Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசிக்கவும் படிக்கவும் நேரத்தை வாங்குவீர்

வாசிக்கவும் படிக்கவும் நேரத்தை வாங்குவீர்

வாசிக்கவும் படிக்கவும் நேரத்தை வாங்குவீர்

‘நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தை வாங்குங்கள்.’ ​—⁠எபேசியர் 5:16, NW.

1. நம்முடைய நேரத்தை திட்டமிடுவது ஏன் ஞானமான காரியம், நாம் நேரத்தை பயன்படுத்தும் விதம் நம்மைப் பற்றி எதை வெளிப்படுத்தக்கூடும்?

 ‘காலம் பொன் போன்றது’ என்ற பழமொழியின் மதிப்பை உணர்ந்துகொண்டால் நேரத்தை நிச்சயம் விரயமாக்க மாட்டோம். கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு வேலைக்காக குறிப்பிட்ட ஒரு நேரத்தை ஒதுக்கிவைத்தால் அதிலிருந்து நிறைய நன்மைகளை நாம் பெற்றுக்கொள்வோம். ஞானியாகிய சாலொமோன் ராஜா எழுதியதை கவனியுங்கள்: “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.” (பிரசங்கி 3:1) நம்மெல்லாருக்கும் ஒரே அளவு நேரம்தான் உண்டு; நாம் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. முக்கியமானது எது என்பதைத் தீர்மானித்து அதற்காக நேரத்தை ஒதுக்கும்போது, இருதயத்தில் எதை நாம் அதிகமாக நேசிக்கிறோம் என்பதை வெளிப்படுத்துகிறோம்.​—மத்தேயு 6:⁠21.

2. (அ) மலைப்பிரசங்கத்தில் இயேசு நம்முடைய ஆன்மீகத் தேவைகளைக் குறித்து என்ன சொன்னார்? (ஆ) என்ன விஷயங்களில் நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும்?

2 உண்ணவும் உறங்கவும் நாம் கட்டாயமாக நேரத்தை ஒதுக்கியே ஆகவேண்டும், ஏனென்றால் அவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை. ஆனால் நம்முடைய ஆன்மீகத் தேவைகளைப் பற்றி என்ன? அவற்றையும் நாம் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது நமக்கு தெரியும். மலைப் பிரசங்கத்தில் இயேசு இவ்வாறு சொன்னார்: ‘ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து உணர்வுள்ளவன் சந்தோஷமுள்ளவன்.’ (மத்தேயு 5:3) அதனால்தான் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பார் பைபிள் வாசிப்புக்கும் படிப்புக்கும் நேரத்தை செலவழிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை எப்போதும் நமக்கு நினைப்பூட்டிக்கொண்டே இருக்கின்றனர். (மத்தேயு 24:45) இது எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம், ஆனால் பைபிளை வாசிப்பதற்கும் படிப்பதற்கும் நேரம் கிடைப்பதே இல்லை என்பதாக யோசிக்கலாம். அப்படியானால், கடவுளுடைய வார்த்தையை வாசிப்பது, தனிப்பட்ட படிப்பு, தியானிப்பது ஆகியவற்றிற்கு நம்முடைய வாழ்க்கையில் நேரத்தைக் கண்டடையும் பல்வேறு வழிகளை இப்பொழுது நாம் ஆராய்ந்து பார்ப்போம்.

பைபிளை வாசிப்பதற்கும் படிப்பதற்கும் நேரத்தைக் கண்டடைதல்

3, 4. (அ) நம்முடைய நேரத்தைப் பயன்படுத்துவது பற்றி அப்போஸ்தலன் பவுல் கொடுத்த புத்திமதி என்ன, இதில் எது அடங்கும்? (ஆ) ‘நேரத்தை வாங்கும்படி’ நமக்கு அறிவுரை கூறும்போது பவுல் அர்த்தப்படுத்தியது என்ன?

