நம்முடைய அருமையான ஆஸ்தி—அதை எப்படி கருதுகிறோம்?
நம்முடைய அருமையான ஆஸ்தி—அதை எப்படி கருதுகிறோம்?
“வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.”—மத்தேயு 25:34.
1. எவற்றையெல்லாம் ஜனங்கள் ஆஸ்தியாக பெற்றிருக்கின்றனர்?
எல்லாருக்குமே ஆஸ்தி இருக்கிறது. சிலர் சொத்து சுகத்தை ஆஸ்தியாக பெறலாம். இன்னும் சிலருக்கு வறுமையே ஆஸ்தி. சிலசமயம், தாங்கள் பட்ட கஷ்டங்களால் அல்லது கேட்ட சங்கதிகளால் மற்றொரு இனத்தாரை கடுமையாக பகைத்துக்கொள்வோர் இதே பகைமை உணர்ச்சியை பரம்பரை சொத்தாக அடுத்த தலைமுறையினருக்கு அளிக்கின்றனர். எனினும், நாம் அனைவருமே பொதுவாக பெற்றிருக்கும் பரம்பரை சொத்து ஒன்றுள்ளது. அதுதான், முதல் மனிதனாகிய ஆதாம் விட்டுச் சென்ற பாவம் என்ற ஆஸ்தி. இந்த ஆஸ்தி நமக்கு மரணத்தைத்தான் தருகிறது.—பிரசங்கி 9:2, 10; ரோமர் 5:12.
2, 3. தொடக்கத்தில் யெகோவா, என்ன ஆஸ்தியை ஆதாம் ஏவாளின் சந்ததியார் பெற வழிசெய்திருந்தார், அவர்களுக்கு அது ஏன் கிடைக்கவில்லை?
2 அன்புள்ள பரலோக தகப்பனாக யெகோவா, தொடக்கத்தில் மனிதகுலத்திற்கு கொடுத்ததோ வித்தியாசமான ஆஸ்தி; அதுதான் பரதீஸிய பூமியில் பரிபூரணமாக என்றென்றும் வாழும் வாழ்க்கை. நம்முடைய முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் பாவமில்லாதவர்களாய் பரிபூரணத்துடன் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தனர். இந்த கிரக பூமியை யெகோவா தேவன் மனிதகுலத்திற்கு பரிசாக கொடுத்தார். (சங்கீதம் 115:16) பூமி முழுவதும் எப்படி மாறும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஏதேன் தோட்டத்தை உருவாக்கி அதில் நம் முதல் பெற்றோரை குடிவைத்தார். அவர்களுக்கு அருமையான, ஆர்வமிக்க வேலையும் செய்வதற்கு இருந்தது. அவர்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கவும், பூமியையும் அதன் பல்வேறு தாவரங்களையும் மிருக ஜீவன்களையும் கவனித்துக் கொள்ளவும், பரதீஸின் எல்லைகளை பூமி முழுக்க விரிவுபடுத்தவும் வேண்டும். (ஆதியாகமம் 1:28; 2:8, 9, 15) அவர்கள் பிள்ளைகளும் இதையே செய்வார்கள். இதுதான் அவர்கள் பெறவிருந்த அருமையான ஆஸ்தி!
3 எனினும், ஆதாமும் ஏவாளும், அவர்களுடைய சந்ததியாரும் இவற்றையெல்லாம் அனுபவித்து மகிழ்வதற்கு கடவுளுடன் நல்ல உறவை வைத்துக்கொள்வது அவசியம். யெகோவாவுக்கு அன்பையும் கீழ்ப்படிதலையும் காட்ட அவர்கள் கடமைப்பட்டிருந்தனர். ஆனால், ஆதாமும் ஏவாளும் கடவுள் தந்தவற்றிற்கு மதிப்பு காட்ட தவறினர்; அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போயினர். அவர்கள் தங்கள் பரதீஸிய வீட்டையும், கடவுள் அளித்திருந்த நல்ல எதிர்காலத்தையும் இழந்தனர். எனவேதான் இவற்றை தங்கள் சந்ததியாருக்கு ஆஸ்தியாக தரமுடியாமல் போயிற்று.—ஆதியாகமம் 2:16, 17; 3:1-24.
4. ஆதாம் இழந்த அந்த ஆஸ்தியை நாம் எவ்வாறு அடையலாம்?
