Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய ராஜ்யம்—பூமியின் புதிய அரசாங்கம்

கடவுளுடைய ராஜ்யம்—பூமியின் புதிய அரசாங்கம்

கடவுளுடைய ராஜ்யம்​—⁠பூமியின் புதிய அரசாங்கம்

“அந்த ராஜ்யம் . . . இந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”​—தானியேல் 2:​44, NW.

1. பைபிளின்மீது என்ன நம்பிக்கையை நாம் வைக்கலாம்?

 மனிதருக்கு கடவுள் அருளிய வெளிப்படுத்துதல்தான் பைபிள். “நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 தெசலோனிக்கேயர் 2:​13) பைபிளில், கடவுளுடைய பண்புகள், அவருடைய நோக்கங்கள், அவர் நம்மிடம் எதிர்பார்ப்பவை என அவரைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள் அடங்கியுள்ளன. அதில், குடும்ப வாழ்க்கை, நடத்தை சம்பந்தப்பட்ட முத்தான அறிவுரைகளும் உள்ளன. அதில், கடந்த காலத்தில் நிறைவேறிய, இப்போது நிறைவேறி வருகிற, எதிர்காலத்தில் நிறைவேறப் போகிற தீர்க்கதரிசன விவரங்களும் உள்ளன. ஆம், “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”​—⁠2 தீமோத்தேயு 3:16, 17.

2. பைபிளின் கருப்பொருளை இயேசு எவ்வாறு வலியுறுத்திக் காட்டினார்?

2 கடவுள் தம்முடைய பரலோக ராஜ்யத்தின் மூலம், தம்முடைய அரசுரிமையை நியாயநிரூபணம் செய்யப் போகிறார் என்பதே பைபிளின் முக்கிய கருப்பொருள். இதுவே இயேசு தம்முடைய ஊழியத்தில் பிரசங்கித்து வந்த முக்கிய செய்தி. “அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.” (மத்தேயு 4:​17) “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்” என ஊக்குவிப்பதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் அதற்கு முக்கியத்துவம் தரவேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார். (மத்தேயு 6:​33) மேலும், “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என கடவுளிடம் ஜெபிக்கும்படி தம்மைப் பின்பற்றினோருக்குக் கற்பிப்பதன் மூலமும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் காட்டினார்.​—⁠மத்தேயு 6:​10.

பூமியில் புதிய அரசாட்சி

3. கடவுளுடைய ராஜ்யம் ஏன் கவனம் செலுத்துவதற்கு முக்கியமானது?

3 கடவுளுடைய ராஜ்யம் ஏன் மனிதருக்கு அந்தளவு முக்கியமானது? ஏனெனில், சீக்கிரத்தில் இந்தப் பூமியின் அரசாட்சியை நிரந்தரமாக மாற்றுவதற்கு அது நடவடிக்கை எடுக்கப் போகிறது. “[இப்போது பூமியை ஆளும்] அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை [பரலோகத்தில் ஓர் அரசாங்கத்தை] எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் [பூமியின் அரசாங்கங்களையெல்லாம்] நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்” என தானியேல் 2:​44-⁠லுள்ள தீர்க்கதரிசனம் சொல்கிறது. கடவுளின் பரலோக ராஜ்யமே பூமி முழுவதையும் ஆளுகையில், மனிதர்கள் ஒருபோதும் பூமியை அடக்கியாள முடியாது. பிரிவுற்ற, திருப்தியற்ற மனித ஆட்சி இனி ஒருபோதும் நினைவுக்கு வராது.

4, 5. (அ) இயேசு ராஜ்யத்தின் அரசராக இருப்பதற்கு தன்னிகரற்றவர் என்று எப்படி சொல்லலாம்? (ஆ) சீக்கிரத்தில் இயேசு என்ன செய்யப் போகிறார்?

