Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என்றென்றும் ஆனந்தம் பரலோகத்திலா பூமியிலா?

என்றென்றும் ஆனந்தம் பரலோகத்திலா பூமியிலா?

என்றென்றும் ஆனந்தம் பரலோகத்திலா பூமியிலா?

உங்கள் மகிழ்ச்சி நீங்கள் வாழும் இடத்தையே பொறுத்தது என்று சொல்வீர்களா? நல்ல ஆரோக்கியம், வாழ்வதில் ஒரு நோக்கம், மற்ற மனிதரோடு நல்ல உறவுகள் ஆகியவற்றை பொருத்தே நம் மகிழ்ச்சி இருப்பதை பலர் உடனடியாக ஒப்புக்கொள்வர். பைபிளில் ஒரு நீதிமொழி இவ்வாறு கூறுகிறது: “பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப் பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.”​—நீதிமொழிகள் 15:⁠17.

ஆனால் நம்முடைய இந்த பூமிக்குரிய வீட்டில் ஆண்டாண்டு காலமாக பகையும் வன்முறையும் மற்ற விதமான பொல்லாப்பும் இருந்துவருவது வருத்தமான விஷயம். மரித்தப்பின் அநேகர் போகவிரும்பும் அந்தப் பரலோகம் அல்லது ஆவிமண்டலத்தைப் பற்றி என்ன? பொதுவாக நம்பப்படுவது போல, அது எந்தவிதமான தொந்தரவும் இல்லாத அமைதி நிலவும் இடமாக எப்போதுமே இருந்து வந்திருக்கிறதா?

தேவதூதர்கள் என்று அழைக்கப்படும் கோடிக்கணக்கான ஆவி சிருஷ்டிகளோடு பரலோகத்தில் கடவுள் வாசம் செய்கிறார் என்பதாக பைபிள் போதிக்கிறது. (மத்தேயு 18:10; வெளிப்படுத்துதல் 5:11) இவர்கள் “தேவபுத்திரர்” என்று விவரிக்கப்பட்டிருக்கின்றனர். (யோபு 38:4, 7) மனிதர்களைப் போலவே இந்தத் தேவதூதர்களும் சுயாதீனம் உள்ளவர்கள். இவர்கள் ரோபாட்டுகள் அல்ல. அப்படியென்றால் இவர்களும்கூட சரியானதையோ தவறானதையோ செய்ய தெரிவுசெய்யலாம் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. தேவதூதர்கள் தவறு செய்வார்களா என்ன? ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எண்ணிக்கையில் தேவதூதர்கள் கடவுளுக்கு எதிராக கலகம் செய்து பாவம் செய்தார்கள் என்பது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்!​—யூதா 6.

பரலோகத்தில் கலகக்காரர்கள்

ஒரு தேவதூதன் கலகம் செய்தபோது பாவம் ஆவி மண்டலத்தில் பிரவேசித்தது. இந்தத் தேவதூதனே சாத்தான் (எதிர்ப்பவன்) என்றும் பிசாசு (பழிதூற்றுபவன்) என்றும் அழைக்கப்படலானான். ஒரு காலத்தில் கீழ்ப்படிதலுள்ளவனாக இருந்த இந்தத் தூதன் தன் இஷ்டப்படி தவறானதை செய்ய தெரிவுசெய்தான். அதற்குப்பின் இவனால் மற்ற ஆவி சிருஷ்டிகளும்கூட கெட்டுப்போனார்கள். ஆகவே நோவாவின் காலத்திற்குள், அதாவது ஜலப்பிரளயத்துக்கு முன்னால், இவர்களில் பெரும் எண்ணிக்கையான தூதர்கள் சாத்தானை சேர்ந்துகொண்டு கடவுளுக்கு எதிராக கலகம் செய்தனர்.​—ஆதியாகமம் 6:2, NW அடிக்குறிப்பு; 2 பேதுரு 2:⁠4.

பாவத்தில் வீழ்ந்துபோன இந்தத் தேவதூதர்கள் உடனடியாக பரலோகத்திலிருந்து வெளியேற்றப்படவில்லை. அதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவர்கள் பரலோகத்திற்கு போய்வருவது அனுமதிக்கப்பட்டது​—⁠ஆனால் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டிருக்கலாம். a இருந்தபோதிலும், இந்த அனுமதிக்கான காலக்கெடு முடிந்தபோது, பிற்காலத்தில் அழிக்கப்படுவதற்காக அவர்கள் பரலோகத்திலிருந்து “தள்ளப்பட்டார்கள்.” அப்போது வானத்திலிருந்து இந்த சத்தம் உண்டாயிற்று: “ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள்!” (வெளிப்படுத்துதல் 12:7-12) கடைசியாக, தொந்தரவாக இருந்த இந்தக் கொடியவர்கள் பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது உண்மையுள்ள தூதர்கள் பேரானந்தம் கொண்டனர்!