4 ஆனால் ஆதாம் ஏவாள் இழந்த அந்த ஆஸ்தியை அவர்களுடைய சந்ததியார் பெறுவதற்கு யெகோவா இரக்கத்துடன் வழிசெய்தார். எவ்வாறு? கடவுளுடைய குறித்த காலத்தில், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே, ஆதாமின் சந்ததியாருக்கு வேண்டி தம்முடைய பரிபூரண மனித உயிரைப் பலியாக கொடுத்தார். இவ்வாறு கிறிஸ்து அவர்கள் எல்லாரையும் விலைக்கு வாங்கினார். இருப்பினும் அந்த ஆஸ்தி தானாகவே அவர்களுக்கு உரியதாகிவிடவில்லை. அவர்கள் கடவுள் அங்கீகரிக்கும் முறையில் வாழ்வது தேவை. இதற்கு, இயேசுவின் பலியால் பாவநிவிர்த்தி சாத்தியம் என்பதை விசுவாசிக்கவும், கீழ்ப்படிதலின் மூலம் அந்த விசுவாசத்தைச் செயலில் காட்டவும் வேண்டும். (யோவான் 3:16, 36; 1 தீமோத்தேயு 2:5, 6; எபிரெயர் 2:9; 5:9) இந்த ஏற்பாட்டை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதை உங்கள் வாழ்க்கை வெளிப்படுத்துகிறதா?
ஆபிரகாமின் சந்ததியில் வந்த ஆஸ்தி
5. யெகோவாவுடனான உறவை ஆபிரகாம் எவ்வாறு மதித்தார்?
5 பூமிக்கான தம்முடைய நோக்கத்தை யெகோவா நிறைவேற்றுகையில் ஆபிரகாமுடன் விசேஷித்த முறையில் தொடர்புகொண்டார். அந்த உண்மையுள்ள மனிதர் தன் நாட்டை விட்டு புறப்பட்டு கடவுள் காட்டும் தேசத்திற்கு செல்லும்படி கட்டளையிடப்பட்டார். ஆபிரகாம் மறுபேச்சின்றி கீழ்ப்படிந்தார். ஆபிரகாம் அங்கு போய்ச் சேர்ந்த பின்பு, அவருக்கல்ல ஆனால் அவருடைய சந்ததியாருக்கே அந்தத் தேசத்தை ஆஸ்தியாக தரப் போவதாக யெகோவா சொன்னார். (ஆதியாகமம் 12:1, 2, 7) ஆபிரகாம் எப்படி உணர்ந்தார்? தன் சந்ததியார் அந்த ஆஸ்தியைப் பெறுவதற்கு கடவுள் அனுகிரகம் செய்யும்படி எங்கு வேண்டுமானாலும் எவ்வாறு வேண்டுமானாலும் அவரைச் சேவிப்பதற்கு அவர் தயாராக இருந்தார். தனக்குரியதல்லாத தேசத்தில் ஆபிரகாம், தன் மரணம் வரை 100 ஆண்டுகள் யெகோவாவைச் சேவித்தார். (ஆதியாகமம் 12:4; 25:8-10) நீங்கள் அவ்வாறு செய்திருப்பீர்களா? ஆபிரகாம், தம்முடைய ‘சிநேகிதன்’ என்று யெகோவா சொன்னார்.—ஏசாயா 41:8.
6. (அ) ஆபிரகாம் தன் குமாரனைப் பலிசெலுத்த முன்வந்தது எதை படம்பிடித்துக் காட்டியது? (ஆ) என்ன அருமையான ஆஸ்தியை ஆபிரகாம் தன் சந்ததியாருக்குக் கொடுத்தார்?
