Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உதவிக்காக கதறும் உள்ளங்கள்

உதவிக்காக கதறும் உள்ளங்கள்

உதவிக்காக கதறும் உள்ளங்கள்

“கடவுள் என்னை கைவிட்டுட்டார்!” என பிரேஸில் நாட்டு பெண்ணொருத்தி கண்ணீர் மல்க கதறி அழுதாள். ஆசை கணவரின் அகால மரணத்திற்குப்பின், இனிமேல் வாழ்வதில் அர்த்தமே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். துயரத்தில் துவண்டுவிட்ட நெஞ்சங்களை அல்லது உதவிக்காக கதறும் உள்ளங்களை எப்போதாவது ஆறுதல்படுத்த முயற்சி செய்திருக்கிறீர்களா?

சிலர் ஒரேயடியாக நம்பிக்கையிழந்து விடுவதால் தங்களுக்கு தாங்களே “தூக்குத்தண்டனை” தீர்ப்பு வழங்கிவிடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இளசுகள். “இளைஞர்களின் தற்கொலை 26 சதவீதம் அதிகரித்துவிட்டதை” பிரேஸிலில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி காட்டுவதாக ஃபோல்யா டி எஸ். போலோ என்ற செய்தித்தாள் கூறுகிறது. உதாரணமாக, சாவோ போலோவில் வசிக்கும் வால்டர் என்ற இளைஞனை கவனியுங்கள். a அவனுக்கு தாய் தகப்பன் இல்லை, வீடுவாசல் இல்லை, மனம்விட்டு பேச நண்பர்களும் இல்லை. கடைசியில், தன்னுடைய துயரத்திற்கு முடிவுகட்டுவதற்காக ஒரு பாலத்திலிருந்து கீழே பாய்வதற்கு தீர்மானித்தான்.

மற்றொரு உதாரணத்தை கவனியுங்கள். இரண்டு பிள்ளைகளையுடைய கைம்பெண் எட்னாவுக்கு ஒருவனோடு பழக்கம் ஏற்பட்டது. ஒரு மாதத்திற்குள் அவளுடைய புது மாமியார்​—⁠இவர் மாயமந்திர பழக்கங்களில் ஈடுபட்டு வந்தார், குடிப் பழக்கமும் உடையவர்​—⁠வீட்டில் குடித்தனம் நடத்த ஆரம்பித்துவிட்டாள். எட்னாவுக்கு இன்னொரு பிள்ளை பிறந்தது. அளவுக்கு அதிகமாக குடிக்க ஆரம்பித்தாள், பின்பு மனச்சோர்வுற்று தற்கொலை முடிவுக்கே சென்றுவிட்டாள். கடைசியில், தன்னுடைய பிள்ளைகளை கவனிக்கும் உரிமையையும் இழந்தாள்.

தாளாத வயதில் தள்ளாடி நடப்பவர்களைப் பற்றியென்ன? தமாஷாக பேசி சிரிப்பதும் வாயடிப்பதும் மரியாவுக்கு பிடித்தமான ஒன்று. ஆனால் அவள் பெரியவளாக வளர்ந்தபோதோ தன்னுடைய நர்ஸ் வேலையைப் பற்றி சதா கவலைப்பட ஆரம்பித்தாள். ஏனென்றால் ஏதாவது ஏடாகூடமாக செய்துவிடுவோமோ என உள்ளுக்குள் ஒரே பயம். இது மனச்சோர்வில் கொண்டுபோய் விட்டது. இதிலிருந்து கரைசேர கைவைத்தியம் பார்த்தாள்; பலனளிக்கவில்லை, கடைசியில் மருத்துவ உதவியை நாடினாள்; சிகிச்சை பலனளிப்பதாக தோன்றியது. ஆனால் 57 வயதில் வேலையை இழந்தபோது, மனச்சோர்வு மிகவும் தீவிரமானதால் இனி எந்தப் பரிகாரமும் இல்லை என நினைத்தாள். உடனே தற்கொலை செய்துகொள்வதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தாள்.

“மனச்சோர்வடைந்தவர்களில் சுமார் 10 சதவீதத்தினர் தற்கொலை செய்ய முயற்சி செய்கின்றனர்” என சாவோ போலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸூஸ் ஆல்பெர்ட் டெல் போர்ட்டோ சொல்கிறார். “கொலையைவிட தற்கொலையால் அதிகம் பேர் இறந்திருக்கிறார்கள் என்பதை நம்ப கஷ்டமாகத்தான் இருக்கிறது, ஆனால் இது வருந்தத்தக்க உண்மை” என ஐ.மா. மருத்துவ அதிகாரியான டாக்டர் டேவிட் சாட்சர் அறிவிக்கிறார்.

ஆகவே தற்கொலை முயற்சி, சில சமயங்களில் உதவிக்கான கூக்குரலாக இருக்கலாம். நம்பிக்கை இழந்தவருக்கு குடும்ப அங்கத்தினர்களும் நண்பர்களும் கைகொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், “எதுக்கு ரொம்ப கவலைப்படற,” “உன்னைவிட ரொம்ப மோசமான நிலையில நிறைய பேர் இருக்கிறாங்க” என சொல்வது ஆறுதலாக இருக்காது. மாறாக, உண்மையான நண்பராக இருங்கள், அவர் சொல்வதை முதலில் காதுகொடுத்து கேளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நம்பிக்கையை ஊட்டுங்கள்.

பிரெஞ்சு நூலாசிரியர் வால்டர் இவ்வாறு எழுதினார்: “இன்று தற்கொலையே தஞ்சமென நாடும் மனச்சோர்வடைந்த ஒருவர் ஒரு வாரம் பொறுத்திருந்தாரென்றால் வாழ ஆசைப்பட்டிருப்பார்.” அப்படியானால், வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை நம்பிக்கை இழந்தவர்கள் எப்படி கண்டுகொள்ள முடியும்?

[அடிக்குறிப்பு]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 3-ன் படம்]

அநேக இளைஞர்களும் பெரியோர்களும் தற்கொலை செய்துகொள்கின்றனர்

[பக்கம் 4-ன் படம்]

நம்பிக்கை இழந்தோருக்கு நீங்கள் எப்படி கைகொடுக்கலாம்?