Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் வாசிப்பீர்—இன்பம் காண்பீர்

பைபிள் வாசிப்பீர்—இன்பம் காண்பீர்

பைபிள் வாசிப்பீர்​—⁠இன்பம் காண்பீர்

‘இரவும் பகலும் நீ அதை வாசிக்க வேண்டும்.’​—யோசுவா 1:⁠8.

1. பொதுவாக வாசிப்பிலிருந்தும் விசேஷமாக பைபிள் வாசிப்பிலிருந்தும் அடையும் சில பயன்கள் என்ன?

 பிரயோஜனமான விஷயங்களை வாசிப்பது பயன்தரும் ஒரு வேலை. பிரெஞ்சு நாட்டு அரசியல் தத்துவஞானி மான்டஸ்கு இவ்வாறு எழுதினார்: “வாழ்க்கையில் ஏற்படும் சோர்வை போக்க எனக்கு மிகச் சிறந்த நிவாரணியாக இருந்தது படிப்பே. ஒரு மணிநேரம் படித்தால் பறந்துபோகும் என் வேதனை.” பைபிள் வாசிக்கையில் இது முழுக்க முழுக்க உண்மையாக உள்ளது. ஏவப்பட்ட சங்கீதக்காரன் இவ்வாறு சொன்னார்: “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது.”​—⁠சங்கீதம் 19:7, 8.

2. பல நூற்றாண்டுகளாக பைபிளை கடவுள் பாதுகாத்து வைத்திருப்பது ஏன், அதை வைத்து அவருடைய ஜனங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்?

2 பைபிளின் நூலாசிரியராகிய யெகோவா தேவன் பல நூற்றாண்டுகளாக மத மற்றும் மத சார்பற்ற விரோதிகளின் கடுமையான எதிர்ப்பின் மத்தியிலும் அதை பாதுகாத்து வந்திருக்கிறார். “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருப்பதால் அது எல்லா மனிதருக்கும் கிடைக்கும்படி செய்திருக்கிறார். (1 தீமோத்தேயு 2:4) 100 மொழிகளின் மூலம் பூமியில் குடியிருக்கும் 80 சதவீதமானோர் வாசிக்க முடியும் என கணிக்கப்படுகிறது. முழு பைபிளும் 370 மொழிகளில் கிடைக்கிறது, வேதாகமத்தின் சில பகுதிகள் இன்னும் 1,860 மொழிகளிலும் பிராந்திய மொழிகளிலும் வாசிக்க கிடைக்கிறது. யெகோவா தம்முடைய ஜனங்கள் அவருடைய வார்த்தையை வாசிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய வார்த்தைக்கு கவனம் செலுத்தி அதை தினந்தோறும் வாசிக்கும் தம்முடைய ஊழியர்களை ஆசீர்வதிக்கிறார்.​—சங்கீதம் 1:​1, 2.

கண்காணிகள் கட்டாயம் பைபிள் வாசிக்க வேண்டும்

3, 4. இஸ்ரவேலரின் ராஜாக்களுக்கு கடவுள் என்ன கட்டளை கொடுத்தார், இன்று கிறிஸ்தவ மூப்பர்களுக்கும் இது எவ்வாறு பொருந்துகிறது?

3 இஸ்ரவேல் தேசத்தார் ஒரு மனிதரை அரசனாக கொண்டிருக்கப்போகும் காலம் வரும் என்பதை எதிர்பார்த்து யெகோவா இவ்வாறு சொன்னார்: “அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும், இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு, அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப் பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்.”​—உபாகமம் 17:18-20.