4 யெகோவாவின் மேற்பார்வையில் பரலோக ராஜ்யத்தை ஆளும் பிரதான அரசர் கிறிஸ்து இயேசு; இவர் இந்தப் பொறுப்புக்கு தன்னிகரற்றவரும்கூட. படைப்பில் முதலாவதாக அவரை கடவுள் சிருஷ்டித்ததினால் பூமிக்கு வரும் முன்பு அவர் கடவுளுடைய “தலைமை வேலையாளராக” பரலோகத்தில் பணியாற்றினார். (நீதிமொழிகள் 8:​22-​31, NW) “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும் சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் . . . பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய . . . சகலமும் . . . சிருஷ்டிக்கப்பட்டது.” (கொலோசெயர் 1:15, 16) மேலும், இயேசுவை பூமிக்கு கடவுள் அனுப்பி வைத்தபோது, எப்போதும் கடவுளுடைய சித்தத்தையே செய்தார். அவர் கடும் சோதனைகளை சகித்து, தம்முடைய பிதாவுக்கு உண்மையுள்ளவராக உயிர்நீத்தார்.​—யோவான் 4:​34; 15:⁠10.

5 மரணம் வரை கடவுளுக்கு உண்மையுள்ளவராய் இருந்ததால் இயேசுவுக்கு பலன் கிடைத்தது. கடவுள் அவரை பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பி, பரலோக ராஜ்யத்தின் அரசராகும் உரிமையை அளித்தார். (அப்போஸ்தலர் 2:​32-​36) அந்த ராஜ்யத்தின் ராஜாவாக கிறிஸ்து இயேசு, பூமியிலிருந்து மனித ஆட்சியை நீக்கி அக்கிரமத்தை முழுமையாய் ஒழிப்பார்; இந்த அற்புத வேலையை செய்வதற்காக, பலம்படைத்த கோடானுகோடி தூதர்களை முன்நின்று வழிநடத்தும் பொறுப்பை அவருக்குக் கடவுள் அளிப்பார். (நீதிமொழிகள் 2:​21, 22; 2 தெசலோனிக்கேயர் 1:​6-9; வெளிப்படுத்துதல் 19:11-​21; 20:​1-3) அப்போது கிறிஸ்துவின் கைகளிலுள்ள கடவுளுடைய பரலோக ராஜ்யமே புதிய அரசாட்சியாக, பூமி முழுவதின்மீதும் ஒரே அரசாங்கமாக செயல்படும்.​—வெளிப்படுத்துதல் 11:⁠15.

6. எப்படிப்பட்ட ஆட்சியை இந்த ராஜ்யத்தின் அரசரிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம்?

6 “சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது” என்று பூமியின் புதிய அரசரைப் பற்றி கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (தானியேல் 7:​14) அன்பு காட்டுவதில் கடவுளை அப்படியே இயேசு பின்பற்றுவதால் அவருடைய ஆட்சியில் சமாதானமும் சந்தோஷமும் செழித்தோங்கும். (மத்தேயு 5:5; யோவான் 3:​16: 1 யோவான் 4:​7-​10) “அதை . . . நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் [“அரசாங்கத்தின்,” NW] பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.” (ஏசாயா 9:7) அன்பும் நியாயமும் நீதியுமிக்க ராஜா நமக்குக் கிடைக்கப் போவது என்னே ஆசீர்வாதம்! இவ்வாறாக 2 பேதுரு 3:​13 முன்னறிவிக்கிறது: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் [கடவுளுடைய பரலோக ராஜ்யம்] புதிய பூமியும் [பூமிக்குரிய ஒரு புதிய சமுதாயம்] உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.”

7. இன்று மத்தேயு 24:14 எவ்வாறு நிறைவேறி வருகிறது?

7 நீதியை விரும்பும் அனைவருக்கும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தி நற்செய்தியே என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இவ்வுலகின் பொல்லாத நிலைமைகளுக்கு முடிவு வரவிருக்கும் இந்தக் ‘கடைசிநாட்களுக்கான’ அடையாளத்தை இயேசு முன்னறிவித்தார். அந்த அடையாளத்தின் ஓர் அம்சமாக இதையும் அவர் தெரிவித்தார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (2 தீமோத்தேயு 3:​1-5; மத்தேயு 24:14) அந்தத் தீர்க்கதரிசனம் இப்போது நிறைவேறி வருகிறது. ஏறக்குறைய அறுபது லட்சம் யெகோவாவின் சாட்சிகள், 234 தேசங்களில் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்கின்றனர். அதற்காக ஆண்டுதோறும் நூறு கோடிக்கும் அதிகமான மணிநேரத்தை செலவழிக்கின்றனர். உலகெங்கிலும் சுமார் 90,000 சபைகளை வணக்க ஸ்தலங்களாக அவர்கள் பயன்படுத்துகின்றனர்; இவற்றை ராஜ்ய மன்றம் என்று அழைப்பது பொருத்தமானதே. வரவிருக்கும் புதிய அரசாங்கத்தைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு ஜனங்கள் இங்கு கூடிவருகின்றனர்.

