காத்திருப்பதும் கலையே!
காத்திருப்பதும் கலையே!
பெட்ரோல் நிரப்ப போனால் க்யூ. சாமான்கள் வாங்க போனால் க்யூ. ஏதாவது வாய்க்கு ருசியா சாப்பிடலாம் என்று ஓட்டலுக்கு போனால் அங்கேயும் க்யூ. அட நோய் வந்தால் உடனே டாக்டரை பார்க்க முடிகிறதா? அங்கேயும் க்யூ. பஸ் பிடிக்கப் போனால் க்யூ. ரயிலுக்கும் க்யூ. எங்கே போனாலும் எதுக்கு போனாலும் க்யூ க்யூ க்யூ. இப்படி காத்திருந்து காத்திருந்து வருடா வருடம் எக்கச்சக்கமாக நேரம் வீணாவதுதான் மிச்சம்! வாழ்நாளில் முக்கால்வாசி காத்திருந்தே கரைந்திருந்தாலும் ஆச்சரியமில்லை! உதாரணமாக, ஜெர்மன் மக்களுக்கு டிராபிக் ஜாமில் காத்திருப்பதில் வருடத்திற்கு 470 கோடி மணிநேரம் வீணாகிறது! இத்தனை கோடி மணிநேரம் 7,000 பேருடைய ஆயுளுக்கு சமம்!
காத்திருப்பதென்றால் பயங்கர கடுப்பாக இருக்கும். காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடு ஓடு என்று ஓடியும் எல்லா வேலைகளையும் முடிக்க முடியாமல் முழி பிதுங்கும் இந்தக் காலத்தில் காத்திருப்பது என்பது மகா கொடுமை. அந்த நேரத்தில், முடிக்க வேண்டிய வேலைகளை நினைத்தால் முள்மீது நிற்பது போல் இருக்கும். அலெக்சாண்டர் ரோஸ் என்ற கதாசிரியர் ஒருமுறை இவ்வாறு கூறினார்: “வாழ்க்கையில் இப்படி காத்திருப்பதுதான் ரொம்ப கொடுமை. இது மட்டும் இல்லை என்றால் பாதி கஷ்டம் குறைந்துவிடும்.”
“காலம் காசு போன்றது” என்று 250 வருடங்களுக்கு முன்பே அமெரிக்க அரசியல் மேதை பென்ஞ்சமேன் பிராங்கிலின் கூறினார். அதனால்தான் பிசினஸில் எப்பாடுபட்டாவது நேரம் வீணாவதை தடுக்கிறார்கள். குறைந்த நேரத்தில் அதிக பொருட்களை உற்பத்தி செய்வதே பெரும் லாபத்தை ஈட்டுகிறது. வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி கொடுத்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள் என்பதை அறிந்து, ஃபாஸ்ட் புட், டிரைவ் இன் பேங்கிங் (வாடிக்கையாளர்களை காரிலிருந்து இறங்கக்கூடவிடாமல் சேவை செய்யும் வங்கிகள்) போன்ற மக்களோடு நேரடி தொடர்புடைய பிசினஸ்கள் மின்னல் வேகத்தில் சேவை புரிகின்றன.
ஆயுள் கரைகிறதே!
“ஐயோ! காத்திருப்பதில் நம் ஆயுளெல்லாம் கரைகிறதே!” என்று புலம்பினார் பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்க கவிஞர் ரால்ஃப் வால்டோ எமர்ஸன். இப்படி காத்திருக்கையில் நமக்கு சலிப்பு வருவதோடு பல சங்கடங்களும் வருவதாக சமீபத்தில் லான்ஸ் மாரோ என்ற கதாசிரியரும் புலம்பினார்.