3 நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்தைப் பார்த்தால், அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளுக்கு அனைவரும் செவிசாய்ப்பது அவசியமாகும்: “நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் [“வாய்ப்பான காலத்தை வாங்குங்கள்,” NW]. ஆகையால் நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.” (எபேசியர் 5:15-17) நாம் ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களாக இருப்பதால் நம்முடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களுக்கும் இது பொருந்தும். ஜெபம், படிப்பு, கூட்டங்கள், ‘ராஜ்யத்தின் நற்செய்தியை’ பிரசங்கிப்பதில் முடிந்தளவு முழுமையாக பங்குகொள்ளுதல் ஆகியவற்றுக்கு நேரத்தைக் கண்டுபிடிப்பதும் இதில் அடங்கும்.​—மத்தேயு 24:14; 28:19, 20.

4 இன்று யெகோவாவின் ஊழியர்களில் அநேகர் பைபிளை வாசித்து, அதை ஆழமாக படிக்க நேரம் இல்லை என்று நினைப்பதாக தெரிகிறது. நம்முடைய நாளில் ஒரு மணிநேரத்தைக் கூட்ட நம்மால் முடியாதுதான், ஆகவே பவுலின் புத்திமதிக்கு வேறு அர்த்தம் இருக்க வேண்டும். கிரேக்கில் ‘வாய்ப்பான காலத்தை வாங்குதல்,’ வேறு ஏதோ ஒன்றை இழந்து அதை வாங்குவதை குறிக்கிறது. “இழந்த வாய்ப்பை திரும்ப பெற முடியாது என்பதால் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மிகச் சிறந்த விதமாக பயன்படுத்துதல்” என எக்ஸ்போஸிடரி அகராதியில் டபிள்யு. இ. வைன் விளக்குகிறார். பைபிளை வாசிப்பதற்கும் படிப்பதற்கும் சரியான நேரத்தை எதிலிருந்து அல்லது எங்கிருந்து வாங்க முடியும்?

எது முக்கியம் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்

5. நாம் எவ்வாறு, ஏன் ‘அதி முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ள’ வேண்டும்?

5 பிழைப்புக்காக நாம் செய்யும் வேலையோடுகூட நாம் கவனிக்க வேண்டிய ஆன்மீக விஷயங்களும் உள்ளன. யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்களாக நாம் இருப்பதால் ‘கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு நமக்கு அதிகமிருக்கிறது.’ (1 கொரிந்தியர் 15:58) இந்தக் காரணத்துக்காகத்தான், ‘அதிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ளுமாறு’ பிலிப்பியிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் அறிவுரை கூறினார். (பிலிப்பியர் 1:10, NW) அப்படியென்றால் எது முக்கியம் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். ஆன்மீக கடமைகளே பொருளாதார காரியங்களுக்கு முன்பாக எப்போதும் வரவேண்டும். (மத்தேயு 6:31-33) ஆனாலும், ஆன்மீக கடமைகளை நிறைவேற்றுவதில் சமநிலையோடிருப்பதும் முக்கியம். நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுக்கு எவ்வாறு நேரத்தை ஒதுக்குகிறோம்? ஒரு கிறிஸ்தவன் செய்ய வேண்டிய “அதி முக்கியமான காரியங்களில்” அதிகமாக புறக்கணிக்கப்படுவது தனிப்பட்ட பைபிள் படிப்பும் வாசிப்புமே என்று பிரயாண கண்காணிகள் அறிக்கை செய்கின்றனர்.

6. வெளி வேலையாக இருந்தாலும் வீட்டு வேலையாக இருந்தாலும், வாய்ப்பான காலத்தை வாங்குவதற்கு என்ன செய்யலாம்?

6 நேரத்தை வாங்குவது என்பது, “ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மிகச் சிறந்த விதமாக பயன்படுத்தி” “நன்மை பெறுவதே” என்று நாம் பார்த்தோம். ஆகவே நம்முடைய பைபிள் படிப்பு பழக்கங்கள் சரிவர இல்லாவிட்டால், நம்முடைய நேரத்தை எவ்வாறு செலவழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அலசி ஆராய வேண்டும். பிழைப்புக்காக நாம் செய்யும் வேலை நம்முடைய எல்லா நேரத்தையும் சக்தியையும் அப்படியே உறிஞ்சிக்கொள்கிறது என்றால், அதைக் குறித்து நாம் யெகோவாவிடம் ஜெபத்தில் பேச வேண்டும். (சங்கீதம் 55:22) அப்போது அதி முக்கியமான காரியங்களுக்கு, அதாவது பைபிள் வாசிப்பது படிப்பது உட்பட, யெகோவாவின் வணக்கத்துக்கு நமக்கு அதிக நேரம் கிடைக்கும்படி நாம் சில மாற்றங்களை செய்ய அவர் நமக்கு உதவுவார். பெண்களுக்கு, காலையிலிருந்து இரவுவரை ஓய்வு ஒழிச்சல் அற்ற வேலை இருப்பதாக சொல்வார்கள். ஆகவே கிறிஸ்தவ சகோதரிகளும்கூட எது முக்கியம் என்பதைத் தீர்மானித்து பைபிளை வாசிப்பதற்கும் கருத்தாய் படிப்பதற்கும் திட்டவட்டமாக நேரத்தை ஒதுக்க வேண்டும்.

