறைய வைக்கின்றன. தனிப்பட்ட விதத்தில் ஒருவேளை நம் ஊரிலோ அல்லது நாட்டிலோ இதுவரை இப்படிப்பட்ட செயல்கள் நிகழாதிருக்கலாம். ஆனால், எப்போது பாயலாம் என காத்திருக்கும் புலிபோல் இதுவும் பதுங்கி இருக்கிறது. இன்று தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்படும் செய்திகளாகட்டும், நாட்டு நடப்பு பற்றிய தொகுப்புகளாகட்டும் குரூரச் செயல்களைத்தான் முழுக்க முழுக்கப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இவை இன்டர்நெட்டையும் விட்டுவைக்கவில்லை. இதோ ஒருசில உதாரணங்கள்!
பகை எனும் காட்டுத்தீயைப் பற்ற வைக்கும் ஒரு பொறி நாட்டுப்பற்று. எப்போதையும்விட கடந்த பத்தாண்டுகளில் இது மிகத் தீவிரமாக பரவியுள்ளது. சர்வதேச உறவுகளுக்கான ஹார்வர்ட் மையத்தின் இயக்குநர், ஜோஸஃப் எஸ். நை ஜூனியர் இவ்வாறு சொல்கிறார்: “உலகின் பல பாகங்களில் நாட்டுப்பற்று இன்று படுவேகமாக பரவி வருகிறது. உலகத்தையே ஒரு பெரிய குடும்பமாக ஆக்குவதற்கு பதிலாக பல பிரிவுகளாக சின்னாபின்னமாக்கி இருக்கிறது. இது கலவரங்களையும் கலகங்களையும்தான் வளர்த்திருக்கிறது.” இது வெளிப்படையாய், அப்பட்டமாய் தேசிய அளவில் வெளிப்படும் பகைமை.
ஆனால், வஞ்சகமாக இலைமறை காயாக வெளிப்படும் பகைமையும் உண்டு. இது ஒரு நாட்டின் எல்லைக்குள்ளேயோ அல்லது ஓர் ஊருக்குள்ளேயோ புகைந்து கொண்டிருக்கலாம். இதைத்தான் கனடாவில் நிகழ்ந்த நிகழ்ச்சி வெட்டவெளிச்சமாக்குகிறது. கனடாவின் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த வெள்ளையர்களில் ஐவர், வயதான சீக்கியர் ஒருவரை கொன்றனர். “பாகுபாடின்றி பல இனத்தாருக்கும் பரிவுகாட்டும் நாடு என பெயர் பெற்ற கனடாவில் மறுபடியும் குரோதச் செயல்கள் முளைத்து எழுந்திருப்பதை” இந்நிகழ்ச்சி தெளிவாகக் காட்டுவதாக சிலர் ஒத்துக்கொள்கின்றனர். அடுத்ததாக ஜெர்மனியில் என்ன நடந்தது என பார்ப்போம். கடந்த சில வருடங்களாக, படிப்படியாக குறைய ஆரம்பித்த தீவிரவாதிகளின் இனப்படுகொலைகள், 1997-லோ 27 சதவீதமாக கிடுகிடுவென உயர்ந்தது. “இது வருந்தத்தக்க விஷயம்” என உள்துறை அமைச்சர் மான்ஃப்ரேட் கான்டா கருத்து தெரிவிக்கிறார்.
அடுத்ததாக வட அல்பேனியாவிலிருந்து வரும் ஓர் அறிக்கை. 6000-க்கும் அதிகமான பிள்ளைகள் சுதந்திரமாக வெளியே நடமாட முடியாமல் தங்கள் வீடுகளிலேயே அடைபட்டு கிடக்கின்றனர் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஏன்? தங்கள் குடும்ப எதிரிகளால் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்ற பயம்தான் இதற்கு காரணம். குலம், கோத்திரம் அடிப்படையில், பல தலைமுறைகளாக குடும்பங்களுக்கிடையே தொடரும் சண்டைக்கு பலியாடுகளே
இப்பிள்ளைகள். இப்படிப்பட்ட இனக்கலவரங்கள் “ஆயிரக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிட்டன.” அடுத்து வருவது ஐக்கிய மாகாணங்கள். “1998-ல், அமெரிக்க புலனாய்வுத் துறையிடம் (FBI) அறிக்கை செய்யப்பட்ட 7,755 குரோதச் செயல்களில் பாதிக்கும் அதிகமானவை இன துவேஷத்தால் இழைக்கப்பட்டவை” என எஃப்பிஐ தெரிவிக்கிறது. இதுபோல் இன்னும் அநேக குரோதச் செயல்கள் இழைக்கப்படுகின்றன. மதம், இனம், நாடு போன்றவையின் அடிப்படையில் எழும் துவேஷம், இயலாமை போன்றவையே இவற்றிற்கு காரணம்.மேலும், அந்நியர்களுக்கு அல்லது வெளிநாட்டவருக்கு எதிராக செய்யப்படும் பாதகம்தான் தலைப்புச் செய்திகளாக செய்தித்தாள்களை அலங்கரிக்கின்றன. இவ்விதமான அவலங்கள் முக்கியமாக அகதிகளுக்கு எதிராக இழைக்கப்படுகின்றன. இன்று 2.1 கோடிக்கும் அதிகமானவர்கள் அகதிகளாக அல்லல்படுகின்றனர். இவ்விதமாக வெளிநாட்டவர் மீதோ, அந்நியர் மீதோ வெறுப்பைக் காட்டுபவர்களில் பெரும்பான்மையர் இளைஞரே என்பது வருத்தத்திற்குரிய விஷயம். பொறுப்பில்லாத அரசியல் தலைவர்களும், தங்கள் பெயர் அடிபடக்கூடாது என நினைக்கும் பெருந்தலைகளுமே இப்படிப்பட்ட செயல்களை தூண்டிவிடுகின்றனர். இதற்கு பலியாவது இளைஞரே. இது போன்ற செயல்களுக்கு வித்திடும் மற்ற காரணங்கள், அவநம்பிக்கை, சகிப்பின்மை, குறிப்பிட்ட வகுப்பாரை அல்லது நாட்டினரைப் பற்றி பொதுவாக நிலவும் தப்பான அபிப்பிராயம் போன்றவையே.
பகை எனும் இந்த பாதகத்திற்கு காரணங்கள் என்ன? பகைமையை அறவே ஒழித்துக்கட்ட என்ன செய்யலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதிலை அடுத்த கட்டுரை விளக்கும்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Daud/Sipa Press