“காத்திருக்கையில் நம்மிடமிருந்து திருட்டுப்போகிறது” என்கிறார். எது திருட்டுப்போகிறது? “நம்முடைய பொன்னான நேரம் திருட்டுப்போகிறது. நம் ஆயுள் மெல்ல கரைகிறது. கைநழுவிப்போன காலம் மறுபடியும் கிடைக்கவே கிடைக்காது.” நேரம் போனது போனதுதான் என்பது ஜீரணிக்க முடியாத உண்மை.நாம் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்வதாய் இருந்தால், பல மணிநேரம் காத்திருக்கவும் கவலைப்பட மாட்டோம். ஆனால் நமக்கு இருப்பதோ அற்ப ஆயுள். இந்த உண்மையை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே ஒருவர் பைபிளில் இவ்வாறு உரைத்தார்: “எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.” (சங்கீதம் 90:10) அரசனுக்கும் சரி ஆண்டிக்கும் சரி குறுகிய வாழ்நாளே! நம் ஆயுள் கடிகாரம் மணிநேரங்களாய், நிமிடங்களாய், நொடிகளாய் ஓடி சீக்கிரத்திலேயே நின்றுவிடுகிறது. ஆனாலும், சிலருக்காக, சில வேலைகளுக்காக நம் நேரம் வீணாவதை தவிர்க்க முடிவதில்லை.
காத்திருக்கும் கலையை கற்க
முன்னால் போகும் வண்டிகளை முந்தியடித்துக்கொண்டு வேகமாக ஓட்டும் டிரைவருடன் பயணம் செய்த அனுபவம் இருக்கிறதா? அவசரமாக போகவேண்டிய அவசியம் இல்லாதபோதும் அசுரவேகத்தில் பறப்பார். ஏனென்றால் மற்ற டிரைவர்கள் முந்திக்கொண்டு போவதை அவரால் பொறுக்க முடியாது. இதிலிருந்து அவர் காத்திருக்கும் கலையை கற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. காத்திருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டுமா? ஆம். காத்திருக்க கற்றுக்கொள்வதும் ஒரு கலையே. யாரும் பிறக்கும்போதே இந்தக் கலையோடு பிறக்கவில்லை. குழந்தைக்கு பசியெடுத்தால் அல்லது ஏதாவது அசௌகரியம் இருந்தால் உடனே அழுது காரியத்தை சாதித்துவிடும். ஆனால் எல்லாம் உடனே கிடைக்காது, காத்திருக்க வேண்டும் என்பதை அது வளர வளரத்தான் கற்றுக்கொள்கிறது. ஆகவே, காத்திருப்பதை தவிர்க்க முடியாத இந்தக் காலத்தில் காத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும். காத்திருப்பது பெரியவர்களுக்கு லட்சணம்.
ஆனால், எல்லா நேரங்களிலும் பொறுமையின் சிகரமாக இருக்க முடியாது. பிரசவ வலியில் துடிக்கும் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் கணவனிடத்தில் நிதானமாக காத்திருக்க சொன்னால் முடியுமா? பண்டைய காலத்தில் கடவுள் சோதோம் என்ற பட்டணத்தை அழிப்பதற்கு முன், லோத்து என்ற நீதிமானை அந்தப் பட்டணத்தை விட்டு வெளியேற்ற தேவதூதர்களை அனுப்பினார். அவர்கள் லோத்தையும் அவருடைய குடும்பத்தினரையும் விரைவாக நகரத்தைவிட்டு வெளியேறும்படி துரிதப்படுத்தினார்கள். அழிவு விரைந்துகொண்டிருந்த வேளையில் அவர்களை எப்படியும் உடனே காப்பற்ற நினைத்த தேவதூதர்களிடம் பொறுமையை எதிர்பார்க்க முடியுமா? (ஆதியாகமம் 19:15, 16) பெரும்பாலும், உயிருக்கு ஆபத்து ஏற்படாத சமயங்களில்தான் காத்திருக்க நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. சிலருடைய திறமையின்மை அல்லது அக்கறையின்மையால் சில நேரங்களில் காத்திருக்க நேரிடுகிறது. இதுபோன்ற சமயங்களில் பொறுமையை கடைப்பிடித்தால் காத்திருப்பதன் கடுகடுப்பை கொஞ்சம் தணிக்கலாம். காத்திருக்கும் நேரத்தில் எதையாவது உபயோகமாக செய்தால் பொறுமையாக இருப்பது சுலபம். காத்திருக்கும் நேரத்தை நல்லவிதத்தில் உபயோகிக்க சில ஆலோசனைகளை பக்கம் 5-ல் காண்க.
