Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விரைவில் கவலையில்லா உலகம்

விரைவில் கவலையில்லா உலகம்

விரைவில் கவலையில்லா உலகம்

வாழ்க்கை வரவர பெரும் போராட்டமாகி வருகிறது. நம்பிக்கையிழந்து மனவாட்டமாயிருப்பதற்கு ஒன்றா இரண்டா, எக்கச்சக்கமான காரணங்கள்! வாழ்க்கை கசந்து சோகமயமாக மாறும்போது, நம்முடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மகா கடினமாகிறது. ஏன், வாழ்வை வாஞ்சிப்பவர்களே கூட நம்பிக்கையிழந்து நாடிமேல் கைவைத்துவிடலாம்! இதோ, சில உதாரணங்களை கவனியுங்கள்.

“உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும்” என்று புலம்பும் அளவுக்கு பூர்வத்தில் வாழ்ந்த தீர்க்கதரிசியாகிய மோசே மிகவும் சோர்வடைந்துவிட்டார். (எண்ணாகமம் 11:15) விரோதிகளிடமிருந்து தப்பியோடிய தீர்க்கதரிசியாகிய எலியாவின் கூக்குரலை கேளுங்கள்: “போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்.” (1 இராஜாக்கள் 19:4) தீர்க்கதரிசியாகிய யோனாவின் புலம்பலை கேளுங்கள்: “இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும்.” (யோனா 4:3) ஆனாலும் மோசேயோ எலியாவோ யோனாவோ தற்கொலை செய்துகொள்ளவில்லை. “கொலை செய்யாதிருப்பாயாக” என்ற கடவுளுடைய கட்டளையை எல்லாரும் அறிந்திருந்தனர். (யாத்திராகமம் 20:13) அவர்களுக்கு கடவுள்மீது பலமான விசுவாசம் இருந்தது. நம்பிக்கையிழந்து போகுமளவுக்கு எந்தச் சூழ்நிலையும் மோசமானதல்ல, உயிர் கடவுளிடமிருந்து வரும் அருட்கொடை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

நாம் இன்றைக்கு எதிர்ப்படும் பிரச்சினைகளைப் பற்றியென்ன? உணர்ச்சி ரீதியிலான கவலைகளோ உடல் ரீதியிலான பிரச்சினைகளோ எதுவாக இருந்தாலும் சரி, சில சமயங்களில் குடும்ப அங்கத்தினரிடமிருந்தும் அக்கம்பக்கத்தாரிடமிருந்தும் சக ஊழியர்களிடமிருந்தும் சங்கடங்கள் வருவதை சகிக்கத்தான் வேண்டும். “சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்திலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய், உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிற” ஜனங்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. (ரோமர் 1:28-31) பொழுது விடிந்து பொழுது அடையும் வரை இப்படிப்பட்ட ஆட்களோடுதான் வாழவேண்டியதாக இருப்பதால், வாழ்க்கை பெரும் சுமையாகிவிடலாம். ஆறுதலும் நிவாரணமும் தேவைப்படுவோருக்கு நாம் எப்படி உதவலாம்?

செவிகொடுத்துக் கேளுங்கள்

துன்பங்களும் துயரங்களும் ஒருவரை மனோ ரீதியில் நிலைதடுமாறச் செய்யலாம். ஞானவான் ஒருவர் சொன்னார்: “இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்.” (பிரசங்கி 7:7) ஆகவே, தற்கொலையைப் பற்றி பேசுகிற நபரை கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது. அவருக்கு இருக்கும் பிரச்சினைக்கு உடனடி கவனம் செலுத்த வேண்டும்​—⁠அது உணர்ச்சி ரீதியிலானதாகவோ உடல் ரீதியிலானதாகவோ மனோ ரீதியிலானதாகவோ அல்லது ஆன்மீக ரீதியிலானதாகவோ எதுவாக இருந்தாலும்சரி. சிகிச்சை முறைகள் வித்தியாசப்படுவதால், எந்த சிகிச்சை முறையை தெரிந்தெடுப்பது என்பதை தனிப்பட்ட நபர்தான் தீர்மானிக்க வேண்டும்.​—கலாத்தியர் 6:⁠5.

