தியாக மனப்பான்மை தேவையா?
தியாக மனப்பான்மை தேவையா?
பில் என்ற குடும்பஸ்தருக்கு வயது 50-ற்கும் மேலாகிவிட்டது. இவர் கட்டடத் தொழில்நுட்ப ஆசிரியராக பணியாற்றுகிறார். யெகோவாவின் சாட்சிகள் கூடிவரும் இடமான ராஜ்ய மன்றங்கள் கட்டுவதற்கும் அவற்றை வடிவமைப்பதற்கும் இவர் சொந்த செலவிலேயே உதவுகிறார். வருடத்தில் அநேக வாரங்களை இதற்காக செலவிடுகிறார். 22 வயதான எம்மா, நன்கு கல்வி கற்ற, கெட்டிக்கார பெண். இவர், சொந்த லட்சியங்களுக்காகவும் சந்தோஷத்திற்காகவுமே பாடுபடாமல் மற்றவர்களும் நல்ல எதிர்காலத்தை பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார். மற்றவர்களும் பைபிளை புரிந்துகொள்ள உதவுகிறார்; இதற்கு இவர் ஒவ்வொரு மாதமும் 70 மணிநேரத்திற்கும் அதிகமாக செலவிடுகிறார். மோரிஸ் மற்றும் பெட்டீ, இருவரும் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். சரி, இனிமேலாவது நன்கு ஓய்வெடுக்கலாம் அல்லது இனி வேலை எதுவும் செய்ய வேண்டியதில்லை என அவர்கள் நினைத்து சும்மா இருந்துவிடவில்லை. மாறாக, கடவுளைப் பற்றியும் பூமியைக் குறித்த அவருடைய நோக்கத்தைப் பற்றியும் மற்றவர்களுக்கு அறிவிப்பதற்காக வேறொரு நாட்டிற்கு குடிபெயர்ந்து சென்றிருக்கின்றனர்.
இவர்கள் தங்களை விசேஷமானவர்கள் என்றோ மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்றோ கருதுவதில்லை. மனதிற்கு சரி என பட்டதை செய்யும் சராசரி மனிதர்களே. ஆனால் இவர்கள் தங்களுடைய நேரம், சக்தி, திறமை போன்ற எல்லாவற்றையும் ஏன் மற்றவர்களின் நலனுக்காக பயன்படுத்துகின்றனர்? இதைச் செய்யும்படி தூண்டுவது வேறொன்றுமில்லை, கடவுள் மீதும் மற்றவர்கள் மீதும் அவர்களுக்கிருக்கும் அன்பே. இந்த அன்புதான் அவர்கள் ஒவ்வொருவரிலும் தியாக மனப்பான்மையை வளர்த்துள்ளது.
தியாக மனப்பான்மை என்றால் என்ன? ஆசாபாசங்களை வெறுத்து சன்னியாச வாழ்க்கையை நாடிச் செல்வதைக் குறிக்காது. சந்தோஷத்தையும் மனநிறைவையும் பறிக்கும் கடும் துறவறத்தையும் அர்த்தப்படுத்தாது. த ஷார்ட்டர் ஆக்ஸ்ஃபர்ட் இங்லீஷ் டிக்ஷ்னரி-யின் பிரகாரம் தியாகம் என்றால், “மற்றவர்களின் நலனுக்காக அல்லது கடமையினிமித்தம் சொந்த ஆர்வங்களை, சந்தோஷங்களை, விருப்பங்களை விட்டுக்கொடுப்பது.”
இயேசு கிறிஸ்து—சிறந்த முன்மாதிரி
தியாக மனப்பான்மையை காட்டியதற்கு ஓர் மிகச் சிறந்த உதாரணம், கடவுளுடைய ஒரே பேரான குமாரன் இயேசு கிறிஸ்துவே. அவர் பூமிக்கு வருவதற்கு முன்பு, எல்லையற்ற மகிழ்ச்சியுடன் பரம திருப்தியோடு வாழ்ந்துவந்தார். அவருடைய பிதாவுடனும் மற்ற தேவதூதர்களுடனும் நெருங்கிய உறவை கொண்டிருந்தார். அத்துடன், கடவுளின் குமாரனாகவும், “கைதேர்ந்த வேலையாளனாகவும்” இருந்த அவர், தமது திறமைகளை, ஆர்வமூட்டும் மகத்தான வேலைகளை நிறைவேற்ற பயன்படுத்தினார். (நீதிமொழிகள் 8:30, 31, NW) பரலோகத்தில் அவர் வாழ்ந்ததுபோல் பூமியில் எந்த கோடீஸ்வரனும் வாழ்ந்திருக்க முடியாது. பரலோகத்தில் யெகோவா தேவனுக்கு அடுத்து உயர்ந்து ஸ்தானத்தில் இருந்தது இவரே.