4 கடவுளுடைய நியாயப்பிரமாண புத்தகத்தை இஸ்ரவேலின் எதிர்கால அரசர்கள் அனைவரும் தினந்தோறும் வாசிக்க வேண்டும் என்று யெகோவா கட்டளையிட்டதற்கு காரணங்களை கவனியுங்கள்: (1‘இந்தக் கட்டளையைக் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்க கற்றுக்கொள்ளும்பொருட்டு;’ (2‘அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமல்’ இருக்கும்பொருட்டு; (3‘கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல்’ இருக்கும்பொருட்டு. அதேவிதமாகவே கிறிஸ்தவ கண்காணிகளும் இன்று யெகோவாவுக்கு பயந்திருந்து, அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து, தங்கள் சகோதரர்களுக்கு மேலாக தங்களை உயர்த்திக்கொள்ளாதிருந்து, யெகோவாவின் கட்டளைகளிலிருந்து விலகிச் செல்லாமல் இருப்பது அவசியமல்லவா? இஸ்ரவேலரை ஆண்ட அரசர்கள் பைபிளை வாசிப்பது எவ்வளவு முக்கியமாய் இருந்ததோ அவ்வளவு முக்கியமாய் இவர்களுக்கும் இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

5. கிளை அலுவலக கமிட்டி உறுப்பினர்களுக்கு பைபிள் வாசிப்பைக் குறித்து சமீபத்தில் ஆளும் குழு என்ன எழுதியது, எல்லா கிறிஸ்தவ மூப்பர்களும் இந்தப் புத்திமதியைப் பின்பற்றுவது ஏன் நல்லது?

5 கிறிஸ்தவ மூப்பர்களுக்கு இன்று வேலை அதிகமிருப்பதால் தினந்தோறும் பைபிளை வாசிப்பது அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகளுடைய நிர்வாக குழுவின் உறுப்பினர்களும் உலகம் முழுவதிலும் கிளை அலுவலக கமிட்டி உறுப்பினர்களும் அதிக வேலையாக இருக்கும் ஆட்கள். ஆனாலும் நிர்வாக குழு, தினந்தோறும் பைபிளை வாசிப்பதும் நல்ல படிப்பு பழக்கங்களும் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தி எல்லா கிளை அலுவலக கமிட்டி உறுப்பினர்களுக்கும் சமீபத்தில் கடிதம் எழுதியது. இதனால் யெகோவாவின் மீதும் சத்தியத்தின் மீதும் நமக்கிருக்கும் அன்பு பெருகும், “மகத்தான முடிவு வரும்வரையில் நம்முடைய விசுவாசத்தையும், சந்தோஷத்தையும், சகிப்புத்தன்மையையும் காத்துக்கொள்ள இது நமக்கு உதவும்” என அதில் குறிப்பிட்டிருந்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளிலுள்ள எல்லா மூப்பர்களும் இவ்வாறே நினைக்கிறார்கள். வேதாகமத்தை தினந்தோறும் வாசிப்பது “புத்திமானாய்” நடந்துகொள்வதற்கு அவர்களுக்கு உதவி செய்யும். (யோசுவா 1:7, 8) பைபிள் வாசிப்பு அவர்களுக்கு விசேஷமாக “உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ள”தாய் இருக்கிறது.⁠—2 தீமோத்தேயு 3:⁠17.

வாலிபருக்கும் வயோதிபருக்கும் அவசியம் தேவை

6. யோசுவா கூடிவந்திருந்த இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கும் அந்நியர்களுமாகிய அனைவருக்கும் முன்பாக யெகோவாவின் நியாயப்பிரமாண வார்த்தைகளை எல்லாம் ஏன் சப்தமாக வாசித்துக் காண்பித்தார்?