தற்கொலை உணர்வுகளுக்கான காரணம் எதுவாக இருந்தாலும்சரி, பொறுமையும் புரிந்துகொள்ளும் பக்குவமும் அனுதாபமும் மிகுந்த ஒருவரிடம் மனதிலுள்ளதை கொட்டிவிடுவது மிகவும் நல்லது. செவிகொடுத்துக் கேட்கும் மனமுள்ள குடும்ப அங்கத்தினர்களும் நண்பர்களும் உதவலாம். அன்பும் அனுதாபமும் காட்டுவதோடு, கடவுளுடைய வார்த்தையிலுள்ள இதமான விஷயங்கள் நம்பிக்கையிழந்தோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

துயரப்படுவோருக்கு ஆன்மீக உதவி

பைபிளை வாசிப்பது அதிக ஊக்கமளிக்கும் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக தொனிக்கலாம். பைபிள் மனோநல மருத்துவ கையேடு அல்ல, என்றாலும் உயிரை மதிப்பதற்கு பைபிள் நமக்கு உதவும். சாலொமோன் ராஜா இவ்வாறு சொன்னார்: “மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.” (பிரசங்கி 3:12, 13) அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு பங்களிக்கும் திருப்திகரமான வேலையோடுகூட, சிறுசிறு விஷயங்களும்​—⁠இதமாக வீசும் தென்றல், கதிரவனின் ஒளி, பசுமையான மரங்கள், மணம் பரப்பும் மலர்கள், பறவைகளின் கீதங்கள் ஆகியவையும்​—⁠நாம் அனுபவித்து மகிழ்வதற்கு கடவுளால் அருளப்பட்ட அரும் கொடைகளே.

இதைவிட நம்மை சந்தோஷ வானில் சிறகடித்துப் பறக்க வைப்பது எதுவென்றால், யெகோவா தேவனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் நம்மை அன்போடு ஆதரித்து வழிநடத்துகிறார்கள் என்ற பைபிளின் உறுதியே. (யோவான் 3:16; 1 பேதுரு 5:6, 7) “ஆண்டவர் ஸ்தோத்திரத்திற்குரியவர், அவர் தினந்தினம் நமது பாரங்களைச் சுமக்கிறார்; அவரே நமது இரட்சிப்பின் கடவுள்” என்று சங்கீதக்காரன் சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கிறது. (சங்கீதம் 68:19, தி.மொ.) நாம் அற்பமானவர்களாகவும் லாயக்கற்றவர்களாகவும் உணர்ந்தாலும், நாம் அவரிடம் ஜெபிக்கும்படி கடவுள் நம்மை அழைக்கிறார். தாழ்மையாகவும் உள்ளப்பூர்வமாகவும் அவரிடம் உதவி கேட்கிறவர்கள் உதாசீனப்படுத்தப்பட மாட்டார்கள் என்ற நிச்சயத்தை தருகிறார்.

இன்று, பிரச்சினைகளில்லா வாழ்வை கனவிலும்கூட யாரும் நினைத்துப்பார்க்க முடியாது. (யோபு 14:1) ஆனால், பிரச்சினைகளுக்கு பரிகாரம் தற்கொலை அல்ல என்பதை கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் சத்தியம் அநேகருக்கு காண்பித்திருக்கிறது. நம்பிக்கையிழந்த சிறைக் காவலருக்கு அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு உதவினார் என்பதை சற்று கவனியுங்கள். “சிறைச்சாலைக்காரன் நித்திரை தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான்.” இழிவான, ஒருவேளை சித்திரவதையான மரணத்தைவிட தன்னுடைய அஜாக்கிரதைக்கு தற்கொலையே தகுந்த பரிகாரம் என அந்த சிறைக்காவலர் சட்டென்று முடிவெடுத்தார். உடனே அப்போஸ்தலன் பவுல் மிகுந்த சத்தமிட்டு: “நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம்” என்று சொன்னார். அத்தோடு பவுல் முடித்துக்கொள்ளவில்லை. அவரும் சீலாவும் அந்த சிறைக்காவலரை ஆறுதல்படுத்தினார்கள். “ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்” என்ற அவருடைய கேள்விக்கு, “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்று பதிலளித்தார்கள். பின்பு அவர்கள் யெகோவாவின் வார்த்தையை அவருக்கும் அவருடைய வீட்டிலிருந்த யாவருக்கும் அறிவித்தார்கள். அதனால் “அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.” அந்தச் சிறைக்காவலரும் அவருடைய குடும்பத்தார் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள், வாழ்க்கைக்கு புது அர்த்தத்தையும் கண்டுகொண்டார்கள்.​—அப்போஸ்தலர் 16:27-35.