7, 8. (அ) என்ன வேலைகளைத் தவிர்த்து, வாசிப்பதற்கும் படிப்பதற்கும் நேரத்தை வாங்க முடியும்? (ஆ) எதற்காக நாம் பொழுதுபோக்கில் ஈடுபடுகிறோம், இதை மனதில் வைப்பது எது முக்கியம் என்பதை தீர்மானிக்க நமக்கு எவ்வாறு உதவும்?

7 நம்மில் பலரால் அவசியமில்லாத வேலைகளை தவிர்த்து படிப்புக்காக நேரத்தை வாங்க முடியும் என்பதுதான் உண்மை. நம்மை நாமே இவ்விதமாக கேட்டுக்கொள்ளலாம்: ‘பத்திரிகைகளை அல்லது செய்தித்தாள்களை வாசிப்பதிலும் டிவி பார்ப்பதிலும் இசையைக் கேட்பதிலும் வீடியோ விளையாட்டுக்களை விளையாடுவதிலும் எவ்வளவு நேரத்தை செலவழிக்கிறேன்? பைபிளை நான் வாசிப்பதற்கு பதிலாக அதிக நேரத்தை என் கம்ப்யூட்டருக்கு முன்பாக செலவழிக்கிறேனா?’ பவுல் சொல்கிறார்: “நீங்கள் மதியற்றவர்களாயிராமல் [“நியாயமற்றவர்களாயிராமல்,” NW] கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.” (எபேசியர் 5:17) நியாயப்படி இல்லாமல் அளவுக்கு அதிகமாக டிவி பார்ப்பதால்தான் பெரும்பாலான சாட்சிகளால் தனிப்பட்ட படிப்புக்கும் பைபிள் வாசிப்புக்கும் போதிய நேரத்தை செலவிட முடிவதில்லை என்று தெரிகிறது.​—சங்கீதம் 101:3; 119:37, 47, 48.

8 எப்போதும் படித்துக்கொண்டே இருக்க முடியாது, ஓய்வு எடுப்பதற்கும் நேரம் வேண்டும் என்று சிலர் சொல்லலாம். இது வாஸ்தவம்தான் என்றாலும், உண்மையில் பைபிள் வாசிப்பதற்கும் படிப்பதற்கும் நாம் செலவழிக்கும் நேரத்தோடு ஒப்பிட ஓய்வு எடுப்பதற்கு நாம் எவ்வளவு நேரத்தை செலவிடுகிறோம் என்பதை சிந்தித்துப் பார்ப்பது நல்லது. அப்போது நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். பொழுதுபோக்கும் ஓய்வெடுப்பதும் அவசியமென்றாலும் அதற்குரிய இடத்தில் அவற்றை வைக்க வேண்டும். புத்துணர்ச்சியோடு ஆவிக்குரிய வேலைகளைச் செய்வதற்காகத்தான் ஓய்வு எடுக்கிறோம். ஆனால் பெரும்பாலான டிவி நிகழ்ச்சிகளும் வீடியோ விளையாட்டுகளும் ஒரு நபரை அதிகமாக களைப்படையவே செய்கின்றன. கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதும் படிப்பதுமோ புத்துணர்ச்சியையும் புதுத் தெம்பையும் அளிக்கிறது.​—சங்கீதம் 19:7, 8.