6 பண்டைய காலங்களில் வேதாகமம் ஒவ்வொருவரிடமும் இல்லை, ஆகவே கூடிவரும் ஒரு கூட்டத்துக்கு முன்பாக பைபிள் வாசிக்கப்பட்டது. ஆயி பட்டணத்தின்மீது வெற்றியை யெகோவா தனக்குத் தந்தபின் யோசுவா இஸ்ரவேல் கோத்திரத்தாரை ஏபால் மலைக்கும் கெரிசீம் மலைக்கும் முன்னால் கூடிவரச் செய்தார். அதற்குப்பின் என்ன நடந்தது என்பதை பதிவு நமக்குச் சொல்கிறது: “அவன் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில் சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான். மோசே கட்டளையிட்ட எல்லாவற்றிலும் யோசுவா, இஸ்ரவேலின் முழு சபைக்கும், ஸ்திரீகளுக்கும் பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் நடமாடி சஞ்சரித்த அந்நியர்களுக்கும் முன்பாக, ஒரு வார்த்தையும் விடாமல் வாசித்தான்.” (யோசுவா 8:34, 35) எப்படிப்பட்ட நடத்தை யெகோவாவின் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும், எது அவருடைய கோபத்தை கொண்டுவரும் என்பதை சிறியவர்களும் பெரியவர்களும் சுதேசிகளும் அந்நியர்களுமாகிய அனைவரும் தங்கள் இருதயங்களிலும் மனங்களிலும் உறுதியாக பதித்து வைத்திருப்பது அவசியமாக இருந்தது. தவறாமல் பைபிள் வாசிப்பது இந்த விஷயத்தில் நிச்சயமாகவே நமக்கு உதவியாக இருக்கும்.

7, 8. (அ) இன்று “அந்நியர்”களைப் போலிருப்பது யார், அவர்கள் பைபிளை தினந்தோறும் வாசிப்பது ஏன் அவசியம்? (ஆ) யெகோவாவின் மக்கள் மத்தியில் இருக்கும் “பிள்ளைகள்” என்னென்ன வழிகளில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்?

7 இன்று, லட்சக்கணக்கான யெகோவாவின் ஊழியர்கள் ஆவிக்குரிய கருத்தில் “அந்நியர்”களைப் போலவே இருக்கிறார்கள். முற்காலங்களில் அவர்கள் உலகின் தராதரங்களின்படி வாழ்ந்து வந்தார்கள், ஆனால் இப்போது அவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். (எபேசியர் 4:22-24; கொலோசெயர் 3:7, 8) யெகோவாவின் பார்வையில் எது நன்மை, எது தீமை என்பதைக் குறித்து அவர்கள் தங்களை எப்போதும் நினைப்பூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். (ஆமோஸ் 5:14, 15) கடவுளுடைய வார்த்தையை தினந்தோறும் வாசிப்பது இதைச் செய்வதற்கு அவர்களுக்கு உதவி செய்கிறது.​—எபிரெயர் 4:12; யாக்கோபு 1:⁠25.

8 யெகோவாவின் ஜனங்கள் மத்தியில், பெற்றோரிடமிருந்து யெகோவாவின் தராதரங்களைக் கற்றுக்கொண்ட “பிள்ளைகளும்” கூட இருக்கின்றனர், இவர்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது உண்மையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும். (ரோமர் 12:1, 2) இதை அவர்கள் எப்படி செய்யலாம்? இஸ்ரவேலில் ஆசாரியர்களுக்கும் மூப்பர்களுக்கும் இவ்வாறு சொல்லப்பட்டது: “இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிக்கக்கடவாய். புருஷர்களும், ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும், அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, . . . உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் ஜனத்தைக் கூட்டி, அதை வாசிக்க வேண்டும்.” (உபாகமம் 31:11-13) நியாயப்பிரமாணத்தின்கீழ் வாழ்ந்துவந்த இயேசு 12 வயதிலேயே தம்முடைய தகப்பனின் கட்டளைகளைப் புரிந்துகொள்வதில் ஆழ்ந்த அக்கறை காட்டினார். (லூக்கா 2:41-49) பின்னால், ஜெப ஆலயத்தில் வேதவாக்கியங்கள் வாசிப்பதும் கேட்பதும் அவருடைய பழக்கமாக இருந்தது. (லூக்கா 4:16; அப்போஸ்தலர் 15:21) இன்றைய இளைஞர்கள் தினந்தோறும் கடவுளுடைய வார்த்தையை வாசித்து, பைபிளை படிக்கும் இடமாகிய கூட்டங்களுக்கு ஒழுங்காக வருவதன் மூலம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.

