Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூமி பரீட்சைக்கான இடமா?

பூமி பரீட்சைக்கான இடமா?

பூமி பரீட்சைக்கான இடமா?

அப்பாடி, நிம்மதி! அவள் பாஸாகிவிட்டாள். இரண்டு வாரமாக பரீட்சைகளை எழுதி முடித்து களைத்துப்போன அந்த மாணவி கடைசியாக பரீட்சை முடிவுகளைப் பார்த்து நிம்மதியடைந்தாள். இப்போது அவள் பெறத் துடித்த வேலை கிடைத்துவிடும்.

இப்படித்தான் அநேக ஆட்கள் பூமியில் வாழும் வாழ்க்கையைக் கருதுகின்றனர். அதாவது, இப்பூமியில் மனித வாழ்க்கை என்பது, நாம் அனைவரும் கட்டாயமாக எழுதவேண்டிய ஒரு நுழைவுத் தேர்வு என்று நினைக்கின்றனர். இந்தப் பரீட்சையில் “பாஸாகிறவர்கள்” மறுமையில் மேம்பட்ட ஒரு வாழ்க்கைக்குச் செல்வார்கள் என்றும் எண்ணுகின்றனர். இந்த வாழ்க்கைதான்​—⁠அநேகர் ஏதோ கடமைக்கு காலம்தள்ளும் இந்த வாழ்க்கைதான்​—⁠மிகச் சிறந்த வாழ்க்கை என்றால், அந்தோ பரிதாபம்! பைபிள் கதாபாத்திரமான யோபு, பெரும்பாலும் தேக ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்புடனும் வாழ்ந்துவந்தபோதிலும் என்ன சொன்னார் என்பதைப் பாருங்கள்: “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.”​—யோபு 14:⁠1.

நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா கூறுவதுதான் இன்று பலருடைய கருத்தாகவும் உள்ளது: “பரலோக மகிமையை மனிதன் அடைய வேண்டும் என்பதுதான் கடவுளின் நோக்கம். . . . இந்தப் பரலோக பேரின்பத்தை அடைவதில்தான் மனிதனின் மகிழ்ச்சியே இருக்கிறது.” சமீபத்தில் ஐக்கிய மாகாணங்களில் சர்ச் ஆஃப் கிரைஸ்ட் நடத்திய ஒரு சுற்றாய்வில் கேள்விக்கு பதிலளித்த 87 சதவீதத்தினர் மரித்தப்பின் பரலோகத்துக்குச் செல்லும் நம்பிக்கை இருப்பதாக கூறினர்.

கிறிஸ்தவர்களாக இல்லாத மற்றவர்களும்கூட மரணத்துக்குப்பின் பூமியைவிட்டு மேம்பட்ட ஒரு இடத்துக்குச் செல்வதாக நம்புகின்றனர். உதாரணமாக, இஸ்லாமியர்களுக்கு பரலோக பரதீஸுக்குச் செல்லும் நம்பிக்கை இருக்கிறது. சீனாவிலும் ஜப்பானிலுமுள்ள புத்த சமயத்தின் ப்யூர்லேண்ட் பிரிவினர், எல்லையில்லாத ஒளியாகிய புத்தரின் பெயரை “அமிதாபா” என்று சதா ஓதிக்கொண்டிருந்தால் ப்யூர் லேண்டில் அல்லது மேற்கத்திய பரதீஸில் மறுபிறவி எடுத்து முடிவில்லாத ஆனந்தத்தில் திளைத்திருக்க முடியும் என்று நம்புகின்றனர்.

உலகில் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விநியோகிக்கப்பட்டிருக்கும் புனித நூலாகிய பைபிள் வித்தியாசமான ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது. ஏதோ வேறு இடத்திற்கு செல்வதற்கான படியாக இந்தப் பூமியை பைபிள் குறிப்பிடவில்லை. ஆனால் அது இவ்வாறு சொல்கிறது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) இயேசு சொன்ன பிரபலமான கூற்றையும்கூட பைபிளில் நாம் காணலாம்: “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.”​—மத்தேயு 5:⁠5.

பூமியில் நாம் வாசம் செய்வது தற்காலிகமானது என்ற பிரபலமான கருத்துப்படி பார்த்தால் மரணம் என்பது இன்பமயமான மறுமைக்கு வாயில் என்றாகிவிடும். அப்படியானால் மரணம் நிச்சயமாகவே ஒரு ஆசீர்வாதமே. ஆனால் மக்கள் பொதுவாக மரணத்தை ஆசீர்வாதமாக கருதுகிறார்களா அல்லது ஆயுளை நீட்டிக்கவே முயற்சி செய்கிறார்களா? மக்கள் ஓரளவு சுகத்தோடும் பாதுகாப்போடும் வாழும்போது மரிக்க விரும்புவதில்லை என்பதே உண்மை.

இருந்தாலும், வாழ்க்கையில் துன்பமும் துயரமுமே நிறைந்திருப்பதால் உண்மையான அமைதியும் மகிழ்ச்சியும் வேண்டுமென்றால் அதற்கு ஒரே இடம் பரலோகமே என்று இன்னும் அநேகர் கருதுகின்றனர். அப்படியானால், பரலோகம் என்பது அக்கிரமமும் அநியாயமும் துளியும் இல்லாத, இன்பமயமான ஓரிடமா? மறுமை சொர்க்கத்தில்தான் இருக்க வேண்டுமா? பைபிள் இந்தக் கேள்விகளுக்கு அளிக்கும் பதில்களைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தயவுசெய்து தொடர்ந்து வாசியுங்கள்.