படிப்பதற்கு சிலர் எவ்வாறு நேரத்தைக் கண்டுபிடிக்கிறார்கள்

9. தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல்​—⁠1999 புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனையை பின்பற்றினால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

9 தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்தின் 1999 பதிப்பின் முன்னுரை இவ்வாறு கூறுகிறது: “காலையிலேயே இந்தச் சிறுபுத்தகத்திலிருந்து வசனத்தையும் அதன் குறிப்பையும் கலந்தாலோசிப்பது அதிக நன்மையளிக்கும். அப்படி செய்கையில், மாபெரும் போதகராகிய யெகோவா தினமும் தம் போதனைகளின் வாயிலாக நம்மை தட்டி எழுப்புவதைப் போல உணருவோம். ஒவ்வொரு நாள் காலையிலும் யெகோவா அளிக்கும் போதனைகளால் இயேசு கிறிஸ்து பயனடைந்ததாய் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டிருக்கிறது. அது சொல்வதாவது: ‘காலைதோறும் என்னை [யெகோவா] எழுப்புகிறார்; கற்றுக்கொள்கிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.’ இத்தகைய போதனைகள், ‘இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல’ இயேசுவிற்கு ‘கல்விமானின் நாவை’ தந்தது. (ஏசா. 30:20; 50:4; மத். 11:28-30) ஒவ்வொரு நாள் காலையும் விழித்தவுடன் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கிடைக்கும் காலத்திற்கேற்ற புத்திமதியைப் பெறுவது உங்களுடைய சொந்த பிரச்சினைகளை சமாளிப்பதற்கு மாத்திரமல்ல, மற்றவர்களுக்கு உதவவும் ‘கல்விமானின் நாவை’ கொடுத்து பலப்படுத்தும்.” a

10. சிலருக்கு பைபிள் வாசிப்பதற்கும் படிப்பதற்கும் நேரம் எவ்வாறு கிடைக்கிறது, இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

10 அநேக கிறிஸ்தவர்கள் இந்த அறிவுரையின்படி செய்கிறார்கள், அதிகாலையில் அந்த நாளுக்குரிய வேதவாக்கியத்தையும் குறிப்புகளையும் வாசிப்பதோடு பைபிளை வாசிப்பதையும் அல்லது படிப்பதையும் அப்போதே செய்கிறார்கள். பிரான்சில் ஒரு பயனியர் சகோதரி ஒவ்வொரு நாளும் அதிகாலமே எழுந்திருந்து பைபிளை தவறாமல் வாசிப்பதற்கு 30 நிமிடங்களைச் செலவழிக்கிறார். பல ஆண்டுகளாக இவரால் இதை எவ்வாறு செய்ய முடிகிறது? அவர் இவ்வாறு சொல்கிறார்: “வாசிக்கணும் என்ற பலமான உந்துதல் எனக்கு இருக்கிறது, என்ன ஆனாலும் சரி அட்டவணையின்படி சரியாக வாசித்து விடுவேன்!” ஒரு நாளில் வாசிப்பதற்காக நாம் தெரிந்துகொள்ளும் நேரம் எதுவாக இருந்தாலும் சரி, தவறாமல் அந்த நேரத்தில் அதைச் செய்வதே முக்கியம். 40 வருடங்களுக்கும் மேலாக ஐரோப்பாவிலும் வட ஆப்பிரிக்காவிலும் பயனியர் சேவையில் இருந்துவரும் ரணே மீகா என்ற சகோதரர் இவ்வாறு கூறுகிறார்: “1950 முதற்கொண்டு ஒவ்வொரு வருடமும் பைபிளை முழுவதுமாக வாசித்து முடிப்பதை என்னுடைய இலக்காக வைத்திருக்கிறேன். இப்போது 49 தடவை வாசித்து முடித்திருக்கிறேன். என்னுடைய படைப்பாளரோடு நெருக்கமான உறவைக் காத்துக்கொள்வதற்கு இது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன். கடவுளுடைய வார்த்தையை தியானிப்பது, அவரது நீதியையும் மற்ற குணங்களையும் இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள எனக்கு உதவியாக இருக்கிறது, மிகுந்த பலத்தையும் தருகிறது.” b

‘ஏற்ற நேரத்தில் உணவு’

11, 12. (அ) என்ன ஆவிக்குரிய “உணவை” ‘உண்மையுள்ள விசாரணைக்காரன்’ வகுப்பார் கொடுத்துவருகிறார்கள்? (ஆ) “உணவு” எவ்விதமாக ஏற்ற காலத்தில் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது?