உடன் அரசர்கள்

8, 9. (அ) கிறிஸ்துவுடன் சேர்ந்து ஆளவிருக்கும் அரசர்கள் எங்கிருந்து வருகிறவர்கள்? (ஆ) இந்த அரசரும் உடன் அரசர்களும் ஆளும் ஆட்சியில் நாம் ஏன் நம்பிக்கை வைக்கலாம்?

8 கடவுளுடைய பரலோக ராஜ்யத்தில், வேறு அரசர்களும் கிறிஸ்து இயேசுவுடன் சேர்ந்து ஆளுவர். இவ்வாறு ஆளப்போவது 1,44,000 பேர்; இவர்கள் ‘மனுஷரிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டு’ பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவர் என வெளிப்படுத்துதல் 14:​1-4 முன்னறிவித்தது. மற்றவர்கள் தங்களுக்கு சேவை செய்யும்படி எதிர்பார்க்காமல் மனத்தாழ்மையுடன் கடவுளுக்கும் சகமனிதருக்கும் சேவை செய்த ஆண்களும் பெண்களுமே இவர்கள். “இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 20:6) இவர்களுடைய எண்ணிக்கை, பொல்லாத உலகின் முடிவைத் தப்பிப்பிழைக்கவிருக்கும், “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய” ஜனத்தாரோடு ஒப்பிட்டால் வெகு குறைவே. இந்தத் திரள் கூட்டத்தாரும் ‘இரவும் பகலும் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்கின்றனர்;’ ஆனாலும் இவர்களுக்கு பரலோக அழைப்பு இல்லை. (வெளிப்படுத்துதல் 7:​9, 15, NW) இவர்கள், கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் முக்கிய பிரஜைகளாக புதிய பூமியில் வாழ்வார்கள்.​—சங்கீதம் 37:29; யோவான் 10:⁠16.

9 இவர்கள் வாழ்க்கையில் பல கஷ்டநஷ்டங்களை அனுபவித்து அவற்றையெல்லாம் சமாளித்து உண்மையுடன் நிலைத்திருந்தவர்களையே பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆள யெகோவா தேர்ந்தெடுத்தார். இந்த அரச ஆசாரியர்கள் அனுபவிக்காத கஷ்டங்கள் எதுவுமே இல்லை எனலாம். எனவே அவர்களுடைய பூமிக்குரிய வாழ்க்கையின் அனுபவம், மனிதரை ஆளுகையில் அவர்களுக்கு கைக்கொடுத்து உதவும். இயேசுவும், ‘தாம் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.’ (எபிரெயர் 5:8) எனவேதான், “நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” என அவரைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார். (எபிரெயர் 4:​15) கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகில், அன்பும் இரக்கமுமுள்ள அரசர்களும் ஆசாரியர்களும் ஜனங்களை ஆளுவார்கள் என்பதை அறிவது எவ்வளவு இதமளிக்கிறது!

இந்த ராஜ்யம் கடவுளின் ஆதிநோக்கமாக இருந்ததா?

10. பரலோக ராஜ்யம் ஏன் கடவுளுடைய ஆதிநோக்கமாக இருக்கவில்லை?

10 ஆதாம் ஏவாளை கடவுள் படைக்கையில் இந்தப் பரலோக ராஜ்யமும் அவருடைய நோக்கமாக இருந்ததா? படைப்பைப் பற்றிய ஆதியாகம விவரப் பதிவில் மனிதகுலத்தை ஆளப்போகிற ராஜ்யம் சம்பந்தப்பட்ட எந்தக் குறிப்பும் காணப்படுவதில்லை. யெகோவாவே அவர்களுடைய அரசர்; அவருக்கு அவர்கள் கீழ்ப்படிந்திருக்கும் வரை எந்தவொரு அரசாட்சிக்கான தேவையும் இல்லை. “கடவுள் . . . அவர்களுக்கு சொன்னார்,” ‘என்று கடவுள் சொன்னார்’ போன்ற சொற்றொடர்களை ஆதியாகமம் முதலாம் அதிகாரத்திலுள்ள விவரப் பதிவில் நாம் காண்கிறோம். இவை, யெகோவா ஒருவேளை தம்முடைய முதற்பேறான பரலோக குமாரன் மூலம் ஆதாம் ஏவாளுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்பதையே காட்டுகின்றன.​—ஆதியாகமம் 1:​28, 30, தி.மொ.; யோவான் 1:⁠1.

