எனக்கு கிடைத்த அரிய சொத்து
வாழ்க்கை சரிதை
எனக்கு கிடைத்த அரிய சொத்து
கேரல் ஆலன் கூறியது
அந்த அழகான புத்தம் புதிய புத்தகத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு நான் தனியாக நின்றுகொண்டிருந்தேன். பயம் என்னைக் கவ்வியது, கண்ணீர் தாரை தாரையாக முகத்தில் வழிந்தது. ஏழு வயது சிறுமியாகிய நான் முன்பின் தெரியாத நகரத்தில் தொலைந்துவிட்டேன். என்னைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஆட்கள்!
சமீபத்தில்தான், சுமார் 60 வருடங்களுக்குப்பின் என்னுடைய கணவரோடு அந்த இடத்துக்குச் சென்றபோது சிறுவயதில் ஏற்பட்ட அந்த அனுபவம் மறுபடியுமாக என் மனத்திரையில் ஓடியது. நியூ யார்க், பேட்டர்ஸனில் அழகான அந்த உவாட்ச்டவர் கல்வி மையம்தான் அந்த இடம். அங்கே யெகோவாவின் சாட்சிகளுடைய பிரயாண கண்காணிகளுக்கு நடத்தப்பட்ட பள்ளியின் இரண்டாவது வகுப்புக்கு என்னுடைய கணவர் அழைக்கப்பட்டிருந்தார்.
சூரிய ஒளியூட்டப்பட்ட அந்தச் சிறிய வரவேற்பு அறையைச் சுற்றிப்பார்த்த போது “மாநாடுகள்” என்று எழுதப்பட்ட ஒரு பெரிய பலகையை கவனித்தேன். அதன் நடுவில், கருப்பு வெள்ளை நிற புகைப்படம் ஒன்று. அதில் சிறு பிள்ளைகள் மிகவும் உற்சாகமாக தாங்கள் பெற்றுக்கொண்ட புத்தகங்களை காட்டிக்கொண்டு நிற்கும் படம். சிறுமியாக நான் வைத்திருந்த அதே புத்தகம். அந்தப் புகைப்படத்திற்கு மேல் எழுதப்பட்ட வாசகத்தை நான் அவசர அவசரமாக வாசித்தேன்: “1941 செயின்ட் லூயிஸ், மிஸ்ஸௌரி, காலை நிகழ்ச்சி ஆரம்பிக்கையில் 5 முதல் 18 வயதிலிருந்த 15,000 பிள்ளைகள் மேடைக்கு எதிரில் முன்பக்கத்தில் அமர்ந்திருந்தனர். . . . சகோதரர் ரதர்ஃபோர்டு பிள்ளைகள் என்ற புதிய புத்தகத்தை வெளியிட்டார்.”
ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு தனிப்பட்ட பிரதி கொடுக்கப்பட்டது. அதற்குப் பின் என்னைத் தவிர அங்கிருந்த எல்லா பிள்ளைகளும் தங்கள் அம்மா, அப்பா உட்கார்ந்திருந்த இடத்துக்குப் போய்விட்டார்கள். என்னுடைய அம்மா அப்பாவை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கிருந்த ஒரு அட்டென்டண்டு என்னைத் தூக்கி, உயரமான ஒரு நன்கொடை பெட்டியின்மேல் நிற்க வைத்து எனக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கச் சொன்னார். அகலமான படிக்கட்டுகளின் வழியாக வந்துகொண்டிருந்த ஜனக்கூட்டத்தில் யாராவது தென்படுவார்களா என்று நான் கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று எனக்கு தெரிந்த ஒருவர் கண்ணில்பட்டார். “பாப்
அங்கிள்! பாப் அங்கிள்!” நான் கிடைத்துவிட்டேன்! பாப் ரேய்னர் என்னைத் தூக்கிக்கொண்டு மிகவும் கவலையாக காத்துக்கொண்டிருந்த என் அப்பா அம்மாவிடம் என்னை ஒப்படைத்தார்.என் வாழ்க்கையை வடித்த ஆரம்பகால சம்பவங்கள்
அந்த பலகையைப் பார்த்தபோது நினைவுகள் மடைதிறந்த வெள்ளம் போல் மனதுக்கு வந்தன. இந்தச் சம்பவங்கள்தான் என்னுடைய வாழ்க்கையை வார்த்து உருவாக்கியதால் இப்போது இங்கே இந்த அழகான பேட்டர்ஸன் கட்டடத்தில் நாங்கள் நின்றுகொண்டிருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கும் முன்பாக நடந்த சம்பவங்களை, என்னுடைய பாட்டி தாத்தாவிடமிருந்தும், என் அம்மா அப்பாவிடமிருந்தும் நான் கேள்விப்பட்ட காரியங்களை இப்போது என் மனம் அசைபோடுகிறது.