11 ஒழுங்காக உணவு உட்கொள்ளும் பழக்கம் நல்ல சரீர ஆரோக்கியத்துக்கு உதவுவது போலவே, ஒழுங்காக பைபிள் வாசிப்பதும் படிப்பதும் நல்ல ஆவிக்குரிய ஆரோக்கியத்துக்கு உகந்தது. லூக்காவின் சுவிசேஷத்தில் நாம் இயேசுவின் இந்த வார்த்தைகளை வாசிக்கிறோம்: “பணிவிடைக்காரருக்குத் தகுதியான [“ஏற்ற,” NW] காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்?” (லூக்கா 12:42) இப்போது 120 ஆண்டுகளுக்கும் மேலாக ஆவிக்குரிய ‘ஏற்றகால உணவு’ உவாட்ச்டவர் வாயிலாகவும் பைபிளை ஆதாரமாக கொண்ட மற்ற புத்தகங்கள், பிரசுரங்கள் வாயிலாகவும் அளிக்கப்பட்டு வருகிறது.

12 ‘ஏற்ற காலத்தில்’ என்ற வார்த்தைகளை கவனியுங்கள். சரியான சமயத்தில் நம்முடைய ‘மகத்தான போதகராகிய’ யெகோவா தம்முடைய மகன் மூலமாகவும் அடிமை வகுப்பாரின் மூலமாகவும் கோட்பாடு, நடத்தை சம்பந்தமான விஷயங்களில் அவருடைய மக்களை வழிநடத்தி வந்திருக்கிறார். ‘நாம் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும், வழி இதுவே, இதிலே நடவுங்கள்’ என்ற வார்த்தைகளை நாம் அனைவரும் ஒருசேர கேட்டிருப்பதுபோல இருக்கிறது. (ஏசாயா 30:20, 21) மேலும், பைபிளையும் எல்லா பைபிள் பிரசுரங்களையும் மிகவும் கவனமாக படிப்போர், அதிலுள்ள கருத்துக்கள் தங்களுக்கென்றே சொல்லப்பட்டிருப்பதாக அடிக்கடி உணருவார்கள். ஆம், சரியான நேரத்தில் கடவுள் ஆலோசனையையும் அறிவுரைகளையும் நமக்கு வழங்குவார், அதனால் சோதனையை எதிர்க்க முடியும் அல்லது ஞானமாக தீர்மானம் எடுக்க முடியும்.

நல்ல உணவு பழக்கங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்

13. மோசமான ஆவிக்குரிய உணவு பழக்கங்களில் சில யாவை?

13 ஏற்ற வேளையில் கிடைக்கும் ‘உணவிலிருந்து’ முழுமையாக பயனடைவதற்கு நல்ல உணவு பழக்கங்களை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். பைபிள் வாசிப்புக்கும் தனிப்பட்ட படிப்புக்கும் ஓர் ஒழுங்கான அட்டவணையைப் போட்டு அதைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆவிக்குரிய உணவை உண்ணும் நல்ல பழக்கங்கள் உங்களுக்கிருக்கிறதா? தனிப்பட்ட விதமாக ஆழமாக ஆராய்ந்து படிக்கும் பழக்கம் இருக்கிறதா? அல்லது நமக்காக கவனமாக தயாரிக்கப்பட்டிருக்கும் உணவை அவசர அவசரமாக, அரைகுறையாக சாப்பிடும் பழக்கம் அல்லது சில வேளைகளில் உணவை சாப்பிடாமலே இருந்துவிடும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? ஆவிக்குரிய நல்ல உணவு பழக்கங்கள் இல்லாமல் சிலர் விசுவாசத்தில் பலவீனமடைந்திருக்கிறார்கள், சிலர் வீழ்ந்தும் இருக்கிறார்கள்.​—1 தீமோத்தேயு 1:19; 4:15, 16.

14. நமக்கு ஏற்கெனவே தெரிந்திருப்பதாக தோன்றும் விஷயங்களையும் மறுபடியுமாக நாம் கவனமாக வாசிப்பது ஏன் பிரயோஜனமாக இருக்கும்?