“என்னை போய் காத்திருக்க வைத்துவிட்டார்களே!” என்று உள்ளம் பொருமும்போது பொறுமைக்கு இடமிருக்காது; பெருமைதான் தலைதூக்கும். பெருமை என்ற குணம் இருந்தால் பின்வரும் பைபிள் புத்திமதியை கேளுங்கள்: “பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.” (பிரசங்கி 7:8) பெருமை என்ற கெட்ட குணத்திற்கு மனமேட்டிமை, கர்வம், ஆணவம் என்று நிறைய பெயர்கள். இது கடவுளுக்கு பிடிக்காத குணம் என்று பைபிளில் நீதிமொழிகள் கூறுகிறது: “மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்.” (நீதிமொழிகள் 16:5) பொறுமையாக இருக்க கற்றுக்கொண்டால் காத்திருக்கவும் கற்றுக்கொள்வோம். அதற்கு முன் நம்மை பற்றியும், நம்மை சுற்றியுள்ளவர்களோடு நமக்குள்ள நல்லுறவை பற்றியும் நன்றாக தெரிந்திருப்பது அவசியம்.
“பொறுத்தார் பூமியாழ்வார்”
காத்திருந்தால் கைமேல் பலன் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் காத்திருப்பதிலும் சுகம் இருக்கும். இன்றும், கடவுளை உண்மையோடு தொழுதுகொள்கிற மக்கள் அவர் பைபிளில் வாக்குக்கொடுத்திருக்கும் எல்லா ஆசீர்வாதங்களையும் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்று காத்திருக்கிறார்கள். கடவுள் வாக்குக்கொடுத்திருக்கும் பல ஆசீர்வாதங்களில் ஒன்று: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” இது கடவுள் சொல்லி எழுதப்பட்ட வசனம். இதே ஆசீர்வாதத்தை அப்போஸ்தலன் யோவான் மறுபடியும் நினைப்பூட்டினார்: “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (சங்கீதம் 37:29; 1 யோவான் 2:17) ஆகவே, எதிர்காலத்தில் நித்திய காலத்திற்கு வாழப்போகும் நமக்கு காத்திருப்பது ஒன்றும் பெரியதல்ல. ஆனால் இப்போது நம் வாழ்க்கை நிரந்தரம் இல்லையே! சாவே இல்லாமல் நிரந்தரமாக வாழ்வது நடைமுறைக்கு ஒத்துவருமா?
இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் முன், கடவுள் நம் முதல் பெற்றோரை சாவே இல்லாமல் நிரந்தரமாக வாழவே படைத்தார் என்பதை மறக்கவேண்டாம். அவர்கள் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்ததால் நிரந்தரமாக வாழும் வாய்ப்பை இழந்தார்கள். நாம் அவர்களுக்கு ஆதியாகமம் 3:15; ரோமர் 5:18.