பைபிள் வாசிப்பு​—⁠முதலிடம்

9. (அ) நாம் சரியாக தெரிவுசெய்து வாசிப்பது ஏன் முக்கியம்? (ஆ) பைபிள் படிப்பு உதவி புத்தகங்களைக் குறித்து இந்தப் பத்திரிகையின் முதல் பதிப்பாசிரியர் என்ன சொன்னார்?

9 ஞானியாகிய சாலொமோன் அரசன் இவ்வாறு எழுதினார்: “அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.” (பிரசங்கி 12:12) இன்று வெளிவரும் அனேக புஸ்தகங்களை வாசிப்பது உடலுக்கு இளைப்பு மட்டுமல்ல, வெளிப்படையாக சொல்லப்போனால், மனதுக்கு ஆபத்து. ஆகவே சரியாக தெரிவுசெய்து படிப்பது முக்கியம். பைபிள் பிரசுரங்களை வாசிப்பதோடுகூட நாம் பைபிளையும் கட்டாயம் படிக்க வேண்டும். இந்தப் பத்திரிகையின் முதல் பதிப்பாசிரியர் வாசகருக்கு இவ்வாறு எழுதினார்: “பைபிளையே நாம் நம்ப வேண்டும் என்பதை ஒருக்காலும் மறந்துவிடக் கூடாது, நம்முடைய பைபிள் உதவி புத்தகங்கள் என்னதான் கடவுளால் கொடுக்கப்பட்டதென்றாலும் அவை ‘உதவி புத்தகங்களே’, அவை பைபிளை மாற்றீடு செய்திட முடியாது. a ஆகவே பைபிளை அடிப்படையாக கொண்ட பிரசுரங்களை நாம் அசட்டை செய்யாமல் வாசிக்க வேண்டும்; அதே சமயத்தில் பைபிளையும் வாசிப்பது மிகவும் அவசியம்.

10. ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ எவ்வாறு பைபிள் வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்திருக்கிறது?

10 இந்தத் தேவையை உணர்ந்து ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பார், ஒவ்வொரு சபையிலும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பைபிளை வாசிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இது பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. (மத்தேயு 24:45) தற்போதுள்ள பைபிள் வாசிப்பு அட்டவணையின்படி, முழு பைபிளையும் சுமார் ஏழு ஆண்டுகளில் வாசித்து முடித்துவிடலாம். இந்த அட்டவணை, எல்லாருக்குமே நன்மை தரும்; இருந்தாலும், பைபிளை முழுவதுமாக இதுவரை வாசித்திராத புதியவர்களுக்கு விசேஷமாக பயனுள்ளதாக இருக்கும். மிஷனரிகளுக்காக நடத்தப்படும் உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளிக்கும் ஊழியப் பயிற்சி பள்ளிக்கும் செல்பவர்களும், பெத்தேல் குடும்பத்தின் புதிய அங்கத்தினர்களும் ஒரே வருடத்தில் முழு பைபிளையும் வாசிக்கும்படி எதிர்பார்க்கப்படுகின்றனர். தனிப்பட்ட விதமாகவும் சரி குடும்பமாகவும் சரி, பைபிள் வாசிப்புக்கு முதலிடம் கொடுக்கும்போதுதான் அட்டவணையைப் பின்பற்ற முடியும்.

உங்கள் வாசிப்பு பழக்கங்கள் எதை வெளிப்படுத்துகின்றன?

11. யெகோவாவின் வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் நாம் எவ்வாறு உட்கொள்ளலாம், ஏன் அதை செய்ய வேண்டும்?