6 ஆபிரகாம் ஒரு குமாரனுக்காக பல ஆண்டுகள் காத்திருந்தார்; ஈசாக்கு பிறந்தபோதோ அவரை மிகவும் நேசித்தார். ஈசாக்கு வளர்ந்து வாலிபனாக ஆனார்; அப்போது ஒருநாள் அவரை அழைத்துச் சென்று பலி செலுத்தும்படி யெகோவா ஆபிரகாமிடம் கூறினார். அது, கடவுள்தாமே தம்முடைய குமாரனை மீட்பின் பலியாக செலுத்தவிருப்பதை படம்பிடித்துக் காட்டும் என ஆபிரகாம் அறியாதிருந்தார். இருப்பினும், அவர் சொல்படி கேட்டு ஈசாக்கைப் பலியாகச் செலுத்த முனைந்தபோது யெகோவாவின் தூதன் அவரைத் தடுத்து நிறுத்தினார். (ஆதியாகமம் 22:9-14) ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த வாக்குறுதிகள், ஈசாக்கின் மூலம் நிறைவேறும் என ஏற்கெனவே யெகோவா சொல்லியிருந்தார். எனவே தேவைப்பட்டால் ஈசாக்கை மீண்டும் உயிர்பெற செய்ய கடவுளால் முடியும் என்ற நம்பிக்கையும் ஆபிரகாமுக்கு இருந்தது. முன்னொருபோதும் அத்தகைய சம்பவம் நிகழாதபோதிலும் அதில் அவருக்கு விசுவாசம் இருந்தது. (ஆதியாகமம் 17:15-18; எபிரெயர் 11:17-19) ஆபிரகாம் தன் குமாரனையுங்கூட கொடுக்க தயங்கவில்லை; எனவே, “உன் வித்துவினால் உலகிலுள்ள சகல தேசத்தாரும் தங்களை ஆசீர்வதித்துக்கொள்வார்கள்” என்று யெகோவா கூறினார். (ஆதியாகமம் 22:15-18, NW) ஆதியாகமம் 3:15-ல் குறிப்பிடப்பட்ட அந்த வித்து எனும் மேசியானிய மீட்பர், ஆபிரகாமின் வம்சாவளியாய் இருப்பார் என்பதை இது சுட்டிக்காட்டியது. சந்ததியார் பெறுவதற்கு எத்தகைய மதிப்புமிக்க ஆஸ்தி!
7. ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும், தங்கள் ஆஸ்தியை எவ்வாறு மதித்தனர்?
7 யெகோவா அப்போது செய்துவந்ததன் முக்கியத்துவத்தை ஆபிரகாம் அறியவில்லை; “அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய” அவருடைய குமாரன் ஈசாக்கோ, பேரன் யாக்கோபோகூட அதை அறியவில்லை. ஆனால் அவர்கள் எல்லாருக்கும் யெகோவாவின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. “தேவன்தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகர”மாகிய மேம்பட்ட ஒன்றிற்காக அவர்கள் காத்திருந்ததால், அந்தத் தேசத்திலிருந்த எந்த நகர-ராஜ்யங்கள் மீதும் பற்றுவைக்கவில்லை. (எபிரெயர் 11:8-10, 13-16) எனினும், ஆபிரகாம் மூலம் கிடைத்த அந்த ஆஸ்தியின் அருமை பெருமையை, ஆபிரகாமின் வம்சாவளியினர் அனைவருமே போற்றினார்கள் என சொல்வதற்கில்லை.
ஆஸ்தியை அலட்சியம் செய்த சிலர்
8. ஏசா தன் அருமையான ஆஸ்தியை மதிக்காததை எவ்வாறு வெளிப்படுத்தினான்?
8 ஈசாக்கின் தலைமகனாகிய ஏசா, தனக்கிருந்த பிறப்புரிமையை உயர்வாக மதிக்க தவறினான். அவன் பரிசுத்த காரியங்களுக்குப் போற்றுதல் காட்டவில்லை. எனவே, ஒருநாள் ஏசா பசியாக இருக்கையில், தலைமகன் உரிமையை தன் சகோதரனான யாக்கோபுக்கு விற்றுவிட்டான். எதை பெறுவதற்கு? அப்பமும் பயற்றங்கூழுமான ஒருவேளை சாப்பாட்டை பெறுவதற்காக! (ஆதியாகமம் 25:29-34; எபிரெயர் 12:14-17) ஆபிரகாமுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதிகள், இஸ்ரவேல் என பெயர் மாற்றப்பட்ட யாக்கோபின் வழிவந்த ஜனத்தாரிடம் நிறைவேற இருந்தன. இந்த ஆஸ்தி என்ன வாய்ப்புகளைப் பெற அவர்களுக்கு வழியைத் திறந்தது?
9. யாக்கோபு அல்லது இஸ்ரவேலின் சந்ததியார் தங்கள் ஆவிக்குரிய ஆஸ்தியின் காரணமாக என்ன விடுதலையை அனுபவித்தனர்?