பொதுவாக அறியப்படாத இந்த விவரங்களை கவனிக்கையில், புத்திக்கூர்மையுள்ள படைப்புகள் கடவுளுடைய சட்டங்களையும் நியமங்களையும் புறக்கணிக்கும் போதெல்லாம் அங்கே உண்மையான சமாதானம் இருக்க முடியாது என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது. (ஏசாயா 57:20, 21; எரேமியா 14:19, 20) மறுபட்சத்தில் அனைவரும் கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கையில் அங்கே சமாதானமும் அமைதியும் இருக்கும். (சங்கீதம் 119:165; ஏசாயா 48:17, 18) ஆகவே எல்லா மனிதரும் கடவுளை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்து, ஒருவரை ஒருவர் நேசித்து வாழ்ந்தால் பூமி வாழ்வதற்கு உண்மையில் பேரானந்தமான இடமாக இருக்காதா? ஆம் என்று பைபிள் பதிலளிக்கிறது!

ஆனால் பொல்லாத வழிகளைவிட்டு மாற மறுக்கும் பிடிவாதமான சுயநலக்காரர்களைப் பற்றி என்ன? கடவுளுடைய விருப்பத்தை உண்மையில் செய்ய விரும்பும் ஆட்களின் அமைதியை அவர்கள் என்றென்றுமாக குலைத்துக் கொண்டிருப்பார்களா? மாட்டார்கள், பரலோகத்தில் இருந்த பொல்லாத தூதர்களை கடவுள் தண்டித்தார், அதேவிதமாகவே பூமியிலுள்ள பொல்லாத ஆட்களையும் அவர் தண்டிப்பார்.

சுத்திகரிக்கப்பட்ட ஒரு பூமி

“வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி” என்று கடவுள் சொல்லியிருக்கிறார். (ஏசாயா 66:1) கடவுள் பரிசுத்தத்தின் சிகரமாக இருப்பதால், தன்னுடைய “பாதபடி” என்றென்றுமாக தீயவர்களால் அசுத்தப்படுத்தப்படுவதை அனுமதிக்கமாட்டார். (ஏசாயா 6:1-3; வெளிப்படுத்துதல் 4:8) பொல்லாத ஆவிகளை நீக்கி பரலோகத்தை அவர் சுத்தம் செய்தது போலவே பொல்லாத மக்களை பூமியிலிருந்து நீக்கிவிடுவார் என்றுதான் பின்வரும் பைபிள் வசனங்கள் கூறுகின்றன:

“பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.”​—சங்கீதம் 37:⁠9.

“செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்; துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”​—நீதிமொழிகள் 2:21, 22.

“உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே. தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.”​—2 தெசலோனிக்கேயர் 1:6-10.

“[அக்கிரமக்காரரது] உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”​—1 யோவான் 2:⁠17.

பூமி அமைதி பூங்காவாக நிலைத்திருக்குமா?

பொல்லாதவர்களை கடவுள் பொறுத்துக்கொள்வதற்கு எல்லை இருப்பதாக வேதவாக்கியங்கள் தெள்ளத் தெளிவாக காட்டுகிறபோதிலும் தீமை அடியோடு நீக்கப்பட்டுவிட்டாலும், அது திரும்ப தலைதூக்காது என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது? நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்துக்குப்பின் துன்மார்க்கம் மறுபடியுமாக பெரிய அளவில் தலைதூக்கியதால் மனிதரின் பொல்லாத திட்டங்கள் நிறைவேறாதபடி கடவுள் அவர்களுடைய மொழியை தாறுமாறாக்க வேண்டிய நிலை ஏற்பட்டதல்லவா?​—ஆதியாகமம் 11:1-8.

அக்கிரமம் தலைதூக்காது என்று நாம் நம்பிக்கையோடிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், ஜலப்பிரளயத்துக்குப்பின் இருந்தது போல இந்தப் பூமி இனிமேலும் மனிதர்களால் ஆளப்படாது. மாறாக அது கடவுளுடைய ராஜ்யத்தால் ஆளுகை செய்யப்படும். பரலோகத்திலிருந்து ஆட்சிசெய்யும் இந்த ராஜ்யம் மட்டுமே பூமியை ஆளும் ஒரே அரசாங்கமாக இருக்கும். (தானியேல் 2:44; 7:13, 14) மறுபடியும் தீமையை விதைக்க முயலும் எவருக்கும் எதிராக அது உடனடியாக நடவடிக்கை எடுத்துவிடும். (ஏசாயா 65:20) சொல்லப்போனால், அது அக்கிரமத்துக்கு மூலகாரணமாயிருந்த பிசாசாகிய சாத்தானையும் அவன் பின்னால் போன பொல்லாத தூதர்களாகிய பேய்களையும் கடைசியாக அழித்துவிடும்.​—ரோமர் 16:⁠20.