11 பைபிள் வாசிப்பதற்கு ஒரு அட்டவணையைப் போட்டுவிட்டு அதன்படி செய்வது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் புத்தகங்கள் வாசிப்பது அல்லது டிவி பார்ப்பது யெகோவாவின் வார்த்தையை வாசிப்பதை பாதிக்கிறதா? மோசே சொன்னதையும், இயேசு திரும்ப சொன்னதையும் மறந்துவிடாதீர்கள்: “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” (மத்தேயு 4:4; உபாகமம் 8:3) நம்முடைய சரீரத்தைக் காத்துக்கொள்ள நாம் வாழும் ஒவ்வொரு நாளும் அப்பத்தை அல்லது உணவை சாப்பிடுவது அவசியமாய் இருப்பது போலவே நம்முடைய ஆவிக்குரிய தன்மையைக் காத்துக்கொள்வதற்கு யெகோவாவின் சிந்தனைகளை தினந்தோறும் உட்கிரகித்துக்கொள்வது அவசியம். வேதாகமத்தை ஒவ்வொரு நாளும் வாசிப்பதன் மூலம் கடவுளுடைய சிந்தனைகளை நாம் தெரிந்துகொள்ளலாம்.

12, 13. (அ) கடவுளுடைய வார்த்தையின் மீது நமக்கு இருக்க வேண்டிய வாஞ்சையை அப்போஸ்தலன் பேதுரு எவ்வாறு விவரிக்கிறார்? (ஆ) பேதுருவை போல அல்லாமல், பவுல் எவ்வாறு பாலின் உதாரணத்தை வித்தியாசமாக பயன்படுத்துகிறார்?

12 பைபிளை நாம் ‘மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், உள்ளபடியே அதை தேவவசனம்’ என்று மதித்துணர்ந்தால், தாய்ப்பாலுக்காக ஒரு குழந்தை வாஞ்சையாய் இருப்பது போல நாமும் வாஞ்சையாயிருப்போம். (1 தெசலோனிக்கேயர் 2:13) பேதுரு அப்போஸ்தலன் இந்த ஒப்புமையையே குறிப்பிட்டு எழுதினார்: “கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால், . . . நீங்கள் [இரட்சிப்புக்கு] வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.” (1 பேதுரு 2:​2, 3) அனுபவப்பூர்வமாக “கர்த்தர் தயையுள்ளவர்” என்பதை நாம் உண்மையில் ருசித்துப் பார்த்திருந்தால், பைபிளை வாசிப்பதற்கு வாஞ்சையை வளர்த்துக்கொள்வோம்.

13 அப்போஸ்தலன் பவுலைப் போல் இல்லாமல், பேதுரு இந்தப் பகுதியில் பாலின் ஒப்புமையை வித்தியாசமாக பயன்படுத்துவதை கவனியுங்கள். புதிதாய்ப் பிறந்த குழந்தைக்கு தேவையான எல்லா சத்தும் பாலிலிருந்து கிடைத்துவிடும். ஆகவே, நாம் ‘இரட்சிப்புக்கு வளருவதற்கு’ தேவையான எல்லாமே கடவுளுடைய வார்த்தையில் இருப்பதை பேதுருவின் உதாரணம் காட்டுகிறது. ஆனால் பவுலோ, ஆவிக்குரிய விதத்தில் வளர்ச்சியடைந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் நல்ல படிப்பு பழக்கங்களை வளர்த்துக்கொள்ளாதிருப்பதை விளக்குவதற்கு பாலை உதாரணமாக கூறுகிறார். எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இவ்வாறு எழுதினார்: “காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்க வேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்க வேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.” (எபிரெயர் 5:12-14) கவனமாக பைபிளை வாசிப்பது நம்முடைய பகுத்தறியும் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கும் ஆவிக்குரிய காரியங்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் அதிக உதவியாக இருக்கும்.

பைபிளை எவ்வாறு வாசிப்பது

14, 15. (அ) பைபிளின் நூலாசிரியர் நமக்கு என்ன பாக்கியத்தை அளிக்கிறார்? (ஆ) கடவுளுடைய ஞானத்திலிருந்து நாம் எவ்வாறு நன்மையடையலாம்? (உதாரணங்கள் கொடுங்கள்.)