9 பஞ்சம் ஏற்பட்டபோது, யாக்கோபும் அவருடைய குடும்பத்தாரும் எகிப்துக்கு குடிபெயர்ந்தனர். அங்கே அவர்கள் எண்ணிக்கையில் பெருகினர்; அதேசமயம் அடிமைகளாகவும் ஆயினர். என்றபோதிலும் ஆபிரகாமுடன் செய்த தம் உடன்படிக்கையை யெகோவா மறந்துவிடவில்லை. குறித்த காலத்தில் கடவுள், இஸ்ரவேல் புத்திரரை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார்; தாம் ஆபிரகாமுக்கு தருவதாக வாக்குக் கொடுத்திருந்த தேசமாகிய, ‘பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குள்’ அவர்களை அழைத்துச் சொல்லப் போவதையும் அவர்களுக்கு அறிவித்தார்.—யாத்திராகமம் 3:7, 8; ஆதியாகமம் 15:18-21.
10. இஸ்ரவேல் புத்திரரின் ஆஸ்தி சம்பந்தமாக, சீனாய் மலையின் அருகில் என்ன நிகழ்ந்தன?
10 வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்துக்குப் போகும் வழியில் யெகோவா, இஸ்ரவேல் புத்திரரை சீனாய் மலை அருகில் கூடிவரச் செய்தார். “இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்” என்று அங்கே அவர்களுக்கு சொன்னார். (யாத்திராகமம் 19:5, 6) இதை செய்வதாக ஜனங்கள் ஏகமனதாய் மனமுவந்து ஒப்புக்கொண்ட பின்பு, யெகோவா தம்முடைய நியாயப்பிரமாண சட்டத்தை அவர்களுக்குக் கொடுத்தார். இது போன்ற ஒன்றை அவர் வேறு எந்த ஜனத்தாருக்கும் செய்ததில்லை.—சங்கீதம் 147:19, 20.
11. இஸ்ரவேல் புத்திரரின் ஆவிக்குரிய ஆஸ்தியில் உட்பட்டிருந்த அருமையான காரியங்களில் சில யாவை?
11 என்னே அருமையான ஆவிக்குரிய ஆஸ்தியை அந்த புதிய ஜனத்தார் பெற்றனர்! ஒரே உண்மை கடவுளை அவர்கள் வணங்கினர். அவரால் எகிப்திலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்; சீனாய் மலையில் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டபோது அதிசயத்தக்க சம்பவங்களைக் கண்ணாரக் கண்டனர். தீர்க்கதரிசிகளின் மூலம் ‘தேவனுடைய வாக்கியங்களை’ இன்னுமதிகமாக பெற்றபோது, அவர்களுடைய ஆஸ்தி மேலும் மதிப்புமிக்கதாக ஆனது. (ரோமர் 3:1, 2) அவர்கள் யெகோவாவிற்கு சாட்சிகளாக இருக்கும்படி அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (ஏசாயா 43:10-12) மேசியானிய வித்து அவர்கள் மத்தியில் தோன்றவிருந்தார். நியாயப்பிரமாணம் அவரை சுட்டிக்காட்டியது. அவரை அடையாளம் காணவும், அவர் தங்களுக்குத் தேவை என்பதை போற்றவும் அவர்களுக்கு உதவியது. (கலாத்தியர் 3:19, 24) மேலும், அந்த மேசியானிய வித்துடன், ஆசாரிய ராஜ்யமாகவும் பரிசுத்த ஜனமாகவும் சேவிக்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் கொடுக்கப்படும்.—ரோமர் 9:4, 5.
12. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர் பிரவேசித்த போதிலும் எதை அனுபவிக்க தவறினர், ஏன்?
12 இஸ்ரவேலரை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்து செல்வதன் மூலம் யெகோவா தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றினார். ஆனால், உண்மையிலேயே அந்தத் தேசம் அவர்களுக்கு ‘இளைப்பாறுதலை’ அளிக்கவில்லை; காரணம் அவர்களுடைய அவிசுவாசம்தான் என்பதை அப்போஸ்தலன் பவுல் பின்னர் விளக்கினார். ஒரு ஜனமாக அவர்கள், ‘கடவுளுடைய இளைப்பாறுதலுக்குள்’ பிரவேசிக்கவில்லை. ஏனெனில், ஆதாம் ஏவாள் சிருஷ்டிக்கப்பட்ட பின்பு தொடங்கின கடவுளுடைய இளைப்பாறுதலின் நாளின் நோக்கத்தை சரிவர புரிந்துகொண்டு அதற்கேற்ப நடக்க தவறினர்.—எபிரெயர் 4:3-10.