14 சிலர், பைபிளின் அடிப்படை கோட்பாடுகள் தெரிந்திருப்பதாகவும், ஒவ்வொரு கட்டுரையிலும் முற்றிலும் புதிய கருத்துக்கள் வருவதில்லை என்பதாகவும் சொல்லலாம். ஆகவே ஒழுங்காக வாசிப்பதும் கூட்டங்களுக்கு வருவதும் அவசியமில்லை என்று நினைக்கலாம். ஆனால் ஏற்கெனவே நாம் கற்றுக்கொண்டிருக்கும் காரியங்களை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 119:95, 99; 2 பேதுரு 3:1, 2; யூதா 5) சமையல் கலையை நன்றாக அறிந்த ஒருவர் சில அடிப்படை பொருட்களை வைத்தே வெவ்வேறு ருசியான பதார்த்தங்களை தயாரிப்பது போலவே அடிமை வகுப்பு நல்ல போஷாக்கை அளிக்கும் ஆவிக்குரிய உணவை பல தினுசுகளில் தயாரித்து தருகிறார்கள். ஏற்கெனவே நமக்கு தெரிந்த விஷயங்களின் பேரில் எழுதப்படும் கட்டுரைகளில்கூட நல்ல நுணுக்கமான குறிப்புகள் வெவ்வேறு கோணங்களில் அளிக்கப்படுகின்றன. நாம் ஒரு விஷயத்தைப் பற்றி வாசிப்பதால் பெற்றுக்கொள்ளும் நன்மை, அதை படிப்பதற்கு எந்தளவு நேரத்தையும் முயற்சியையும் செலவழிக்கிறோம் என்பதையே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது.

வாசிப்பதாலும் படிப்பதாலும் கிடைக்கும் ஆவிக்குரிய நன்மைகள்

15. பைபிளை வாசிப்பதாலும் படிப்பதாலும் நாம் எவ்வாறு கடவுளுடைய வார்த்தையின் சிறந்த ஊழியராகிறோம்?

15 பைபிளை வாசிப்பதாலும் படிப்பதாலும் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. ஒரு கிறிஸ்தவனுக்குரிய அடிப்படை பொறுப்பை நிறைவேற்ற நாம் தகுதிபெறுகிறோம். அதாவது, ‘வெட்கப்படாத ஊழியக்காரனாய், சத்திய வசனத்தை சரியாக கையாள’ தகுதி பெறுகிறோம். (2 தீமோத்தேயு 2:15) எந்தளவுக்கு அதிகமாக பைபிளை வாசித்து, அதை படிக்கிறோமோ அந்தளவுக்கு அதிகமாக நம்முடைய மனதை கடவுளுடைய எண்ணங்களால் நிரப்பிக்கொள்கிறோம். அப்போது நம்மால் பவுலைப் போலவே ‘வேதவாக்கியங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசி, மேற்கோள்கள் வாயிலாக நிரூபணங்கள் அளித்து’ யெகோவாவின் நோக்கங்களைப் பற்றிய அதிசயமான சத்தியத்தை விளக்க முடியும். (அப்போஸ்தலர் 17:2, 3) போதிப்பதில் நம்முடைய திறமை கூடும், நம்முடைய சம்பாஷணைகள், பேச்சுகள், நாம் கொடுக்கும் புத்திமதி ஆகியவை ஆவிக்குரிய விதமாக கட்டியெழுப்புவதாக இருக்கும்.​—நீதிமொழிகள் 1:⁠5.

16. கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதாலும் படிப்பதாலும் தனிப்பட்ட என்ன விதங்களில் நாம் பயனடைகிறோம்?

16 மேலுமாக கடவுளுடைய வார்த்தையை ஆராய்வதற்காக நேரத்தை அர்ப்பணித்தால் நம்முடைய வாழ்க்கையை இன்னும் முழுமையாக யெகோவாவின் வழிகளுக்கு இசைவாக வைத்துக்கொள்ள முடியும். (சங்கீதம் 25:4; 119:9, 10; நீதிமொழிகள் 6:20-23) இதனால் மனத்தாழ்மை, உண்மைப் பற்றுறுதி, மகிழ்ச்சி போன்ற நம்முடைய ஆன்மீக குணங்கள் பலப்படும். (உபாகமம் 17:19, 20; வெளிப்படுத்துதல் 1:3) பைபிளை வாசிப்பதாலும் படிப்பதாலும் கிடைக்கும் அறிவை பயன்படுத்தும்போது நம்முடைய வாழ்க்கையில் கடவுளுடைய ஆவி தாராளமாக பொழிவதை அனுபவிப்போம். நாம் செய்யும் எல்லா காரியங்களிலும் ஆவியின் கனிகளை அபரிமிதமாக காட்டுவோம்.​—கலாத்தியர் 5:22, 23.