14 பைபிள் வாசிப்பில் அதிகமாக நன்மையடைவதற்கு ஒருவர் முதலாவது செய்ய வேண்டியது ஜெபம். ஜெபம் ஒரு அருமையான சிலாக்கியம். இதை எதற்கு ஒப்பிடலாமென்றால், எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஒரு பாடத்தை படிக்க ஆரம்பிப்பதற்கு முன் நீங்கள் வாசிக்கவிருப்பதை புரிந்துகொள்ள உதவிக்காக அந்தப் பாடத்தின் நூலாசிரியரிடம் பேசுவதைப் போல இருக்கிறது. அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்! பைபிளின் நூலாசிரியர் யெகோவா அந்த பாக்கியத்தை உங்களுக்கு அளிக்கிறார். முதல் நூற்றாண்டு நிர்வாக குழுவின் உறுப்பினர் ஒருவர் தன்னுடைய சகோதரர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்.” (யாக்கோபு 1:5, 6) நவீன நாளைய நிர்வாக குழுவும், ஜெபசிந்தையோடு பைபிளை வாசிப்பதையே எப்போதும் அறிவுறுத்தி வந்திருக்கிறது.

15 ஞானம் என்பது அறிவை நடைமுறை வாழ்க்கையில் பொருத்துவதாகும். ஆகவே உங்கள் பைபிளை திறப்பதற்கு முன், நீங்கள் வாசிக்கப்போகும் பகுதியில் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய குறிப்புகளை அடையாளம் கண்டுகொள்வதற்கு உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள். புதிய விஷயங்களை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருப்பவற்றோடு சம்பந்தப்படுத்திப் பாருங்கள். அவை ‘ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தோடு’ எவ்வாறு பொருந்துகின்றன என்பதை கவனியுங்கள். (2 தீமோத்தேயு 1:13) கடந்தகால யெகோவாவின் ஊழியர்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை யோசித்துப் பார்த்து அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் எப்படி நடந்துகொண்டிருப்பீர்கள் என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.​—ஆதியாகமம் 39:7-9; தானியேல் 3:3-6, 16-18; அப்போஸ்தலர் 4:18-20.

16. நம்முடைய பைபிள் வாசிப்பை அதிக பிரயோஜனமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குவதற்கு நடைமுறையான என்ன ஆலோசனைகள் கொடுக்கப்படுகின்றன?

16 இத்தனை பக்கங்களை வாசித்து முடித்துவிட வேண்டும் என்பதற்காக மட்டும் வாசிக்காதீர்கள். நேரமெடுத்து நிதானமாக வாசியுங்கள். வாசிப்பதை யோசித்துப் பாருங்கள். வாசிக்கும்போது ஏதாவதொரு விஷயத்தில் கூடுதலாக அறிய விரும்பினால். ஒத்துவாக்கிய பைபிளை எடுத்துப்பாருங்கள். அப்படியும் அந்தக் குறிப்பு தெளிவாக இல்லையென்றால், பின்னால் கூடுதலாக ஆய்வுசெய்ய அதைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள். வாசித்துக்கொண்டே போகும்போது நீங்கள் ஞாபகத்தில் வைக்க விரும்பும் வசனங்களை கோடிட்டு கொள்ளுங்கள் அல்லது அதைப் பார்த்து எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஓரத்தில் வேறு குறிப்புகளையும் எழுதிக்கொள்ளலாம். நீங்கள் பிரசங்கிக்கையில் அல்லது போதிக்கையில் பயன்படுத்த நினைக்கும் வசனங்களின் முக்கிய வார்த்தைகளை குறித்துக்கொண்டு உங்கள் பைபிளின் பின் பக்கத்திலிருக்கும் வார்த்தைகள் இன்டெக்ஸில் பார்க்கவும். b

பைபிள் வாசிப்பில் இன்பம் காணுதல்

17. பைபிளை வாசிப்பதில் நாம் ஏன் இன்பம் காணவேண்டும்?