13. தங்கள் ஆவிக்குரிய ஆஸ்தியை மதித்துணரத் தவறியதால், ஒரு தேசமாக இஸ்ரவேலர் எதை இழந்தனர்?
13 ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜனமுமாக, பரலோக ராஜ்யத்தில் மேசியாவுடன் பங்குகொள்ள போகிற அனைவரும் இஸ்ரவேலராகவே இருந்திருக்கலாம். ஆனால் தங்களிடம் எப்படிப்பட்ட அருமையான ஆஸ்தி இருக்கிறது என்பதை அவர்கள் மதிக்க தவறினர். மேசியா வந்தபோது, இஸ்ரவேலரில் கொஞ்சம் பேரே அவரை மனமார ஏற்றனர். விளைவு? சொற்ப எண்ணிக்கையானோரே, முன்னறிவிக்கப்பட்ட ஆசாரிய ராஜ்யத்தின் பாகமாகும் வாய்ப்பை பெற்றனர். இஸ்ரவேலரிடமிருந்து இந்த ராஜ்யம் நீக்கப்பட்டு, ‘அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் [“தேசத்தாருக்கு,” NW] கொடுக்கப்பட்டது.’ (மத்தேயு 21:43) யார் அந்த தேசத்தார்?
பரலோக ஆஸ்தி
14, 15. (அ) இயேசுவின் மரணத்திற்குப் பின்பு மற்ற தேசத்தார் எவ்வாறு ஆபிரகாமின் “வித்தின்” மூலமாய் தங்களை ஆசீர்வதித்துக்கொள்ளத் தொடங்கினர்? (ஆ) ‘தேவனுடைய இஸ்ரவேலின்’ உறுப்பினர்கள் எதை ஆஸ்தியாக பெறுகின்றனர்?
14 ராஜ்யத்தைப் பெற்ற அந்த தேசத்தார் ஆவிக்குரிய இஸ்ரவேலராவர். அதாவது, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும், ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்ட 1,44,000 பேர் அடங்கிய ‘தேவனுடைய இஸ்ரவேலராவர்.’ (கலாத்தியர் 6:16; வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1-3) இந்த 1,44,000 பேரில் ஒருசிலரே யூதர்கள், ஆனால் பெரும்பாலோர் வேறு தேசங்களிலிருந்து எடுக்கப்பட்டவர்கள். இவ்வாறுதான், ஆபிரகாமின் ‘வித்தின்’ மூலமாக சகல தேசத்தாரும் ஆசீர்வதிக்கப்படுவர் என்ற வாக்குறுதி நிறைவேற தொடங்கியது. (அப்போஸ்தலர் 3:25, 26, NW; கலாத்தியர் 3:8, 9) அது நிறைவேற தொடங்குகையில், மற்ற தேசத்தாரும் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டனர்; தம்முடைய ஆவிக்குரிய குமாரர்களாக, இயேசுவின் சகோதரர்களாக யெகோவா தேவனால் தத்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு அவர்கள் அந்த ‘வித்தின்’ இரண்டாம் பாகமானார்கள்.—கலாத்தியர் 3:28, 29.