டிசம்பர், 1894-ல், என் அப்பா வழி தாத்தா க்ளேடன் ஜே. உட்வோர்த் வீட்டுக்கு யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு முழு நேர ஊழியர் வந்தார். இவருடைய வீடு பென்சில்வேனியா, ஸ்க்ரேன்டனில் இருந்தது. அப்போதுதான் க்ளேடனுக்கு திருமணமாகி இருந்தது. அதற்குப் பிறகு இவர் உவாட்ச்டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியின் தலைவர் சார்லஸ் டேஸ் ரஸலுக்கு ஒரு கடிதம் எழுதினார். இது 1895, ஜூன் 15 காவற்கோபுரம் இதழில் வெளியானது. அவர் இவ்வாறு எழுதியிருந்தார்:
“என் இளம் மனைவியும் நானும் பத்து வருடங்களாக ஒரு புராட்டஸ்டன்டு சர்ச்சில் உறுப்பினராக இருந்துவருகிறோம்; ஆனால் இப்போது, அந்த இருளிலிருந்து மகா உன்னதமான கடவுளின் பரிசுத்தப் பிள்ளைகளுக்காக உதயமாகும் புதிய நாளின் ஒளிக்குள் அடியெடுத்து வைக்கிறோம். . . . என் மனைவியும் நானும் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கு வெகு முன்பே ஆண்டவருக்கு சித்தமானால் ஒரு அயல் நாட்டில் மிஷனரிகளாக சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறோம்.”
அதற்கு பிறகு, 1903-ல் பென்சில்வேனியாவின் அழகிய பொக்கோனோ மலையில் ஒரு பெரிய பண்ணை வீட்டில் வாழ்ந்து வந்த என் அம்மா வழி தாத்தா செபாஸ்டியனும் பாட்டி கேத்தரீன் கெரிசீயும் உவாட்ச் டவர் பிரதிநிதிகள் இருவர் சொன்ன பைபிள் செய்தியை ஆர்வமாக கேட்டார்கள். அவர்களுடைய மகள்கள் கோராவும் மேரியும் தங்கள் கணவன்மார்கள் வாஷிங்டன், எட்மண்டு ஹோவல் என்பவர்களோடு அங்கே தான் வாழ்ந்துவந்தார்கள். உவாட்ச் டவர் பிரதிநிதிகள் கார்ல் ஹாமர்லியும் ரா ரேட் க்ளிஃப்பும் அவர்களோடு ஒரு முழு வாரம் தங்கியிருந்து அவர்களுக்கு அனேக காரியங்களை கற்பித்தார்கள். அவர்கள் ஆறு பேரும் கேட்டார்கள், கற்றார்கள், சீக்கிரத்தில் வைராக்கியமுள்ள பைபிள் மாணாக்கரானார்கள்.
அதே வருடத்தில் 1903-ல் கோராவுக்கும் வாஷிங்டன் ஹோவெல்லுக்கும் கேத்தரீன் என்ற ஒரு மகள் பிறந்தாள். பிற்பாடு அவள் எப்படி என் அப்பா க்ளேடன் ஜே. உட்வொர்த் ஜூனியரை திருமணம் செய்தார் என்பது சுவாரசியமான அதேசமயத்தில் அர்த்தமுள்ள ஒரு கதை. இதிலிருந்து என் தாத்தா க்ளேடன் ஜே. உட்வொர்த் சீனியரின் ஆழ்ந்த அறிவும் அன்பும் அக்கறையும் தெரிகிறது.
அப்பாவுக்கு கிடைத்த அன்பான உதவி
என்னுடைய அப்பா க்ளேடன் ஜூனியர் 1906-ல் ஹோவெல் குடும்பத்தாரின் பண்ணையிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஸ்க்ரேன்டனில் பிறந்தார். அந்த காலங்களில் உட்வொர்த் தாத்தாவுக்கு ஹோவெல்லின் பெரிய குடும்பத்தோடு நல்ல பழக்கமிருந்தது, அவர்கள் வீட்டுக்கு வரப்போக இருந்து அவர்களுடைய நல்ல உபசரிப்பை அனுபவித்தவர். அவர் அந்தப் பகுதியில் இருந்த பைபிள் மாணாக்கரின் சபைக்கு பெரும் உதவியாக இருந்தார். காலம் சென்றபோது ஹோவெல் குடும்பத்தில் நடந்த அவருடைய மூன்று மகன்களின் திருமணத்தை நடத்தி வைக்கும்படி தாத்தாவை அழைத்தார்கள். தன்னுடைய மகனின் நலனை மனதில் வைத்து அவர் இந்த திருமணங்கள் ஒவ்வொன்றுக்கும் அப்பாவையும் வழக்கமாக அழைத்துச் சென்றார்.