இன்று, துன்மார்க்கத்திற்கு கடவுள் காரணர் அல்லர் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! ‘பிசாசென்றும் சாத்தானென்றும் அழைக்கப்பட்ட’ பொல்லாத ஆவி சிருஷ்டியே ‘இந்த உலகமனைத்தையும் மோசம்போக்குகிறவன்’ என அவருடைய வார்த்தை அடையாளம் காட்டுகிறது. அவனுக்கு அனுமதிக்கப்பட்ட காலம் கரைந்துகொண்டே வருகிறது. (வெளிப்படுத்துதல் 12:9, 12) பூமியின் குடிகள் மீது சாத்தானும் அவனுடைய பேய்களும் கொண்டுவந்த எல்லா துன்பங்களும் கடவுளால் முடிவுக்கு கொண்டுவரப்படும். நீதி வாசம்பண்ணும் புதிய உலகை கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார்; அது, நம்பிக்கையிழந்து தவிப்பதற்கும் தற்கொலைக்கும் காரணமான எல்லாவற்றிற்கும் நிரந்தர பரிகாரத்தைக் கொண்டுவரும்.​—2 பேதுரு 3:⁠13.

உதவிக்காக கதறும் உள்ளங்களுக்கு ஆறுதல்

நம்பிக்கையிழந்தவர்கள் இப்பொழுதே பைபிளிலிருந்து ஆறுதலை பெறலாம். (ரோமர் 15:4) சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறு பாடினார்: “தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.” (சங்கீதம் 51:17) உண்மைதான், இந்த உலகத்தில் வாழ்வதால் சில சோதனைகளையும் அபூரணத்தின் விளைவுகளையும் நாம் அறுவடை செய்யாமல் இருக்க முடியாது. ஆனால், தயவும் அன்பும் நியாயமும் பொருந்திய நம்முடைய பரலோக தகப்பன் தரும் திருத்தமான அறிவை பெற்றுக்கொள்வது அவருடைய பார்வையில் அருமையானவர்கள் என்ற உறுதியை நமக்கு கொடுக்கிறது. கடவுள் நம்முடைய மிக முக்கியமான நண்பராகவும் போதனையாளராகவும் ஆகமுடியும். யெகோவா தேவனுடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொண்டால், அவர் நம்மை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார். “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] நானே” என நம்முடைய சிருஷ்டிகர் சொல்கிறார்.​—ஏசாயா 48:⁠17.

கடவுளை அண்டியிருப்பது அநேகருக்கு அருமருந்தாக திகழ்ந்திருக்கிறது. உதாரணமாக: மாரா, ஏற்கெனவே மாதக்கணக்காக மனச்சோர்வினால் பலவீனமடைந்திருந்தாள். அந்த சமயம் பார்த்து அவள் தன்னுடைய ஒரே மகனையும் விபத்தில் இழந்தாள். a அதனால் அவள் அதிர்ச்சியடைந்து தன்னுடைய உயிரையே பறிப்பதற்கு முயற்சி செய்தாள். ஆனால் இப்பொழுதோ ஒவ்வொரு நாளும் காலமே எழுந்து தன்னுடைய வீட்டு வேலைகளை கவனிக்கிறாள். இனிமையான இன்னிசைகளை கேட்டு மகிழ்கிறாள், மற்றவர்களுக்கு உதவியும் செய்கிறாள். “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்ற” நம்பிக்கை, அவளுடைய அன்பான மகனுடைய அவல மரணத்தால் வந்த வேதனைகள் சிலவற்றிற்கு மருந்திட்டது, கடவுளில் விசுவாசத்தையும் நங்கூரமாக ஊன்ற வைத்திருக்கிறது. (அப்போஸ்தலர் 24:15) பரலோகத்தில் தேவதூதர்களைப் போல ஆகவேண்டும் என்ற ஆசை மாராவுக்கு ஒருபோதும் இல்லாததால், சங்கீதம் 37:11-⁠ல் உள்ள பின்வரும் வார்த்தைகள் அவளுடைய இதயத்தை தொட்டுவிட்டன: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”