15 இயேசு தம்முடைய மரணத்திற்கு முன்பாக அந்தப் புதிய தேசத்தாராகும் வாய்ப்புடைய யூதர்களுடன் புதிய உடன்படிக்கையை செய்தார்; இதை தம்முடைய இரத்தத்தால் உறுதிப்படுத்தவிருந்தார். அந்த உடன்படிக்கையின் அங்கத்தினர்கள் அந்தப் பலியில் வைக்கும் விசுவாசத்தின் அடிப்படையில் அவர்கள் ‘என்றென்றைக்கும் பூரணப்படுத்தப்படுவர்.’ (எபிரெயர் 10:14-18) அவர்கள் ‘நீதிமான்களாகத் தீர்க்கப்படுவர்,’ அவர்களது பாவங்களும் மன்னிக்கப்படும். (1 கொரிந்தியர் 6:11, தி.மொ.) இந்த அர்த்தத்தில் அவர்கள், ஆதாம் பாவம் செய்யாததற்கு முன் இருந்த நிலையில் உள்ளனர். எனினும், இவர்கள் பூமிக்குரிய பரதீஸில் வாழப்போவதில்லை. இவர்களுக்காக பரலோகத்தில் ஓர் இடத்தை ஏற்பாடு செய்யப்போவதாக இயேசு சொல்லியிருந்தார். (யோவான் 14:2, 3) ‘தங்களுக்காக பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிற சுதந்தரத்தை’ அடைவதற்கு பூமிக்குரிய வாழ்க்கையை அவர்கள் தியாகம் செய்கின்றனர். (1 பேதுரு 1:5) அவர்கள் அங்கு என்ன செய்கின்றனர்? “ஒரு ராஜ்யத்துக்காக . . . நான் உங்களுடன் உடன்படிக்கை செய்கிறேன்” என்று இயேசு விளக்கினார்.—லூக்கா 22:29, NW.
16. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்ன அருமையான பொறுப்பு காத்திருக்கிறது?
16 பரலோகங்களில் கிறிஸ்துவோடு ஆட்சி செய்யப்போகிறவர்கள், யெகோவாவின் அரசதிகாரத்திற்கு எதிராக கலகம் செய்பவர்களை சுவடு தெரியாமல் பூமியிலிருந்து துடைத்தழிப்பதில் பங்குகொள்வர். (வெளிப்படுத்துதல் 2:26, 27) ஆபிரகாமின் ஆவிக்குரிய வித்துவின் இரண்டாம் பாகமாக அவர்கள், சகல ஜனங்களும் பரிபூரண வாழ்க்கையின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வதிலும் உதவி செய்வர். (ரோமர் 8:17-21) அவர்களுக்குக் கிடைத்திருப்பது எத்தனை அருமையான ஆஸ்தி!—எபேசியர் 1:16-18.
17. பூமியில் இருக்கையிலேயே, தங்கள் ஆஸ்தியின் என்ன அம்சங்களை அனுபவித்து மகிழ்கின்றனர்?
17 ஆனால், இயேசுவைப் பின்பற்றும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு உரிய ஆஸ்தி அனைத்துமே எதிர்காலத்திற்குரியது அல்ல. ஒரே உண்மை கடவுளாகிய யெகோவாவை அவர்கள் அறிவதற்கு இயேசு ஒப்பற்ற விதத்தில் உதவினார். (மத்தேயு 11:27; யோவான் 17:3, 26) ‘யெகோவாவில் நம்பிக்கை வைப்பது’ எதை அர்த்தப்படுத்துகிறது, அவருக்குக் கீழ்ப்படிவது எதை உட்படுத்துகிறது என்பதை சொல்லிலும் செயலிலும் அவர்களுக்குக் கற்பித்தார். (எபிரெயர் 2:13; 5:7-9) கடவுளுடைய நோக்கத்தைப் பற்றிய சத்திய அறிவை இயேசு அவர்களிடம் ஒப்புவித்தார்; அதை முழுமையாக புரிந்துகொள்வதற்கு பரிசுத்த ஆவி அவர்களுக்கு உதவும் என்றும் உறுதியளித்தார். (யோவான் 14:24-26) கடவுளுடைய ராஜ்யத்தின் முக்கியத்துவத்தை அவர்களுடைய மனதிலும் இதயத்திலும் பதிய வைத்தார். (மத்தேயு 6:10, 33) மேலும், எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும், பூமியின் தொலைதூர பகுதிகளிலும் சாட்சி கொடுத்து, சீஷராக்கும் பொறுப்பையும் அவர்களுக்கு அளித்தார்.—மத்தேயு 24;14; 28:19, 20; அப்போஸ்தலர் 1:8.
திரள் கூட்டத்தாருக்குரிய அருமை ஆஸ்தி
18. ஆபிரகாமின் “வித்தின்” மூலமாக, சகல தேசத்தாரும் தங்களை ஆசீர்வதித்துக் கொள்வார்கள் என்ற யெகோவாவின் வாக்குறுதி எவ்வாறு இன்று நிறைவேறி வருகிறது?