பிள்ளைகளாக பிறந்ததால் நமக்கும் அதே கதி. அவர்கள் பாவம் செய்த உடனேயே பரிகாரத்தையும் கடவுள் சொல்லிவிட்டார். அவர் ஒரு ‘வித்துவை’ அதாவது தமது குமாரனாகிய இயேசுவை பூமியில் தோன்ற செய்வதாக வாக்குக்கொடுத்தார்.—கடவுள் வாக்குகொடுத்திருக்கும் ஆசீர்வாதத்தை பெற நாம் ஒவ்வொருவரும் பொறுமையோடு இருப்பது அவசியம். ஆனால் அத்தகைய ஆசீர்வாதங்களுக்காக பொறுமையோடு காத்திருப்பதும் இல்லாததும் நம் விருப்பம். பொறுமைக்கு நல்ல எடுத்துக்காட்டு உழவன் என்று பைபிள் சொல்கிறது. அவன் விதை விதைத்ததும் அடுத்த நாளே அறுவடையை எதிர்பார்ப்பதில்லை. பொறுமையோடு காத்திருக்கிறான். அறுவடை ஆகும்வரை பயிரை கண்ணும் கருத்துமாக பராமரிக்கிறான். அவனது பொறுமைக்கும் கைமேல் பலன் கிடைக்கிறது. ஆகவே அவனிடமிருந்து பொறுமையைக் கற்றுக்கொள்ளலாம். (யாக்கோபு 5:7) பண்டைய காலத்தில் கடவுளுக்கு விசுவாசமாக இருந்த ஆண்களும் பெண்களும் பொறுமையின் சிகரங்களாக திகழ்ந்ததாக அப்போஸ்தலன் பவுல் கூறினார். கடவுள் மனிதர்களுக்காகவும் இந்தப் பூமிக்காகவும் வைத்திருக்கும் லட்சியத்தை நிறைவேற்றுவார் என்று அவர்கள் ஆவலோடு இருந்தார்கள். ஆனாலும் கடவுளுக்கென்று நேரம் காலம் இருக்கிறது. அதற்காக அவர்கள் காத்திருந்தார்கள். ஆகவே அவர்கள் ‘வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.’ நாமும் அவர்களைப் போலவே பொறுமையோடு இருக்கும்படி பவுல் ஊக்கமூட்டினார்.—எபிரெயர் 6:11, 12.
ஆக, காத்திருப்பதை தவிர்க்கவே முடியாது. ஆனால் அதற்காக கவலையில் ஆழ்ந்துவிட தேவையில்லை. கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேற காத்திருக்கும் மக்கள் காத்திருப்பதில் சுகம் காண்கிறார்கள். காத்திருக்கும் நேரத்தை வீணாக்காமல், அந்த நேரத்தை கடவுளோடு நல்லுறவை வளத்துக்கொள்ளவும், தங்கள் விசுவாசத்தை மற்றவர்களிடம் எடுத்து சொல்லவும் செலவிடுகிறார்கள். ஜெபத்திலும், பைபிள் படிப்பிலும், படித்ததை மனதில் அசைபோடுவதிலும் காத்திருக்கும் நேரத்தை செலவிடுகிறார்கள். அதனால், கடவுள் நினைத்திருக்கும் நேரத்தில் அவர் சொன்னதையெல்லாம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இவர்களுக்கு நாளுக்கு நாள் வளர்கிறது.
[பக்கம் 5-ன் பெட்டி/படங்கள்]
காத்திருப்பதன் கடுகடுப்பை தணிக்க:
நீங்கள் காத்திருக்கும் நேரத்தை உபயோகமாக செலவிட முன்பே திட்டமிடுங்கள். படிப்பதற்கு எதையாவது கொண்டு செல்லுங்கள். ஏதாவது எழுத வேண்டியிருந்தால் அதை முடியுங்கள். பூ தையல், குரோஷா தையல் என எதையாவது உபயோகமாக செய்யுங்கள்.
இந்த அவசரகதி உலகில் ஆற அமர எதையும் யோசிக்க முடிவதில்லை. ஆகவே காத்திருக்கும் நேரத்திலாவது நல்லவைகளை மனதில் அசைபோடுங்கள்.
போன் பக்கத்தில் பத்திரிகைகளை வைத்திருங்கள். போன் லைனுக்காக ஐந்து பத்து நிமிடங்கள் காத்திருந்தாலும் அந்த நேரங்களில் படிக்கலாம். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பல பக்கங்களை படித்துவிடலாம்.
கும்பலாக காத்திருக்கையில், வாய்ப்பு கிடைத்தால் உரையாடலை தொடங்கி, நல்ல கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
எழுத நோட்டு புத்தகத்தை அல்லது படிப்பதற்கு சில பத்திரிகைகளை உங்களுடைய காரில் வையுங்கள். காத்திருக்கும் நேரத்தில் உபயோகமாக இருக்கும்.
கண்களை மூடி, மனதை ரிலாக்ஸ் செய்யுங்கள் அல்லது கடவுளை நினைத்து ஜெபம் செய்யுங்கள்.
நிதானமும் முன்யோசனையும் இருந்தால் காத்திருப்பதும் சுகமே!