இருப்பினும், கடவுளுடைய குமாரனான அவர், “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.” (பிலிப்பியர் 2:7) சாத்தானால் விளைந்திருக்கும் பிரச்சினைகளையெல்லாம் நீக்க வேண்டுமென்பதற்காக அவர் செய்திருக்கும் தியாகங்கள் ஏராளம்! இந்த பூமிக்கு வந்து உயிரை பலியாக கொடுப்பதற்காக சொந்த சௌகரியங்கள் அனைத்தையும் மனமுவந்து துறந்தார். (ஆதியாகமம் 3:1-7; மாற்கு 10:45) பிசாசாகிய சாத்தானின் ஆதிக்கத்திலிருக்கும் இந்த உலகில், பாவமுள்ள மனிதகுலத்துடன் வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. (1 யோவான் 5:19) பலவித அசௌகரியங்களையும் கஷ்டங்களையும் அவர் சகிக்க வேண்டியிருந்தது. ஆனால் எந்த இழப்பையும் ஒரு பொருட்டாகவே நினைக்காமல், கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவதிலேயே உறுதியாக இருந்தார். (மத்தேயு 26:39; யோவான் 5:30; 6:38) இதனால் இயேசுவின் அன்பும் உத்தமமும் அவர் உயிர் மூச்சுவரை சோதிக்கப்பட்டது. அவருடைய தியாகம் எப்படிப்பட்டது? அப்போஸ்தலன் பவுல் இதற்கு பதிலளிக்கிறார்: “மரணபரியந்தம், அதாவது சிலுவையின் (“கழுமரத்தின்,” NW) மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.”—பிலிப்பியர் 2:8.
‘அதே சிந்தையை கொண்டிருங்கள்’
இயேசுவின் இந்த அருமையான உதாரணத்தை நாம் பின்பற்றும்படி உற்சாகப்படுத்தப்படுகிறோம். பவுல் சொன்னார்: “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.” (பிலிப்பியர் 2:5) இதை நாம் எவ்வாறு செய்யலாம்? இதற்கான ஒரு வழி, ‘தனக்கானவைகளை மட்டுமல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவதே.’ (பிலிப்பியர் 2:4) ஏனென்றால், உண்மையான அன்பு எப்போதும் “தன்னலம் நாடாது.”—1 கொரிந்தியர் 13:5, பொ.மொ.
மற்றவர்களுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கும் உயர்ந்த உள்ளங்கள் இந்த பூமியில் இப்போது இருக்கிறபோதிலும், அநேகர் தன்னல மனப்பான்மையுடனேயே செயல்படுகின்றனர். இவ்வுலகத்தில் ‘நான்’ என்ற எண்ணம் எங்கும் பரவியுள்ளது. இந்த உலகத்தில் பரவலாக நிலவும் இந்த மனப்பான்மையைக் குறித்து நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்மிடமும் அந்த மனப்பான்மை ஒட்டிக்கொண்டால், அது நம் ஆள்தன்மையையும், மனப்பான்மையையும் முற்றிலுமாக அரித்து தின்றுவிடும். அப்படி செய்துவிட்டால், நமக்கும் நம் சொந்த ஆசைகள் மட்டுமே முக்கியமாக தோன்றும். பிறகு நம்முடைய நேரம், சக்தி, உழைப்பு போன்ற எல்லாம் தன்னல நாட்டங்களுக்கே போகும். அதனால் நாம் இந்த குணத்தை எதிர்த்து கடுமையாக போராட வேண்டும்.
ஆனால் நமக்கு தெரிந்தவர்கள் நல்ல நோக்கத்துடனேயே கொடுக்கும் சில ஆலோசனைகள்கூட நம்முடைய தியாக மனப்பான்மையை குலைத்துப்போடக்கூடும். இதற்கு ஓர் உதாரணம், பைபிளில் இருக்கிறது. இயேசுவின் தியாக மனப்பான்மையால் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என நினைத்த பேதுரு இவ்வாறு சொன்னார்: “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது.” (மத்தேயு 16:22, பொ.மொ.) இயேசு தம் பிதாவின் அரசுரிமைக்காகவும், மனிதகுலத்தின் மீட்பிற்காகவும் தம் உயிரையும் கொடுக்க தயாராயிருந்தது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதனால் இயேசு அவ்வாறு செய்வதிலிருந்து தடுத்து நிறுத்திவிட பேதுரு முயற்சி செய்தார்.
‘உங்களை துறவுங்கள்’
இயேசு என்ன சொன்னார்? “அவர் [இயேசு] திரும்பித் தம்முடைய சீஷரைப் பார்த்து, பேதுருவை நோக்கி: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்து கொண்டார். பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” என்று சொன்னதாக பதிவு காண்பிக்கிறது.—மாற்கு 8:33, 34.
