Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிலியில் சத்திய விதைக்கு நீர் தெளித்தல்

சிலியில் சத்திய விதைக்கு நீர் தெளித்தல்

ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை

சிலியில் சத்திய விதைக்கு நீர் தெளித்தல்

தென் அமெரிக்காவிலுள்ள வடக்கு சிலி பாலைவனம், மழைத்துளி தன்னை தழுவாதா என்று பல வருடங்களாய் ஏங்கித் தவித்திருக்க, ஈரநெஞ்சம் கொண்ட கார்மேகம் கைகொடுக்க, உருவானது எழில் கொஞ்சும் அழகிய சோலை. மழையின்றி வாய்பிளந்த பூமியில் இன்று நீரோடைகள் சலங்கை கட்டி ஓடுகின்றன. பொட்டல் காடுகள் மறைந்து கண்ணுக்கு எட்டும் தூரமெல்லாம் மலர்கள் பூத்து மாநாடு நடத்துகின்றன. இந்த அழகு சோலை பன்னாட்டு சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கிறது.

இயற்கையின் இந்த அதிசயத்தில் சொக்கிப்போயிருக்கும் சில நாட்டு மக்கள், இன்னொரு அதிசயத்தையும் கண்டு சொக்கிப்போயிருக்கிறார்கள். சிலி நாட்டில் பைபிள் சத்தியம் என்ற தண்ணீர் மூலை முடுக்கெல்லாம் பாய்ந்தோடி, பல நல்ல உள்ளங்களை நனைத்ததால், அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு சீஷர்களாய் “பூத்து” குலுங்குகிறார்கள். இவ்வாறு புதிய புதிய சீஷர்கள் பூத்து குலுங்க வேண்டும் என்பதற்காக யெகோவாவின் சாட்சிகள் சத்திய நீரை பல வழிகளில் பாய்ச்சுகிறார்கள். அதில் ஒன்று, தொலைபேசியில் பைபிளைப் பற்றி சொல்வது. இதோ சில உதாரணங்கள்.

கடவுளுடைய சேவைக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்தவர் கேரினா. முழுநேர சுவிசேஷ ஊழியராக சேவை செய்கிறார். எவ்வாறு தொலைபேசியில் பைபிளைப் பற்றி எடுத்துக்கூறலாம் என்பதை யெகோவாவின் சாட்சிகளுடைய வட்டார மாநாட்டில் நடித்து காட்டும்படி இவரிடம் கேட்டார்கள். ஆனால் கேரினாவுக்கு தொலைபேசியில் பைபிளைப் பற்றி பேசி பழக்கமே இல்லை. மாநாட்டில் நடித்து காட்ட வேண்டுமென்றால் தொலைபேசியில் சாட்சிகொடுத்த அனுபவம் இருக்க வேண்டுமே! ஆகவே, கேரினாவுக்கு தேவையான உதவியையும் ஊக்கத்தையும் தருவதற்காக ஒரு மூப்பரும் அவருடைய துணைவியாரும் முன்வந்தார்கள். தொலைபேசியில் பைபிளைப் பற்றி மற்றவர்களிடம் எப்படி பேசலாம் என்பதற்கு சில நடைமுறையான ஆலோசனைகளை கொடுத்தார்கள். இவ்விஷயத்தில் கடவுளின் உதவியைக் கேட்டு ஜெபம் செய்யும்படி அறிவுரை தந்தார்கள். அவர்கள் சொன்னதையெல்லாம் மனதில் வைத்து, கடவுளிடம் ஜெபம் செய்துவிட்டு, டெலிபோன் பக்கத்தில் அமர்ந்தார் கேரினா.

டெலிபோன் புத்தகத்தை புரட்டி, பக்கத்து கிராமத்தில் இருக்கும் ஒருவருடைய எண்ணை சுழற்றினார். மறுமுனையில் “ஹலோ” என்ற குரல் ஒரு டெலிபோன் ஆப்பரேட்டரிடமிருந்து வந்தது. பைபிளை பற்றி சொல்வதற்காக போன் செய்ததாக கேரினா கூறினார். அந்த ஆப்பரேட்டரும் பைபிளைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினார். ஆகவே மூன்று நாட்களுக்கு பிறகு மறுபடியும் பேச முடிவுசெய்தனர். இப்படியே போனில் பேசி பேசி, கடவுள் நம்மிடத்தில் எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிறு புத்தகத்திலிருந்து பைபிள் படிக்க ஆரம்பித்தார்கள். அன்று முதல் இவர்களுடைய பைபிள் படிப்பு கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெறுகிறது. டெலிபோன் ஆப்பரேட்டராக இருக்கும் பெண்மணி கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் அடங்கிய புத்தகங்களை கேரினா அனுப்பியுள்ளார்.

பர்னாடா என்ற சகோதரிக்கு ராங் நம்பர் போன்கால் வந்தபோது, “சாரி” என்று எரிச்சலோடு லைனை கட் செய்வதற்கு பதிலாக, ராங் நம்பரை டயல் செய்தவரிடம் தான் ஒரு யெகோவாவின் சாட்சி என்று அறிமுகம் செய்துகொண்டு, பைபிளை பற்றி தெரிந்துகொள்ள விருப்பம் இருந்தால் தான் உதவுவதாக கூறினார். கடவுள் வெகு விரைவில் அநியாயங்களை எல்லாம் ஒழித்துவிடுவார் என்று பைபிளிலிருந்து கூறினார். அந்த ராங் நம்பர் ஜென்டில்மேனும் பேச்சை ஆர்வமாக கேட்க ஆரம்பித்தார். பிறகு அவர் தன் போன் நம்பரையும் பர்னாடாவுக்கு கொடுத்ததால் போனிலேயே நிறைய தடவை பைபிளைப் பற்றி பேசினார். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்திலிருந்தும் ஒரு பகுதியை போனிலேயே வாசித்து காட்டினார். அந்த ஜென்டில்மேன் தனக்கு அந்தப் புத்தகம் வேண்டும் என்றார். பர்னாடா அந்தப் புத்தகத்தோடு ஒரு பைபிளையும் சேர்த்து அனுப்பிவைத்தார். உள்ளூர் சகோதரரையும் அனுப்பி வைத்து, சத்தியம் என்ற தண்ணீரை தொடர்ந்து பாய்ச்சுவதற்கும் ஏற்பாடு செய்தார். இப்போது இந்தப் “புதிய செடி” நன்றாக தழைத்து வளர்கிறது.

இன்று இந்த உலகமே ஆன்மீக மழையின்றி பாலைவனமாக வறண்டுகிடக்கிறது. இத்தகைய பாலை நிலத்தின் அடியில் எத்தனையோ நல் உள்ளம் என்ற விதைகள் புதைந்து கிடக்கின்றன. அவர்களுக்கு சத்தியம் என்ற ஜீவ தண்ணீரை தெளித்தால் போதும், சட்டென்று முளைத்துவிடுவார்கள். முளைக்கும் இவர்களுக்கு தொடர்ந்து சத்திய தண்ணீரை பாய்ச்சினால், யெகோவா தேவனுக்கு உத்தம ஊழியர்களாய் “பூத்து” குலுங்குவார்கள்.​—ஏசாயா 44:3, 4.