ஃபிஜி தீவுகளில் கடவுளுடைய ராஜ்யத்தை பிரசங்கித்தல்
நாங்கள் விசுவாசமுடையவர்கள்
ஃபிஜி தீவுகளில் கடவுளுடைய ராஜ்யத்தை பிரசங்கித்தல்
இயேசு இந்த பூமியில் இருந்தபோது, இரண்டு வித்தியாசமான பாதைகளைப் பற்றி சொன்னார். ஒன்று விசாலமான பாதை. இதில் வசதியாக செல்லலாம், ஆனால் இது வழிநடத்துவதோ மரணத்திற்கு. மற்றொன்று மிகவும் இடுக்கமான, நெருக்கமான பாதை. இதில் போவது கஷ்டம், ஆனால் இது ஜீவனுக்கே வழிநடத்தும். (மத்தேயு 7:13, 14) உலகிலுள்ள அனைவருமே இடுக்கமான அந்த சரியான பாதையிலேயே செல்ல வேண்டும் என்பதே யெகோவா தேவனின் விருப்பம். அனைவரும் அதைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக, ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி உலகம் முழுவதிலும் பிரசங்கிக்கப்பட அவர் ஏற்பாடுகளை செய்திருக்கிறார். (மத்தேயு 24:14) இதன் விளைவாக, உலகத்தின் எல்லா பகுதிகளிலுமுள்ள மக்களை இந்த நற்செய்தி சென்றெட்டுகிறது. சிலர் இதை கேட்டு “ஆத்துமாவை உயிரோடு காக்கும் விசுவாசமுடையோராக” ஆகியிருக்கின்றனர். அதனால், ஜீவனுக்குரிய பாதையை தெரிந்தெடுத்திருக்கின்றனர். (எபிரேயர் 10:39, NW) ஃபிஜியிலும் அதற்கு அருகிலுள்ள தென் பசிபிக் தீவுகளிலும் ஜீவனுக்கான பாதையை அநேகர் தெரிந்து கொண்டுள்ளனர். அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
அவர்கள் யெகோவாவை நம்பினர்
1964-ல் மேரி என்ற சிறுமி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, அவள் காதுகளில் இந்த ராஜ்ய நற்செய்தி விழுந்தது. ஆனால், அவள் வாழ்ந்து வந்த தீவு மற்ற கிராமங்களிலிருந்தும் தீவுகளிலிருந்தும் தள்ளி இருந்ததால், யெகோவாவின் சாட்சிகளை தொடர்ந்து சந்திக்க முடியவில்லை. காலங்கள் கடந்தன, பெரியவளாக வளர்ந்தாள், திருமணமும் நடந்தது. அவள் வசித்து வந்த கிராமத்தின் தலைவருக்கே வாழ்க்கைப்பட்டிருந்தார். பிறகு, சத்தியத்தைப் பற்றி கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவை பெற்றுக்கொண்டார். பிறகுதான் பிரச்சினையே. பைபிள் நியமங்களின்படி வாழ்வதில் மேரி உறுதியாக இருந்தாள். இதை ஏற்காத அவளுடைய கணவனும் உறவினர்களும் அவரை துன்புறுத்தி கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர். அந்தக் கிராமவாசிகளும் அவளை அடியோடு ஒதுக்கிவிட்டனர். இருந்தாலும், விசுவாசத்தை விட்டுக்கொடுக்காமல் 1991-ல் முழுக்காட்டுதல் எடுத்தார்.
ஆனால் “எறும்பு ஊரக் கல்லும் தேயும்” என்பார்களே, அதுபோல காலப்போக்கில் மேரியின் கணவன் ஜோசுவாவின் மனமும் கரைந்தது. மேரி தன் பிள்ளைகளிடம் பைபிளைப் பற்றி பேசும்போதெல்லாம் இவரும் உட்கார்ந்து கேட்க ஆரம்பித்தார். பிறகு மெத்தடிஸ்ட் சர்ச்சுக்கு போவதையும் நிறுத்திவிட்டார். என்றபோதிலும், அவர் கிராமத் தலைவராக இருந்ததால் வாரந்தோறும் நடக்கும் கிராமத்து கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அந்தக் கிராமவாசிகளுக்கு மெத்தடிஸ்ட் சர்ச்தான் உயிர் மூச்சாக இருந்தது. இதை ஜோசுவா ஒதுக்கிவிட்டதால், அவர்களுடைய கண்களுக்கு அவரும் விசுவாசதுரோகியாக ஆனார். இதனால், சர்ச் பாஸ்டர் ஜோசுவாவிடம் வந்து அதே சர்ச்சுக்கு திரும்பி வந்துவிடும்படி சொன்னார்.