பேதுரு, இயேசுவுக்கு தவறான அறிவுரை கொடுத்து முப்பது வருடங்களுக்குப் பிறகு, தியாக மனப்பான்மையின் அர்த்தத்தை முழுமையாக விளங்கிக்கொண்டதை நிரூபித்தார். தன் உடன் வணக்கத்தார் சொகுசான வாழக்கை வாழும்படி அல்லது தங்களுடைய ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி அவர் உற்சாகப்படுத்தவில்லை. மாறாக, அவர்கள் முன்பு இருந்ததுபோல தங்கள் சொந்த ஆசைகளுக்கு இசைவாக நடவாமல் அல்லது அவற்றிற்கே முக்கியத்துவம் கொடுக்காமல், எப்போதும் உஷாராயிருக்கும்படி சொன்னார். பிரச்சினைகள் மத்தியிலும், கடவுளுடைய சித்தத்தை வாழ்க்கையின் முதலிடத்தில் வைக்க வேண்டும் என இது அர்த்தப்படுத்தியது.—1 பேதுரு 1:6, 13, 14; 4:1, 2.
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி, நம்மையே யெகோவா தேவனுக்கு அர்ப்பணித்து, அவரே நம்முடைய வழிகளை நடத்த அனுமதிப்பதே சாலச் சிறந்த செயல். இவ்வாறு செய்வதற்கு பவுல் ஓர் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். அவர் அறிந்திருந்த காலத்தின் அவசரத் தன்மையும் யெகோவாவிடம் அவருக்கிருந்த நன்றியுணர்வும் தெய்வீக சித்தத்தை செய்வதற்கு தடையாயிருந்த எவ்வித ஆசைகளுக்கும் வாய்ப்புகளுக்கும் இடமளிக்கவில்லை. அதனால்தான் 2 கொரிந்தியர் 12:15) பவுல் தன்னிடமிருந்த எல்லா சக்தியையும் திறமைகளையும் தன் சொந்த காரியங்களுக்காக அல்ல ஆனால் தெய்வீக காரியங்களுக்கே பயன்படுத்தினார்.—அப்போஸ்தலர் 20:24; பிலிப்பியர் 3:8.
அவர் இவ்வாறு சொன்னார்: மற்றவர்கள் நலனுக்காக “செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.” (அப்போஸ்தலனாகிய பவுலுக்கிருந்த அந்த மனநிலை நம்மிடம் இருக்கிறதா இல்லையா என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது? தெரிந்துகொள்ள நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: என்னுடைய நேரத்தையும், சக்தியையும், திறமைகளையும், வசதிகளையும் எதற்கு பயன்படுத்துகிறேன்? இவற்றையும் என்னிடமுள்ள மற்ற ஆற்றல்களையும் என் சொந்த நலனுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேனா அல்லது மற்றவர்களுக்கு உதவ பயன்படுத்துகிறேனா? ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிக்கும் அந்த உயிர்காக்கும் வேலையில் முழுமையாக ஈடுபடுகிறேனா, உதாரணமாக முழு-நேர ஊழியம் செய்வதைப் பற்றி யோசித்திருக்கிறேனா? ராஜ்ய மன்றங்களை கட்டுவது மற்றும் பராமரிப்பது போன்ற வேலைகளில் நான் முழுமையாக ஈடுபடுகிறேனா? தேவையிலிருப்போருக்கு உதவ நான் ஆவலாயிருக்கிறேனா? என்னிடமுள்ள மிகச் சிறந்ததை யெகோவாவுக்கு கொடுக்கிறேனா?—நீதிமொழிகள் 3:9.
‘கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி’
இருப்பினும், ஒருவர் தியாகம் செய்வது ஞானமானதா? ஆம், நிச்சயமாக! இந்த குணம் அநேக ஆசீர்வாதங்களை கொண்டு வரும் என்பதை பவுல் தன் சொந்த அனுபவத்திலிருந்தே அறிந்திருந்தார். அது அவருக்கு சந்தோஷத்தைக் கொண்டுவந்தது மட்டுமல்லாமல் மற்றெதிலும் கிடைக்காத மன திருப்தியை அளித்தது. இதை அவர் தன் வாயாலேயே ஒப்புக்கொண்டார். எபேசுவைச் சேர்ந்த சில முதிர்ந்த சகோதரர்களை மிலேத்துவில் பவுல் சந்தித்தபோது இவ்வாறு சொன்னார்: “இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன்.” (அப்போஸ்தலர் 20:35) இப்படிப்பட்ட குணத்தை காட்டுவது இப்பொழுதே பெரும் சந்தோஷத்தை அள்ளித்தருகிறது என்பதை இன்று லட்சக்கணக்கானோர் அறிந்துள்ளனர். அத்துடன் சொந்த அக்கறைகளைவிட கடவுளுடைய சித்தமும் மற்றவர்களின் விருப்பமும்தான் முக்கியம் என நினைத்து வாழ்வோரை யெகோவா எதிர்காலத்தில் அபரிமிதமாக ஆசீர்வதிப்பார். அப்போது சந்தோஷம் அவர்களில் குடிகொள்ளும்.—1 தீமோத்தேயு 4:8-10.