மேலுமாக, உணவு, உடை, உறைவிடம், வேலை வாய்ப்பு ஆகியவற்றைப் பற்றி மனிதர்கள் கவலைப்பட வேண்டியிருக்காது, இது கிடைக்கவில்லை என்பதற்காகவே சிலர் இன்று குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். எதிர்காலத்திலோ முழு பூமியும் பலன்தரும் ஒரு பரதீஸாக மாற்றப்படும், அனைவருக்கும் எல்லாமே அபரிமிதமாக கிடைக்கும்.​—ஏசாயா 65:21-23; லூக்கா 23:⁠43.

இதைவிட முக்கியமாக, சமாதானமாக வாழ இந்த ராஜ்யம் குடிமக்களுக்கு கல்விபுகட்டும், அவர்களை மனித பரிபூரணத்தின் சிகரத்துக்கே உயர்த்திவிடும். (யோவான் 17:3; ரோமர் 8:20, 21) அதற்குப்பின், மனிதர்கள் பலவீனங்களோடும் பாவமுள்ள மனச்சாய்வுகளோடும் போராட வேண்டிய அவசியம் இருக்காது. பரிபூரண மனிதராகிய இயேசுவால் எப்படி முடிந்ததோ, அப்படியே அவர்களாலும் கடவுளுக்கு பரிபூரணமாக கீழ்ப்படிந்திருக்க முடியும், அதனால் மகிழ்ச்சியும் பெருகும். (ஏசாயா 11:3) சொல்லப்போனால், இயேசு மிகுந்த உபத்திரவத்தையும் சித்திரவதையையும் அனுபவித்துக்கொண்டு அதே சமயத்தில் கடவுளிடம் பற்றுமாறாதவராயும் நிலைத்திருந்தார். அப்படிப்பட்ட கஷ்டங்கள் எவையும் பரதீஸில் இருக்கவே இருக்காது.​—எபிரெயர் 7:⁠26.

சிலர் பரலோகத்துக்குச் செல்வது ஏன்?

“என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; . . . ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்” என்று இயேசு சொன்ன வார்த்தைகள் பைபிளை வாசிக்கும் பலருக்குத் தெரிந்திருக்கும். (யோவான் 14:2, 3) பரதீஸிய பூமியில் நித்திய ஜீவன் என்ற கருத்துக்கு இது முரணாக இருக்கிறது அல்லவா?

இந்தப் போதனைகள் ஒன்றுக்கொன்று முரணாக இல்லை. உண்மையில் ஒன்றையொன்று ஆதரிக்கின்றன. முதலாவதாக, குறிப்பிட்ட எண்ணிக்கையான உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் மாத்திரமே, அதாவது 1,44,000 பேர் மாத்திரமே ஆவி சிருஷ்டிகளாக பரலோகத்தில் வாழ்வதற்காக உயர்த்தப்படுகிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. இந்த அதிசயமான வெகுமதியை அவர்கள் ஏன் பெற்றுக்கொள்கிறார்கள்? ஏனென்றால் தரிசனத்தில் யோவான் பார்த்த தொகுதியினரே இவர்கள். இவர்கள் “உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்” என்று அவர் சொல்கிறார். (வெளிப்படுத்துதல் 14:1-3; 20:4-6) பூமியில் வாழும் கோடிக்கணக்கானவர்களோடு ஒப்பிடும்போது இந்த 1,44,000 பேர் உண்மையில் ஒரு ‘சிறு மந்தையே.’ (லூக்கா 12:32) பொதுவாக மனிதவர்க்கத்துக்கு ஏற்படும் பிரச்சினைகளை இவர்கள்தாமே அனுபவித்திருக்கின்றனர். ஆகவே, மனிதவர்க்கமும் இந்தப் பூமியும் மறுவாழ்வு பெறுவதை கண்காணித்து வருகையில், இயேசுவைப் போலவே “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபி”ப்பர்.​—எபிரெயர் 4:⁠15.