ஆனால் ஜோசுவாவோ தானும் தன் குடும்பமும் சரியான முடிவை எடுத்துவிட்டதாகவும், யெகோவா தேவனையே “ஆவியோடும் உண்மையோடும்” வணங்க தீர்மானித்துவிட்டதாகவும் சொன்னார். (யோவான் 4:24) பின்பு நடந்த கிராமத்துக் கூட்டத்தில், அவருக்கு மேலிருந்த தலைவர், ஜோசுவா அந்த கிராமத்திலிருந்து தள்ளி வைக்கப்படுவதாகவும் அவரும் அவருடைய குடும்பமும் உடனே அந்தக் கிராமத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிவித்தார். அந்த இடத்தைவிட்டுச் செல்ல அவருக்கு ஏழு நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. தன்னுடைய வீடு, நிலம், பயிர் போன்ற எல்லாவற்றையும் அவர் விட்டுவர வேண்டிய நிலை.
ஆனால் வெறுங்கையுடன் வந்த ஜோசுவாவை மற்றொரு தீவிலிருந்த ஆவிக்குரிய சகோதரர்கள் அவரை கைநீட்டி வரவேற்றனர். உடனே, அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் உதவிசெய்ய தயாராயிருந்தனர். அவர்கள் தங்குவதற்கு வீடு கொடுத்ததோடு, அவர் பயிர் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற நிலமும் கொடுத்து உதவினர். ஜோசுவாவும் அவருடைய குடும்பத்தினரும் தொடர்ந்து முன்னேறினர். இப்போது ஜோசுவாவும் அவருடைய மூத்த மகனும் முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாக சேவிக்கின்றனர். அவருடைய இளைய மகன் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக சந்தோஷத்துடன் நற்செய்தியை பிரசங்கித்து வருகிறார். சமீபத்தில் மேரி ஒழுங்கான பயனியர் (முழு நேர ராஜ்ய அறிவிப்பாளர்) ஊழியத்தை துவங்கினார். யெகோவாவை சேவிக்க வேண்டும் என்று அவர்கள் எடுத்த தீர்மானத்தால், தங்கள் வீட்டையும் உடைமைகளையும் இழந்தனர். ஆனால் அப்போஸ்தலன் பவுல் சொன்னது போல அவர்கள் இப்போது பெற்றிருக்கும் பொக்கிஷத்தோடு அந்த இழப்பை ஒப்பிட்டால் அது ஒன்றுமே இல்லை.—பிலிப்பியர் 3:8.
மனசாட்சியுடன் நடந்துகொள்ளுதல்
பைபிள் ஒருவருடைய மனசாட்சியை சரியான விதத்தில் பயிற்றுவிக்கிறது, ஆனால் அதன்படி நடக்க விசுவாசமும் தைரியமும் தேவை. இது உண்மை என நிரூபிக்கிறது புதிதாய் முழுக்காட்டப்பட்ட சுராங் என்ற இளம் பெண்ணின் அனுபவம். இவர் கிரிபடி தீவுகளில் ஒன்றாகிய தராவாவில் வசித்து வருகிறார். ஒரு மருத்துவமனையில் நர்ஸ் வேலை பார்த்து வந்த இவர் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய மறுத்தார், ஏனென்றால் அதை செய்வதற்கு அவருடைய மனசாட்சி அவரை அனுமதிக்கவில்லை, அதனால் அதிகாரிகளிடம் தனக்கு அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் வேண்டுகோளோ ஏற்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல், அவர் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு தீவிலுள்ள சிறிய மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டார். இதனால்
அவருடைய உடன் விசுவாசிகளுடன் எந்த தொடர்பும் இல்லாமல் போனது.அந்தத் தீவிற்கு யாராவது புதிதாக போனால், அங்கிருப்பவர்கள் வணங்கிவந்த தெய்வத்திற்கு அல்லது “ஆவிக்கு” அவர் பலி செலுத்துவது வழக்கம். ஒருவேளை அவ்வாறு செய்யத் தவறினால் அந்த நபர் செத்துவிடுவார் என அவர்கள் நம்பிவந்தனர். ஆனால் சுராங்கின் மனசாட்சி இது உருவ வழிபாட்டின் ஒரு பாகம் என சொன்னது, அதனால் இந்த செயலை தனக்கோ தன்னைச் சேர்ந்தவர்களுக்கோ செய்ய வேண்டாம் என சொல்லிவிட்டார். இதனால் அந்த ‘ஆவி’ இவரை கழுத்தை நெரித்து கொன்றுவிடும் என கிராமவாசிகள் நினைத்தனர். ஆனால் அவருக்கோ அவரைச் சேர்ந்தவர்களுக்கோ ஒன்றும் நடக்கவில்லை, எப்போதும் போலவே இருந்தனர். இது அங்கிருந்த அநேகருக்கு சாட்சி கொடுக்க வாய்ப்பளித்தது.
இப்போது சுராங் இரண்டாவது சவாலை எதிர்ப்பட நேரிட்டது. அந்த தீவிலிருக்கும் வாலிபர்கள் அங்கு வரும் இளம் பெண்களுடன் பாலுறவு கொள்வதை ஒரு போட்டியாக கருதினர். ஆனால் அவர்களுடைய எல்லா முயற்சிகளையும் முளையிலேயே கிள்ளி எறிந்து சுராங் தன் உத்தமத்தை காத்துக்கொண்டார். அவர் 24 மணிநேர நர்ஸாக இருந்ததால் எப்போது அழைக்கப்பட்டாலும் உடனே சென்று நோயாளிகளை கவனிக்க வேண்டும். அப்படியிருந்தும் இவர் ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்தார்.