நாம் முன்பு பார்த்த பில், ஏன் ராஜ்ய மன்றங்களை கட்டும் பணியில் அயராது உழைத்து தன் சகோதரர்களுக்கு உதவ விரும்புகிறார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் தந்த பதில்: “இவ்வாறு சிறிய சபைகளுக்கு உதவுவதால் கிடைக்கும் மனதிருப்தியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. என்னிடமிருக்கும் திறமைகளையெல்லாம் மற்றவர்களுடைய நலனுக்காக பயன்படுத்துவதில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.” அதேபோல எம்மா, மற்றவர்கள் பைபிளை அறிந்துகொள்ள உதவ வேண்டும் என்பதற்காக ஏன் தன்னுடைய சக்தி மற்றும் திறமைகளையெல்லாம் அர்ப்பணித்திருக்கிறார்? “இதைத்
தவிர வேறு எதைச் செய்வதையும் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இளமை துடிப்பும் பலமும் இருக்கும்போதே முடிந்தளவு யெகோவாவை சந்தோஷப்படுத்தவும் மற்றவர்களுக்கு உதவவும் விரும்புகிறேன். அவருக்காக கொஞ்சம் பணத்தையோ பொருளையோ தியாகம் செய்வது அவ்வளவு பெரிய விஷயமே இல்லை. யெகோவா தேவன் எனக்கு செய்திருக்கும் நன்மைகளை பாக்கும்போது, நான் செய்வது ஒன்றுமேயில்லை. எதைச் செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்கிறேன்.”மோரிஸ், பெட்டீ தம்பதியினர் தங்கள் குடும்பத்தை பராமரித்து நல்ல நிலைக்கு கொண்டுவருவதற்காக பல ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கின்றனர். அதனால் இப்போது நன்கு ஓய்வெடுக்கலாம் என்று நினைப்பதற்கு பதிலாக கடவுளுக்கு ஊழியம் செய்கின்றனர். அதைக் குறித்து அவர்கள் வருத்தப்படுவதே கிடையாது. இப்போது ஓய்வு பெற்ற பிறகும் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து அர்த்தமுள்ளதாகவும் பிரயோஜனமுள்ளதாகவும் பயன்படுத்த விரும்புகின்றனர். “நாங்கள் சும்மா வீட்டில் உட்கார்ந்து, ஓய்வெடுத்து, நேரத்தை ஓட்ட விரும்பவில்லை. இன்னொரு நாட்டினருக்கு யெகோவாவைப் பற்றி கற்றுக்கொடுப்பது, பிரயோஜனமான வாழ்க்கை வாழ உதவுகிறது” என்கின்றனர்.
நீங்கள் தியாக மனப்பான்மையை காட்ட தயாராகிவிட்டீர்களா? இது சுலபமாக இருக்காது என்பதை நினைவில் வையுங்கள். கடவுளைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற உண்மையான ஆர்வம் இருந்தாலும் நாம் அபூரணத்தோடு ஓயாமல் போராடுகிறோம். (ரோமர் 7:21-23) இந்த போராட்டத்தில் நம்மால் நிச்சயம் வெற்றி பெறமுடியும், யெகோவா நம் வழிகளை நடத்த நாம் அனுமதிக்கும் பட்சத்தில். (கலாத்தியர் 5:16, 17) அவருடைய சேவையில் நாம் செய்யும் தியாகங்களை அவர் நிச்சயம் மறக்க மாட்டார், நம்மை அற்புதமாக ஆசீர்வதிப்பார். யெகோவா தேவன் ‘வானத்தின் பலகணிகளைத் திறந்து, நம் மேல் ததும்பி வழியுமாறு ஆசி வழங்குவார்.’—மல்கியா 3:10, பொ.மொ.; எபிரெயர் 6:10.
[பக்கம் 23-ன் படம்]
இயேசு தியாக மனப்பான்மையை தாராளமாக காண்பித்தார். நீங்கள்?
[பக்கம் 24-ன் படங்கள்]
ராஜ்ய பிரசங்கிப்பு வேலையிலேயே பவுல் தன் கவனத்தை செலுத்தினார்