11. மனிதகுலத்திற்கு எப்படிப்பட்ட பரிபூரண ஆரம்பம் இருந்தது?

11 “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது” என பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:​31) ஏதேன் தோட்டத்திலிருந்த அனைத்தும் முற்றிலும் பூரணமானவையாய் இருந்தன. ஆதாமும் ஏவாளும் பரதீஸில் வாழ்ந்தனர். அவர்கள் மனதிலும் உடலிலும் பரிபூரணமாக இருந்தனர். அவர்கள் தங்கள் படைப்பாளருடன் உரையாடினர்; அவரும் இவர்களுடன் பேசினார். எப்போதும் உண்மையுடன் இருந்திருந்தால் அவர்கள் பரிபூரண பிள்ளைகளைப் பெற்றெடுத்திருக்க முடியும். அப்போது ஒரு புதிய பரலோக அரசாங்கத்திற்கான தேவையே ஏற்பட்டிருக்காது.

12, 13. பரிபூரண மனிதகுலம் பெருக பெருக கடவுள் எப்படி அவர்களிடம் பேச முடிந்திருக்கும்?

12 மனித குடும்பங்கள் பெருக பெருக அவர்கள் எல்லாருடனும் கடவுளால் எப்படி பேச முடிந்திருக்கும்? வானத்தின் நட்சத்திரங்களைக் கவனியுங்கள். நட்சத்திர மண்டலங்கள் என்றழைக்கப்படும் அண்டத் தீவுகளின் தொகுதிகள் அவை. சில நட்சத்திர மண்டலங்களில் நூறு கோடி நட்சத்திரங்கள் வரை உள்ளன. மற்றவற்றில் சுமார் லட்சம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. பிரபஞ்சத்தில் ஏறக்குறைய பத்தாயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கின்றனரே! எனினும், படைப்பாளர் சொல்கிறதாவது: “உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.”​—⁠ஏசாயா 40:⁠26.

13 இந்த வான் கோளங்கள் அனைத்தையும் கடவுள் தொடர்ந்து கவனித்து வருகிறார்; அப்படியிருக்கையில், அவற்றைப் பார்க்கிலும் வெகு சொற்ப எண்ணிக்கையே உள்ள மனிதர்களைக் கவனித்து வருவதா அவருக்கு பிரச்சினை? துளியும் இல்லை. இப்போதுங்கூட அவருடைய லட்சக்கணக்கான ஊழியர்கள் நித்தம் நித்தம் அவரிடம் ஜெபிக்கின்றனர். அந்த ஜெபங்களுக்கு அக்கணமே அவர் செவிசாய்க்கிறார். அப்படிப்பட்டவருக்கு, சகல விதத்திலும் பூரணராய் விளங்கும் மனிதர்களுடன் பேசுவதில் பிரச்சினையே இருந்திருக்காது. அவர்களைக் கவனித்து வருவதற்கு ஒரு பரலோக ராஜ்யமும் அவருக்குத் தேவைப்பட்டிருக்காது. யெகோவாவை ராஜாவாக கொண்டிருப்பதும், அவரோடு நேரடியாக தொடர்புகொள்ள முடிந்ததும், சாகாமல் பரதீஸிய பூமியில் நித்தியமாக வாழ எதிர்பார்த்திருப்பதும் எத்தகைய அற்புத ஏற்பாடுகள்!

‘மனிதனின் வசத்தில் இல்லை’

14. மனிதருக்கு யெகோவாவின் ஆட்சி ஏன் நிரந்தரமாக தேவை?