18 ராஜ்ய சுதந்தரவாளிகளும், ஆவிக்குரிய இஸ்ரவேலருமான “சிறு மந்தை”யினர் அனைவரையும் தெரிந்தெடுத்து ஆகிவிட்டது. (லூக்கா 12:32) கடந்த பல ஆண்டுகளாகவே, சகல தேசங்களிலும் இருந்து திரள் கூட்டத்தாரை கூட்டிச் சேர்ப்பதில் யெகோவா கவனம் செலுத்தியிருக்கிறார். இவ்வாறு, ஆபிரகாமின் “வித்தின்” மூலம் சகல தேசத்தாரும் ஆசீர்வதிக்கப்படுவர் என்ற யெகோவாவின் வாக்குறுதி பெரியளவில் நிறைவேறி வருகிறது. பாக்கியம் பெற்றவர்களாய் இவர்களும், சந்தோஷத்துடன் யெகோவாவுக்குப் பரிசுத்த சேவை செய்து வருகின்றனர்; தேவாட்டுக் குட்டியாகிய இயேசு கிறிஸ்துவின்மீது விசுவாசம் வைப்பதிலேயே தங்கள் இரட்சிப்பு சார்ந்திருக்கிறது என்பதை அவர்கள் உணருகின்றனர். (வெளிப்படுத்துதல் 7:9, 10) அந்த மகிழ்ச்சியுள்ள ஜனங்களுள் ஒருவராவதற்கு யெகோவா விடுக்கும் கனிவான அழைப்பை நீங்கள் ஏற்றிருக்கிறீர்களா?
19. மற்ற தேசத்தார் என்ன ஆஸ்தியை எதிர்பார்க்கின்றனர்?
19 சிறு மந்தையின் பாகமாக இல்லாதவர்களுக்கு யெகோவா எப்படிப்பட்ட அருமையான ஆஸ்தியை அளிக்கிறார்? அது பரலோக ஆஸ்தி அல்ல. அது, ஆதாம் தன் சந்ததியாருக்கு நியாயமாக தந்திருக்க வேண்டிய ஆஸ்தி. அது பூமி முழுவதும் வியாபிக்கவிருக்கும் பரதீஸிய நிலைமையில் பரிபூரணமாக என்றென்றும் வாழும் வாழ்க்கை. அந்த வாழ்க்கையில், “இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.” (வெளிப்படுத்துதல் 21:4) ஆகவே, கடவுளுடைய வார்த்தை உங்களிடம் சொல்வதைச் சற்று கவனியுங்கள்: “யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து நன்மைசெய்; தேசத்தில் [“பூமியில்,” NW] குடியிருந்து உண்மையைக் கடைப்பிடி. யெகோவாவில் மனமகிழ்ச்சியாயிரு. அவர் உன் இருதயத்தின் விண்ணப்பங்களை உனக்கு அருள்செய்வார். இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:3, 4, தி.மொ., 10, 11, 29.
20. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய ஆஸ்தியில் பெருமளவை “வேறே ஆடுகள்” எவ்வாறு அனுபவித்து மகிழ்கின்றனர்?
20 இயேசுவின் ‘வேறே ஆடுகளுக்கு,’ பரலோக ராஜ்யத்தின் ஆட்சிக்குட்பட்ட பூமியில் ஆஸ்தி உள்ளது. (யோவான் 10:16அ) அவர்கள் பரலோகத்திற்குப் போக போவதில்லை; என்றாலும், அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் அனுபவித்த ஆவிக்குரிய ஆஸ்தியில் பெருமளவை இவர்களும் அனுபவிக்கின்றனர். அபிஷேகம் செய்யப்பட்டவர்களான “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார” வகுப்பார் மூலமாகவே, இந்த வேறே ஆடுகள் கடவுளுடைய வார்த்தையிலுள்ள அருமையான வாக்குறுதிகளைத் தெளிவாக புரிந்துகொண்டிருக்கின்றனர். (மத்தேயு 24:45-47; 25:34) ஒரே உண்மை கடவுளாகிய யெகோவாவை அறிந்துகொண்ட அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் வேறே ஆடுகளும் ஒன்றாக சேர்ந்து அவரை வணங்குகின்றனர். (யோவான் 17:20, 21) பாவநிவிர்த்தி செய்யும் இயேசுவின் பலிக்காக அவர்கள் ஒன்றாக சேர்ந்து கடவுளுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். ஒரே மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவின் தலைமையில் ஒரே மந்தையாக அவர்கள் ஒன்று சேர்ந்து சேவிக்கின்றனர். (யோவான் 10:16ஆ) அவர்கள் எல்லாரும் ஒரே உலகளாவிய அன்புள்ள சகோதரத்துவத்தின் பாகம். யெகோவாவையும் அவருடைய ராஜ்யத்தையும் பற்றி சாட்சி கொடுக்கும் பாக்கியத்தை ஒன்று சேர்ந்து அனுபவிக்கின்றனர். நீங்கள் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட ஊழியரா? அப்படியென்றால் இவையனைத்தும் உங்கள் ஆவிக்குரிய ஆஸ்தி!