அந்தச் சமயத்தில் அப்பாவுக்கு பைபிள் மாணாக்கர் செய்துவந்த ஊழியத்தில் ஈடுபாடு இருக்கவில்லை. தாத்தா ஊழியத்துக்குச் செல்லும்போது இவர் காரை ஓட்டிச் செல்வார், தாத்தா இவரை மிகவும் உற்சாகப்படுத்தியபோதும்கூட அவர்தானே சுறுசுறுப்பாக இதில் ஈடுபடவில்லை. அந்தச் சமயத்தில் என் அப்பாவுக்கு எல்லாவற்றையும்விட இசையில்தான் ஈடுபாடு அதிகமிருந்தது, அந்தத் துறையில் வல்லுநராக வேண்டும் என்ற ஒரு வேகம் அவருக்கு இருந்தது.
கோராவுக்கும் வாஷிங்டன் ஹோவெல்லுக்கும் பிறந்த
மகள் கேத்தரீன்கூட இசையில் சாதனை புரிந்து, பியானோ வாசித்தாள், அதைக் கற்றும்கொடுத்து வந்தாள். ஆனால் இந்த துறையில் அவளுக்கு வாய்ப்புகள் வந்துகொண்டிருந்த அந்தச் சமயத்தில் அதை ஒருபுறமாக ஒதுக்கிவைத்துவிட்டு முழு நேர ஊழியத்தில் பங்குகொள்ள ஆரம்பித்தாள். தன் மகனுக்கு ஒரு மிகச் சிறந்த துணையை தேடிக்கொண்டிருந்த தாத்தாவுக்கு ஒரே மகிழ்ச்சி! அப்பா முழுக்காட்டுதல் பெற்றார், ஆறு மாதங்கள் கழித்து ஜூன் 1931-ல் அம்மாவை மணந்தார்.தாத்தாவுக்கு தன் மகனுக்கு இசையில் இருந்த திறமையைக் குறித்து ஒரே பெருமை. ஓஹையோ, க்ளிவ்லாந்தில் 1946-ல் நடந்த சர்வதேச மாநாட்டு இசைக் குழுவுக்கு பயிற்சியளிக்கும்படி அப்பாவிடம் கேட்கப்பட்டபோது தாத்தாவுக்கு அத்தனை மகிழ்ச்சி. அதைத் தொடர்ந்துவந்த ஆண்டுகளில் யெகோவாவின் சாட்சிகளுடைய மற்ற மாநாடுகளிலும் இசைக் குழுவுக்கு அப்பா தலைமைதாங்கினார்.
தாத்தாவின் விசாரணையும் சிறை வாழ்க்கையும்
பேட்டர்ஸன் வரவேற்பு அறையில், அடுத்த பக்கத்திலுள்ள இந்தப் படமும் மாட்டப்பட்டிருந்ததை பாலும் நானும் கவனித்தோம். இந்தப் படத்தை உடனடியாக நான் அடையாளங் கண்டுகொண்டேன், ஏனென்றால் இதே படத்தை 50 வருடங்களுக்கு முன் தாத்தா எனக்கு அனுப்பியிருந்தார். வலது கோடியில் அவர் நின்றுகொண்டிருக்கிறார்.
முதல் உலகப் போரின் சமயத்தில் தேசாபிமான அலை எங்கும் அடித்துக்கொண்டிருந்தபோது, உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைவர் ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்டு (நடுவில் உட்கார்ந்திருப்பவர்) உட்பட இந்த எட்டு பைபிள் மாணாக்கரும் பொய்க் குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டார்கள், அவர்களுக்கு ஜாமீனில் விடுதலை மறுக்கப்பட்டது. வேதவாக்கியங்களின் படிப்புகள் (ஆங்கிலம்) புத்தகத்தில் முடிந்துபோன இரகசியம் (ஆங்கிலம்) என்ற தலைப்பின்கீழ் சொல்லப்பட்டிருந்த கூற்றுகளின் அடிப்படையில் இவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஐக்கிய மாகாணங்கள் முதல் உலகப் போரில் கலந்துகொள்வதை இந்தக் கூற்றுகள் ஆட்சேபித்ததாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டது.
