Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காணமுடியாத கடவுளிடம் நெருங்கிவர முடியுமா?

காணமுடியாத கடவுளிடம் நெருங்கிவர முடியுமா?

காணமுடியாத கடவுளிடம் நெருங்கிவர முடியுமா?

‘முன்னப் பின்ன பார்க்காத ஒருத்தர்கிட்ட எப்படி நெருக்கமான உறவ வளத்துக்க முடியும்?’ என நீங்கள் கேட்கலாம். அது ஆயிரம் பொன் பெறும் கேள்வியாக தொனிக்கலாம். ஆனால் இதை கவனியுங்கள்.

ஒருவரை பார்த்தால்தான் அன்பையும் உறவையும் வளர்த்துக்கொள்ள முடியுமா? கண்ணில் காணமுடியா அம்சங்களும் முக்கியமானவைதான் அல்லவா? சந்தேகமே இல்லை! அதனால்தான் மற்றவர்களுக்கு கடிதம் எழுதிகூட நெருங்கிய உறவை வளர்த்திருக்கிறார்கள் சிலர். அவர்கள் எழுதும் கடிதம் அவர்களுடைய ஆசாபாசங்களையும் லட்சியங்களையும் கொள்கைகளையும் நகைச்சுவையுணர்வையும் குணங்களையும் கள்ளம் கபடமின்றி பிறருக்கு பிரதிபலிக்கிறது.

மற்றொருவரோடு நெருங்கிய பந்தத்தையும் பாசத்தையும் வளர்த்துக்கொள்வதற்கு பார்வை முக்கியமல்ல என்பதை பார்வையற்றோருடைய விஷயத்தில் பார்க்க முடிகிறது. பார்வையற்றவர்களாக இருக்கும் எட்வர்டு, கிவென் தம்பதியினருடைய உதாரணத்தை கவனியுங்கள். * பார்வையற்றோர் பள்ளியில் கிவென்னை சந்தித்தார் எட்வர்டு. அங்கே சக மாணவியாக கல்வி பயன்று வந்தாள் கிவென். கிவென்னின் குணங்களைக் கண்டு வியந்தார், முக்கியமாக அவளுடைய பேச்சிலும் நடத்தையிலும் நேர்மையை கண்டார், வேலையில் அவளுக்கு இருந்த சிறந்த பண்பையும் கண்டு மெச்சினார். கிவென்னும் எட்வர்டிடம் கவரப்பட்டாள், ஏனென்றால் அவள் சொல்கிறாள்: “எந்த குணங்கள் முக்கியமென்று எனக்கு கற்பிக்கப்பட்டதோ அந்த குணங்களெல்லாம் அவரிடம் இருந்தன.” காலப்போக்கில் காதல் மலர்ந்து, மூன்று வருடத்திற்குப் பின் கலியாணத்தில் பூத்தது.

“நீங்கள் சேர்ந்திருக்கும்போது, மற்றொருவருடன் உறவை வளர்த்துக்கொள்வதற்கு பார்வையில்லாதது உண்மையில் ஒரு பிரச்சினையே அல்ல. உங்களால் ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் இருக்கலாம், ஆனால் உணர்ச்சிகள் கண்மூடிவிடுவதில்லை” என எட்வர்டு சொல்கிறார். இப்பொழுது 57 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்கள் ஆழ்ந்த அன்பு காட்டுகிறார்கள். தங்களுடைய உன்னதமான உறவின் இரகசியத்தில் குறைந்தபட்சம் நான்கு அம்சங்கள் புதைந்துள்ளன என சொல்கிறார்கள்: (1) மற்றவருடைய குணங்களை கவனிப்பது, (2) அந்த குணங்களைப் பற்றி சிந்திப்பது, அதனிடம் ஈர்க்கப்படுவது, (3) எப்போதும் நல்ல பேச்சுத்தொடர்பு, (4) ஒன்றுசேர்ந்து வேலை செய்வது.

நண்பர்களுக்கு இடையிலான உறவாக இருந்தாலும், தம்பதிகளுக்கு இடையிலான உறவாக இருந்தாலும், மிக முக்கியமாக கடவுளுக்கும் மனிதருக்கும் இடையிலான உறவாக இருந்தாலும், இந்த நான்கு அம்சங்கள் எந்தவொரு நல்ல உறவுக்கும் ஊன்றுகோல்களாக திகழ்கின்றன. இந்த அம்சங்களைப் பின்பற்றுவது, கடவுளை காண முடியாதபோதிலும், அவருடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ள நமக்கு எப்படி உதவும் என்பதை பின்வரும் கட்டுரையில் காணலாம். *

[அடிக்குறிப்புகள்]

^ பாரா. 4 பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ பாரா. 6 மனிதர்களுக்கிடையே இருக்கும் உறவைப் போல அல்லாமல், கடவுளோடுள்ள உறவு விசுவாசத்தின் அடிப்படையிலானது. (எபிரெயர் 11:⁠6) கடவுளுடன் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்வது எப்படி என்பதைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்வதற்கு, உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? என்ற புத்தகத்தை தயவுசெய்து வாசியுங்கள். இது உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.