17. தனிப்பட்ட விதமாக பைபிளை வாசிப்பதற்கும் படிப்பதற்கும் நாம் செலவிடும் நேரமும் தரமும் எவ்வாறு யெகோவாவோடு நம்முடைய உறவை பலப்படுத்தும்?

17 எல்லாவற்றிற்கும் மேலாக, மற்ற நடவடிக்கைகளிலிருந்து நாம் நேரத்தை வாங்கி அதை கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதற்கும் படிப்பதற்கும் செலவிடும்போது, கடவுளோடு நாம் கொண்டிருக்கும் உறவினால் அதிக நன்மை கிடைக்கும். உடன் கிறிஸ்தவர்கள், “எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய [கடவுளுடைய] சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவிலே விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்” வேண்டும் என்று பவுல் வேண்டிக்கொண்டார். (கொலோசெயர் 1:9, 10) அதேவிதமாக ‘யெகோவாவுக்கு பாத்திரராய் நடந்துகொள்வதற்கு’ நாமும்கூட “எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்பட” வேண்டும். ஆகவே நாம் பைபிளை வாசிப்பதற்கும் படிப்பதற்கும் செலவிடும் நேரத்தையும் தரத்தையும் பொருத்தே நமக்கு யெகோவாவின் ஆசிர்வாதமும் அங்கீகாரமும் கிடைக்கும் என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது.

18. யோவான் 17:3-⁠ல் பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளை பின்பற்றினால் என்ன ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்வோம்?

18 “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” (யோவான் 17:3) கடவுளுடைய வார்த்தையை படிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை மற்றவர்களுக்கு வலியுறுத்துவதற்கு யெகோவாவின் சாட்சிகள் அதிகமாக பயன்படுத்தும் வசனங்களில் இது ஒன்று. நிச்சயமாகவே, இதை நாம்தாமே செய்வது மிக முக்கியம். யெகோவாவையும் அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவில் வளருவதைச் சார்ந்துதான் என்றுமாக வாழும் நம்முடைய நம்பிக்கை இருக்கிறது. அது எதை அர்த்தப்படுத்தும் என்பதை எண்ணிப்பாருங்கள். யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு முடிவே இருக்காது. நித்திய காலமாய் அவரைப் பற்றி கற்றுக்கொள்வதற்கும் விஷயம் இருக்கும்!​—பிரசங்கி 3:11; ரோமர் 11:⁠33.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா வெளியிட்டது.

b மே 1, 1995 காவற்கோபுரம், பக்கங்கள் 20-1-⁠ல் “எப்போது அவர்கள் அதை வாசிக்கின்றனர், எவ்வாறு அவர்கள் பயனடைகின்றனர்” என்ற கட்டுரையைக் காண்க.

மறுபார்வை கேள்விகள்

• நாம் நேரத்தை பயன்படுத்தும் விதம் நம்மைப் பற்றி எதை வெளிப்படுத்துகிறது?

• என்ன வேலைகளிலிருந்து பைபிளை வாசிப்பதற்கும் படிப்பதற்கும் நேரத்தை வாங்க முடியும்?

• நம்முடைய ஆவிக்குரிய உணவு பழக்கங்களை ஏன் கண்காணிக்க வேண்டும்?

• வேதவாக்கியங்களை வாசிப்பதாலும் படிப்பதாலும் என்ன நன்மைகளை நாம் பெற்றுக்கொள்கிறோம்?

[கேள்விகள்]

[பக்கம் 20,21-ன் படங்கள்]

பைபிளை ஒழுங்காக வாசிப்பதும் படிப்பதும் ‘சத்திய வார்த்தையை சரியாக கையாளுவதற்கு’ நமக்கு உதவும்

[பக்கம் 23-ன் படங்கள்]

சுறுசுறுப்பான நம் வாழ்க்கையில் மற்ற வேலைகளோடு ஆன்மீக காரியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கையில் அதிக நன்மை கிடைக்கும்