சார்லஸ் டேஸ் ரஸல் பல ஆண்டுகள் செலவழித்து வேதவாக்கியங்களின் படிப்புகள் புத்தகத்தின் முதல் ஆறு பகுதிகளை எழுதியிருந்தார், ஆனால் ஏழாவது பகுதியை எழுதுவதற்கு முன் அவர் காலமானார். ஆகவே அவர் எடுத்திருந்த குறிப்புகள் தாத்தாவிடமும் இன்னொரு பைபிள் மாணாக்கரிடமும் கொடுக்கப்பட்டது, இவர்கள் ஏழாவது பகுதியை எழுதினர். இது போர் முடிவதற்கு முன் 1917-ல் வெளியிடப்பட்டது. விசாரணையில் தாத்தாவுக்கும் மற்றவர்களுக்கும் 20 ஆண்டுகள் என்ற கணக்கில் நான்கு தடவை சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
பேட்டர்ஸன் வரவேற்பு அறையில் இருந்த படத்தின் தலைப்பு இவ்வாறு கூறியது: “போரும் முடிவுக்கு வந்து ரதர்ஃபர்டும் அவருடைய கூட்டாளிகளும் தீர்ப்பளிக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் ஆனபின் மார்ச் 21, 1919 அன்று உச்ச நீதிமன்றம் எட்டுபேரையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்தது, மார்ச் 26 அன்று ஒவ்வொருவரும் 10,000 டாலர்கள் பணம் செலுத்தியதன் பேரில் ஜாமீனில் புரூக்ளினில் விடுவிக்கப்பட்டனர். மே 5, 1920 அன்று ஜே. எஃப். ரதர்ஃபர்டும் மற்றவர்களும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.”
இவர்களுக்கு தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது, ஆனால் ஜார்ஜியாவில் அட்லான்டாவிலுள்ள ஃபெடரல் திருத்தியல் சிறைக்கு அவர்களை அனுப்புவதற்கு முன், எட்டு பேரும் நியு யார்க், புரூக்ளினில் ரேமண்டு தெரு சிறையில் சில நாட்கள் கழித்தனர். “வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு அழுக்காகவும் மோசமாகவும்” ஆறுக்கு எட்டு அடி அளவில் இருந்த அறையை விவரித்து அங்கிருந்து தாத்தா கடிதமெழுதியிருந்தார். அவர் இப்படி எழுதியிருந்தார்: “ஒரு பக்கம் செய்தித்தாள்கள் குவியல், அதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, பிறகுதான் தெரிந்தது, இந்த செய்தித்தாள்கள்தான் டாய்லட் பேப்பர்கள் என்பது. அதுவும் ஒரு சோப்பும் ஒரு சிறு துணியும்தான் சுத்தத்தையும் தன்மானத்தையும் காத்துக்கொள்ள எங்களுக்கு இருந்தது.”
ஆனாலும் தாத்தாவுக்கு நகைச்சுவை உணர்வு மட்டும் குறையவில்லை, “நான் தங்கியிருப்பது ஹோட்டல் டி ரேமாண்ட், போர்டு மீட்டிங் முடிந்தவுடன் இந்த ஹோட்டலை நான் காலிசெய்துவிடுவேன்” என்று தமாஷாக எழுதியிருந்தார். அவர் நடந்துகொண்டிருக்கையில் ஏற்பட்ட சம்பவங்களையும் எழுதியிருந்தார். ஒரு சமயம் தலை வாரிக்கொள்வதற்காக அவர் நின்றுகொண்டிருந்த போது ஒரு ஜேப்படிக்காரன் இவருடைய பாக்கட் வாட்ச்சை பறித்துவிட்டான். “சங்கிலி அறுந்து கீழே விழுந்ததால் அதை நான் காப்பாற்றிவிட்டேன்” என்று அவர் எழுதினார். 1958-ல் புரூக்ளினிலுள்ள பெத்தேலுக்கு நான் சென்றிருந்தபோது உவாட்ச்டவர் சொஸைட்டியின் செயலர்-பொருளாளர் கிரான்ட் சூட்டர் என்பவர் அவருடைய அலுவலகத்துக்கு என்னை அழைத்து அந்த வாட்சை என்னிடம் கொடுத்தார். அதை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
அப்பாவிடம் ஏற்பட்ட மாற்றம்
1918-ல் தாத்தாவை அநியாயமாக சிறையிலடைத்தபோது, என் அப்பாவுக்கு வயது 12 தான். பாட்டி வீட்டை பூட்டிவிட்டு அவரை அழைத்துக்கொண்டு தன் அம்மா வீட்டுக்கு போய்விட்டார்கள். அங்கே அம்மாவின் மூன்று தங்கைகளும் இருந்தனர். திருமணத்திற்கு முன் பாட்டியின் குடும்ப பெயர் ஆர்த்தர். அவருடைய உறவினர் செஸ்டர் ஆலன் ஆர்த்தர் என்பவர் அமெரிக்காவின் 21-வது ஜனாதிபதி என்பதால் அவருடைய குடும்பத்தாருக்கு அதில் பெருமை.