பூமி​—⁠மனிதவர்க்கத்தின் நித்திய வீடு

இயேசு கிறிஸ்துவை மீட்கும் பலியாக அளிப்பதன் மூலம் கடவுள் ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த 1,44,000 பேரை கூட்டிச்சேர்க்க ஆரம்பித்துவிட்டார். இப்போது இந்தத் தொகுதியினர் அனைவரும் கூட்டிச் சேர்க்கப்பட்டாயிற்று என்பதையே அத்தாட்சிகள் காண்பிக்கின்றன. (அப்போஸ்தலர் 2:1-4; கலாத்தியர் 4:4-7) இருந்தபோதிலும் இயேசுவின் பலி 1,44,000 பேரின் பாவங்களுக்காக மட்டுமல்ல, அது ‘சர்வலோகத்தின் பாவங்களுக்காகவும்தான்.’ (1 யோவான் 2:2) ஆகவே இயேசுவை விசுவாசிக்கும் அனைவருக்கும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கை உண்டு. (யோவான் 3:16) கடவுளுடைய ஞாபகத்தில் இருக்கும் இறந்த ஆட்கள் பரலோகத்துக்கு அல்ல, ஆனால் சுத்திகரிக்கப்பட்ட பூமியில் ஜீவனை அடைவதற்காகவே உயிர்த்தெழுப்பப்படுவார்கள். (பிரசங்கி 9:5; யோவான் 11:11-13, 25; அப்போஸ்தலர் 24:15) அவர்களுக்கு அங்கே என்ன காத்திருக்கிறது?

வெளிப்படுத்துதல் 21:1-4 இவ்வாறு பதிலளிக்கிறது: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது . . . அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின.” மனிதர்கள் மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டு துக்கமும் அலறுதலும் என்றுமாக இல்லாமற் போவதை சற்று கற்பனைசெய்து பாருங்கள்! கடைசியாக பூமிக்கும் மனிதகுலத்துக்குமான யெகோவாவின் ஆதி நோக்கம் அதன் மகத்தான நிறைவேற்றத்தை அடையும்.​—ஆதியாகமம் 1:27, 28.

வாழ்வா சாவா?​—⁠உங்கள் சாய்ஸ்

ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பரலோகத்துக்குச் செல்லும் வாய்ப்பு ஒருபோதும் அளிக்கப்படவில்லை. அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருந்து பரதீஸிய பூமியில் என்றுமாக வாழ்வதை தெரிவுசெய்யலாம் அல்லது அவருக்குக் கீழ்ப்படியாமலிருந்து மரித்துப்போவதைத் தெரிவுசெய்யலாம். வருத்தமான விஷயம் என்னவென்றால் அவர்கள் கீழ்ப்படியாமையைத் தெரிவுசெய்து “மண்ணுக்குத்” திரும்பினார்கள். (ஆதியாகமம் 2:16, 17; 3:2-5, 19) பொதுவாக மனிதர்கள் மரித்து கல்லறைக்குப் போய் பின்பு அங்கிருந்து பரலோகத்திற்கு சென்று குடியிருக்க வேண்டும் என்பது ஒருபோதும் கடவுளுடைய நோக்கமாக இருக்கவில்லை. பரலோகத்தில் வாழ்வதற்காக அவர் கோடான கோடி தேவதூதர்களைப் படைத்திருக்கிறார்; இந்த ஆவி படைப்புகள் ஒரு சமயம் மனிதர்களாக இருந்து பின்பு பரலோகத்தில் வாழ்வதற்காக உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் அல்ல.​—சங்கீதம் 104:​1, 4; தானியேல் 7:⁠10.

பூமியில் பரதீஸில் என்றுமாக வாழ்ந்திருக்கும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளை படிப்பதே முதல் படி. இயேசு ஜெபிக்கையில், “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” என்று கூறினார்.​—யோவான் 17:⁠3.

அந்த அறிவின்படி வாழ்வதே பரதீஸில் நித்திய மகிழ்ச்சியைப் பெற நாம் எடுக்க வேண்டிய மற்றொரு படியாகும். (யாக்கோபு 1:22-24) கடவுளுடைய வார்த்தையின்படி நடக்கிறவர்கள் ஏசாயா 11:9-⁠ல் பதிவுசெய்யப்பட்டுள்ள கிளர்ச்சியூட்டும் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைக் கண்ணார காணும் பேறு பெறுவர். அது இவ்வாறு சொல்கிறது: ‘என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.’

[அடிக்குறிப்பு]

a கடவுள் பரலோகத்திலும் பூமியிலும் தீமையை ஏன் சகித்துக்கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றி அறிந்துகொள்வதற்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா வெளியிட்டுள்ள நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் அறிவு என்ற புத்தகத்தில் 70-9 பக்கங்களை காண்க.

[பக்கம் 7-ன் படங்கள்]

“நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”​—சங்கீதம் 37:⁠29