14 எனினும், பரிபூரண மனிதர்களுக்கும்கூட யெகோவாவின் ஆட்சி நிரந்தரமாக தேவைதான். ஏன்? ஏனெனில் தம்முடைய ஆட்சியின் அவசியமின்றி தாங்களாகவே வெற்றிகரமாக வாழும் திறமையுடன் அவர்களை யெகோவா படைக்கவில்லை. அது மனிதகுலத்திற்கான நியதி. இதை தீர்க்கதரிசியாகிய எரேமியாவும் ஒப்புக்கொண்டார்: “யெகோவாவே, மனுஷனுடைய வழி அவன் வசத்தில் இல்லையென்றும் தன் நடையை நடத்துவது நடக்கிறவன் வசத்தில் இல்லையென்றும் அறிவேன். யெகோவாவே என்னை சிட்சியும்.” (எரேமியா 10:23, 24, தி.மொ.) யெகோவாவினுடைய அரசாட்சியின் உதவியின்றி சமுதாயத்தைத் தாங்களே வெற்றிகரமாய் சீர்படுத்த மனிதர்கள் நினைப்பது மடமை. அத்தகைய சக்தியுடன் அவர்கள் படைக்கப்படவில்லை. யெகோவாவின் ஆட்சி வேண்டாமென்று நிராகரித்தால், தன்னலம், பகைமை, கொடுமை, வன்முறை, போர்கள், மரணம் ஆகியவையே மலிந்து கிடக்கும். ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுவான்.’​—பிரசங்கி 8:⁠9.

15. நம்முடைய முதல் பெற்றோர் செய்த தவறான தெரிவின் விளைவுகள் யாவை?

15 கடவுள் தங்களது அரசராக இருக்க தேவையில்லை என நினைத்து சுதந்திரமாக வாழ நம் முதல் பெற்றோர் தீர்மானித்தது வருந்தத்தக்கது. இதன் காரணமாகவே கடவுள் அவர்களை பரிபூரணராக வாழ அனுமதிக்கவில்லை. அப்போது அவர்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட மின்சார சாதனத்தைப்போல் இருந்தனர். எனவே, காலப்போக்கில் அவர்கள் செயல் திறனில் மெல்ல மெல்ல குறைவுபட்டு கடைசியில் மரணம் அடைந்தனர். இதே குறையை சொத்தாக தங்கள் சந்ததியினருக்கு விட்டுச் சென்றனர். (ரோமர் 5:​12) “அவர் [யெகோவா] கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், . . . அவர்களோ தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்.” (உபாகமம் 32:4, 5) சாத்தானாக மாறிய கலகக்கார தூதனின் தூண்டுதலால்தான் ஆதாமும் ஏவாளும் தவறாக நடந்துகொண்டார்கள் என்ற உண்மை ஒருபுறம்! ஆனால் அவர்கள் மனதின் பிரகாரமாக பரிபூரணர்களாக இருந்தும் அவனுடைய தவறான ஆலோசனைகளை ஒதுக்கித் தள்ள தவறினர் என்பதே வருந்தத்தக்கது.​—ஆதியாகமம் 3:​1-​19; யாக்கோபு 4:⁠7.

16. கடவுளிடமிருந்து விலகி சுதந்திரமாக செயல்படுவதன் மோசமான விளைவுக்கு சரித்திரம் எப்படி அத்தாட்சி அளிக்கிறது?

16 கடவுளிலிருந்து விலகி சுதந்திரமாய் செயல்படுவதன் மோசமான விளைவுகளுக்கு சரித்திரத்தில் எண்ணற்ற அத்தாட்சிகள் உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜனங்கள் பற்பல வகை மனித அரசாங்கங்களையும், விதவிதமான பொருளாதார, சமுதாய ஒழுங்குமுறைகளையும் முயன்று பார்த்திருக்கின்றனர். எனினும், அக்கிரமம் தொடர்ந்து ‘மேன்மேலும் கேடடைகிறது.’ (2 தீமோத்தேயு 3:13) 20-வது நூற்றாண்டே அதற்கு நிரூபணம். சரித்திரம் காணா கடும் பகைமைகள், கொடிய வன்முறை, போர்கள், பசி, வறுமை, துன்பம் ஆகியவற்றால் அது நிறைந்திருந்தது. முன்னேற்ற பாதையில் மருத்துவம் வெற்றி நடைபோட்ட போதிலும் இன்றைக்கோ நாளைக்கோ எல்லாரும் இறக்கத்தான் செய்கின்றனர். (பிரசங்கி 9:​5, 10) மனிதர்கள் தங்களைத் தாங்களே வழிநடத்திக்கொள்ளும் முயற்சியில், சாத்தானும் அவனுடைய பேய்களும் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்கின்றனர்; அவனுக்கிருக்கும் செல்வாக்கினாலேயே சாத்தானை “இவ்வுலகின் தெய்வம்” என்று பைபிள் அழைக்கிறது.​—2 கொரிந்தியர் 4:⁠4, பொ.மொ.