உட்வொர்த் தாத்தா ஐக்கிய மாகாணங்களுக்கு எதிராக குற்றம் புரிந்துவிட்டதாக பொய்யாய் குற்றம்சாட்டப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டதால், இவரால் குடும்பத்துக்கே அவமானம் என்று ஆர்த்தர் குடும்பத்தினர் நினைத்தனர். அப்பாவுக்கு அது மிகவும் வேதனையான காலமாக இருந்தது. ஒருவேளை அவர் இப்படி நடத்தப்பட்டதால் தான் ஆரம்பத்தில் வெளி ஊழியத்தில் பங்குகொள்வதில் அவர் அக்கறையில்லாமல் தயக்கம் காண்பித்திருக்கலாம்.
தாத்தா சிறையிலிருந்து விடுதலையானபோது ஸ்க்ரேன்டனில் குவின்ஸி தெருவில் காரை பூசப்பட்ட வீட்டில் குடும்பத்தோடு குடியேறினார். நான் சிறுமியாக இருந்தபோது என் தாத்தாவின் வீடும் பாட்டி வைத்திருந்த அழகான பீங்கான் கிண்ணங்களும் நன்றாக நினைவில் இருக்கிறது. பாட்டி அவற்றை யாரும் கழுவுவதற்கு விடமாட்டார்கள், அதனால் அவற்றை நாங்கள் பரிசுத்த பாத்திரங்கள் என்று கேலியாக சொல்வோம். 1943-ல் பாட்டி இறந்தப்பின், வீட்டுக்கு வந்து போகிறவர்களை உபசரிக்கையில் அம்மா அந்த அழகான கிண்ணங்களை பயன்படுத்தினார்கள்.
சுறுசுறுப்பாக ராஜ்ய சேவை
பேட்டர்ஸன் வளாகத்தில் இருக்கையில் மற்றொரு நாள் 1919-ல் சீடர் பாய்ன்ட் ஓஹையோ மாநாட்டில் சகோதரர் ரதர்ஃபர்டு பேசுவது போன்ற ஒரு படத்தைப் பார்த்தேன். கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி உற்சாகமாக அறிவிக்கும்படியும் அந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட பொற்காலம் பத்திரிகையை பயன்படுத்தும்படியும் அவர் அனைவரையும் ஊக்கப்படுத்தினார். தாத்தா பதிப்பாசிரியராக நியமிக்கப்பட்டார், 1940-களிலும் அவர் மரிப்பதற்கு சற்று முன்பு வரையாகவும் அவர் பல கட்டுரைகளை அதற்காக எழுதிக்கொண்டிருந்தார். 1937-ல் அப்பத்திரிகையின் பெயர் ஆறுதல் (ஆங்கிலம்) என்றும் 1946-ல் விழித்தெழு! (ஆங்கிலம்) என்றும் மாற்றப்பட்டது.
தாத்தா இரண்டு வாரங்கள் ஸ்க்ரேன்டனில் உள்ள வீட்டில் தங்கியும், இரண்டு வாரங்கள் சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் புரூக்ளினில் இருந்த உவாட்ச் டவர் தலைமை அலுவலகத்தில் தங்கியும், கட்டுரைகளை எழுதினார். தாத்தா டைப் செய்யும் சப்தத்தை அநேக நாட்கள் காலை ஐந்து மணிக்கே கேட்கலாம் என்று அப்பா சொல்வார். அதுமட்டுமல்லாமல், பிரசங்க ஊழியத்தில் பங்குகொள்ள வேண்டிய பொறுப்பையும் தாத்தா சீரியஸாக எடுத்துக்கொண்டார். பைபிள் இலக்கியங்களை வைப்பதற்காக, உள்ளே பெரிய பாக்கட்டுகள் வைத்து தைக்கப்படும் உள்சட்டையை சகோதரர்களுக்காக அவர் டிசைன் செய்திருக்கிறார். 94 வயதிலிருக்கும் நவோமி ஹோவெல்
அத்தை இப்போதுகூட இந்த உள்சட்டை ஒன்றை வைத்திருக்கிறார்கள். பெண்களுக்காக புத்தக பை ஒன்றைகூட அவர் டிசைன் செய்திருக்கிறார்.ஒரு சமயம் மிகவும் உற்சாகமாக பைபிள் செய்தியை ஒருவரோடு தாத்தா பேசியிருக்கிறார், அவரோடு ஊழியம் செய்த சகோதரர் தாத்தாவிடம் “சி. ஜே. நீங்க ஒரு தப்பு பண்ணிட்டீங்க” என்றார்.
“என்ன தப்பு?” தாத்தா கேட்டார். உள் பாக்கெட்டுக்குள் கைவிட்டு பார்த்தார். இரண்டு பாக்கெட்டுகளும் காலி.