21, 22. ஆவிக்குரிய ஆஸ்தியை மனதார மதிப்பதை நாம் எல்லாரும் எவ்வாறு காட்டலாம்?
21 இந்த ஆவிக்குரிய ஆஸ்தியை நீங்கள் எந்தளவுக்கு அருமையானதாய் கருதுகிறீர்கள்? கடவுளுடைய சித்தத்திற்கே உங்கள் வாழ்க்கையில் முதலிடமும் கொடுக்கும் அளவுக்கு அதை மதிக்கிறீர்களா? அதற்கு அத்தாட்சியாக, கிறிஸ்தவ சபையின் எல்லா கூட்டங்களுக்கும் தவறாமல் செல்லும்படி, கடவுளுடைய வார்த்தையும் அவருடைய அமைப்பும் அளிக்கும் அறிவுரைக்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா? (எபிரெயர் 10:24, 25) கஷ்டங்கள் வந்தபோதிலும் கடவுளைத் தொடர்ந்து சேவிக்கும் அளவுக்கு அந்த ஆஸ்தியை நீங்கள் மதிக்கிறீர்களா? அந்த ஆஸ்தியை இழக்க செய்வதற்கு வழிநடத்தும் எந்தச் சோதனைக்கும் இடமளிக்காமல் உறுதியோடிருக்கிறீர்களா?
22 கடவுள் நமக்கு தந்திருக்கும் ஆவிக்குரிய ஆஸ்தியை நாம் அனைவரும் நெஞ்சார நேசிப்போமாக! எதிர்கால பரதீஸிய வாழ்க்கையில் நம் மனதையும் இதயத்தையும் லயித்திருக்க செய்வோமாக. அதேசமயத்தில் இப்போது யெகோவா நமக்கு அளிக்கும் ஆவிக்குரிய சிலாக்கியங்களுக்கு நம்மை முழுமையாய் அர்ப்பணிப்போமாக. யெகோவாவை மையமாக வைத்து நம் வாழ்க்கையை அமைப்போமாக! இப்படி செய்வதால், கடவுள் நமக்கு அருளிய ஆஸ்தியை எவ்வளவு அருமையானதாக கருதுகிறோம் என்பதற்கு உறுதியான அத்தாட்சி அளிக்கிறோம். “ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன்” என்று முழங்குகிறவர்கள் மத்தியில் இருப்போமாக!—சங்கீதம் 145:1.
எவ்வாறு விளக்குவீர்கள்?
• ஆதாம் கடவுளுக்கு கீழ்ப்படிந்திருந்தால் என்ன ஆஸ்தியை நாம் பெற்றிருப்போம்?
• தங்களுக்குக் கிடைத்த ஆஸ்தியை ஆபிரகாமின் சந்ததியார் எவ்வாறு கருதினர்?
• கிறிஸ்துவைப் பின்பற்றும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் ஆஸ்தியில் எவை அடங்கியுள்ளன?
• திரள் கூட்டத்தாரின் ஆஸ்தி என்ன, அதை உண்மையாகவே மதிப்பதை அவர்கள் எவ்வாறு காட்டலாம்?
[கேள்விகள்]
[பக்கம் 20-ன் படம்]
அருமையான ஆஸ்தியின் வாக்குறுதியை ஆபிரகாமின் சந்ததியார் பெற்றனர்
[பக்கம் 23-ன் படங்கள்]
உங்கள் ஆவிக்குரிய ஆஸ்தியை நீங்கள் மதிக்கிறீர்களா?