சுதந்திரம் எனும் பரிசு

17. கடவுள் அருளிய சுதந்திரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டியிருந்தது?

17 மனிதர்கள் சுதந்திரமாக செயல்பட யெகோவா ஏன் அனுமதிப்பார்? ஏனெனில், அவர்களைப் படைக்கையிலேயே சுதந்திரம் எனும் அருமையான பரிசுடன் படைத்தார். “யெகோவாவின் ஆவி எங்கேயோ அங்கே சுதந்திரமுண்டு” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (2 கொரிந்தியர் 3:​17, NW) ஒவ்வொரு வினாடியும் என்ன செய்ய வேண்டும் என்ன பேச வேண்டும் என்று யாரோ ஒருவர் தீர்மானிக்க வேண்டிய ஓர் இயந்திர மனிதனைப் போல் இருக்க நம்மில் யாருக்கும் விருப்பமில்லை. ஆனால், மனிதர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட சுதந்திரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என்றும், தம்முடைய சித்தத்தைச் செய்வதே சரியானது என்பதை உணர்ந்து கீழ்ப்படிய வேண்டும் என்றும் யெகோவா எதிர்பார்க்கிறார். (கலாத்தியர் 5:​13) எனவே அந்த சுதந்திரத்திலும் கட்டுப்பாடுகள் உண்டு. அவ்வாறு இல்லாவிட்டால் அது குழப்பத்தில் போய் முடிவடையுமே. ஆகவே அந்தச் சுதந்திரம் கடவுளுடைய இரக்கமுள்ள சட்டதிட்டங்களுக்கு இசைய கட்டுப்படுத்தப்பட வேண்டியிருந்தது.

18. சுதந்திரமாக செயல்பட மனிதனை அனுமதிப்பதன் மூலம் கடவுள் எதை நிரூபித்திருக்கிறார்?

18 கடவுள், மனித குலத்தை தன் போக்கில் செல்ல அனுமதிப்பதன் மூலம் தம்முடைய ஆட்சிக்கான தேவையை நித்தியத்திற்கும் நிரூபித்திருக்கிறார். அவருடைய அரசாட்சியே ஒரே நல்லாட்சி. அதுவே வாழ்க்கைக்கு மிகுந்த சந்தோஷத்தையும் திருப்தியையும், வளத்தையும் தரும். ஏனென்றால் அவருடைய சட்டங்களுக்கு இசைவாக நடக்கும்போது மட்டுமே நம் மனதும் உடலும் சிறப்பாக செயல்படுமாறு வடிவமைத்திருக்கிறார். “உன் கடவுளாகிய யெகோவா நானே, பிரயோஜனமானவற்றை நான் உனக்குப் போதிக்கிறேன்; நீ செல்ல வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிறேன்.” (ஏசாயா 48:17, தி.மொ.) கடவுளுடைய சட்டதிட்டங்களுக்கு இசைய சுதந்திரமாக செயல்படுவதில் கஷ்டமேதுமில்லை; பல்சுவை உணவு, பல ரக வீடு, கண்ணையும் கருத்தையும் கவரும் பற்பல கலை, காதுக்கு விருந்தளிக்கும் பலவித இன்னிசை ஆகியவற்றை அனுபவிக்க அது நமக்கு வழிசெய்யும். இந்த சுதந்திரத்தை ஆரம்பத்தில் சரியாக பயன்படுத்தியிருந்தால் அது பரதீஸிய பூமியில் சொக்க வைக்கும் அதிசயமான வாழ்க்கையைத் தந்திருக்கும்.