“நீங்க பொற்காலம் பத்திரிகைக்கு சந்தாவே அளிக்க மறந்திட்டீங்களே.” பதிப்பாசிரியர் தன் பத்திரிகையைத் தர மறந்துவிட்டதை நினைத்து இருவரும் வயிறு குலுங்க சிரித்தனர்.
மலரும் நினைவுகள்
தாத்தாவின் மடியில் உட்கார்ந்திருக்கையில் என் சிறிய கைகளை தன் கையில் வைத்து அவர் “விரல்கள் கதையை” எனக்கு சொல்லுவார். “கட்டைவிரல் டாமி, ஆள்காட்டிவிரல் பீட்டர்” என விரல்களுக்கு பெயர் வைத்து ஒவ்வொரு விரலின் விசேஷத்தையும் பற்றி சொல்லுவார். அதற்குப்பின் எல்லா விரல்களையும் மெதுவாக மூடி ஒரு நீதியை சொல்வார்: “கூடிவாழ்ந்தால் கோடி நன்மை.”
திருமணத்துக்குப்பின் என்னுடைய அம்மாவும் அப்பாவும் ஓஹையோவில் க்ளிவ்லாந்துக்கு சென்றுவிட்டார்கள். அங்கே இவர்களுக்கு எட், மேரி ஹுப்பர் என்ற நண்பர்கள் கிடைத்தார்கள். இவர்களுடைய குடும்பங்கள் அந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே பைபிள் மாணாக்கராக இருந்துவந்தவர்கள். என்னுடைய பெற்றோரும், எட் அங்கிள், மேரி ஆண்டியும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். ஹுப்பர் தம்பதி தங்களுக்கிருந்த ஒரே பெண் குழந்தையை இழந்துவிட்டார்கள், ஆகவே என்னை அவர்கள் ‘மகளாக’ நினைத்தார்கள். இப்படி ஆவிக்குரிய செழுமையான ஒரு சுற்றுச்சூழலில் நான் வளர்ந்து வந்ததால் என்னுடைய எட்டாவது பிறந்த நாளுக்கு முன்பே கடவுளுக்கு என்னை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றுவிட்டேன்.
சிறு வயது முதற்கொண்டே பைபிள் வாசிப்பு என் வாழ்க்கையில் ஒரு பாகமாக இருந்தது. கடவுளுடைய புதிய உலகைப்பற்றி விவரிக்கும் ஏசாயா 11:6-9-லுள்ள வசனங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. 1944-ல், நியூ யார்க், பஃபல்லோ மாநாட்டில் வெளியிடப்பட்ட அமெரிக்கன் ஸ்டான்டர்டு வெர்ஷன் பைபிளின் பிரதி ஒன்றை பெற்றுக்கொண்ட பின்பு பைபிளை முழுவதுமாக வாசிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினேன். யெகோவா என்ற கடவுளுடைய பெயர் “பழைய ஏற்பாட்டில்” சுமார் 7,000 தடவை அதற்குரிய இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டிருந்த இந்த மொழிபெயர்ப்பை வாசித்து நான் மகிழ்ந்தேன்!
சனி, ஞாயிறு வந்துவிட்டாலே குஷி தான். என்னுடைய பெற்றோரும் ஹுப்பர் தம்பதியும் என்னை அழைத்துக்கொண்டு கிராமப்புறங்களுக்கு சாட்சிகொடுக்க வந்துவிடுவார்கள். சாப்பாடு கட்டிக்கொண்டு ஒரு ஓடை அருகில் உட்கார்ந்து சாப்பிடுவோம். அதற்குப்பின் திறந்த வெளியில் பைபிள் பேச்சு கொடுப்பதற்காக யாராவது ஒருவருடைய பண்ணைக்குச் செல்வோம். அக்கம் பக்கத்திலுள்ளவர்களை எல்லாம் அதை கேட்பதற்காக அழைப்போம். மிகவும் எளிமையாக வாழ்ந்தோம். குடும்பங்களாக நாங்கள் சந்தோஷத்தை அனுபவித்தோம். எங்களுடைய குடும்ப நண்பர்களில் பலர் பின்னால் பிரயாண கண்காணிகளாகி விட்டார்கள். எட் ஹுப்பர், பாப் ரேயினர், அவருடைய இரண்டு மகன்கள் ஆகியோர் பிரயாண கண்காணிகள் ஆனார்கள். ரிச்சர்டு ரேயினர் அவருடைய மனைவி லின்டாவோடு இன்னும் இந்த வேலையை செய்துகொண்டிருக்கிறார்.