17 சங்கீதக்காரன் “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற” சந்தோஷமுள்ள மனுஷனைப் பற்றி பேசினார். (சங்கீதம் 1:2) தினந்தோறும் பைபிள் வாசிப்பது பாரமாக இருக்கக்கூடாது, அது உண்மையில் மகிழ்வூட்டும் ஒன்றாக இருக்க வேண்டும். கற்றுக்கொள்ளும் காரியங்களின் மதிப்பை எப்போதும் மனதில் வைப்பது அதை இனிதாக்குவதற்கு ஒரு வழியாகும். ஞானியாகிய சாலொமோன் அரசன் இவ்வாறு எழுதினார்: ‘ஞானத்தைச் சம்பாதிக்கிற மனுஷன் சந்தோஷமுள்ளவன் . . . அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம். அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் சந்தோஷமுள்ளவன்.’ (நீதிமொழிகள் 3:13, 17, 18, NW) ஞானத்தை சம்பாதிக்க நாம் எடுக்கும் முயற்சி பயனுள்ளதே, ஏனென்றால் அதன் வழிகளோ இனிதானவை, சமாதானமானவை, சந்தோஷமானவை, இறுதியில் ஜீவனையும் அளிப்பவை.

18. பைபிள் வாசிப்போடுகூட எது அவசியம், பின்வரும் கட்டுரையில் நாம் எதை சிந்திக்கப்போகிறோம்?

18 ஆம், பைபிளை வாசிப்பது நன்மையும் இன்பமுமானது. ஆனால் அது போதுமா? கிறிஸ்தவமண்டல சர்ச் அங்கத்தினர்கள் காலா காலமாக பைபிளை வாசித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் ‘எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாய்’ இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:7) பைபிள் வாசிப்பில் பலன் கிடைக்க வேண்டுமானால், அதினால் கிடைக்கும் அறிவை நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், பிரசங்க வேலையிலும் போதிக்கும் வேலையிலும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு படிக்க வேண்டும். (மத்தேயு 24:14; 28:19, 20) இதற்கு முயற்சியும் அவசியம், நல்ல முறைகளையும் பின்பற்ற வேண்டும். இதுவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் பலனளிப்பதாகவும் இருக்கும். எப்படி என்பதை பின்வரும் கட்டுரையில் நாம் காண்போம்.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச்டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி வெளியிட்டுள்ள யெகோவாவின் சாட்சிகள்​—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்) புத்தகத்தில் 241-⁠ம் பக்கத்தைக் காண்க.

b “உங்கள் பைபிள் வாசிப்பை முன்னேற்றுவிக்க சில ஆலோசனைகள்” என்ற பகுதியை மே 1, 1995 காவற்கோபுரம் பக்கங்கள் 16-17-⁠ல் காண்க.

மறுபார்வை கேள்விகள்

• இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு கொடுக்கப்பட்ட என்ன ஆலோசனை இன்று கண்காணிகளுக்குப் பொருந்துகிறது, ஏன்?

• இன்று “அந்நியர்”களைப் போலவும் “பிள்ளைகளைப்” போலவும் இருப்பது யார், அவர்கள் ஏன் தினந்தோறும் பைபிளை வாசிக்க வேண்டும்?

• ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ நாம் பைபிளை ஒழுங்காக வாசிப்பதற்கு என்ன நடைமுறையான வழிகளில் உதவியிருக்கிறது?

• பைபிள் வாசிப்பிலிருந்து உண்மையான நன்மையையும் இன்பத்தையும் நாம் எவ்வாறு பெறமுடியும்?

[கேள்விகள்]

[பக்கம் 9-ன் படம்]

குறிப்பாக மூப்பர்கள் தினந்தோறும் பைபிளை வாசிக்க வேண்டும்

[பக்கம் 10-ன் படம்]

ஜெபாலயத்தில் வேதாகம வாசிப்பில் பங்குகொள்வது இயேசுவின் பழக்கம்