கடைசியில், இவர் அந்தத் தீவை விட்டுச் செல்லும்போது, அவருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவிற்கு முன்பு அந்த கிராமத் தலைவர்கள் தாங்கள் இதுவரை சந்தித்த மிஷனெரிகளிலேயே உண்மையான மிஷனெரி சுராங்தான் என பாராட்டினார்கள். அவர் எப்போதும் பைபிள் நியமங்களில் உறுதியாக இருந்தது, அந்தத் தீவிலுள்ள மற்றவர்களும் ராஜ்ய நற்செய்திக்கு செவிசாய்க்க வழிநடத்தியது.
தடைகள்
தனித்தனியே பிரிந்து தூரம் தூரமாக இருக்கும் கிராமங்களிலுள்ள யெகோவாவின் ஊழியர்கள், வேறுவிதமான தடையை எதிர்படுகின்றனர். அவர்கள் ஊழியத்தில் கலந்துகொள்வதும் கூட்டங்களுக்கு வருவதும் மிக கஷ்டம். உதாரணத்திற்கு இந்த நான்கு முழுக்காட்டப்பட்ட சாட்சிகள் அதாவது ஒரு சகோதரர் மற்றும் மூன்று சகோதரிகள் படும் கஷ்டத்தை கவனியுங்கள். இவர்கள் கூட்டங்களுக்கு வந்து போவதற்கு மட்டும் அநேக மணிநேரங்கள் எடுக்கிறது. அவர்கள் கூட்டங்களுக்கு வர மூன்று ஆறுகளை கடக்க வேண்டும். அந்த ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருக்கும்போது, முதலாவது அந்தச் சகோதரர் தன்னுடன் ஒரு பெரிய பானையை எடுத்துக்கொண்டு ஆற்றில் நீந்தி அக்கரைக்கு செல்கிறார். அந்தப் பானையில் இவர்களுடைய பைகள், புத்தகங்கள் மற்றும் மாற்று துணிமணிகள் இருக்கும். பிறகு அந்தப் பானையை அங்கு வைத்துவிட்டு, மீண்டும் நீந்திச் சென்று அந்தச் சகோதரிகளும் ஆற்றைக் கடக்க உதவுகிறார்.
கிரிபடியிலுள்ள நோநோநியூடே என்ற ஓர் ஒதுக்குப்புறமான தீவில், கூட்டங்களுக்காக கூடும் ஒரு சிறு தொகுதி வேறுவிதமான தடையை எதிர்படுகிறது. அது இடம் பற்றாக்குறையே. அவர்கள் ஏழு அல்லது எட்டுபேர் மட்டுமே அமரக்கூடிய ஓர் வீட்டில் கூடுகிறார்கள். உள்ளே உட்கார இடம் கிடைக்காத ஆட்கள் வெளியே உட்கார்ந்து கூட்டத்தை ரசித்து மகிழ்கின்றனர். மத்தியில் சுவர் இல்லாமல் அநேக துவாரங்களுடைய தடுப்பு மட்டும் இருப்பதால் அவர்களால் உள்ளே நடப்பவற்றை பார்க்க முடிகிறது. அந்த வழியாக அருகிலிருக்கும் புகழ்பெற்ற சர்ச்சுக்கு வந்து போகும் கிராம வாசிகள் அனைவரும் இதை ஆச்சரியமாக பார்க்கின்றனர். எல்லாருடைய கண்களிலும் எளிதில் படும் விதத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. கட்டிடங்கள் அல்ல, ஆனால் அங்குவரும் மக்களே முக்கியமானவர்கள், விரும்பத்தக்கவர்கள் என்ற யெகோவாவின் எண்ணத்தை அவருடைய ஊழியர்களும் ஒப்புக்கொள்கின்றனர். (ஆகாய் 2:7, NW) அந்தக் கிராமத்திலுள்ள வயதான முழுக்காட்டப்பட்ட சகோதரி ஒருவரால் அதிக தூரம் நடக்க முடியாது. அதற்காக அவர் சும்மா இருந்துவிடவில்லை. இவர் ஊழியம் செய்வதற்காக முழுக்காட்டப்படாத இளம் பெண் ஒருவர் இவரை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு போகிறார். சத்தியத்திற்கு அவர்கள் காட்டும் போற்றுதல், அப்பப்பா அமோகம்!
ஃபிஜி தீவுகளில் சேவித்துவரும் 2,100-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் தொடர்ந்து கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை அறிவிக்க தீர்மானமாயிருக்கின்றனர். அத்துடன் இன்னும் அநேகர் “ஆத்துமாவை உயிரோடு காக்கும் விசுவாசமுடையோராக” ஆவார்கள் என உறுதியாய் நம்புகின்றனர்.
[பக்கம் 8-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஆஸ்திரேலியா
ஃபிஜி