கோடை மாதங்கள் வந்தால் குதூகலம்தான். ஹொவெல்லின் பண்ணைக்குச் சென்று என் உறவினர்களோடு தங்குவேன். 1949-ல் என் பெரியம்மாவின் மகள் கிரேஸ், மால்கோம் ஆலனை மணந்தாள். பல வருடங்களுக்குப்பின் அவருடைய தம்பியை நான் மணப்பேன் என்று அப்போது நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. என்னுடைய மாமா மகள் மேரியான் உருகுவேயில் மிஷனரியாக இருந்தாள். அவள் 1966-ல் ஹொவார்டு ஹில்பர்ன் என்பவரை மணந்தாள். என்னுடைய இந்த இரண்டு உறவினர்களும் தங்கள் கணவன்மாரோடு சேர்ந்து அநேக ஆண்டுகள் புரூக்ளின் தலைமை அலுவலகத்தில் சேவை செய்துவந்தார்கள்.
தாத்தாவும் என்னுடைய பட்டப்படிப்பும்
நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துவந்த ஆண்டுகளின்போது தாத்தா எனக்கு தவறாமல் கடிதம் போடுவார். குடும்ப புகைப்படங்களை அனுப்பிவைப்பார், அவற்றிற்குப் பின்னால் அதைப்பற்றிய குறிப்புகள் டைப் செய்யப்பட்டிருக்கும், குடும்ப கதைகளை எல்லாம் எழுதுவார். அப்படிதான் அநியாயமாக அவரோடு சிறைக்கு அனுப்பப்பட்டவர்களின் ஃபோட்டோ எனக்குக் கிடைத்தது.
1951-ன் பிற்பகுதியில் குரல்வளை புற்றுநோயால் தாத்தா தன் குரலை இழந்துவிட்டார். ஆனாலும் அவருடைய நகைச்சுவை உணர்வு மட்டும் குறையவே இல்லை. இப்போது அவர் கைவசம் வைத்திருந்த சிறிய நோட்டு புத்தகத்தில் எழுதிக்காட்ட வேண்டும். ஜனவரி 1952-ல் என்னுடைய பள்ளிப் படிப்பு முடியவிருந்தது. டிசம்பர் முதல் வாரத்தில், பட்டமளிப்பு விழாவில் பேசுவதற்காக நான் எழுதி வைத்திருந்த பேச்சை தாத்தாவுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதில் பதிப்பாசிரியர் செய்வது போல மார்ஜினில் திருத்தங்களைச் செய்திருந்தார். கடைசி பக்கத்தில் என் இருதயத்தை தொட்டுவிட்ட வார்த்தைகளை எழுதியிருந்தார்: “தாத்தாவுக்கு மிக்க மகிழ்ச்சி.” பூமியில் அவருடைய வாழ்நாள் 81-வது வயதில் டிசம்பர் 18, 1951-ல் முடிவுக்கு வந்தது. a பட்டமளிப்பு விழாவில் நான் பேசுவதற்காக எழுதிவைத்திருந்த அந்தத் தாள்கள் மங்கிப்போனாலும் கடைசி பக்கத்திலிருக்கும் அந்த மூன்று வார்த்தைகளோடு நான் பத்திரப்படுத்தி பாதுகாத்து வருகிறேன்.
பட்டப்படிப்பு முடிந்தவுடன் பயனியர் சேவையை ஆரம்பித்தேன். யெகோவாவின் சாட்சிகள், முழுநேர பிரசங்க வேலையை அவ்விதமாகத் தான் அழைக்கிறார்கள். 1958-ல் நியு யார்க் நகரில் நடந்த ஒரு மாபெரும்
மாநாட்டுக்குச் சென்றேன். 123 தேசங்களிலிருந்து 2,53,922 பேர் வந்திருந்தார்கள். யாங்கி ஸ்டேடியமும் போலோ விளையாட்டு மைதானமும் நிரம்பி வழிந்தது. அங்கே ஒரு நாள் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு பிரதிநிதியை சந்தித்தேன். அவருடைய அடையாள அட்டையில் “உட்வொர்த் மில்ஸ்” என்று எழுதியிருந்தது. சுமார் 30 வருடங்களுக்கு முன்பே தாத்தாவின் பெயரை அவருக்கு வைத்திருந்தார்கள்!எனக்குக் கிடைத்த சொத்து என் மகிழ்ச்சி
எனக்கு 14 வயதாக இருந்தபோது அம்மா மறுபடியுமாக பயனியர் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு 40 வருடங்களுக்குப்பின் அதாவது 1988-ல் பயனியராக இருக்கையிலேயே மரித்துப் போனார்கள்! அப்பா முடிந்த போதெல்லாம் பயனியர் சேவை செய்துவந்தார். அம்மா இறப்பதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன் அவரும் மரித்துப்போனார். நாங்கள் யாருக்கெல்லாம் பைபிள் படிப்பு நடத்தினோமோ அவர்களெல்லாம் எங்களுடைய உயிர் நண்பர்களானார்கள். அவர்களில் சிலருடைய மகன்கள் புரூக்ளினில் தலைமை அலுவலகத்தில் சேவிப்பதற்கு சென்றுள்ளனர், மற்றவர்கள் பயனியர் சேவையை ஆரம்பித்திருக்கின்றனர்.