19. மனிதரைத் திரும்ப தம்முடன் ஒப்புரவாக்குவதற்கு கடவுள் எந்த வழிமுறையைப் பயன்படுத்துகிறார்?

19 ஆனால், மனிதர்கள் தவறானதை தெரிவு செய்தனர். விளைவு: அவர்கள் யெகோவாவிடமிருந்து தாங்களாகவே விலகிப் போயினர், அபூரணத்தைப் பெற்றனர், சீர்கெட்டு போயினர், மரணத்தைத் தழுவினர். ஆகையால், அந்த விசனகரமான நிலைமையிலிருந்து மீட்கப்பட்டு, கடவுளுடைய குமாரராகவும் குமாரத்திகளாகவும் இருக்கும் நிலைக்கு அவர்கள் திரும்ப கொண்டுவரப்பட வேண்டும். இதை நிறைவேற்றுவதற்கு கடவுள் தெரிந்துகொண்ட வழிமுறையே ராஜ்யம்; மீட்க வந்தவரே இயேசு கிறிஸ்து. (யோவான் 3:​16) இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட மனந்திருந்திய மைந்தனைப் போல், உண்மையிலேயே மனந்திரும்பி வருவோர், இந்த ஏற்பாட்டின் மூலம் பலனடையலாம்; அவர்கள் கடவுளிடம் ஒப்புரவாகி அவருடைய பிள்ளைகளாக மறுபடியும் ஏற்றுக்கொள்ளப்படுவர்.​—லூக்கா 15:11-​24; ரோமர் 8:​21; 2 கொரிந்தியர் 6:​18.

20. ராஜ்யத்தின் மூலம் கடவுளுடைய நோக்கம் எவ்வாறு நிறைவேறப் போகிறது?

20 யெகோவாவின் சித்தம் பூமியில் நிறைவேறப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. (ஏசாயா 14:24, 27; 55:11) நம்முடைய உன்னத அரசராயிருக்கும் தம் உரிமையை கடவுள் முழுமையாக நியாயமான விதத்தில் நிரூபித்துக் காட்டுவார்; இதை கிறிஸ்துவின் கைகளிலுள்ள தம் ராஜ்யத்தின் மூலம் செய்வார். பூமியை ஆட்டிப்படைக்கும் மனிதனுடைய மற்றும் பேய்களுடைய ஆட்சியை இந்த ராஜ்யம் முடிவுக்குக் கொண்டுவரும். அப்போது அந்த ராஜ்யமே ஆயிரம் ஆண்டுகள் பரலோகத்திலிருந்து ஆளுகை செய்யும். (ரோமர் 16:20; வெளிப்படுத்துதல் 20:​1-6) ஆனால் அந்தச் சமயத்தில், யெகோவாவின் ஆட்சிமுறையே ஒப்பற்றது என்பது எவ்வாறு நிரூபிக்கப்படும்? ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு, அந்த ராஜ்யத்திற்கு என்ன சம்பவிக்கும்? பின்வரும் கட்டுரை இந்தக் கேள்விகளை கலந்தாராயும்.

மறுபார்வை கேள்விகள்

• பைபிளின் கருப்பொருள் என்ன?

• யார் யார் பூமியின் புதிய ஆட்சியாளர்கள்?

• கடவுளிடமிருந்து விலகியிருக்கும் சுதந்திர போக்குடைய மனித ஆட்சி ஏன் ஒருபோதும் வெற்றி பெறாது?

• சுதந்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

[கேள்விகள்]

[பக்கம் 10-ன் படம்]

ராஜ்யத்தின் மூலமான கடவுளுடைய ஆட்சியை இயேசுவின் போதகம் வலியுறுத்தியது

[பக்கம் 12-ன் படங்கள்]

எல்லா நாடுகளிலும் யெகோவாவின் சாட்சிகள் முக்கியமாய் ராஜ்யத்தைப் பற்றியே கற்பிக்கின்றனர்

[பக்கம் 14-ன் படங்கள்]

கடவுளிடமிருந்து விலகியதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளுக்கு சரித்திரம் அத்தாட்சி அளிக்கிறது

[படங்களுக்கான நன்றி]

WWI இராணுவ வீரர்கள்: U.S. National Archives photo; concentration camp: Oświęcim Museum; child: UN PHOTO 186156/J. Isaac