மற்றொரு பிரேஸிலிய பெண் சான்ட்ரா. தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் சிறந்த தாயாக விளங்குவதற்கு மிகவும் கடினமாக உழைத்தாள். அவள் இவ்வாறு ஒப்புக்கொள்கிறாள்: “நான் எப்பவுமே ரொம்ப பிஸிதான், என்னுடைய அப்பா திடீரென இறந்துவிட்டார். இந்தக் கவலையில தவியா தவிச்சிகிட்டு இருந்தப்போ என்னுடைய வீட்டுக்காரர் இன்னொரு பெண்ணோடு பழகுற விஷயம் இடிபோல் என்னைத் தாக்கியது. உதவிக்காக கடவுளிடம் ஜெபிக்கிற நினைப்பே அப்போ எனக்கு வரலை.” நம்பிக்கையிழந்த சான்ட்ரா தற்கொலை செய்ய முயன்றாள். அதிலிருந்து மீள்வதற்கு அவளுக்கு எது உதவியது? ஆன்மீக காரியங்களின்மீது அவளுக்கு இருந்த போற்றுதலே. “ஒவ்வொரு ராத்திரியும் தூங்கப் போறதுக்கு முன்னாடி பைபிள் வாசிச்சேன், நான் யாரைப் பத்தி வாசிச்சேனோ அவங்க இடத்தில என்னை வைச்சு பாத்தேன். காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளையும் வாசிச்சேன். எனக்கு அதில ரொம்ப பிடிச்சது வாழ்க்கை சரிதைகள்தான். உள்ளதைக் கொண்டு திருப்தியா இருக்கனுங்கிறத புரிஞ்சுக்க அவை உதவிச்சு.” யெகோவாவே மிகச் சிறந்த நண்பர் என்பதை புரிந்துகொண்டு, பிரச்சினைகளை குறிப்பாக சொல்லி ஜெபம் செய்ய கற்றுக்கொண்டாள்.

கவலையில்லா எதிர்காலம்

மனிதன் படும் துயரமெல்லாம் தற்காலிகம்தான் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலாயிருக்கிறது! இப்போது குற்றச்செயலுக்கோ அநீதிக்கோ தப்பெண்ணத்திற்கோ பலியான பிள்ளைகளும் பெரியவர்களும் கடவுளுடைய ஆட்சியில் மகிழ்ந்து களிகூருவார்கள். தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட சங்கீதம் இவ்வாறு சொல்கிறது: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் [யெகோவாவால் நியமிக்கப்பட்ட ராஜாவாகிய இயேசு கிறிஸ்து] விடுவிப்பார்.” அதோடு, “பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.” சொல்லப்போனால், “அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.”​—சங்கீதம் 72:12-14.

இத்தீர்க்கதரிசன வார்த்தைகள் நிஜமாகும் காலம் நெருங்கிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் என்றென்றும் வாழ்வை அனுபவிக்கும் எதிர்பார்ப்பு உங்களை கவர்ந்திழுக்கிறதா? அப்படியானால், நீங்கள் ஆனந்தமடைவதற்கும் கடவுளிடமிருந்து வந்த பரிசாகிய உயிரை நெஞ்சார நேசிப்பதற்கும் காரணமிருக்கிறது. ஆறுதலளிக்கும் இந்த பைபிள் நம்பிக்கையை மற்றவர்களோடு நீங்களும் பகிர்ந்துகொண்டால், உணர்ச்சியற்ற, அன்பற்ற இவ்வுலகில் உதவிக்காக கதறும் உள்ளங்களுடைய வாழ்வில் மகிழ்ச்சி தீபம் ஏற்றலாம்.

[அடிக்குறிப்பு]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 6-ன் படம்]

இன்று மகிழ்ச்சியோடிருப்பதற்கு அநேக சந்தர்ப்பங்கள் இருக்கின்றன

[பக்கம் 7-ன் படம்]

கவலையில்லா உலகை நீங்கள் எதிர்நோக்கியிருக்கிறீர்களா?