1959-வது வருடம் எனக்கு மிகவும் விசேஷமான வருடம். அந்த வருடத்தில்தான் பால் ஆலன் எனக்கு அறிமுகமானார். யெகோவாவின் சாட்சிகளுடைய மிஷனரிகளை பயிற்றுவிப்பதற்காக நடத்தப்படும் கிலியட் பள்ளியின் ஏழாவது வகுப்பிலிருந்து பட்டம் பெற்றிருந்த அவர் 1946-ல் பிரயாண கண்காணியாக நியமிக்கப்பட்டிருந்தார். நாங்கள் சந்தித்துக்கொண்ட போது, ஓஹையோவிலுள்ள க்ளிவ்லாந்தில் நான் பயனியர் செய்துகொண்டிருந்த இடத்துக்குத்தான் அவர் பிரயாண கண்காணியாக வரப்போகிறார் என்பது அவருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவரை மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் 1963, ஜூலை மாதம் உற்றார் உறவினர் சூழ, ஹொவெல் பண்ணையில் திருமணம் செய்துகொண்டோம். எட் ஹுப்பர்தான் எங்கள் திருமணத்தை நடத்திவைத்தார். கனவு நனவானது.
பாலிடம் சொந்தமாக கார் இல்லை. அடுத்து அவர் செல்லவேண்டிய இடத்துக்கு போக நாங்கள் க்ளிவ்லாந்திலிருந்து கிளம்பியபோது எங்களுடைய எல்லா உடைமைகளையும் என்னுடைய சிறிய 1961 மாடல் காருக்குள் ஏற்றினோம். சாதாரணமாக நாங்கள் அடுத்த சபைக்குச் செல்ல திங்கட் கிழமை காருக்குள் பெட்டிகளை ஏற்றுவதைக் காண எங்கள் நண்பர்கள் வந்துவிடுவார்கள். பெரிய பெட்டிகளும் சிறிய பெட்டிகளும் கோப்புகளை வைக்கும் பெட்டியும், டைப்ரைட்டரும் அந்தச் சிறிய காருக்குள் மறைந்துவிடுவதைக் காண்பது ஒரு சர்க்கஸ் காட்சி போல இருக்கும்.
பாலும் நானும் எண்ணற்ற மைல்கள் பயணித்து, இன்பங்களை அனுபவித்தும் துன்பங்களை சகித்தும் வந்திருக்கிறோம், யெகோவா மாத்திரமே அளிக்கும் பெலத்தினால் எல்லாவற்றையும் செய்து முடித்திருக்கிறோம். யெகோவாவிடமும் ஒருவருக்கொருவரும் புதிய மற்றும் பழைய நண்பர்களிடமும் அன்பில் திளைத்த இனிய ஆண்டுகள் அவை. பாலின் பயிற்றுவிப்புக்காக நாங்கள் பேட்டர்ஸனில் கழித்த இரண்டு மாதங்களே மறக்க முடியாத சமயம். யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பை அருகிலிருந்து பார்த்தது, ஆன்மீக சொத்தின் அரிய மதிப்பை மேலும் உணர்த்தியது: ஆம், இதுவே கடவுளுடைய அமைப்பு. இதில் ஒரு சிறிய பாகமாக இருப்பதிலும்கூட என்னே ஆனந்தம்!
[அடிக்குறிப்பு]
a பிப்ரவரி 15, 1952, ஆங்கில காவற்கோபுரம் பக்கம் 128-ஐக் காண்க.
[பக்கம் 25-ன் படம்]
1941 செயின்ட் லூயிஸ் மாநாட்டில் “பிள்ளைகள்” புத்தகத்தை நான் பெற்றுக்கொள்வதற்கு சற்று முன்பு எட் ஹுப்பரோடு
[பக்கம் 26-ன் படம்]
1948-ல் தாத்தா
[பக்கம் 26-ன் படம்]
ஹொவெல் பண்ணையில் என் பெற்றோர் (வட்டத்தில்) திருமணம் செய்துகொண்டபோது
[பக்கம் 27-ன் படம்]
1918-ல் பொய் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட எட்டு பைபிள் மாணாக்கர்கள் (வலக்கோடியில் தாத்தா நின்றுகொண்டிருக்கிறார்)
[பக்கம் 29-ன் படம்]
எங்களுடைய எல்லா பொருட்களும் எங்களுடைய சிறிய காருக்குள் அடங்கிவிட்டன
[பக்கம் 29-ன் படம்]
என்னுடைய கணவர் பாலோடு